பசித்த போதெல்லாம் நினைக்கிறேன்
================================
கவிஞர் யாழிசைசெல்வா
======================
இருளை முட்டிக்கொண்டு விடாமல் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த ஐப்பசி அடைமழை! குதிங்கால் பிட்டத்தில் அடிக்க செவலக்காளைக் கண்ணுக் குட்டி போல் இருள் மையை ஊற்றிய சந்துக்குள் புகுந்து ஓடிக் கொண்டிருந்தான் செல்வம்! மாட்டு வண்டியைத் தாண்டி அகன்று விரிந்த குடிசை வீட்டுக்குள் நுழைந்து மூச்சு வாங்க நின்றான்!
"யேண்டா இப்படி தொப்பலா நனைஞ்சிட்டு வந்து நிக்கிறே....? அப்படி என்ன அவசரம்?"திண்ணையில் படுத்துக் கிடந்த குருசாமி கேட்டார்!
"அங்க என்ன சத்தம்?"வீட்டுக்குள்ளிருந்து வந்த செல்லாயியம்மாள் "யாரு செல்வமா? ஈரத்தோட ஏண்டா நிக்கிறே... தலையப் போய் தொவட்டு"எனக் கூறிக்கொண்டே குருசாமி பக்கம் திரும்பியவர் "புள்ள மழையில கெடந்து நனஞ்சு வந்திருக்கான்! அவன்கிட்ட போயி வெரசிக்கிட்டு நிக்கிறே?"
"யேண்டி! நான் அப்படி என்னத்த கேட்டுட்டேன்! ஏன்டா தொப்பலா நனஞ்சு நிக்கிறேன்னு தானே கேட்டேன்! அதுக்கு போய் இப்படி என்னப் பிடுங்கித் திங்கற? ஊர்ல என்னமோ, யாரும் கேட்காத கேள்வியை நான் கேட்டது மாதிரி பேசிக்கிட்டு திரியுற.... உம் பேரன நான் எதுவும் கேட்கக் கூடாதா?"
"நான் அப்படியா சொன்னேன்! நனைஞ்சு வந்திருக்க புள்ளைய கூப்பிட்டு தலையத் தொவட்டி விடலாமில்ல, இங்க சும்மா தானே படுத்துக் கெடக்க...."
"பகல் பூராவும் காட்டுல கெடந்து நாயா ஒழச்சிட்டு வந்து இப்பதான் செத்த நேரம் படுத்தேன்! அது உனக்கு பொறுக்கலையா....?"
குருசாமியை முறைத்து பார்த்துவிட்டு "செல்லம்! யெங்க இருக்க? வா சாமி... பச்ச நெல்லுச் சோறாக்கி கருவாட்டு குழம்பு வச்சிருக்கேன்... ஒரு வா சாப்பிடு"எனக் கூறிக் கொண்டே மண் கலயத்தில் சோறு போட்டு கருவாட்டு குழம்பு ஊற்றி எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் போய் துண்டில் தலை துவட்டிக் கொண்டிருந்த செல்வத்திற்கு சோற்றைப் பிசைந்து ஊட்டத் தொடங்கி விட்டார் செல்லாயியம்மாள்!
"குடுங்க அம்மாச்சி! நானே சாப்பிடுறேன்!"
"நீ தலையத் துவட்டு சாமி"என்றபடி சோற்று உருண்டையை செல்வத்தின் வாயில் திணித்து விட்டார்!
"இருக்க இருக்க உன் பேரன் ஒன்னும் சின்ன நொட்ட இல்ல! ஏழு கழுத வயசு ஆயிடுச்சு! இன்னும் அவனுக்கு ஊட்டிக்கிட்டு நிக்கிறியாக்கும்... "அலுத்துக் கொண்ட குருசாமி "யேண்டி எனக்கு ஒரு வா சோறு போடணும்னு நெனைப்பு இருக்குதா இல்லையா....?"என செல்லாயியம்மாளைப் பார்த்து கத்தத் தொடங்கி விட்டார் குருசாமி!
"கொஞ்ச நேரம் போறேன்! இன்னும் ரெண்டு வா தான் ஊட்டிட்டு வாரேன்! அதுக்குள்ளற என்ன அவசரம்"என வீட்டுக்குள்ளிருந்தே சொன்னார் செல்லாயியம்மாள்!
"சரி சரி! சீக்கிரம் வா, வயிறு எனக்கு கூப்பாடு போடுது"
மண் கலயத்தில் சோறு போட்டு கருவாட்டு குழம்பு ஊற்றிக் கொண்டு வந்து குருசாமியிடம் கொடுத்தார் செல்லாயியம்மாள்!
சோறு அள்ளி சாப்பிட்டுக்கொண்டே "ஏண்டா இப்படி மழையில வந்த?"செல்வத்தைப் பார்த்து கேட்டார்!
"காட்டுலயிருந்து அம்மா இன்னும் வரல! வயிறு பசிச்சது அதான் வந்தேன்"
"அதுக்காண்டி மழையில வருவியா?"
"பசியோட இருக்கிற புள்ளைக்கு மழை தண்ணியெல்லாம் தெரியுமா? நீ பேசாம சாப்பிடு!"என்ற செல்லாயியம்மாள் செல்வத்தின் தலையைக் கோதிவிட்டார்!
கல்லூரியில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த செல்வத்திற்கு அம்மாச்சியின் நினைவுகள் வந்ததும் அவனையும் அறியாமல் கண்கள் குளமாயிருந்தது!
(முடிந்தது)
கவிஞர் யாழிசைசெல்வா
14/06/2025
ரோசாக்கூட்டம் ஐந்தாம் ஆண்டு விழா போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிறுகதை இது!
No comments:
Post a Comment