பகுதி 02
"ஏண்டா மாரியப்பா... இன்னைக்காவது பருத்தி தேனிச் சந்தைக்கு போயிருமா....? இல்ல போன வட்டம் மாதிரி தாமதமாகத்தான் போகுமா....?"பருத்தி எடை போடுவதை ஏதோ புதுசா பாக்கிற மாதிரி பார்த்துக்கிட்டு நின்னுட்டுயிருந்த மாரியப்பனிடம் கேட்டார் குருசாமி.
"அதெல்லாம் சீக்கிரம் போயிரும் மாமா.... போன வட்டம் கொஞ்சம் தாமதமாயிருச்சு.... அதுக்காக இந்த வட்டம் விட்டுற முடியுமா...." தலையில் கட்டி இருந்த துண்ட உதறி திண்ணையில விரிச்சு உட்கார்ந்துகிட்டே சொன்னான் மாரியப்பன்.
தலையில தேச்சதால முகத்துல வழிஞ்சிகிட்டு இருந்துச்சா இல்ல முகத்தில் வழிஞ்சதை அள்ளி தலையில தேச்சிகிட்டானா என கண்டுபிடிக்க முடியாத மாதிரி எப்பவும் எண்ணை வடிகிற முகம் மாரியப்பனோடது. வண்டி மை மாதிரி கருத்த நிறம். ஊர காக்குற அய்யனார் மாதிரியான வலுவானா உடம்பு. இருட்டுல அவன் மனுசங்கறத கண்டுபிடிப்பதற்காக படைக்கப்பட்ட மாதிரி கோழி முட்டைக்கண்ணு. பலாச்சுளை உதடு. அருவா மீசை. மழை தண்ணி தீண்டுன மாதிரி சில்லுனு ஒரு பார்வை. சுழட்டிவிட்ட பம்பரம் மாதிரி எப்போதும் சுறுசுறுப்பு. சுருக்கமா சொல்லணும்னா குருசாமிக் குடும்பரோட நிழல். அவரோட கூடப்பிறந்த அக்கா சீலக்காரியோட ஒரே மகன்தான் மாரியப்பன்.
"டேய் மாரியப்பா...."
"சொல்லு மாமா..."
"பருத்தி மூட்டை எல்லாம் ரெடியாயிருச்சான்னு பாருடா...."
"இதோ பாக்குறேன் மாமா" தின்ணையிலிருந்து எழுந்து வீட்டுக்குள் நுழைந்தான். வீட்டின் பட்டாசலையில எடை போட்ட பருத்தி மூட்டைக வரிசையா அடுக்கி கிடந்தது. அதுக்கு பக்கத்துலயே உத்திரத்தில தராசுகட்டி தொங்கவிட்டு பருத்தி அள்ளி நாலைந்து பேரு எடை போட்டுக்கிட்டு இருந்தார்கள். எடை போட்ட பருத்திய முட்டையில் அள்ளி ரெண்டு பேரும் தினிச்சப்ப சாக்கு நிறைந்துவிட்டது. உடனே ஆளுக்கு ஒரு பக்கமா கோணிச்சாக்க தூக்கி பிடிச்சு தரையோடு அடிச்சு பருத்தி சாக்குல இறங்கியதும் மீண்டும் பருத்தி அள்ளித் தினுச்சு நிரப்பிக் கொண்டிருந்தார்கள். மாறி மாறி ஒவ்வொரு மூட்டைக்கும் இதே போல வேலை நடந்துக்கிட்டு இருந்தது.
உத்திரத்தின் ஒரு ஓரத்தில் அரிக்கன் விளக்கு மலையில் மறைஞ்ச சூரியனோட வெளிச்சத்தை கண்ணாடிக்குள்ள சிறைபுடிச்ச மாதிரி எரிந்துகொண்டு இருந்தது. அதோட திரிய தூண்டிவிட்ட மாரியப்பன் "அண்ணாச்சி வேலையெல்லாம் எப்ப முடியும்? மாமா கேட்டுட்டு வரச் சொன்னாரு?"
