Monday, 21 July 2025

இழவு - யாழிசைசெல்வா

இழவு - யாழிசைசெல்வா

=======================

      திடீரென வானம் இருட்டிக் கொண்டிருந்தது. மேற்குப் பக்கமாக திரண்டிருந்த கருமேகக் கூட்டம் மழையைக் கொட்டுறதுக்கு அப்பவோ இப்பவோ எனக் காத்திருந்தது.


      சுட்டெரிக்கிற மொட்ட வெயிலு பொறுக்க முடியாம மேல் மூச்சு வாங்கினதால வரப்போரம் அணைகட்டி கொளுத்து வளர்ந்து கெடந்த பூலாம் புதரோட நிழலுல நிக்கிறதுக்காக வந்திருந்தான் கருப்பையா. 


     வானம் பார்த்த பூமி. பெய்கிற மழைய நம்பி பொலப்பு நடந்து கொண்டிருந்தது. நிலக்கடலையோ, எள்ளுப் பயிறோ ஏதாவது விதைச்சு விட்டா சாமி புண்ணியத்துல மழகிழ பேஞ்சு விளைஞ்சதுனா நாலு காசு பாக்கலாமுன்னு  நெனச்சான்  கருப்பையா. விடியக்கருக்களிலே  காட்டுக்கு வந்தவன் நேத்து உழுத நிலத்துல வரப்பையும் ஓரக்காலையும் மாங்கு மாங்குன்னு மாம்பட்டிய வச்சு வேகாத வெயிலுல வெட்டிக்கிட்டு இருந்தான் கருப்பையா. ஏதோ ஒரு வீராப்புல   சோறு தண்ணி கொண்டு வராமல் மம்பட்டியை மட்டும் தோளில் போட்டுக்கிட்டு ராசா கனக்கா காட்டுக்கு  வந்திருந்தான். வேட்டிய வரிஞ்சு கட்டி காட்டோட வரப்ப ஒழுங்கு பண்ணி முடிச்சபோது சுரீர்னு சாட்டைக் கம்பால முதுகில அடிச்ச மாதிரி உச்சி வெயிலு மண்டைய பொளந்துட்டு இருந்தது.  காலையில வெறும் நீச்சத்தண்ணி மட்டும் குடிச்சுட்டு வந்தததுனால ஒரு மாதிரி தல கிர்ருன்னு இருந்துச்சு கருப்பையாவுக்கு. உழுத புழுதிக் காடு முழுவதும் கானல் நீர் மேலே எழுந்து கொண்டிருந்தது. தண்ணியில்லாம மேல் நாக்கு வறண்டு தடித்துப் போய் இரும்பு மாறி கெட்டியா   இருந்தது கருப்பையாவுக்கு .  வறண்ட தொண்டையில எச்சில் ஊற  வச்சு ஒரு வழியா முழுங்கினான்.

     கருப்பையா உடம்பிலிருந்து வியர்வை பெருக்கெடுத்து ஓடத் தண்ணியா உருண்டோடி உழுத நிலத்துல விழுந்ததும் வெயில் சூட்டுக்கு பட்டுன்னு காணாமப் போனது.‌ உடம்பு முழுவதும் வியர்வை பெருக்கெடுத்து அது  உப்புத்தண்ணியா வழிஞ்சு ஓடினாலும் ஒரு சொட்டு தண்ணீர் குடிக்க முடியாத கொடுமைதான் உழவனோட பொழப்பு.  

      எதையும் சட்டை பண்ணாம மம்பட்டிய எடுத்துக்கிட்டு ஓரக்கால சரி பண்ண நடந்தான் கருப்பையா. ஓரக்கால் முழுவதும் அருகம் புல்லும் கோர புல்லுமா சடைச் சடையா வளர்ந்து கெடந்தது. 'உழைக்கிறதுக்கே பிறந்த உடம்பு இது, பொழுதுக்குள்ள கொழுப்பெடுத்து வளர்ந்து கெடக்கிற இந்த புல்லா நானானு ஒரு கை பாத்திர வேண்டியது' தான்னு தனக்குத் தானே பேசிக் கொண்டு ஓரக்கால வெட்டிக்கிட்டு இருந்தான் கருப்பையா. காட்டோட நாலு மூலையில ரெண்டு மூலையச் சரி பண்ணியிருந்தான். 

      வெடிச்ச வெள்ளரிப் பழமாட்டம் இருந்த கருப்பையாவோட பாதம் வெயில் சூடு பொறுக்க முடியாம தீயில விழுந்த புழு மாதிரி, கால மாத்தி மாத்தி வச்சுக்கிட்டே வேலை செய்துகொண்டிருந்தான்.  'இன்னும் கொஞ்சம் தான் இருக்குது. கொஞ்ச நேரம் பூலாம்புதரோட நிழல்ல தகுப்பாரிட்டு வேலையப் பாக்கலாம்னு' ஓட்டமும் நடையுமா பூலாம் புதரோட நிழலுக்கு வந்து சேர்ந்தான் கருப்பையா. அப்போதுதான்  வானம் இருட்டுக் கட்டத் தொடங்கியிருந்தது.

      'இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்தா, மீதி இருக்கிற ஓரக்காலையும் வெட்டி வீசிடுவேன். அதுக்குள்ளற நாசமாப் போன மழை வந்துரும் போலருக்கே... கருமேகம் திரண்டு மப்பெடுத்து இருக்கிறத பாத்தா இன்னைக்கு மழை வெளுத்து வாங்காமப் போகாது போலருக்கு. இன்னையோட வேலையா முடிச்சிடலாம்னு ஆசையா இருக்கு ஆனா அதுக்குள்ளார இந்த மழை வந்தே வந்தேன்னு வந்துகிட்டுருக்கு. இந்த வருஷமாவது வெள்ளாம விளைஞ்சு நாலுகாசு  பாத்துரலாம்னு ஆசைப்பட்டா அதுக்கொரு நேரம் காலம் கூடி வர மாட்டேங்குது' வெறுப்போடு கருமேகத்தை பார்த்து வாடிப்போனான் கருப்பையா.மேற்குத் தொடர்ச்சி மலையிலருந்து புறப்பட்டு வந்த மழக்காத்து, சூடான அவனோட உடம்புக்கு ஒத்தடம் கொடுக்கிற மாதிரி தொட்டுப் போனது.

       காட்டுக்கு பக்கத்துலயிருந்த ஓடக்குள்ளிருந்து மேலேறி, உழுத காட்டுக்குள்ள தத்தக்கா புத்தக்கானு ஓட்டமும் நடையுமா வந்து சேர்ந்தான் மாடசாமி. 

      "என்னடா.. பாரவண்டி இழுத்துக் கலைச்சு போன மாடு மாதிரி மூசு மூசுனு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடி வந்திருக்க....? அப்படி என்ன தல போற அவசரம்? கொஞ்ச நேரம் பொறுத்திருந்தா நானே வேலைய முடிச்சுட்டு வீட்டுக்கு வந்திருப்பேன். அதுக்குள்ள தொரைக்கு அப்படி என்ன அவசரம்? ஏன் பேசாம அப்படியே தெகைச்சுப் போயி நிக்கிற? கண்ணு வேற ரத்தமா செவந்து கிடக்கு. எதுனாலும் வாயைத் தொறந்து சொன்னாத் தானே தெரியும்டா. வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க? வாயத் தொறந்து சொல்லேண்டா...!" கருகருன்னு திரண்டு இருட்டிக்கிட்டு வந்த வானத்தையும் மாடசாமியையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே கேட்டான் கருப்பையா. 

    "சித்தப்பா....!"

     "சொல்லுடா காது கேக்குது!" கடுப்பாகச் சொன்னான் கருப்பையா. 

     "நம்ம வீட்டு பெரிய மனுஷன் நம்மளையெல்லாம் தனியாத் தவிக்க விட்டுட்டு போயிட்டாரு...." மடை திறந்த வெள்ளம் மாதிரி மாடசாமி கண்ணிலயிருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டியிருந்தது.

     "என்னடா சொல்ற....? நேத்து தானே ஆட்டுக்கறி குழம்பு தின்னுட்டு நல்லா சுனையா யேன் பொஞ்சாதி சோலையம்மா வச்ச மாதிரி இன்னைக்கு தான்டா குழம்பு வச்சிருக்க யேன் மருமக. நீ கல்யாணம் கட்டிக்கிட்டு வந்த இத்தனை வருஷத்துல அவ கையால வயிறார இன்னைக்கு தான்டா சோறு தின்னுருக்கேன். சோலையம்மாவோட கைப்பக்குவத்த திரும்பவும் என் நாக்குல உன் பொண்டாட்டி ஊரவச்சுடானு மதினிய பாராட்டுனதா அண்ணன் ராத்திரி சொல்லிச் சந்தோஷப்பட்டாரு.... உண்ட சோறு உடம்புல சேர்றதுக்குள்ள இப்படி வந்து சொல்லி நிக்கிற.... பொய்யி கிய்யி பேசாம உண்மையைச் சொல்லுடா.... ஏன் ஈரக் கொலையை வகுந்து போட்ட மாதிரி இருக்கு. என்னால நம்ப முடியல....! இதெல்லாம் பொய்யா இருக்காதான்னு நெஞ்சு பட படன்னு அடிக்குதுடா....! ஏற்கனவே நாசமா போன மழை வேற இன்னைக்கு வந்து யேன் பொழப்புல மண்ணள்ளி போடப்போகுது, அது பத்தாதுன்னு நீ வேற நெருப்பள்ளி கொட்டாதே...!" என்ற கருப்பையாவின் முகம் பேய் அடிச்ச மாதிரி மாறியிருந்தது.

