Wednesday, 25 December 2024

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 05

      🐾இராஜமோகினி🐾

🌹யாழிசைசெல்வா🌹

அத்தியாயம் 05 🌾இருளில் ஒரு யுத்தம்🌾


      இருளின் பூரண ஆதிக்கம் எங்கும் பரவிக்கிடந்தது. அதனின் நீண்ட பெரும் நாக்குகள்  எனும் கொடும் கரங்களை பரப்பி மாளிகை முழுவதும்  அந்தகாரத்தை தோற்றுவித்திருந்தது. "ஆனால் இவை யாவற்றையும்  துனணயாக கொண்டு செயலாற்றும் மனிதன் யாரராயினும் அவன் அத்தனை சளைத்தவனாக இருக்கமுடியாது.

     நாகையின் பெரும் புகழுக்கு சொந்தக்காரர் சூரியவர்மரின் மாளிகையே சதியின் உறைவிடமாக மாறி இருக்கும் நிலை யாராலும் அவ்வளவு எளிதில் கண்டறிவது துர்லாபமே. 

     சூரியவர்மர் என்ன ஆனார்.? அவருக்கும் இங்கே மாளிகையில் நடைபெரும் களபரத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்க வாய்ப்புண்டா? அல்லது அவர் சதிகார்களின் கரங்களில் எக்கு தப்பாக அகப்பட்டுக்கொண்டாரா....? குழப்பங்களுக்கு விடை சதிகார்களை கையும் களவுமாக பிடித்தாலின்றி வேறு  வாய்ப்பில்லை..  ஆனால் அது அவ்வளவு எளிதாக நடைபெறுமாவெனவும் தெரியவில்லை. இவை எத்தனை தூரம் போகிறது என்று ஒரு கை பார்த்து விட வேண்டியதுதான்." என யோசித்தபடி நகர்ந்தான் இளவழுதி.
     
    மாடத்திற்கு உள்ளே வநத சில கணங்களுக்குள்ளாக கதவை சாத்தியதோடு "வகையாக மாட்டிக்கொண்டாயா...." வென இறுமாப்புடன் பேசியவன்   ஏளனமாக சிரிக்கவும் செய்தான்.

     "நடந்தவை அனைத்தும் முன்கூட்டியே தீர்மாணிக்கப்பட்டவை, எனது வருகையும் கவனித்ததோடு  நான் அடுத்ததாக யாரை சந்திக்கவிருக்கிக்றேன் என்பதை அறிந்துள்ளனர் எனில் எதிரிகளின் திட்டம் பலமாக இருக்கவேண்டும்." மெல்ல முன்நகர்ந்தான்.

      அப்போது , இளவழுதியை நோக்கி சிலர் வரும் அரவம் கேட்டது. அவனது இடது புரமாக வந்தவன் சட்டென வாளை இளவழுதியின் நெஞ்சில் பாய்ச்ச முற்பட்டான், அதிலிருந்து இலாவகமாக பின்நகர்ந்து தனது வாளால் தடுத்ததும் மர்மநபரும் தன்பங்கிற்கு வாளை சுழற்றினான். இதுதான் சமயம் என இளவழுதியின் பின்புறம் தாக்கி சாய்க்கும் நோக்கோடு இரண்டாவது மர்மநபர் விரைவதை அவனது பாதக்குறடுகளின் ஓசையைக்கொண்டு கவனித்த இளவழுதி முதல் மர்மநபரின் தாக்குதலை சட்டென முடிக்க எண்ணி இருக்க வேண்டும்  தனது வாளால் மர்மநபரை  இரண்டொரு தாக்குதலால் தட்டி பறக்கவிட்டதோடு சரக்கென மர்மநபரின் நெஞ்சில் பாய்ச்சி இழுத்ததும் வெட்டுண்ட மரமாக சரிந்தான். தங்களில் ஒருவன் கதையை முடித்ததோடு தம்மையும் எதிர்கொள்ள தயாராகி விட்ட எதிரி நோக்கி விரைந்தான் இரண்டாவது மர்மநபர். 

     முதல்நபரை முடித்த கையோடு அடுத்தவனை எதிர்கொள்ள தயாராக இருந்தான் இளவழுதி. இரண்டாமவன் வாளை சுழற்றியபடி இளவழுதியை நோக்கி நகர்ந்தான். இரண்டாவது மர்மநபரின் வரவிற்காக ஏற்கெனவே தயாராக இருந்தவன் அவன் அருகே வரட்டுமென காத்திருந்து தாக்குதலை தொடங்கினான்.இருவரின் வாட்களும் "படீர், படீர்" என தாக்கிக்கொண்டதால் நெருப்பு பொறி பறக்க தொடங்கின. இளவழுதி எவ்விதமான முகபாவத்தையும் காட்டாமல் தாக்குலை நடத்தியவன் இரண்டாவது மர்மநபரின் ஆவேசமான தாக்குதலை அனாசயமாக தடுத்ததோடு அதற்கு மேலும் சண்டையை வளர்க்க விரும்பாமல் அவனது வாளை தட்டி பறக்கவிட்டதோடு இரண்டுமுறை மர்மநபரின் நெஞ்சில் இளவழுதியின் கூர்வாளிரங்கவே "ஆஆ" என்ற அரற்றலோடு கீழே சரிந்தான்.

     இரண்டாவது மர்மநபரின் கதையை முடித்த அடுத்த கணமே, நாற்புறமும் எண்மர் கொண்ட கூட்டம் இளவழுதியை சுற்றி வளைத்தனர்.  " இருவரை சாய்த்து விட்டதால் இருமாப்பு கொள்ளாதே.... இத்தோடு உன் கதை முடிந்தது" என கொக்கரித்தான் அவர்களின் தலைவன் போன்றவன். எண்மர் கூட்டம் நகர்வது, அவர்களின் பாதக்குறடுகளிலிருந்து எழும்பும் ஒலி அலைகள் அந்த இருள்சூழ்ந்த அறை முழுவதும் எதிரோலித்தன. அத்தோடு அவர்களின் வாட்களை உருவும் ஒளியும் ஒருசேர கேட்டன. அனைத்தையும் கூர்ந்து கேட்டுக்கொண்டதோடு அடுத்து தான் செயலாற்ற வேண்டியதையும் ஒருவாராக முடிவு செய்திருந்தான். அறைக்கு உள்ளே வந்த சிறுது நேரத்திலேயே அங்கிருந்த இருளுக்கு இளவழுதியின் விழிகள் பழகியிருந்தது.

     தன்னை சுற்றி வளைத்து இருக்கும் எண்மரை எதிர்கொள்ள தயாரானான் இளவழுதி. எண்மரின் தாக்குதலையும் ஒரே நேரத்தில் எதிர்கொண்டான். தான் நின்ற இடத்திலிருந்தபடியே சக்கரவட்டமாக சுழன்று சுழன்று தாக்கினான். "படீர், படீர்" என அவன்  தாக்கியவேகத்தில் தனது முன்பாக இருந்த மூவரின் கதையை கணநேரத்தில்  முடித்து விட்டிருந்தான். அதே வேகத்தில் அரைவட்டமாக சுழன்று பின்னால் நெருங்கியவர்களை தாக்கினான். சிலகணம் நிகழ்ந்த தாக்குதலில் அவர்களை பின்னடைய செய்ததோடு  அவர்களில் மேலும் இருவரை சாய்த்திருந்தான். 

     எதிரிகளின் எண்ணிக்கை மூன்றாக குறைந்திருந்தது. நடந்துகொண்டிருந்த தாக்குதலில் எதிரிகளை தன்னைநோக்கி இழுத்துக்கொண்டிருந்தானே ஒழிய இளவழுதி அவர்களை நோக்கி நகர்ந்தானில்லை. அவன் நின்ற இடத்திலேயே சுழன்று சுழன்று தாக்கினான். தொடர்ந்த அவனது  தாக்குதலால் கணநேரத்தில் மேலும் இருவரின் கதை முடித்துவிட்டதோடு  மூன்றாம் நபரின் வாளை தட்டி காற்றில் பறக்கவிட்ட,  இளவழுதியின்  வாள் அவனது கழுத்தை தடவியபடி "நகர்ந்தால் மற்றவர்களுக்கு ஏற்பட்டதுதான் உனக்கும் ஏற்படும் " என எச்சரித்தவன்  மர்மநபரே அப்படியே வாள் முனையில் நகரத்தூண்டினான்.

     ஒரு தனி மனிதனால் இவ்வளவு விரைவாக செயலாற்ற முடியுமா.....? உண்மையில் மனிதன் தானா...? இல்லை. இரத்தம் குடிக்கும் மிருகமா போல் அல்லவா இவன் வாள்சுழலுகிறது.இவண் வாள்  சுழலும் பக்கமெல்லாம் வரிசையாக நமனுலகிற்கு போய்விடுகிறார்கள், நமது வீரர்கள். இனியும் இங்கு வீண் வாய்ச்சவடால் பேசிக்கொண்டு நேரத்தை கடத்தினால் நமது உயிர் அரைக்காசு பெறாது" என எண்ணியதாலோ என்னவோ மர்மநபர்களின் தலைவன் சண்டையின் இடையே மாளிகைவிட்டு தப்பி ஓடிவிட்டிருந்தான். வாயில் கதவு டமாலென சாத்தும் சத்தம் மாளிகை முழுவதும் எதிரொலித்தது.

     சத்தத்தை கேட்டதும் என்ன நடந்திருக்குமென ஊகித்துக் கொண்டனர்  இளவழுதியும் அகப்பட்டுக்கொண்ட மர்மநபரும் . மர்மகும்பலின் தலைவன் காரியம் கைமீறி போனதும் கம்பி நீட்டி விட்டதை உணர்ந்தவன் சற்றும் தாமதிக்காமல் தன் கழுத்தில் தடவியபடி இருந்த இளவழுதியின் வாளால் சரக்கென சங்கை அறுத்துக்கொண்டு கீழே சரிந்தான். உதிரம் குபுகுபுவென கொட்டிக்கொண்டிருந்தது. "அடடே... இப்படி ஆகிவிட்டதே. கையில் அகப்பட்ட ஒரு நபரையும் இப்படி பரிகொடுத்து விட்டமே...." என எண்ணியபடி மாடத்தின் சாளரமருகே கவனமுடன் சென்று தெருவினை நோட்டமிட்டவன் அதன் கதவுகளை நீக்கினான். குளுமையான இளம்காற்று உள்ளே நுழைந்தது, நன்றாக மூச்சை இழுத்துவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.

     கையில் வாளை ஏந்தியபடி மாடத்தை சுற்றி வந்தான். அப்போது மாடத்தின் கீழ் பகுதியில் அமைந்த அறையிலிருந்து யாரோ ஒருவர் "ம்ம்ம்" மென முனகும் சத்தம் மெல்ல கேட்டது. சத்தம் வந்த திசையை நோக்கி வாளை நீட்டியபடி எதற்கும் தயாராகி விடுவிடுவென  கதவு அருகே நின்று  அமைதியாக வேறெதுவும் சத்தம் வருகிறதா என கூர்ந்து கேட்டான். சில கணங்கள் கடந்தபின்பும் அந்த அறையிலிருந்து யாரோ ஒருவர் "ம்ம்ம்" மென அரற்றுவது மட்டுமே கேட்டது . வேறெந்த ஒலியும் உணரவில்லை. "சரி, வருவது வரட்டும் " என உணர்ந்தவன் கதவருகே சென்று தாழ்ப்பாளை துளாவியபோது, கதவு வெளிப்புறம் தாளிட்டுருப்பதை கண்டதும்  வலது கரத்திலிருந்த வாளை இடது கரத்திற்கு மாற்றியதோடு இடையில் இருந்த குருவாளை உருவி தாழ்ப்பாளை பெயர்த்து எடுத்தான். அப்படியொன்றும் பெரிய சிரமம் தாழ்ப்பாளை அகற்றுவதில் இருக்கவில்லை. அவனது குறுவாளின் ஒரே முயற்சிக்கு தாழ்ப்பாள் பணிந்து வழிவிட்டது. கதவை நீக்கி உள்ளே நுழைந்தான். அப்படியொன்றும் பெரிய அறையில்லை. அச்சிறிய அறையின் மூலையிலிருந்து தான் சத்தம் வந்தது. சத்தம் வந்த பக்கமாக மெதுவாக சென்று  கீழே குனிந்து பார்த்தபோது ஒரு இளம்பெண்ணின் கை, கால்களை கயிற்றால் இறுக பினணத்ததோடு அவளது வாயில் துணியை  திணித்து கட்டப்பட்டு கீழே உருட்டி விட்டிருந்தனர்.

     வாளை இடையில் செருகிக்கொண்டு குறுவாளால் அந்த பெண்ணின் வாயை கட்டி இருந்த கட்டை நறுக்கி விட்டதோடு அவளது வாயில் திணித்திருந்த துணியை அகற்றினான். பெரிய நீளமான துணியை அவளது வாயில் திணித்திருந்தார்கள்.  துணியை அகற்றியதும் "அம்மா " வென  கத்த தொடங்கினாள். "சிறுது, பொறுத்து கொள்ளுங்கள், தங்களது மற்ற கட்டுக்களை அகற்றுகிறேன்" என கூறியதோடு மளமளவென கை, கால்களை கட்டியிருந்த கட்டுக்களை குறுவாளால் அறுத்தெறிந்தான். எத்தனை நேரம்  கட்டப்பட்டு கிடந்தாளோ தெரியவில்லை. கட்டுக்களை அவிழ்த்தும் அவளால் சரிவர கை மற்றும் கால்களை இயக்க முடியவில்லை. இளவழுதியை மிரட்சியுடன் பார்த்தாள். நீண்டநேரமாக இருளில் இருந்ததாள் இருள் இருவருக்கும் பழகியிருந்தது.  

     "நீங்களே , எழுந்து விடுவீர்களா.... இல்லை .... உதவ வேண்டுமா" என்றான் தயங்கியபடி இளவழுதி.

     அந்தப்பெண்ணிற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. "இவன் நல்லவனா, இல்லை கெட்டவனா..... யாதொன்றும் புரியவில்லை." குழப்பத்துடன்  மளங்க மளங்க விழித்தபடி பயத்துடன் காணப்பட்டாள்.

     "தங்களிடம் ஒன்று கேட்டேன். ஆனால் தாங்கள் எந்த பதிலும் கூறவில்லை" என்றவன் இளம்பெண்ணை கூர்ந்து கவணித்தான். அதன் பின்பும் அவள் எந்த பதிலும் கூறாததால் "தாங்கள் வருந்த வேண்டாம். எண்ணால் தங்களுக்கு எந்தவிதமான இன்னலும் உண்டாகாது. நான் தங்களுக்கு வாக்களிக்கிறேன்." என்றான்.

