Tuesday, 27 May 2025

கரம் கோர்த்த கவிதையொன்று கவிஞர் யாழிசைசெல்வா

கரம்கோர்த்த கவிதையொன்று 


ஒரு ஐப்பசி மழைநாளில் 
புதிதாய் வானில் தோன்றிய 
வானவில் அவள்!//

ஆர்ப்பாட்டம் இல்லாமல் 
அலையடித்து நீண்டு பரவிய 
கார் கூந்தலில் 
காற்றுக்கும் புன்னகை தர 
குண்டுமல்லிகை சரம் வைத்து 
கவிதைக் கடலாக 
ககனத்தில் தோன்றும் நிலவாக 
தேன் சொட்டும்  இதழில் குளிர் புன்னகை படர விட்டு
எதிரே வந்தாள் கன்னக்குழி கவிதை!//

விடாமல் பெய்த மழையில் 
தொடாமல் தொட்டு 
தூரத்தில் நின்று 
தூளியாய் நெஞ்சில் விழுந்து 
உல்லாச பெருங்கடலாய் 
வாழ்வில் உதயமானாள் 
கருப்பட்டி இதழ் சுழிக்கும் 
கார் கூந்தல் பேரழகி!//

செலவான சில்லறை காசாயிருந்த 
இருண்ட வாழ்வைக் கிழித்து 
எழுதி முடிக்கப்படாத எனது நாட்குறிப்பின்
இன்னொரு காவியமாய் 
இதய ஓவியமாய் 
நாளும் கேட்கும் இன்னிசையாய் 
எனக்கான வானை ஊருக்கே சொல்லிட 
காட்டாற்றில் நீந்தி வந்து
கரம் கோர்த்த கவிதையாய்
என்னை இதழ் இசைத்து மணாளனாய்
ஏற்றுக் கொண்டாள் என்னவள் பாண்டிச்செல்வி!//

கவிஞர் யாழிசைசெல்வா 
தேனி மாவட்டம் 
27/05/2025









உயில் கவிஞர் யாழிசைசெல்வா

உயில்

=======

கவிஞர் யாழிசைசெல்வா 

========================

      இருள் சூழ்ந்து நீண்ட காலமாக படிந்த தூசியும்,  எங்கும் ஒரே நூலாம்படையாகத் தேங்கிக் குப்பைத் தொட்டியாக பராமரிப்பின்றி கெடந்த நிலவறைக்குள் நுழைந்த செல்லம்மாள் போன வேகத்திலேயே சுவற்றில் அடித்த பந்து போல் வெளியே வந்தவள் "ம்அச்சு.... ம்அச்சு..... ம்அச்சு "யென விடாமல் தும்மிக் கொண்டிருந்தவள் "எத்தனை முறை சொன்னாலும் அந்தப் பய  முருகன் கேட்கவே மாட்டேங்குறான்! ரொம்ப நாளா பூட்டிக் கெடக்கு! அதை சுத்தம் பண்ணுடா எத்தனை தடவை சொல்லி இருப்பேன்! கேட்டானா.... இன்னும் ரெண்டு நாள்ல சென்னையிலிருந்து பொற்கொடி வந்துருவா... அவ மட்டும் இத பார்த்தா.... அவ்வளவுதான்.... வீட்ட ரெண்டாக்கிருவா..... அதுக்குள்ளற  இத சரி பண்ணப் பாக்கணும்"எனத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டு வீட்டின் பட்டாசலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தவள் "டேய் முருகா....! எங்கடா போன? இங்க இருக்கியா இல்லையா? "என்றவள் ஒரு வழியாக பட்டாசலைலிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு கைவிசிரி எடுத்து வீசிக் கொண்டிருந்தாள்! 


     கொல்லைப்புறத்திலிருந்து பட்டாசலை நோக்கி வந்த முருகன் துண்டை உதறி முகத்தை துடைத்துக் கொண்டு செல்லம்மாள் அருகே வந்து நின்றவன்"அம்மா கூப்பிட்டியா?" எனச் சொல்லிக்கொண்டே அவளருகே மர நாற்காலி எடுத்துப் போட்டு அமர்ந்து கொண்டான்! 


     "யேண்டா...  ஒருவேளை நீ வேணும்ன்டே காது கேட்காத மாதிரி நடிக்கிறியா என்ன?" என்ற செல்லம்மாள் முருகனை வினையமாகப் பார்த்தாள்!