      "எனக்கு மட்டும் இது நிசமா இருக்கணும்னு என்ன வேண்டுதலா என்ன சித்தப்பா! நானும் இந்த செய்தி கேட்ட உடனே இதெல்லாம் பொய்யா இருக்கக் கூடாதானு நம்ம குல சாமி அய்யனார வேண்டிக்கிட்டு , நம்ம மேற்கு வீட்டுக்குப்போய் பார்த்தப்ப..... நம்ம வீட்டு பெரிய மனுஷன்....  சாமி வீட்டு வாசல்ல மல்லாக்கா விழுந்தவரு  உத்திரத்தையே வெரிச்சுப் பார்த்த மானக்கி கெடந்தாப்புல.... அதைப் பார்த்தபோது என்னால நம்ப முடியல. அதுக்குள்ளார நம்மளோட சொந்த பந்தங்களெல்லாம் செய்தி கேட்டு ஒன்னு கூடிட்டாங்க. நம்ம பங்காளி கூட்டத்து  மூத்த மனுஷன், நம்ம வீட்டு பெரிய மனுஷனோட நாடித்துடிப்பை பார்த்து உறுதிப்படுத்துன பிறகுதான் உன் கிட்ட சேதி சொல்ல அப்பன் என்ன அனுப்பி வச்சாரு...." பொங்கி வந்த கண்ணீரோடு கருப்பையா தோளில் சாய்ந்து தேம்பித் தேம்பி அழுதான் மாடசாமி.

     வானமே இடிஞ்சு தலையில விழுந்து பூமிக்குள்ள கருப்பையாவ போட்டுப் புதைச்ச மாதிரி இருந்தது, மாடசாமி சொன்னத கேட்டதும்.

     தாகத்தில் தவிச்சு தொண்டையை நனைக்க முடியாம எச்சில விழுங்கிட்டு இருந்தவன் உடம்பு முழுவதும் உருண்டு பெருக்கெடுத்து வழிந்தோடிக்  கொண்டிருந்தது மழைதண்ணி. தாகம் மறக்கடிக்க ஈரம் வந்தும் நெஞ்சில் பாரம் மட்டும் துளியும் குறையவிடாம, அதுல பாரங்கல்ல வச்ச மாதிரி கனத்துக் கெடந்தது.

     மேலக் காட்டுலயிருந்து ஒரு வார்த்தை கூட பேசாம பித்து பிடித்தவன் போல இழவு வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தான் கருப்பையா. மாடசாமியும் அழுத மேனக்கி அவன் கூடவே வந்து சேர்ந்திருந்தான். 

     மேற்கு வீட்டு வாசல் முழுவதும் தென்னை ஓலைக்கீத்துல பந்தல் போடப்பட்டிருந்தது .இழவு வீட்டுக்கு வந்தவங்க  தேனடைய  மொய்க்கிற தேனீக் கூட்டம் மாதிரி கூட்டமா ஆங்காங்கே சோகமே வடிவாய் நின்று ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பந்தல் முழுவதும் பரப்பி வைத்திருந்த இரும்பு நாற்காலிகளில் ஊரு சனம் ஆக்கிரமித்திருந்தது. 

     தூரத்திலே நின்னு அப்பனோட முகத்தை பார்த்து தேம்பித் தேம்பி அழுதுகிட்டு இருந்தான் கருப்பையா. 

    "ஏம்பா ஆளாளுக்கு இப்படி கூடிக் கூடி பேசிக்கிட்டு இருந்தா.... மத்த வேலைகளெல்லாம் யாருப்பா பார்க்கிறது. அதததுக்கு வேண்டிய ஆள அனுப்புனா தானே காரியம் நடக்கும். இப்படியே சிலை மாறி நின்னுகிட்டிறுந்தா யாருப்பா இதெல்லாம் பாக்குறது" சத்தம் வந்த திசைப்பக்கம் ஒரே நேரத்துல இழவு வீட்டில் கூடியிருந்தவர்கள் எல்லாரும் திரும்பிப் பார்த்தார்கள். உழைச்சு காய் காய்த்து உரமேறிய வலுவான உடம்பு. அறுபது வயது கடந்தும் குறைய கம்பீரம். எதையும் ஆராய்ந்து நிதானமாக பேசும் ஒளி பொருந்திய கண்கள். பார்த்ததும் வணங்கும் தோற்றம். எப்பொழுதும் அவரோடு இணை பிரியாமலிருக்கும் தோளில் பச்சைநிறத் துண்டோடு ஊரோட தலைவர் குருசாமி அங்கு நின்றிருந்தார்.

      "ஊர்த்தலைவர் கேட்கிறாருலே.... எல்லாரும் மசமசனு நின்னுகிட்டு இருந்தா என்ன அர்த்தம்? ஏதாவது பதில் சொல்லுங்கப்பா!" ஐந்தடி உயரத்தோடு வெள்ளையும் சொல்லையுமாக இருந்த ஊர்த் துணைத் தலைவர் வெள்ளைச்சாமி அங்கிருந்தவர்களைப் பார்த்துக்கேட்டார். 

