கிழவி அழுத்து ஏன்?
==================
கவிஞர் யாழிசைசெல்வா
======================
வெள்ளை ஆடையை உலர்த்திப் போட்டது போல் வானம் வெளுத்துக் கெடந்தது! ஈயத்தகடுகளை ஒரே நேர்கோட்டில் முறுக்கு பிழிந்தது போல் நீண்டு கிடந்த மின்சார வயர்களில் அமர்ந்திருந்த மைனாக்கள் தமது இணையைக் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தது!
பூந்தென்றல் காற்றாக வருடிக்கொண்டு இசைஞானியின் இன்னிசை மண்டபத்தில் இருந்த அத்தனை பேர் இதயங்களையும் ஆக்கிரமித்திருந்தபோது கெட்டி மேளச் சத்தத்தில் மண்டபம் கிடுகிடுக்க பொற்கொடியாள் கழுத்தில் குமரன் மங்களநாண் பூட்டியதுதான் தாமதம் மண்டபத்திலிருந்த பாதிப்பேர் உணவருந்த எழுந்து சென்று விட்டார்கள்! இதுதான் சமயமென்று மணமக்களோடு உற்றார் உறவினர்கள் ஒட்டிக்கொண்டு புகைப்படம் எடுக்கும் காட்சி இனிதாய் அரங்கேறிக் கொண்டிருந்தது!
இவை அத்தனையும் வச்சகண் எடுக்காமல் தன் பேரணையே பார்வதியம்மாள் பார்த்துக் கொண்டிருந்தாள்! வந்திருந்த கூட்டம் ஒரு வழியாக புகைப்படம் எடுத்துக் கொண்டு புறப்பட்டதுதான் தாமதம்... மேடையிலிருந்து செவலக் காளைபோல் துள்ளி குதித்து தன் அம்மாச்சி அருகே வந்தவன் "நீ வா அம்மாச்சி"யெனப் பார்வதியம்மாளின் கையைப் பிடித்துக் கொண்டு மேடைக்கு அழைத்துச் சென்றான் குமரன்!
மணமக்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நின்று பார்வதியம்மாளின் காலில் விழுந்து வணங்கி நிமிர்ந்தார்கள்!
பார்வதியம்மாள் மணமக்களை வாழ்த்தி அவர்களது நெத்தியில் காய்த்து தழும்பேறிய தனது முதிர்ந்த விரல்களால் பொட்டு வைத்து ஆசி வழங்கியபோது அவரையும் அறியாமல் விழிகள் கண்ணீர் மல்கின!
"யேன் அம்மாச்சி அழுகுற...?" குமரன் தனது கைக்குட்டையால் பார்வதியம்மாளின் விழிகளைத் துடைத்து விட்டபடி கேட்டான்!
"நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்! ஆயுசு பெலக்க பொண்டு புள்ளைகளோட நூறு வருசம் வாழனும்.... அந்த அய்யனாரப்பன் உங்களுக்கு துணையா இருப்பாரு...."என்ற போது விழிகள் பொங்கி வழிந்து கொண்டிருந்தன!
பார்வதியம்மாளின் விழிகளைத் துடைத்து விட்டவன் அவரது தோள்களில் கைவைத்து நெருக்கமாக நின்று கொண்டே "இப்பதானே சொன்னேன் அம்மாச்சி! ஏன் அழுகிறேன்னு கேட்டா சொல்ல மாட்டேங்குற..." என்றான் குமரன்!
"உங்க தாத்தா இறந்துட்டாருன்னு என்ன எந்த நல்ல காரியத்துக்கும் உங்க ஆத்தா கூப்பிட மாட்டா...."
"யேன் கூப்பிட்டா என்னவாம்?" என்றாள் மணமகள் பொற்கொடியாள்!
"தாலி அறுத்தவ நல்ல காரியத்துக்கு வந்தா.... வெளங்காம போயிருமாம்.... அதனால யாரும் கூப்பிட மாட்டாங்க...." நெஞ்சு முழுவதும் யெறக்கி வைக்க முடியாத வலியோடு கூறினார் பார்வதியம்மாள்!
"சுமங்கலி பொண்ணுக எல்லாம் சேர்ந்து தானே நம்ம கருப்பாயி அக்காவுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க.... ஆனா.... அஞ்சாறு மாசத்திலேயே... அந்த அக்காவோட வீட்டுக்காரன்... தாலியப் புடுங்கிட்டு தொரத்தி விட்டுட்டான்.... அதுக்கு என்ன சொல்லுறது?"
"நீ சொல்லுறதெல்லாம் நாயந்தேன்... ஆனா ஊர்க்காரங்க அத பெருசா எடுத்துக்க மாட்டாங்க...."
"அவனுங்க கெடக்குறானுக.... நம்ம எது பண்ணாலும் ஏதாவது சொல்லிக்கிட்டு தான் இருப்பானுக... அது தான் அவங்களோட வேளை.... யென்ன சின்ன வயசுலெருந்து தூக்கி வளர்த்து ஆளாக்கினது நீதானே அம்மாச்சி! நீ இல்லாத கல்யாணத்த என்னால நெனச்சுக்கூட பார்க்க முடியல... அதனாலதான் உன்னை முதல் ஆளா கல்யாணத்துக்கு வர வச்சு... யேன் முன்னால தெரியற மாறி உட்கார வச்சேன்...." என்றான் குமரன்.
தனது கணவன் குமரனையே பார்த்துக் கொண்டிருந்த பொற்கொடியாள் விழிகளில் ஒரு கம்பீரம் தெரிந்தது!
(முடிந்தது)
கவிஞர் யாழிசைசெல்வா
19/06/2025
No comments:
Post a Comment