பகுதி 01
ஒரு பெரிய மலைப்பாம்பு காட்டுமான் ஒன்ன விழுங்கிட்டு அசைய முடியாமல் அப்படியும் இப்படியும் புரண்டு படுப்பது போல் அமைந்த தோற்றத்தையுடையது மேற்கு தொடர்ச்சி மலை. "பாக்குறத்துக்கு காட்டு யானைகளின் பெருங்கூட்டமாக ஒரே வரிசையில் படுத்து கெடக்கிறமாரில இருக்கு" என ஊருக்குள் ஒரு பேச்சு உண்டு. மலையின் நெளிவு சுழிவுகளில் ஆங்காங்கே நீரூற்றுகள் ஊடறுத்து ஓடையாக வழிந்து ஓடிக் கொண்டிருந்தது. பொம்பளைங்க ஒப்பாரிக்கு அழுகிற கண்ணீர் மாதிரி ஒடிசலா வழிஞ்சு ஓடிக்கிட்டு இருந்தது ஓடத் தண்ணி. அதே ஓட மழைக்காலத்தில் மட்டும் மடை திறந்த வெள்ளமா பெருக்கெடுத்து காடு கரை அறுத்துக்கிட்டு ஓடி வரும். மத்த நேரங்களில் மழை அடிவாரத்தில் இருக்க தோட்டம் தொரவுளுக்கு வேலை செய்யப் போய்வாரவங்களும், மேற்கு தொடர்ச்சி மலைக் காட்டுல ஆடு மாடு மேய்க்கறவங்களும் அந்த ஓடதான் வழியாகப் பயன்படுத்துவது வழக்கம். மேற்குத் தொடர்ச்சி மலையெங்கும் பரவலாக ஆலமரம், அரசமரம், கொய்யா மரம், மாமரம், சந்தன மரம் அதோடு சேர்ந்து காட்டுக்கே உரியதான முள் மரங்களும் எங்க பார்த்தாலும் பரவிக் கிடந்தது. இந்த மலைக்கே நாங்க தான் அடையாளம் அப்படிங்கிற மாதிரி அந்த மரங்கள் இருந்தது. மரங்களின் அடிப்பகுதியைச் சுற்றி ஈச்சம் புதர், இன்டம் புதரென அடர்த்தியான பச்சைப் போர்வை போர்த்தியிருந்தது. அந்த பசுமையின் ஊடாக கானக உயிர்களான யானை, நரி, ஓநாய், மான், மயில், முயல் போன்றவை பரவலாக வாழ்ந்து வந்தன. மேற்குத் தொடர்ச்சி மலையோட மேற்குச் சரிவில இறங்கினா கேரளா மாநிலம். இந்த மலையைத் தாண்டி அந்த பக்கம் போறதுக்கு நெடுங்காலமா ஒரு பாதை இருந்தது அதோட பேரு சாக்குலத்து மெட்டு. அது வழியா மக்கள் வேலைக்காக கேரளாவுக்கு போயிவருவதுக்கான பாத ஒன்னு பயன்பாட்டிலிருந்தது. ஒத்தையடிப் பாத மாதிரியான அமைப்பு கொண்டது. வழக்கமா போயிட்டு வாரவங்க மட்டுமே அதை பயன்படுத்திக்கிட்டு இருந்தார்கள். மற்றவர்களுக்கு அதைப் பற்றிய கவலையும் இல்லை.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மலையோட நிழல் விழுற தெசைப்பக்கமெல்லாம் ஆங்காங்கே மக்க மனுசங்க வீடு வாசல் கட்டி வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவங்களோட பிழைப்பு முழுவதும் அங்க இருக்கிற நிலத்தைச்சுத்தியே அமைந்திருந்தது. பெரும்பாலும் விவசாயக் கூலி வேலைதான் நடந்துட்டிருந்தது.
அன்றாடம் கெடைக்கிற வேலையைப் பார்த்தால் மட்டுமே பிழைப்பு நடக்கும். அங்க வாழ்ந்துவந்த எல்லோருக்கும் பெரிய அளவுலே சொத்து சொகம் எதுவும் கிடையாது. அங்காங்கேயிருந்த குடியிருப்புகளில் அவுங்க வசதிக்கு ஏற்றவாறு வீடு வாசலக்கட்டி வாழ்ந்து கொண்டிருந்தார்கள். தோட்டம் தொரவுனு வச்சியிருந்தவுங்க நல்ல பெரிய காரவீடாக் கட்டி பவுசா வாழ்ந்துவந்தார்கள். அந்த மாதிரியான மக்கமனுசங்க மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்துல அமைஞ்சிருக்கிற கிராமங்களிலேயே விரல்விட்டு எண்ணிவிடுகிற எண்ணிக்கையில் மட்டுமே இருந்தது. ஒரு சில ஊர்களில் அரசாங்க உத்தியோகம் பார்க்கிறவங்க ஒன்னு ரெண்டு பேரு மட்டும் இருந்ததால, ஊர்ல எது நடந்தாலும் அவுங்க கை ஓங்கி நிக்கிற மாதிரி எப்பவும் பார்த்துக்கிறது அங்க வாடிக்கையா இருந்தது. மத்தபடி பெரும்பாலான மக்கமனுசங்க எல்லாருமே அன்றாடம் கூலிவேலைக்கு போறவங்கங்கிறதால அவங்களோட வீடுவாசலெல்லாம் பெரும்பாலும் கூரைக் குடிசையாவே இருந்தது. அதுலேயும் ஒருசில பேரு மண்சுவருவச்ச வீடுகட்டி அதுமேல தகரத்தைப் போட்டு வச்சதோட, அடிக்கிற காத்துக்கு தகரம் ஆடாம அசையாம இருக்க சின்னச்சின்ன பாராங்கல்லு அது மேல் இருக்கும். இருக்கிற வீட்ட சூதானமா பாத்துக்கணும்கிற முன் யோசனையோட இந்த மாதிரி வேலை நடந்திருந்தது . என்னதான் சூதானமா வச்சிருந்தாலும் சில சமயத்துலே சூரக்காத்துலே தகரம் காத்துல பறந்து போயி பெரிய வீபரீதமெல்லாம் நடந்த சம்பவமும் உண்டு. அதனால முடிஞ்ச வரைக்கும் இருக்கட்டுமென்று வீட்டோட ரெண்டு பக்கமும் கொச்சக் கயிறு கொண்டு இறுகக்கட்டி தரையோட மொளக்குச்சி அடிச்சுத் தகரத்த இழுத்துக் கட்டி வைத்த வீடுகளும் அங்க இருந்தது. கூரை வீட்டுக்காரனப்பார்த்து தகர வீட்டுக்காரனும், தகர வீட்டுக்காரனப்பார்த்து கார வீட்டுக்காரனும் மாத்தி மாத்தி பொறாமையில வெந்ததோட தன்னப்பத்தி ஒசத்தியா நாலுபேரு மத்தியில பேசிக்கிற பழக்கம் அவர்களுக்குள் இருந்தது. இதொரு வியாதிமாதிரி இந்தக் கெட்ட பழக்கம் அவர்களிடையே பரவியிருந்தது. இது தப்புனு அவுங்களுக்கு தெரியாமலே வாழற சூழ்நிலையும் அங்க பழக்கமாக்கப்பட்டிருந்தது.