"அதிகபட்சம் இன்னும் இரண்டு மூட்டை பருத்தி சேருமுன்னு நினைக்கிறேன் மாரியப்பா.... எப்படியும் ராத்திரி வண்டியைக் கிளப்பிற வேண்டியதுதான்" பருத்தியை மூட்டைகள் திணித்துக் கொண்டே சொன்னான் முருகன்.
"அப்பன்னா சரிதான் அண்ணாச்சி" பருத்தி மூட்டை மேல மையால அடையாளக் குறி போட்டு அதுக்கு பக்கத்திலேயே மூட்டையோட எண்ணிக்கையும் வரிசைப்படி ஒரு ஆள் எழுதிக்கிட்டு இருந்தத பாத்துக்கிட்டே திண்ணைக்கு வந்து சேர்ந்தான் மாரியப்பன்.
"இன்னைக்கு ராத்திரி புறப்பட்றலாம் மாமா. ஏறக்குறைய எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சு. பருத்தி மூட்டை மேல அடையாளக் குறியும் போட்டாச்சு"
குருசாமி எல்லா நேரமும் வெத்தலை போடுவதில்லை. வேலையெல்லாம் முடிந்துவிட்ட திருப்தி அவர் மனதில் தோன்றும் போது மட்டுமே போட்டுக் கொள்ளும் பழக்கம் இருந்தது. குறிப்பரிந்து கொண்ட மாரியப்பன் மறுபடியும் திண்ணையில் அமர்ந்து கொண்டு குருசாமி குடும்பர் வெத்தலை போடும் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.
வெத்தல போடுறத சிற்பி சிலையை செதுக்குற மாதிரி நுணுக்கமா எப்பவுமே செய்யக் கூடியவர் தான் குருசாமி குடும்பர். அவர் வெத்தல போடுறதுலையேயும் ஒரு பக்குவம் இருந்தது. நல்ல விளைஞ்ச சுருள் பாக்க எடுத்து கட வாயில போட்டு கடார் கடார்னு அதை மென்னு தூளாக்கி தன்னுடைய எச்சிலோடு சேர்த்து நல்லா ஊற வச்சதும் ஒரு பக்குவம் வந்துடும். அதுக்குள்ளவே ஒவ்வொரு வெத்தலையா எடுத்து அதோட முன் பக்கத்தையும் பின்பக்கத்தையும் தன்னோட தொட வேட்டியில் வச்சு தொடச்சிட்டு காம்பக் கிள்ளி பக்கத்துல வச்சுட்டு, சுண்ணாம்ப எடுத்து பதமா பின் பக்கமும் முன்பக்கமும் பட்டும் படாமலும் தடவி மடிச்சு வாயில போட்டு மெல்லும் போது ரத்த சிவப்புல எச்சில் ஊரி உதடு முழுவதும் பனி போல் படரும் அழகே தனி தான். "யாரு வேணுமுன்னுடாலும் வெத்தல போடலாம் ஆனா யேன் மாமன் மாதிரி அத்தனை அழகா லட்சணத்தோட யாருமே போட முடியாது" என அந்த அழகை ரசிப்பதற்கே ஊருக்குள் ஒரு பெண்கள் கூட்டம் இருந்தது.
"மாரியப்பா..."
"சொல்லு மாமா!"
"பருத்தி பெறக்கும்போது காளியம்மா புள்ளைக்கு பருத்திக்கூடு காலுல குத்திருச்சுன்னு செல்லம்மா சொல்லுச்சுடா. அந்த புள்ளைக்கு இப்ப எப்படி இருக்குன்னு ஏதாவது தெரிஞ்சுகிட்டியா..."
"அதுக்கு அப்பவே செல்லம்மா மூலிகை வைத்தியம் பார்த்துடுச்சு மாமா. இப்ப கொஞ்சம் பரவாயில்லை என்றுதான் கேள்விப்பட்டேன்"
"உண்மைய தான் சொல்லுறியா.... " சந்தேகத்தோட மாரியப்பனப் பார்த்தவர் "எதுக்கும் ஒரு எட்டு போயி என்ன விவரமுன்னு கேட்டுட்டு வந்துடுரியா...." எனக் கேட்டார்.