      "என்னப்பா இது? ஊரோட தலைவர் கேக்குற கேள்விக்கு இதுதான் நீங்க கொடுக்கிற மரியாதையா....? நல்லா இருக்குதுப்பா... ஏதாச்சும் ஒரு முடிவுக்கு வாங்கப்பா. பெரிய தலக்கட்டு தவறிப் போயிருக்கு. அதுக்கான மரியாதையோட அவர அனுப்பி வைக்கணுமா? இல்லையா? இப்படியே ஆளாளுக்கு மாறி மாறி நின்னு பேசிகிட்டு இருந்தா எல்லாம் சரியா போகுமா? சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்கப்பா..." என்றார் ஊர்த் தலைவர் குருசாமி.

     "ஊரோட பெரிய மனுஷன் நீங்க.... உங்களுக்கு தெரியாதா என்ன? ஆக வேண்டியது பாருங்க..."அழுது கொண்டே ஊர்த்தலைவர் குருசாமி நோக்கி  வந்தான் சின்னப்பாண்டி.

     "பெரியவர் அய்யனாருக்கு ரெண்டு பசங்க. அதுல மூத்த பையன் சின்னப் பாண்டிதே சொல்லிட்டான்லெ... பிறகென்ன... ஆக வேண்டியத பாருங்க...." என்றார் துணைத்தலைவர் வெள்ளைச்சாமி. 

    "எல்லாம் சரிப்பா. செலவுகளெல்லாம் யார் பாக்குறது? அதுக்கு ஒரு முடிவு பண்ணனுமில்ல. நாம பாட்டுக்கு எடுத்தோம் கவுத்தோம்முன்னு செஞ்சிர முடியாதுல? அப்புறம் தேவையில்லாம சண்டை சச்சரவாயிருமில்லப்பா...." துணைத்தலைவர் வெள்ளைச்சாமி பக்கத்திலிருந்த சின்னப் பாண்டி பொண்டாட்டியோட கூடப்பிறந்த அண்ணன் மாரியப்பன் கேட்டான். 

      "நீ என்னப்பா எழவு வீட்டுல இப்படி பேசிக்கிட்டு இருக்க? எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறியா?"என்றார் துணைத்தலைவர் வெள்ளைச்சாமி. 

      "எல்லாம் தெரிஞ்சுதே பேசுறேன். ரெண்டு பசங்க இருக்கும்போது செலவும் இரண்டாத் தானே போடணும். அதுதானே முறை. அதைத்தான் நான் சொல்றேன். இதில் என்ன குத்தமிருக்கு....?" தன்னோடு சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு சின்ன பாண்டிக்கு நடக்கவிருந்த பெரிய குற்றத்தை  நடக்கவிடாம தடுத்துவிட்ட தெனாவெட்டோடு பேசினான் சின்னப்பாண்டி. 

      "நீ கேக்குறதுலயும் ஒரு நியாயம் இருக்கு. ஆனா பாரு... உன்னோட மச்சினன். அதே சின்னப் பாண்டி உன் தங்கச்சியை கட்டி குடும்பஸ்தனா இருக்கான். மேற்கொண்டு வயக்காடு முழுவதையும் அவன்தே பார்த்துக்கிட்டு இருக்கான். பம்பு செட்டு மோட்டாருங்கிறதால தண்ணிப் பிரச்சனை எதுவும் இல்லாம விவசாயம் பண்ணி வசதியா வாழ்ந்துகிட்டு வாறான். ஆனா கருப்பையா வானம் பார்த்த பூமியை நம்பி ஒண்டிக்கட்டையா பொழப்பு ஒட்டிக்கிட்டு இருக்கான். ரெண்டும் எப்படிப்பா சரியாகும். கருப்பையா என்னைக்காவது எனக்கு அதைக் கொடு இதை கொடுனு கேட்டிருப்பானா? அவனுக்கு இருந்த ஒரே ஆதரவு அவங்க அப்பன் அய்யனாரும் போயிட்டாரு. இப்ப நாதியத்து போய் கருப்பையா நிக்கிறான். முறைப்படி பார்த்தா எல்லா செலவையும் சின்ன பண்டி தானே எடுத்து நடத்தணும். நீ என்னடான்னா இப்படி பேசிக்கிட்டு நிக்கிற. இதெல்லாம் சரி கிடையாது தம்பி" ஊர்த் தலைவர் குருசாமி கட்டந் திட்டமாக மாரியப்பனையும் சின்ன பாண்டியையும் பார்த்துக் கூறினார். 

     "இதென்னாங்க அணியாம இருக்கு. எதா இருந்தாலும் இரண்டாத் தானே போடணும். ஊரில் இல்லாத வழக்கமாலே இங்க நடக்குது. இது மாதிரி நான் எங்கேயும் பார்த்ததே இல்லை. நீங்க என்னோடன்னா எல்லா செலவையும் ஒரையாடிய யேன் மச்சினே தலையில கட்டி வச்சி ஓட்டாண்டி ஆக்குறதுக்கு திட்டம் போட்டு இருக்கீங்க போலருக்கு. இதெல்லாம் ஒத்துக்க முடியாது" கொதித்துப் போய் பேசினான் மாரியப்பன் .