நிலம் என்கிற பெரிய சொத்தோடு சிலபேருக்கு வசதியான வாழ்க்கை இருந்தது. பெரும்பாலும் அவுங்களோட நெலமெல்லாம் குளங்களைச்சுத்தியோ அல்லது ஓடைப்பக்கமாவே இருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைல விழுகிற மழைத்தண்ணி பெருக்கெடுத்து ஓட ஓடப்புகளிலே அடிச்சுட்டு போயி கடைசிலே குளத்துல விழுந்திரும். அந்தக்குளத்தோட அருமை ஆரம்பத்தில தெரியாது என்பதால் பெரிசா யாருமே கண்டுக்கல. அப்போதுதான் குருசாமிக் குடும்பர் வீணாப்போற அந்த ஓடத்தண்ணிய ஒழுங்குபண்ணுறதுக்காக அவரோட கூட்டாளிகளைச் சேத்துக்கிட்டு ஊருக்குவெளியிலிருந்த பெரிய குளத்த நல்ல ஆழமா வெட்டி அதோட கரைகள ஒசத்திக்கட்டியதோட நிக்காம, கரைக முழுசும் வெட்டிவேரு , ஆலமரம், அரசமரம்,வேப்பமரமினு நட்டுவச்சி விட்டிருந்தார். காலப்போக்குல தென்மேற்கு பருவக்காத்து சாரமழயிலும் ஒரக்கப்பேயிர ஈரமழையிலும் நல்லா செலிச்சு வளந்து போயிருச்சு. போதும் போதாதுக்கு குளத்தோட தண்ணியக்குடிச்சும் அந்த மரங்கள் வளர்ந்து ஊரோட அடையாளமா மாறி இருந்தது. இப்ப எல்லோரும் அந்த ஊருக்கு வழிசொல்லும்போதெல்லாம் பெரிய குளத்துக்கு பக்கத்துல இருக்க ஊருதானங்கிற அளவுக்கு ஊரெல்லாம் பேரு வந்து சேர்ந்திருந்தது. பேருக்கேத்தமாரி பெருசா பாக்குறதுக்கு கடல்மாரி எப்பவும் தண்ணி கொறயாம ததும்பி மடையில வழிஞ்சு போயிகிட்டேயிருந்தது. அந்தக் கொளத்தோட தண்ணிய மடைவழியா பாசனத்துக்காக குருசாமி குடும்பரோட கூட்டாளிகளும், அவரோட பங்காளிகளும் முறைவச்சு பாசனத்துக்கு பயன்படுத்தி வளமா வாழ்ந்து வந்தார்கள். காலபோக்குல பெரிய அளவுலே அவுங்க வெவசாயம் பெருகி வசதியும் கூடிப்போயிருந்தது. இது அவரோட ஊருல உள்ள ஆளுங்களுக்கு பெரிய பொறாமையை உண்டாக்கி அந்த தீயில் ஊரே காவு வாங்குற அளவுக்கு வளர்ந்து கொண்டு இருந்தது. ஒரு கட்டத்துலே பெரிய மோதலுலே முடியறமாதிரி ஆனபோது குருசாமிக் குடும்பர் பெரியகுளத்தோட பாத்தியத்த அப்படியே நிலம் மற்றும் பாசனத்தோட ஊருக்காரங்களுக்கு எழுதிக்கொடுத்திட்டு தன்னோடு குடுபத்தக் கூட்டிக்கிட்டு ஊரவிட்டு தனியா ஒதுக்குபுறமாக யாருமே பயன்படுத்தாத கட்டாந்தரை நெலத்துல குடிசைபோட்டுத் தங்கி வாழ்ந்து வந்தார்.
