Monday, 21 July 2025

இழவு - யாழிசைசெல்வா

இழவு - யாழிசைசெல்வா

=======================

      திடீரென வானம் இருட்டிக் கொண்டிருந்தது. மேற்குப் பக்கமாக திரண்டிருந்த கருமேகக் கூட்டம் மழையைக் கொட்டுறதுக்கு அப்பவோ இப்பவோ எனக் காத்திருந்தது.


      சுட்டெரிக்கிற மொட்ட வெயிலு பொறுக்க முடியாம மேல் மூச்சு வாங்கினதால வரப்போரம் அணைகட்டி கொளுத்து வளர்ந்து கெடந்த பூலாம் புதரோட நிழலுல நிக்கிறதுக்காக வந்திருந்தான் கருப்பையா. 


     வானம் பார்த்த பூமி. பெய்கிற மழைய நம்பி பொலப்பு நடந்து கொண்டிருந்தது. நிலக்கடலையோ, எள்ளுப் பயிறோ ஏதாவது விதைச்சு விட்டா சாமி புண்ணியத்துல மழகிழ பேஞ்சு விளைஞ்சதுனா நாலு காசு பாக்கலாமுன்னு  நெனச்சான்  கருப்பையா. விடியக்கருக்களிலே  காட்டுக்கு வந்தவன் நேத்து உழுத நிலத்துல வரப்பையும் ஓரக்காலையும் மாங்கு மாங்குன்னு மாம்பட்டிய வச்சு வேகாத வெயிலுல வெட்டிக்கிட்டு இருந்தான் கருப்பையா. ஏதோ ஒரு வீராப்புல   சோறு தண்ணி கொண்டு வராமல் மம்பட்டியை மட்டும் தோளில் போட்டுக்கிட்டு ராசா கனக்கா காட்டுக்கு  வந்திருந்தான். வேட்டிய வரிஞ்சு கட்டி காட்டோட வரப்ப ஒழுங்கு பண்ணி முடிச்சபோது சுரீர்னு சாட்டைக் கம்பால முதுகில அடிச்ச மாதிரி உச்சி வெயிலு மண்டைய பொளந்துட்டு இருந்தது.  காலையில வெறும் நீச்சத்தண்ணி மட்டும் குடிச்சுட்டு வந்தததுனால ஒரு மாதிரி தல கிர்ருன்னு இருந்துச்சு கருப்பையாவுக்கு. உழுத புழுதிக் காடு முழுவதும் கானல் நீர் மேலே எழுந்து கொண்டிருந்தது. தண்ணியில்லாம மேல் நாக்கு வறண்டு தடித்துப் போய் இரும்பு மாறி கெட்டியா   இருந்தது கருப்பையாவுக்கு .  வறண்ட தொண்டையில எச்சில் ஊற  வச்சு ஒரு வழியா முழுங்கினான்.

     கருப்பையா உடம்பிலிருந்து வியர்வை பெருக்கெடுத்து ஓடத் தண்ணியா உருண்டோடி உழுத நிலத்துல விழுந்ததும் வெயில் சூட்டுக்கு பட்டுன்னு காணாமப் போனது.‌ உடம்பு முழுவதும் வியர்வை பெருக்கெடுத்து அது  உப்புத்தண்ணியா வழிஞ்சு ஓடினாலும் ஒரு சொட்டு தண்ணீர் குடிக்க முடியாத கொடுமைதான் உழவனோட பொழப்பு.  

      எதையும் சட்டை பண்ணாம மம்பட்டிய எடுத்துக்கிட்டு ஓரக்கால சரி பண்ண நடந்தான் கருப்பையா. ஓரக்கால் முழுவதும் அருகம் புல்லும் கோர புல்லுமா சடைச் சடையா வளர்ந்து கெடந்தது. 'உழைக்கிறதுக்கே பிறந்த உடம்பு இது, பொழுதுக்குள்ள கொழுப்பெடுத்து வளர்ந்து கெடக்கிற இந்த புல்லா நானானு ஒரு கை பாத்திர வேண்டியது' தான்னு தனக்குத் தானே பேசிக் கொண்டு ஓரக்கால வெட்டிக்கிட்டு இருந்தான் கருப்பையா. காட்டோட நாலு மூலையில ரெண்டு மூலையச் சரி பண்ணியிருந்தான். 

      வெடிச்ச வெள்ளரிப் பழமாட்டம் இருந்த கருப்பையாவோட பாதம் வெயில் சூடு பொறுக்க முடியாம தீயில விழுந்த புழு மாதிரி, கால மாத்தி மாத்தி வச்சுக்கிட்டே வேலை செய்துகொண்டிருந்தான்.  'இன்னும் கொஞ்சம் தான் இருக்குது. கொஞ்ச நேரம் பூலாம்புதரோட நிழல்ல தகுப்பாரிட்டு வேலையப் பாக்கலாம்னு' ஓட்டமும் நடையுமா பூலாம் புதரோட நிழலுக்கு வந்து சேர்ந்தான் கருப்பையா. அப்போதுதான்  வானம் இருட்டுக் கட்டத் தொடங்கியிருந்தது.

      'இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்தா, மீதி இருக்கிற ஓரக்காலையும் வெட்டி வீசிடுவேன். அதுக்குள்ளற நாசமாப் போன மழை வந்துரும் போலருக்கே... கருமேகம் திரண்டு மப்பெடுத்து இருக்கிறத பாத்தா இன்னைக்கு மழை வெளுத்து வாங்காமப் போகாது போலருக்கு. இன்னையோட வேலையா முடிச்சிடலாம்னு ஆசையா இருக்கு ஆனா அதுக்குள்ளார இந்த மழை வந்தே வந்தேன்னு வந்துகிட்டுருக்கு. இந்த வருஷமாவது வெள்ளாம விளைஞ்சு நாலுகாசு  பாத்துரலாம்னு ஆசைப்பட்டா அதுக்கொரு நேரம் காலம் கூடி வர மாட்டேங்குது' வெறுப்போடு கருமேகத்தை பார்த்து வாடிப்போனான் கருப்பையா.மேற்குத் தொடர்ச்சி மலையிலருந்து புறப்பட்டு வந்த மழக்காத்து, சூடான அவனோட உடம்புக்கு ஒத்தடம் கொடுக்கிற மாதிரி தொட்டுப் போனது.

       காட்டுக்கு பக்கத்துலயிருந்த ஓடக்குள்ளிருந்து மேலேறி, உழுத காட்டுக்குள்ள தத்தக்கா புத்தக்கானு ஓட்டமும் நடையுமா வந்து சேர்ந்தான் மாடசாமி. 

      "என்னடா.. பாரவண்டி இழுத்துக் கலைச்சு போன மாடு மாதிரி மூசு மூசுனு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடி வந்திருக்க....? அப்படி என்ன தல போற அவசரம்? கொஞ்ச நேரம் பொறுத்திருந்தா நானே வேலைய முடிச்சுட்டு வீட்டுக்கு வந்திருப்பேன். அதுக்குள்ள தொரைக்கு அப்படி என்ன அவசரம்? ஏன் பேசாம அப்படியே தெகைச்சுப் போயி நிக்கிற? கண்ணு வேற ரத்தமா செவந்து கிடக்கு. எதுனாலும் வாயைத் தொறந்து சொன்னாத் தானே தெரியும்டா. வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க? வாயத் தொறந்து சொல்லேண்டா...!" கருகருன்னு திரண்டு இருட்டிக்கிட்டு வந்த வானத்தையும் மாடசாமியையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே கேட்டான் கருப்பையா. 

    "சித்தப்பா....!"

     "சொல்லுடா காது கேக்குது!" கடுப்பாகச் சொன்னான் கருப்பையா. 

     "நம்ம வீட்டு பெரிய மனுஷன் நம்மளையெல்லாம் தனியாத் தவிக்க விட்டுட்டு போயிட்டாரு...." மடை திறந்த வெள்ளம் மாதிரி மாடசாமி கண்ணிலயிருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டியிருந்தது.

     "என்னடா சொல்ற....? நேத்து தானே ஆட்டுக்கறி குழம்பு தின்னுட்டு நல்லா சுனையா யேன் பொஞ்சாதி சோலையம்மா வச்ச மாதிரி இன்னைக்கு தான்டா குழம்பு வச்சிருக்க யேன் மருமக. நீ கல்யாணம் கட்டிக்கிட்டு வந்த இத்தனை வருஷத்துல அவ கையால வயிறார இன்னைக்கு தான்டா சோறு தின்னுருக்கேன். சோலையம்மாவோட கைப்பக்குவத்த திரும்பவும் என் நாக்குல உன் பொண்டாட்டி ஊரவச்சுடானு மதினிய பாராட்டுனதா அண்ணன் ராத்திரி சொல்லிச் சந்தோஷப்பட்டாரு.... உண்ட சோறு உடம்புல சேர்றதுக்குள்ள இப்படி வந்து சொல்லி நிக்கிற.... பொய்யி கிய்யி பேசாம உண்மையைச் சொல்லுடா.... ஏன் ஈரக் கொலையை வகுந்து போட்ட மாதிரி இருக்கு. என்னால நம்ப முடியல....! இதெல்லாம் பொய்யா இருக்காதான்னு நெஞ்சு பட படன்னு அடிக்குதுடா....! ஏற்கனவே நாசமா போன மழை வேற இன்னைக்கு வந்து யேன் பொழப்புல மண்ணள்ளி போடப்போகுது, அது பத்தாதுன்னு நீ வேற நெருப்பள்ளி கொட்டாதே...!" என்ற கருப்பையாவின் முகம் பேய் அடிச்ச மாதிரி மாறியிருந்தது.

      "எனக்கு மட்டும் இது நிசமா இருக்கணும்னு என்ன வேண்டுதலா என்ன சித்தப்பா! நானும் இந்த செய்தி கேட்ட உடனே இதெல்லாம் பொய்யா இருக்கக் கூடாதானு நம்ம குல சாமி அய்யனார வேண்டிக்கிட்டு , நம்ம மேற்கு வீட்டுக்குப்போய் பார்த்தப்ப..... நம்ம வீட்டு பெரிய மனுஷன்....  சாமி வீட்டு வாசல்ல மல்லாக்கா விழுந்தவரு  உத்திரத்தையே வெரிச்சுப் பார்த்த மானக்கி கெடந்தாப்புல.... அதைப் பார்த்தபோது என்னால நம்ப முடியல. அதுக்குள்ளார நம்மளோட சொந்த பந்தங்களெல்லாம் செய்தி கேட்டு ஒன்னு கூடிட்டாங்க. நம்ம பங்காளி கூட்டத்து  மூத்த மனுஷன், நம்ம வீட்டு பெரிய மனுஷனோட நாடித்துடிப்பை பார்த்து உறுதிப்படுத்துன பிறகுதான் உன் கிட்ட சேதி சொல்ல அப்பன் என்ன அனுப்பி வச்சாரு...." பொங்கி வந்த கண்ணீரோடு கருப்பையா தோளில் சாய்ந்து தேம்பித் தேம்பி அழுதான் மாடசாமி.

     வானமே இடிஞ்சு தலையில விழுந்து பூமிக்குள்ள கருப்பையாவ போட்டுப் புதைச்ச மாதிரி இருந்தது, மாடசாமி சொன்னத கேட்டதும்.

     தாகத்தில் தவிச்சு தொண்டையை நனைக்க முடியாம எச்சில விழுங்கிட்டு இருந்தவன் உடம்பு முழுவதும் உருண்டு பெருக்கெடுத்து வழிந்தோடிக்  கொண்டிருந்தது மழைதண்ணி. தாகம் மறக்கடிக்க ஈரம் வந்தும் நெஞ்சில் பாரம் மட்டும் துளியும் குறையவிடாம, அதுல பாரங்கல்ல வச்ச மாதிரி கனத்துக் கெடந்தது.

     மேலக் காட்டுலயிருந்து ஒரு வார்த்தை கூட பேசாம பித்து பிடித்தவன் போல இழவு வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தான் கருப்பையா. மாடசாமியும் அழுத மேனக்கி அவன் கூடவே வந்து சேர்ந்திருந்தான். 

     மேற்கு வீட்டு வாசல் முழுவதும் தென்னை ஓலைக்கீத்துல பந்தல் போடப்பட்டிருந்தது .இழவு வீட்டுக்கு வந்தவங்க  தேனடைய  மொய்க்கிற தேனீக் கூட்டம் மாதிரி கூட்டமா ஆங்காங்கே சோகமே வடிவாய் நின்று ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பந்தல் முழுவதும் பரப்பி வைத்திருந்த இரும்பு நாற்காலிகளில் ஊரு சனம் ஆக்கிரமித்திருந்தது. 

     தூரத்திலே நின்னு அப்பனோட முகத்தை பார்த்து தேம்பித் தேம்பி அழுதுகிட்டு இருந்தான் கருப்பையா. 

    "ஏம்பா ஆளாளுக்கு இப்படி கூடிக் கூடி பேசிக்கிட்டு இருந்தா.... மத்த வேலைகளெல்லாம் யாருப்பா பார்க்கிறது. அதததுக்கு வேண்டிய ஆள அனுப்புனா தானே காரியம் நடக்கும். இப்படியே சிலை மாறி நின்னுகிட்டிறுந்தா யாருப்பா இதெல்லாம் பாக்குறது" சத்தம் வந்த திசைப்பக்கம் ஒரே நேரத்துல இழவு வீட்டில் கூடியிருந்தவர்கள் எல்லாரும் திரும்பிப் பார்த்தார்கள். உழைச்சு காய் காய்த்து உரமேறிய வலுவான உடம்பு. அறுபது வயது கடந்தும் குறைய கம்பீரம். எதையும் ஆராய்ந்து நிதானமாக பேசும் ஒளி பொருந்திய கண்கள். பார்த்ததும் வணங்கும் தோற்றம். எப்பொழுதும் அவரோடு இணை பிரியாமலிருக்கும் தோளில் பச்சைநிறத் துண்டோடு ஊரோட தலைவர் குருசாமி அங்கு நின்றிருந்தார்.

      "ஊர்த்தலைவர் கேட்கிறாருலே.... எல்லாரும் மசமசனு நின்னுகிட்டு இருந்தா என்ன அர்த்தம்? ஏதாவது பதில் சொல்லுங்கப்பா!" ஐந்தடி உயரத்தோடு வெள்ளையும் சொல்லையுமாக இருந்த ஊர்த் துணைத் தலைவர் வெள்ளைச்சாமி அங்கிருந்தவர்களைப் பார்த்துக்கேட்டார். 

      "என்னப்பா இது? ஊரோட தலைவர் கேக்குற கேள்விக்கு இதுதான் நீங்க கொடுக்கிற மரியாதையா....? நல்லா இருக்குதுப்பா... ஏதாச்சும் ஒரு முடிவுக்கு வாங்கப்பா. பெரிய தலக்கட்டு தவறிப் போயிருக்கு. அதுக்கான மரியாதையோட அவர அனுப்பி வைக்கணுமா? இல்லையா? இப்படியே ஆளாளுக்கு மாறி மாறி நின்னு பேசிகிட்டு இருந்தா எல்லாம் சரியா போகுமா? சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்கப்பா..." என்றார் ஊர்த் தலைவர் குருசாமி.

     "ஊரோட பெரிய மனுஷன் நீங்க.... உங்களுக்கு தெரியாதா என்ன? ஆக வேண்டியது பாருங்க..."அழுது கொண்டே ஊர்த்தலைவர் குருசாமி நோக்கி  வந்தான் சின்னப்பாண்டி.

     "பெரியவர் அய்யனாருக்கு ரெண்டு பசங்க. அதுல மூத்த பையன் சின்னப் பாண்டிதே சொல்லிட்டான்லெ... பிறகென்ன... ஆக வேண்டியத பாருங்க...." என்றார் துணைத்தலைவர் வெள்ளைச்சாமி. 

    "எல்லாம் சரிப்பா. செலவுகளெல்லாம் யார் பாக்குறது? அதுக்கு ஒரு முடிவு பண்ணனுமில்ல. நாம பாட்டுக்கு எடுத்தோம் கவுத்தோம்முன்னு செஞ்சிர முடியாதுல? அப்புறம் தேவையில்லாம சண்டை சச்சரவாயிருமில்லப்பா...." துணைத்தலைவர் வெள்ளைச்சாமி பக்கத்திலிருந்த சின்னப் பாண்டி பொண்டாட்டியோட கூடப்பிறந்த அண்ணன் மாரியப்பன் கேட்டான். 

      "நீ என்னப்பா எழவு வீட்டுல இப்படி பேசிக்கிட்டு இருக்க? எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறியா?"என்றார் துணைத்தலைவர் வெள்ளைச்சாமி. 

      "எல்லாம் தெரிஞ்சுதே பேசுறேன். ரெண்டு பசங்க இருக்கும்போது செலவும் இரண்டாத் தானே போடணும். அதுதானே முறை. அதைத்தான் நான் சொல்றேன். இதில் என்ன குத்தமிருக்கு....?" தன்னோடு சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு சின்ன பாண்டிக்கு நடக்கவிருந்த பெரிய குற்றத்தை  நடக்கவிடாம தடுத்துவிட்ட தெனாவெட்டோடு பேசினான் சின்னப்பாண்டி. 

      "நீ கேக்குறதுலயும் ஒரு நியாயம் இருக்கு. ஆனா பாரு... உன்னோட மச்சினன். அதே சின்னப் பாண்டி உன் தங்கச்சியை கட்டி குடும்பஸ்தனா இருக்கான். மேற்கொண்டு வயக்காடு முழுவதையும் அவன்தே பார்த்துக்கிட்டு இருக்கான். பம்பு செட்டு மோட்டாருங்கிறதால தண்ணிப் பிரச்சனை எதுவும் இல்லாம விவசாயம் பண்ணி வசதியா வாழ்ந்துகிட்டு வாறான். ஆனா கருப்பையா வானம் பார்த்த பூமியை நம்பி ஒண்டிக்கட்டையா பொழப்பு ஒட்டிக்கிட்டு இருக்கான். ரெண்டும் எப்படிப்பா சரியாகும். கருப்பையா என்னைக்காவது எனக்கு அதைக் கொடு இதை கொடுனு கேட்டிருப்பானா? அவனுக்கு இருந்த ஒரே ஆதரவு அவங்க அப்பன் அய்யனாரும் போயிட்டாரு. இப்ப நாதியத்து போய் கருப்பையா நிக்கிறான். முறைப்படி பார்த்தா எல்லா செலவையும் சின்ன பண்டி தானே எடுத்து நடத்தணும். நீ என்னடான்னா இப்படி பேசிக்கிட்டு நிக்கிற. இதெல்லாம் சரி கிடையாது தம்பி" ஊர்த் தலைவர் குருசாமி கட்டந் திட்டமாக மாரியப்பனையும் சின்ன பாண்டியையும் பார்த்துக் கூறினார். 

     "இதென்னாங்க அணியாம இருக்கு. எதா இருந்தாலும் இரண்டாத் தானே போடணும். ஊரில் இல்லாத வழக்கமாலே இங்க நடக்குது. இது மாதிரி நான் எங்கேயும் பார்த்ததே இல்லை. நீங்க என்னோடன்னா எல்லா செலவையும் ஒரையாடிய யேன் மச்சினே தலையில கட்டி வச்சி ஓட்டாண்டி ஆக்குறதுக்கு திட்டம் போட்டு இருக்கீங்க போலருக்கு. இதெல்லாம் ஒத்துக்க முடியாது" கொதித்துப் போய் பேசினான் மாரியப்பன் .

     "ஏம்பா சின்னப்பாண்டி. உன்னோட மச்சினனை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறியா...? இதெல்லாம் நல்லா இல்லப்பா! பெரிய மனுசன் சாஞ்சு கெடக்காரு அவர முறைப்படி அனுப்பி வச்சிட்டு எதா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம். இப்படியே பேசிக்கிட்டு போனா.... பேச்சு வளருமே தவிர, இதுக்கு உடனடித் தீர்வு உடனே கெடைக்காது. என்ன நான் சொல்றது சரிதானே....?"என்றார் ஊர்த் தலைவர் குருசாமி.

    எதுவும் பேசாமல் மௌனமாய் தலையை மட்டும் சின்ன பாண்டி ஆட்டியதும் விருட்டென மாரியப்பன் அங்கிருந்து போய்ட்டான். கோபித்துக் கொண்டு போகும் மாரியப்பனையே பார்த்துக் கொண்டிருந்தான் சின்னப்பாண்டி. 

     "அவன் எங்கப்பா போயிடப் போறான்.  ஆகிற வேலையைப் பாருங்கப்பா"துணைத்தலைவர் வெள்ளைச்சாமி கூறினார்.

      "சரி! இழவு சொல்றதுக்கு ஆள் அனுப்பியாச்சா?" எனக் கேட்டபடி வந்தான் ஈஸ்வரன்.