"இப்படியெல்லாம் நீங்க கேப்பீங்கன்னு எனக்கு தெரியும் மாமா.... அதனாலதான் நானே இங்க வாரதுக்கு முன்னால விசாரிச்சு தெரிஞ்சுகிட்டேன். பெரிய காயம் எல்லாம் எதுவும் இல்ல மாமா. செல்லம்மா ஏற்கனவே மூலிகை பறித்து கொடுத்துவிட்டுருக்கு. அதை ரெண்டு நாளைக்கு காயத்து மேல புழிஞ்சு விட்டாலே போதும்.... காயம் தன்னால் ஆறிப் போயிடும். இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா என்ன? ஏதோ புதுசா கண்டது மாதிரி பேசுறீங்க"
"அதுக்கு இல்லடா.... குமரி புள்ளைங்க. நம்ம தோட்டத்துக்கு வந்து எதுனாலும் நடந்துச்சுன்னா அதுக்கு நாம தானே பொறுப்பு. அது மட்டும் இல்லாம செல்லம்மா மேல எப்படா சேத்த வாரி இறைக்கலாம்னு ஒரு கூட்டம் காத்து கிடக்கு. அதுக்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. ஏற்கனவே அந்த புள்ள தாயை பறி கொடுத்துட்டு தவிச்சு நிக்குது. நாமதானே அந்தப் புள்ளைக்கு ஒத்தாசையா இருக்கணும்"
"மாமேன் சொல்லுக்கு மறு பேச்சு உண்டா என்ன?"தலையாட்டி ஆமோதித்தான் மாரியப்பன்.
மாரியப்பனை பார்த்து சிரித்துக் கொண்டே "இந்த வாட்டி தேனி சந்தைக்கு வழக்கம் போல தானே வண்டி கட்டி போகப் போற...."
"என்ன மாமா புதுசா கேக்குற மாதிரி கேக்குறிக.... வளமை போல தான் மாமா இப்பவும்... "
"சரி மத்த வண்டிக்காரங்களுக்கு எல்லாம் சொல்லிட்டியா...."
"யேன் மாமனுக்கு இன்னைக்கு என்ன ஆச்சு? எப்பவுமே இப்படி சந்தேகத்தோட கேட்க மாட்டீங்களே! இன்னைக்கு ஒவ்வொன்னையும் புதுசா கேக்குற மாதிரி கேட்டுக்கிட்டு நிக்கிறீங்க. யேன் மாமா என் மேல எதுவும் சந்தேகம் வந்திருச்சா என்ன?"
"தன்னோட நிழலை யாராவது சந்தேகப்படுவாங்களாடா....."
"அப்புறம் ஏன் மாமா... இன்னைக்கு புதுசா இத்தனை கேள்வி கேக்குறிங்க?"
"என்னமோ தெரியலடா.... மனசுல ஒரு மாதிரி படபடப்பா இருக்கு. ஒரு நாளும் எனக்கு இப்படி இருந்ததில்லை.... அதுதான் ஒவ்வொன்னையும் எனக்கு கேட்கத் தோணுது. சூதானமா போயிட்டு வரணும்டா... நீ திரும்பி வரும் வரைக்கும் எனக்கு நிம்மதியே இருக்காது பார்த்துக்கோ"
"நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க மாமா. எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். மனசுல கலக்கம் இல்லாம அய்யனார்சாமி மேல பாரத்தை போட்டுட்டு நிம்மதியா படுத்து தூங்குங்க..."
" சரி நீ ஏதாவது சாப்பிட்டியா இல்லையா.... நீ போயி சாப்பிட்டு வாடா. நான் இங்க இருக்கேன்"
சரி என தலையாட்டிவிட்டு எழுந்த மாரியப்பன் "இந்தெ அம்மாவே வந்திருச்சுங்க மாமா"
"மாமனுக்கு மருமகனுக்கும் வேலைன்னு வந்துட்டா நேரம் போறதே தெரியாது! அதுதான் நானே சோத்த எடுத்துக்கிட்டு வந்துட்டேன்! சரி வாங்க ரெண்டு பேரும் கை கால கழுவிட்டு வந்து சாப்பிடுங்க"எனச் சொல்லிக் கொண்டேன் தூக்குவாளியில் கொண்டு வந்த கேப்பைக் களியை வெங்கல கரண்டியில் எடுத்து இரண்டு கும்பாவில் அள்ளிப்போட்டு கிண்ணத்தில் கொண்டு வந்திருந்த கருவாட்டு குழம்பு ஊற்றி வைத்தார் சீலக்காரி.