     "என்னம்மா.... என்னப் பத்தி தெரிஞ்சுக்கிட்டும் இப்படி கேக்குறியே! இது உனக்கே நல்லா இருக்கா?"என்றவன் தலையைக் குனிந்து கொண்டான்! 


      "தெரியும்டா...! சும்மா சொன்னேன் டா! நீ பாட்டுக்கு எதுவும் நினைச்சுக்காத!"என்றவள் முருகன் தலையைக் கோதிவிட்டாள்! 


     "சரி சரி! மதிய நேர மாத்திரயை சாப்பிட்டியா இல்லையா? "


    "இல்லடா...! நிலவறைக்கு போனேன் அப்படியே மறந்துட்டேன்!" என்றவள் விழிகள் நிலவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன!


     "நேரம் நேரத்துக்கு மாத்திரை சாப்பிடலனா தங்கச்சி என்னத் தான் திட்டும்! அது தெரிஞ்சும் நீ இப்படி செய்யலாமா? சரி இரு" என்றவன் செல்லம்மா படுக்கையறைக்குள் நுழைந்து அங்கிருந்து அலமாரியில் மாத்திரையும் செம்பு நிறையத் தண்ணீரும் கொண்டு வந்து கொடுத்தான்! எதுவும் பேசாமல் முருகனிடம் மாத்திரை வாங்கி முழுங்கிவிட்டு செம்பைக் கீழே வைத்தாள்!


     "முருகா..."என்றாள் செல்லம்மா. "இப்ப என்ன சொல்ல வாறேன்னு எனக்குத் தெரியும்! நிலவரைய சுத்தம் பண்ணிடுறேன், அதுக்கு மின்னால உன்னப் பத்தி எத்தனை தடவை கேட்டு இருக்கேன் ஒரு தடவையாவது அதைப் பத்தி சொல்லி இருக்கியா? இன்னைக்கு நீ சொல்லியே ஆகணும்!"என்றான் பிடிவாதமாக முருகன்! 


     " நீ வேலைக்கு வந்து அஞ்சு வருஷமாச்சு! நீயும் வந்ததிலிருந்து அத விடாமக் கேட்டு கிட்டுத்தானிருக்க!  அதப்பத்தி கேட்காதன்னு சொல்லிட்டேன் உனக்கு புரியுதா இல்லையா? இல்ல வேணுமின்டே கேக்குறியா?"


     "நீ சொல்றதெல்லாம் உண்மைதான்! நிலவறை பக்கம் போனாலே திட்டுற நீ!  எப்பவும் இல்லாம இந்த வருஷம் நிலவறைய சுத்தம் பண்ணச் சொல்றியே அதுதான் ஏன்? "


     "சரி சொல்றேன்" என்றவள் ஏதோ கனவுலகத்தில் மிதப்பது போல் நாற்காலியில்  சாய்ந்து கொண்டவள் "இந்த வீட்லதான் நானும் எங்க அண்ணன் குருசாமியும் பொறந்தோம்!  தோட்டத்துல வெளையறது தேவைக்கு அதிகமா வருமானத்தை கொடுத்ததால , வீட்ல பணப் பிரச்சனை வந்ததேயில்லே!  எங்க அண்ணன் நல்லா படிச்சு மாவட்ட ஆட்சித் தலைவராயிட்டான்! அதனால அவனுக்கு எங்க சொந்தக்காரப் பொண்ணப் பார்த்து கல்யாணம் கட்டி வச்சுட்டாங்க!  ரொம்ப மகிழ்ச்சியா வாழ்ந்தான்! அப்பத்தான் நான் கல்லூரியில வரலாறு மூன்றாமாண்டு படிச்சுக்கிட்டு இருந்தேன்! அந்த ஆண்டு நடந்த கலை நிகழ்ச்சியில சுந்தரபாண்டியனப் பாக்குற வரையிலும் என் வாழ்க்கை இயல்பா தான் போய்கிட்டுருந்துச்சு! "என்றவள் முகம் தாமரையாய் மலர்ந்தது! 