      "என்னடா ஆளக் காணோம்னு பார்த்தேன். சரியான சமயத்துல வந்து சேர்ந்திட்டப்பா. இழவு சொல்றதுக்கு உன்ன அடிச்சுக்க ஆள் கிடையாதுப்பா...."என்றார் ஊர்த் தலைவர்   குருசாமி.

     "அது என்ன பெரிய கம்ப சூத்திரமா... நாலு ஊருக்கு போயி இறந்தவங்க ஆளுகள பாத்து சொல்லிட்டா போயிருச்சு. இது என்னவோ... பெரிய வேலை மாதிரி பேசிக்கிட்டு இருக்கீங்க. நாலு காசு கொடுத்தா யாரு வேணாலும் போய் சொல்லிட்டு வருவாங்க"எனச் சொல்லிக்கிட்டே பேசிக்கொண்டிருந்தவங்க பக்கத்துல திரும்பி வந்திருந்தான் மாரியப்பன். 

     "பெறகென்னப்பா.... கைவசந்தே. உருப்படியான ஆளு வச்சிருக்கீங்க. அப்புறம் எனக்கு என்ன வேலை? செத்த நேரம் இழவு வீட்டில உட்கார்ந்திட்டு கிளம்ப வேண்டியதுதான்..."அங்கிருந்தவர்கள் காதல் விழும் படி சொல்லிக்கிட்டே நகர்ந்து போயி பந்தலில் போட்டிருந்த இரும்பு நாற்காலியில் அமர்ந்து கொண்டான் ஈஸ்வரன்.

      "யேம்ப்பா சின்னப்பாண்டி! உன்னோட மச்சினன்! எப்ப வாய தொறந்தாலும் ஏதாவது எடக்கு மடக்கா பேசிக்கிட்டே இருக்கானப்பா. இந்த காரியம் முடியுற வரைக்கும் அவன் வாயக் கொஞ்சம் கட்டிப் போடு! ஒரு இடத்தில் இருக்கிற மாதிரி ஒரு இடத்துல இருக்காது...."என்றார் ஊர்த் தலைவர் குருசாமி.

      "அப்படி நான் என்னத்த சொல்லிட்டேன்னு இப்படி கிடந்து குதிக்கிறீங்க? ஊர் உலகத்துல இல்லாதயா நான் சொல்லிட்டேன்?" பேசியதை ஞாயப்படுத்த முயன்றான் மாரியப்பன். 

     "மச்சான்.... கொஞ்ச நேரம் சும்மா இருய்யா..." மாரியப்பனை கையமர்த்தினான் சின்னப் பாண்டி.

     "இங்க பாருப்பா சின்னப்பாண்டி! நீ நினைக்கிற மாதிரி இழவு சொல்றது அப்படி ஒன்றும் லேசுப்பட்ட காரியமில்ல. நம்ம பாட்டுக்கு எடுத்தோம் கவுத்தொம்முனு எதையும் செஞ்சுற முடியாது. அதுததுக்குனு ஒரு முறை இருக்கு. அதுபடி தான் செய்ய முடியும். என்ன நான் சொல்றது புரியுதா?" சின்ன பாண்டியின் தோளில் வாஞ்சையோடு கைவைத்தபடி கூறினார் ஊர்த் தலைவர் குருசாமி.

      "தலைவர் சொல்றதும் நியாயம் தானப்பா. போன வருஷம் உன்னோட கூட்டாளி காளிமுத்தோட அப்பா இறந்து போனப்ப இந்த பைய ஈஸ்வரன் அதான்பா.. அங்க ஒக்காந்து இருக்கானுல இவன் ஊர்ல இல்ல. வேற வழி இல்லாம காளிமுத்தோட சொந்தக்கார பையன் ஒருத்தன் இழவு சொல்றதுக்கு அனுப்பி வச்சப்ப, பெரிய ஏழரை இழுத்துட்டு வந்துட்டான். அப்புறம் அதை சரி பண்றதுக்கு பெரும்பாடா போயிருச்சு"என்றார் துணைத்தலைவர் வெள்ளைச்சாமி. 

      "அப்படி என்ன நடந்துச்சு? சொன்னா நாங்களும் தெரிஞ்சுக்குவமில்லே....?"என்றான் மாரியப்பன். 

     "நல்லா கேட்டுக்கப்பா. இழவு சொல்லப் போன பைய புதுசு. அதனால அவனுக்கு தெரிஞ்சத சொல்லிட்டு வந்துட்டான். அவன் வந்த பிறகு அவன விசாரிச்சப்ப, எல்லார்கிட்டயும் தகவல் சொல்லிட்டேனு அவன் பாட்டுக்கு காசு வாங்கிட்டு போயிட்டான். வினையே அவன் போன பிறகுதான வந்து நின்னுச்சு"என்றார் துணைத்தலைவர் வெள்ளைச்சாமி. 

     "அப்படி யேன் பாக்குறீங்க....? நடந்தத முழுசா சொல்லுங்க.... அப்பத்தான என்னானு விளங்கும்?"

      "சரி சொல்றேன் கேளுப்பா. காளிமுத்தோட அப்பா பேரு முருகன் இறந்து போனாருன்னு, இழவு சொல்லப் போன பய சொல்லிட்டு வந்துட்டான்..." எனச் சொல்லி நிறுத்தினார் துணைத்தலைவர் வெள்ளைச்சாமி. 

      "எல்லாம் சரியாத்தான சொல்லி இருக்கான். பிறகு எங்கிருந்து வந்துச்சு பிரச்சனை? நீங்களா ஏதாச்சும் கிளப்பி விடுறீங்களா?"

     "கொஞ்சம் பொறுப்பா. மேலோட்டமா பார்த்தா எல்லாம் சரியாத்தான் இருக்கும். விவகாரம் வினையா போனது இழவு விசாரிக்க அந்த ஊர்க்காரங்க வந்த பிறகு தானே தெரிந்தது. நம்ம ஊருல ஒரே பேர்ல நிறைய பேர் இருக்காங்க. அது உங்களுக்கு எல்லாருக்கும் தெரியுமுன்று நினைக்கிறேன்?"

     "ஆமா! இது என்ன புதுசா....?"

       "இது ஒன்னும் புதுசு இல்லதே.... ஆனா இது தானே அங்க வினையா மாறிப்போச்சு...."

      "எப்படி?"

      "இறந்து போன காளிமுத்தோட அப்பா பேரு முருகன், அதே மாதிரி பேருல இன்னொருத்தரும் இந்த ஊர்ல இருக்காங்க. எழவு சொல்லப் போன பய, இறந்தவங்க வீட்டோட சொந்தக்காரங்க கிட்ட சொல்லாம. இழவு செய்தியை மாத்தி உசுரோட இருக்கிற சொந்தக்காரங்க வீட்டில சொல்லிட்டு வந்துட்டான். எழவு செய்தி கேட்ட வீட்டுக்காரங்களும் மாலை மரியாதை எழவுச் சீர் வரிசையோடு ஊருக்கு வந்து பார்த்த பெறகுதே ஆள் மாறிப் போனது தெரிஞ்சப்ப அது பெரிய கலவரத்தில் போய் முடிஞ்சிருச்சு. வந்தவங்களுக்கும் எழவு வீட்டுக்காரங்களுக்கும் ஒரேயடியா சண்டையில போயி நின்னுச்சு. அதுக்குப் பிறகு நம்ம ஊர்த்தலைவர் அதை ஒரு வழியா சரி பண்ணுறதுக்கு போதும் போதும்னு ஆயிருச்சு. இப்ப சொல்லு பாப்போம், இது சுளுவான வேலையான்னு....?"

      "இத அவன் மட்டும் எப்படி சரியா சொல்லுவானு சொல்றீங்க?"

      "அத நான் சொல்றேன்" அவர்களருகே வந்தான் ஈஸ்வரன்.

      "தூரத்தில் உட்கார்ந்து இருந்தாலும் காத கழட்டி இங்கே வச்சிட்டு போனயாக்கும். சரியான பாம்பு காதுப்பா உனக்கு! சரி நீயே வந்துட்ட. எப்படினு நீயே விளக்கமா சொல்லிடு!" என்றார் துணைத்தலைவர் வெள்ளைச்சாமி. 

      "ஊருக்குள்ளற ஒரே பேருல எத்தனை பேர் இருந்தாலும் சரியா சொல்றதுக்கு ஒரு கணக்கு இருக்கு"பொடி வைத்துப் பேசினான் ஈஸ்வரன். 

     "அது என்னன்னுதே சொல்லேன்பா....?" என்பது போல் ஈஸ்வரனை பார்த்தான் மாரியப்பன். 

     "சரி கவனமா கேளு! பொதுவா இறந்து போன ஆளு இருக்க தெரு, அவங்க அப்பா பேரு, அவர் பொண்ணு எடுத்த இடம், அவங்க தோட்டம் தொரவு இருக்கிற இடம், ஆளோட உசரம், வீட்டோட அமைப்பு, அவங்க கும்பிடுற குலசாமி, அவங்க அண்ணன், தம்பி, அக்கா, இல்ல தங்கச்சி பேரு, அவுங்க வாக்கப்பட்ட ஊரு, இதுகள் எல்லாம் வச்சுக்கிட்டு இடத்துக்கு தக்க மாதிரி இழவு சொல்லப் போற இடத்துல கேள்விகளை கேட்டு நாமளே ஒரு அனுமானத்துக்கு வந்து, அதுக்கு பிறகு தான் எழவு சொல்லணும். இதுல தப்பு வாறதுக்கே வாய்ப்பே கிடையாது. என்னோட இத்தனை வருஷம் சர்வீஸூல ஒரு இழவு செய்தி கூட தப்பா முடிஞ்சதே கிடையாது...." பெரும் சாதனை செய்ததுபோல முறுக்குமீசைய தடவிக்கொண்டே பேசினான் ஈஸ்வரன். 

     "என்னப்பா ஈஸ்வரன் சொன்னது விளங்குச்சா....? இப்ப சொல்லு? இவனை அனுப்பலாமா வேணாமா?"

     "இவனையே அனுப்பி வைங்க!" வேண்டா வெறுப்பாக கூறினான் மாரியப்பன். 

     "சரிப்பா! ஈஸ்வரன் கையில ஆயிரம் ரூவா காசு கொடுத்து அனுப்புங்க" என்றார் ஊர்த் தலைவர் குருசாமி.

     "என்னது ஆயிரம் ரூவாயா....? இழவு சொல்றது இம்புட்டு காசா? இது பகல் கொள்ளையாலேயிருக்கு? இந்த மாதிரி நான் எங்கேயும் பார்த்ததே இல்லை?" மாரியப்பன் போட்டோ கூச்சலில் எழவு வீட்டுக்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் வெறுப்போடு இது இழவு வீடாதானாங்கிற தொனியோடு திரும்பிப் பார்த்தார்கள்.

     "மாரியப்பா....! கொஞ்சம் அமைதியா பேசுப்பா! இது இழவு வீடுங்கிறத அடிக்கடி மறந்து போயிடுற..." மாரியப்பனை அமைதிப்படுத்த முயன்றார் ஊர்த் தலைவர் குருசாமி.

    "இருந்தாலும் இது ரொம்ப அதிகம்! போயும் போயும் இழவு சொல்றதுக்கு யாராவது ஆயிரம் ரூவா தருவாங்களா? அந்தக் காசை சம்பாதிக்க ஒவ்வொரு நாளும் நம்ம என்ன பாடு பட வேண்டியதா இருக்கு! நீங்க என்னடான்ன சுளுவாத் தூக்கி கொடுக்க சொல்றீங்க? என்னால இதை ஏத்துக்கவே முடியாது"

     "சரி அப்ப நீங்க வேற ஆள பாத்துக்கங்க. யேன் சோலி பாட்ட நான் பாத்துக்கிட்டு போறேன்" துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டான் ஈஸ்வரன். 

    "ஈஸ்வரா இருப்பா....! "அவன் நின்றதும் "மாரியப்பா, நீ மாட்டுக்கு ஏதாவது எடுத்தேன் கவுத்தேனு எதாவது பேசிகிட்டு இருக்காத... இவன் போயிட்டான்னா.... அப்புறம் நம்ம வேற ஆள பாக்க முடியாது" என்றார் ஊர்த் தலைவர் குருசாமி. 

      "என்னங்க நீங்க எப்ப பாரு இவனுக்கே ஆதரவா பேசிக்கிட்டு இருக்கீங்க?"

      "தம்பி! எழவு சொல்ல போகுற இடத்துக்கு சில சமயம் பஸ்ஸூ இருக்கும் இருக்காது. அந்த மாதிரி நேரத்துல அந்த இடத்துக்கு தகுந்த மாதிரி ஏதாவது ஒரு யோசனை பண்ணி செய்தியைக் கொண்டு போய் சேர்க்கப் பாக்கணும். சரி செய்தி சொல்லிட்டோம், அடுத்த ஊருக்கு போகலாம்னு திரும்பும் போது அதே பிரச்சனை வேற ஒரு ஊருக்கும் வரலாம். அதையும் சமாளிக்கணும். இழவு சொல்லப்போறதுனால போகிற இடத்தில கை நனைக்க முடியாது. அதனால கிடைக்கிற இடத்துல சாப்பிடனும், அதே நேரத்தில சரியான சமயத்துல இழவு செய்தியும் சொல்லணும். இந்த மாதிரி நிறைய நெளிவு சுளிவு இருக்கும். அதையெல்லாம் சமாளிச்சிட்டு இழவு செய்தியை சொல்லிட்டு வரணும். அத்தனையும் நாமலே நேர்ல போய் சொல்லிட்டு வர முடியாது. இங்க இறந்தவங்களுக்கு வேண்டிய சடங்கு சம்பிரதாயம். எல்லாத்தையும் முறைப்படி நாமதே பாக்கணும். நம்மோட கவனம் இதுல இருக்குமா? இல்ல சொந்தக்காரங்களுக்கு இழவு சொல்றதுல இருக்குமா?. அதனாலதே.... இந்த மாதிரி இழவு விஷயத்துல கணக்கு பாக்காம செலவு பண்ணாத்தே நாம நெனச்ச காரியம் முடியும். இதெல்லாம் வாழ்க்கையில எல்லாரும் அனுபவிச்சு தெரிஞ்சுக்க முடியாது. ஒரு சிலதை மூத்தவங்க சொன்னாச் சரின்னு கேட்டுக்கணும்" மாரியப்பனுக்கு புரியும்படி எடுத்துக் கூறினார் ஊர்த் தலைவர் குருசாமி.

     மாரியப்பன் எதுவும் சொல்லாமல் தலைகவிழ்ந்தபடி நின்றான். 

     "ஐயா வணக்கமுங்க" வணங்கியபடி நின்றான் வெட்டியான் கணேசன். 

     "சொல்லு கணேசா... என்ன விஷயம்?"

      "ஊரோட பெரிய தலைக்கட்டு அய்யனார் இறந்து போயிருக்காரு. ஆனா அவர இன்னும் படுக்கையிலேயே வச்சிருக்காங்க. நம்ம வழக்கப்படி குளிக்க வச்சு சந்தனம், சவ்வாது, பன்னீர் தொளிச்சு, மாலை மரியாதையோடு ராசா கணக்குல மர நாற்காலியிலே தானே உக்கார வைப்பீங்க... வாசல்ல இன்னும் விளக்கு கூட வைக்கல. மரக்கா நெல்லை காணோம். அவர் காலுக்கு பக்கத்துல ரெண்டு ஊதுபத்தி மட்டும் எரிஞ்சுக்கிட்டு இருக்கு. இது எல்லாம் சரியாப் படல.  எதுவுமே நடக்காம இருக்கது, அவருக்கு செய்ற அவமரியாதை! நல்லா வாழ்ந்த மனுசன இப்படியா போட்டு வச்சிருப்பாங்க? எனக்கு தோணுச்சு நான் கேட்டுட்டேன்" கவலையோடு கேட்டான் வெட்டியான் கணேசன்.

     "பாத்தியாப்பா.... பேச்சு வாக்குல நாம நம்மளோட வழக்கத்தையும் மறந்துட்டு நின்னுக்கிட்டு இருக்கோம். இன்னும் ஒரு வேலை கூட நடக்கல. அது அப்படியே கெடக்கு.... மழை வேற மறுபடியும் வர்ற மாதிரி இருக்கு. அதுக்கு ஏத்த மாதிரி வந்தவங்க சாப்பிடுவதற்கும் ஒதுங்குறதுக்கும் , உறங்குறதுக்கும்  இன்னும் எதுவுமே பண்ணல. அதுக்கப்புறம் நாளைக்கு அய்யனார் சுடுகாட்டுக்கு கொண்டு போறதுக்கு வேண்டிய பொருள் எல்லாம் வாங்க வேண்டி இருக்கு. கொட்டு காரங்களுக்கு சொல்லிவுடனும், கப்பல் தேர் கட்டுவதற்கு ஆள ரெடி பண்ணனும். அதுக்கு செய்ய வேண்டிய சடங்கு சம்பிரதாயம் பாக்கணும். அதுக்கு முதல்லே வள்ளுவர் வேணுமுல்லே....‌ ஏம்பா சின்னப்பாண்டி! வள்ளுவருக்கு தகவல் சொல்லியாச்சா....?"சின்னப் பாண்டியப் பார்த்துக் கேட்டார் ஊர்த் தலைவர் குருசாமி.

     துக்கம் தொண்டை அடைத்துக் கொண்டதால சின்னப்பாண்டி பேசவில்லையா? இல்லை பேசுவதற்கு தகுந்த பதில் இல்லாததால் மௌனமாக நின்றானா எனப் புரியாதபடி விழித்துக் கொண்டிருந்தான். 

     அனுபவம் தந்த பாடத்தால் இழவு வீட்டில்  சத்தமாக சிரிக்க கூடாது என்பதால் மௌனப் புன்னகை சின்னப் பாண்டி மீது வீசிவிட்டதோடு ஈஸ்வரனின் கையில் ஆயிரம் ரூபாய் பணத்தை திணிச்சதோட மற்ற வேலைகளை கவனிக்க ஆயத்தமானர் ஊர்த் தலைவர் குருசாமி. ஏதேச்சையாக திரும்பிப் பார்த்தபோது தன்னைச் சுற்றி நடந்து கொண்டிருப்பது எதுவும் தெரியாமல் அய்யனார் காலை இருகக் கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தான் கருப்பையா. 


(முடிந்தது)


##################################################

Monday, 14 July 2025

வலி பொறுத்தவள் - கவிஞர் யாழிசைசெல்வா

வலி பொறுத்தவள்

=====================


     பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடு பிடிக்கச் சென்ற பால்பாண்டியை மாடு அல்லையில் குத்தி தள்ளியதால் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தான். இப்படி ஆகிவிட்டதேயென்று குட்டி போட்ட பூனை போல் அவசர சிகிச்சை பிரிவு வாசலில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள் பால்பாண்டியின் தாய் அன்னலட்சுமி. 

       ஓட்டமும் நடையுமாக மருத்துவமனைக்குள் நுழைந்தாள் பார்வதி. எப்படியோ அவசரச் சிகிச்சை பிரிவை விசாரித்து வந்து சேர்ந்திருந்தாள். அன்னலட்சுமி பார்த்ததும் ஓடிவந்து கட்டிக்கொண்டு தேம்பித் தேம்பி அழத் தொடங்கி விட்டாள் பார்வதி. என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நின்ற அன்னலட்சுமி ஒரு வழியாக மனதைத் தேற்றிக் கொண்டு மருமகள் பார்வதியை அருகிலிருந்த இருக்கையில் அமரச் செய்து அமர்ந்து கொண்டாள். 

     "இன்னும் எத்தனை நாளைக்கு இவர் இப்படியே இருப்பாரு. முன்னதே வெட்டியா சுத்திக்கிட்டு இருந்தோம். இப்ப நமக்குன்னு ஒரு குடும்பம் குட்டி ஆயிருச்சு, அதுக்குப் பெறகாவது புத்தியோடு பொழைக்க வேண்டாமா? இருக்க இருக்க வயசு என்ன அப்படியேவா இருக்கும்? ஒரு நாள் இல்ல ஒரு நாள் எக்கு தப்பா அவருக்கு ஏதாவது ஆகிப்போச்சுன்னா நானும் என் பிள்ளைகளும் அனாதை தானே நிப்போம்? பெத்ததாயி நீங்களும் ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டேங்கறீங்க...."என மாமியார் அன்னலட்சுமி பார்த்து கேட்டாள் பார்வதி.

