ஊர் எல்லையில் இருக்கும் கருப்பசாமி கோவில் ஊர் திருவிழாவை மிஞ்சும் அளவில் ஒரே பரபரப்பில் மிதந்து கொண்டிருந்தது. ஊரையே காக்கும் கருப்பசாமி வெள்ளை குதிரையில் நீண்ட அருவாளோடு கம்பீரமாக காவல் காத்து வந்தார்! ஊருக்குள் நுழையும் யாராக இருந்தாலும் எல்லை கருப்பசாமியை ஒரு கணம் திரும்பி பார்க்காமல் செல்ல முடியாது! அவரது உயர்ந்த தோற்றமும் உற்சவ தாண்டவமும் ஊருக்கு வெளிச்சமானதால் அப்படி ஒரு நம்பிக்கை அந்த ஊரில் இருந்தது! பக்தர்கள் வேண்டிய காரியத்தை தப்பாமல் செய்து முடிக்கும் துடியான சாமி! சொன்ன வேண்டுதலைச் சொன்னபடி செய்யாவிடில் உருத் தெரியாமல் அழித்துவிடும் சக்தியும் கொண்டவர் என்ற பேச்சு ஊர் முழுவதும் பரவலாய்ப் பரவிக் கெடந்தது! ஆக்கவும் காக்கவும் அவனே பொறுப்பு! எல்லைக் கருப்பு நீயே எங்கள் காப்பு என்பது அந்த ஊரில் எழுதப்படாத சட்டம்!
கோவிலை சுற்றி இருந்த கருவேல மரங்களிலும் வேப்ப மரங்களிலும் அகன்று கிளை பரப்பியிருந்த ஆலமரத்திலும் விசேஷத்துக்கு வந்திருந்த அத்தனை மக்களும் இளைப்பாரிக் கெடந்ததோடு வந்த கதை போன கதையோடு சுவையோடு கேட்பதற்கு இட்டுக்கட்டி பேசிச் சிரித்துக் கொண்டு ஆங்காங்கே பெண்கள் கூட்டம் ஒரு புறமும், பட்டுச் சேலைகளிலும் பளபளக்கும் ஆபரண நகைகளையும் பகட்டாக அள்ளிப் போட்டுக் கொண்டு வெட்டிக்கதைகளை என்னவோ நீதி கதை போல் நீட்டி பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டிருந்தனர்!
ஆலமரக் கிளையில் கருப்பசாமிக்கு வெட்டிய இரண்டு கருத்த வெள்ளாட்டுக் கிடாயை கட்டித் தொங்கவிட்டு தோலுரித்துக் கொண்டிருந்த ஆண்கள் கூட்டம் ஒரு பகுதி என்றால், பெரிய பெரிய பாத்திரங்களில் வந்திருந்த விருந்தாளிகளுக்கு தன் கை படவே சோறு சமைத்துக் கொண்டு இருந்தான் சண்முகம்!
"அண்ணே அண்ணே...." மை பூசிய கண்கள், மருதாணி விரல்கள், செயற்கையாக வரவழைத்த புன்னகை அணிகலனோடு அரக்கப் பறக்க கூப்பிட்டபடி ஓடி வந்தாள் சிவகாமி!
"ஏம்மா இப்படி ஓடி வர.... என்னாச்சு? எதுவும் பிரச்சனையாப்பா?" அடுப்பில் வந்த சோறின் பதம் பார்த்தபடியே கேட்டான் சண்முகம்!
"எல்லோரும் உன்ன எங்கன்னு கேட்டுகிட்டு இருக்காங்க? நீ என்னடான்னா சோறு சமைச்சுட்டு திரியுற? இந்த வேலையைச் செய்யறதுக்கு ஆள் விடு என்று அப்பவே சொன்னேன்! நீ தான் கேட்கவே இல்லை" என மூச்சு வாங்கியபடி சொன்னாள் சிவகாமி!
"இது வேண்டுதலுனு சொல்லி ஏற்கனவே சொல்லிட்டேன்! நீ எத்தனை தடவை கேட்டாலும், நா என்னோட முடிவ மாத்திக்க போறதில்ல...."
"சரி வானே! வந்தவங்கள வான்னு கூப்பிட வேண்டாமா?"
"அது தான் உங்க அண்ணி ஈசுவரி இருக்காலே.... பிறகென்ன? " சண்முகம் சட்டென சொன்னதும் சிவகாமியின் முகம் குப்பென்று வியர்த்துப்போனது! எதுவும் பேசாமல் வந்த வழியே திரும்பி விட்டாள்!
"ஏண்டி சிவகாமி! விசேசத்துல உன்னோட அலப்பறை தான் பெருசா இருக்கே! " என்ற கருப்பாயி!டம் எதுவும் சொல்லாமல் தலை குனிந்த படி விலகிச் சென்று விட்டாள்!
"உனக்கு சங்கதி தெரியாதா? போன வருசம் வரைக்கும் சண்முகத்தோட பேச்சு வார்த்தை எதுவும் இல்லாம தான் இருந்தா...."
"பிறகென்ன? சொல்லு சித்ராக்கா...."
" பழைய பாத்திரத்துக்கு ஈயம் பூசுற மாதிரி வந்து ஒட்டிக்கிட்டா....."
"நீ சொல்ற எதுவுமே எனக்கு புரியலக்கா...."
"அடியே கூறுகெட்ட சிறுக்கி! சொல்லுறத நல்லா கவனமா கேளு!
No comments:
Post a Comment