குருசாமிக் குடும்பர் ஊரை விட்டுப் போனப் பின்னாலே அவரோட கூட்டாளிக சிலபேரு அவருகூடவே கெளம்பி வந்து அவர் குடியிருந்த இடத்திலேயே பக்கத்துல குடிசை போட்டு வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். குருசாமிக் குடும்பர் எவ்வளவுதான் சொன்னாலும் கூட்டாளிக அவர விட்டுப்பிரியாம கூடவே இருந்திட்டாங்க. குருசாமிக்குடும்பர் தங்கியிருந்த இடத்துக்கு பக்கத்துலே சின்னதா ஒரு குளம் வெகுகாலமா சும்மாவே இருந்தது. வீணாப்போற மழத்தண்ணிய அந்தக் குளத்துல சேமிக்க அரும்பாடுபட்டு வந்தார். அந்தக்குளத்தோட கரையிலேயும் ஆலமரம், வேப்பமரம், வெட்டிவேறுனு நெறைய நட்டுவச்சு வளத்துவந்தார். அவரோட நல்ல மனசுக்கு மரமெல்லாம் செலிப்பா வளர்ந்து கரை முழுசுக்கும் நான்தான் காவல்காரன்கிற மாதிரி நின்னதது. ஆரம்பத்துலே சின்னக்குளத்துக்கு தண்ணி அவ்வளவா வந்துசேரல..... குருசாமிக் குடும்பர் தன்னோட கூட்டாளிகளோட சேர்ந்துகிட்டு வீணாப்போற ஓடத்தண்ணிய அப்படியே சின்ன குளத்துக்கு கொண்டுவரச் செய்வதற்கு அரும்பாடு பட்டு உழைக்க வேண்டியிருந்தது. அதோட பலனாக சின்னக் குளம் மழக்காலத்துல தண்ணி நெறஞ்சு குட்டிக்கடல்மாரி பாக்குறத்துக்கே அவ்வளவு அழகாக இருந்தது. சின்னக்குளத்தோட தண்ணிய வச்சு கட்டாந்தரை நெலத்த உழுது விவசாயத்துக்கு தயார் பண்ணாங்க.... அப்பவும் பெருசா வெளச்சல் கெடைச்கல. இதென்னடா சோதனைனு சோர்ந்துபோகமா சின்னக்குளத்தோட தண்ணி வத்துனப்ப குளத்துல தேங்கிக்கெடந்த களிமண் கரம்ப மண்ண அள்ளி விவசாய நெலத்துல போட்டு நல்லா நாலஞ்சு உழவு நிலத்தோட மண்ணு பொடிப்பொடியாப் போறமாதிரி உழுது அதுக்குப்பெறகு அவர்களோட விவசாயம் நடந்தது. இந்த முயற்சி அவுங்களுக்கு கைமேல பயன் தந்தது. அப்படி உருவான நிலத்துலதான் குருசாமிக் குடும்பர் பருத்தி போட்டுருந்தார். அங்க வேலை செய்யறதுக்கு கொத்துக்காரி செல்லம்மா வேலையாளுகளோட வேலைக்கு வந்திருந்தாள். கொத்துகாரி என்பவள் விவசாய நெலத்துல வேலை செய்ய கூலியாட்கள அழைத்துவந்து வேலைசெய்ய வைப்பதோடு தோட்டத்துக்காரர்களுக்கும் கூலியாட்களுக்கும் பாலமாக இருக்கிறது ஊர் வழக்கம். கூலியாட்களை ஒழுங்குபடுத்தி அன்றாடம் எல்லோருக்கும் சமமாக பிரித்து அனுப்புவதோடு சம்பளத்தையும் முறையாக வாங்கித் தருவதற்கும், கூலிப்பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்வதற்கும் உதவியாக கொத்துக்காரி இருந்தார்கள். இந்த வேலை பெரும்பாலும் வயதிலும் அனுபவத்திலும் தேர்ந்தவர்கள் மட்டுமே செய்துவந்தார்கள். இளம்வயசுக் குமரிப் பொண்ணான செல்லம்மாள் சீக்கிரமே கொத்துக்காரி ஆனதுக்கு காரணம் செல்லமாளோட அம்மா பூரணி கொத்துக்காரியா இருந்தது முக்கியமான காரணம். பூரணி இறந்ததுக்கு பின்னாலே செல்லம்மாளே கொத்துக்காரியாக முழுதாக மாரியிருந்தாள்.
செல்லம்மாள் பாக்குறதுக்கு நல்ல வாட்டசாட்டமா கோயில் சிலை மாதிரி அழகு. ஐப்பசி மாசத்துல வானத்துல உலவுற கருமேகங்கணக்கா அடர்ந்த கூந்தல். புதுச ஆக்குன பச்சரிசி சோறு கணக்கா பல்லு. நறுக்கி வச்ச வெள்ளரித் துண்டுமாரி உதடு. கருப்பட்டிலே செஞ்ச பனியாறம் மாரி தித்திப்பான கண்ணுக. பஞ்சுமிட்டாய் கன்னம். அதுல ஒருதுளியளவு பனித்துளி தேங்குறாப்புல குழிவிழுந்த கன்னம். சிவன் கையில இருக்கிற உடுக்கைமாரி இடுப்பு. மின்னல் கொடி மாரி நீண்ட கைகள். வெண்ணைய உருக்கி வச்ச பாதம் என ஊரில் உள்ள மொத்த அழகும் ஒன்னாக்குடியேறிய உடம்புக்கு சோந்தக்காரி. அவசோட்டுக் குமரிகளே பொறாமைப்படுற அளவுக்கு ஊருக்குள்ளற வெருப்பச் சம்பாதிச்சு வச்சிருந்தா. ஆனாலுமே இதுவரைக்கும் எந்த ஆம்பள வலையிலேயும் சிக்காம நழுவித் தப்பிச்சிருந்தாள். ஒருசில ஆம்பளைங்க தோட்டம் தொரவ எழுதிவைக்கிறேன் கல்யாணம் கட்டிக்கேனு சொல்லியும் யாரையும் சீந்தாம வெலகியே இருந்திட்டா. அதனால நிறைய ஆம்பிளைங்க கடுப்புல திரிஞ்சானுக. அதக்கண்டுக்கவேயில்ல செல்லம்மா. அவவுண்டு அவவேலைவுண்டுனு இருந்திட்டா. அப்படித்தான் ஒருநாள் குருசாமிக் குடும்பரோட தோட்டத்துல பருத்தியெடுக்க கூலி ஆளுகளோட வேலைக்கு வந்திருந்தா...