     தனது கை, கால்களை நீட்டியவள், சிறுது நேரத்திற்கு பின்பு எழுந்து கை, கால்களை உதறி ஆசுவாசப்படுத்திக்கொண்டவள் "தங்களுக்கு உதவிக்கு நன்றி அய்யா" வென தலைவணங்கி சொன்னாள்.

     "ஆபத்தில் இருந்த உங்களை காப்பாற்றியது எனது கடமை " என்றவன் அறையைவிட்டு வெளியேறினான். அவனைத்தொடர்ந்து இளம்பெண்ணும் வெளியேறினாள்.

     அதன்பின் சிலகணங்கள் அங்கு அமைதி மட்டுமே நிலவியது. அந்த அமைதியை இளவழுதியே உடைத்தான். "தாங்கள் யார்? சூரியவர்மர் எங்கே? என்றான்.

     "நான் சாதாரண பணிப்பெண் அய்யா, நானும் எனது அம்மாவும் சூரியர்மரை காணவே இம்மாளிகைக்கு வந்தோம்....." என்றவள் சற்று தயங்கியபின் "இங்கு வந்து இக்கட்டில் சிக்கிக்கொண்டோம்...." என்றாள் தேம்பி அழுதபடி.

     "உங்கள் உடன் வந்த தங்கள் தாயார் எங்கே?"

     "என்னோடு வந்தது எனது தாயார் அல்ல..." என்றாள் தயங்கியபடி.

     "பின். யார்?"

     "அது வந்து....." என இழுத்தவள் " என்னுடன் வந்தவரின் பணிப்பெண் நான்" என்றாள் இளம்பெண். "உடன் வந்த பெண்மணி குறித்த இரகசியத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை""என்பதை உணர்ந்ததால் மேற்கொண்டு அதுகுறித்து அவன் வினவில்லை.

     தீடிரென "அய்யோ.... அம்மா... தாங்கள், எங்கு உள்ளீர்கள்?" என்றவள் உரக்க கத்தியபடி, அறை முழுவதும் தேடி ஓடினாள்.     

     "சிறிது, பொருத்தருளுங்கள். முதலில் விளக்கை ஏற்றுவோம், அதன்பின் அவரை தேடுவோம்." சொன்னவன் ஒருவழியாக சிறிய விளக்கு ஒன்றை கண்டுபிடித்து ஒளியேற்றினான். விளக்கின் ஒளியில் அறை முழுவதும் இப்போது தெளிவாக காண முடிந்தது.நீண்டநேரம் இருளிலே உலவியதால் வெளிச்சத்தை கண்டதும் விழிகள் கூசின இருவருக்கும்.
வெளிச்சத்தில் அங்கு இளவழுதியால் வெட்டி சரிக்கப்பட்ட மர்மநபர்கள் பிணமாக ஆங்காங்கே உதிரத்தால் குழித்து கிடந்தார்கள். பார்க்கவை பயங்கரமாக இருந்தது. எண்ண நடந்திருக்குமென ஒருவாராக இளம்பெண் ஊகித்துக்கொண்டாள். 

     விளக்கை இளம்பெண் தன் கையில் எடுத்துக்கொண்டு மாடத்தை நோக்கி நகர்ந்தவள் அங்கு சிறிய துண்டுகளாக உடைந்த வளையல்கள் மாடத்தை அடையும் படிகளில் கிடந்தன. "அம்மா....அம்மா" வென பெரும் குரலெடுத்து கத்த தொடங்கினாள். இளம்பெண்ணின் சத்தம் கேட்டு பின்னால் வந்தவன் "என்ன ஆயிற்று, ஏன் கத்துகிறீர்கள்?" என்றான்.

     அவள் எதுவும் பேசாமல் தேம்பி அழுதபடியே படிகளில் கிடந்த வளையல் துண்டுகளை நோக்கி கரத்தை நீட்டினாள்.

     "இதன் வழியாக தானே நாம் வந்தோம், இருளாக இருந்ததால் நமக்கு தட்டுப்படவில்லை போலும்" என நினைத்தவன் இளம்பெண்ணின் கையிலிருந்து விளக்கை வாங்கிக்கொண்டு படிகளில் இறங்கிவந்தான். மாளிகைக்கு வந்து மாடத்திற்கு செல்வதற்கு முற்பட்டபோது, "எனது காலில் இங்குதானே பெண்கள் தலையில் அணியும் ஆபரணம் கிடைத்தது" என எண்ணியதோடு தனது இடையில் பாதுகாப்பாக வைத்திருந்ததை தடவி, அது அங்கிருப்பதை உணர்ந்தவன் விளக்கை கொண்டு மாளிகையை சுற்றி தேடலானான்.

     ஒன்றுக்கு மேற்பட்ட அறைகள் அங்கு இருந்தன.  மாளிகை நல்ல உயர்தரமான வேலைப்பாடுகள் நிறைந்த தேக்கு மரக்கதவுகளை கொண்டு அமைக்கப்பட்டிருந்தன. அறை முழுவதும் வண்ணமயமான அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. அவற்றை ஒருகணம் கவனித்தவன் மேற்கு பகுதியில் அமைந்த அறைகளை நோக்கி சென்றான். அங்கு உதிரம் திட்டுதிட்டாக சிறிய அளவில் பரவிக்கிடந்தன. உதிரம் பட்டையாகவும் கோடாகவும் அங்கிருந்த அறைநோக்கி இருந்தது. 

      உதிரத்தை தாண்டி அந்த அறையை அடைந்தபோது இளம்பெண்ணும் அவனருகே வந்தவள் உதிரத்தை கண்டவள் பதறி மீண்டும் கத்த ஆரம்பித்தாள். சற்றும் யோசிக்காமல் அறையை மூடியிருந்த தாழ்ப்பாளை குறுவாளால் இளவழுதி உடைத்தான்.  இருவரும்  உள் நுழைந்தபோது  அங்கு இடைப்பகுதி உதிரத்தால் தெப்பலாக நனைந்தபடி அறைவாசலை நோக்கி கிடந்தாள்  சொப்பனத்திலும் கண்டிராத பேரழகு மங்கை ஒருத்தி. உடன் வந்த இளம்பெண் அதை பார்த்ததும் மூர்ச்சையாகி கீழே சரிந்தாள்.

(தொடரும்.... அத்தியாயம் 06ல்)
     



Monday, 23 December 2024

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 04

 🐾இராஜமோகினி🐾

🌹யாழிசைசெல்வா🌹

அத்தியாயம் - 04 🌾சூரியவர்மரின் மாளிகை🌾


      வானில் மிதந்தபடி வான்மதி  தனது தன்னொளியை நாகை மீது பாய்ச்சியபோது எப்போதும் இரைச்சலும் கூச்சலும் விரவிக்காணப்படும் வணிக வீதி ஏனோ தெரியவில்லை சிறிதும் ஆர்ப்பாட்டம் மில்லாமல் இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர் பொருளை எடுத்து விலை பேசிக்கொண்டும், சிலர் ஏதோ வந்ததற்காக பேருக்கு பொருளின் விலை கேட்டார்களே ஒழிய உண்மையில் வாங்கும் எண்ணம் இருப்பதாக தெரியவில்லை.


     இந்நேரம்......


     "வாங்கம்மா,வாங்கய்யா..... வாங்க..... இங்க வாங்க ....... புத்தம் புதிய மீன் இன்று சாயங்காலம் பிடிச்சது...... அத்தனையும் புதுசு..... அயிரை, வெளவால், திருக்கை, சீலாமீன், செம்மீன், கெண்டை, வெண்கெண்டை, கொறுக்கை, கொடுவா, கானுங்கெழுத்தி, கானாங்கத்தை, கருவாளை, கருந்திரளி, கயல், கூந்தா, கிழக்கன்,கருந்திரளி, கருங்கண்ணி, கணவாய், கரைமீன் யென எல்லா மீனும் கெடைக்கும்...... நீங்க வாங்கும்படியான விலையில கிடைக்கும்..... வாங்கய்யா .....வாங்க....." எனவும்.


      "பால்சுறா, பிள்ளசுறா, நெத்திலீ , அயிரை, சாள, நாட்டுமுரல், விளமீன், பண்ணா, வாழ, தேங்காய்பாறை, கூனி, குளங்கருவாடு எல்லாவகையான கருவாடும் , இங்கே கிடைக்கும். வாங்கம்மா...... வாங்க.... இங்கே வாங்க...." என்றும்.


     "வாங்கய்யா.... வாங்க.... பெரியவர்கள், குழந்தைகள், குமரிப்பெண்கள், மூதாட்டிகள் என அனைவருக்கும் ஏற்ற அருமையான ஆடைகள் , புத்தம் புதிய ஆடைகள்..... நம்ம நாகை தறிகளில் நெய்த வெண்ணிற பருத்தி ஆடைகள் கிடைக்கும்.....  காஞ்சிப்பட்டு, கலிங்கப்பட்டு, சீன தேசத்திலிருந்து இறக்குமதியான உயர்தரமான சீனப்படடு, அரபுநாட்டு வண்ணமயமான ஆடைகள் ,  அதிலும் ஆண்களுக்கு எடுப்பான கீழ்சராய், அதற்கு தோதான மேலாடை , சல்லாத்துணி, இளவம் பஞ்சுபோன்ற மெல்லிய ஆடை ..... என வித விதமாகவும் , தாரளமாகவும் ஏராளமாகவும் வாங்கும் விலையில் கிடைக்கும்...... வாங்க ..... வாங்க....." என கூவியபடியும்.


     "மலைநாட்டில் விளைந்த  குறுமிளகு, ஏலம், இலவங்கம், பட்டை, கிராம்பு, குஙகிலிங்கம், மலைக்கிழங்கு, சந்தனம், சவ்வாது,மலைத்தேன், மூங்கிலரிசி, செந்நெல்லரிசி, யானைகவணி, யென அனைத்தும் கிடைக்கும்...... வாங்கம்மா.... வாங்க....." என கூவி அழைத்தபடியும்.


     "கீழை நாட்டு அத்தர், சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், இலவங்கம், குங்குமம், கம்மென்று வாசம் வீசி கும்மென ஆளை தூக்கும் வாசனை திரவியங்கள் என அனைத்தும் கிடைக்கும்.... வாங்கம்மா..... வாங்கய்யா.... வாங்க.... இங்கே வாங்க..... உங்களுக்கு கட்டுபடியான விலையில் கிடைக்கும்" என்ற வணிகர்களின் கூச்சலும் இரைச்சலும் கலந்து கட்டி திரண்டு வரும் கூட்டம் இதென்ன இரவா இல்லை பகலா..... அத்தனை கூட்டம் வழிகிறதே, ஒரு  ஈ கூட புகமுடியாது போலிருக்கிறதே " என காண்போர் வியக்கும் வண்ணம்  எப்பொழுதும் அலகடலென ஆர்ப்பரித்து காணப்படும் வணிக வீதிதானா இது.....???  நம்பமுடியவில்லையே என எக்காளத்தில் கெக்கலித்து ஒளிர்ந்துகொண்டிருந்த வெண்மதியின் ஒளிப்பிரவாகத்தில் மிதந்தபடி தனது அரபுப்பரவி மருதன் மேலே ஆரோகணிகத்தபடி வணிக வீதியை கடந்தான் இளவழுதி.


     "நானறிந்தவரையில் எப்போழுதும் அல்லங்காடியின் கடைவீதி கூட்டமின்றி ஒருநாளும் இருந்ததில்லையே. ஏணிந்த மாற்றம். உள்ளூர ஏதோ ஒரு இறுக்கமான சூழல் பரவிக்காணப்படுவதாக உணருகிறேன். யாதாக இருக்கும் . படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான் “நீ உடனே நாகை செல், கேள்வி எதுவும் கேளாதே, இம்முடங்கலை சூரியவர்மரிடம் சேர்த்துவிடு, இது எனது ஆணை!” என கூறியதன் பொருள் இதுதான் போலும். அத்தனை உறுதியாக அவர் கூறி இருப்பதால் கண்டிப்பாக பெரும் உண்மை அதில் பொதிந்து இருக்க வேண்டும். என்னவாக இருக்கும். யாரிடம் கேட்பது.....ஆமாம். யாரிந்த சூரியவர்மர்? அவருக்கும் நாகையின் இன்றைய நிலவரத்திற்கும் யாதேனும் காரணம் இருக்குமா...??? ஒன்றும் புரியவில்லையே. கண்ணைக்கட்டி காற்றில் விட்டதுபோல் உள்ளதே..... தாமாக உதவ முன்வந்த இருளப்பமள்ளரின் உதவியையும் புறந்தள்ளியது எவ்வளவு பெரிய மடத்தனம்". தன்னை தானே நொந்து கொண்டான். 

        "எதற்கும் சூரியவர்மரின் மாளிகைக்கு  சென்று அவரிடமே கேட்டு விடலாம், அவர் மாளிகை எங்குள்ளது. யாராவது ஒருவரிடம் வழி கேட்டு கொள்ளலாம்." என புரவியை விட்டுக்கொண்டு சென்றான்.  

     அப்பொழுது அவனது வயிறு கடாமுடாவென கூப்பாடு  போட்டது. "அடடே,  உணவருந்த மறந்து விட்டோமே. நிறைசூலி இளம்பெண்ணை சந்தித்ததிலிருந்து ஆதூரசாலை வந்து சேர்ந்து அவரும் அவரது குழந்தையும் நலமாகும்வரை வேறு சிந்தனை தோன்றவே இல்லை ஒருவருக்கும். 

    ஆதூரசாலையில் உள்ள  பசிப்பிணிபோக்கும் தருமசாலையில் எத்தனை பேருக்கு உணவளித்து உபசரிப்பதை  பார்த்தோம். அங்கு நமக்கு ஒரு பிடி சோறு கேட்டால் தராமல் இருந்திருக்க மாட்டார்கள். நமது தவறு. சூரியவர்மரின் மாளிகையில் உணவை முடித்துக் கொள்ள வேண்டியதுதான்" என எண்ணியபடி தனது புரவியை முடுக்கினான் இளவழுதி.

      
   அடுத்த வீதியில் நுழைந்தபோது எதிரே இரண்டு சோழநாட்டு இரவு காவலர்கள் கலகலப்பாக உரையாடியபடி வந்துகொண்டிருந்தனர். அவர்களை நோக்கி புரவியை முடுக்கினான் இளவழுதி. 
     
      தம்மைநோக்கி யாரோ ஒருவன்  புரவியில் வருவதை கண்ணுற்றனர். அதள்குள் அவர்கள் அருகெ சென்று விட்டிருந்தான். அவர்களை நோக்கி "அய்யா, ஒரு உதவி...." என்றான்.