     " என்னோட புள்ளைங்கறதுக்காக இவன் செய்றத நான் எப்பவுமே ஒத்துக்க மாட்டேன். எல்லாம் என் தலையெழுத்து. இவனோட அப்பனால வந்தது. அதுதான் உன்னோட மாமனாரு. அந்த ஆளு அப்படித்தான் எப்ப பாரு மாடு பிடிக்கப் போறேன் மாடு பிடிக்கப் போறேன்னு அதுவே கதியாக் கிடந்தாப்புல. அதிலேயே உசுரையும் விட்டுட்டு எங்களை அனாதையா தவிக்க விட்டு போயிட்டாப்புல. அந்த ஆளு போன பிறகு இப்பவாது நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சா. அப்பனோட புத்தி அப்படியே இவனுக்கும் தொத்திக்கிருச்சு. நானும் இப்ப திருந்துவான் பிறகு திருந்துவானென்று பார்த்தேன். அதற்கான வழி தெரியல. நானும் போகாத கோயிலு இல்ல. வேண்டாத சாமி இல்ல. அப்பத்தேன் ஒரு முடிவு பண்ணி, சரி கல்யாணம் கட்டி வச்சா அதுக்கு பெறகாவது திருந்தி வாழ்வானென்று உன்ன அவனுக்கு கட்டி வச்சேன்"

     "மாடு பிடிக்கிறது அவுங்களுக்கு ரொம்பப் புடிக்கும்கிறது எனக்கும் தெரியும். அவுகளோட அந்த வீரத்தைப் பார்த்து தானே நானே மயங்கி அவுகளை கட்டிக்கச் சம்மதித்சேன். அப்ப வீரமா தெரிஞ்சது, இப்ப வினையா வந்து நிக்குது. அன்னைக்கு நான் மட்டும் இருந்தேன் எனக்கு ஒன்னும் தெரியல. இப்ப புள்ள குட்டி ஆன பெறகும் அதே மாதிரி இருக்க முடியுமா? அதுதான் எனக்கு ஒரே கவலையா கெடக்கு"


     "நீ வாரதுக்கு முன்னால வேலை வெட்டி எதுவும் செய்யாம வெட்டியா சும்மாதேன் ஊரச் சுத்திகிட்டு கிடந்தான்.  நானெல்லாம் எத்தனையோ தடவ சொல்லியும் கேட்காதவன் உன்னோட ஒரு வார்த்தை அவன மாத்துச்சு. அதே மாதிரி இதுல இருந்தும் அவனை நீ தான் தாயி மாத்தணும்"

     அவசர சிகிச்சை பிரிவிலிருந்து மருத்துவர்கள் வெளியே வந்தார்கள். ஒரு மணி நேரம் கழித்து பால்பாண்டியை பார்க்கலாம். அபாய கட்டத்தை தாண்டி விட்டானென்று சொல்லிச் சென்றார்கள். 

      "நான் கும்பிடுகிறே அய்யனார் சாமி தான் என் புள்ளையைக் காப்பாத்திருக்கு.... அய்யனாரப்பா யேன் புள்ள சுகமாகி வீடு திரும்பினதும் உனக்கு கிடா வெட்டி பொங்க வைக்கிறேன் சாமி" என மனதிற்குள் சொல்லி கையெடுத்து கும்பிட்டதோடு மருத்துவமனை எனவும் பாராமல் அய்யனார் கோவிலிருக்கும் திசை பார்த்து கீழே விழுந்து வணங்கி நிமிர்ந்தாள் அன்னலட்சுமி.

       அவசர சிகிச்சை பிரிவிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டிருந்தான் பால்பாண்டி. மாடு குத்திய இடத்தில் தையல் போட்டு கட்டு கட்டியிருந்தது. உடல் முழுவதும் ஏற்கனவே மாடுபிடிச் சண்டை வெற்றியின் சுவடுகள் விழிப்புண்களாக எழுதப்பட்டிருந்தன. 

      படுக்கையில் சோர்வாக படுத்திருந்த பால்பாண்டியைப் பார்த்ததும் அடக்க முடியாமல் பார்வதிக்கு கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது. பார்வதியை அருகில் வரும்படி சைகையால் அழைத்தான் பால்பாண்டி. அருகே வந்து நின்ற பார்வதியின் கையை பற்றிக் கொண்ட பால்பாண்டி "கவலப்படாத எல்லாம் சரியாயிடும். இனிமேற் கொண்டு மாடுபிடிக்கு போக மாட்டேன். இதுதான் கடைசி. என்ன மன்னிச்சிடு" எனச் சத்தியம் செய்தான்.

       'வலி பொறுத்ததற்கு' இப்போதாவது தீர்வு கிடைத்ததே ஆண்டவா நன்றி! முந்தானையால் அவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் பார்வதி!

கவிதைச்சாரல் சங்கமம் சிறுகதை போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கதை இது !

14/07/2025


அவளோடு போனவை - கவிஞர் யாழிசைசெல்வா

அவளோடு போனவை 

====================

கவிஞர் யாழிசைசெல்வா 

=======================

       மேற்குத் தொடர்ச்சி மலையில் விழுந்து கொண்டிருந்தது சூரியன். அணையும் விளக்கின் பிரகாசத்தோடு அந்திவானம் சிவந்திந்தது. மாடுகளை குளிப்பாட்டுவதற்காக குளத்தில் இறக்கியிருந்தான் சந்தனம். ஒரு வாரமாக மாடுகளைக் குளிப்பாட்ட வேண்டுமென்று நினைத்தது இன்று தான் கை கூடியது. இடுப்பாலத்தில் நின்று கொண்டு குளத்தின் நீரை ரெண்டு கைகளாலும் வாரி வாரி மாட்டின் மீது இறைத்தான். தண்ணீர் பட்டதும் உடலை சிலிர்த்துக் கொண்டன மாடுகள். வைக்கோல் பிரிவைத்து உடல் முழுவதும் சந்தனம் தேய்த்து விட்டதும் மாடுகள் பார்ப்பதற்கு அழகாய்த் தெரிந்தன. பொழுது மேலேறி இருளின் ஆதிக்கம் மெல்லப் பரவி வந்து கொண்டிருந்தது. குளிப்பாட்டி முடிந்ததும் மாடுகளை கரையிலிருந்த ஆலமரத்தின் விழுதுகளில் கட்டி வைத்தான். 


    "ஏலே சந்தனம்.... நீ வரலையா....?" பக்கத்தூர் காளியம்மன் கோவில் திருவிழாவுக்கு போய்க்கொண்டிருந்த தங்கப்பாண்டி கேட்டான். 

.

     "வெள்ளையும் சொல்லையுமா எங்கடா கிளம்பிட்ட? பாக்குறதுக்கு மாப்பிள்ளை கணக்கால இருக்க? வேற ஏதும் விசேஷமாடா? என்கிட்ட கூட சொல்லாம அப்படி என்னடா ரகசியம்? ரெண்டு பேரும் ஒன்னாத் தானே எங்க போனாலும் போவோம். இப்ப என்னடான்னா நீ மட்டும் தனியாப் போய்கிட்டு இருக்க? இதெல்லாம் உனக்கு நல்லவா இருக்கு? அம்புட்டுத்தேன் நம்ம கூட்டோட லட்சணம் போலருக்கு.... சரி! நீயொரு முடிவோட கிளம்பிட்ட.... நல்லபடியாப் போயிட்டு வாடா..." எனச் சொல்லிக்கொண்டே சந்தனம் குளத்தை நோக்கி நடந்தான். 


      "இருடா. நீ பாட்டுக்கு என்னென்னமோ சொல்லிக்கிட்டு இருக்க. உன்ன விட்டு நான் எங்கேயும் போகல. உன்னத் தேடி வீட்டுக்குப் போனேன். வீடு பூட்டிக் கிடந்துச்சு. அப்பத்தான் பக்கத்து வீட்டு காளியம்மாப் பாட்டி, நீ மாட்ட புடிச்சுகிட்டு குளத்து பக்கம் போனதா சொன்னாங்க. அதுதான் உன்னைத் தேடி இங்க வந்தேன். இது தெரியாம நீ பாட்டுக்கு என் மேல கோபப்பட்டுட்டு இருக்க" எனச் சொல்லிக் கொண்டே சந்தனம் அருகே வந்தான் தங்கப்பாண்டி. 


     "என்ன மன்னிச்சுக்கடா. நீ வெள்ளையும் சொல்லையுமா கிளம்பி வந்ததை பார்த்ததும் எனக்கு அப்படித் தோனிருச்சு. அதுக்காண்டி என்ன கோவிச்சுக்காத. சரி இப்பச் சொல்லு? எங்க போறதுக்காக இப்படி கிளம்பி வந்து இருக்க?"


     "உன்னோட அம்மா பிறந்த ஊருல காளியம்மா கோவில் திருவிழா நடக்குதுடா. அது உனக்கு தெரியாதா? இல்ல நீ மறந்துட்டியா? எதுனாலும் பரவாயில்லை வா ரெண்டு பேரும் போயிட்டு வரலாம்"


    "இல்லடா நான் வரல. நீ போயிட்டு வா"


     "ஏண்டா வரல? உன்னோட அம்மா ஊரு தானடா அது. பெறகெதுக்கு வர மாட்டேங்குற?"


     "என்னைக்கு என்னோட அம்மா யெறந்து போச்சோ. உறவு அருந்த மாதிரி அன்னையோட எங்கப்பனும் என்னத் தலைமுழுகிட்டு வேற கல்யாணம் கட்டிக்கிட்டான். அந்த ஊருக்கும் எனக்குமான சம்பந்தம் விட்டுப் போயிடுச்சு. அதுக்கு பிறகு அந்த ஊரோட எனக்கு எந்த விதமான தொடர்பும் இல்ல..."


      "அதுக்கு சாமி என்னடா பண்ணும்?"


      "எங்க அம்மாவை விட பெரிய சாமி எனக்கு எதுவும் இல்லடா....! எல்லாம் எனது அம்மாவோட போயிருச்சுடா...." எனச் சொல்லிக்கொண்டே‌ குளிப்பதற்கு குளத்தில் இறங்கினான் சந்தனம்.


(முடிந்தது)


கவிஞர் யாழிசைசெல்வா 

14/07/2025

Saturday, 12 July 2025

பகுதி 03 யாழிசைசெல்வா

 

பகுதி - 03

      பகல் முழுவதும் மறைச்சு ஒளியவச்ச வெட்கத்தை இரவு வந்ததும் முழுசா தொறந்து விட்ட மாதிரி சூரியன் மறைந்ததும் இருளின் மை எங்கும் பரவிக் கிடந்தது. இரவு ஏறி ஒரு சாமாம் கடந்திருந்தது. சுக்காங்கல்லும் சரளக் கள்ளுமாக கிடந்த பாதைகளின் இரண்டு பக்கமும் புளிய மரம், மாமரம், அரசமரம், வேப்பமரம் நீண்டு தன் கிளைகளைப் பரப்பி இருளை இறுக்கமாக பிடித்துப் பாதையில் பரப்பி வைத்திருந்தது. அந்த இரவு நேரத்துல யாரும் தன்னந்தனியா போகிறதுக்கே பயப்படுற மாதிரி அப்படி ஒரு இருட்டுல நாலு மாட்டு வண்டிகளும் தேனி சந்தை நோக்கி போய்கிட்டு இருந்தது. பெரும்பாலும் தேனி சந்தைக்கு போகும்போது கூட்டமா போறது தான் பழக்கம். இது ஆதி காலத்துல இருந்து இடம் விட்டு இடம் நகரும் மனித கூட்டத்தோட வழி வழியாக வந்த பழக்கம். இதுல ஒரு வசதியும் இருந்தது வழியில் எதுவும் பிரச்சனை வந்தா கூட்டமா சேர்ந்து எதிர்கொள்றதுக்கு வசதியா இருந்ததால் இது வாடிக்கையா தொடர்ந்து கிட்டு இருந்தது.

     நாலு வண்டிகளும் ஆமை நகருகிற மாதிரி மெல்ல ஊர்ந்து நகர்ந்துகிட்டு இருந்தது. சாதாரண மாட்டு வண்டியா இருந்தா வேகமா உருண்டோடி போய்விடும். சுமைகளை ஏத்திக்கிட்டு போற பார வண்டிகிறதால‌ மெதுவாத்தான் போகும். வேகமா போனா பாதைகள் இருக்க மேடு பள்ளத்துல ஏறி இறங்கும் போது வண்டி கொடை சாய்ந்து கீழே கவுந்து விடும். அதனாலே என்னவோ வண்டி ஓட்டுறவன் மாடுகளை அடிச்சு ஓட்டாமல் பாதாம் எதமா பார்த்து ஓட்டணும். அந்த பக்குவம் எல்லாருக்கும் வருவது கிடையாது. இடம் தடம் பார்த்து நேக்கு போக்கு பார்த்து அந்த நேரத்துல வண்டி ஓட்டி யோட மனநிலையை பொறுத்து தான் பயணம் சுகமா அமையுறதும் சுணக்கம்மா முடிகிறதும் இருக்கு.
சின்ன வயசுல இருந்தே மாரியப்பனும் கருப்பசாமியும் அவங்க அப்பனோட பாரவண்டி ஏத்திக்கிட்டு கூட மாட ஒத்தாசையா போய் வந்தபோது கத்துக்கிட்ட பழக்கத்துல அவர்களுக்கும் ஒட்டிக்கிட்டது.

     ஒழவு காட்டுல உழுகிற முன்னத்தி ஏறு மாதிரி மாரியப்பனோட பாரவண்டி முன்னால போய்கிட்டு இருந்தது. ஊரைத் தாண்டி தேனி போகிற பெரிய பாதையில மாட்டு வண்டி ஏறி கொஞ்சம் தூரம் போனதும் சுக்கான் கல்லு மேல வண்டிச்சக்கரம் மேல ஏறி கீழே இறங்கும்போது நல்ல ருசியோட ஆட்டுக்கறி மென்னு திங்கும் போது கடை வாயில கருங்கல்ல கடிச்ச மாதிரி 'கடார்னு' சத்தம் ஒன்னு கேட்டது. சத்தம் கேட்டது மாடு வெருண்டோட முயன்ற போது மூக்கணாங்கயிறு பதமா இழுத்து புடிச்சவன் ரெண்டு மாடுகளோட பிட்டத்துல மாரியப்பன் தான் உள்ளங்கையால பூப்போல வருடி கொடுத்தான்.  மாரியப்பனோட உள்ளங்கை சூடல மாடுக ரெண்டும் சமநிலைமைக்கு திரும்பி இருந்தது. மறுபடியும் ஆமை போல மாட்டுவண்டி உருண்டோடத் தொடங்கியது. மத்த வண்டிகளும் எறும்பு கூட்டம் போல வரிசையா வந்துகிட்டு இருந்தது.

       பாதைகளத்தாண்டியிருந்த தோட்டத்துல ஆளு உயரத்துக்கு சோளக்கருதுகள் முத்தி விளைந்து வாடைக்காத்துக்கு தலையாட்டி பொம்மை போல அப்படி இப்படி ஆடிக் கொண்டிருந்தது.  சோள கொள்ள நடுவுல காக்கா குருவிகளை விரட்டுவதற்கு நட்டு வச்ச பொம்மை ஒன்னு திடீர்னு திரும்பி பார வண்டிகளை பார்த்துக் கொண்டிருந்தது. ஏதேச்சையாக சோளக்காட்டு பக்கம் திரும்பி மாரியப்பன் அதை கவனித்திருந்தான். அவனையும் அறியாமல் இடுப்புல சொருகி இருந்த சூரிக்கத்திய வலது கையால தொட்டுத் திரும்பி இருந்தது. பாதையில ஒரு கண்ணும் சோளக்காட்டுல ஒரு கண்ணுமா மாறி மாறி பாத்துகிட்டு இருந்தான். வண்டியோட வேகத்துக்கு இணையாக சோள கொள்ள பொம்மையும் நகர்ந்து கொண்டு இருந்தது. தனக்கு பின்னால வருகிற பார வண்டிகளுக்கு சேதிய கடத்துவதற்கு என்ன பண்ணலாம்னு யோசித்துக் கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டு இருந்தான். சட்டுனு பொரி தட்டின மாதிரி பழைய பழக்கம் ஞாபகம் வந்ததும் சாட்டை கம்பை எடுத்து மாட்டோட முதுகுல தொடர்ச்சியா சுளிர் துளிருனு அடிச்சதும் சத்தம் ஆள் அரவமில்லாத அந்த தன்னந்தனி பாதையில துல்லியமா காத்துல பரவியது. சத்தம் கேட்டதுமே மத்த பார வண்டிகளும் தங்களோட செய்கையில மாற்றத்தை கொண்டு வந்துட்டார்கள். அதை பெரிதாக வெளிக்காட்டிக் கொள்ளாமல் கண நேரத்திற்குள் சுற்று முற்றிலும் பார்த்து நிலவரத்தை உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்ற மாதிரியான முன் தயாரிப்பில் இறங்கி விட்டார்கள்.

      முன்னாள் உருண்டோடிக் கொண்டிருந்த தனது மாட்டு வண்டியை நிறுத்துவதற்காக செவலை காளைகளின் மூக்கனாங்கயிறுகளை சடக்கெண இழுத்து பிடித்து நிறுத்தி இருந்தான் மாரியப்பன். சற்று தாமதித்திருந்தால் பாதையின் முன்னாலிருந்த பெரிய பள்ளத்தில் மாட்டு வண்டி கவிழ்ந்திருக்கும். அப்பாடா தப்பித்தோம் என மூச்சு வாங்கி மாரியப்பன் நிற்பதற்குள் கையில் சிலம்பக் குச்சிகளோடு பத்திற்கு மேற்பட்ட தடியர்கள் வண்டிகளை சுற்றி வளைத்து விட்டார்கள். ஒவ்வொரு தடியர்களும் உருண்டு திரண்ட வலுவான தோள்களோடு எதையும் எதிர்கொள்ள தயாராக நின்று கொண்டிருந்தார்கள். சிறுத்தையிடம் அகப்பட்டு கொண்ட மான் போல் ஆகிவிட்டது பாறை வண்டியில் இருந்தவர்களுக்கு. நடிகர்களின் கூட்டத்தில் இருந்த ஒருவன் முன்னால் வந்து "வண்டி அப்படியே விட்டுட்டு எல்லாரும் ஓடிப் போயிருங்க. உங்களுக்கு உயிராவது மிஞ்சும். இல்ல அப்படின்னு பிடிவாதம் புடிச்சீங்கன்னா எல்லா பேரோட உசுரையும் சோள காட்டுக்கு இறையாக்கிட்டு வண்டியை எடுத்துக்கிட்டு நாங்க போயிருவோம். உங்களுக்கு வசதி எப்படி?"என்றான் அவர்களின் தலைவர் போன்றவன்.

     நாலு வண்டிகளில் இருந்தும் வண்டி ஓட்டிகள் கீழே இறங்காமல் அப்படியே வண்டியிலே அமர்ந்திருந்தார்கள். அவர்களது என்ன ஓட்டத்தை கீழே நின்று கொண்டிருந்த தலைவன் போன்ற தடியன் அளவெடுத்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கடந்து இருந்தும் அவர்கள் எந்த விதமான பதிலையும் கூறாமல் சிலை போல் அப்படியே அமர்ந்திருந்தார்கள். அந்தச் செயல் கூட்டத்தின் தலைவனுக்கு பெருத்த எரிச்சலை உண்டாக்கி இருக்க வேண்டும். "என்ன புடிச்சு வச்ச புளி மூட்ட மாதிரி அப்படியே அசையாமல் உட்கார்ந்து இருக்கீங்க? விட்டுட்டு ஓடுனா உசுராவது மிஞ்சும். இல்லன்னா அப்புறம் சொல்றதுக்கு என்ன இருக்கு?"தனது முட்டை கண்களை உருட்டி மிரட்டி கொண்டிருந்தான் தடியர்களின் தலைவன்.

     "இந்த வண்டிகள்ல இருக்க பொருள்களின் மதிப்பு உனக்கு தெரியுமா? இது அப்படியே விட்டுட்டு போனா இதோட சொந்தக்காரங்களுக்கு யார் பதில் சொல்றது. எங்கள நம்பி பொருளை கொடுத்து விட்டுட்டு நம்பிக்கையோடு வீட்டில உறங்கிக்கொண்டு இருக்கிறாய் அவர்களை எப்படி நாங்கள் ஏமாற்றுவது! இதெல்லாம் உனக்கு எப்படி தெரியப்போகுது! அடுத்தவன் பொருளைத் திருடி திங்கிற களவாணி கூட்டம் தானே நீங்க! உங்ககிட்ட போயி நியாயதர்மம் எல்லாம் எதிர்பார்க்க முடியுமா என்ன?"என்றான் மாரியப்பன்.

     "டேய் பொடிப் பயலே...! உனக்கு என்ன துணிச்சலுருந்தா யேங்கிட்ட இப்படி பேசுவ?  பேசாம நான் சொல்ற மாதிரி செஞ்சிட்டு போயிடு! இல்லன்னா நடக்கிறதே வேற"என இருமாப்பாய் பேசத் தொடங்கி விட்டான் தடியர்களின் தலைவன்.