     "ஏம்பா சின்னப்பாண்டி. உன்னோட மச்சினனை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறியா...? இதெல்லாம் நல்லா இல்லப்பா! பெரிய மனுசன் சாஞ்சு கெடக்காரு அவர முறைப்படி அனுப்பி வச்சிட்டு எதா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம். இப்படியே பேசிக்கிட்டு போனா.... பேச்சு வளருமே தவிர, இதுக்கு உடனடித் தீர்வு உடனே கெடைக்காது. என்ன நான் சொல்றது சரிதானே....?"என்றார் ஊர்த் தலைவர் குருசாமி.

    எதுவும் பேசாமல் மௌனமாய் தலையை மட்டும் சின்ன பாண்டி ஆட்டியதும் விருட்டென மாரியப்பன் அங்கிருந்து போய்ட்டான். கோபித்துக் கொண்டு போகும் மாரியப்பனையே பார்த்துக் கொண்டிருந்தான் சின்னப்பாண்டி. 

     "அவன் எங்கப்பா போயிடப் போறான்.  ஆகிற வேலையைப் பாருங்கப்பா"துணைத்தலைவர் வெள்ளைச்சாமி கூறினார்.

      "சரி! இழவு சொல்றதுக்கு ஆள் அனுப்பியாச்சா?" எனக் கேட்டபடி வந்தான் ஈஸ்வரன்.

      "என்னடா ஆளக் காணோம்னு பார்த்தேன். சரியான சமயத்துல வந்து சேர்ந்திட்டப்பா. இழவு சொல்றதுக்கு உன்ன அடிச்சுக்க ஆள் கிடையாதுப்பா...."என்றார் ஊர்த் தலைவர்   குருசாமி.

     "அது என்ன பெரிய கம்ப சூத்திரமா... நாலு ஊருக்கு போயி இறந்தவங்க ஆளுகள பாத்து சொல்லிட்டா போயிருச்சு. இது என்னவோ... பெரிய வேலை மாதிரி பேசிக்கிட்டு இருக்கீங்க. நாலு காசு கொடுத்தா யாரு வேணாலும் போய் சொல்லிட்டு வருவாங்க"எனச் சொல்லிக்கிட்டே பேசிக்கொண்டிருந்தவங்க பக்கத்துல திரும்பி வந்திருந்தான் மாரியப்பன். 

     "பெறகென்னப்பா.... கைவசந்தே. உருப்படியான ஆளு வச்சிருக்கீங்க. அப்புறம் எனக்கு என்ன வேலை? செத்த நேரம் இழவு வீட்டில உட்கார்ந்திட்டு கிளம்ப வேண்டியதுதான்..."அங்கிருந்தவர்கள் காதல் விழும் படி சொல்லிக்கிட்டே நகர்ந்து போயி பந்தலில் போட்டிருந்த இரும்பு நாற்காலியில் அமர்ந்து கொண்டான் ஈஸ்வரன்.

      "யேம்ப்பா சின்னப்பாண்டி! உன்னோட மச்சினன்! எப்ப வாய தொறந்தாலும் ஏதாவது எடக்கு மடக்கா பேசிக்கிட்டே இருக்கானப்பா. இந்த காரியம் முடியுற வரைக்கும் அவன் வாயக் கொஞ்சம் கட்டிப் போடு! ஒரு இடத்தில் இருக்கிற மாதிரி ஒரு இடத்துல இருக்காது...."என்றார் ஊர்த் தலைவர் குருசாமி.

      "அப்படி நான் என்னத்த சொல்லிட்டேன்னு இப்படி கிடந்து குதிக்கிறீங்க? ஊர் உலகத்துல இல்லாதயா நான் சொல்லிட்டேன்?" பேசியதை ஞாயப்படுத்த முயன்றான் மாரியப்பன். 

     "மச்சான்.... கொஞ்ச நேரம் சும்மா இருய்யா..." மாரியப்பனை கையமர்த்தினான் சின்னப் பாண்டி.

     "இங்க பாருப்பா சின்னப்பாண்டி! நீ நினைக்கிற மாதிரி இழவு சொல்றது அப்படி ஒன்றும் லேசுப்பட்ட காரியமில்ல. நம்ம பாட்டுக்கு எடுத்தோம் கவுத்தொம்முனு எதையும் செஞ்சுற முடியாது. அதுததுக்குனு ஒரு முறை இருக்கு. அதுபடி தான் செய்ய முடியும். என்ன நான் சொல்றது புரியுதா?" சின்ன பாண்டியின் தோளில் வாஞ்சையோடு கைவைத்தபடி கூறினார் ஊர்த் தலைவர் குருசாமி.

      "தலைவர் சொல்றதும் நியாயம் தானப்பா. போன வருஷம் உன்னோட கூட்டாளி காளிமுத்தோட அப்பா இறந்து போனப்ப இந்த பைய ஈஸ்வரன் அதான்பா.. அங்க ஒக்காந்து இருக்கானுல இவன் ஊர்ல இல்ல. வேற வழி இல்லாம காளிமுத்தோட சொந்தக்கார பையன் ஒருத்தன் இழவு சொல்றதுக்கு அனுப்பி வச்சப்ப, பெரிய ஏழரை இழுத்துட்டு வந்துட்டான். அப்புறம் அதை சரி பண்றதுக்கு பெரும்பாடா போயிருச்சு"என்றார் துணைத்தலைவர் வெள்ளைச்சாமி. 

