Saturday, 5 July 2025

ஆள் மயக்கும் பணம் - கவிஞர் யாழிசைசெல்வா

ஆள் மயக்கும் பணம் 

====================

கவிஞர் யாழிசைசெல்வா 

======================

      கீழ் வானத்தைப் புரட்டிக்கொண்டு மஞ்சளை வாரி இறைத்தபடி புலர்காலை புலர்ந்தபோது....


      ஊர் எல்லையில் இருக்கும் கருப்பசாமி கோவில் ஊர்த் திருவிழாவை மிஞ்சும் அளவில் ஒரே பரபரப்பில் மிதந்து கொண்டிருந்தது. ஊரையே காக்கும் கருப்பசாமி வெள்ளைக் குதிரையில் நீண்ட அருவாளோடு கம்பீரமாக காவல் காத்து வந்தார்!  எல்லைக் கருப்பு நீயே எங்கள் காப்பு என்பது  அந்த ஊரில் எழுதப்படாத சட்டம்!


     கருப்பசாமி கோவிலில் இருந்த பெரிய ஆலமரக் கிளையில் கருப்பசாமிக்கு வெட்டிய இரண்டு கருத்த வெள்ளாட்டுக் கிடாயை  கட்டித் தொங்கவிட்டு தோலுரித்துக் கொண்டிருந்த ஆண்கள் கூட்டம் ஒரு பகுதி என்றால், பெரிய பெரிய பாத்திரங்களில் வந்திருந்த விருந்தாளிகளுக்கு தன் கைப்படவே  சோறு சமைத்துக் கொண்டிருந்தான் சண்முகம்! 


     "அண்ணே அண்ணே...." மை பூசிய கண்கள், மருதாணி விரல்கள், செயற்கையாக வரவழைத்த புன்னகை அணிகலனோடு அரக்கப் பறக்க கூப்பிட்டபடி ஓடி வந்தாள் சிவகாமி!


     "ஏம்மா இப்படி ஓடி வர.... என்னாச்சு? எதுவும் பிரச்சனையாப்பா?" அடுப்பில் வெந்த சோறின் பதம் பார்த்தபடியே கேட்டான் சண்முகம்! 


     "எல்லோரும் உன்ன எங்கன்னு கேட்டுகிட்டு இருக்காங்க? நீ என்னடான்னா சோறு சமைச்சுட்டு திரியுற? இந்த வேலையைச் செய்யறதுக்கு ஆளவிடென்று அப்பவே சொன்னேன்! நீ தான் கேட்கவே இல்லை" என மூச்சு வாங்கியபடி சொன்னாள் சிவகாமி!


     "இது வேண்டுதலுனு சொல்லி ஏற்கனவே சொல்லிட்டேன்! நீ எத்தனை தடவை கேட்டாலும், நா  என்னோட முடிவ‌ மாத்திக்கப் போறதில்ல...."


     "சரி வானே! வந்தவங்கள வான்னு கூப்பிட வேண்டாமா?"


    "அது தான் உங்க அண்ணி ஈசுவரி இருக்காளே....‌ பிறகென்ன? " சண்முகம் சட்டென சொன்னதும் சிவகாமியின் முகம் குப்பென்று வியர்த்துப் சுண்டிப்போனது! எதுவும் பேசாமல் வந்த வழியே திரும்பி விட்டாள்! 


     "ஏண்டி சிவகாமி! விசேசத்துல உன்னோட அலப்பறை தான் பெருசா இருக்கும்போல...." என்ற கருப்பாயிடம் எதுவும் சொல்லாமல் தலை குனிந்த படி விலகிச் சென்று விட்டாள்! 


    "உனக்கு சங்கதியே தெரியாதா? போன வருசம் வரைக்கும் சண்முகத்தோட பேச்சு வார்த்தை எதுவும் இல்லாம தான் இருந்தா...." என்றாள் சித்ரா!


     "பிறகென்ன? சொல்லு சித்ராக்கா...."


      " பழைய பாத்திரத்துக்கு ஈயம் பூசுற மாதிரி வந்து ஒட்டிக்கிட்டா....."


    "நீ சொல்ற எதுவுமே எனக்கு புரியலக்கா...."


    "அடியே கூறுகெட்ட சிறுக்கி! சொல்லுறத நல்லாக் கவனமா கேளு! சிவகாமியை கட்டிக் கொடுத்த பெறகு கொஞ்ச நாள்லே விவசாயத்தில் தொடர்ந்து பெருத்த அடி வாங்கி கடனாளியா போயிட்டான் சண்முகம்! அதனால அண்ணனோடயிருந்த உறவ சட்டுனு துண்டிச்சுகிட்டா சிவகாமி! அதுக்குப் பெறகு இந்தக் கருப்பசாமி மேல பாரத்தை போட்டு வேண்டுதல வச்சதோட நிக்காம சண்முகமும் அவன் பொஞ்சாதி ஈசுவரியும்  ராப்பகலா உழைச்சு‌ ஒரு வழியா முன்னேறி, இருக்கிற கடனெல்லாம் அடைச்சு முடிச்சுட்டாங்க.  பழையபடி நல்ல நிலைக்கு சண்முகம் வந்தவுடனே  ஓடி வந்து ஒட்டிகிட்ட...."தூரத்தில் துவண்டு நிற்கும் சிவகாமியைப் பார்த்தபடி சொன்னாள் சித்ரா! 


     "பாத்தியா அக்கா! ஒரு மனுசிய பணம் என்னா பாடு படுத்துதுன்னு பாரு....." தவாங்கட்டையில் கையை வைத்தபடி அங்கலாய்போடு சிவகாமியைப் பார்த்துக் கொண்டியிருந்தாள் கருப்பாயி.

(முடிந்தது)


கவிஞர் யாழிசைசெல்வா 

05/07/2025

ரோசா கூட்டம் ஐந்தாம் ஆம் ஆண்டுவிழா சிறுகதைப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிறுகதை

   ‌‌

No comments:

Post a Comment