     "என்ன" என்பதுபோல் அவனை பார்த்தார்கள் அவ்விரு சோழ வீரர்களும். அவர்கள் பார்வையில் ஒருவித இளப்பம் தெரிந்தது.


    "சூரியவர்மரின் மாளிகைக்கு செல்ல வேண்டும், வழி யாது?" என்றான்.


    சூரியவர்மரின் பெயரைக்கேட்டதும் இதுவரை அவர்களிடம் குடிகொண்ட அசட்டை காணமல் போயிருந்தது. அவர்களின் உடல் முழுதும் ஒருவித மரியாதை கலந்த உணர்வு பரவி இருக்க வேண்டும். அது அவர்களது முகத்தில் பிரதிபலித்தது.


    "அய்யா.... யார் நீங்கள்?. எதற்காக அவரை காண விரும்புகிறீர்கள்?" என்றான் அவ்விருவரில் உயரமாகவும் தடியாகவும் இருந்த ஒருவன்.


    "நான் அவரது நண்பன், நாகை வந்தால் தன்னை காணும்படி கூறியிருந்தார். அதனால்தான் அவரை பார்க்க செல்கிறேன். இப்பொழுது கூறுங்கள்." என்றான் 


     "தாங்கள், நாகைக்கு புதிதாக இருக்கவேண்டும். அப்படித்தானே ...." என்றான் அவர்களில் உயரமாகவும் தடியாகப் காணப்பட்ட அதே வீரன் மீண்டும்.


     "ஏன், அவ்வாறு வினவுகிறீர்கள்.?"


     "நாகையில் செல்வாக்கு மிக்க பிரமுகர்களில் ஒருவர் மட்டுமல்லாது நாகை வணிகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கவல்ல சத்தியும் பெரும்செல்வாக்கும் கொண்ட மணிக்கிராமத்தார் அவர். அவரது அசைவு இன்றி ஒர் அணுவும் நடைபெறாது.  நாகை வணிகத்தை மட்டுமல்ல நாகையின் ஏற்றமும் இறக்கமும் அவரது தீர்மானத்தில்தான் உள்ளது. அவரை தெரியாதவர் யாருமில்லை.... அப்படியிருக்க நீங்கள் என்னவென்றால் வெகு சாதாரணமாக அவரை பற்றி வினவுகிறீர்கள்...." என்றான் சோழவீரர்களில் குட்டையாக இருந்த மற்றொருவன்.


     சூரியவர்மரின் செல்வாக்கை உணர்ந்து கொண்டவன் "தாங்கள் சொல்வது சரிதான். நான் ஊருக்கு புதிதுதான். அவர் இல்லத்திற்கு வழி காட்டுங்கள்"  என்றான்.


    ஒருகணம் அவனை பார்த்துவிட்டு "அங்கிருந்து மூன்றாவது வீதியில் கடைசியில் இருக்கும் பெரிய மாளிகைதான் அவருடையது. நீங்கள் அடுத்த வீதியை கடந்ததுமே அவரது மாளிகை தெரியும். எளிதாக கண்டுபிடித்து விடலாம்" என்றான் சோழவீரர்களில் முதலில் உரையாடியவன்.


    "மிகுந்த நன்றி தங்கள் இருவருக்கும்" என கூறியபடி மருதனை சூரியவர்மர் மாளிகை நோக்கி முடுக்கினான். இரண்டாவது வீதியை கடந்து மூன்றாவது வீதியினுள் நுழைந்தபோது ஓங்கி உயர்ந்த மாளிகை, அவ்வீதியின் கடைக்கோடியில் தெரிந்தது. என்ன காரணமோ தெரியவில்லை அவ்வீதி இருளடைந்து  காணப்பட்டது. வெண்மதியும் தன் ஒளிகிரணத்தை மேகப்பொதிக்குள் புதைத்துவிட்டதால் வெளிச்சம் அரவே இல்லை. அத்தோடு அவ்வீதியெங்கும் நீண்ட நெடும் மா, வேம்பு விரவிக்கிடந்தது. மயானத்தின் அமைதி எங்கும் பரவி அவ்விரவை ஆட்சி செய்து கொண்டிருந்தது. சூரியவர்மரின் மாளிகையில் உள்ளே ஒன்றிரண்டு விளக்குகள் ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தன. அவையும் இருளுக்கு கட்டியம் கூறி வரவேற்க தயாராக இருந்தன. அவையும் அனணயும் தருவாயில் இருந்தன. ஆகவே அவ்விருளும் அவை தரும் செய்தியும் பயங்கரத்தை தோற்றத்தை தந்தது.


     யாவற்றையும் கவனித்து அதற்கு ஏற்றார் போல் யத்தனித்த இளம்வழுதி புரவியிலிருந்து கீழிறங்கி வீதியின் இருமருங்கிலையும் கூர்ந்து கவனித்தபடி மெல்ல சூரியவர்மர் மாளிகை நோக்கி தனது புரவியின் கடிவாளத்தை இடதுகரத்திலும், தனது கச்சையிலிருந்த வாளை உருவி வலதுகரத்திலும் ஏந்திக்கொண்டு மெல்ல மெல்ல நகர்ந்த வண்ணமிருந்தவன் , சூரியவர்மர் மாளிகைக்கு முன்பு இரண்டு மாளிகை தள்ளி இருந்த மாமரத்தின் அருகே  நிறுத்தியபின் மருதனின் காதில் ஏதோ கிசுகிசுத்தான். மருதனும் அவன் சொன்னதற்கு தலை மேலும் கீழும் ஆட்டி ஆமோதித்தான். அவனை தட்டிக்கொடுத்துவிட்டு சூரியவர்மர் மாளிகைநோக்கி மெல்ல நகர்ந்து சென்றவன் மாளிகை வாசலை அடைந்தபோது ஒருகணம் யோசித்தான் "வருவது யாதாகினும் எதிர்கொள்வோம்" என்ற முடிவுக்குவந்தவுடன்  வாசலை கடந்து உள்ளே சென்ற போது பெரிய தேக்குமரத்தால் அழகிய வேலைப்பாடுகளுடன் நேர்த்தியாக செய்த பெருங்கதவின் மேல் கைவத்து ஓங்கி தட்டமுற்பட்டபோது "வீல்..." லென்ற சத்தம் மாளிகைக்குள் கேட்டதோடு, பரபரவென எதையோ இழுத்து செல்வதும், அதனை தொடர்ந்து "டம் டும் " மென்ற சத்தமும் உண்டானது. அவ்வோசை அடங்குவதற்குள் "படீர்"டெரன கதவை சாத்தும் சத்தமும் கேட்கலாயிற்று.


     மாளிகையினுள்ளே தொடர்ந்து கேட்ட சத்தம் இளவழுதியின் பொறுமையை காற்றில் பறக்கவிட்டிருந்தது. கதவின் மேல் கைவைத்ததும், அது தானாக திறந்துகொண்டது.  பெயருக்கு சாத்தி வைத்திருப்பர் போலும். உள்ளே மெதுவாக இளவழுதி கால்வைத்ததுதான் தாமதம் அதுவரை மாளிகையில் எரிந்துவந்த ஒன்றிரண்டு விளக்குகளும் அனணந்து இருளைப்பரப்பியதால் கண்ணை கட்டி காற்றில்விட்டதுபோல் இருந்தது. ஒவ்வொரு அடியும் கவனமாக எடுத்து வைத்து மாளிகையின் மையப்பகுதிக்கு வந்தபோது அவன் நுழைந்த வாசல் கதவை படீரென தள்ளி சாத்தியதோடு விடுவிடுவென யாரோ ஓடும் சத்தம் கேட்டது.


     சத்தம் வந்த திக்கை ஒருவாறாக அனுமானித்தபடி எதிரே தொடர்ந்து நகர்ந்தவன் தற்காப்பிற்காக தனது வாளை முன்னால் நீட்டி பிடித்துக்கொண்டும் அதனை வைத்து முன்னால் ஏதேனும் விவகாரமாக தட்டுப்படுகிறதா என துழாவியபடி நகர்ந்து கொண்டிருந்தவன் கால் அருகே ஏதோ தட்டுப்பட்டது. கீழை குனிந்து எடுத்து அதனை மெல்ல தடவிப்பார்த்தான். பெண்கள் தலையில் அணியும் ஒருவகை ஆபரணம் அது என்பது புரிந்துகொண்டவன் அதனை இடைக்கச்சையில் செருகிக்கொண்டு தொடர்ந்து நகர்ந்தான். அவனுக்கு முன்பாக மாளிகையின் மேல்மாடத்திற்கு செல்லும் படிக்கட்டு உள்ளதை வாளால் துழாவி, அவ்விருளிலும் கண்டறிந்து கொண்டான். மாளிகையின் அமைப்பை ஒருவாறாக கணித்துக்கொண்டு மெதுவாக படியில் எற முற்பட்டான்.சத்தம் எழாத வண்ணம் மெதுவாக ஏறி, மாடத்தை அடைந்து அங்கிருந்த கதவினை திறந்து உள்ளே நுழைந்தவன்  நான்கு தப்படி நடந்திருப்பான். பின்னாலிருந்த கதவு சாத்தப்படும் சத்தமும் "வகையாக மாட்டிக்கொண்டாயா.... " என்ற ஏளனக்குரலும்,  அதனைத்தொடர்ந்து இறுமாப்புடன் கூடிய பயங்கர சிரிப்பும் கூட்டுச்சேர்ந்து அவ்விருளை கிழித்துக்கொண்டிருந்தது.


(தொடரும்...... அத்தியாயம் 05ல்)



Wednesday, 18 December 2024

பிள்ளைநிலா - யாழிசைசெல்வா

      கிழக்கே வானம் வெளுத்த போது, இரவு முழுவதும கொட்டித்தீர்த்த பேய் மழையால் ஊர் முழுவதும் 'நச நச வென' ஒரே வெள்ளக்காடாக மாறிப்போய் ஆங்காங்கே இருந்த  குடிசைகள் தனித்தனி தீவாக மாறி கிடந்தது. 

      ஊரின் கிழக்கு பகுதியில் மொத்தம் ஐம்பது வீடுகள் சொச்சம் கொண்ட குடியிருப்பு பகுதி அது.   அதில் மூனாவது தெருவின் கடைசியிலெ  இருந்தது  வள்ளியின் குடிசைவீடு. கருப்பா குட்டையா இருந்தாலும் எந்த வேலையையும் தாட்டியமா செய்ற துணி கொண்ட பொம்பளதான். ஆனா.... அவ கெட்ட நேரமோ என்னவோ,  அவளோட வீட்டுக்காரன் போனமாதம் நொங்கு வெட்டப்போனவன் பனைமரத்துலயிருந்து கீழ விழுந்தப்ப, கழுத்தெழும்பு முறுஞ்சு செத்துப்போனான்.   போதும் போதாதுக்கு அவளோட கெட்ட நேரம் விடாம உடும்பு பிடியா புடிச்சமாதிரி அவ ஒரேமக  வேம்புவும் போனவாரம் கொண்டவனோட சண்ட பிடிச்சு கோவிச்சுட்டு வீட்டுல வந்து அடைகாக்கிற பொட்டக்கோழி மாதிரி எப்பவும் மூலையிலெ முடங்கி கெடக்கா. என்ன ஏதுனு கேட்டா எறிஞ்சு விழுந்து பிடுங்கிறா... "என்னத்த சொல்ல எல்லாம் ஏன் தலையில கோணமானயா ஆண்டவன் கிறிக்கி வச்சுட்டான் போல.... நாய் பொலப்பா இருக்கு " என தனக்குதானே பிச்சி மாதிரி பேசிக்கிட்டா.


    காலையிலேயே வெள்ளனா எழுந்திரிச்சு சோறப் பொங்கி வச்சு அதுக்கு தோதா நெத்திலி கருவாட்டோட சின்ன வெங்காயம் , பச்சமிளகா, தக்காளி சேர்த்து கடலை எண்ணெயில வதக்கி தாளிச்சு வச்சிருந்தா . அதன் மனமும் சுவையும் எப்ப சாப்பிடுறெனு கூவி கூவி அழைக்கிற மாதிரி இருந்துச்சோ என்னவோ.... படக்குனு எந்திரிச்ச வேம்பு சுத்தும் முத்தும் வெறிக்க பார்த்தவ "யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்துச்சே.... அட அது ஆத்தாவோட குரல் தான் " என ஒருவழியா கண்டுபிடிச்சு முடிச்சததும்தான் தாமதம், "ஏன்டி, காலையில இருந்து நான் கத்திக்கிட்டு கிடக்கேன், நீ பாட்டுக்கு எனக்கென்ன வந்ததுனு கிடந்து உறக்கமே கதியா கிடந்தா போதுமா....?? "


    "இப்ப என்னங்கிறெ.... எந்திரிச்சு என்ன செய்யப்போறேன். வெட்டி முறிக்கிற வேல எதுவும் பாக்கியிருக்கா... என்ன?". வள்ளியைப்போலவே கருப்பாயிருந்தாலும் அம்மன் கோவில் செல மாதிரி இருப்பா; வேம்பு,  குணத்திலும் செயலிலும் .


    "இப்படித்தான் , உன்னோட வீட்டுலயும் படுத்தே கிடப்பியா.... ? அதனாலதான் உன் மாமியாகாரிக்கு உன்ன பிடிக்கலியோ....??"


     "ஆமா, நான் படுத்துக்கிடக்கிறத நீ பாத்தியா..... சும்மா எதாச்சும் பேசனுமிண்டு பேசி, என்ன கடுப்பேத்தாத.... போயிரு ஆமாம்...." விட்டால் வள்ளியின் மீது விழுந்து பிராண்டியிருப்பாள் வேம்பு.


     "சரி, சரி .... ஏன்மேல விழுந்து பிரண்டாத..... நானும் நீ வந்ததுலெயிருந்து கேட்கிறேன். ஒருநாளும் உண்ம வார்த்த சொல்லமாட்டேன்கிற...."என கூறிபடி மக கிட்டபோய் அவதலய ஆதரவா நெஞ்சுல சாச்சுகிட்டா.


    "ஏன் பிள்ளை சந்தனத்தை ஏன் கிட்டயிருந்து பரிச்சுக்கிட்டா யேன் மாமியா. கல்யாணம் முடிஞ்சு இந்த பங்குனி வந்தா யெம் பேரன் சந்தனதுக்கு ரெண்டு வயசு ஆகுது, கல்யாணம் போசினப்ப போடுறதா சொன்ன நகையில ரெட்டவட சங்கிலி  ஒன்னு பாக்கியிருக்கு அத வாங்கிட்டு வந்தா, வீட்டுக்கு வா .... இல்லெனா உன்னோட ஆத்தா வீட்டுலேயே இருந்துக்கனு சொல்லி என்ன வீதியில பிடிச்சு தள்ளிவிட்டுட்டா யேன் மாமியா...." என்றபடி தேம்பி அழுதாள் வேம்பு.