     "அப்புறமென்ன நடந்துச்சு! சீக்கிரம் சொல்லுமா? "


     "இருடா... சொல்லாம என்ன செய்யப் போறேன்" என்றவள் தொடர்ந்து "ஆடல் பாடல் முடிந்த பின்பு நான் நடிச்ச நாடகத்தைப் பார்த்த  எல்லாரும் அமைதியா இருந்தப்ப அவர் மட்டும் விசிலடிச்சு கொண்டாடித் தீர்த்திட்டாரு...."


     "அப்புறம் என்ன?"


      "பெறகு என்ன? நானும் சும்மா இருக்காம அவரைப் பத்தி அவரோட கல்லூரி பொண்ணுக கிட்ட வெவரம் கேட்கும் போது அவரே முன்னால வந்து 'உன்ன எனக்கு புடிச்சிருக்கு! கல்யாணம் கட்டிக்க சம்மதமானு' கேட்டுட்டாரு.... ஒரு நிமிஷம் எனக்கு படபடன்னு ஆயிருச்சு..... அதுக்குப் பெறகு ரெண்டு மாசம் அவர அலையவிட்டு, அவருக்கு சம்மதம் சொன்னேன்! ஒரு நாள் ரெண்டு பேரும் நம்ம ஊரு முருகன் கோயிலுல மாலைமாத்தியதோட பதிவுத் திருமணம் செஞ்சு, எங்க வீட்டுக்கு வந்தப்ப, எங்க அப்பா எங்களச் சேர்த்துக்காம வீட்டை விட்டு விரட்டிட்டாரு! ரொம்ப நாளா அவரோட பேச்சு வார்த்தையே இல்ல... எங்க அப்பா யெறந்த பெறகு இந்த வீட்டை எங்கண்ணன் எனக்கு கொடுத்துட்டாரு"என்றவள் விழிகள் குளமாயின! 


      அப்போது "செல்லம்மா! இந்த வீட்ட உங்க அப்பா உன் பேர்ல எழுதி வச்ச உயில உங்க அண்ணன் இப்பதான் பதிவுத்தபாலுலே  அனுப்பியது வந்துச்சு"என்றபடி உள்ளே வந்தார் சுந்தரபாண்டியன்! 


      எதுவும் பேசாமல் உயிலை கையில் வாங்கியவள் சிறுவயதில் ஓடி விளையாடிய நிலவரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் செல்லம்மா!

(முடிந்தது)

கவிதை சரல் சங்கமம் சிறுகதைப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கதை இது!


    

காதல் கண்ணே கவிஞர் யாழிசைசெல்வா

காதல் கண்ணே 

==============

கவிஞர் யாழிசைசெல்வா 

======================

       கடலில் கால் நினைக்க வந்த முருகனும் மீனாட்சியும் எதிர்பாராமல் இதயத்தை மாற்றிக் கொண்டார்கள்! கடந்த இரண்டு மணி நேரமாக கடற்கரை ஈரமணலில் ஒருவர் மாற்றி ஒருவர் கிறுக்கி வைத்த கவிதைகளின் வழியே காதலை பரிமாறிக் கொண்டிருந்தார்கள் !


     அப்போது தான் தொடங்கி இருந்த கோடைகாலம் ஆதலால் பெரிதாக கடற்கரையில் கூட்டம் ஏதுமில்லை! இருப்பினும் ஆங்காங்கு பெரியவர்களும் குழந்தைகளும் கரை தொடும் அலைகளைத் துரத்தி விளையாடிக் கொண்டிருந்தார்கள்! 


      இதற்கிடையில் முருகன் ஈர மணலில் ஆள்காட்டி விரலால் ஏதோ கிறுக்கியவன் சட்டென எழுந்து சென்றதும், விரைந்து வந்த மீனாட்சி கால் இடறி கீழே விழப்போனவளை, தாவிப் பிடித்துத் தூக்கி நிறுத்திய முருகன்! "அப்படி என்ன அவசரம்?" என்றான் மீனாட்சியைப் பார்த்து " நீ எழுதியதை அலை அழித்து விட்டால் என்ன செய்வது"என்றாள் முருகன் விழிகளிலிருந்து தனது விழியை எடுக்காமலே....


      அவளே தொடர்ந்து "இப்படி எத்தனை நாள் கடற்கரை மணலில் காதலை எழுதி வளர்க்க முடிவு செய்துள்ளாய்? நேரில் சொல்ல அத்தனை தயக்கமா?"என்றபடி அவனது வலது கரத்தை தனது இடது கரத்தால் இறுகப் பற்றிக்கொண்ட மீனாட்சி! 


