Monday, 14 July 2025

வலி பொறுத்தவள் - கவிஞர் யாழிசைசெல்வா

வலி பொறுத்தவள்

=====================


     பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடு பிடிக்கச் சென்ற பால்பாண்டியை மாடு அல்லையில் குத்தி தள்ளியதால் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தான். இப்படி ஆகிவிட்டதேயென்று குட்டி போட்ட பூனை போல் அவசர சிகிச்சை பிரிவு வாசலில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள் பால்பாண்டியின் தாய் அன்னலட்சுமி. 

       ஓட்டமும் நடையுமாக மருத்துவமனைக்குள் நுழைந்தாள் பார்வதி. எப்படியோ அவசரச் சிகிச்சை பிரிவை விசாரித்து வந்து சேர்ந்திருந்தாள். அன்னலட்சுமி பார்த்ததும் ஓடிவந்து கட்டிக்கொண்டு தேம்பித் தேம்பி அழத் தொடங்கி விட்டாள் பார்வதி. என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நின்ற அன்னலட்சுமி ஒரு வழியாக மனதைத் தேற்றிக் கொண்டு மருமகள் பார்வதியை அருகிலிருந்த இருக்கையில் அமரச் செய்து அமர்ந்து கொண்டாள். 

     "இன்னும் எத்தனை நாளைக்கு இவர் இப்படியே இருப்பாரு. முன்னதே வெட்டியா சுத்திக்கிட்டு இருந்தோம். இப்ப நமக்குன்னு ஒரு குடும்பம் குட்டி ஆயிருச்சு, அதுக்குப் பெறகாவது புத்தியோடு பொழைக்க வேண்டாமா? இருக்க இருக்க வயசு என்ன அப்படியேவா இருக்கும்? ஒரு நாள் இல்ல ஒரு நாள் எக்கு தப்பா அவருக்கு ஏதாவது ஆகிப்போச்சுன்னா நானும் என் பிள்ளைகளும் அனாதை தானே நிப்போம்? பெத்ததாயி நீங்களும் ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டேங்கறீங்க...."என மாமியார் அன்னலட்சுமி பார்த்து கேட்டாள் பார்வதி.

     " என்னோட புள்ளைங்கறதுக்காக இவன் செய்றத நான் எப்பவுமே ஒத்துக்க மாட்டேன். எல்லாம் என் தலையெழுத்து. இவனோட அப்பனால வந்தது. அதுதான் உன்னோட மாமனாரு. அந்த ஆளு அப்படித்தான் எப்ப பாரு மாடு பிடிக்கப் போறேன் மாடு பிடிக்கப் போறேன்னு அதுவே கதியாக் கிடந்தாப்புல. அதிலேயே உசுரையும் விட்டுட்டு எங்களை அனாதையா தவிக்க விட்டு போயிட்டாப்புல. அந்த ஆளு போன பிறகு இப்பவாது நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சா. அப்பனோட புத்தி அப்படியே இவனுக்கும் தொத்திக்கிருச்சு. நானும் இப்ப திருந்துவான் பிறகு திருந்துவானென்று பார்த்தேன். அதற்கான வழி தெரியல. நானும் போகாத கோயிலு இல்ல. வேண்டாத சாமி இல்ல. அப்பத்தேன் ஒரு முடிவு பண்ணி, சரி கல்யாணம் கட்டி வச்சா அதுக்கு பெறகாவது திருந்தி வாழ்வானென்று உன்ன அவனுக்கு கட்டி வச்சேன்"

     "மாடு பிடிக்கிறது அவுங்களுக்கு ரொம்பப் புடிக்கும்கிறது எனக்கும் தெரியும். அவுகளோட அந்த வீரத்தைப் பார்த்து தானே நானே மயங்கி அவுகளை கட்டிக்கச் சம்மதித்சேன். அப்ப வீரமா தெரிஞ்சது, இப்ப வினையா வந்து நிக்குது. அன்னைக்கு நான் மட்டும் இருந்தேன் எனக்கு ஒன்னும் தெரியல. இப்ப புள்ள குட்டி ஆன பெறகும் அதே மாதிரி இருக்க முடியுமா? அதுதான் எனக்கு ஒரே கவலையா கெடக்கு"


     "நீ வாரதுக்கு முன்னால வேலை வெட்டி எதுவும் செய்யாம வெட்டியா சும்மாதேன் ஊரச் சுத்திகிட்டு கிடந்தான்.  நானெல்லாம் எத்தனையோ தடவ சொல்லியும் கேட்காதவன் உன்னோட ஒரு வார்த்தை அவன மாத்துச்சு. அதே மாதிரி இதுல இருந்தும் அவனை நீ தான் தாயி மாத்தணும்"

     அவசர சிகிச்சை பிரிவிலிருந்து மருத்துவர்கள் வெளியே வந்தார்கள். ஒரு மணி நேரம் கழித்து பால்பாண்டியை பார்க்கலாம். அபாய கட்டத்தை தாண்டி விட்டானென்று சொல்லிச் சென்றார்கள். 

      "நான் கும்பிடுகிறே அய்யனார் சாமி தான் என் புள்ளையைக் காப்பாத்திருக்கு.... அய்யனாரப்பா யேன் புள்ள சுகமாகி வீடு திரும்பினதும் உனக்கு கிடா வெட்டி பொங்க வைக்கிறேன் சாமி" என மனதிற்குள் சொல்லி கையெடுத்து கும்பிட்டதோடு மருத்துவமனை எனவும் பாராமல் அய்யனார் கோவிலிருக்கும் திசை பார்த்து கீழே விழுந்து வணங்கி நிமிர்ந்தாள் அன்னலட்சுமி.

       அவசர சிகிச்சை பிரிவிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டிருந்தான் பால்பாண்டி. மாடு குத்திய இடத்தில் தையல் போட்டு கட்டு கட்டியிருந்தது. உடல் முழுவதும் ஏற்கனவே மாடுபிடிச் சண்டை வெற்றியின் சுவடுகள் விழிப்புண்களாக எழுதப்பட்டிருந்தன. 

      படுக்கையில் சோர்வாக படுத்திருந்த பால்பாண்டியைப் பார்த்ததும் அடக்க முடியாமல் பார்வதிக்கு கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது. பார்வதியை அருகில் வரும்படி சைகையால் அழைத்தான் பால்பாண்டி. அருகே வந்து நின்ற பார்வதியின் கையை பற்றிக் கொண்ட பால்பாண்டி "கவலப்படாத எல்லாம் சரியாயிடும். இனிமேற் கொண்டு மாடுபிடிக்கு போக மாட்டேன். இதுதான் கடைசி. என்ன மன்னிச்சிடு" எனச் சத்தியம் செய்தான்.

       'வலி பொறுத்ததற்கு' இப்போதாவது தீர்வு கிடைத்ததே ஆண்டவா நன்றி! முந்தானையால் அவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் பார்வதி!

கவிதைச்சாரல் சங்கமம் சிறுகதை போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கதை இது !

14/07/2025


No comments:

Post a Comment