     "உன்னோட உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் பயப்படற ஆளு நான் கிடையாது. உன்னால முடிஞ்சத பாத்துக்கோ"

     "சுண்டைக்காய் பயலே! யேன்கிட்டயே உன்னோட வீராப்பா காட்டுறியா? திரும்பத் திரும்ப உன்கிட்ட நான் சொல்லிக்கிட்டு இருக்க மாட்டேன்! மரியாதையா வண்டியை விட்டு இறங்கி ஓடிப்போயிடு. அதுதான் உனக்கு உன் கூட்டத்துக்கு நல்லது. தேவையில்லாம உசுர விட்டுட்டு போயிராத"

     எதுவும் பேசிக்கொள்ளாமல் மாரியப்பன் தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து வலது பக்க வண்டியோட தட்டியிலிருந்து விரட்டென்று சிலம்பு குச்சியை உருவிக்கொண்டு எதிரே நின்று கொண்டிருந்த கூட்டத்தின் தடியன் மேல் குரங்கு போல் தாவி விட்டான். திடீரென மாரியப்பன் மேலே விழுந்ததும் கூட்டத்தின் தடியன் கீழே சரிந்து விழுந்து விட்டான். தடியர்களின் தலைவன் சுதாரிப்பதற்குள் மற்ற தடியார்களை எதிர்கொள்வதற்காக சிலம்பத்தை சுழற்றத் தொடங்கி விட்டான். எதிர்பாராமல் நடந்து விட்ட திடீர் தாக்குதலால் மற்ற தடியார்களும் சிறிதும் தாமதிக்காமல் மாரியப்பனை சுற்றி வளைத்து விட்டார்கள். வலது காலை முன்னால் நகர்த்திய மாரியப்பன் அட்ட கண்ணால் மற்ற தடியர்களை அளவெடுத்துக் கொண்டே சிலம்பத்தை சுழற்றித் தாக்கத் தொடங்கி விட்டான்.

      தடியர்களின் மொத்த கவனமும் மாரியப்பன் மேல் இருந்ததால் இரண்டாவது வண்டியில் வந்திருந்த கருப்பசாமி தனது கூட்டாளிக்கு நேர்ந்த துயரத்தையும் தமது கூட்டத்தை அடுத்து எப்படி காப்பாற்றுவது என்ற யோசனையும் அவனுக்கு ஒரே நேரத்தில் தோன்றியது. தடியர்களை மாரியப்பன் பார்த்துக் கொள்வான். சிலம்பத்தில் அவனை வெல்வது எந்த கொம்பனாலும் முடியாது. பார வண்டிகளை சூதானமாக பாதையில் வெட்டி வைத்திருக்கிற குழியைத் தாண்டி கொண்டு போவதற்கு என்ன செய்யலாம் என்ற யோசனையில் இறங்கியதோடு இதனை செயலாற்றுவதற்காக மற்ற வண்டி ஓட்டிகளிடம் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.  பார வண்டிகளை அப்படியே சிறிது தூரம் பின்னால் நகர்த்தி பாதையை விட்டு சோளக் காட்டுக்குள் இறக்கி கடந்து விடும் முயற்சியில் ஒவ்வொரு வண்டியாக படிப்படியாக நகர்த்திக் கொண்டிருந்தான்.
     
     தடியர்களுடனான தாக்குதலில் மாரியப்பன் பம்பரம்வாய் சுழன்று அவர்களை தாக்கி கீழே சாய்த்துக் கொண்டிருந்தான். ஏதோ சின்ன பையன் எளிதாக தாக்கி சாய்த்து விடலாம் என்ற நினைப்பில் காலத்தில் குதித்திருந்த தடியர்களின் கூட்டம் ஏமாந்து போனது. ஏமாற்றத்தை முகத்தில் ஏந்தி கொண்டு வழி அறியாமல் வகையாக மாரியப்பன் இடம் அடி வாங்கி அலறிக் கொண்டிருந்தார்கள். திடீரென ஏற்பட்ட சிலம்பச் சண்டைகளின் காரணமாக இருண்ட பாதை முழுவதும் ஒத்தையடி பாதையில் மோகினி பிசாசு ஒன்று சலங்கை கட்டி ஆடுவது போல் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
சிறிது நேரத்திற்கெல்லாம் சிலம்பங்களின் ஓசை வலுவிழந்து காற்றில் கரைந்து கொண்டிருந்தது.

      நினைத்த காரியம் கணவாய் போனதால் அடி வாங்கிய தடியர்கள் கூட்டம் விழுந்தடித்துக் கொண்டு சோள காட்டுக்குள் ஓடி மறைந்து கொண்டிருந்தார்கள். எல்லோரும் விட்டால் போதும் என்று ஓடிவிட்டதால் தனது சிலம்பத்தை எடுத்துக்கொண்டு பார வண்டிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த மாரியப்பன் மீது சோளக் காட்டுக்குள் ஓடிக்கொண்டிருந்த தடியர்களின் தலைவன் சூரி கத்தியை பின்னால் இருந்து வீசியதால் முதுகில் சதக்கென்று குத்தியது. "அம்மா"வென்ற அலற லோடு கீழே விழுந்தான் மாரியப்பன்.


      ஒரு வழியாக சோளக்காட்டு வழியாக வார வண்டிகளை அடித்துப் பிடித்து மீண்டும் பாதைக்கு அழைத்து வந்திருந்தபோது மாரியப்பன் போட்ட அலறல் சத்தத்தால் கருப்பசாமி தன் கூட்டாளியைத் தேடி ஓடி வந்து பார்த்தபோது முதுகில் ரத்தம் பெருக்கெடுத்து தரையில் சுருண்டு மயங்கிக் கிடந்தான் மாரியப்பன். உடன் வந்த மற்ற வண்டி ஓட்டிகளும் அரிக்கன் விளக்கை எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்திருந்தார்கள்.


     " தண்ணிக்குடுவைய எடுத்துட்டு வாண்ணே"தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த வண்டி ஓட்டியிடம் சொன்னான் கருப்பசாமி.


    அரிக்கன் விளக்கின் ஒளியில் மயங்கி சுருண்டு கிடந்த மாரியப்பனை மடியில் கிடத்தினான். தலையில் கட்டி இருந்த துண்டை கிழித்து வலிந்த ரத்தத்தை துடைத்தெறிந்தான். கத்தி பாய்ந்த இடத்திலிருந்து ரத்தம் நிற்காமல் வழிந்தோடிக் கொண்டிருந்தது.  மீண்டும் மாரியப்பனை தரையில் படுக்க வைத்தவ கருப்பசாமி அரிக்கன் விளக்கை வாங்கிக்கொண்டு சோளக்காட்டுக்குள் அங்கும் இங்கும் தேடி மூலிகைகளை பறித்துக் கொண்டு வந்தவன் மாரியப்பன் முதுகில் கத்தி பாய்ந்திருந்த இடத்தின் மீது மூலிகைகளை கசக்கி சாறு பிழிந்து விட்டதோடு கத்தியை அசைக்காமல் மெல்ல உருவி எடுத்து கீழே வைத்தான். மாரியப்பன் முதுகில் கத்தி ஆழமாக பாய்ந்திருந்தது. பறித்து வந்திருந்த மூலிகைச்சாறை காயத்தின் மீது பிழிந்து விட்டான். மிச்சமிருந்த மூலிகைகளை காயத்தின் மீது வைத்து துண்டின் மீது துணியைக் கொண்டு காயத்தை சுற்றி நன்கு கட்டு போட்டு விட்டான் கருப்பசாமி.


      "இந்தா தம்பி தண்ணி"என்றவரிடம் தண்ணியை வாங்கி மாரியப்பன் முகத்தில் படீர் படீரென அடித்து மாரியப்பன் தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்தெடுத்து அவனது முகத்தை துடைத்து விட்டான். சுற்றி இருந்த மரங்களில் இருந்து வீசிய குளிர்ந்த காற்று மாரியப்பன் முகத்தில் பட்டதும் கண்ண கசக்கிக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா முழிக்க தொடங்கியிருந்தான். போன உசுரு திரும்புடுச்சுடானு நினைச்சானா என்னவோ கருப்பசாமி சுரக்குடுவையை மாரியப்பன் வாயை திறந்து தண்ணி குடிக்க வைத்தான்.


கொஞ்சம் கொஞ்சமா நினைவு திரும்பியதும் மாரியப்பனுக்கு கத்தி காயத்திலிருந்து சுளிர் துளிரினு சவுக்கால் அடித்தது மாதிரி உடம்பு பூரா வலி பரவத் தொடங்கியிருந்தது.


      "மாரியப்பா.... டேய் மாரியப்பா.... இப்போ உன்னால நடக்க முடியுமா? இல்ல நான் தூக்கிட்டு போகட்டுமா?"என்றான் கருப்பசாமி.


      "இல்ல வேணாம் டா. நானே நடந்துக்கிறேன்"என எழுந்தவனை தோள் கொடுத்து தூக்கி விட்டான் கருப்பசாமி. கூட்டாளியோடு தோள்ல சாஞ்சுகிட்டு மெல்ல நடந்து பார வண்டியிருந்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான் மாரியப்பன். மற்ற வண்டி ஓட்டிகளும் அவன் பின்னால் அரிக்கன் விளக்கு வெளிச்சத்துல நடந்துகிட்டு இருந்தார்கள்.


      வண்டி அருகே வந்ததும் கருப்பசாமி"மாரியப்பன் ஒட்டி வந்த வண்டியில நான் ஏறிக்கிறேன். என்னோட வண்டில கடைசி வண்டில துணைக்கு வந்த மாடசாமி அண்ணே ஓட்டி வரட்டும். மத்தவுக வழக்கம்போல அவங்க வண்டில வாங்க"என்றான்.


     "அப்ப மாரியப்பன் எந்த வண்டில வருவான்"என்றார் மாடசாமி.


     "மாரியப்பன் என்கூடவே வரட்டும். இப்ப இருக்க நிலைமையில் அவனால் வண்டிய ஓட்ட முடியாது. அதனால நானே என் பொறுப்பில் அவனை பார்த்துக்கொள்கிறேன். நாம வழக்கமா போற பாதையில போகாம குறுக்குப் பாதையில புகுந்து தேனி சந்தைக்கு போலாம். அப்பதான் வீடியோ காத்தால போய் சேர முடியும். மேலும் மாரியப்பனுக்கு வைத்தியம் பாக்கணும். இப்படியே விட்டமுனா கத்தி காயம் ஆள கொன்னுபுடும்"


     "நீ சொல்றதும் சரிதான் தம்பி. நேரத்துக்கு தகுந்தபடி நம்ம மாற்றுப் பாதையில போக வேண்டியது தான். ஏற்கனவே போன வாரம் தாமதமா போனதுனால கடைக்காரங்க எல்லாம் முகம் சுளிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதனால இந்த வாட்டி சரியான நேரத்துக்கு போய்./.... சேரணும். நம்மள நம்பி பொறுப்பு கொடுத்து இருக்கவங்களுக்கு அப்பத்தான் நம்ம மேல நம்பிக்கை வரும். எடுத்த காரியத்தை செவ்வனே செஞ்சு முடிக்கணும். நம்ம பொழப்பு இதுல தான் இருக்கு. நாணயம் கெட்டுப் போயிட்டா நம்ம பொழப்பு ஓடாது"என்றார் மாடசாமி.


      "அதெல்லாம் இந்த முறை எந்த தவறு நடக்காதுண்ணே. திடீர்னு எதிர்பாராத சம்பவம் நடந்து போச்சு. இல்லாட்டி இந்நேரம் பாதி தூரம் கடந்து இருப்போம். எல்லாம் நம்ம நேரம் காலம். அதுக்கு என்ன செய்ய முடியும். அந்த மட்டிலும் மாரியப்பன் ஓட துணிச்சலால் நம்ம பொருளையும் உசுரையும் இன்னைக்கு காப்பாத்திக்கிட்டோம். இல்லன்னா என்ன பண்ணி இருப்போமோ.... நினைக்கும்போதே நெஞ்சுக்குள்ள அறுக்குது"என்றான் கருப்பசாமி.


    "நீ சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை தம்பி. யாருமே மறுக்க முடியாது. தலைக்கு வந்தது தலப்பாகையோடு போயிருச்சுன்னு நினைச்சுக்க வேண்டியது தான்" என்றார் மூன்றாவதாக வந்த வண்டியோட்டி.


     "இந்த ஆத்துவான காட்டுல பேசிக்கிட்டே நிக்க வேண்டாம். சட்டுபுட்டுன்னு எல்லாரும் வண்டில ஏறிக்கோங்க இந்த இடத்தை விட்டு சீக்கிரம் கிளம்பிடலாம்"என்றான் கருப்பசாமி.


      மாரியப்பனை அவனது வண்டியில் ஏற்றி பாதுகாப்பாய் அமர வைத்துவிட்டு கருப்பசாமி வண்டியில் ஏறி செவலக்காளைகளை பதமாக ஓட்ட தொடங்கினான். மற்ற வண்டிகளும் அவனது போக்குக்கு ஏற்ப இருளை துரத்திக் கொண்டு ஓடத் தொடங்கியிருந்தது. 


      கிழக்கு வெளுத்துக் கொண்டிருந்தது. தேனி சந்தைக்குள் நான்கு மாட்டு வண்டிகளும் நுழைந்தன. ஏற்கனவே வரிசை கட்டி நின்று கொண்டிருந்த வண்டிகளுக்கு பின்னால் மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தன. பாரம் இறக்க வேண்டிய கடைகளின் முன்பாக ஒரு வழியாக நாலு வண்டிகளும் வந்து சேர்ந்தன. மூட்டைகளை இறக்கி எண்ணி கணக்குகளை சரியாக ஒப்படைத்து விட்டோம் என்ற நம்பிக்கையில் வேகமாக திரும்பிக் கொண்டிருந்தான் கருப்பசாமி. வந்தவனின் வேகம் சட்டெனத் தடைப்பட்டது. இறக்கிய மூட்டைகளை எடை போட்டு பார்த்துக் கொண்டிருந்தார் துரைசாமி. திடீரென சந்தேகம் வந்ததால் ஒரு மூட்டையை பிரித்து பார்த்தவரின் முகத்தில் ஏமாற்றம் பரவிக் கிடந்தது. மூட்டைக்குள் கையை விட்டு உள்ளே இருந்த பஞ்சை அள்ளி கருப்பசாமியிடம்  காண்பித்தபோது கருப்புசாமி முகத்தில் இருள் அப்பிக் கொண்டது.

     


   

பகுதி 02 - யாழிசைசெல்வா

 

பகுதி 02

     "ஏண்டா மாரியப்பா... இன்னைக்காவது பருத்தி தேனிச் சந்தைக்கு போயிருமா....? இல்ல போன வட்டம் மாதிரி தாமதமாகத்தான்  போகுமா....?"பருத்தி எடை போடுவதை ஏதோ புதுசா பாக்கிற மாதிரி பார்த்துக்கிட்டு நின்னுட்டுயிருந்த மாரியப்பனிடம் கேட்டார் குருசாமி.

    "அதெல்லாம் சீக்கிரம் போயிரும் மாமா.... போன வட்டம் கொஞ்சம் தாமதமாயிருச்சு.... அதுக்காக இந்த வட்டம் விட்டுற முடியுமா...." தலையில் கட்டி இருந்த துண்ட உதறி திண்ணையில விரிச்சு உட்கார்ந்துகிட்டே சொன்னான் மாரியப்பன்.

   தலையில தேச்சதால முகத்துல வழிஞ்சிகிட்டு இருந்துச்சா இல்ல முகத்தில் வழிஞ்சதை அள்ளி தலையில தேச்சிகிட்டானா என கண்டுபிடிக்க முடியாத மாதிரி எப்பவும் எண்ணை வடிகிற முகம் மாரியப்பனோடது. வண்டி மை மாதிரி கருத்த நிறம். ஊர காக்குற அய்யனார் மாதிரியான வலுவானா உடம்பு. இருட்டுல அவன் மனுசங்கறத கண்டுபிடிப்பதற்காக படைக்கப்பட்ட மாதிரி கோழி முட்டைக்கண்ணு. பலாச்சுளை உதடு. அருவா மீசை. மழை தண்ணி தீண்டுன மாதிரி சில்லுனு ஒரு பார்வை. சுழட்டிவிட்ட பம்பரம் மாதிரி எப்போதும் சுறுசுறுப்பு. சுருக்கமா சொல்லணும்னா குருசாமிக் குடும்பரோட நிழல். அவரோட கூடப்பிறந்த அக்கா சீலக்காரியோட ஒரே மகன்தான் மாரியப்பன்.

     "டேய் மாரியப்பா...."

      "சொல்லு மாமா..."

      "பருத்தி மூட்டை எல்லாம் ரெடியாயிருச்சான்னு பாருடா...."

     "இதோ பாக்குறேன் மாமா" தின்ணையிலிருந்து எழுந்து வீட்டுக்குள் நுழைந்தான். வீட்டின் பட்டாசலையில எடை போட்ட பருத்தி மூட்டைக வரிசையா அடுக்கி கிடந்தது. அதுக்கு பக்கத்துலயே உத்திரத்தில தராசுகட்டி தொங்கவிட்டு பருத்தி அள்ளி நாலைந்து பேரு எடை போட்டுக்கிட்டு இருந்தார்கள். எடை போட்ட பருத்திய முட்டையில் அள்ளி ரெண்டு பேரும் தினிச்சப்ப சாக்கு நிறைந்துவிட்டது. உடனே ஆளுக்கு ஒரு பக்கமா கோணிச்சாக்க தூக்கி பிடிச்சு தரையோடு அடிச்சு பருத்தி சாக்குல இறங்கியதும் மீண்டும் பருத்தி அள்ளித் தினுச்சு நிரப்பிக் கொண்டிருந்தார்கள். மாறி மாறி ஒவ்வொரு மூட்டைக்கும் இதே போல வேலை நடந்துக்கிட்டு இருந்தது.

       உத்திரத்தின் ஒரு ஓரத்தில் அரிக்கன் விளக்கு மலையில் மறைஞ்ச சூரியனோட வெளிச்சத்தை கண்ணாடிக்குள்ள சிறைபுடிச்ச  மாதிரி எரிந்துகொண்டு இருந்தது. அதோட திரிய தூண்டிவிட்ட மாரியப்பன் "அண்ணாச்சி வேலையெல்லாம் எப்ப முடியும்? மாமா கேட்டுட்டு வரச் சொன்னாரு?"

    "அதிகபட்சம் இன்னும் இரண்டு மூட்டை பருத்தி சேருமுன்னு நினைக்கிறேன் மாரியப்பா.... எப்படியும் ராத்திரி வண்டியைக் கிளப்பிற வேண்டியதுதான்" பருத்தியை மூட்டைகள் திணித்துக் கொண்டே சொன்னான் முருகன்.

     "அப்பன்னா சரிதான் அண்ணாச்சி" பருத்தி மூட்டை மேல மையால அடையாளக் குறி போட்டு அதுக்கு பக்கத்திலேயே மூட்டையோட எண்ணிக்கையும் வரிசைப்படி  ஒரு ஆள் எழுதிக்கிட்டு இருந்தத பாத்துக்கிட்டே திண்ணைக்கு வந்து சேர்ந்தான் மாரியப்பன்.

     "இன்னைக்கு ராத்திரி புறப்பட்றலாம் மாமா. ஏறக்குறைய எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சு. பருத்தி மூட்டை மேல அடையாளக் குறியும் போட்டாச்சு"

       குருசாமி  எல்லா நேரமும் வெத்தலை போடுவதில்லை. வேலையெல்லாம் முடிந்துவிட்ட திருப்தி அவர் மனதில் தோன்றும் போது மட்டுமே போட்டுக் கொள்ளும் பழக்கம் இருந்தது. குறிப்பரிந்து கொண்ட மாரியப்பன் மறுபடியும் திண்ணையில் அமர்ந்து கொண்டு குருசாமி குடும்பர் வெத்தலை போடும் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

      வெத்தல போடுறத சிற்பி சிலையை செதுக்குற மாதிரி  நுணுக்கமா எப்பவுமே செய்யக் கூடியவர் தான் குருசாமி குடும்பர். அவர் வெத்தல போடுறதுலையேயும் ஒரு பக்குவம் இருந்தது. நல்ல விளைஞ்ச சுருள் பாக்க எடுத்து கட வாயில போட்டு கடார் கடார்னு அதை மென்னு தூளாக்கி தன்னுடைய எச்சிலோடு சேர்த்து நல்லா ஊற வச்சதும் ஒரு பக்குவம் வந்துடும். அதுக்குள்ளவே ஒவ்வொரு வெத்தலையா எடுத்து அதோட முன் பக்கத்தையும் பின்பக்கத்தையும் தன்னோட தொட வேட்டியில் வச்சு தொடச்சிட்டு காம்பக் கிள்ளி பக்கத்துல வச்சுட்டு, சுண்ணாம்ப எடுத்து பதமா பின் பக்கமும் முன்பக்கமும் பட்டும் படாமலும் தடவி மடிச்சு வாயில போட்டு மெல்லும் போது ரத்த சிவப்புல எச்சில் ஊரி உதடு முழுவதும் பனி போல் படரும் அழகே தனி தான்.  "யாரு வேணுமுன்னுடாலும் வெத்தல போடலாம் ஆனா யேன் மாமன் மாதிரி அத்தனை அழகா லட்சணத்தோட யாருமே போட முடியாது" என அந்த அழகை ரசிப்பதற்கே ஊருக்குள் ஒரு பெண்கள் கூட்டம் இருந்தது.