"அடியாத்தி.... உச்சி வெயிலு இந்த பொலபொலக்குது! விட்டா பருத்தி காடே பத்தி எரிஞ்சிடும் போலருக்கு...." வடசட்டி எண்ணெயில விழுந்த கடுகு மாறி பொரிஞ்சு தள்ளிய காளியம்மாள் பின்னால திரும்பிப் பார்த்தபடி "ஏண்டி செல்லம்மா.... ஒனக்கு இன்னுமாடி பசிக்கல..... காலையில தின்னுட்டு வந்த தண்ணிச் சோறு இன்னும் எத்தன நேரம்டி தாங்கும்? இப்படியே சோறு தண்ணி திண்ணாம தொடர்ந்து வேலை பார்த்தா இந்தக் காட்ட உனக்கு எழுதி வச்சரவா போறாங்க.... வாடி சாப்பிட்டுட்டு வேலையப் பார்க்கலாம்.... கொத்துக்காரி நீ வந்தாத்தான மத்தவளுகளும் வந்து சோறு தண்ணி தின்பாளுங்க.... அங்க திரும்பிப் பாரு.... நானும் ரொம்ப நேரமா பாக்குறேன் நின்ன எடத்திலேயே நின்னுகிட்டு ஒவ்வொரு பருத்தியா இந்தா புடுங்குறேன் அந்த புடுங்குறேன்னு பருத்திக்கு வலிக்காம வைத்தியம் பார்க்கிற மாறி புடுங்கிட்டு நிக்கிறாளுங்க..... அவளுகளைச் சொல்லியும் குத்தமில்லே.... எவ்வளவு நேரம் தான் பசியைப் பொறுப்பாளுங்க.... என்ன போலாமா?" பிட்டத்தை உரசிக் கொண்டிருந்த அவுந்த தல முடிய அள்ளிக் கோடாலிக் கொண்டை போட்டுக்கிட்டே கொத்துக்காரி செல்லம்மாள நோக்கி நடந்தாள் காளியம்மாள்!
நல்ல விளைச்சல் வரணும்ங்கிறதுக்காக கொளத்துக் கரம்பைய அடிச்சுப் போட்டு செதறி விட்டு அதுக்குப் பிறகு ஏறு பூட்டி ரெண்டு ஒழவு நல்லா ஆழமா உழுது பாத்தி கட்டி பருத்தி வெளைய வச்சதுனால இடுப்பு ஒசரத்துக்கு மேல, நல்லா கொடி பூரா மலர்ந்த மல்லிகைப் பூ மாரி பருத்திச் செடி முழுவதும் பருத்தி பூ பூத்து காடே நெறஞ்சு கெடந்துச்சு. வெயிலோட காந்தல் பொறுக்காம முத்தி வெடிச்ச பருத்திப்பூ செடி முழுதும் வலிஞ்சு பாக்குறவுகயெல்லாம் வயித்தெரிச்சல் படுறமாரி ஈயெனச் சிரிச்சுக் கெடந்தது.
கொத்துக்காரி செல்லம்மாள நோக்கி போயிட்டுருந்த காளியம்மா "ஆஆ"வென காடே அதிரும்படி கத்திக் கூச்சல் போட்டுட்டா.... அங்கங்க பருத்திப் பெறக்கிட்டுருந்த அத்தனை பேரும் போட்டத போட்டபடி போட்டுட்டு பறந்தடிச்சு ஓடி வந்து சேர்ந்தார்கள்.
"ஏண்டி என்னாச்சு...?" காளியம்மா கிட்ட வந்த கொத்துக்காரி செல்லம்மாள் கேட்டாள்.
கூர்மையான ஈட்டி போல் வலது குதிங்காலைக் குத்தி கிழிச்சிருந்த பருத்திக்கூட்ட காளியம்மா புடுங்குனதும் ரத்தம் குபுகுபுவென்று பீறிட்டுக் கொண்டு வெளியேறத் தொடங்கிருச்சு. அதைப் பார்த்ததும் "அடியே! இருடி இருடி....! அதுக்குள்ளற என்னடி அவசரம்? நான்தே வந்துகிட்டு இருக்கேனுல்ல.... அதுக்குள்ளார ஏண்டி இப்படி பண்ண....? ரத்தம் வேற.... நிக்காம கொட்டிக்கிட்டுருக்கு..." காளியம்மாள் அருகே வந்தவள் கொஞ்சமும் தாமதிக்காம அவள அப்படியே அலேக்கா தோளுல தூக்கிப் போட்டுக்கிட்டு விசுகு விசுகுன்னு ஓட்டமும் நடையுமா பருத்தி காட்டோட ஓரத்துலருந்த ஆலமரத்துக்கு அவளைக் கொண்டு வந்திட்டா. காளியம்மாள கீழ எறக்கி அருகம்புல்லா பரவி கெடந்த வரப்பு மேல உட்கார வச்சுட்டு ஆலமரத்தின் கீழேயிருந்த மண்பானையிலயிருந்து சொம்பு நிறையத் தண்ணிய எடுத்துக்கொண்டு வந்து தண்ணிய குடிக்க வச்ச பிறகு காயத்தை சுத்தம் பண்ணிட்டு, பக்கத்துலருந்த செடி கொடிக்குள்ள புகுந்தவ ரெண்டு மூணு மூலிகைகளை பறிச்சிட்டு வந்து உள்ளங்கையில வச்சுக் கசக்கி காளியம்மாளோட காயத்து மேல மூலிகைச் சாறு விட்டாள். மூலிகைச் சாறோட எரிச்சல் பொறுக்க முடியாம கத்தத் தொடங்கிட்டா காளியம்மா.... "கொஞ்ச நேரம் பொறுத்துக்கடி.... "எனச் சொல்லிக் கொண்டே செல்லம்மாள் தன்னோட முந்தானைச் சேலைய விருட்டெனக் கிழிச்சு காளியம்மாளோட காயத்துல மூலிகைய வச்சு நல்லா இருக்கமா கட்டுக் கட்டி விட்டுட்டா. "அடியே வீட்டுக்கு போனதும் கெட்ட அவுத்துட்டு இந்த மூலிகையை நல்லா அது மேல புலிஞ்சு விடுடி... ரெண்டு நாளைக்கு இதை தொடர்ந்து புலிஞ்சுவிட்டயாக்கும் காயம் தன்னால் ஆறிப் போய்டும்" எனக் கூறிக் கொண்டே ஆலமர விழுதுகளில் தொங்கிக் கொண்டிருந்த சோத்துச் சட்டிகளை எடுத்து வரப் போய்விட்டாள் செல்லம்மாள்.