திண்ணையில் ஏறி சம்மனங்கால் போட்டு அமர்ந்து கொண்டு "என்னம்மா சோறு கொண்டு வந்து இருக்கேன்னு சொன்ன... இங்க பார்த்தா கும்பாவுல கேப்பை களி இருக்கு.... இதுக்கு பேரு தான் சோறா..."என விளையாட்டுத்தனமா தன் அம்மா சிலக்காரியைப் பார்த்துச் சொன்னான் மாரியப்பன்.
"டேய் வர வர உனக்கு குசும்பு அதிகமாயிருச்சுடா. எல்லாம் உன் மாமன் கொடுக்கிற இடம். ஐயா துறைக்கு தினசரி சோறு வடிச்சு கொட்டினால் தான் தொண்டையில் இறங்குமோ.... யேன்! துரை கேப்பை களி எல்லாம் சாப்பிட மாட்டாரோ....?" என மகனைப் பார்த்து போட்ட சத்தத்தில் காதில் கிடந்த தங்கத்தாலான தண்டட்டி இடம் வலமாய் ஆடிக் கொண்டிருந்தது.
"உனக்கு வயசாகி போயிருச்சு! பச்ச நெல்லு குத்தி சோறாக்க உன்னால முடியலன்னு சொல்லு! அதனால கேப்பயைய திருச்சு களி கிண்டிட்டே. அதுதான உண்மை. அதை மறைக்கிறதுக்கு என்ன விரிச்சிக்கிட்டு இருக்க...."
"டேய் உன்ன...." எனச் சொல்லிக் கொண்டு தூக்குவாளி மூடியைத் தூக்கி மகன் மேல் விட்டெ எறிந்தாள் சீலக்காரி. பெத்தவளோட ஒவ்வொரு அசைவையும் உணர்ந்திருந்த மாரியப்பன் சிலக்காரி கையை தூக்கியதுமே படக்குனு கீழே குனிஞ்சுதால ஒக்காந்திருந்த தின்ன சுவத்து மேல தூக்குவாளி மூடி பட்டு தெறிச்சி வந்து கீழ விழுந்து உருண்டுகிட்டு இருந்தது.
நடக்கிறது அதுவரைக்கும் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்த குருசாமிக் குடும்பர் "என்னக்கா.... அவெஞ்சர் சின்ன பையன் எதாவது விளையாட்டுக்கு சொன்னான்டா. நீயும் அவ மேல தூக்குவாளி மூடியை தூக்கி எரியிற. புள்ளைக்கு படாத இடத்துல பட்டு ஏதாவது ஆயிட்டா என்ன பண்ணுவ? எதையும் யோசனை பண்ணிச் செய்யுக்கா...."
"அட நீ வேற.... இவனப் பத்தி எனக்கு தெரியாதா... கழுவுற மீன்ல நழுவுற மீனு இவன். பார்த்தையில. தூக்குவாளி மூடி கீழ உருண்டு கிட்டு கெடக்கு. அவன் அவன் பாட்டுக்கு கும்பாவுல போட்ட களிய முழுசா முழுங்கிட்டு நிக்கிறான் பாரு.... "என்றவர் மாரியப்பன் பார்த்து"கும்பாவை கொண்டாட.... இன்னும் கொஞ்சம் களி போடுறேன். நல்லா தின்னு புட்டு அப்பத்தான ஆத்தாவை திமிரா பேச முடியும்...." எனச் சொல்லிக் கொண்டே தூக்கம்வாளியிலிந்த களியை மாரியப்பனோட கும்பாவில் அள்ளிப்போட்டு கருவாட்டுக் குழம்பு எடுத்து ஊற்றினார் சீலக்காரி.