      "அப்படி என்ன நடந்துச்சு? சொன்னா நாங்களும் தெரிஞ்சுக்குவமில்லே....?"என்றான் மாரியப்பன். 

     "நல்லா கேட்டுக்கப்பா. இழவு சொல்லப் போன பைய புதுசு. அதனால அவனுக்கு தெரிஞ்சத சொல்லிட்டு வந்துட்டான். அவன் வந்த பிறகு அவன விசாரிச்சப்ப, எல்லார்கிட்டயும் தகவல் சொல்லிட்டேனு அவன் பாட்டுக்கு காசு வாங்கிட்டு போயிட்டான். வினையே அவன் போன பிறகுதான வந்து நின்னுச்சு"என்றார் துணைத்தலைவர் வெள்ளைச்சாமி. 

     "அப்படி யேன் பாக்குறீங்க....? நடந்தத முழுசா சொல்லுங்க.... அப்பத்தான என்னானு விளங்கும்?"

      "சரி சொல்றேன் கேளுப்பா. காளிமுத்தோட அப்பா பேரு முருகன் இறந்து போனாருன்னு, இழவு சொல்லப் போன பய சொல்லிட்டு வந்துட்டான்..." எனச் சொல்லி நிறுத்தினார் துணைத்தலைவர் வெள்ளைச்சாமி. 

      "எல்லாம் சரியாத்தான சொல்லி இருக்கான். பிறகு எங்கிருந்து வந்துச்சு பிரச்சனை? நீங்களா ஏதாச்சும் கிளப்பி விடுறீங்களா?"

     "கொஞ்சம் பொறுப்பா. மேலோட்டமா பார்த்தா எல்லாம் சரியாத்தான் இருக்கும். விவகாரம் வினையா போனது இழவு விசாரிக்க அந்த ஊர்க்காரங்க வந்த பிறகு தானே தெரிந்தது. நம்ம ஊருல ஒரே பேர்ல நிறைய பேர் இருக்காங்க. அது உங்களுக்கு எல்லாருக்கும் தெரியுமுன்று நினைக்கிறேன்?"

     "ஆமா! இது என்ன புதுசா....?"

       "இது ஒன்னும் புதுசு இல்லதே.... ஆனா இது தானே அங்க வினையா மாறிப்போச்சு...."

      "எப்படி?"

      "இறந்து போன காளிமுத்தோட அப்பா பேரு முருகன், அதே மாதிரி பேருல இன்னொருத்தரும் இந்த ஊர்ல இருக்காங்க. எழவு சொல்லப் போன பய, இறந்தவங்க வீட்டோட சொந்தக்காரங்க கிட்ட சொல்லாம. இழவு செய்தியை மாத்தி உசுரோட இருக்கிற சொந்தக்காரங்க வீட்டில சொல்லிட்டு வந்துட்டான். எழவு செய்தி கேட்ட வீட்டுக்காரங்களும் மாலை மரியாதை எழவுச் சீர் வரிசையோடு ஊருக்கு வந்து பார்த்த பெறகுதே ஆள் மாறிப் போனது தெரிஞ்சப்ப அது பெரிய கலவரத்தில் போய் முடிஞ்சிருச்சு. வந்தவங்களுக்கும் எழவு வீட்டுக்காரங்களுக்கும் ஒரேயடியா சண்டையில போயி நின்னுச்சு. அதுக்குப் பிறகு நம்ம ஊர்த்தலைவர் அதை ஒரு வழியா சரி பண்ணுறதுக்கு போதும் போதும்னு ஆயிருச்சு. இப்ப சொல்லு பாப்போம், இது சுளுவான வேலையான்னு....?"

      "இத அவன் மட்டும் எப்படி சரியா சொல்லுவானு சொல்றீங்க?"

      "அத நான் சொல்றேன்" அவர்களருகே வந்தான் ஈஸ்வரன்.

      "தூரத்தில் உட்கார்ந்து இருந்தாலும் காத கழட்டி இங்கே வச்சிட்டு போனயாக்கும். சரியான பாம்பு காதுப்பா உனக்கு! சரி நீயே வந்துட்ட. எப்படினு நீயே விளக்கமா சொல்லிடு!" என்றார் துணைத்தலைவர் வெள்ளைச்சாமி. 

      "ஊருக்குள்ளற ஒரே பேருல எத்தனை பேர் இருந்தாலும் சரியா சொல்றதுக்கு ஒரு கணக்கு இருக்கு"பொடி வைத்துப் பேசினான் ஈஸ்வரன். 

     "அது என்னன்னுதே சொல்லேன்பா....?" என்பது போல் ஈஸ்வரனை பார்த்தான் மாரியப்பன். 