       "மாரியப்பா..."

        "சொல்லு மாமா!"

        "பருத்தி பெறக்கும்போது காளியம்மா புள்ளைக்கு பருத்திக்கூடு காலுல குத்திருச்சுன்னு செல்லம்மா சொல்லுச்சுடா. அந்த புள்ளைக்கு இப்ப எப்படி இருக்குன்னு ஏதாவது தெரிஞ்சுகிட்டியா..."

     "அதுக்கு அப்பவே செல்லம்மா மூலிகை வைத்தியம் பார்த்துடுச்சு மாமா. இப்ப கொஞ்சம் பரவாயில்லை என்றுதான் கேள்விப்பட்டேன்"

    "உண்மைய தான் சொல்லுறியா.... " சந்தேகத்தோட மாரியப்பனப் பார்த்தவர் "எதுக்கும் ஒரு எட்டு போயி என்ன விவரமுன்னு கேட்டுட்டு வந்துடுரியா...." எனக் கேட்டார்.

     "இப்படியெல்லாம் நீங்க கேப்பீங்கன்னு எனக்கு தெரியும் மாமா.... அதனாலதான் நானே இங்க வாரதுக்கு முன்னால விசாரிச்சு தெரிஞ்சுகிட்டேன். பெரிய காயம் எல்லாம் எதுவும் இல்ல மாமா. செல்லம்மா ஏற்கனவே மூலிகை பறித்து கொடுத்துவிட்டுருக்கு. அதை ரெண்டு நாளைக்கு காயத்து மேல புழிஞ்சு விட்டாலே போதும்.... காயம் தன்னால் ஆறிப் போயிடும். இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா என்ன? ஏதோ புதுசா கண்டது மாதிரி பேசுறீங்க"

     "அதுக்கு இல்லடா.... குமரி புள்ளைங்க. நம்ம தோட்டத்துக்கு வந்து எதுனாலும் நடந்துச்சுன்னா அதுக்கு நாம தானே பொறுப்பு. அது மட்டும் இல்லாம செல்லம்மா மேல எப்படா சேத்த வாரி இறைக்கலாம்னு ஒரு கூட்டம் காத்து கிடக்கு. அதுக்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. ஏற்கனவே அந்த புள்ள தாயை பறி கொடுத்துட்டு தவிச்சு நிக்குது. நாமதானே அந்தப் புள்ளைக்கு ஒத்தாசையா இருக்கணும்"

     "மாமேன் சொல்லுக்கு மறு பேச்சு உண்டா என்ன?"தலையாட்டி ஆமோதித்தான் மாரியப்பன்.

      மாரியப்பனை பார்த்து சிரித்துக் கொண்டே "இந்த வாட்டி தேனி சந்தைக்கு‌ வழக்கம் போல தானே வண்டி கட்டி போகப் போற...."

     "என்ன மாமா புதுசா கேக்குற மாதிரி கேக்குறிக.... வளமை போல தான் மாமா இப்பவும்... "

    "சரி மத்த வண்டிக்காரங்களுக்கு எல்லாம் சொல்லிட்டியா...."

     "யேன் மாமனுக்கு இன்னைக்கு என்ன ஆச்சு? எப்பவுமே இப்படி சந்தேகத்தோட கேட்க மாட்டீங்களே! இன்னைக்கு ஒவ்வொன்னையும் புதுசா கேக்குற மாதிரி கேட்டுக்கிட்டு நிக்கிறீங்க. யேன் மாமா என் மேல எதுவும் சந்தேகம் வந்திருச்சா என்ன?"

     "தன்னோட நிழலை யாராவது சந்தேகப்படுவாங்களாடா....."

     "அப்புறம் ஏன் மாமா... இன்னைக்கு புதுசா இத்தனை கேள்வி கேக்குறிங்க?"

     "என்னமோ தெரியலடா.... மனசுல ஒரு மாதிரி படபடப்பா இருக்கு. ஒரு நாளும் எனக்கு இப்படி இருந்ததில்லை.... அதுதான் ஒவ்வொன்னையும் எனக்கு கேட்கத் தோணுது. சூதானமா போயிட்டு வரணும்டா... நீ திரும்பி வரும் வரைக்கும் எனக்கு நிம்மதியே இருக்காது பார்த்துக்கோ"

     "நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க மாமா. எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். மனசுல கலக்கம் இல்லாம அய்யனார்சாமி மேல பாரத்தை போட்டுட்டு நிம்மதியா படுத்து தூங்குங்க..."

      " சரி நீ ஏதாவது சாப்பிட்டியா இல்லையா.... நீ போயி சாப்பிட்டு வாடா. நான் இங்க இருக்கேன்"

      சரி என தலையாட்டிவிட்டு எழுந்த மாரியப்பன் "இந்தெ அம்மாவே வந்திருச்சுங்க மாமா"
  
      "மாமனுக்கு மருமகனுக்கும் வேலைன்னு வந்துட்டா நேரம் போறதே தெரியாது! அதுதான் நானே  சோத்த எடுத்துக்கிட்டு வந்துட்டேன்! சரி வாங்க ரெண்டு பேரும் கை கால கழுவிட்டு வந்து சாப்பிடுங்க"எனச் சொல்லிக் கொண்டேன்  தூக்குவாளியில் கொண்டு வந்த கேப்பைக் களியை வெங்கல கரண்டியில் எடுத்து இரண்டு கும்பாவில் அள்ளிப்போட்டு கிண்ணத்தில் கொண்டு வந்திருந்த கருவாட்டு குழம்பு ஊற்றி வைத்தார் சீலக்காரி.

      திண்ணையில் ஏறி சம்மனங்கால் போட்டு அமர்ந்து கொண்டு "என்னம்மா சோறு கொண்டு வந்து இருக்கேன்னு சொன்ன... இங்க பார்த்தா கும்பாவுல கேப்பை களி இருக்கு.... இதுக்கு பேரு தான் சோறா..."என விளையாட்டுத்தனமா தன் அம்மா சிலக்காரியைப் பார்த்துச் சொன்னான் மாரியப்பன்.

    "டேய் வர வர உனக்கு குசும்பு அதிகமாயிருச்சுடா. எல்லாம் உன் மாமன் கொடுக்கிற இடம். ஐயா துறைக்கு தினசரி சோறு வடிச்சு கொட்டினால் தான் தொண்டையில் இறங்குமோ.... யேன்! துரை கேப்பை களி எல்லாம் சாப்பிட மாட்டாரோ....?" என மகனைப் பார்த்து போட்ட சத்தத்தில் காதில் கிடந்த தங்கத்தாலான தண்டட்டி  இடம் வலமாய் ஆடிக் கொண்டிருந்தது.

      "உனக்கு வயசாகி போயிருச்சு! பச்ச நெல்லு குத்தி சோறாக்க உன்னால முடியலன்னு சொல்லு! அதனால  கேப்பயைய திருச்சு களி கிண்டிட்டே. அதுதான உண்மை. அதை மறைக்கிறதுக்கு என்ன விரிச்சிக்கிட்டு இருக்க...."

    "டேய் உன்ன...." எனச் சொல்லிக் கொண்டு தூக்குவாளி மூடியைத் தூக்கி மகன் மேல் விட்டெ எறிந்தாள் சீலக்காரி. பெத்தவளோட ஒவ்வொரு அசைவையும் உணர்ந்திருந்த மாரியப்பன் சிலக்காரி கையை தூக்கியதுமே படக்குனு கீழே குனிஞ்சுதால ஒக்காந்திருந்த தின்ன சுவத்து மேல தூக்குவாளி மூடி பட்டு தெறிச்சி வந்து கீழ விழுந்து உருண்டுகிட்டு இருந்தது.

     நடக்கிறது அதுவரைக்கும் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்த குருசாமிக் குடும்பர் "என்னக்கா.... அவெஞ்சர் சின்ன பையன் எதாவது விளையாட்டுக்கு சொன்னான்டா. நீயும் அவ மேல தூக்குவாளி மூடியை தூக்கி எரியிற. புள்ளைக்கு படாத இடத்துல பட்டு ஏதாவது ஆயிட்டா என்ன பண்ணுவ? எதையும் யோசனை பண்ணிச் செய்யுக்கா...."

     "அட நீ வேற.... இவனப் பத்தி எனக்கு தெரியாதா... கழுவுற மீன்ல நழுவுற மீனு இவன். பார்த்தையில. தூக்குவாளி மூடி கீழ உருண்டு கிட்டு கெடக்கு. அவன்  அவன் பாட்டுக்கு கும்பாவுல போட்ட களிய முழுசா முழுங்கிட்டு நிக்கிறான் பாரு.... "என்றவர் மாரியப்பன் பார்த்து"கும்பாவை கொண்டாட.... இன்னும் கொஞ்சம் களி போடுறேன். நல்லா தின்னு புட்டு அப்பத்தான ஆத்தாவை திமிரா பேச முடியும்...." எனச் சொல்லிக் கொண்டே  தூக்கம்வாளியிலிந்த  களியை மாரியப்பனோட கும்பாவில் அள்ளிப்போட்டு கருவாட்டுக் குழம்பு எடுத்து ஊற்றினார் சீலக்காரி.

       "ஏம்மா பூராத்தையும் எனக்கே அள்ளி போட்டுட்டியே. மாமாவுக்கு இன்னும் கொஞ்சம் போட வேண்டியதுதானே"

     "யேன் தம்பி எவ்வளவு சாப்பிடுவான்னு எனக்கு தெரியும். அதே மாதிரி நீ எவ்வளவு திம்பங்கறதுமா எனக்கு தெரியும். அதனால போட்டதை தின்னுகிட்டு பேசாம இரு..."

     சாப்பிட்டு முடித்து தின்ணை  ஓரத்துக்கு சென்றபோது அங்கு தயாராக வெண்கல அண்டா நிறைய தண்ணீரும் அதற்குள்ளாக வெங்கல செம்பும் மிதந்து கொண்டிருந்தது. வெங்கல செம்பில் தண்ணீரை மோந்து கைகழுவி வாய் கொப்பளித்து விட்டு திரும்பிய போது சீலக்காரி கையில் வெள்ளை துண்டோடு நின்று கொண்டிருந்தார்.

     "நீ எதுக்குக்கா எடுத்துட்டு வந்தெ? நானே எடுத்துக்க மாட்டேனா?"எனச் சொல்லிக் கொண்டே துண்டால் கை வாயைத் துடைத்துக் கொண்டு மறுபடியும் திண்ணையை நோக்கி நடந்தார். சிலக்காரியும் அவர் பின்னாலையே வந்து கொண்டிருந்தார்.

      "யேன் குருசாமி! இன்னைக்கு ராத்திரி பருத்தி மூட்ட தேனி சந்தைக்கு போகுதா?"

      "ஆமாம் அக்கா! போன வாரம் ரொம்ப தாமதமாகத்தான் அனுப்பி வச்சோம். அதனால இந்த முறை சரியான நேரத்துக்கு அனுப்பி வைக்கணும். இல்லாட்டி நம்ம மேல இருக்க நம்பிக்கை செத்துப் போய்விடுமில்லக்கா... கால நேரத்தோட எதையும் சரியா செஞ்சிரனும். அதுதான் உள்ளாரா வேற சுறுசுறுப்பா நடந்துகிட்டு இருக்கு"

     "நீ சொல்றது சரிதான்! நாம செஞ்சுகிட்டு வர தொழிலுல சரியான சமயத்துல அதை செய்ய முடியலன்னா நமக்கு கெட்ட பேரு வாரதோட நிக்காம. நம்ம மேல இருக்க நம்பிக்கையும் செத்துப் போயிடும். ஊருக்குள்ள நமக்குன்னு ஒரு பேரு வேற இருக்கு. அந்தப் பேரு நாம நடந்து கிட்ட நடத்தையால் கிடைத்தது. அதனாலதான் நமக்கும் மரியாதை இருக்குது. எல்லாத்தையும் திட்டமிட்டபடி நீ சரியாத்தான் செஞ்சுகிட்டு இருக்க. அதை அப்படியே தொடர்ந்து செஞ்சிடுவேன்கிற நம்பிக்கை எனக்கு எப்போதும் இருக்கு" என்றவர் தன் தம்பி குருசாமியை பெருமிதமாக பார்த்தார் சீலக்காரி.

    அதற்கிடையில் வீட்டுக்குள்ளே வேலை செய்து கொண்டிருந்த ஆட்கள் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்து சோம்பல் முடித்துக் கொண்டு நின்றார்கள். அவர்களை விளக்கிக் கொண்டு  முன்னே வந்த முருகன் "ஐயா வேலையெல்லாம் முடிச்சாச்சு! மாட்டு வண்டி வந்துருச்சுன்னா மூட்டைய அதுல ஏத்தி விட்டுரலாம்"என குருசாமியைப் பார்த்து சொல்லிவிட்டு தலையில் கட்டியிருந்த துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டான் முருகன்.

     முருகன் சொன்னதை கேட்டதும் அதுக்காகவே காத்திருந்த மாரியப்பன் வீட்டின் கொல்லைப்புறத்திற்கு ஓட்டமும் நடையுமாக வந்தடைந்தான். கட்டு தரையில் கட்டியிருந்த காளை மாடுகளை அவிழ்த்துக்கொண்டு அங்கிருந்த மாட்டு வண்டியில் காளைகளை நுகத்தடியில் பூட்டிக்கொண்டதோடு மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு வாசல் பக்கமா வந்து பருத்தி மூட்டைகளை ஏற்றுவதற்கு தோதாக வண்டியைக் கொண்டு வந்து நிறுத்தினான்.  தேனி சந்தைக்கு கூட வரும் மற்ற வண்டிகளின் நிலைமை என்ன? எப்ப வரும்? எல்லா வண்டிகளும் தயாரா இருக்கா? யார் யார் வாறாக?  தாமதமானா மாமன் நம்மளத்தே துருவித் துருவி கேட்பாரு. அதோட நெலவரம் என்னன்னு பார்த்திட்டு வந்திரலாம்.அப்பதே நிம்மதியா வேலையப் பாக்க முடியும். பல்வேறு விதமான கேள்விகள் அவனது மண்டையை குடைந்து கொண்டிருந்தது. அதையெல்லாம் தெரிஞ்சுகிறது ரொம்ப அவசியம். முதல்ல அதை போய் பாக்கணுமென்ற யோசனையோடு அங்கிருந்து நகர்ந்திருந்தான் மாரியப்பன்.  நடக்கிற ஒவ்வொரு நிகழ்வையும் அருகிலிருந்து கவனமாக பார்த்துக் கொண்டிருந்தார் குருசாமி.

      முருகனும் மற்ற வேலை ஆட்களும் அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை தொடங்கியிருந்தார்கள். இரண்டு பேர் பருத்தி மூட்டைகளை தூக்கிக் கொண்டு வந்தபோது மாட்டு வண்டி மேல் இரண்டு பேர் நின்று கொண்டு அதனை வாங்கி வரிசையாக அடுக்கிக் கொண்டிருந்தார்கள். முதலில் குறுக்கு வாக்கில் பருத்தி மூட்டைகளை அடுக்கியவர்கள் அதன் பின்பு நீளவாக்கில் அதன் மேல் அடுக்கிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு குட்டி மலையைத் தூக்கி மாட்டு வண்டியில் வைத்தது போன்ற தோற்றத்தை பார்ப்பவர்களுக்கு தந்திருந்தது.  வாரம் வாரம் சந்தைக்கு பருத்தியை அனுப்பும் வாடிக்கையான நிகழ்வு என்றாலும் இன்று தான் புதிதாய் நடப்பது போலும் அதனைப் புதிதாய்ப் பார்ப்பது போல் வச்சகண் வாங்காமல் ஒவ்வொன்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் குருசாமி!

      அதற்கிடையில் தேனிச் சந்தைக்கு போகும் மற்ற மாட்டு வண்டிகளின் வண்டிச்சக்கரம் உருண்டோடும் சத்தமும் காளை மாடுகளின் குலம்பொலிச் சத்தமும் இதோ வந்துட்டேன்னு தெருவில் எதிரொலித்துக் கொண்டிருந்தது! வண்டிகளுக்கு முன்பாக வேகு வேகென்று கைகளை வீசிக்கொண்டு முன்னால் வந்து கொண்டிருந்தான் மாரியப்பன். சிறிது நேரத்திற்கெல்லாம் மாட்டு வண்டிகளின் சக்கரம் 'கடகடவென்ற' சத்தத்தோடு பலமாக ஒலித்துக் கொண்டு தெருவின் முனையைக் கடந்து குருசாமி வீடருகே வந்து நின்றது!

      மொத்தமாக நான்கு மாட்டு வண்டிகள் வந்திருந்தன. ஒவ்வொன்றும் பெரும் பெரும் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்து சேர்ந்திருந்தன. அதில் முதல் வண்டியில் வண்டி ஓட்டியாக இருந்தவனை பார்த்த குருசாமி "ஏண்டா கருப்பசாமி! இன்னைக்கு நீதான் வண்டி ஓட்டி வந்திருக்க போல! ஏன் உங்க அப்பேன் வரலையா? அவனுக்கு என்ன ஆச்சு? சின்னப்பய உன்னை அனுப்பி வச்சிட்டு அவன் வீட்ல என்ன செஞ்சுகிட்டு இருக்கான்"

       "அப்பா வரல பெரியப்பா!  அப்பா அப்பவே சொன்னாரு. குருசாமி கிட்ட போயி என்ன திட்டு வாங்க வைக்காத, பேசாம வீட்டுல கிட நான் போயிட்டு வாரேன்னு சொன்னாரு. நான்தான் பிடிவாதமா அவரு கூட சண்டை போட்டுட்டு வண்டிய ஓட்டிக்கிட்டு வந்துட்டேன்"

      "உன்னோட கூட்டாளி மாரியப்பன் போறேன்னு சொல்லி, நீயும் துணைக்கு கிளம்பிட்டியாக்கும், ரெண்டு பயலும் ஒன்னா சேர்ந்துகிட்டு பண்ற சேட்டை இருக்கே. தாங்க முடியலடா. சொன்னா எங்க கேக்க போறீங்க"

     "அப்படிலாம் இல்ல பெரியப்பா. நீங்க இருக்கும் போதே நாலு விஷயத்தை கத்துக்குறாம நாங்க எப்ப கத்துக்க போறோம். உங்க காலத்திலேயே நாங்க கொஞ்சம் வளர்ந்து ஆளாகிக்கிட்டோம்னா அதுக்கு பிறகு எங்க பொழப்பு ஓடிருமில்ல. அதுதான் நாங்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கோம்"

     "நல்லா சாமர்த்தியமா பேசுற டா. நீ பொழச்சுகுவடா.... ரெண்டு பயல்களும் கவனமா போயிட்டு திரும்பி வரணும். இடையில எந்த சேட்டையும் பண்ணக்கூடாது. காலம் கெட்டு கிடக்கு. பார்த்துச் சூதானமா இருக்கணும்"

     "சரிங்க பெரியப்பா"

     "வீட்ல சாப்பிட்டு வந்தியா இல்லையா?"

      "பச்ச நெல்லுச் சோறாக்கி அம்மா தந்தாங்க பெரியப்பா..."

     "மாமா..."என மாரியப்பன் வந்து நின்றான்.

     "சொல்லுடா என்ன வேணும்?"

      "வண்டில எல்லாத்தையும் ஏத்தியாச்சு மாமா! நீங்க சொன்னா கிளம்ப வேண்டியது தான்"

     "மாட்டுக்கு வேண்டிய தீவனத்த எல்லாம் எடுத்து வச்சுக்கிட்டியா?"

     "எல்லாம் தயாரா இருக்கு மாமா"

     இருவரும் அவர்களது வண்டியை நோக்கி சென்றார்கள்.

    வண்டியில் ஏற்றிய பருத்தி மூட்டை அசைந்து விடாமல் இருப்பதற்கு கொச்சை கயிறு கொண்டு குறுக்காகவும் நெடுக்காகவும் தறியில் துணி நெய்வது போல் இழுத்துக் கட்டி வைத்திருந்தார்கள்! வெறும் வண்டியாக இருந்தபோது தோளை நிமிர்த்தி கொண்டிருந்த செவலக் காளைகள் பாரம் ஏத்தியதும்  மொத்த எடையும் காளையின் கழுத்தில் விழுந்து விடாமல் இருப்பதற்காகவும் எடையை சமப்படுத்துவதற்காகவும் பரவலாக மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தார்கள். மாட்டு வண்டியின் பின்பகுதியில் குடைவண்டி தூக்காமல் இருப்பதற்காக நீளமான கட்டை ஒன்று தரையை விட்டு சிறிது உயரத்தில் தொங்கும்படி கட்டப்பட்டிருந்தது! வண்டி ஓட்டியின் அமருமிடத்திற்கு கீழ்பகுதியில்  பயணம் செய்யும் வழிப்பாதை காட்டுவதற்கும் சாலையின் பள்ளமேடு அறிந்து மாட்டு வண்டி ஓட்டுவதற்கு வசதியாக அரிக்கன் விளக்கு ஒன்றும் எரிந்து ஒளி தந்த வண்ணமிருந்தது.