"ஏம்மா பூராத்தையும் எனக்கே அள்ளி போட்டுட்டியே. மாமாவுக்கு இன்னும் கொஞ்சம் போட வேண்டியதுதானே"
"யேன் தம்பி எவ்வளவு சாப்பிடுவான்னு எனக்கு தெரியும். அதே மாதிரி நீ எவ்வளவு திம்பங்கறதுமா எனக்கு தெரியும். அதனால போட்டதை தின்னுகிட்டு பேசாம இரு..."
சாப்பிட்டு முடித்து தின்ணை ஓரத்துக்கு சென்றபோது அங்கு தயாராக வெண்கல அண்டா நிறைய தண்ணீரும் அதற்குள்ளாக வெங்கல செம்பும் மிதந்து கொண்டிருந்தது. வெங்கல செம்பில் தண்ணீரை மோந்து கைகழுவி வாய் கொப்பளித்து விட்டு திரும்பிய போது சீலக்காரி கையில் வெள்ளை துண்டோடு நின்று கொண்டிருந்தார்.
"நீ எதுக்குக்கா எடுத்துட்டு வந்தெ? நானே எடுத்துக்க மாட்டேனா?"எனச் சொல்லிக் கொண்டே துண்டால் கை வாயைத் துடைத்துக் கொண்டு மறுபடியும் திண்ணையை நோக்கி நடந்தார். சிலக்காரியும் அவர் பின்னாலையே வந்து கொண்டிருந்தார்.
"யேன் குருசாமி! இன்னைக்கு ராத்திரி பருத்தி மூட்ட தேனி சந்தைக்கு போகுதா?"
"ஆமாம் அக்கா! போன வாரம் ரொம்ப தாமதமாகத்தான் அனுப்பி வச்சோம். அதனால இந்த முறை சரியான நேரத்துக்கு அனுப்பி வைக்கணும். இல்லாட்டி நம்ம மேல இருக்க நம்பிக்கை செத்துப் போய்விடுமில்லக்கா... கால நேரத்தோட எதையும் சரியா செஞ்சிரனும். அதுதான் உள்ளாரா வேற சுறுசுறுப்பா நடந்துகிட்டு இருக்கு"
"நீ சொல்றது சரிதான்! நாம செஞ்சுகிட்டு வர தொழிலுல சரியான சமயத்துல அதை செய்ய முடியலன்னா நமக்கு கெட்ட பேரு வாரதோட நிக்காம. நம்ம மேல இருக்க நம்பிக்கையும் செத்துப் போயிடும். ஊருக்குள்ள நமக்குன்னு ஒரு பேரு வேற இருக்கு. அந்தப் பேரு நாம நடந்து கிட்ட நடத்தையால் கிடைத்தது. அதனாலதான் நமக்கும் மரியாதை இருக்குது. எல்லாத்தையும் திட்டமிட்டபடி நீ சரியாத்தான் செஞ்சுகிட்டு இருக்க. அதை அப்படியே தொடர்ந்து செஞ்சிடுவேன்கிற நம்பிக்கை எனக்கு எப்போதும் இருக்கு" என்றவர் தன் தம்பி குருசாமியை பெருமிதமாக பார்த்தார் சீலக்காரி.
அதற்கிடையில் வீட்டுக்குள்ளே வேலை செய்து கொண்டிருந்த ஆட்கள் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்து சோம்பல் முடித்துக் கொண்டு நின்றார்கள். அவர்களை விளக்கிக் கொண்டு முன்னே வந்த முருகன் "ஐயா வேலையெல்லாம் முடிச்சாச்சு! மாட்டு வண்டி வந்துருச்சுன்னா மூட்டைய அதுல ஏத்தி விட்டுரலாம்"என குருசாமியைப் பார்த்து சொல்லிவிட்டு தலையில் கட்டியிருந்த துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டான் முருகன்.