    " நான் , அப்பவே நெனச்சேன். இதுதான் இருக்குமுனு.... "

     " அப்பன் போனபிறகு நீ படுற சிரமத்துல, நான் உனக்கு சுமையா மாறிட்டேனே" என தேம்பி அழுதாள்.


     "நான் பாத்துக்கிறேன். நீ நாளைக்கு கிளம்பு , நான் உங்கூட வரேன்" என்றாள் வீராப்பாக.

     "வந்து"

    "எல்லாத்துக்கும் ஒரு வழி இருக்கும் மகளே....." 

    "என்ன செய்யப்போற....??"

    "நம்ம புஞ்சைய வேலுச்சாமிக்கு வெல பேசியிருக்கேன். ரெண்டொரு நாளுல பணம் வந்ததும் உனக்கு போட வேண்டிய ரெட்டவடத்த எடுத்து வந்து உன்னோட மாமியாகிட்ட தாரேன், சரியா...."

     "இருக்கிற புஞ்சைய வித்துப்புட்டு நீ என்ன பண்ணுவ..... அப்ப சோத்து பாட்டுக்கு....." என்றவள் கண்ணுலருந்து  கண்ணீரு பெருக்கெடுத்து ஓடியது.

    "எனக்கென்ன மகளே, நீயும் எம்பேரன் சந்தனமும் சிரிச்ச மானக்கி இருந்தா போதும்."

    "ஏன் புள்ள என்ன பண்றானோ தெரியலியே..... நான் ஊட்டாட்டி அவன் திங்திர ரெண்டு வா சோறும்  சரியா சாப்பிட மாட்டானெ...." கிடந்து கதறுனா....

    "வந்து இத்தனை கழிச்சு இப்பதான் புள்ள நெனப்பு வருதா..... உனக்கு."

    "நீ வேற வகுத்தெரிச்சல கெளப்பாத.... பச்சப்பய அவன் நெனப்பு ஒருபுறம், நாதியத்துப்போன நீ ஒருபுறம் ரெண்டையும் மனசுல போட்டு மருகிகிட்டு எத்தனை நேரம் உக்காந்தே கெடக்கிறது. உன்கிட்ட சொல்வும் முடியல, மெல்லவும் முடியல " என்றாள்  தேம்பியபடி வேம்பு.

    "பொம்பள வாங்கியந்த வரம் இதுதானோ" என எண்ணியதோ என்னவோ  மீண்டும் அட மழை தன் பங்கிற்கு அழ  ஆரம்பித்தது.

(முடிந்தது)

    


     

இராஜமோகினி - 03 யாழிசைசெல்வா

 🐾இராஜமோகினி🐾

🌹யாழிசைசெல்வா🌹

🌾அத்தியாயம் - 03 சூலிகாம்பாள் 🌾


       சோழகுலவல்லிப்பட்டிணத்தின் நீண்ட தெருக்களில் கூட்டம் வழிந்து கொண்டிருந்தது.  கீழைதேசங்களிலிருந்து  வரும் பெரும் நாவாய்களுக்காக காத்திருந்த சிறிய படகுகள்,  அவை வந்ததும் ஈ கூட்டம் போல் நாவாய்களை சுற்றிவளைத்துக்கொண்டு  அதில் வந்த பொருட்கள் அனைத்தையும் கரைக்கு மாற்றி கொண்டு செல்ல யத்தனித்தன. அவற்றை முறைப்படுத்த நாவாய்களிலிருந்த ஊழியர்களின் ஒருவன் படகுகளை நோக்கி "ஏய்....  இப்பிடி வாருங்கள்... இன்னும் சிறிது தள்ளி.... அப்படித்தான்.... போதூம்..போதூம் "  என்றவன் " பொருட்களை பார்த்து, கவனமாக இறக்குங்கள்...."  என சத்தமாக கத்திக்கொண்டிருந்தான். 

    வெள்ளியை உறுக்கி ஊற்றியதுபோல் கடல் அன்னையை முத்தமிட்டு கொண்டிருந்தாள் வெண்மதி .
அலைகளை கிழித்துக்கொண்டு வந்த பாய்மரபடகுகளின் அணுவகுப்பு கரைக்கு  முன்பாக ஒரே சீராக வந்து நின்றன. ஏற்கனவே வந்த நாவாய்களிலிருந்து பொருட்களை படகுகளுக்கு மாற்றிக்கொண்டிருந்தவர்கள் தங்கள் படகுகளை கரையைநோக்கிச் ஒருபுறமாகவும்,  மற்றொருபுறம் கரையிலிருந்து நாவாய் நோக்கி இன்னொரு வரிசையாச சென்றன. இந்த அணிவகுப்பை ஆங்காங்கே முறைப்படுத்தி கண்காணித்தபடி  இருந்தனர் சோழத்தின் இரவாடிகள்.

     கரையில் இறங்கிய பொருட்களை சுமைதூக்கும் ஊழியர்கள் தூக்கிக்கொண்டும் ஓடிக்கொண்டும் நகரத்திற்கு உள்ளே எடுத்துச்செல்ல காத்திருக்கும் மாட்டுவண்டிகளில் முறைப்படி ஏற்றிக்கொண்டுமிருந்தவர்கள் "இந்தாப்பிடி .... ம்ம்ம்... அப்படித்தான்...." என அவர்கள்போட்ட இரைச்சல் வானைக்கிழித்துக்கொண்டிருந்தன.  இதற்கு ஊடாக ஒவ்வொரு பொருளையும் முறையாக மதிப்பிட்டதோடு அவற்றின் தரத்திற்கும், எடைக்கும் ஏற்ப உல்குவரி எனும் சுங்கவரி விதித்துக்கொண்டிருந்தார் சுங்கச்சவாடி அதிகாரி.

     கீழைதேசத்திலிருந்து வந்திறங்கிய சீனச்சூடம், அகில், சந்தனம், ஆம்பர், இலவங்கம், குங்குமம் போன்றவைகளை பெரும் மரப்பெட்டிகளில் அடைத்து அவை தனித்தனியே முத்திரையிடப்பட்டிருந்ததை அடுக்கிக் கொண்டிருந்தனர் சுமைதூக்கும் ஊழியர்கள். தங்களது முத்திரையிடப்பட்ட சரக்குகளை கண்டறிந்து மாட்டுவண்டிகளில் ஏற்றிக்கொண்டிருந்தனர் , கடற்கரைபட்டிணங்களில் வணிகம் செய்யும்  மணிகிராமத்தார்.

    இன்னொருபுறம் மாட்டுவண்டிகளிலும் கூட்டுவண்டிகளிலும் உள்நாட்டுப்பகுதிகளுக்கு வணிகப்பொருட்களை ஏற்றிக்கொண்டும் அதனை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார் வணிகர்களின் தலைவன் எட்டிச்சாத்தன். கூட்டம் கூட்டமாக செல்லும் வணிகச்சாத்திற்கு கட்டுப்பட்டவர்கள் அவர்கள். பறவைகள் வலசைபோதல் போன்று  தொன்று தொட்ட வழக்கம் அது.

     சரம்சரமாக வெளியேறிக்கொண்டிருந்த வாணிகசாத்தினைக் கடந்து நகரத்தில் நுழைந்த மாட்டுவண்டி  எதிரே பெரிய ஆலமரத்தின் கிளைபோல பரவிக்கிடந்த ஆதூரசாலை வாயிலை கடந்து உள்ளே நுழைந்தது.

    பல்வேறு பகுதிகளாக வகை பிரித்த அறைகளைக்கொண்டதும், சுண்ணாம்புச் சுதைவைத்த அடிக்கட்டுமணத்தையும், சுற்றுச்சுவரையும் எழுப்பியவர்கள் அதன்மேல்    மூங்கில்கழிகளை குறுக்காக வைத்து விரவி அதன்மேல் தென்னவோலையால் கூரைவேய்ந்து  கட்டப்பட்டிருந்தது  இராஜராஜர் ஆதூரசாலை.  

     ஆதூரசாலையைச் சுற்றி  மூங்கில்வேலி  அமைக்கப்பட்டிருந்தது. வேலிக்கும் ஆதூரசாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் மூலிகைதோட்டமும் ஆங்காங்கே நிழல்தரும் புன்னை, வேப்ப, மா மரங்களும் மட்டுமின்றி, ஆதூரசாலை முகப்பருகே குழைதள்ளிய வாழைமரக்கூட்டம் ஒருபுறமும் அதன் அருகாமையிலேயே பசிப்பிணி போக்கும் வைத்தியசாலையும் ஒருசேர இயங்கி கொண்டிருந்தது.

     திடுமென வந்துநின்ற மாட்டுவண்டியையும் அதிலிருந்து பரபரப்பாக கீழிறங்கி வேகமாக ஆதூரசாலைக்குள் போன செங்கமலம் கையோடு வைத்தியர் இருளப்பமள்ளரை  வண்டியருகே அழைத்துவந்தார்.

    கட்டையாகவும் குட்டையாகவும் நீண்டவெண்தாடியுடன் கூர்மையான விழியுடனும் , விழிகளுக்கு மேலமைந்த நெற்றியில் பட்டையாக திருநீறும் , இடையில் பச்சைநிற பருத்திஆடையும்,  நெஞ்சில் எப்போதும் மணக்கும் சந்தன பூச்சும்  அதற்கு மேல் பச்சை வண்ண பருத்தி தூண்டை தோளில் பரவவிட்டவரின்,   முகத்தோற்றத்தைகொண்டோ இதழில் பரவும் புன்னகையைகொண்டோ அவரின் உணர்வுகளைகண்டறிதல் அவ்வளவு எளிதல்ல என்பதுபோல் வண்டி அருகே வந்தவர், " எப்போது மயக்கமானார் இவர்.?" என செங்கமலத்தை பார்த்து கேட்டார்.

     "என்ன அய்யா சொல்கிறீர்கள்.... அவள் உறங்குவதாக அல்லவா நினைத்தேன்." என்றவர் தேம்பி அழுதபடி " சூலிகாம்பாள் தாயே.... என் மகளைக் காப்பாற்று ...."

    இதற்கிடையே ஆதூரசாலையில் பணிசெய்யும் இருபெண்களை அழைத்து வைத்தியர் இருளப்பமள்ளர்,  அடுத்ததாக நிறைசூலி பெண்ணிற்கு செய்யவேண்டி பணிகள்குறித்து ஆலோசனை கூறிவிட்டு செங்கமலம் அருகே வந்தார், "அம்மா ... வருந்தாதீர்கள்.....  சூலிகாம்பாள்தாயின் கருனை இருக்கும் போது வருந்துவானேன்" என்றார். வயதான முதிய ஆடவர் இருவரும் நிறைசூலியின் மாமியாரும் செங்கமலத்திற்கு தேறுதல் மொழி கூறிக்கொண்டிருந்தவேலையில், ஆதூரசாலை பணிமகளிருவரும் நிறைசூலிப்பெண்ணை தூக்கிக்கொண்டு நிறைசூலிப்பெண்கள் வைத்திய பகுதிக்கு கொண்டு சென்றிருந்தனர். அவரும் அவர்களை பின் தொடர்ந்தார்.

     புரவியை ஆதூரசாலையில் உள்ள கொட்டடியில் பினணத்துவிட்டு வண்டியருகே வந்த இளவழுதி " அம்மா , வைத்தியர் என்ன சொன்னார்? தங்கள் பெண் நலம்தானே?" என்றான்.

    "இல்லை தம்பி. நாம் நினைத்தது போல் என்மகள் உறங்கவில்லை. மயக்கமாக இருந்திருக்கிறாள்."என்றார் தேம்பி அழுதபடி.

    செங்கமலத்தின் கணவர் "அழதே, செங்கமலம். சூலிகாம்பாள்தாய் மேல் பாரத்தை அப்போதே போட்டுவிட்டாயே, பிறகேன் கவலை உனக்கு. எல்லாம் அவள் பார்த்துக்கொள்வாள்.... கவலையை விடு"என்றபடி செங்கமலத்தின் நீர்தாரையை துடைத்துவிட்டார்  தோளில் போட்டிருந்த பருத்தியில் நெய்த  துண்டினை வைத்து. அப்படியே அவரின் நெஞ்சில் ஆதரவாக சாய்ந்து கொண்டார் செங்கமலம்.

    " ஆமாம் அம்மா, வழியிலேயே வண்டியை நிறுத்திவிட்டு தென்திசை நோக்கி சூலிகாம்பாள்தாயை குறிப்பிட்டு  வேண்டிகொண்டபின் தைரியமாக இருந்தீர்கள் இப்போது ஏன் வருந்துகிறீர்கள் ."

   " நீ , சொல்வது சரிதானப்பா. சூலிகாம்பாள்தாயை வணங்கிகொண்டாள் நிறை சூலிக்கு எந்த ஆபத்தும் வராது என்பது எங்கள் நம்பிக்கை, அது இதுவரை பொய்த்ததே இல்லை. ஆனால் என்மகள் மயக்கமாக இருந்தாள் என்பதுதான் கவலை தருகிறது."

    "எல்லாம் நல்லபடியாக நடக்கும் அம்மா. வருந்தாதீர்கள். " என்றவன்,  அவர்களை அழைத்தப்போய் நீர் பருகச்செய்து ஆதுரசாலை வாசலில் போடப்பட்டிருந்த நீண்ட மர ஆசனங்களில் அமரவைத்தான்.

    "தாங்கள் தவறாக என்ன வில்லை என்றால் சூலிகாம்பாள் தாயைப்பற்றி சொல்லுங்கள் எனக்கும் ஆவலாக உள்ளது" என்றான்.