பருத்திக் காட்டுல வேலை பார்த்துகிட்டு இருந்த மத்த பொம்பளைகளும் அடிச்சுப் புடிச்சு ஒரு வழியா ஆலமரத்துக்கு வந்து சேர்ந்திருந்தார்கள்.
"யேண்டி...! கூறுகெட்ட சிறுக்கி! பருத்திக் காட்டுக்குள்ள பருத்திக் கூடு ஒடஞ்ச கண்ணாடி மாதிரி அங்கங்க கெடக்கும்னு உனக்கு தெரியாதா....? நீ என்ன புதுசா வா வேலை பாக்குற? அப்படி என்னடி அவசரம்? இப்பப் பாரு.... காலுல கட்டு போட்டு இருக்க... இதெல்லாம் தேவையா...? " எனக் காளியம்மாளை பார்த்துக் கேட்டுகிட்டே அவளருகில் வந்தாள் முனியம்மாள்.
"அடேயப்பா.... செல்லம்மா என்ன வேகத்துல காளியம்மாள தூக்கித் தோளுல போட்டுக்கிட்டு ஓடியாந்துட்டா? அவ வேகத்தை பார்த்ததும் எனக்கே பெருத்த ஆச்சரியமா போயிருச்சு! ஆம்பளை கூட இத்தன வெரசா வர முடியுமானு தெரியலடியம்மா..." தாவங்கட்டயோட சேர்த்து கன்னத்துல கை வச்சு ஆச்சரியமா பார்த்தபடி சொன்னா சீலக்காரி!
"நீ யென்னடி இப்படி சொல்லிட்ட? இவளுக ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே கூட்டாளிகல்லே... ஒருத்திய விட்டு ஒருத்தி இருக்க மாட்டாளுக.... அப்படியே பிசினு கணக்கா ஒட்டிக்கிட்டுல இருப்பாளுங்க... நீ என்னமோ காணாதத கண்டது மாரி பேசிகிட்டு திரியிறவ.... இதெல்லாம் பார்த்துப் பார்த்து எங்களுக்கு பழகிப் போயிருச்சுடி. இது உனக்கு வேண்டா புதுசா இருக்கலாம்" எனச் சொல்லிக் கொண்டே காளியம்மா காலுக்கடியில ஒக்காந்துகிட்டா சின்னத்தாயி!
"அப்படியா சேதி! இதெல்லாம் எனக்கு தெரியாதுடி. இவளுக கூட முன்னப் பின்ன வேலைக்கு வந்திருந்தா தெரிஞ்சிருக்கும். நான் இன்னைக்கு தான புதுசா வந்திருக்கேன்.... அதுதே எல்லாமே எனக்கு புதுசா தெரியுதுடி" எனச் சொல்லிக் கொண்டே ஆலமரத்தின் விழுதுகளை நோக்கிப் போய்கிட்டுருந்தா சீலக்காரி!
அதுக்குள்ளற செல்லம்மாள் எல்லாருடைய தூக்குச்சட்டிகளையும் மொத்தமாஅள்ளி தன்னோட ரெண்டு கையிலேயும் வரிசையா வளையல் மாட்ன மாதிரி மாட்டிகிட்டு வந்துகிட்டுருந்தாள்.
"ஏண்டி எல்லாருடைய தூக்கு சட்டியும் எடுத்துட்டு வந்துட்டியா?"
"ஆமா சீலக்காரி அக்கா...." எனச் சொல்லிக் கொண்டே வந்தவள் "வாக்கா போய் எல்லாரும் சாப்பிடலாம்" சிலக்காரிய பார்த்துச் சொல்லிவிட்டு எல்லோரும் உட்கார்ந்திருந்த ஆலமரத்தடிக்கு வந்து சேர்ந்து,மொத்த தூக்குச்சட்டியும் கீழ வச்சிட்டு ரெண்டு தூக்குச் சட்டிய மட்டும் தனியா எடுத்துக்கிட்டு காளியம்மா கிட்டப் போயி உட்கார்ந்து கொண்டாள் செல்லம்மா!
"ஏண்டி! இன்னைக்கு என்ன கொழம்பு வச்சிருக்க?"தூக்குவாளி மூடியத் தொறந்து கிட்டுருந்த செல்லம்மாளப் பாத்துக் கேட்டாள் காளியம்மா!
"கருவாட்டுக் கொழம்பு வச்சிருக்கேன்டி! "என்றவள் தூக்குவாளியோட மூடியத் தொறந்ததும் தூக்குவாளியிலே சோத்துக்கு மேல கிண்ணத்துலே ஊத்தி வச்சிருந்த கருவாட்டுக் கொழம்பு உள்ளாரயிருந்த சோத்துலே சிந்திப் போயி கொழம்போட வாசம் காத்துலே பரவி காளியம்மா மூக்குலே நொளஞ்சதும்தான் தாமதம் நாக்குலே எச்சில் ஊறத் தொடங்கிருந்தது அவளுக்கு! செல்லம்மா தூக்குவாளி மூடியக் கொடுக்கிறதுக்குள்ளயே விசுக்குனு அவகிட்டருந்து பிடுங்கி சாப்பிடத் தொடங்விட்டாள் காளியம்மாள்.