முருகன் சொன்னதை கேட்டதும் அதுக்காகவே காத்திருந்த மாரியப்பன் வீட்டின் கொல்லைப்புறத்திற்கு ஓட்டமும் நடையுமாக வந்தடைந்தான். கட்டு தரையில் கட்டியிருந்த காளை மாடுகளை அவிழ்த்துக்கொண்டு அங்கிருந்த மாட்டு வண்டியில் காளைகளை நுகத்தடியில் பூட்டிக்கொண்டதோடு மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு வாசல் பக்கமா வந்து பருத்தி மூட்டைகளை ஏற்றுவதற்கு தோதாக வண்டியைக் கொண்டு வந்து நிறுத்தினான். தேனி சந்தைக்கு கூட வரும் மற்ற வண்டிகளின் நிலைமை என்ன? எப்ப வரும்? எல்லா வண்டிகளும் தயாரா இருக்கா? யார் யார் வாறாக? தாமதமானா மாமன் நம்மளத்தே துருவித் துருவி கேட்பாரு. அதோட நெலவரம் என்னன்னு பார்த்திட்டு வந்திரலாம்.அப்பதே நிம்மதியா வேலையப் பாக்க முடியும். பல்வேறு விதமான கேள்விகள் அவனது மண்டையை குடைந்து கொண்டிருந்தது. அதையெல்லாம் தெரிஞ்சுகிறது ரொம்ப அவசியம். முதல்ல அதை போய் பாக்கணுமென்ற யோசனையோடு அங்கிருந்து நகர்ந்திருந்தான் மாரியப்பன். நடக்கிற ஒவ்வொரு நிகழ்வையும் அருகிலிருந்து கவனமாக பார்த்துக் கொண்டிருந்தார் குருசாமி.
முருகனும் மற்ற வேலை ஆட்களும் அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை தொடங்கியிருந்தார்கள். இரண்டு பேர் பருத்தி மூட்டைகளை தூக்கிக் கொண்டு வந்தபோது மாட்டு வண்டி மேல் இரண்டு பேர் நின்று கொண்டு அதனை வாங்கி வரிசையாக அடுக்கிக் கொண்டிருந்தார்கள். முதலில் குறுக்கு வாக்கில் பருத்தி மூட்டைகளை அடுக்கியவர்கள் அதன் பின்பு நீளவாக்கில் அதன் மேல் அடுக்கிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு குட்டி மலையைத் தூக்கி மாட்டு வண்டியில் வைத்தது போன்ற தோற்றத்தை பார்ப்பவர்களுக்கு தந்திருந்தது. வாரம் வாரம் சந்தைக்கு பருத்தியை அனுப்பும் வாடிக்கையான நிகழ்வு என்றாலும் இன்று தான் புதிதாய் நடப்பது போலும் அதனைப் புதிதாய்ப் பார்ப்பது போல் வச்சகண் வாங்காமல் ஒவ்வொன்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் குருசாமி!
அதற்கிடையில் தேனிச் சந்தைக்கு போகும் மற்ற மாட்டு வண்டிகளின் வண்டிச்சக்கரம் உருண்டோடும் சத்தமும் காளை மாடுகளின் குலம்பொலிச் சத்தமும் இதோ வந்துட்டேன்னு தெருவில் எதிரொலித்துக் கொண்டிருந்தது! வண்டிகளுக்கு முன்பாக வேகு வேகென்று கைகளை வீசிக்கொண்டு முன்னால் வந்து கொண்டிருந்தான் மாரியப்பன். சிறிது நேரத்திற்கெல்லாம் மாட்டு வண்டிகளின் சக்கரம் 'கடகடவென்ற' சத்தத்தோடு பலமாக ஒலித்துக் கொண்டு தெருவின் முனையைக் கடந்து குருசாமி வீடருகே வந்து நின்றது!