   அதுவரை சோகமே வடிவாக இருந்த செங்கமலம் முகமலர்ச்சியுடன் "சூலிகாம்பாள்தாயைப் பற்றி கூறுகிறேன் தம்பி." என்றவர் விழிகளில் ஒருவித பொலிவும் தைரியமும் பிறந்ததிருக்கவேண்டும்.
"அன்னை சூலிகாம்பாள், திருப்புகலூரில் கோயில் கொண்டுள்ள எம்பெருமான்அக்னிபுரிசுவர் இல்லாள் கருந்தார்குழலி ஆவார். முன்பொரு காலத்தே இன்றுபோல் அன்றைக்கு எந்தவிதமான வசதியும் இல்லாத காலம் அது. சுற்றிலும் எப்போதும் வாய்க்கால் வரப்பும் கொண்ட வளர்ச்சியில்லாத கிராமம் புகலூர். ஒன்றுமில்லாத அந்த கிராமத்தில் எம்பெருமான் அக்னிபுரிசுவரும் கருந்தார்குழலி அன்னையும் எழுந்தருளினர். அதன்பின்தான் கிராமம் ஆள்போல் தழைத்து அருகுபோல் செழித்து வளர்ந்தது.  அதன்பின் தான் புகலூர், திருப்புகலூர் எனக் கொண்டாடப்பட்டது. திடீரென ஒருநாள் வடதிசையிலிருந்து நிறைசூலியும் அவரது தாயும் கொட்டும் மழையில் நனைந்தபடி போய்க்கொண்டிருந்தார்கள். அப்போது நிறைசூலிக்கு பேறுகால வழி வந்து துடித்து கதறினாள். மகளின் நிலைகண்டு தாளாமல் கதறியபோது அவ்வேளையில்  வெண்மைநிற  பருத்தி ஆடையணிந்த வடிவான இளம்பெண் ஒருத்தி வந்து நிறைசூலியின் உயிர் மட்டுமின்றி அவளது குழந்தையையும் சேர்த்து காப்பாற்றினாள். தாயும்சேயும் நலம்பெற்றமையால் அவளுக்கு சூல் காணிக்கையாக நிலம் வழங்கப்பட்டது. இன்றும் அந்நிலம் எம்பெருமான் அக்னிபுரிசுவரர், கருந்தார்குழலி அன்னை ஆலயத்தருகே உள்ளது. அந்த இளம்பெண் வேறுயாருமல்ல அன்னை கருந்தார்குழலி தான்.  அன்றுமுதல் கருந்தார்குழலி அன்னை சூல் காத்தமையால் சூலிகாம்பாள் என போற்றப்பட்டாள். இதுவரை இப்பகுதியில் நிறைசூலிப்பெண் எவரும் பேறுகாலத்தில் இறந்ததாக சரித்திரம் இல்லை. எல்லாம் அவள் அன்பும் அருளுமே சாட்சி" என்றவர் கோவிலமைந்த திசை நோக்கி வணங்கி நிமிர்ந்தார்.
ஏனையவரும் அவரைப்பின்பற்றி வணங்கி நிமிர்ந்தனர்.

     ஆதூரசாலையின் கிழக்கு பகுதியிலமைந்த நிறைசூலியின் அறையில் எரிந்துகொண்டிருந்த விளக்குகளின் நாக்குகள் சுடர்விட்டு ஒளி உமிழ்ந்தபோது "ம்ம்மா.... "என்று இளம்பெண்ணின் அலறலும் அதனைத்தொடர்ந்து "வீல்"லென்ற குழந்தையின் சத்தம் ஒருசேர கேட்டததும் தான் தாமதம் , ஆசனத்திலிருந்து துடித்தெழுந்த செங்கமலம் "தாயே....சூலிகாம்பாள்..." என உரக்க சத்தமிட்டு அழுதவரின் கண்கள் குளமாயின.

    ஒருநாழிகை கடந்தபோது,  வானில் வெள்ளிநிலவின் ஒளியில் ஆதுரசாலைக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டிருந்தது. அந்த இதமான வருடலில் சூலியின் பேறுகால வலி மயில்தோகையால் ஒத்தடமிட்டது போலிருந்தது.

    வெண்தாடியை வருடிக்கொண்டு  பேறுகால அறையிலிருந்து வெளியே வந்தார் வைத்தியர் இருளப்பமள்ளர் . அவரை அனுகி செங்கமலம் " அய்யா என் மகள்..."

     "தாயும் சேயும் நலமாக உள்ளனர் அம்மா " என்றதும், அவரை பார்த்து கையெடுத்து கும்பிட்டு வணங்கியபடி " மிகுந்த நன்றி அய்யா." மனதிற்குள் 'எல்லாம் தாயின் கருனை' என சூலிகாம்பாள் அன்னையை கொண்டாடிய முதிர்ந்த முகத்தில் வழிந்தோடிய விழிகளின் ஈரம் சாட்சியானது.

     தாயின் முகத்தை நோக்கிய வைத்நியர் இருளப்பமள்ளர் " அம்மா , இருநாழிகை கடந்தபின் தாயையும் சேயையும் காணலாம்" எனக்கூறி திரும்பியவர் வயதானவர்களோடு புதிதாக யாரோ ஒரு இளைஞன் இருப்பதை உணர்ந்தார் போலும்  " தம்பி யாரப்பா...நீ? " என வினவியதும், வைத்தியர் அருகே விரைந்து சென்ற செங்கமலம், வரும்போது சாலையில் ஏற்பட்ட இன்னல்களையும் அதிலிருந்து தங்களை காத்து இங்குவந்த நிகழ்வை தெளிவாக அவரிடம் விளக்கி கூறலானார்.

     செங்கமலத்தின் உரையாடலை கேட்டுக்கொண்டு வந்தவர் ஆதூரசாலைவாசலில் எறிந்துகொண்டிருந்த விளக்கின் ஒளி சிறுத்து மங்கலாக தோன்றியது. விளக்கை கூர்ந்து நோக்கியதும் எங்கிருந்ததோ வந்த ஊழியர் ஒருவர்  எண்ணையை  வேண்டுமட்டும் ஊற்றிச்சென்றார். அதுவரை சுணங்கி சிறித்த ஒளிவிளக்கு மெல்ல பற்றிப்பரவி பளிச்சென ஒளிர்ந்ததும் அதன் ஒளியின் பிரவாகத்தில் வாசலில் பெரியவர்களோடு உரையாடிக்கொண்டிருந்த இளவழுதியின் முகம் நன்கு தெரியலாயிற்று.

     அவனது முகத்தை கண்ணுற்ற வைத்தியர் இருளப்பமள்ளர் ஒரு கணம் விழி சுருங்கி விரிந்தபோது செங்கமலம் இளவழுதியுடனான சந்திப்பை விளக்கி முடிக்கவும் சரியாக இருந்தது.

     இளவழுதி அருகே சென்றவர் அவனது முகத்தை ஆராய்ந்தபடி "தம்பி ,  யாரப்பா...நீ...? "  என மீண்டும் அதே கேள்வியை அவனிடம் கேட்டார்.

     இப்போதுதானே அவரிடம் ஆதியோட அந்தமாக அனைத்தும் கூறினோம். மீண்டும் ஏன் வைத்தியர் அந்த தம்பியிடம் மீண்டும் அதே கேள்வியை கேட்கிறார் என செங்கமலமும் மற்ற முதியவர்களும் குழப்பத்துடன் பார்க்கலாயினர்.

      "அய்யா, இப்போதுதானே.... நடந்த அனைத்தையும் கூறினேன். மீண்டும் அதே கேள்வியை கேட்டு அந்த தம்பியை வருத்துகிறீர்கள்" என்றார் செங்கமலம்.

      மற்றவர்களும் "செங்கமலம் சொல்வது சரிதானே " என்றனர் ஒரேநேரத்தில்..

    "இந்த வாலிபனின் பெயர் என்னவென்று யாரேனும் சொல்லுங்கள் பார்ப்போம்." என்றுதும் , அனைவரும் ஒரே குரலாக "அதானே, நாம ஒருத்தரும் இந்த தம்பியோட பெயரை கேட்கவில்லையே " என வருத்தமுடன் இளவழுதியை பார்க்கலாயினர்.

    "எனது பெயர் இளவழுதி" என்றவன் இந்த பெயர் தெரியாததது  அப்படி ஒன்றும்  பெரிய குற்றமில்லை என்பதுபோல் முதியவர்களை பார்த்து"நீங்கள் இருந்த துயரத்திலும் அவசரத்திலும் யாருக்குமே கேட்கவேண்டும் எனத் தோன்றவில்லை. அதேபோல் தான் நானும் உங்களது பெயரை கேட்பதற்கு முயற்சிக்கவில்லை" என்றான் வெளிப்படையாக.

     இளவழுதியின் பெயரை கேட்டதும் மறுபடி அவனது ஒருமுறை முகத்தை நோக்கியவர், முதியவர்களை பார்த்து "நீங்கள் அனைவரும் சென்று ஓய்வெடுங்கள். நான் சொன்னதுபோல் இரண்டு நாழிகைகழிந்த பின் தாயையும் சேயையும் காணலாம்" எனக்கூறி அவர்களைஅனுப்பி வைத்ததோடு , இளவழுதியை பார்த்து "தம்பி என்னுடன் வா " என்றார்.

     திடீரென ஏன் இவர்  முதியவர்களை அனுப்பி வைத்துவிட்டு நம்மை மட்டும் தனியாக எங்கு அழைக்கிறார், என எண்ணியவன் அவரிடமே "அய்யா , என்னை எங்கு அழைக்கிறீர்கள்.?  நான் முக்கிய பணி நிமித்தமாக வந்துள்ளேன், ஆகவே அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட வேண்டும்" எனக்கூறிக்கொண்டு புறப்பட யத்தனித்தான் இளவழுதி.

    "அப்படியா தம்பி. அப்படியென்றால் சென்று வா..." என கூறிவிட்டு நகர்ந்தவர் மறுபடியும் "என்ன பணி என கூற இயலுமா...?" என்றார்.

    " இல்லை அய்யா. எனக்கே தெரியாது..."

    "உனது தோற்றமே உனது பணியின் தன்மையை கூறிவிடுகிறது. அதனால்தான் தனியாக பேச அழைத்தேன்.  நீ அதனை வெளிகாட்ட விரும்பவில்லை எனத் தெரிகிறது. நல்லது சென்று வா" எனக்கூறி விடை கொடுத்தார்.

     இளவழுதியும் சரியென தலையசைத்து விடைபெற்றான் அவரிடமிருந்து.

    ஆனால் இவர்கள் இருவரையும் இணைக்கும் நாடகம் ஏற்கனவே தொடங்கிவிட்டதை இருவருமே அறியவில்லை. அதன் வாசலைத்தேடி போய்கொண்டிருந்தான் இளவழுதி எனலாம்.  இல்லை... அவன் அபாயத்தின் கதவை தட்டுகிறானோ....?? நமறியோம்....,  காத்திருந்தான் விடியலுக்காக.....

(தொடரும்..... பாகம் 4ல்)



Sunday, 15 December 2024

இராஜமோகினி - 02 யாழிசைசெல்வா

 🐾இராஜ மோகினி🐾

🌹யாழிசைசெல்வா🌹

  அத்தியாயம் 02 🌾நிறைசூலி🌾

    

      சோழகுலவல்லிப்பட்டினமெனும் நாகப்பட்டினம் பன்னெடுங்காலமாக சோழர்களின் துறைமுக நகரமாகவும் நானாவிததேசத்து வணிகர்களின் புகலிடமாகவும் விளங்கியது. காலஞ்சென்ற முதலாம் ராஜேந்திரசோழரின் கடராவெற்றிப்பயணம் நாகையில் நூற்றுக்கணக்கான வல்லங்களோடு தொடங்கியதென்பது சரித்திரச்சான்று. அதனை தன் முகத்தில் சூடிக்கொண்ட எக்காளத்தில் குதித்தோடிக்கொண்டிருந்தது; முடிகொண்டான் ஆறு, அவ்விருள்சூழ்ந்த பெருமழையில் . அதனால்தான்போலும்  குணக்கடல் “சோழர்களின்ஏரி” என்பர். 

     இருளைக்கிழித்துக்கொண்டு கொட்டித்தீர்த்த மழை ஒருவழியாக நிலமகளை விட்டு நீங்கியது.     இளவழுதியின் அரபுநாட்டு கரும்புரவி உடலை சிலிர்த்து 'போதும் போதும் கிளம்பு'  என சொல்லாமல் சொல்லியது.    

    அடிவயிற்றிலிருந்து  பெருத்த வலியோடு “அம்மா….” என்றொரு தீனமான பெண்ணின்அலறல் அவ்விருளைக் கிழித்தபடி தொலைவில் கேட்டது. 

    நாகை செல்லும் வழித்தடத்தில்தான் சத்தம்வந்தது. அத்திசையில் புரவியை செலுத்திக்கொண்டு சென்றான் இளவழுதி.

     கரிய பெரிய இருளைக்கிழித்துக்கொண்டு தீனமான பெண்ணின் அலறல் வந்த திசையை விளக்காக கொண்டு தொடர்ந்தான். பெரும்பாய்ச்சலில் பாய்ந்துகொண்டிருந்த முடிகொண்டான்ஆறு கொட்டித்தீர்த்த மழையால் இன்னும் கூடுதல் வேகத்தில் கடல் அன்னையை தழுவும் மோகத்தில் வேகமெடுத்து சென்றது.

     தீனக்குரல் வரவர அதிகமாக கேட்கவே,   புரவியை முடுக்கினான் இளவழுதி. "எத்தகைய ஆபத்து ஏற்பட்டு இருக்கும் . ஒன்றும் புரியவில்லையே. ஆலவாய் அழகா, எம்பெருமானே,  யாருக்கும் எந்த சிரமமும் இருக்கக்கூடாது" என இறைவனை வேண்டியபடி சென்றான்.

    சிறிதுதொலைவில் தீப்பந்தத்தின் ஒளியில் ஆட்கள் தெரியலாயினர்.  இரண்டு வயதானஆடவர்களும், இரு வயதான பெண்களும் மாட்டுவண்டியின் அருகே நின்றபடி மாறி மாறி ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.
வண்டியின் உள்ளேயிருந்துதான் தீனமாக அலறும்பெண்ணின் குரல் கேட்டது.

    மாட்டுவண்டியின் அருகே புரவியை நிறுத்திய இளம்வழுதி " என்ன பிரச்சினை அய்யா... ஏன் வழியில் நிற்கிறீர்கள், உள்ளே யாரோ தீனமாக அழுகிறார்களே...." என்றான்.

    "யாரப்பா நீ... இந்த இருள்வேளையில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்.....??"  என வினவியபடி இளம்வழுதியின்அருகே வந்தார் அவ்விரு முதியவரில் ஒருவர்.

    "என்னைப்பற்றி வினவுதல் இருக்கட்டும். நான்கேட்டதற்கு பதில் தாருங்கள்."

     இதற்கிடையே இரண்டுபெண்களில் குட்டையாக இருந்த வயதான பெண்மணி இளவழுதியிடம் பேசிக்கொண்டு இருந்தவரை விலக்கிக்கொண்டு முன்னால்வந்து "நானும் பார்க்கிறேன். அப்போதுதிலிருந்து மாறி மாறி பேசிக்கொண்டுஇருக்கிறீர்களே தவிர உள்ளே வலியால் என்மகள் துடிப்பது உங்களுக்கு வேடிக்கையாக போய்விட்டது அப்படித்தானே" என்றார் பெரியவரை பார்த்து கோபத்தில் கொந்தளித்து.