     அடைகாக்கும் கோழி தன் முட்டையிலிருந்து பொறிந்து குஞ்சுகளை கவனமாக  வெளியே கொண்டு வருவதற்கு எடுக்கும் அத்தனை  முயற்சிகளையும் குருசாமி பின்பற்றி அனைத்து வண்டிகளையும் கவனமாக சோதித்துக் கொண்டிருந்தார். ஒரு வழியாக திருப்தி அடைந்து மாரியப்பன் அருகே வந்து நின்றார் குருசாமி.

     "டேய் மாரியப்பா! நான் ஏற்கனவே சொன்னது மாதிரி கவனமா போயிட்டு வரணும். விளையாட்டுத்தனமா இருக்கக் கூடாது. போற காரியத்துல மட்டும் தான் கண்ணா இருக்கணும். மத்த விவகாரத்தில் எதுலயும் தலையிடக்கூடாது. உன்ன நம்பி உன் கூட்டாளி கருப்பசாமி வந்திருக்கான். நம்மள நம்பி வந்தவங்க உசுருக்கு நாம தான் பொறுப்பு. அதை எப்பவும் நீ மறந்து விடக்கூடாது. மற்ற வண்டிகளோட சேர்ந்துதான் எப்பவுமே பயணம் செய்யனும். கூட்டத்தை விட்டு வண்டிகளை தனியா ஓட்டிப் போகக்கூடாது. தேனி சந்தைக்கு போகிற வரைக்கும் ஒரே மாதிரி ஒரே வேகத்துல ஒத்துமையா போய் வரணும். வழக்கம் போல துரைசாமி மச்சான் கடையில நம்ம பருத்தி முட்டையை போட்டுறு"

     "வளக்கமா போடுற கடைதானம் மாமா! இது நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியணுமா என்ன? எல்லாத்தையும் நான் பார்த்துகிறேன் மாமா. நீங்க கவலைப்படாம படுத்து தூங்குங்க. துணைக்கு என் கூட்டாளி கருப்பசாமி வேற இருக்கான். அப்புறம் கவலை எதுக்கு உங்களுக்கு. அது மட்டும் இல்லாம மத்த வண்டிக்காரன் துணைக்கு இருக்காங்கல்ல. அப்புறம் எதுக்கு பயப்படனும் மாமா"மாரியப்பன் ஓட கண்ணில் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் மின்னலாய் ஒளியடித்தது.‌ அதன் பிறகு குருசாமிக் குடும்பர் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

      சீலக்காரி நன்கு முற்றிய தேங்காய் , சூடம் தீப்பெட்டி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வந்து குருசாமிக் குடும்பரின் கையில் கொடுத்தார். அதனை எடுத்துக் கொண்டு மாட்டு வண்டியின் முன்பாக சென்றார். மாரியப்பன் மாட்டுவண்டியில் ஏறி அமர்ந்து கொண்டு கையில் சாட்டை கம்பை ஏந்திக்கொண்டு புறப்பட தயாராக இருந்தான்.  குலசாமி அய்யனாரை நினைத்துக் கொண்டு சூடத்தை தேங்காயின் காம்பு பகுதியில் வைத்து தீப்பெட்டி கொண்டு பற்ற வைத்து அப்படியே கையை தூக்கி மூன்று சுற்று சுத்தியனார். அப்படியே ஓங்கிய கையை இறக்காமல் தேங்காயை தரையில் அடித்ததும்  தேங்காய் சில்லு சில்லாக சிதறி நாளாபுரம் பரவியது. அவரது மனதிற்குள்மனதிற்குள் ஒரு திருப்தி பரவத் தொடங்கியது. அப்படியே இடது புறமாக நகர்ந்து  குருசாமிக் குடும்பர் கொண்டதும் மாரியப்பன்  செவலக்காளைகளை பிடித்திருந்த மூக்கணாங்கயிறை சுண்டியதோடு மாடுகளின் பிட்டத்தில் கால் கட்டை விரலால் நெம்பியதும் மாட்டு வண்டி கடகடவென்று உருண்டோடத் தொடங்கியது. சீலகாரியும் குருசாமிக்குடும்பரும் நான்கு மாட்டு வண்டிகளும் தெருவின் முனை கடந்து மறையும் வரை வட்சகன் எடுக்காமல் பார்த்துக்கொண்டே நின்றிருந்தார்கள். சீலக்காரியின் கண்கள் மட்டும் அந்த வாடை காற்றிலும் துளிர்த்திருந்தன.

     
    

     

    

    


Monday, 7 July 2025

       வாசலில் பத்தடி உயரத்திற்கு மேல் வளர்ந்து கிளை பரப்பி நின்ற வேப்ப மரத்தின் நிழலின் ஆளுமையில் வீட்டின் முன்பகுதி கோடை காலத்தின் மதியான வேளை என்பதையும் மறக்கடித்திருந்தது. வேப்ப மரத்தின் குளிர்ந்த காற்று இதமாக வீட்டின் வாசல் தாண்டி உள்ளே நுழைந்து கொண்டிருந்தது. வேப்ப மரத்தின் கிளைகளில் அமர்ந்ததோடு வேப்பம்பழத்தினை தன் அழகால் கொத்தி ருசித்துக் கொண்டிருந்த காகம் ஒன்று விருட்டெனச் சிறகடித்து மேற்கே சென்றதையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் சண்முகம். மழைநீர் அரித்ததால் வெளியே தெரிந்த வேப்ப மரத்தின் வேர்களில் ஒன்று நீண்டு பரவி இருந்த இடத்தின் முடிவில் சிறியதொரு கழிவறை கட்டப்பட்டிருந்தது. சிறிய பித்தளை அண்டாவின் முக்கால் பகுதி தேங்கிய தண்ணீரில் தன் அடிப்பகுதி நெளிந்த அடையாளத்தைக் காட்டிக்கொண்டு செம்பு மிதந்தது.


Saturday, 5 July 2025

ஆள் மயக்கும் பணம் - கவிஞர் யாழிசைசெல்வா

ஆள் மயக்கும் பணம் 

====================

கவிஞர் யாழிசைசெல்வா 

======================

      கீழ் வானத்தைப் புரட்டிக்கொண்டு மஞ்சளை வாரி இறைத்தபடி புலர்காலை புலர்ந்தபோது....


      ஊர் எல்லையில் இருக்கும் கருப்பசாமி கோவில் ஊர்த் திருவிழாவை மிஞ்சும் அளவில் ஒரே பரபரப்பில் மிதந்து கொண்டிருந்தது. ஊரையே காக்கும் கருப்பசாமி வெள்ளைக் குதிரையில் நீண்ட அருவாளோடு கம்பீரமாக காவல் காத்து வந்தார்!  எல்லைக் கருப்பு நீயே எங்கள் காப்பு என்பது  அந்த ஊரில் எழுதப்படாத சட்டம்!


     கருப்பசாமி கோவிலில் இருந்த பெரிய ஆலமரக் கிளையில் கருப்பசாமிக்கு வெட்டிய இரண்டு கருத்த வெள்ளாட்டுக் கிடாயை  கட்டித் தொங்கவிட்டு தோலுரித்துக் கொண்டிருந்த ஆண்கள் கூட்டம் ஒரு பகுதி என்றால், பெரிய பெரிய பாத்திரங்களில் வந்திருந்த விருந்தாளிகளுக்கு தன் கைப்படவே  சோறு சமைத்துக் கொண்டிருந்தான் சண்முகம்! 


     "அண்ணே அண்ணே...." மை பூசிய கண்கள், மருதாணி விரல்கள், செயற்கையாக வரவழைத்த புன்னகை அணிகலனோடு அரக்கப் பறக்க கூப்பிட்டபடி ஓடி வந்தாள் சிவகாமி!


     "ஏம்மா இப்படி ஓடி வர.... என்னாச்சு? எதுவும் பிரச்சனையாப்பா?" அடுப்பில் வெந்த சோறின் பதம் பார்த்தபடியே கேட்டான் சண்முகம்! 


     "எல்லோரும் உன்ன எங்கன்னு கேட்டுகிட்டு இருக்காங்க? நீ என்னடான்னா சோறு சமைச்சுட்டு திரியுற? இந்த வேலையைச் செய்யறதுக்கு ஆளவிடென்று அப்பவே சொன்னேன்! நீ தான் கேட்கவே இல்லை" என மூச்சு வாங்கியபடி சொன்னாள் சிவகாமி!


     "இது வேண்டுதலுனு சொல்லி ஏற்கனவே சொல்லிட்டேன்! நீ எத்தனை தடவை கேட்டாலும், நா  என்னோட முடிவ‌ மாத்திக்கப் போறதில்ல...."


     "சரி வானே! வந்தவங்கள வான்னு கூப்பிட வேண்டாமா?"


    "அது தான் உங்க அண்ணி ஈசுவரி இருக்காளே....‌ பிறகென்ன? " சண்முகம் சட்டென சொன்னதும் சிவகாமியின் முகம் குப்பென்று வியர்த்துப் சுண்டிப்போனது! எதுவும் பேசாமல் வந்த வழியே திரும்பி விட்டாள்! 


     "ஏண்டி சிவகாமி! விசேசத்துல உன்னோட அலப்பறை தான் பெருசா இருக்கும்போல...." என்ற கருப்பாயிடம் எதுவும் சொல்லாமல் தலை குனிந்த படி விலகிச் சென்று விட்டாள்! 


    "உனக்கு சங்கதியே தெரியாதா? போன வருசம் வரைக்கும் சண்முகத்தோட பேச்சு வார்த்தை எதுவும் இல்லாம தான் இருந்தா...." என்றாள் சித்ரா!


     "பிறகென்ன? சொல்லு சித்ராக்கா...."


      " பழைய பாத்திரத்துக்கு ஈயம் பூசுற மாதிரி வந்து ஒட்டிக்கிட்டா....."


    "நீ சொல்ற எதுவுமே எனக்கு புரியலக்கா...."


    "அடியே கூறுகெட்ட சிறுக்கி! சொல்லுறத நல்லாக் கவனமா கேளு! சிவகாமியை கட்டிக் கொடுத்த பெறகு கொஞ்ச நாள்லே விவசாயத்தில் தொடர்ந்து பெருத்த அடி வாங்கி கடனாளியா போயிட்டான் சண்முகம்! அதனால அண்ணனோடயிருந்த உறவ சட்டுனு துண்டிச்சுகிட்டா சிவகாமி! அதுக்குப் பெறகு இந்தக் கருப்பசாமி மேல பாரத்தை போட்டு வேண்டுதல வச்சதோட நிக்காம சண்முகமும் அவன் பொஞ்சாதி ஈசுவரியும்  ராப்பகலா உழைச்சு‌ ஒரு வழியா முன்னேறி, இருக்கிற கடனெல்லாம் அடைச்சு முடிச்சுட்டாங்க.  பழையபடி நல்ல நிலைக்கு சண்முகம் வந்தவுடனே  ஓடி வந்து ஒட்டிகிட்ட...."தூரத்தில் துவண்டு நிற்கும் சிவகாமியைப் பார்த்தபடி சொன்னாள் சித்ரா! 


     "பாத்தியா அக்கா! ஒரு மனுசிய பணம் என்னா பாடு படுத்துதுன்னு பாரு....." தவாங்கட்டையில் கையை வைத்தபடி அங்கலாய்போடு சிவகாமியைப் பார்த்துக் கொண்டியிருந்தாள் கருப்பாயி.

(முடிந்தது)


கவிஞர் யாழிசைசெல்வா 

05/07/2025

ரோசா கூட்டம் ஐந்தாம் ஆம் ஆண்டுவிழா சிறுகதைப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிறுகதை

   ‌‌

ஆள் மயக்கும் பணம்

 ஊர் எல்லையில் இருக்கும் கருப்பசாமி கோவில் ஊர் திருவிழாவை மிஞ்சும் அளவில் ஒரே பரபரப்பில் மிதந்து கொண்டிருந்தது. ஊரையே காக்கும் கருப்பசாமி வெள்ளை குதிரையில் நீண்ட அருவாளோடு கம்பீரமாக காவல் காத்து வந்தார்! ஊருக்குள் நுழையும் யாராக இருந்தாலும் எல்லை கருப்பசாமியை ஒரு கணம் திரும்பி பார்க்காமல் செல்ல முடியாது! அவரது உயர்ந்த தோற்றமும் உற்சவ தாண்டவமும் ஊருக்கு வெளிச்சமானதால் அப்படி ஒரு நம்பிக்கை அந்த ஊரில் இருந்தது! பக்தர்கள் வேண்டிய காரியத்தை தப்பாமல் செய்து முடிக்கும் துடியான சாமி! சொன்ன வேண்டுதலைச் சொன்னபடி செய்யாவிடில் உருத் தெரியாமல் அழித்துவிடும் சக்தியும் கொண்டவர் என்ற பேச்சு ஊர் முழுவதும் பரவலாய்ப் பரவிக் கெடந்தது! ஆக்கவும் காக்கவும் அவனே பொறுப்பு! எல்லைக் கருப்பு நீயே எங்கள் காப்பு என்பது அந்த ஊரில் எழுதப்படாத சட்டம்!

    

     கோவிலை சுற்றி இருந்த கருவேல மரங்களிலும் வேப்ப மரங்களிலும் அகன்று கிளை பரப்பியிருந்த ஆலமரத்திலும் விசேஷத்துக்கு வந்திருந்த அத்தனை மக்களும் இளைப்பாரிக் கெடந்ததோடு வந்த கதை போன கதையோடு சுவையோடு கேட்பதற்கு இட்டுக்கட்டி பேசிச் சிரித்துக் கொண்டு ஆங்காங்கே பெண்கள் கூட்டம் ஒரு புறமும், பட்டுச் சேலைகளிலும் பளபளக்கும் ஆபரண நகைகளையும் பகட்டாக அள்ளிப் போட்டுக் கொண்டு வெட்டிக்கதைகளை என்னவோ நீதி கதை போல் நீட்டி பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டிருந்தனர்! 


     ஆலமரக் கிளையில் கருப்பசாமிக்கு வெட்டிய இரண்டு கருத்த வெள்ளாட்டுக் கிடாயை கட்டித் தொங்கவிட்டு தோலுரித்துக் கொண்டிருந்த ஆண்கள் கூட்டம் ஒரு பகுதி என்றால், பெரிய பெரிய பாத்திரங்களில் வந்திருந்த விருந்தாளிகளுக்கு தன் கை படவே சோறு சமைத்துக் கொண்டு இருந்தான் சண்முகம்! 


     "அண்ணே அண்ணே...." மை பூசிய கண்கள், மருதாணி விரல்கள், செயற்கையாக வரவழைத்த புன்னகை அணிகலனோடு அரக்கப் பறக்க கூப்பிட்டபடி ஓடி வந்தாள் சிவகாமி!


     "ஏம்மா இப்படி ஓடி வர.... என்னாச்சு? எதுவும் பிரச்சனையாப்பா?" அடுப்பில் வந்த சோறின் பதம் பார்த்தபடியே கேட்டான் சண்முகம்! 


     "எல்லோரும் உன்ன எங்கன்னு கேட்டுகிட்டு இருக்காங்க? நீ என்னடான்னா சோறு சமைச்சுட்டு திரியுற? இந்த வேலையைச் செய்யறதுக்கு ஆள் விடு என்று அப்பவே சொன்னேன்! நீ தான் கேட்கவே இல்லை" என மூச்சு வாங்கியபடி சொன்னாள் சிவகாமி!


     "இது வேண்டுதலுனு சொல்லி ஏற்கனவே சொல்லிட்டேன்! நீ எத்தனை தடவை கேட்டாலும், நா என்னோட முடிவ‌ மாத்திக்க போறதில்ல...."


     "சரி வானே! வந்தவங்கள வான்னு கூப்பிட வேண்டாமா?"


    "அது தான் உங்க அண்ணி ஈசுவரி இருக்காலே....‌ பிறகென்ன? " சண்முகம் சட்டென சொன்னதும் சிவகாமியின் முகம் குப்பென்று வியர்த்துப்போனது! எதுவும் பேசாமல் வந்த வழியே திரும்பி விட்டாள்! 


     "ஏண்டி சிவகாமி! விசேசத்துல உன்னோட அலப்பறை தான் பெருசா இருக்கே! " என்ற கருப்பாயி!டம் எதுவும் சொல்லாமல் தலை குனிந்த படி விலகிச் சென்று விட்டாள்! 


    "உனக்கு சங்கதி தெரியாதா? போன வருசம் வரைக்கும் சண்முகத்தோட பேச்சு வார்த்தை எதுவும் இல்லாம தான் இருந்தா...." 


     "பிறகென்ன? சொல்லு சித்ராக்கா...."


      " பழைய பாத்திரத்துக்கு ஈயம் பூசுற மாதிரி வந்து ஒட்டிக்கிட்டா....."


    "நீ சொல்ற எதுவுமே எனக்கு புரியலக்கா...."


    "அடியே கூறுகெட்ட சிறுக்கி! சொல்லுறத நல்லா கவனமா கேளு!


    



     

   ‌‌ 


     


      

Thursday, 3 July 2025

செல்லம்மாள் - 01 யாழிசைசெல்வா

 பகுதி 01

      ஒரு பெரிய மலைப்பாம்பு காட்டுமான் ஒன்ன விழுங்கிட்டு  அசைய முடியாமல் அப்படியும் இப்படியும் புரண்டு படுப்பது போல் அமைந்த தோற்றத்தையுடையது மேற்கு தொடர்ச்சி மலை. "பாக்குறத்துக்கு காட்டு யானைகளின்  பெருங்கூட்டமாக ஒரே வரிசையில் படுத்து கெடக்கிறமாரில இருக்கு" என ஊருக்குள் ஒரு பேச்சு உண்டு. மலையின் நெளிவு சுழிவுகளில் ஆங்காங்கே நீரூற்றுகள் ஊடறுத்து ஓடையாக வழிந்து ஓடிக் கொண்டிருந்தது. பொம்பளைங்க ஒப்பாரிக்கு அழுகிற கண்ணீர் மாதிரி ஒடிசலா வழிஞ்சு ஓடிக்கிட்டு இருந்தது ஓடத் தண்ணி.‌ அதே ஓட மழைக்காலத்தில் மட்டும் மடை திறந்த வெள்ளமா பெருக்கெடுத்து காடு கரை அறுத்துக்கிட்டு ஓடி வரும். மத்த நேரங்களில் மழை அடிவாரத்தில் இருக்க தோட்டம் தொரவுளுக்கு வேலை செய்யப் போய்வாரவங்களும், மேற்கு தொடர்ச்சி மலைக் காட்டுல ஆடு மாடு மேய்க்கறவங்களும்  அந்த ஓடதான் வழியாகப் பயன்படுத்துவது வழக்கம். மேற்குத் தொடர்ச்சி மலையெங்கும் பரவலாக ஆலமரம், அரசமரம், கொய்யா மரம், மாமரம், சந்தன மரம் அதோடு சேர்ந்து காட்டுக்கே உரியதான முள் மரங்களும் எங்க பார்த்தாலும் பரவிக் கிடந்தது. இந்த மலைக்கே நாங்க தான் அடையாளம் அப்படிங்கிற மாதிரி அந்த மரங்கள் இருந்தது. மரங்களின் அடிப்பகுதியைச் சுற்றி ஈச்சம் புதர், இன்டம் புதரென அடர்த்தியான பச்சைப் போர்வை போர்த்தியிருந்தது. அந்த பசுமையின் ஊடாக கானக உயிர்களான யானை, நரி, ஓநாய், மான், மயில், முயல்‌ போன்றவை பரவலாக வாழ்ந்து வந்தன. மேற்குத் தொடர்ச்சி மலையோட மேற்குச் சரிவில இறங்கினா கேரளா மாநிலம். இந்த மலையைத் தாண்டி அந்த பக்கம் போறதுக்கு நெடுங்காலமா ஒரு பாதை இருந்தது அதோட பேரு சாக்குலத்து மெட்டு. அது வழியா மக்கள் வேலைக்காக கேரளாவுக்கு போயிவருவதுக்கான பாத ஒன்னு பயன்பாட்டிலிருந்தது. ஒத்தையடிப் பாத மாதிரியான அமைப்பு கொண்டது. வழக்கமா போயிட்டு வாரவங்க மட்டுமே அதை பயன்படுத்திக்கிட்டு இருந்தார்கள். மற்றவர்களுக்கு அதைப் பற்றிய கவலையும் இல்லை.
       
         மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மலையோட நிழல் விழுற தெசைப்பக்கமெல்லாம் ஆங்காங்கே மக்க மனுசங்க வீடு வாசல் கட்டி வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.  அவங்களோட பிழைப்பு முழுவதும் அங்க இருக்கிற நிலத்தைச்சுத்தியே அமைந்திருந்தது. பெரும்பாலும் விவசாயக் கூலி வேலைதான் நடந்துட்டிருந்தது.