செல்லம்மாவும் எதுவும் சொல்லாம கருவாட்டச் சோத்துக்குள்ளாற வச்சு ருசிச்சு சாப்பிடுகிற காளியம்மாவயே வச்ச கண்ணு வாங்காம பார்த்துக்கிட்டுருந்தா! பசி வயித்த கிள்ளிச்சா இல்ல ருசி அவளத் திங்கத் தூண்டிச்சானு தெரியலே... தூக்குவாளி மூடியிலேயிருந்த சோறு மொத்தத்தையும் தின்னு முடிச்சிட்டு தூக்குவாளியிலேயிருந்த மீதி சோத்தையும் அள்ளிப்போட்டு அவ பாட்டுக்குத் தின்ன ஆரம்பிச்சிட்டா.... "ஏண்டி! கொஞ்சம் மெதுவாதே தின்னேன்! இப்ப யாரவது வந்து உன்னோட சோத்த பறிச்சுக்கப் போறாங்களா என்ன? நீ கருவாட்டுக் குழம்புலே நல்லாச் சாப்பிடுவேங்கிறது எனக்கு நல்லாத் தெரியும். அதனால தான வாரத்துல நாலு நாளு உனக்காண்டி வச்சுக்கொண்டு வாரேன்! அப்படியிருந்தும் ஏண்டி! இப்படி அள்ளி அப்புற?"எனச் செல்லம்மாள் கூறியதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அவள் பாட்டுக்கு சோறு அள்ளித் திண்பதிலேயே குறியாக இருந்தாள்! ஒரு வழியாக தூக்குவாளியிலேயிருந்த அத்தனை சோரையும் திண்ணு முடிச்சிட்டு எந்திரிச்சு கை கழுவ போனவள இழுத்துப் பிடிச்சு உட்கார வச்சிட்டு பக்கத்துலே வச்சிருந்த சொம்புத் தண்ணியை எடுத்து "இந்தாடி தண்ணிய நல்லாக் குடி! அப்பதான் தொண்டையில இருக்க சோறு முழுசும் கீழ இறங்கி வயித்துக்குள்ளற விழுகும்"எனச் சிரிச்சுக் கிட்டே கூறினாள் செல்லம்மாள்!
செல்லம்மாள் கொடுத்த சொம்புத் தண்ணிய வாங்கி முக்கால்வாசி குடிச்சிட்டு மீதியிருந்த தண்ணியில கையக் கழுவிட்டு செல்லம்மாவோட முந்தானையை எடுத்து கை வாயத் தொடச்சவ "ஏண்டி! நீ இன்னும் சோறு தின்னலையா? இவ்வளவு நேரமா என்னடி பண்ண? வழக்கம்போல யேன் வாயவே பார்த்துகிட்டு இருந்தியா? அட கூறுகெட்ட சிரிக்கி! உன்கிட்ட எத்தன நாளு சொல்லி இருக்கேன்! என் வாயவே பாத்துகிட்டு நிக்காதனு.... கொண்டு வந்திருக்க சோத்தை எடுத்து தின்னுனு.... எத்தனை தான் சொன்னாலும் நீ கேக்குற மாதிரி தெரியலே"எனச் சொல்லிக் கொண்டே செல்லம்மாள் கிட்டயிருந்த தூக்குவாளிய எடுக்க எந்திரிச்சவளோட தோலைப் புடிச்சு உட்கார வச்சுட்டு காளியம்மாளோட தூக்கு வாளியை எடுத்து அதுலேயிருந்த ரசம் சோத்த நல்லா பெசஞ்சி அள்ளிச் சாப்பிட தொடங்கியிருந்தாள் செல்லம்மாள்.
"நீ கொண்டு வந்த ருசியான கருவாட்டுக் குழம்பு சோறை நான் தின்னுபுட்டேன்! நீ என்னடான்னா வெறும் ரசம் சோத்த தின்னுகிட்டு இருக்க! அதுவும் ஒரு கடிச்சுக்கிற கூட இல்லாம எப்படித்தான் உன்னால திங்க முடியுதோ? என்னோட ஆத்தா கிட்ட வேற ஏதாவது நல்ல கொழம்பு வச்சு கொடுனு கேட்டா கேட்கவே மாட்டேங்குறா! எப்பப் பாரு இந்த ரசம் சோற விட்டா வேற கதியே கெடையாது எனக்கு.... "எனச் சொல்லிக் கொண்டே அழத் தொடங்கி விட்டாள் காளியம்மாள்!
"உன்கிட்ட நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன்! ஆத்தா வச்சுக் கொடுக்கிறத நான் சாப்பிட்டுக்கிறேன்! என்னோடத நீயே சாப்பிடுணு! இப்போவும் அதத்தானே பண்ணிக்கிட்டு இருக்கோம்! ஏதோ புதுசா பண்ணுற மாதிரி சொல்லுற! விடுடி இதெல்லாம் பெருசா எடுத்துக்கக் கூடாது! நம்மள மாதிரி ஏழப் பட்டவங்களுக்கெல்லாம் குடிக்கிறதுக்கு கஞ்சி கெடைக்கிறதே பெருசா இருக்கு! அதையாவது மூணு வேல முழுசா கெடைக்கணும்னு ஆண்டவன வேண்டிக்க! அது போதும்டி நமக்கெல்லாம்" காளியம்மாள் பக்கமா திரும்பி இடது கையால அவளைத் தன் நெஞ்சோட அணைச்சுக்கிட்டா செல்லம்மா!