மொத்தமாக நான்கு மாட்டு வண்டிகள் வந்திருந்தன. ஒவ்வொன்றும் பெரும் பெரும் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்து சேர்ந்திருந்தன. அதில் முதல் வண்டியில் வண்டி ஓட்டியாக இருந்தவனை பார்த்த குருசாமி "ஏண்டா கருப்பசாமி! இன்னைக்கு நீதான் வண்டி ஓட்டி வந்திருக்க போல! ஏன் உங்க அப்பேன் வரலையா? அவனுக்கு என்ன ஆச்சு? சின்னப்பய உன்னை அனுப்பி வச்சிட்டு அவன் வீட்ல என்ன செஞ்சுகிட்டு இருக்கான்"
"அப்பா வரல பெரியப்பா! அப்பா அப்பவே சொன்னாரு. குருசாமி கிட்ட போயி என்ன திட்டு வாங்க வைக்காத, பேசாம வீட்டுல கிட நான் போயிட்டு வாரேன்னு சொன்னாரு. நான்தான் பிடிவாதமா அவரு கூட சண்டை போட்டுட்டு வண்டிய ஓட்டிக்கிட்டு வந்துட்டேன்"
"உன்னோட கூட்டாளி மாரியப்பன் போறேன்னு சொல்லி, நீயும் துணைக்கு கிளம்பிட்டியாக்கும், ரெண்டு பயலும் ஒன்னா சேர்ந்துகிட்டு பண்ற சேட்டை இருக்கே. தாங்க முடியலடா. சொன்னா எங்க கேக்க போறீங்க"
"அப்படிலாம் இல்ல பெரியப்பா. நீங்க இருக்கும் போதே நாலு விஷயத்தை கத்துக்குறாம நாங்க எப்ப கத்துக்க போறோம். உங்க காலத்திலேயே நாங்க கொஞ்சம் வளர்ந்து ஆளாகிக்கிட்டோம்னா அதுக்கு பிறகு எங்க பொழப்பு ஓடிருமில்ல. அதுதான் நாங்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கோம்"
"நல்லா சாமர்த்தியமா பேசுற டா. நீ பொழச்சுகுவடா.... ரெண்டு பயல்களும் கவனமா போயிட்டு திரும்பி வரணும். இடையில எந்த சேட்டையும் பண்ணக்கூடாது. காலம் கெட்டு கிடக்கு. பார்த்துச் சூதானமா இருக்கணும்"
"சரிங்க பெரியப்பா"
"வீட்ல சாப்பிட்டு வந்தியா இல்லையா?"
"பச்ச நெல்லுச் சோறாக்கி அம்மா தந்தாங்க பெரியப்பா..."
"மாமா..."என மாரியப்பன் வந்து நின்றான்.
"சொல்லுடா என்ன வேணும்?"
"வண்டில எல்லாத்தையும் ஏத்தியாச்சு மாமா! நீங்க சொன்னா கிளம்ப வேண்டியது தான்"
"மாட்டுக்கு வேண்டிய தீவனத்த எல்லாம் எடுத்து வச்சுக்கிட்டியா?"
"எல்லாம் தயாரா இருக்கு மாமா"
இருவரும் அவர்களது வண்டியை நோக்கி சென்றார்கள்.
வண்டியில் ஏற்றிய பருத்தி மூட்டை அசைந்து விடாமல் இருப்பதற்கு கொச்சை கயிறு கொண்டு குறுக்காகவும் நெடுக்காகவும் தறியில் துணி நெய்வது போல் இழுத்துக் கட்டி வைத்திருந்தார்கள்! வெறும் வண்டியாக இருந்தபோது தோளை நிமிர்த்தி கொண்டிருந்த செவலக் காளைகள் பாரம் ஏத்தியதும் மொத்த எடையும் காளையின் கழுத்தில் விழுந்து விடாமல் இருப்பதற்காகவும் எடையை சமப்படுத்துவதற்காகவும் பரவலாக மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தார்கள். மாட்டு வண்டியின் பின்பகுதியில் குடைவண்டி தூக்காமல் இருப்பதற்காக நீளமான கட்டை ஒன்று தரையை விட்டு சிறிது உயரத்தில் தொங்கும்படி கட்டப்பட்டிருந்தது! வண்டி ஓட்டியின் அமருமிடத்திற்கு கீழ்பகுதியில் பயணம் செய்யும் வழிப்பாதை காட்டுவதற்கும் சாலையின் பள்ளமேடு அறிந்து மாட்டு வண்டி ஓட்டுவதற்கு வசதியாக அரிக்கன் விளக்கு ஒன்றும் எரிந்து ஒளி தந்த வண்ணமிருந்தது.
அடைகாக்கும் கோழி தன் முட்டையிலிருந்து பொறிந்து குஞ்சுகளை கவனமாக வெளியே கொண்டு வருவதற்கு எடுக்கும் அத்தனை முயற்சிகளையும் குருசாமி பின்பற்றி அனைத்து வண்டிகளையும் கவனமாக சோதித்துக் கொண்டிருந்தார். ஒரு வழியாக திருப்தி அடைந்து மாரியப்பன் அருகே வந்து நின்றார் குருசாமி.