     அன்றாடம் கெடைக்கிற வேலையைப் பார்த்தால் மட்டுமே பிழைப்பு நடக்கும். அங்க வாழ்ந்துவந்த எல்லோருக்கும் பெரிய அளவுலே சொத்து சொகம் எதுவும் கிடையாது. அங்காங்கேயிருந்த குடியிருப்புகளில் அவுங்க வசதிக்கு ஏற்றவாறு வீடு வாசலக்கட்டி வாழ்ந்து கொண்டிருந்தார்கள். தோட்டம் தொரவுனு வச்சியிருந்தவுங்க நல்ல பெரிய காரவீடாக் கட்டி பவுசா வாழ்ந்துவந்தார்கள். அந்த மாதிரியான மக்கமனுசங்க மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்துல அமைஞ்சிருக்கிற கிராமங்களிலேயே விரல்விட்டு எண்ணிவிடுகிற எண்ணிக்கையில் மட்டுமே இருந்தது.  ஒரு சில ஊர்களில் அரசாங்க உத்தியோகம் பார்க்கிறவங்க ஒன்னு ரெண்டு பேரு மட்டும் இருந்ததால, ஊர்ல எது நடந்தாலும் அவுங்க கை ஓங்கி நிக்கிற மாதிரி எப்பவும் பார்த்துக்கிறது அங்க வாடிக்கையா இருந்தது. மத்தபடி பெரும்பாலான மக்கமனுசங்க எல்லாருமே அன்றாடம் கூலிவேலைக்கு போறவங்கங்கிறதால அவங்களோட வீடுவாசலெல்லாம் பெரும்பாலும் கூரைக் குடிசையாவே இருந்தது. அதுலேயும் ஒருசில பேரு மண்சுவருவச்ச வீடுகட்டி அதுமேல தகரத்தைப் போட்டு வச்சதோட, அடிக்கிற  காத்துக்கு தகரம் ஆடாம அசையாம இருக்க சின்னச்சின்ன  பாராங்கல்லு அது மேல் இருக்கும். இருக்கிற வீட்ட சூதானமா பாத்துக்கணும்கிற முன் யோசனையோட இந்த மாதிரி வேலை நடந்திருந்தது . என்னதான் சூதானமா வச்சிருந்தாலும் சில சமயத்துலே சூரக்காத்துலே தகரம் காத்துல பறந்து போயி பெரிய வீபரீதமெல்லாம் நடந்த சம்பவமும் உண்டு. அதனால முடிஞ்ச வரைக்கும் இருக்கட்டுமென்று வீட்டோட  ரெண்டு பக்கமும் கொச்சக் கயிறு கொண்டு இறுகக்கட்டி தரையோட மொளக்குச்சி அடிச்சுத் தகரத்த இழுத்துக் கட்டி வைத்த வீடுகளும் அங்க இருந்தது.  கூரை வீட்டுக்காரனப்பார்த்து தகர வீட்டுக்காரனும், தகர வீட்டுக்காரனப்பார்த்து கார வீட்டுக்காரனும் மாத்தி மாத்தி பொறாமையில வெந்ததோட தன்னப்பத்தி ஒசத்தியா நாலுபேரு மத்தியில பேசிக்கிற பழக்கம் அவர்களுக்குள் இருந்தது. இதொரு வியாதிமாதிரி இந்தக் கெட்ட பழக்கம் அவர்களிடையே பரவியிருந்தது. இது தப்புனு அவுங்களுக்கு தெரியாமலே வாழற சூழ்நிலையும் அங்க பழக்கமாக்கப்பட்டிருந்தது.

     நிலம் என்கிற பெரிய சொத்தோடு சிலபேருக்கு வசதியான வாழ்க்கை இருந்தது. பெரும்பாலும் அவுங்களோட நெலமெல்லாம் குளங்களைச்சுத்தியோ அல்லது  ஓடைப்பக்கமாவே இருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைல விழுகிற மழைத்தண்ணி பெருக்கெடுத்து ஓட ஓடப்புகளிலே அடிச்சுட்டு போயி கடைசிலே குளத்துல விழுந்திரும். அந்தக்குளத்தோட அருமை ஆரம்பத்தில தெரியாது என்பதால் பெரிசா யாருமே கண்டுக்கல. அப்போதுதான் குருசாமிக் குடும்பர் வீணாப்போற அந்த ஓடத்தண்ணிய ஒழுங்குபண்ணுறதுக்காக அவரோட கூட்டாளிகளைச் சேத்துக்கிட்டு ஊருக்குவெளியிலிருந்த பெரிய குளத்த நல்ல ஆழமா வெட்டி அதோட கரைகள ஒசத்திக்கட்டியதோட நிக்காம, கரைக முழுசும்  வெட்டிவேரு , ஆலமரம், அரசமரம்,வேப்பமரமினு நட்டுவச்சி விட்டிருந்தார். காலப்போக்குல தென்மேற்கு பருவக்காத்து சாரமழயிலும் ஒரக்கப்பேயிர ஈரமழையிலும் நல்லா செலிச்சு வளந்து போயிருச்சு. போதும் போதாதுக்கு குளத்தோட தண்ணியக்குடிச்சும் அந்த மரங்கள் வளர்ந்து ஊரோட அடையாளமா மாறி இருந்தது. இப்ப எல்லோரும் அந்த ஊருக்கு வழிசொல்லும்போதெல்லாம் பெரிய குளத்துக்கு பக்கத்துல இருக்க ஊருதானங்கிற அளவுக்கு ஊரெல்லாம் பேரு வந்து சேர்ந்திருந்தது. பேருக்கேத்தமாரி பெருசா பாக்குறதுக்கு கடல்மாரி எப்பவும் தண்ணி கொறயாம ததும்பி மடையில வழிஞ்சு போயிகிட்டேயிருந்தது. அந்தக் கொளத்தோட தண்ணிய மடைவழியா பாசனத்துக்காக குருசாமி குடும்பரோட கூட்டாளிகளும், அவரோட பங்காளிகளும் முறைவச்சு பாசனத்துக்கு பயன்படுத்தி வளமா வாழ்ந்து வந்தார்கள்.  காலபோக்குல பெரிய அளவுலே அவுங்க வெவசாயம் பெருகி வசதியும் கூடிப்போயிருந்தது. இது அவரோட ஊருல உள்ள ஆளுங்களுக்கு பெரிய பொறாமையை உண்டாக்கி அந்த தீயில் ஊரே காவு வாங்குற அளவுக்கு வளர்ந்து கொண்டு இருந்தது. ஒரு கட்டத்துலே பெரிய மோதலுலே முடியறமாதிரி ஆனபோது குருசாமிக் குடும்பர் பெரியகுளத்தோட பாத்தியத்த அப்படியே நிலம் மற்றும் பாசனத்தோட ஊருக்காரங்களுக்கு எழுதிக்கொடுத்திட்டு தன்னோடு குடுபத்தக் கூட்டிக்கிட்டு ஊரவிட்டு தனியா ஒதுக்குபுறமாக யாருமே பயன்படுத்தாத கட்டாந்தரை நெலத்துல குடிசைபோட்டுத் தங்கி வாழ்ந்து வந்தார்.

      குருசாமிக் குடும்பர் ஊரை விட்டுப் போனப் பின்னாலே அவரோட கூட்டாளிக சிலபேரு அவருகூடவே கெளம்பி வந்து அவர் குடியிருந்த இடத்திலேயே பக்கத்துல குடிசை போட்டு வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். குருசாமிக் குடும்பர் எவ்வளவுதான் சொன்னாலும் கூட்டாளிக அவர விட்டுப்பிரியாம கூடவே இருந்திட்டாங்க.  குருசாமிக்குடும்பர் தங்கியிருந்த இடத்துக்கு பக்கத்துலே சின்னதா ஒரு குளம் வெகுகாலமா சும்மாவே இருந்தது. வீணாப்போற மழத்தண்ணிய அந்தக் குளத்துல சேமிக்க அரும்பாடுபட்டு வந்தார். அந்தக்குளத்தோட கரையிலேயும் ஆலமரம், வேப்பமரம், வெட்டிவேறுனு நெறைய நட்டுவச்சு வளத்துவந்தார். அவரோட நல்ல மனசுக்கு மரமெல்லாம் செலிப்பா வளர்ந்து கரை முழுசுக்கும் நான்தான் காவல்காரன்கிற மாதிரி நின்னதது. ஆரம்பத்துலே சின்னக்குளத்துக்கு தண்ணி அவ்வளவா வந்துசேரல..... குருசாமிக் குடும்பர் தன்னோட கூட்டாளிகளோட சேர்ந்துகிட்டு வீணாப்போற ஓடத்தண்ணிய அப்படியே சின்ன குளத்துக்கு கொண்டுவரச் செய்வதற்கு அரும்பாடு பட்டு உழைக்க வேண்டியிருந்தது. அதோட பலனாக சின்னக் குளம் மழக்காலத்துல தண்ணி நெறஞ்சு குட்டிக்கடல்மாரி பாக்குறத்துக்கே அவ்வளவு அழகாக இருந்தது. சின்னக்குளத்தோட தண்ணிய வச்சு கட்டாந்தரை நெலத்த உழுது விவசாயத்துக்கு தயார் பண்ணாங்க.... அப்பவும் பெருசா வெளச்சல் கெடைச்கல. இதென்னடா சோதனைனு சோர்ந்துபோகமா சின்னக்குளத்தோட தண்ணி வத்துனப்ப குளத்துல தேங்கிக்கெடந்த களிமண் கரம்ப மண்ண அள்ளி விவசாய நெலத்துல போட்டு நல்லா நாலஞ்சு உழவு நிலத்தோட மண்ணு பொடிப்பொடியாப் போறமாதிரி உழுது அதுக்குப்பெறகு அவர்களோட விவசாயம் நடந்தது. இந்த முயற்சி அவுங்களுக்கு கைமேல பயன் தந்தது. அப்படி உருவான நிலத்துலதான் குருசாமிக் குடும்பர் பருத்தி போட்டுருந்தார். அங்க வேலை செய்யறதுக்கு கொத்துக்காரி செல்லம்மா வேலையாளுகளோட வேலைக்கு வந்திருந்தாள். கொத்துகாரி என்பவள் விவசாய நெலத்துல வேலை செய்ய கூலியாட்கள அழைத்துவந்து வேலைசெய்ய வைப்பதோடு தோட்டத்துக்காரர்களுக்கும் கூலியாட்களுக்கும் பாலமாக இருக்கிறது ஊர் வழக்கம். கூலியாட்களை ஒழுங்குபடுத்தி அன்றாடம் எல்லோருக்கும் சமமாக பிரித்து அனுப்புவதோடு சம்பளத்தையும் முறையாக வாங்கித் தருவதற்கும், கூலிப்பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்வதற்கும் உதவியாக கொத்துக்காரி இருந்தார்கள். இந்த வேலை பெரும்பாலும் வயதிலும் அனுபவத்திலும் தேர்ந்தவர்கள் மட்டுமே செய்துவந்தார்கள். இளம்வயசுக் குமரிப் பொண்ணான செல்லம்மாள் சீக்கிரமே கொத்துக்காரி ஆனதுக்கு காரணம் செல்லமாளோட அம்மா பூரணி கொத்துக்காரியா இருந்தது முக்கியமான காரணம். பூரணி இறந்ததுக்கு பின்னாலே செல்லம்மாளே கொத்துக்காரியாக முழுதாக மாரியிருந்தாள்.

       செல்லம்மாள் பாக்குறதுக்கு நல்ல வாட்டசாட்டமா கோயில் சிலை மாதிரி அழகு. ஐப்பசி மாசத்துல வானத்துல உலவுற கருமேகங்கணக்கா அடர்ந்த கூந்தல். புதுச ஆக்குன பச்சரிசி சோறு கணக்கா பல்லு. நறுக்கி வச்ச வெள்ளரித் துண்டுமாரி உதடு. கருப்பட்டிலே செஞ்ச பனியாறம் மாரி தித்திப்பான கண்ணுக. பஞ்சுமிட்டாய் கன்னம். அதுல ஒருதுளியளவு பனித்துளி தேங்குறாப்புல குழிவிழுந்த கன்னம். சிவன் கையில இருக்கிற உடுக்கைமாரி இடுப்பு. மின்னல் கொடி மாரி நீண்ட கைகள். வெண்ணைய உருக்கி வச்ச பாதம் என ஊரில் உள்ள மொத்த அழகும் ஒன்னாக்குடியேறிய உடம்புக்கு சோந்தக்காரி. அவசோட்டுக் குமரிகளே பொறாமைப்படுற அளவுக்கு ஊருக்குள்ளற வெருப்பச் சம்பாதிச்சு வச்சிருந்தா. ஆனாலுமே இதுவரைக்கும் எந்த ஆம்பள வலையிலேயும் சிக்காம நழுவித் தப்பிச்சிருந்தாள். ஒருசில ஆம்பளைங்க தோட்டம் தொரவ எழுதிவைக்கிறேன் கல்யாணம் கட்டிக்கேனு சொல்லியும் யாரையும் சீந்தாம வெலகியே இருந்திட்டா. அதனால நிறைய ஆம்பிளைங்க கடுப்புல திரிஞ்சானுக. அதக்கண்டுக்கவேயில்ல செல்லம்மா. அவவுண்டு அவவேலைவுண்டுனு இருந்திட்டா. அப்படித்தான் ஒருநாள் குருசாமிக் குடும்பரோட தோட்டத்துல பருத்தியெடுக்க கூலி ஆளுகளோட வேலைக்கு வந்திருந்தா...

      "அடியாத்தி.... உச்சி வெயிலு இந்த பொலபொலக்குது! விட்டா பருத்தி காடே பத்தி எரிஞ்சிடும் போலருக்கு...." வடசட்டி எண்ணெயில விழுந்த கடுகு மாறி பொரிஞ்சு தள்ளிய காளியம்மாள் பின்னால திரும்பிப் பார்த்தபடி "ஏண்டி செல்லம்மா.... ஒனக்கு இன்னுமாடி பசிக்கல..... காலையில தின்னுட்டு வந்த தண்ணிச் சோறு இன்னும் எத்தன நேரம்டி தாங்கும்? இப்படியே சோறு தண்ணி திண்ணாம தொடர்ந்து வேலை பார்த்தா இந்தக் காட்ட உனக்கு எழுதி வச்சரவா போறாங்க.... வாடி சாப்பிட்டுட்டு வேலையப் பார்க்கலாம்.... கொத்துக்காரி நீ வந்தாத்தான மத்தவளுகளும் வந்து சோறு தண்ணி தின்பாளுங்க.... அங்க திரும்பிப் பாரு.... நானும் ரொம்ப நேரமா பாக்குறேன் நின்ன எடத்திலேயே நின்னுகிட்டு ஒவ்வொரு பருத்தியா இந்தா புடுங்குறேன் அந்த புடுங்குறேன்னு பருத்திக்கு வலிக்காம வைத்தியம் பார்க்கிற மாறி புடுங்கிட்டு நிக்கிறாளுங்க..... அவளுகளைச் சொல்லியும் குத்தமில்லே.... எவ்வளவு நேரம் தான் பசியைப் பொறுப்பாளுங்க.... என்ன போலாமா?"  பிட்டத்தை உரசிக் கொண்டிருந்த அவுந்த தல முடிய அள்ளிக் கோடாலிக் கொண்டை போட்டுக்கிட்டே கொத்துக்காரி செல்லம்மாள நோக்கி நடந்தாள் காளியம்மாள்!
       
     நல்ல விளைச்சல் வரணும்ங்கிறதுக்காக கொளத்துக் கரம்பைய அடிச்சுப் போட்டு செதறி விட்டு அதுக்குப் பிறகு ஏறு பூட்டி ரெண்டு ஒழவு நல்லா ஆழமா உழுது பாத்தி கட்டி பருத்தி வெளைய வச்சதுனால இடுப்பு ஒசரத்துக்கு மேல, நல்லா கொடி பூரா மலர்ந்த மல்லிகைப் பூ மாரி பருத்திச் செடி முழுவதும் பருத்தி பூ பூத்து காடே நெறஞ்சு கெடந்துச்சு. வெயிலோட காந்தல் பொறுக்காம முத்தி வெடிச்ச பருத்திப்பூ செடி முழுதும் வலிஞ்சு பாக்குறவுகயெல்லாம் வயித்தெரிச்சல் படுறமாரி ஈயெனச் சிரிச்சுக் கெடந்தது.

       கொத்துக்காரி செல்லம்மாள நோக்கி போயிட்டுருந்த காளியம்மா "ஆஆ"வென காடே அதிரும்படி கத்திக் கூச்சல் போட்டுட்டா.... அங்கங்க பருத்திப் பெறக்கிட்டுருந்த அத்தனை பேரும் போட்டத போட்டபடி போட்டுட்டு பறந்தடிச்சு ஓடி வந்து சேர்ந்தார்கள்.

     "ஏண்டி என்னாச்சு...?" காளியம்மா கிட்ட வந்த கொத்துக்காரி செல்லம்மாள் கேட்டாள்.

     கூர்மையான ஈட்டி போல் வலது குதிங்காலைக் குத்தி கிழிச்சிருந்த பருத்திக்கூட்ட காளியம்மா புடுங்குனதும்  ரத்தம் குபுகுபுவென்று பீறிட்டுக் கொண்டு வெளியேறத் தொடங்கிருச்சு. அதைப் பார்த்ததும் "அடியே! இருடி இருடி....! அதுக்குள்ளற என்னடி அவசரம்? நான்தே வந்துகிட்டு இருக்கேனுல்ல.... அதுக்குள்ளார ஏண்டி இப்படி பண்ண....? ரத்தம் வேற.... நிக்காம கொட்டிக்கிட்டுருக்கு..." காளியம்மாள் அருகே வந்தவள் கொஞ்சமும் தாமதிக்காம அவள அப்படியே அலேக்கா தோளுல தூக்கிப் போட்டுக்கிட்டு விசுகு விசுகுன்னு ஓட்டமும்  நடையுமா பருத்தி காட்டோட ஓரத்துலருந்த ஆலமரத்துக்கு அவளைக் கொண்டு வந்திட்டா. காளியம்மாள கீழ எறக்கி அருகம்புல்லா பரவி கெடந்த வரப்பு மேல உட்கார வச்சுட்டு ஆலமரத்தின் கீழேயிருந்த மண்பானையிலயிருந்து சொம்பு நிறையத் தண்ணிய எடுத்துக்கொண்டு வந்து தண்ணிய குடிக்க வச்ச பிறகு காயத்தை சுத்தம் பண்ணிட்டு,  பக்கத்துலருந்த செடி கொடிக்குள்ள புகுந்தவ ரெண்டு மூணு மூலிகைகளை பறிச்சிட்டு வந்து உள்ளங்கையில வச்சுக் கசக்கி காளியம்மாளோட காயத்து மேல  மூலிகைச் சாறு விட்டாள்.  மூலிகைச் சாறோட எரிச்சல் பொறுக்க முடியாம கத்தத் தொடங்கிட்டா காளியம்மா.... "கொஞ்ச நேரம் பொறுத்துக்கடி.... "எனச் சொல்லிக் கொண்டே செல்லம்மாள் தன்னோட முந்தானைச் சேலைய‌ விருட்டெனக் கிழிச்சு காளியம்மாளோட காயத்துல மூலிகைய வச்சு நல்லா இருக்கமா கட்டுக் கட்டி விட்டுட்டா. "அடியே வீட்டுக்கு போனதும் கெட்ட அவுத்துட்டு இந்த மூலிகையை நல்லா அது மேல புலிஞ்சு விடுடி... ரெண்டு நாளைக்கு இதை தொடர்ந்து புலிஞ்சுவிட்டயாக்கும் காயம் தன்னால் ஆறிப் போய்டும்" எனக் கூறிக் கொண்டே ஆலமர விழுதுகளில் தொங்கிக் கொண்டிருந்த சோத்துச் சட்டிகளை எடுத்து வரப் போய்விட்டாள் செல்லம்மாள்.

        பருத்திக் காட்டுல வேலை பார்த்துகிட்டு இருந்த மத்த பொம்பளைகளும் அடிச்சுப் புடிச்சு ஒரு வழியா ஆலமரத்துக்கு வந்து சேர்ந்திருந்தார்கள்.

     "யேண்டி...! கூறுகெட்ட சிறுக்கி! பருத்திக் காட்டுக்குள்ள பருத்திக் கூடு ஒடஞ்ச கண்ணாடி மாதிரி அங்கங்க கெடக்கும்னு உனக்கு தெரியாதா....? நீ என்ன புதுசா வா வேலை பாக்குற? அப்படி என்னடி அவசரம்? இப்பப் பாரு.... காலுல கட்டு போட்டு இருக்க... இதெல்லாம் தேவையா...? " எனக் காளியம்மாளை பார்த்துக் கேட்டுகிட்டே அவளருகில் வந்தாள் முனியம்மாள்.