    "நீயே கவிதை உனக்கு ஒரு கவிதை எழுதினால் எங்கே பிடிக்காமல் போய்விடுமோ என்ற பயம் தான் எனக்கு?"


     "நீ எழுதியது பிடிக்காமல் தான் தொடர்ந்து படிக்கிறேனா? அது தெரியாமல் தான் நீயும் தொடர்ந்து எழுதினாயா? நீ சொல்வது நம்புவது போல் இல்லையே!"


    "நீலக் கடல் போல் நீண்டு விரிந்த கார்குழல், கெண்டை மீனாய்த் துள்ளும் விழிகள், சிவந்த மாதுளை இதழ், குழி விழுந்த கன்னம், தூளியாய் துடித்தாடும் சிற்றிடை, ஓவியன் எழுத மறந்த பாதச்சுவடுகள், தேனைச் சுற்றும் வண்டாய் தொடர்ந்து உன்னை சுற்றும் வாலிபர்கள், இத்தனை சிறப்பு மொத்தமாய் கொண்ட நீயெங்கே என்னைப் பார்க்க போகிறாய்? என்ற கேள்விதான் என்னை அரித்துத் தடுத்து விட்டது?" 


     நச்சென்று அவள் கொடுத்த இதழ் முத்தத்தில் இதயம் தறிகெட்டுத் துடித்தது அவனுக்கு....!


(முடிந்தது)


நேர்பட பேசு 13 ஆம் ஆண்டு போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரண்டாவது கதை இது!

Friday, 23 May 2025

நாட்காட்டியின் நினைவலைகள் கவிஞர் யாழிசைசெல்வா

நாட்காட்டியின் நினைவலைகள் 

===========================

கவிஞர் யாழிசைசெல்வா 

======================

        பரபரப்பைக் பற்றி கொண்டு சதுரக் கண்ணாடியின் வழியே விழியில் நலம் விசாரித்து"இந்த ஆண்டு வரலாற்றுத் துறை ஆண்டு விழாவில் யாரெல்லாம் பேசப் போறீங்க? விருப்பம் இருக்கவங்க பேர் கொடுக்கலாம்"எனப் புதிய விடியலுக்கு கட்டியம் கூறினார் பேராசிரியர் துரைச்சாமி!

       ஒவ்வொருவரும் வகையாய் மாட்டிக் கொண்ட திருடன் போல் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்தார்களே தவிர யாருமே பதில் தரவில்லை! 

     "நீங்களா பேர் சொல்றீங்களா? இல்ல நானே பேர எழுதிக்கவா?"என பேராசிரியர் கரடியாய் கத்தினாலும் யாரிடமும் எந்தவித பதிலுமில்லை! "வேற வழியே இல்ல... செவ்வந்தி, செல்வகுமார், ரவிக்குமார் நீங்க மூணு பேரும் பேசுறீங்க"எனச் சொல்லிவிட்டு பாடவேளை முடிந்ததால் வகுப்பறை விட்டு வெளியேறிச் சென்றார் துரைசாமி! 

       "என்னடா இப்படி பண்ணிட்டாரு! இப்ப என்ன பண்ணப் போற? இதுவரைக்கும் ஏதாவது மேடையில பேசி இருக்கியா?"என செல்வகுமாரைப் பார்த்துக் கேட்டான் மாரியப்பன்! 

     "இல்லடா... பள்ளிக்கூடம் படிக்கும் போது ஒன்னு ரெண்டு மேடையில பரிசு வாங்குவதற்கு மட்டும்தேன் மேடை ஏறி இருக்கேன்! இதுவரைக்கும் எந்த மேடையிலும் பேசுனதில்ல..." பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாமல் மாரியப்பனிடம் பேசினான் செல்வகுமார். 

     "இப்ப என்ன செய்யப் போற?"

     "அதுதாண்டா தெரியல எனக்கு?"

     "பேசாம அவர் கிட்ட போயி உண்மையை சொல்லிரலாமா?"தலையை ஆட்டிய  செல்வக்குமார் மாரியப்பனுடன் வரலாற்றுத் துறை அலுவலகத்திற்குள் நுழைந்து பேராசிரியர் துரைச்சாமி முன்பாக நின்றுந்தார்கள்!