செல்லமாளும் காளியம்மாளும் இருவரும் நகமும் சதையும் போல இணைபிரியாத கூட்டாளிக! சின்ன வயசுல நொண்டி விளையாட ஆரம்பிச்சதிலிருந்து உண்டான கூட்டு அது! ஆரம்பத்துல என்னவோ எல்லாரும் போல விளையாட்டுத்தனமா தான் ஒன்னும் மண்ணா பேச ஆரம்பிச்சாளுங்க. அந்தக்கூட்டு தொடர்ந்து பட்டாம்பூச்சி பறக்குற மாதிரி அவளுகளோட சேர்ந்து வெரசா வளர ஆரம்பிச்சது! ஒருவாட்டி அஞ்சாறு பொட்ட புள்ளைகயெல்லாம் ஒண்ணாச் சேர்ந்து கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிட்டு இருந்தாளுங்க. அப்போ அவளுக்கு வயசு எட்டு ஒன்பது இருக்கும். எல்லோரும் மாறி மாறி ஒளிஞ்சி விளையாடிக் கொண்டிருந்தாளுங்க. ரொம்ப நேரமா விளையாண்டதுலே நேரம் போனதே தெரியலே. திருடனைக் கண்டுபிடிக்கிற விளையாட்டுல செல்லம்மாளோட முறை வந்தப்ப எல்லாரையும் கண்டுபிடிச்சிட்டா. ஆனா ரொம்ப நேரமாக தேடியும் காளியம்மாள மட்டும் கண்டுபிடிக்க முடியலே. மத்த பிள்ளைகளோடு சேர்ந்து காளியம்மாளத் தேடும்போது அகப்படவேயில்லே. மேற்காலே இருட்டுக்கிட்டு வந்ததனால மத்த புள்ளைங்க வீட்லே தேடுவாங்கன்னு எல்லாரும் ஓடி விட்டார்கள். செல்லம்மா மட்டும் விடாம காளியம்யம்மாளத் தேடிக்கிட்டு அங்கே இங்கே அலைஞ்சுகிட்டு இருந்தாள். ரொம்ப நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியாமப் போனது. அதனாலே அவளுக்கு அழுக தாங்க முடியாம கண்ணுலே இருந்து அருவி மாதிரி கண்ணீர் கொட்டத் தொடங்கிருந்தது! அப்பவும் அவளால காளியம்மாளக் கண்டுபிடிக்க முடியதது பெருத்த வேதனையை தந்திருக்க வேண்டும் செல்லமாளுக்கு. உள்ளுக்குள்ள இன்னைக்கு காளியம்மாள கண்டுபிடிக்காம வீட்டுக்கு போக கூடாதுன்னு முடிவு பண்ணிக்கிட்டு அங்கேயும் இங்கேயும் ஓரிடம் விடாமத் தொடர்ந்து தேடிக்கிட்டே அவள் இருந்தாள். விளையாட ஆரம்பிச்சதிலிருந்து எங்கயெல்லாம் ஒளிஞ்சி விளையாண்டோமுனு யோசிச்சுப் பார்த்து அந்த இடம் முழுவதும் ஒன்னு விடாம தேடிக்கிட்டேயிருந்தாள் செல்லம்மாள். அப்படி தேடும்போதுதான் மாரியப்பனோட வீட்டு கொல்லையில இருக்க வைக்கோல் படப்புல சின்ன பொண்ணோட காலு மட்டும் தெரிந்தது. அது ஒரு வேளை காளியம்மாளோடதா இருக்கலாமுனு ஓடி வந்து வெளக்கிப் பார்த்தப்ப அது உண்மையிலே காளியம்மாவேதான் இருந்தாள். மயங்கிப் போயி கெடந்தா. செல்லம்மாளுக்கு என்ன பண்றதுன்னு தெரியாம, அவளத் தூக்கி தோலுல போட்டுக்கிட்டு ஒரே ஓட்டமா காளியம்மாளோட வீட்டுக்கு கொண்டு வந்து அவ அம்மா கிட்ட ஒப்படைச்ச பிறகுதான் அவளுக்கு உசுரே திரும்பி வந்தது! காளியம்மாளோட ஆத்தா கொஞ்சமும் தாமதிக்காம முகத்துல தண்ணியடிச்சதும் விசுக்குன்னு தூக்கிப்போட்டு எந்திரிச்சு உட்கார்ந்திட்டா! கொட்டக் கொட்ட அவ முழிக்கிறதைபார்த்த பெறகுதே காளியம்மாளோட ஆத்தாவுக்கும் செல்லம்மாளுக்கும் போன உசுரு திரும்பி வந்த மாதிரி இருந்தது! கிழக்கு பக்கம் பார்த்து திரும்பி "யேன் குல சாமி! அய்யனாருதே யேன் புள்ளயக் காப்பாத்திருக்காரு"எனச் சொல்லிக்கிட்டே கீழே விழுந்து கும்பிட்டு நிமிர்ந்தாள் காளியம்மாளோட ஆத்தா!
கண் முழிச்சதிலிருந்து வச்ச கண்ண எடுக்காம செல்லம்மாளையே பார்த்துகிட்டு இருந்தா காளியம்மா! சட்டென எதுவும் பேசாமல் படக்குன்னு எந்திரிச்சு செல்லம்மாள இறுக்க கட்டிப் புடிச்சுக்கிட்டா! பதிலுக்கு செல்லம்மாளும் விடாமல் அவளைக் கட்டிக்கிட்டா!