     " அம்மா.... நீங்களாவது கூறுங்களேன். என்ன பிரச்சனையென்று..." என்றான் பெண்மணியை பார்த்து.

    "என்மகள் நிறை சூலிப்பா...  பிரசவத்திற்காக என் வீட்டிற்கு அழைத்துசெல்கிறேன். என் மகளின் போதாத நேரமோ என்னவோ வீட்டிலிருந்து புறப்பட்டபோது எந்தபிரச்சனையும் இல்லை, பாதி தூரம் வந்தபோதுதான் வானம் திடீரென பொத்துக்கொண்டு கொட்ட ஆரம்பித்துவிட்டது. இடியும் மின்னலுமாக பெய்தமழையால் சாலையிலிருந்த உயர்ந்த மரங்கள்சாய்ந்து பாதையை அடைத்துக்கொண்டுகிடக்கிறன. கடந்து போகவும் முடியவில்லை. வண்டியின் உள்ளே என்மகள் பிரசவ வலியால் துடித்து கொண்டிருக்கிறாள். " என்றார் தலையில் அடித்துக்கொண்டு  தேம்பித்தேம்பி அழுதபடி  இளவழுதியிடம் கூறினார் அந்த வயதானபெண்மணி.

    "சிறிது பொருத்தருளுங்கள்  அம்மா . என்னால் என்ன செய்யமுடியமென்று பார்க்கிறேன்" என்றவன் மாட்டுவண்டியை கடந்து முன்னே சென்றுபார்த்தான்.

    நான்கு பெரிய மரங்கள் சாலையை அடைத்தபடி பள்ளிகொண்ட பெருமாளைப்போல படுத்துக்கிடந்தன.
சலசலத்து ஓடும் ஆற்றையொட்டி பரவிக்கிடந்த கிளைகளை அகற்றினால் மாட்டுவண்டி கடந்துவிடும் .
வழிகிடைத்ததும் வண்டி அருகே வந்தவன் "அம்மா தங்களுக்கு ஒன்றுமில்லையே " என்றான்.

    வண்டியினுள்ளே அலறிக்கொண்டு இருந்த மகளைப்பார்த்த வயதானபெண்மணி "சீக்கிரம் ஆதூரசாலைக்கு கொண்டு செல்லவேண்டும்." என்றார் தேம்பியபடி.

     வயதான பெரியவர்களைப்பார்த்து "அய்யா...." என்றான்.

    என்ன என்பதுபோல் அவனைப்பார்த்தார்கள். "சாலையை அடைத்துக்கிடக்கும் மரங்களைஅகற்றவேண்டும்" என்றான்அவர்களை நோக்கி.

    " அதுதான் தெரியுமே...." என்றவர்கள்  தொடர்ந்து "இது எங்களுக்கு முன்பே தெரியுமே, இதனை கண்டுபிடிக்கத்தான் எங்கிருந்தோ வந்தாயா" என்றார்கள் இளப்பமாக.

    "நான் கூற வந்தது முழுமையாக கேளுங்கள். ஆற்றைநோக்கி சரிந்துகிடக்கும் மரங்களின் கிளைகளை அகற்றினால் மாட்டு வண்டி கடந்து சென்றுவிடும். " கூறியபடி அவர்களின் முகத்தை ஆராய்ந்தபடி "அதனை அகற்ற தங்களிடம் வெட்டுக்கத்தி ஏதேனும்உள்ளதா" என்றான்.

    "நீ  கூறுவதும் சரிதான். பொறு பார்க்கிறேன்." என்றவர் வண்டியின் கீழ்பகுதியில் மாட்டிற்கு தேவையான தீவனம் வைக்கும் பகுதியில் தேடிப்பிடித்து வெட்டுக்கத்தி ஒன்றை எடுத்து வந்தார் உயரமாகவும் அதற்கு ஏற்றார்போல் தடியாய் இருந்த பெரியவர்களில் ஒருவர்.

    பெரியவரிடமிருந்து வெட்டுக்கத்தியை பெற்றுக்கொண்டு சாலையை மறித்துகிடந்த மரங்களின் அருகினில் சென்று அதன் கிளைகளை வெட்டி சரிக்கதொடங்கினான் இளவழுதி.

    மலைபோல் குவியத்தொடங்கிய கிளைகளை கண்டதும் பெரியவர்கள்  அதனருகே வந்து கிளைகளை எடுத்து ஆற்றை நோக்கி வீசி எரியத்தொடங்கினர். அதனால் கிளைகளின் குவியல் குறையதொடங்கியது.

    " வயதானாலும் சரியாகத்தான் வேலை செய்கின்றனர். அவர்கள்மட்டும் உடனுக்குடன் அகற்றி ஆற்றில் வீசாவிட்டால் கிளைக்குவியலே பெரிய தடையாக மாறி பாதையை அடைத்துக்கொள்ளும்." பெரியவர்களை எண்ணி பெருமிதத்துடன் கிளைகளை வெட்டிசரித்தான்.

    காரிருளை பத்தாம்நாள் பால்நிலவு துவைத்து விரட்டிக்கொண்டிருந்தாள். வெண்மதியின் தன்னொளியில் நாகைசெல்லும் சாலை பளிச்செனதெரிந்தது.  ஏறக்குறைய மரங்களை வெட்டி அகற்றி விட்டிருந்தனர். ஒரு பெருமரம் மட்டும் கிடந்தது. அதனை வெட்டி அகற்ற நேரமாகும் என்பதை உணர்ந்தால் வேறுவழி தேடலானான். மாடுகளையும் புரவியையும் பார்த்தவனுக்கு ஏதோ தோன்றியதுபோலும்.

     வெட்டுக்கத்தியை அருகேயிருந்த பெரியவரிடம் கொடுத்துவிட்டு புரவியின் அருகேசென்று சேணக்கயிற்றை அவிழ்த்து எடுத்துக்கொண்டதோடு மாடுகளின் கயிற்றை அவிழ்த்து எடுத்து அனைத்தையும் ஒன்றாக பினணத்தான். 

     ஆற்றின் ஓரமாக புரவி சொல்லுமளவிற்கு இடமிருந்தது அதன்வழியே மெல்ல கடந்து செல்லமுயன்றான். சிறிது சறுக்கினால் பெருவேகத்தோடு பெருக்கெடுத்து பாயும் ஆற்றின் வேகத்தில் மீள்வது என்பது பகற்கனவுதான். ஆண்டவன்மேல் பாரத்தைப்போட்டுவிட்டு புரவியை மெல்ல கடத்தினான். ஒருவழியாக புரவி மரத்தைகடந்துவிடவே , அதனை ஆசுவாசப்படுத்திவிட்டு மரமருகேவந்து கயிற்றை மரத்தில் பினைத்துவிட்டு , மீண்டும் புரவியருகே சென்றவன் அதன் காதில் ஏதோ சொன்னான் இளவழுதி. தலைவன் ஆனணக்கு கட்டுப்பட்ட புரவி "பிளீளீ" யென கனைத்தபடியே மரத்தை இழுக்கத்தொடங்கியது.

    "அப்படித்தான் மருதா, ம்ம்.. போ..போ... போ... " என புரவியை முடுக்கினான். பெரிய மரமாக இருந்ததால் அசைந்ததே தவிர சிறிதும் அகற்ற முடியவில்லை.

    அதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த பெரியவர்கள் இருவரும் மரத்தை தாண்டி வந்து தங்கள்பங்கிற்கு மரத்தின் கிளைகளை பிடித்து இழுத்தனர், அது  புரவியின் முயற்சிக்கு தோள்கொடுக்கவே இளவழுதி கூடுதல் உற்சாகத்துடன் அரபுப்புரவி மருதனை முடுக்கினான்.  சாலையை அடைத்துக்கிடந்த மரம் நகரத்தொடங்கியது. பிடிபிடியென்று இழுத்துப்பிடித்து ஒருவழியாக மரத்தை அகற்றியபோது ஒரு நாழிகை முழுதாய் கடந்துவிட்டிருந்தது.

     " அப்பாடா... ஒருவழியாக தொல்லை ஒழிந்தது" என எண்ணியதோடு நில்லாமல் மரத்திலிருந்த கயிறை அவிழ்த்து புரவியையும், மாடுகளையும் அதனதன் இடத்தில்  இளவழுதியும், பெரியவர்களும் பினணத்தார்கள்.

    நன்றிப்பெருக்கோடு பெரியவர்கள்இருவரும் இளவழுதியை கட்டிக்கொண்டு அன்பை பொழிந்தனர்.
ஒருபுறம் அன்பில் திளைத்தபோதும் "தாமதிக்க. வேண்டாம். ஆதூரசாலைக்குகிளம்புங்கள், பாதுகாப்பாக சென்று வாருங்கள் " என்றான் இளவழுதி.

    கையெடுத்து கும்பிட்டு மாட்டுவண்டியில் ஏறி அமர்ந்த  வயதான பெண்மணிகளில் ஒருவரும் இளம்பெண்ணின் தாயுமானவர் "ஆமாம் தம்பி நீ எங்கு செல்லவேண்டும்" என வினவினார்.

    " தாயே!  நான் நாகை செல்லவேண்டும். " என்றான் வேரெதுவும் சொல்லிக்கொள்ளவில்லை.

    " அப்படியா.... நல்லதாகப்போயிற்று தம்பி . நாங்களும் அங்குதான் போக வேண்டும்." என்றார் இளம்பெண்ணின் தாய்.  இதற்கிடையே மாட்டுவண்டியை பெரியவரில் ஒருவர் பதமாக ஓட்டிக்கொண்டிருந்தார்.

   வண்டியின் வேகத்திற்கு இனணயாக மருதனும் சென்றுகொண்டிருந்தான், அதனுடாக  " ஏனம்மா , அருகினில் ஏதும் ஆதூரசாலை இல்லையா..."

    "சிலஆண்டுகளுக்கு முன்பு வரை திருப்புகலூரில் குமாரமள்ளர் ஆதூரசாலை ஒன்று இருந்தது. நல்லமனிதர், வயதுக்கேற்ற பழுத்த ஞானம் பெற்றவர். அவரிருக்கும்வரை எந்த கவலையுமின்றி இருந்தோம். எவ்வளவு பெரிய நோயாகயிருந்தாலும் அவர் கைபட்டால் காணாமல் போய்விடும். ஒருநாள் அவர் திடீரென உறக்கத்திலேயே இறந்துவிட்டார். அதன்பின் யார் யாரோ வந்தார்கள் இருப்பினும் குமாரமள்ளர்அளவிற்கு வரமுடியவில்லை. காலப்போக்கில் அனைவரும் நாகையிலுள்ள இராஜராஜர் ஆதூரசாலைக்குத்தான் செல்கின்றனர்.." என்றார் கவலையுடன்.

    வண்டியோடத்தோடங்கியதும் அலறிக்கொண்டிருந்த பெண் திடீர் திடீரென கத்துவதும், அருகிலிருந்த வயதான பெண்மணியை எத்தித்தள்ளுவதுமாக இருந்தாள். அதுவரை பொறுமையாக இருந்த வயதான  பெண்மணி "பார்த்தியா  செங்கமலம்... உன்னோட மக இதுதான் சாக்குன்னு , என்ன விட்டா எத்தியே வண்டியவிட்டு தள்ளிருவா போலிருக்கே..." என்றாள் முகத்தில் எள்ளும் கொள்ளுமாக வெடித்தபடி.

    " புள்ளத்தாச்சி அவ , வலியாள துடிச்சுப்போய் , பொறுக்கமுடியாம இருக்கா.... நீ என்னடாவென்றால் அதுபுரியாம ஏதேதோ பேசுறயே... ," என்றவள் தொடர்ந்து " உனக்குத்தெரியாதா .... நீயும் புள்ளப்பெத்தவதானெ...இப்படிப்பேச வெக்கமாயில்ல..." என்றாள் சூடாக .

      வயதான பெண்மணிகளின் உரையாடலை கவனித்தும் கவனியாததுமாக புரவியை செலுத்தினான். இதுபோன்ற எண்ணற்ற நிகழ்ச்சி அவனது ஊரான அவனியாபுரத்தில் கண்டுமிருக்கிறான் கேட்டுமிருக்கிறான், ஆகையால் இவை புதிதாக தெரியவில்லை.

     சிறுதுநேரத்தில் சண்டையை மறந்து இளம்பெண்ணின் கால்களை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டு அதனை தடவிக்கொடுத்துக்கொண்டிருந்தார், அந்தப்பெண்ணின் மாமியார். வெகுளித்தனமான அன்பு இதுதான் போலும்.

     "டணார் .... டணார்" என்ற மணியோசை தூரத்தில் ஒலித்த அதே வேளையில் வண்டியுள்ளிருந்த இளம்பெண் பெரு வலியால துடித்தழுதாள். திருப்புகலூரிலுள் அமைந்துள்ள அக்புரிசுவரர் ஆலயத்தின்   மணியோசை அது. அவளின் நிலைகண்டு பொறுக்கமுடியாமல் இளம்பெண்ணின் தாய் செங்கமலம்  "ஏனுங்க வண்டியை நிறுத்துங்க." என்றார் சத்தமாக . வண்டியின் வேகத்தில் சரியாக கேட்கததால் "உங்களத்தான் வண்டிய நிறுத்துங்க...." என்றார்.

    தாம்புக்கயிற்றை படக்கென சுண்டி நிறுத்தியதோடு "ஏன் செங்கமலம்" என்றார். செங்கமலத்தின் கணவர் போலும்.

    " உங்கமக வலியால கிடந்து துடிக்கிறா... என்னால தாங்கமுடியல.... " எனக்கூறியபடியே தேம்பித்தேம்பி அழுதார்.

    இதற்கிடையே வண்டி நின்றதும் அதன் அருகில் புரவியை நிறுத்திவிட்டு அவர்கள்அருகே வந்தபோது, செங்கமலம் "அக்னிபுரிசுவரா.... ஏன்சாமி..... குலத்தைக்காப்பவனே.... தாயே சூலிகாம்பாள் .... நீதான் தாயையும் சேயையும் காக்கனும். தாயே.... " எனக்கூறியவர் அக்னிபுரிசுவர், கருந்தார்குழலி எனும் சூலிகாம்பாள் கோயில் கொண்டுள்ள தென்திசைநோக்கி விழுந்து வணங்கியவர், தன் மடியில் உள்ள சுருக்குப்பையிலிருந்து திருநீரை அள்ளித் தன் நெற்றியில் பட்டையாக பூசியதோடு வண்டிகுள் சென்று இளம்பெண்ணின் நெற்றியிலும் வயிற்றிலும் திருநீரை பூசியபடி சூலிகாம்பாள்தாயை வேண்டிக்கொண்டவர் "இப்ப வண்டியை விடுங்கள் " என்றார். 