     "சரி கவனமா கேளு! பொதுவா இறந்து போன ஆளு இருக்க தெரு, அவங்க அப்பா பேரு, அவர் பொண்ணு எடுத்த இடம், அவங்க தோட்டம் தொரவு இருக்கிற இடம், ஆளோட உசரம், வீட்டோட அமைப்பு, அவங்க கும்பிடுற குலசாமி, அவங்க அண்ணன், தம்பி, அக்கா, இல்ல தங்கச்சி பேரு, அவுங்க வாக்கப்பட்ட ஊரு, இதுகள் எல்லாம் வச்சுக்கிட்டு இடத்துக்கு தக்க மாதிரி இழவு சொல்லப் போற இடத்துல கேள்விகளை கேட்டு நாமளே ஒரு அனுமானத்துக்கு வந்து, அதுக்கு பிறகு தான் எழவு சொல்லணும். இதுல தப்பு வாறதுக்கே வாய்ப்பே கிடையாது. என்னோட இத்தனை வருஷம் சர்வீஸூல ஒரு இழவு செய்தி கூட தப்பா முடிஞ்சதே கிடையாது...." பெரும் சாதனை செய்ததுபோல முறுக்குமீசைய தடவிக்கொண்டே பேசினான் ஈஸ்வரன். 

     "என்னப்பா ஈஸ்வரன் சொன்னது விளங்குச்சா....? இப்ப சொல்லு? இவனை அனுப்பலாமா வேணாமா?"

     "இவனையே அனுப்பி வைங்க!" வேண்டா வெறுப்பாக கூறினான் மாரியப்பன். 

     "சரிப்பா! ஈஸ்வரன் கையில ஆயிரம் ரூவா காசு கொடுத்து அனுப்புங்க" என்றார் ஊர்த் தலைவர் குருசாமி.

     "என்னது ஆயிரம் ரூவாயா....? இழவு சொல்றது இம்புட்டு காசா? இது பகல் கொள்ளையாலேயிருக்கு? இந்த மாதிரி நான் எங்கேயும் பார்த்ததே இல்லை?" மாரியப்பன் போட்டோ கூச்சலில் எழவு வீட்டுக்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் வெறுப்போடு இது இழவு வீடாதானாங்கிற தொனியோடு திரும்பிப் பார்த்தார்கள்.

     "மாரியப்பா....! கொஞ்சம் அமைதியா பேசுப்பா! இது இழவு வீடுங்கிறத அடிக்கடி மறந்து போயிடுற..." மாரியப்பனை அமைதிப்படுத்த முயன்றார் ஊர்த் தலைவர் குருசாமி.

    "இருந்தாலும் இது ரொம்ப அதிகம்! போயும் போயும் இழவு சொல்றதுக்கு யாராவது ஆயிரம் ரூவா தருவாங்களா? அந்தக் காசை சம்பாதிக்க ஒவ்வொரு நாளும் நம்ம என்ன பாடு பட வேண்டியதா இருக்கு! நீங்க என்னடான்ன சுளுவாத் தூக்கி கொடுக்க சொல்றீங்க? என்னால இதை ஏத்துக்கவே முடியாது"

     "சரி அப்ப நீங்க வேற ஆள பாத்துக்கங்க. யேன் சோலி பாட்ட நான் பாத்துக்கிட்டு போறேன்" துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டான் ஈஸ்வரன். 

    "ஈஸ்வரா இருப்பா....! "அவன் நின்றதும் "மாரியப்பா, நீ மாட்டுக்கு ஏதாவது எடுத்தேன் கவுத்தேனு எதாவது பேசிகிட்டு இருக்காத... இவன் போயிட்டான்னா.... அப்புறம் நம்ம வேற ஆள பாக்க முடியாது" என்றார் ஊர்த் தலைவர் குருசாமி. 

      "என்னங்க நீங்க எப்ப பாரு இவனுக்கே ஆதரவா பேசிக்கிட்டு இருக்கீங்க?"

      "தம்பி! எழவு சொல்ல போகுற இடத்துக்கு சில சமயம் பஸ்ஸூ இருக்கும் இருக்காது. அந்த மாதிரி நேரத்துல அந்த இடத்துக்கு தகுந்த மாதிரி ஏதாவது ஒரு யோசனை பண்ணி செய்தியைக் கொண்டு போய் சேர்க்கப் பாக்கணும். சரி செய்தி சொல்லிட்டோம், அடுத்த ஊருக்கு போகலாம்னு திரும்பும் போது அதே பிரச்சனை வேற ஒரு ஊருக்கும் வரலாம். அதையும் சமாளிக்கணும். இழவு சொல்லப்போறதுனால போகிற இடத்தில கை நனைக்க முடியாது. அதனால கிடைக்கிற இடத்துல சாப்பிடனும், அதே நேரத்தில சரியான சமயத்துல இழவு செய்தியும் சொல்லணும். இந்த மாதிரி நிறைய நெளிவு சுளிவு இருக்கும். அதையெல்லாம் சமாளிச்சிட்டு இழவு செய்தியை சொல்லிட்டு வரணும். அத்தனையும் நாமலே நேர்ல போய் சொல்லிட்டு வர முடியாது. இங்க இறந்தவங்களுக்கு வேண்டிய சடங்கு சம்பிரதாயம். எல்லாத்தையும் முறைப்படி நாமதே பாக்கணும். நம்மோட கவனம் இதுல இருக்குமா? இல்ல சொந்தக்காரங்களுக்கு இழவு சொல்றதுல இருக்குமா?. அதனாலதே.... இந்த மாதிரி இழவு விஷயத்துல கணக்கு பாக்காம செலவு பண்ணாத்தே நாம நெனச்ச காரியம் முடியும். இதெல்லாம் வாழ்க்கையில எல்லாரும் அனுபவிச்சு தெரிஞ்சுக்க முடியாது. ஒரு சிலதை மூத்தவங்க சொன்னாச் சரின்னு கேட்டுக்கணும்" மாரியப்பனுக்கு புரியும்படி எடுத்துக் கூறினார் ஊர்த் தலைவர் குருசாமி.