      "அடேயப்பா.... செல்லம்மா என்ன வேகத்துல காளியம்மாள தூக்கித் தோளுல போட்டுக்கிட்டு ஓடியாந்துட்டா? அவ வேகத்தை பார்த்ததும் எனக்கே பெருத்த ஆச்சரியமா போயிருச்சு! ஆம்பளை கூட இத்தன வெரசா வர முடியுமானு தெரியலடியம்மா..." தாவங்கட்டயோட சேர்த்து கன்னத்துல கை வச்சு ஆச்சரியமா பார்த்தபடி சொன்னா சீலக்காரி!

     "நீ யென்னடி இப்படி சொல்லிட்ட? இவளுக ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே கூட்டாளிகல்லே... ஒருத்திய விட்டு ஒருத்தி இருக்க மாட்டாளுக.... அப்படியே பிசினு கணக்கா ஒட்டிக்கிட்டுல இருப்பாளுங்க... நீ என்னமோ காணாதத கண்டது மாரி பேசிகிட்டு திரியிறவ.... இதெல்லாம் பார்த்துப் பார்த்து எங்களுக்கு பழகிப் போயிருச்சுடி. இது உனக்கு வேண்டா புதுசா இருக்கலாம்" எனச் சொல்லிக் கொண்டே காளியம்மா காலுக்கடியில ஒக்காந்துகிட்டா சின்னத்தாயி!

      "அப்படியா சேதி! இதெல்லாம் எனக்கு தெரியாதுடி. இவளுக கூட முன்னப் பின்ன வேலைக்கு வந்திருந்தா தெரிஞ்சிருக்கும். நான் இன்னைக்கு தான புதுசா வந்திருக்கேன்.... அதுதே எல்லாமே எனக்கு புதுசா தெரியுதுடி" எனச் சொல்லிக் கொண்டே ஆலமரத்தின் விழுதுகளை நோக்கிப் போய்கிட்டுருந்தா சீலக்காரி!

      அதுக்குள்ளற செல்லம்மாள் எல்லாருடைய தூக்குச்சட்டிகளையும் மொத்தமாஅள்ளி தன்னோட ரெண்டு கையிலேயும் வரிசையா வளையல் மாட்ன மாதிரி மாட்டிகிட்டு வந்துகிட்டுருந்தாள்.

     "ஏண்டி எல்லாருடைய தூக்கு சட்டியும் எடுத்துட்டு வந்துட்டியா?"

      "ஆமா சீலக்காரி அக்கா...." எனச் சொல்லிக் கொண்டே வந்தவள் "வாக்கா போய் எல்லாரும் சாப்பிடலாம்" சிலக்காரிய பார்த்துச் சொல்லிவிட்டு எல்லோரும் உட்கார்ந்திருந்த ஆலமரத்தடிக்கு வந்து சேர்ந்து,மொத்த தூக்குச்சட்டியும் கீழ வச்சிட்டு ரெண்டு தூக்குச் சட்டிய மட்டும் தனியா எடுத்துக்கிட்டு காளியம்மா கிட்டப் போயி உட்கார்ந்து கொண்டாள் செல்லம்மா!

     "ஏண்டி! இன்னைக்கு என்ன கொழம்பு வச்சிருக்க?"தூக்குவாளி மூடியத் தொறந்து கிட்டுருந்த செல்லம்மாளப் பாத்துக் கேட்டாள் காளியம்மா!

     "கருவாட்டுக் கொழம்பு வச்சிருக்கேன்டி! "என்றவள் தூக்குவாளியோட மூடியத் தொறந்ததும் தூக்குவாளியிலே சோத்துக்கு மேல கிண்ணத்துலே ஊத்தி வச்சிருந்த கருவாட்டுக் கொழம்பு உள்ளாரயிருந்த சோத்துலே சிந்திப் போயி கொழம்போட வாசம் காத்துலே பரவி காளியம்மா மூக்குலே நொளஞ்சதும்தான் தாமதம் நாக்குலே எச்சில் ஊறத் தொடங்கிருந்தது அவளுக்கு! செல்லம்மா தூக்குவாளி மூடியக் கொடுக்கிறதுக்குள்ளயே  விசுக்குனு அவகிட்டருந்து பிடுங்கி சாப்பிடத் தொடங்விட்டாள் காளியம்மாள்.

       செல்லம்மாவும் எதுவும் சொல்லாம கருவாட்டச் சோத்துக்குள்ளாற வச்சு ருசிச்சு சாப்பிடுகிற காளியம்மாவயே வச்ச கண்ணு வாங்காம பார்த்துக்கிட்டுருந்தா!  பசி வயித்த கிள்ளிச்சா இல்ல ருசி அவளத் திங்கத் தூண்டிச்சானு தெரியலே...  தூக்குவாளி மூடியிலேயிருந்த சோறு மொத்தத்தையும் தின்னு முடிச்சிட்டு தூக்குவாளியிலேயிருந்த மீதி சோத்தையும் அள்ளிப்போட்டு அவ பாட்டுக்குத் தின்ன ஆரம்பிச்சிட்டா.... "ஏண்டி! கொஞ்சம் மெதுவாதே தின்னேன்! இப்ப யாரவது வந்து உன்னோட சோத்த பறிச்சுக்கப் போறாங்களா என்ன? நீ கருவாட்டுக் குழம்புலே நல்லாச் சாப்பிடுவேங்கிறது எனக்கு நல்லாத் தெரியும். அதனால தான வாரத்துல நாலு நாளு உனக்காண்டி வச்சுக்கொண்டு வாரேன்! அப்படியிருந்தும் ஏண்டி! இப்படி அள்ளி அப்புற?"எனச் செல்லம்மாள் கூறியதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அவள் பாட்டுக்கு சோறு அள்ளித் திண்பதிலேயே குறியாக இருந்தாள்! ஒரு வழியாக தூக்குவாளியிலேயிருந்த அத்தனை சோரையும் திண்ணு முடிச்சிட்டு எந்திரிச்சு கை கழுவ போனவள இழுத்துப் பிடிச்சு உட்கார வச்சிட்டு பக்கத்துலே வச்சிருந்த சொம்புத் தண்ணியை எடுத்து "இந்தாடி தண்ணிய நல்லாக் குடி! அப்பதான் தொண்டையில இருக்க சோறு முழுசும் கீழ இறங்கி வயித்துக்குள்ளற விழுகும்"எனச் சிரிச்சுக் கிட்டே கூறினாள் செல்லம்மாள்!

      செல்லம்மாள் கொடுத்த சொம்புத் தண்ணிய வாங்கி முக்கால்வாசி  குடிச்சிட்டு மீதியிருந்த தண்ணியில கையக் கழுவிட்டு செல்லம்மாவோட முந்தானையை எடுத்து கை வாயத் தொடச்சவ "ஏண்டி! நீ இன்னும் சோறு தின்னலையா? இவ்வளவு நேரமா என்னடி பண்ண? வழக்கம்போல யேன் வாயவே பார்த்துகிட்டு இருந்தியா? அட கூறுகெட்ட சிரிக்கி! உன்கிட்ட எத்தன நாளு சொல்லி இருக்கேன்! என் வாயவே பாத்துகிட்டு நிக்காதனு.... கொண்டு வந்திருக்க சோத்தை எடுத்து தின்னுனு.... எத்தனை தான் சொன்னாலும் நீ கேக்குற மாதிரி தெரியலே"எனச் சொல்லிக் கொண்டே செல்லம்மாள் கிட்டயிருந்த தூக்குவாளிய எடுக்க எந்திரிச்சவளோட தோலைப் புடிச்சு உட்கார வச்சுட்டு காளியம்மாளோட தூக்கு வாளியை எடுத்து அதுலேயிருந்த ரசம் சோத்த‌ நல்லா பெசஞ்சி அள்ளிச் சாப்பிட தொடங்கியிருந்தாள் செல்லம்மாள்.

     "நீ கொண்டு வந்த ருசியான கருவாட்டுக்  குழம்பு சோறை நான் தின்னுபுட்டேன்! நீ என்னடான்னா வெறும் ரசம் சோத்த தின்னுகிட்டு இருக்க! அதுவும் ஒரு கடிச்சுக்கிற கூட இல்லாம எப்படித்தான் உன்னால திங்க முடியுதோ? என்னோட ஆத்தா கிட்ட வேற ஏதாவது நல்ல கொழம்பு வச்சு கொடுனு கேட்டா கேட்கவே மாட்டேங்குறா! எப்பப் பாரு இந்த ரசம் சோற விட்டா வேற கதியே கெடையாது எனக்கு.... "எனச் சொல்லிக் கொண்டே அழத் தொடங்கி விட்டாள் காளியம்மாள்!

     "உன்கிட்ட நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன்! ஆத்தா வச்சுக் கொடுக்கிறத நான் சாப்பிட்டுக்கிறேன்! என்னோடத நீயே சாப்பிடுணு! இப்போவும் அதத்தானே பண்ணிக்கிட்டு இருக்கோம்! ஏதோ புதுசா பண்ணுற மாதிரி சொல்லுற! விடுடி இதெல்லாம் பெருசா எடுத்துக்கக் கூடாது! நம்மள மாதிரி ஏழப் பட்டவங்களுக்கெல்லாம் குடிக்கிறதுக்கு கஞ்சி கெடைக்கிறதே பெருசா இருக்கு! அதையாவது மூணு வேல முழுசா கெடைக்கணும்னு ஆண்டவன வேண்டிக்க! அது போதும்டி நமக்கெல்லாம்"  காளியம்மாள் பக்கமா திரும்பி இடது கையால  அவளைத் தன் நெஞ்சோட அணைச்சுக்கிட்டா செல்லம்மா!

     செல்லமாளும் காளியம்மாளும் இருவரும் நகமும் சதையும் போல இணைபிரியாத கூட்டாளிக! சின்ன வயசுல நொண்டி விளையாட ஆரம்பிச்சதிலிருந்து உண்டான கூட்டு அது! ஆரம்பத்துல என்னவோ எல்லாரும் போல விளையாட்டுத்தனமா தான் ஒன்னும் மண்ணா பேச ஆரம்பிச்சாளுங்க. அந்தக்கூட்டு தொடர்ந்து பட்டாம்பூச்சி பறக்குற மாதிரி அவளுகளோட சேர்ந்து வெரசா வளர ஆரம்பிச்சது!  ஒருவாட்டி அஞ்சாறு பொட்ட புள்ளைகயெல்லாம் ஒண்ணாச் சேர்ந்து கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிட்டு இருந்தாளுங்க. அப்போ அவளுக்கு வயசு எட்டு ஒன்பது இருக்கும். எல்லோரும் மாறி மாறி ஒளிஞ்சி விளையாடிக் கொண்டிருந்தாளுங்க. ரொம்ப நேரமா விளையாண்டதுலே நேரம் போனதே தெரியலே. திருடனைக் கண்டுபிடிக்கிற விளையாட்டுல செல்லம்மாளோட  முறை வந்தப்ப எல்லாரையும் கண்டுபிடிச்சிட்டா. ஆனா ரொம்ப நேரமாக தேடியும் காளியம்மாள மட்டும் கண்டுபிடிக்க முடியலே. மத்த பிள்ளைகளோடு சேர்ந்து காளியம்மாளத் தேடும்போது அகப்படவேயில்லே. மேற்காலே இருட்டுக்கிட்டு வந்ததனால மத்த புள்ளைங்க வீட்லே தேடுவாங்கன்னு எல்லாரும் ஓடி விட்டார்கள். செல்லம்மா மட்டும் விடாம காளியம்யம்மாளத் தேடிக்கிட்டு அங்கே இங்கே அலைஞ்சுகிட்டு இருந்தாள். ரொம்ப நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியாமப் போனது. அதனாலே அவளுக்கு அழுக தாங்க முடியாம கண்ணுலே இருந்து அருவி மாதிரி கண்ணீர் கொட்டத் தொடங்கிருந்தது! அப்பவும் அவளால காளியம்மாளக் கண்டுபிடிக்க முடியதது பெருத்த வேதனையை தந்திருக்க வேண்டும் செல்லமாளுக்கு. உள்ளுக்குள்ள இன்னைக்கு காளியம்மாள கண்டுபிடிக்காம வீட்டுக்கு போக கூடாதுன்னு முடிவு பண்ணிக்கிட்டு அங்கேயும் இங்கேயும் ஓரிடம் விடாமத் தொடர்ந்து தேடிக்கிட்டே அவள் இருந்தாள். விளையாட ஆரம்பிச்சதிலிருந்து எங்கயெல்லாம் ஒளிஞ்சி விளையாண்டோமுனு யோசிச்சுப் பார்த்து அந்த இடம் முழுவதும் ஒன்னு விடாம தேடிக்கிட்டேயிருந்தாள் செல்லம்மாள். அப்படி தேடும்போதுதான் மாரியப்பனோட வீட்டு கொல்லையில இருக்க வைக்கோல் படப்புல சின்ன பொண்ணோட காலு மட்டும் தெரிந்தது. அது ஒரு வேளை காளியம்மாளோடதா இருக்கலாமுனு ஓடி வந்து வெளக்கிப் பார்த்தப்ப அது உண்மையிலே காளியம்மாவேதான் இருந்தாள். மயங்கிப் போயி கெடந்தா. செல்லம்மாளுக்கு என்ன பண்றதுன்னு தெரியாம, அவளத் தூக்கி தோலுல போட்டுக்கிட்டு ஒரே ஓட்டமா காளியம்மாளோட வீட்டுக்கு கொண்டு வந்து அவ அம்மா கிட்ட ஒப்படைச்ச பிறகுதான் அவளுக்கு உசுரே திரும்பி வந்தது! காளியம்மாளோட ஆத்தா  கொஞ்சமும் தாமதிக்காம முகத்துல தண்ணியடிச்சதும் விசுக்குன்னு தூக்கிப்போட்டு எந்திரிச்சு உட்கார்ந்திட்டா! கொட்டக் கொட்ட அவ முழிக்கிறதைபார்த்த பெறகுதே காளியம்மாளோட ஆத்தாவுக்கும் செல்லம்மாளுக்கும் போன உசுரு திரும்பி வந்த மாதிரி இருந்தது! கிழக்கு பக்கம் பார்த்து திரும்பி "யேன் குல சாமி! அய்யனாருதே யேன் புள்ளயக் காப்பாத்திருக்காரு"எனச் சொல்லிக்கிட்டே கீழே விழுந்து கும்பிட்டு நிமிர்ந்தாள் காளியம்மாளோட ஆத்தா!

      கண் முழிச்சதிலிருந்து வச்ச கண்ண எடுக்காம செல்லம்மாளையே பார்த்துகிட்டு இருந்தா காளியம்மா! சட்டென எதுவும் பேசாமல் படக்குன்னு எந்திரிச்சு செல்லம்மாள இறுக்க கட்டிப் புடிச்சுக்கிட்டா! பதிலுக்கு   செல்லம்மாளும் விடாமல் அவளைக் கட்டிக்கிட்டா!

   அதுக்குள்ளார வெவரம் தெரிஞ்சு சுத்திருக்க வீட்டுக்காரிகயெல்லாம் ஒன்னாச் சேர்ந்து கூடி நின்று விட்டார்கள். கூடிய பொம்பளைங்க சும்மா இருக்க மாட்டாம.... ஆளாளுக்கு அவளுகளுக்கு வாய்க்கு வந்தபடி இல்லாததையும் பொல்லாதையும் சேர்த்து வச்சுப் பேச  ஆரம்பித்து விட்டார்கள். ஒல வாய மூடலாம் ஆனா ஊரு வாய மூட முடியாதுன்னு சும்மாவா சொல்லி இருக்காங்க. அது நெசங்கற மாதிரி நடந்துகிட்டு இருந்தது.

      "ஏண்டி மாரியம்மா! இந்த வெளங்காதவ கூட ஏண்டி உன் புள்ளைய சேர விடுற! இவ கூட சேர்ந்தா உருபுட்டாப்லதான்" எனச் செல்லமாளப் பார்த்து கூறினாள் கூட்டத்தில் ஒருத்தி!

      " நானும் இருட்டி இவ்வளவு நேரம் ஆயிருச்சு! எம்மகளைக் காணமுன்னு வெளியெல்லாம் தேட ஆரம்பிச்சிட்டேன். ஆனாலும் கண்ணுல அகப்படவேயில்லை. அவ கூட வெளையாண்ட பிள்ளைகயெல்லாம் வீட்டுக்கு அப்பவே வந்திருச்சு! அப்பத்தே....‌ இந்தச் செல்லம்மா என் மகளைத் தூக்கிக்கிட்டு வந்தா...." எனக் கூறியபடி செல்லமாள நன்றியோடு பார்த்தாள் மாரியம்மா!

     "உனக்கு அவளைப் பத்தி என்ன தெரியும்? நீ பாட்டுக்கு ஏதேதோ பேசிகிட்டு திரியிற... அவளயெல்லாம் உன் மக கூட சேர விடாத. அம்புட்டு தான் சொல்லுவேன்" என்றாள் மாரியம்மாவோட பக்கத்து வீட்டுக்காரி பேச்சியம்மா!

     "நீ என்னக்கா இப்படிச் சொல்லுற? "எனப் புரியாத மாதிரி பேச்சியம்மாளப்   பார்த்தாள் மாரியம்மா!

     "உனக்கு ஒண்ணுமே தெரியாது! பச்ச குழந்தை மாதிரி நடிக்காதடி! அவ யாரு அவ எங்க இருந்து வந்தா எல்லாம் மறந்து போச்சா?" செல்லம்மாளை வெறுப்போட பார்த்தபடி கூறினாள் பேச்சியம்மாள்!

       "நீ என்ன சொல்ல வாரேங்கிறத நேரடியா பளிச்சுன்னு சொல்லுக்கா?" என்றாள் காளியம்மாளின் ஆத்தா பக்கத்து வீட்டு பேச்சியம்மாளைப் பார்த்து. 


     "ஒனக்கு எல்லாமே மறந்து போயிரும். எங்களுக்கெல்லாம் அப்படி ஒன்னும் மறதி இல்ல! யாரும் மறந்தாலும் நான் மட்டும் மறக்க மாட்டேன்! ஊரு விட்டு ஊரு வந்து பஞ்சம் பொளைக்க வந்த பரதேசி கூட்டத்துல ஒருத்தி இவளோட ஆத்தா. இவ ஆத்தா பூரணி வந்தபோது வீசுன கையும் வெறும் கையும் வந்தா.... இப்ப பாரு... இந்த ஊர்ல அவளுக்குன்னு ஒரு வீடு இருக்கு. அது மட்டுமா இவளோட ஆத்தாதே கொத்துக்காரியா வேற இருக்கா... அதனால வேல வெட்டிக்கு போகணும்னா கூட அவகிட்ட போய் நிக்க வேண்டியது இருக்கு.  என்ன பண்றது. பொம்பளைங்களா பார்த்ததுமே நம்ம வீட்டு ஆம்பளைங்க வாய பொளந்துகிட்டு தலையை ஆட்டிடுறாங்க. கடைசில நாம தானே சீ பட்டு  நிற்க வேண்டிருக்கு...."செல்லமாளைப் பார்த்து பொரிந்து தள்ளி விட்டாள் பேச்சியம்மாள். விட்டிருந்தால் செல்லம்மாளை உண்டு இல்லையென பண்ணிருப்பாள்.

அவளது பேச்சில அத்தனை வெறுப்பு மண்டிக் கிடந்தது.


     "நீ சொல்றது என்னவோ உண்மைதான்  அக்கா. அதுக்கு இந்த பச்ச மண்ணு என்ன செய்யும்..."


    "நல்லா இருக்குடி உன் பேச்சு... எதுக்கும் ஜாக்கிரதையா இருந்துக்கோன்னு சொல்றேன்.நீ  என்னடாண்ணா.... தும்ப விட்டுட்டு வாலப் புடிக்கிற கதையா பேசிக்கிட்டு இருக்கே.... எனக்கென்ன வந்தது. நான் பாட்டுக்கு என் வேலைய பாத்துட்டு போறேன். பக்கத்து வீட்டு காரின் உனக்கு யோசனை சொன்னேன் பாரு. எனக்கு இது வேணும் இன்னமும் வேணும்"கழுத்தை ஒரு வெட்டு வெட்டியதோடு ஒரு விறுனு விறுன்னு வீட்ட பார்த்து நடந்து போயிட்டா பேச்சியம்மா. 


      கோழியோட அடையிலிருந்து புதுசா வெளிய வந்த கோழிக்குஞ்சு மாதிரி காளியம்மாளையும் அவ ஆத்தா மாரியம்மாளையும் மாறி மாறி பாத்துக்கிட்டு நின்ன செல்லம்மா எதுவும் பேசாம தன்னோட வீட்ட நோக்கி தனியாக நடந்து போய்கிட்டு இருந்தாள். இந்த சம்பவத்துக்கு பெறகு செல்லம்மாளும் காளியம்மாளும் நகமும் சதையுமாக மாறி இருந்தார்கள்.