    மாட்டுவண்டி சடுதியில் ஓடத்தொடங்கியதும், வண்டிய பின் தொடர்ந்தான்.

     சூலிகாம்பாள் தாயை வேண்டிக்கொண்டதாலோ என்னவோ அதன்பின் நிறைசூலிப்பெண் அமைதியாக உறங்கிவிட்டாள்  போலும். இப்போது அலறல் சத்தமில்லாமல் ஒரே தாளகதியில் வண்டி ஓடிக்கொண்டிருந்தது.

    குணக்கடலின் குளுமையானகாற்று சில்லென தாக்கி  நாகை அவர்களை வரவேற்க கட்டியம் கூறியதுபோலும்.
அந்த இரவை பகலாக்கிய  தெருவிளக்குகள் ஆங்காங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தன. இருப்பினும் அந்நகரிலுள்ள வணிகர்களும் ஏனைய குடிமக்களும் சூறாவளி சுழற்றியடித்த பிரமையில் ஏனோதனோவென உலவிக்கொண்டு இருப்பதை கண்ட இளவழுதியின் மனதில் புயல் மையங்கொண்டது.

     இராஜராஜசோழர்ஆதூரசாலை அடைந்தபோது அவை இன்னும் அதிகரித்ததே ஒழிய குறைந்தபாடிலில்லை.

(தொடரும்....பாகம் 03ல்)

    




   

   

   

   


இராஜமோகினி - 01 யாழிசைசெல்வா

🐾இராஜமோகினி🐾
🌹யாழிசைசெல்வா🌹
 
அத்தியாயம் 01 🌾இளவழுதி🌾

சோழதேசம்….
     1070 ஆம் ஆண்டின் பிற்பகுதியின் பின்மாலைப்போதில் ஒருநாள்…..

      திடீரென வானம் இருள்போர்வையை போர்த்திக்கொள்ள தயாரானது. அதுவரை வெண்பஞ்சுப்பொதிமூட்டைகளை பிரித்து வானத்தில் இரைத்தததைப்போல் விரவிக்கிடந்த வெண்முகில் கூட்டம் சட்டென நிறமாறும் பச்சோந்தியாய்மாறி வானம் இருளைப்போர்த்திக்கொண்டது.  கிளைகளில் தத்தித்தாவிக்கொண்டிருந்த அணில்களும் குயில்களும் , மைனாக்களும் அனல்மேல்விழுந்த பனித்துளியாய் பரபரவென பறக்கும் பட்டாப்பூச்சியாய் கிளைகளைவிட்டு கூடுதேடி குதித்தபடியும், சிறகை படபடவென அடித்தபடியும்,  விரவிவரும் இருளை கிழித்தபடி அனாசயமாக கிளம்பின.

      காவேரிஅன்னையின் மற்றொரு  இளவல் மட்டுமின்றி தான்தான் செல்லமகன் என்பதுபோல் சலசலவென பாய்ந்தும்  தன்பிரவாகத்தை கொண்டு கரையோரங்களில் செழித்தும்  பெருத்தும் ஓங்கி  நிமிர்ந்த வாதநாராயணன், அரச, ஆல,நொச்சிமரங்களின் கிளைகளை முத்தமிட்டபடியும் நீருக்கு அருகாமையிலமைந்த நாணல்கூட்டங்களை வம்பிழுத்து உரசியபடி தனது ஓட்டத்திற்கு போட்டியாக வரும் கெண்டைமீனின் துள்ளலை நகைத்து கெக்கலித்து ஓடிக்கொண்டிருந்தது முடிகொண்டான் ஆறு. தழுவிச்செல்லும் முடிகொண்டானாற்றின் கரைகடந்து நெடுந்தூரம்வரை பச்சைப் பசேலன மரகதப்பாய்விரித்த நெற்சோலையின் இதம்தரும் குளுமையான மென்காற்று சாலையில் செழித்துவளர்ந்த ஆல,அரச,வேப்பமரங்களை கொஞ்சித் தவழ்ந்ததோடு கருமைநிற அரபுப்புரவியில் ஆரோகணித்துசெல்லும் இளவழுதியின் முகத்தை வருடிச்சென்றது.    

     சோழகுலவல்லிப்பட்டிணமென சோழவேந்தர்களால் போற்றப்பட்ட நாகைசெல்லும் அந்நீண்டசாலையில் இவைஎதைப்பற்றியும் கவலையின்றி  சிறியநெற்றியில் கண்டபடிபுரளும் முரட்டுக் கருங்குழல்கள் வீசும் மழைவாடைக்காற்றிற்கு ஏற்ப தாளமிட்டுகொண்டிருந்ததையோ,  விரவிக்கொண்டிருந்த இருளிலும் கொஞ்சமும் தொய்வின்றி சீரிய தாளத்தில் வாசிக்கும் கலைஞனைப்போல் ஒரே சீரான பாய்ச்சலில் பாய்ந்தோடிக்கொண்டிருந்த அரபுநாட்டு கரும்புரவியின் வாயில் விளாலி தள்ளிக்கொண்டிருந்ததையோ, இலட்சியமின்றி புரவியின் போக்கிற்கு இனணயாக இளவழுதி அதன்மேல் வீற்றிருந்ததோடு அவனதுமனவேகமும் கடந்தகால நிகழ்வுகளை எண்ணி எண்ணி பின்னோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தது.  மேலும் அவனது கழுத்தில் புரண்ட ஆரத்தில் அமைந்த புலியின் உருவமும் பெரும் பாய்ச்சலில் இருந்தது. சிவந்த நிறம்கொண்ட பட்டுச்சட்டையும் அதற்கு இனணயான கால்சராயும் அவனது முகத்திற்கு கூடுதல் பொலிவைத் தந்ததென்றால் அளவில் சிறுத்துகிடந்த உதட்டின் மேலமைந்த இளம்மீசையின் துடிப்பும், கூடவே இடையில் அவனது வீரத்தை பறைசாற்றம் கூர்மையான நீண்டவாள் வாலிபனோடு உடன்பிறந்தது போல்  உறவாடிக்கொண்டிருந்தது.

      சடசடவென தீர்த்தமாரி மழைகொட்டத் தொடங்கியதும்  தெப்பலாக நனைந்த இளவழுதி கடந்த கால நினைவிலிருந்து மீண்டதோடு விரைந்த பாய்ச்சலிருந்த அவனது புரவியின் கடிவாளத்தை சட்டென இறுக்கிப்பிடித்ததும் “பிளீளீ…” என கனைத்தபடி தனது முன்னங்கால்கள் இரண்டையும் உயரேதூக்கி பின் நின்றது. வீரம்செறிந்த அவ்வீரனின் விழிகள் நாற்புறமும் சுழன்று எங்கேனும் மழைக்கு ஒதுங்க இடம் கிடைக்குமாவென நோக்கின. கும்மிருட்டும் அடர்ந்த வனம்போல் காட்சிதந்த அந்த நெடுஞ்சாலையும் பார்ப்பதற்கு பயங்கரத்தோற்றத்தை அளித்தது. சாமானிய மனிதர்களென்றால்  விழிபிதுங்கி நின்றுருப்பர். ஆனால் இயற்கையிலேயே இளவயதுக்குண்டான முரட்டுத்தனத்தையும் வேகத்தையும் கொண்ட அவ்வாலிபவீரனுக்கு எதிரேதெரிந்த இருள் பெரிதாக தோன்றவில்லை. மலையில்கொட்டும் அருவிபோல் மழைநீர் நம்இளைஞனையும் அவனதுபுரவியையும் தெப்பக்காடாக மாற்றிருந்தது. இருப்பினும் புரவியை மெல்ல பாதைவழியே விட்டுக்கொண்டு எங்கேனும் ஒதுங்க இடம்கிடைக்குமாவென  விழிகளை சுழலவிட்டபடிசென்றான்.

    திடிரென இருள்வானைக்கிழித்துக் கொட்டும் மழைத்தாரைகளுக்கிடையே சற்றுதொலைவில் உண்டான படீரென்ற மின்னல்ஒளியில் சாலையோரம் பெருத்த ஆலமரத்தின் அருகே சிதிலமடைந்த கட்டிடம் ஒன்று தெரியவே, புரவியைமுடிக்கி அதனருகே சென்றான்.    ஆங்காங்கே சுவர்கள் பெயர்ந்தும், மேற்கூரைகள் இப்போதோ அப்போதோ என இடிந்துவிழும் தருவாயில் கோட்டான்களும் விசப்பிராணிகளும் கூடிக்குலாவ மட்டுமே பயன்படும் சிதிலடைந்த கட்டிடமாய் காட்சியதந்தது. இதற்கும் இன்றைய சோழதேசத்திற்கும் பெரியவேறுபாடு ஒன்றுமில்லையென எண்ணினான். ஆம் ஆங்காங்கே மூண்டுவரும் கலகத்தையும்  புரட்சிகளையும் சேர்த்து அரங்கேற்றும் நயவஞ்சகர்களின் கூடாரமாய் தான் இன்றைய சோழம் விளங்கியது. பெரும் மாவீரர்களும் பேரரசர்களுமான இமயவரம்பன் கரிகாலப்பெருவளத்தான், பராந்தகச்சோழன், இராஜராஜசோழன், அவன் மைந்தன் இராஜேந்திரச்சோழன் போன்றோரால் கட்டிஎழுப்பிய சோழதேசம் படிப்படியாக பல்வேறு மாற்றங்களை கண்டது .

    'முதலாம் ராஜேந்திரசோழருக்கு பின் திறமையான வலிமையான அரசர் ஒருவருமில்லையே' என்ற ஏக்கத்தில்சிலரும்,  'சோழதேசத்திற்கு  இதென்ன சோதனையென'  மனக்குக்குமுரலோடு பலரும் பேசியது காட்டுத்தீயாக தேசம் முழுவதும் பரவிக்கொண்டிருந்தது. தேசமெங்கும் பரவிவரும் இவ்விசநோயோடு சேர்த்து இன்னும் பலபல கதைகளை முன்னொட்டு பின்னொட்டாகசேர்த்து சதிகாரர்களின் சதிராட்டத்தின் கூடரமாக மாறிப்போனது சோழதேசம். இத்தககைய சூழலில்தான் சோழவேந்தனாக, கங்காபுரியின் காவலனாக ‘அபயன் ‘ என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட  ‘ராஜேந்திரன்’ என்பான் “குலோத்துங்கன் “ என்ற விருதுபேரில் அரசுகட்டிலில் கொலுவீற்றிருந்தான். சாளுக்கியத்தை பூர்விகமாகவும் சாளுக்கிய இளவரசனாகவும் விளங்கிய அபயன் அரசுரிமைபெற்று செங்கோலேந்தியது பலருக்கு வேப்பிலையைச்சாரைக்குடித்ததுபோலும்,  சிலருக்கு நன்கு விளைந்த செங்கரும்பை சுவைத்ததுபோலுமாய் மாறிப்போனது. 

    செங்கரும்பின் சுவையே நாட்டிற்கு தேவையென உணர்ந்த கொலுமண்டபத்தின் காவலர்களும் நாட்டின் ஏவளர்களுமான  சிலரில் குலோத்துங்கச்சோழரின் அருமைநண்பரும் தேசத்தின் தலைமைத்தளபதியுமான கருணாகரத்தொண்டைமான்,  இவருடன் அரும்பாக்கிழான், வாணகோவரையன் சுத்தமல்லன், முடிகொண்டானான வத்தராயன், மதுராந்தகன் மற்றும் பெரும்புலவர்களான செயங்கொண்டார், நெற்குன்றங்கிழார் போன்றோர் விளங்கினர். இந்நிகழ்வு பற்றிப்படரும் கொடிபோல் வளரவும்கூடாது, அத்தோடு செங்கரும்பின் அடியைவிட்டு நுனியைசுவைக்கும் மூடர்களின் முட்டாள்தனத்தை வேரறுக்க விளைந்தனர். அதன்விளைவுகளிலொன்றுதான் இளவழுதியின் நாகைப்பயணம். 
    
    சோழப்படைகளின் முதன்மைத்தளபதி கருணாகரத்தொண்டைமானின் வலதுகரம், உற்ற தோழன், உபதளபதி ,அவனது மெய்க்காப்பாளன் மட்டுமின்றி, உடல்பொருள்ஆவி அத்தனையும் அவனுக்காக அர்ப்பணித்தவன்   இளவழுதி. அத்தகையவனை அழைத்து எனக்கூறிவிட்டு இளவழுதியிடம் வேறு எதுவும் கூறாமல் விடுவிடுவென மாளிகையைவிட்டு வெளியேறினான் கருணாகரத்தொண்டைமான்.

    அவன் போகும் திசையையே வெறித்துப்பார்த்தபடிநின்ற இளவழுதி புற உலகிற்குவந்தானில்லை. சிறிதுநேரம்கழித்து பித்துப்பிடித்தவன் போல்காணப்பட்டான். எப்போது தனது மாளிகைவந்தான் , தனது அரபுநாட்டு கரும்புரவியை   அவிழ்த்துக்கொண்டு நாகைபுறப்பட்டானென அவனுக்கே  ஞாபகம்மில்லை. ஏனெனில் எப்போதும் கலகலப்பாகவும் எத்தனை சிரமமெனினும் சிறிதும் அஞ்சாமல் துணிவோடு எதிர்கொள்ளும் பக்குவத்தை கொண்டவன் கருணாகரத்தொண்டைமான்.  ஆனால் இன்று அதற்கு மாறாக வெடுக்கென வெட்டிப்பேசி அனுப்பியது அவனால் தாளமுடியவில்லை. அவனோடு பழகிய நாட்களில் இதுபோன்ற சம்பவம் நடந்ததாக ஞாபகபேழையில்  இல்லை. மேலும் மதுரை மாநகரின் அருகாமையிலமைந்த அவனியாபுரத்தின்  முத்தங்காடியில் வைத்துதான் இளவழுதி முதன்முதலாக கருணாகரத்தொண்டைமானை சந்தித்தான். முதல்நிகழ்வு முத்தாய்ப்பாக அமைந்துபோனது. முத்தங்காடியொன்றில் முத்துக்களை பார்வையிட்டுக்கொண்டியிருந்தவேளையில்  கருணாகரத்தொண்டடைமானை துரோகி ஒருவன் பின்னாலிருந்து குறுவாளால் குத்தமுயன்றான்.
அப்போது அருகினில் கிழேவிழுந்த முத்துக்களை பொருக்கி எடுக்க குனிந்த இளவழுதி அதைகண்ட அடுத்தகணமே,  துரோகியின் கையிலிருந்த குறுவாளை லாவகமாக தட்டிவிழச்செய்ததோடு துரோகியின் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டதும் தடாலென வெட்டுண்ட மரமாய் கீழேசரிந்தான். சத்தம்கேட்டு திரும்பிய கருணாகரத்தொண்டைமானுக்கு நடந்து நிகழ்வை கணிக்க கணநேரம்  போதுமானதாயிருந்தது. 