     மாரியப்பன் எதுவும் சொல்லாமல் தலைகவிழ்ந்தபடி நின்றான். 

     "ஐயா வணக்கமுங்க" வணங்கியபடி நின்றான் வெட்டியான் கணேசன். 

     "சொல்லு கணேசா... என்ன விஷயம்?"

      "ஊரோட பெரிய தலைக்கட்டு அய்யனார் இறந்து போயிருக்காரு. ஆனா அவர இன்னும் படுக்கையிலேயே வச்சிருக்காங்க. நம்ம வழக்கப்படி குளிக்க வச்சு சந்தனம், சவ்வாது, பன்னீர் தொளிச்சு, மாலை மரியாதையோடு ராசா கணக்குல மர நாற்காலியிலே தானே உக்கார வைப்பீங்க... வாசல்ல இன்னும் விளக்கு கூட வைக்கல. மரக்கா நெல்லை காணோம். அவர் காலுக்கு பக்கத்துல ரெண்டு ஊதுபத்தி மட்டும் எரிஞ்சுக்கிட்டு இருக்கு. இது எல்லாம் சரியாப் படல.  எதுவுமே நடக்காம இருக்கது, அவருக்கு செய்ற அவமரியாதை! நல்லா வாழ்ந்த மனுசன இப்படியா போட்டு வச்சிருப்பாங்க? எனக்கு தோணுச்சு நான் கேட்டுட்டேன்" கவலையோடு கேட்டான் வெட்டியான் கணேசன்.

     "பாத்தியாப்பா.... பேச்சு வாக்குல நாம நம்மளோட வழக்கத்தையும் மறந்துட்டு நின்னுக்கிட்டு இருக்கோம். இன்னும் ஒரு வேலை கூட நடக்கல. அது அப்படியே கெடக்கு.... மழை வேற மறுபடியும் வர்ற மாதிரி இருக்கு. அதுக்கு ஏத்த மாதிரி வந்தவங்க சாப்பிடுவதற்கும் ஒதுங்குறதுக்கும் , உறங்குறதுக்கும்  இன்னும் எதுவுமே பண்ணல. அதுக்கப்புறம் நாளைக்கு அய்யனார் சுடுகாட்டுக்கு கொண்டு போறதுக்கு வேண்டிய பொருள் எல்லாம் வாங்க வேண்டி இருக்கு. கொட்டு காரங்களுக்கு சொல்லிவுடனும், கப்பல் தேர் கட்டுவதற்கு ஆள ரெடி பண்ணனும். அதுக்கு செய்ய வேண்டிய சடங்கு சம்பிரதாயம் பாக்கணும். அதுக்கு முதல்லே வள்ளுவர் வேணுமுல்லே....‌ ஏம்பா சின்னப்பாண்டி! வள்ளுவருக்கு தகவல் சொல்லியாச்சா....?"சின்னப் பாண்டியப் பார்த்துக் கேட்டார் ஊர்த் தலைவர் குருசாமி.

     துக்கம் தொண்டை அடைத்துக் கொண்டதால சின்னப்பாண்டி பேசவில்லையா? இல்லை பேசுவதற்கு தகுந்த பதில் இல்லாததால் மௌனமாக நின்றானா எனப் புரியாதபடி விழித்துக் கொண்டிருந்தான். 

     அனுபவம் தந்த பாடத்தால் இழவு வீட்டில்  சத்தமாக சிரிக்க கூடாது என்பதால் மௌனப் புன்னகை சின்னப் பாண்டி மீது வீசிவிட்டதோடு ஈஸ்வரனின் கையில் ஆயிரம் ரூபாய் பணத்தை திணிச்சதோட மற்ற வேலைகளை கவனிக்க ஆயத்தமானர் ஊர்த் தலைவர் குருசாமி. ஏதேச்சையாக திரும்பிப் பார்த்தபோது தன்னைச் சுற்றி நடந்து கொண்டிருப்பது எதுவும் தெரியாமல் அய்யனார் காலை இருகக் கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தான் கருப்பையா. 


(முடிந்தது)


##################################################

No comments:

Post a Comment