"டேய் மாரியப்பா! நான் ஏற்கனவே சொன்னது மாதிரி கவனமா போயிட்டு வரணும். விளையாட்டுத்தனமா இருக்கக் கூடாது. போற காரியத்துல மட்டும் தான் கண்ணா இருக்கணும். மத்த விவகாரத்தில் எதுலயும் தலையிடக்கூடாது. உன்ன நம்பி உன் கூட்டாளி கருப்பசாமி வந்திருக்கான். நம்மள நம்பி வந்தவங்க உசுருக்கு நாம தான் பொறுப்பு. அதை எப்பவும் நீ மறந்து விடக்கூடாது. மற்ற வண்டிகளோட சேர்ந்துதான் எப்பவுமே பயணம் செய்யனும். கூட்டத்தை விட்டு வண்டிகளை தனியா ஓட்டிப் போகக்கூடாது. தேனி சந்தைக்கு போகிற வரைக்கும் ஒரே மாதிரி ஒரே வேகத்துல ஒத்துமையா போய் வரணும். வழக்கம் போல துரைசாமி மச்சான் கடையில நம்ம பருத்தி முட்டையை போட்டுறு"
"வளக்கமா போடுற கடைதானம் மாமா! இது நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியணுமா என்ன? எல்லாத்தையும் நான் பார்த்துகிறேன் மாமா. நீங்க கவலைப்படாம படுத்து தூங்குங்க. துணைக்கு என் கூட்டாளி கருப்பசாமி வேற இருக்கான். அப்புறம் கவலை எதுக்கு உங்களுக்கு. அது மட்டும் இல்லாம மத்த வண்டிக்காரன் துணைக்கு இருக்காங்கல்ல. அப்புறம் எதுக்கு பயப்படனும் மாமா"மாரியப்பன் ஓட கண்ணில் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் மின்னலாய் ஒளியடித்தது. அதன் பிறகு குருசாமிக் குடும்பர் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
சீலக்காரி நன்கு முற்றிய தேங்காய் , சூடம் தீப்பெட்டி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வந்து குருசாமிக் குடும்பரின் கையில் கொடுத்தார். அதனை எடுத்துக் கொண்டு மாட்டு வண்டியின் முன்பாக சென்றார். மாரியப்பன் மாட்டுவண்டியில் ஏறி அமர்ந்து கொண்டு கையில் சாட்டை கம்பை ஏந்திக்கொண்டு புறப்பட தயாராக இருந்தான். குலசாமி அய்யனாரை நினைத்துக் கொண்டு சூடத்தை தேங்காயின் காம்பு பகுதியில் வைத்து தீப்பெட்டி கொண்டு பற்ற வைத்து அப்படியே கையை தூக்கி மூன்று சுற்று சுத்தியனார். அப்படியே ஓங்கிய கையை இறக்காமல் தேங்காயை தரையில் அடித்ததும் தேங்காய் சில்லு சில்லாக சிதறி நாளாபுரம் பரவியது. அவரது மனதிற்குள்மனதிற்குள் ஒரு திருப்தி பரவத் தொடங்கியது. அப்படியே இடது புறமாக நகர்ந்து குருசாமிக் குடும்பர் கொண்டதும் மாரியப்பன் செவலக்காளைகளை பிடித்திருந்த மூக்கணாங்கயிறை சுண்டியதோடு மாடுகளின் பிட்டத்தில் கால் கட்டை விரலால் நெம்பியதும் மாட்டு வண்டி கடகடவென்று உருண்டோடத் தொடங்கியது. சீலகாரியும் குருசாமிக்குடும்பரும் நான்கு மாட்டு வண்டிகளும் தெருவின் முனை கடந்து மறையும் வரை வட்சகன் எடுக்காமல் பார்த்துக்கொண்டே நின்றிருந்தார்கள். சீலக்காரியின் கண்கள் மட்டும் அந்த வாடை காற்றிலும் துளிர்த்திருந்தன.
No comments:
Post a Comment