     "என்னையா வந்திருக்கீங்க?"என்றவர் அவர்கள் முகத்தை பார்த்தார்! 

     "பேச்சுப் போட்டிக்கு என்னோட பேர சொல்லிட்டீங்க... என்ன பேசுறது? எப்படி பேசுறது? எதுவுமே தெரியாது ஐயா!" தொண்டையில் சிக்கிக்கொண்ட வார்த்தையை மெல்லக் கொட்டினான் செல்வகுமார்!

      "அது ஒன்னும் பெரிய கம்ப சூத்திரமில்ல... நாலு மேடை ஏறிப் பேசினா எல்லாமே தானா வந்துரும்... நீ பேசுற அவ்வளவுதான். உனக்கு ஏதாவது புத்தகம் வேணும்னா நூலகத்தில் எடுத்துப் படிச்சுக்கோ!  நான் நூலகத்துல சொல்லிடுறேன். வாழ்க்கையில வாய்ப்பு எப்போதுமே தானா அமையாது! நாமதேன் அமைச்சுக்கிறணும்! கிடைச்சது புடிச்சு மேல போக பழகிக்க! போயிட்டு வா!" என்றவர் அருகிலிருந்த புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்கி விட்டார் பேராசிரியர் துரைசாமி!

    "என்னடா இப்படி சொல்லிட்டாரு? இப்ப என்ன பண்ண போற?" என மாரியப்பன் செல்வகுமாரை பார்த்துக் கேட்டான்! 

      அதற்கிடையே....

     இவர்களைக் கடந்து சென்ற சக மாணவர்களில் ஒருவன் "வகுப்புல ஒரு நாளும் பாடத்தைத் தவிர வேறு எதுவும் சந்தேகம் கேட்க மாட்டான்! இவன் எல்லாம் என்ன பேசிக் கிழிக்கப் போறனோ? "என செல்வக்குமாரைப் பார்த்து கைதட்டி நண்பர்களிடம் சிரித்தான்!

    எதுவும் பேசாமல் இருவரும்   நூலகத்திற்கு வந்திருந்தார்கள்! வெகு நேரம் தேடிய பின்பு கிடைத்த புத்தகம் 'நொறுக்கப்பட்ட மனிதர்கள்' அதனைப் படித்த செல்வகுமார் முகத்தில் மின்னலாய் தலைப்பு தோன்றியது!

     ஆண்டு விழா பேச்சுப் போட்டியில் வென்ற புத்தகத்தையும், நாட்குறிப்பையும் செல்வகுமார்  திறந்த போது கல்லூரி ஞாபகம் நிழலாடியது!

(முடிந்தது)

Thursday, 22 May 2025

காதல் என்னும் கவிதை கவிஞர் யாழிசை செல்வா

காதல் என்னும் கவிதை 

=====================

கவிஞர் யாழிசைசெல்வா 

======================

       செல்லாயிம்மன் கோயில் திருவிழா.... ஆங்காங்கே தனித்தனியா வைத்துக் கொண்டிருந்த பொங்கப் பானை பொங்கியதும் குலவைச் சத்தம் காதைக் கிழித்துக் கொண்டிருந்தது! எல்லோருடைய கவனமும் பொங்கல் பானை மீதிருக்க, பூரணி மட்டும் கெண்டை விழி சுழட்டி தூரத்திலிருந்த மாமன் மகன் அய்யனாரைப் பார்க்க, வட்டமிடும் வண்டாக அய்யனாரும் கையில் மல்லிகை சரம் வைத்திருந்தவனை, விழியில் மின்னலடித்து பூத்தாள் பூரணி! 


       எல்லோருடைய கவனமும் படையலில் இருக்கும்போது வாழை இலையில் பொங்கலை வைத்துக் கொண்டு அலையடித்துக் கொண்டிருந்த குளத்தில் கால் நனைத்து கொண்டிருந்த அய்யனார் அருகே செந்தூரப் பட்டுத்தாவணி கட்டி சில்லென்று பூத்து அமர்ந்தவள் "யேன் அத்தான்! அதற்குள் அப்படி என்ன அவசரம்? கை நிறைய மல்லிகை பூ வச்சுக்கிட்டு இப்படியா எல்லாரும் பாக்குற மாதிரி வந்து நிப்பாங்க? எனக்கு மானமே போயிருச்சு" என்றவள் பொய்யாய் கோபித்து முறைத்துப் பார்த்தாள்!