அதுக்குள்ளார வெவரம் தெரிஞ்சு சுத்திருக்க வீட்டுக்காரிகயெல்லாம் ஒன்னாச் சேர்ந்து கூடி நின்று விட்டார்கள். கூடிய பொம்பளைங்க சும்மா இருக்க மாட்டாம.... ஆளாளுக்கு அவளுகளுக்கு வாய்க்கு வந்தபடி இல்லாததையும் பொல்லாதையும் சேர்த்து வச்சுப் பேச ஆரம்பித்து விட்டார்கள். ஒல வாய மூடலாம் ஆனா ஊரு வாய மூட முடியாதுன்னு சும்மாவா சொல்லி இருக்காங்க. அது நெசங்கற மாதிரி நடந்துகிட்டு இருந்தது.
"ஏண்டி மாரியம்மா! இந்த வெளங்காதவ கூட ஏண்டி உன் புள்ளைய சேர விடுற! இவ கூட சேர்ந்தா உருபுட்டாப்லதான்" எனச் செல்லமாளப் பார்த்து கூறினாள் கூட்டத்தில் ஒருத்தி!
" நானும் இருட்டி இவ்வளவு நேரம் ஆயிருச்சு! எம்மகளைக் காணமுன்னு வெளியெல்லாம் தேட ஆரம்பிச்சிட்டேன். ஆனாலும் கண்ணுல அகப்படவேயில்லை. அவ கூட வெளையாண்ட பிள்ளைகயெல்லாம் வீட்டுக்கு அப்பவே வந்திருச்சு! அப்பத்தே.... இந்தச் செல்லம்மா என் மகளைத் தூக்கிக்கிட்டு வந்தா...." எனக் கூறியபடி செல்லமாள நன்றியோடு பார்த்தாள் மாரியம்மா!
"உனக்கு அவளைப் பத்தி என்ன தெரியும்? நீ பாட்டுக்கு ஏதேதோ பேசிகிட்டு திரியிற... அவளயெல்லாம் உன் மக கூட சேர விடாத. அம்புட்டு தான் சொல்லுவேன்" என்றாள் மாரியம்மாவோட பக்கத்து வீட்டுக்காரி பேச்சியம்மா!
"நீ என்னக்கா இப்படிச் சொல்லுற? "எனப் புரியாத மாதிரி பேச்சியம்மாளப் பார்த்தாள் மாரியம்மா!
"உனக்கு ஒண்ணுமே தெரியாது! பச்ச குழந்தை மாதிரி நடிக்காதடி! அவ யாரு அவ எங்க இருந்து வந்தா எல்லாம் மறந்து போச்சா?" செல்லம்மாளை வெறுப்போட பார்த்தபடி கூறினாள் பேச்சியம்மாள்!
"நீ என்ன சொல்ல வாரேங்கிறத நேரடியா பளிச்சுன்னு சொல்லுக்கா?" என்றாள் காளியம்மாளின் ஆத்தா பக்கத்து வீட்டு பேச்சியம்மாளைப் பார்த்து.
"ஒனக்கு எல்லாமே மறந்து போயிரும். எங்களுக்கெல்லாம் அப்படி ஒன்னும் மறதி இல்ல! யாரும் மறந்தாலும் நான் மட்டும் மறக்க மாட்டேன்! ஊரு விட்டு ஊரு வந்து பஞ்சம் பொளைக்க வந்த பரதேசி கூட்டத்துல ஒருத்தி இவளோட ஆத்தா. இவ ஆத்தா பூரணி வந்தபோது வீசுன கையும் வெறும் கையும் வந்தா.... இப்ப பாரு... இந்த ஊர்ல அவளுக்குன்னு ஒரு வீடு இருக்கு. அது மட்டுமா இவளோட ஆத்தாதே கொத்துக்காரியா வேற இருக்கா... அதனால வேல வெட்டிக்கு போகணும்னா கூட அவகிட்ட போய் நிக்க வேண்டியது இருக்கு. என்ன பண்றது. பொம்பளைங்களா பார்த்ததுமே நம்ம வீட்டு ஆம்பளைங்க வாய பொளந்துகிட்டு தலையை ஆட்டிடுறாங்க. கடைசில நாம தானே சீ பட்டு நிற்க வேண்டிருக்கு...."செல்லமாளைப் பார்த்து பொரிந்து தள்ளி விட்டாள் பேச்சியம்மாள். விட்டிருந்தால் செல்லம்மாளை உண்டு இல்லையென பண்ணிருப்பாள்.
அவளது பேச்சில அத்தனை வெறுப்பு மண்டிக் கிடந்தது.
"நீ சொல்றது என்னவோ உண்மைதான் அக்கா. அதுக்கு இந்த பச்ச மண்ணு என்ன செய்யும்..."
"நல்லா இருக்குடி உன் பேச்சு... எதுக்கும் ஜாக்கிரதையா இருந்துக்கோன்னு சொல்றேன்.நீ என்னடாண்ணா.... தும்ப விட்டுட்டு வாலப் புடிக்கிற கதையா பேசிக்கிட்டு இருக்கே.... எனக்கென்ன வந்தது. நான் பாட்டுக்கு என் வேலைய பாத்துட்டு போறேன். பக்கத்து வீட்டு காரின் உனக்கு யோசனை சொன்னேன் பாரு. எனக்கு இது வேணும் இன்னமும் வேணும்"கழுத்தை ஒரு வெட்டு வெட்டியதோடு ஒரு விறுனு விறுன்னு வீட்ட பார்த்து நடந்து போயிட்டா பேச்சியம்மா.
கோழியோட அடையிலிருந்து புதுசா வெளிய வந்த கோழிக்குஞ்சு மாதிரி காளியம்மாளையும் அவ ஆத்தா மாரியம்மாளையும் மாறி மாறி பாத்துக்கிட்டு நின்ன செல்லம்மா எதுவும் பேசாம தன்னோட வீட்ட நோக்கி தனியாக நடந்து போய்கிட்டு இருந்தாள். இந்த சம்பவத்துக்கு பெறகு செல்லம்மாளும் காளியம்மாளும் நகமும் சதையுமாக மாறி இருந்தார்கள்.
No comments:
Post a Comment