    ” மிக்கமகிழ்ச்சி தம்பி , தக்கசமயத்தில் எனதுஉயிரைக்காப்பாற்றினாய், மிக்கநன்றி” எனக்கூறியதோடு இளவழுதியை கட்டித்தழுவிப் பாராட்டினான்.

     முன்பின்தெரியாத தன்னிடம் செய்த சிறுஉதவிக்கு இத்தனை அன்பும் அரவனணப்பும் ஒருசேர கிட்டியதும் இளவழுதி சற்று திக்குமுக்காடிப்போனான். ஆம் வாழ்வில் இப்படியொரு அன்பினை உணர்ந்தவனில்லை.  நினைவுதெரிந்த நாட்களிலிருந்து தாய்தந்தையை பார்த்ததில்லை.ஏனெனில் சிறுவதிலேயே அவர்களை இழந்துவிட்டிருந்தான்.  ஆகையால் அவர்களின் அண்மையும் அரவனணப்பும் எதுவும் அவனுக்கு தெரிய வழியில்லை. உற்றவனுக்கு ஒருவீடு, இல்லாதவனுக்கு ஊரேவீடு. கிடைத்தவேலையை , கிடைத்த உணவு, கிடைத்த இடமென மனம்போனபோக்கில் வாழ்ந்துவந்தான். வாழ்வின் பெரியதொரு லட்சியமின்றி வாழ்ந்து வந்தான் படைத்தலைவனை சந்திக்கும்வரையில்.   

    இளவழுதியின் விழிகள் நீர்கோர்த்து முத்துக்களை மாலையாக்கி நிலமகளைகுளிர்வித்தன.    “தம்பி, ஏனப்பா…. அழுகின்றாய்….???” இளவழுதியின் கரங்களை இருக பற்றியபடி கேட்டான் கருணாகரத்தொண்டைமான்.    உணர்ச்சிமேலிட்டதால் வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக்கொண்டன இளவழுதிக்கு ” வாழ்வில் இத்தனை அன்பினை ஒரு நாளும் உணரும்பாக்கியம் இதுநாள்வரைகிட்டியது இல்லை அய்யா. நான் செய்த அற்ப காரியத்திற்கு இத்தனை அன்பிற்கு தகுந்தவனில்லை….”என்றான் கருணாகரத்தொண்டைமானைப்பார்த்து தலைவணங்கியபடி.   

“உயிர் போனால் வராதப்பா… இதனை நீ அறியாத அசடனில்லை என்பதை அறிவேன்.”  
 
“தாங்களும் அப்படியொன்றும் சாதாரண நபராக தெரியவில்லை…”என்றான் சூசகமாக இளவழுதி.   

“ஏனப்பா. அப்படிகூறுகிறாய், என்னிடம் அப்படிஎன்ன அதிசியத்தை கண்டாய்..?”   

“தங்களது முழங்கைக்கு கீழ் உள்ள வடுக்களே, தங்களது வீரத்தை பறைசாற்றுகின்றன. மேலும்….” என இழுத்தான்.   

“மேலும் என்ன… சொல்லப்பா….?” என்றவன் இளவழுதியின் ஆராய்ச்சி எதுவரை செல்கிறது என்பதை அறியும் நோக்கில்.   

     "தாங்கள் புனைந்துள்ள முத்துவியாபாரி வேடம் பொருத்தமாகவும் இல்லை,அத்தோடு நீங்கள் கேட்ட விவரம் அனைத்தும் கொற்கை போன்ற இடங்களில் மட்டும்தான் கிடைக்கும். அங்குதான்  நீங்கள் கேட்ட தரத்திலும் அளவிலும் முத்துக்கள்  கிடைக்கும். அப்படியிருக்க அவனியாபுரத்தில் நீங்கள் தேடியது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை.”   

“யாரப்பா நீ..? தீட்சண்யமான உனதுவிழிகளில் வேறென்ன தெரிந்து. கொண்டாய்…??”   

“வேறேதோ முக்கியப்பணியின் நிமித்தம் தாங்கள் வந்திருக்க வேண்டும். வேறேதும் தெரியாது அய்யா” என்றான் இளவழுதி.

“பலே ஆளப்பா நீ… இங்கு என்னபணி செய்கிறாய்?”

“கிடைக்கும் பணிசெய்து வாழ்க்கை பயணத்தை தொடர்கிறேன். தற்சமயம் முத்தங்காடியில் பணிசெய்துவருகிறேன்.”

“சரி தம்பி. சிறிது அப்படி வருகிறாயா… உன்னிடம் சிரிது உரையாடவேண்டும்” என்றான் கருணாகரத்தொண்டைமான்.

“சரிங்களய்யா… அங்காடி பெரியவரிடம் கூறிவிட்டு வருகிறேன்”என்றவன் என்னவாகயிருக்கும் என்றென்னியவாறே பெரியவரை அனுகலானான்.   

     நடந்த களேபரத்தில் கூட்டம் அங்காடியெங்கும் வழிந்ததை பயன்படுத்திக்கொண்டு கீழே கிடந்தவன் எப்போதோ நழுவி விட்டிருந்தான். 

    கருணாகரத்தொண்டைமான் தொலைவில் தெரிந்த வேப்பமரத்தினருகே சென்று காத்திருந்தான் இளவழுதியின் வரவிற்காக.    

    சங்கம் வைத்து தமிழ்வளர்த்த பாண்டியவேந்தர்களின் தலைநகரிலிருந்த கூப்பிடும் தொலைவிலமைந்த ஊர்தான் அவனியாபுரம். கிராமத்தின் அழகையும் நகரின் செழுமையும் ஒருங்கேகொண்டது. நாற்திசையும் பரபரவென்று பம்பரமாய் சுழன்று வணிகம் செய்யும் வாணிபர்களும், அவர்களிடம் வம்பிழுத்துத்கொண்டும் வியாபாரத்தை சடுதியில்முடித்துக்கொண்டும் வேண்டிய பொருளை பெற்றுச்செல்லும் கோதையர் கூட்டம் ஒருபுறமும், காய்கறி அங்காடியில் பேரம்பேசி வேண்டியபொருளை வாங்கிக்கொண்டு விளக்குவைப்பதற்குள் வீட்டிற்கு செல்ல வேண்டுமென்ற முனைப்பில்  விரைந்து செல்லும் மாதர்கள் ஒருபுறமும் , வயலில் வேலைமுடித்துக்கொண்டு தோளில் கலப்பையைதாங்கியதோடு, காளைமாடுகளிரண்டை முன்னால் ஓட்டியபடி அதன் தாம்புக்கயிற்றை சுண்டிக்கொண்டே”த்தே, த்தே” யென அதனை மெல்ல  ஓட்டிச்செல்லும் காளையர்களும் கடந்து சென்ற வண்ணமிருந்தனர்.

    அவனியாபுர வனிதையரின் முகம்அழகா? அல்லது அந்திவானின் சிவப்பு அழகா ? என யாரேனும் போட்டிவைத்தார்களா என்ன? பிறகேன் இத்தனை விரைவாக தன்னழகை மேற்கு மலைச்சரிவில் புதைத்துக்கொண்டான் - ஆதவன்.

      அங்காடிப்பெரியவரிடம் சொல்லிவிட்டு கருணாகரத்தொண்டைமானின் அருகே வந்த இளவழுதி “சொல்லுங்கள் அய்யா” என்றான்.

“என்னுடன் பணிசெய்ய விருப்பமா தம்பி” என்றான் கருணாகரத்தொண்டைமான்.

“தாங்கள் தவறாக எண்ணாவிட்டால் ஒன்று கூறட்டுமா?.” என்றான் இளவழுதி.

“சொல்லு தம்பி…”

“தாங்கள் யாரெனத்தெரியவில்லை.ம்ம்ம்…  பார்ப்பதற்கு வணிகர்போலிருந்தாலும் தாங்கள் வணிகர் இல்லை என்பதை அறிவேன். “

“என்னை சந்தேகிக்கிறாய். உனது சந்தேகமும் தவறென்றுமில்லை. நான் வணிகன் அல்ல. மேற்கொண்டு நான்சொல்வதை யாரிடமும் நீ தெரிவிக்க மாட்டாய் என்ற உறுதியைத் தந்தால்.  உரையாடலை தொடரலாம்.... உனக்கு ஒன்று மட்டும் இப்போதே தெரிவித்து விடுகிறேன் நானும் எனது நோக்கமும் தீயவையல்ல.” என உறுதியுடன் இளவழுதியின் முகத்தை கூர்ந்து நோக்கியபடிகூறினான்.“ஆகட்டும் அய்யா. தங்களை நம்புகிறேன், ஆகையால் உறுதியளிக்கிறேன். நான் தங்களைப்பற்றியும் தங்களது  இரகசியத்தையும் மற்றவரிடம் எக்காரணம் கொண்டும் தெரிவிக்கமாட்டேன்.”என கருணாகரத்தொண்டைமான் கரத்தில் தனது வலதுகை வைத்து சத்தியம் செய்தான் இளவழுதி.

     தனது கச்சையின் முடிப்பை அவிழ்த்தபடி சுற்றும் முற்றும் தங்களை யாரும் கவனிக்கிறார்களா என்பதை விழிகளால் நோட்டமிட்டவன், தங்களை யாரும் கவனிக்கவில்லை என்பதை அறிந்தவேளையில் கருணாகரத்தொண்டைமானது வலதுகரத்தில் சோழ இலட்சினை மின்னியது. அதுவட்டவடிவத்தில் அமர்ந்த நிலையில் புலியொன்றும் அதன் முன்பு இரு மீன்கள் நின்றநிலையிலும் ,புலி மற்றும் மீன்களின் பக்கவாட்டில் நின்றநிலையில் குத்துவிளக்கும் அதன் அருகே நீண்ட வாட்களும் கத்திகளும்  அமைந்த வடிவத்தில் விளங்கியது.அதனை கண்ட இளவழுதிக்கு வணிகர் வேடத்தில் உள்ளநபர் சோழதேசத்தின் பெருந்தனத்து அதிகாரி என்பது மட்டும் புரிந்தது.மற்றபடி இலட்சினையின் அமைப்பு விளக்கும் அரசியல் புரிந்தானில்லை.
    
    இளவழுதியின முகக்குறிப்பை அறிந்ததுகொண்டவன்
“சோழப்பேரரசின் அதிகாரப்பூர்வ முத்திரை இலட்சினை இது தம்பி” என்றான் கருணாகரத்தொண்டைமான். மேலும் அவனே தொடர்ந்து “இப்போது சொல்லுதம்பி என்னுடன் பணி செய்ய விருப்பமா?” என்றான்.“தங்களை நம்புகிறேன் அய்யா, நான் ஏழை விவசாயி. என்னிடம் அப்படியென்ன சிறப்பைக்கண்டீர்கள்?”

    “சிலரை பார்த்ததும் நம்மையரியாமலே ஒருவித ஈர்ப்பு வந்து அவனை நம்பு நம்புயென உள்ளுணர்வு சொல்லும்.அதுபோன்ற உணர்வு உண்னை கண்டபோதே உணர்கிறேன்.எல்லோரிடமும் இதுபோல் தோன்றியதில்லை.”

    “நல்லது அய்யா . தங்களை கண்டமுதலே என்னுள்ளும் அதே உணர்வுதான் உள்ளது. என்ன ஒற்றுமை எல்லாம் எம்பெருமான் சிவனின் கருனையன்றி வேறென்ன..” என்றவன் ஆலவாய் அழகன் ஆலயமிருந்த திசைநோக்கி வணங்கி நிமிர்ந்தான் இளவழுதி.   

    சோழதேசத்தின் முதன்மை படைத்தலைவர் தானென்பதையும் , சோழத்தை வேரறுக்க முயலும் கயவர் கூட்டமொன்று சதியில் ஈடுபடுவதை கண்டறிந்ததையும் அதனை களையெடுக்கும் முயற்சியில் ஒன்றுதான் அவனியாபுர வருகையும் என விளக்கிக்கூறினான் இளவழுதியிடம் கருணாகரத்தொண்டைமான்.

    “நல்லது அய்யா… இவற்றில் என் பணி என்ன?, நான் செய்யக்கூடிய பணி இருப்பதாக தெரியவில்லையே”.

    “சோழதேசத்திற்கு இப்போது தேவை. நம்பகமான ஆட்கள். உன்னிடம் அதை காண்கிறேன். உன் வீட்டில் தகவலை கூறிவிட்டு வா, உனக்குவேண்டிய பயிற்சியை அளித்து உன்னை உயர்த்துகிறேன், சோழம்வளர நீ பணி செய்” என்றான் தீர்க்கமாக.

     “எனக்கென யாருமில்லை அய்யா. நான் யாருமற்றவன்.” என்றவன் கண்கள் குளமாயின.“அடடா. நான் கூறியவை உன்னை வருத்தியிருந்தால் மன்னித்துவிடு. சம்பிரதாயமாக கூறினேன். இன்றுமுதல் சோழம் உன்னை காக்கும்  சோழத்தை நீ உயர்த்து உன் பணியால்” எனக்கூறியபடி இளவழுதியின் தோள்களை இறுகப்பற்றி தழுவிக் கொண்டான் சோழப்படைத்தலைவன்.

      அதன்பின் ஒரு திங்கள் கழித்து கங்காபுரி வந்தவனை உற்றவனாய் கொண்டாடி,  நற்தவம் நீ என கொண்டாடிய படைத்தலைவன் இளவழுதிக்கு வேண்டிய ஏற்பாடுகளை தானே முன்நின்று பயிற்றுவித்தான். ஆயகலைகள் அத்தனையும் சிரமேற்கொண்டு நாளொருமேனியும் பொழுதொருவண்ணமாக கற்றுத்தேர்ந்தான் இளவழுதி. நல்லதொருநாளில் இளவழுதியை உபதளபதியாகவும்  உயர்த்தினான் கருணாகரத்தொண்டைமான்.

     இருளைக்கிழித்துக்கொண்டு கொட்டித்தீர்த்த மழை ஒருவழியாக நிலமகளை விட்டு நீங்கியது.     இளவழுதியின் அரபுநாட்டு கரும்புரவி உடலை சிலிப்பி போதும் போதும் கிளம்பு என சொல்லாமல் சொல்லியது.    

    அடிவயிற்றிலிருந்து  பெருத்தவலியோடு “அம்மா….” என்றொரு தீனமான பெண்ணின்அலறல் அவ்விருளைகிழித்தபடி தொலைவில் கேட்டது. 

(தொடரும்.... பாகம் 02 ல்)