     "அடியே! நீ லேசு பட்டவ இல்லடி! நீதானே மல்லிகைப்பு வேணும்னு சொல்லிருந்த? ஆசையோட வாங்கிட்டு வந்தா, இப்படி பேசுற? இதெல்லாம் நியாயமே இல்ல..."என்றான் வெகுளியாய் அய்யனார்!


     "நான் சொன்னது உண்மைதான்! அதுக்காண்டி இப்படியா வந்து நிப்ப?"


    "அதுதான் எல்லாரும் சேர்ந்து நமக்கு கல்யாணம் பேசி நிச்சயம் பண்ணிட்டாங்களெ, அதுக்கப்புறம் என்னடி கவலை வேண்டிக் கெடக்கு?"


    "உனக்கென்ன சொல்லிட்ட.... ஏன் பாடு எனக்கு தானே தெரியும்?"எனக்கூறி முறைத்தாள் பூரணி! 


     "சரி இப்ப என்னை, என்ன செய்யச் சொல்ற?"


     "அதுதேன் எல்லாத்தையும் செஞ்சுட்டியே அத்தான்"


      "என்ன சொல்லுரேன்னெ எனக்குத் தெரியல....?"


      "நீ ரொம்பச் சுளுவா உன்னோட ஆசையை யேங்கிட்ட சொல்லிட்ட, அத நிறைவேத்துறதுக்கு நான் பட்டபாடு எனக்கு தானே தெரியும்!" என்றவள் விழிகள் குலமாயின!


     "நம்ம கல்யாணத்துக்காக நீ பட்ட சிரமம் எனக்கு தெரியும்டி, எல்லாரும் ஒத்துக்கிட்ட பின்னால அதெல்லாம் மாயமா மறஞ்சு போச்சு" எனக்கூறிக் கொண்டே பூரணியை நெஞ்சோடு சாய்த்து கொண்டான்! 


(முடிந்தது)



Saturday, 17 May 2025

உண்ணா நோன்பு யாழிசைசெல்வா

உண்ணா நோன்பு 

=================

யாழிசைசெல்வா

===============

        சுருக்கெனக் குத்தும் மொட்ட வெயில் பிட்டத்தை சுட்டெரிச்சு பொசுக்கும் நடு மதியான வேளையில் கடலைச் செடிக்கு களைவெட்டிக் கொண்டிருந்தாள்  பூரணி!  பொடனில அடிச்ச மாதிரி "ஏண்டி பூரணி...! வாடி சாப்பிட்டு வேலை செய்யலாம்", சத்தம் வந்த தெசப்பக்கம் திரும்பாமலே "இல்ல சின்னம்மா நீ சாப்பிடு!"


     "அப்படி என்னடி சாப்பிடாம கொள்ளாம வேலை செய்ய வேண்டிக் கெடக்கு! அப்படி மிச்சம் பண்ணி நீ என்னத்த அள்ளிக்கட்டப் போற! கூலிக்கு மாரடிக்கிற நானே சாப்பிடுறேன். காட்டுக்கு சொந்தக்காரி நீ ஏண்டி இப்படி கெடந்து உன்ன வருத்திக்கிற" என்றாள் சீலக்காரி!


     "அட நீ வேற... வெவரம் புரியாம பேசாத...! அவ உண்ணா நோன்பு இருக்கா..." என சீலக்காரி அருகில் களைவெட்டிக்கிட்டுயிருந்த கருப்பாயி சொன்னாள்.


    "என்னடி சொல்ற கருப்பாயி?"


    "ஆமா உனக்கு ஒன்னும் தெரியாது! ஏன் வாயை கெலராம சும்மா இரு!"


      "உண்மையில தாண்டி கேக்குறேன் எனக்கு அந்த வெவரம் தெரியாது!"


    "பூரணி கல்யாணமாகி இத்தனை வருஷமாச்சுனு அவ மாமியா கெடந்து தெனமும் புடுங்கித் திங்கிறா, அது பொறுக்க முடியாமத்தான் நம்ம வீரபாண்டி மாரியம்மன் சாமிக்கு வேண்டுதல் வச்சி உண்ணா நோன்பு இருக்கா... நீ அது தெரியாம ஏதேதோ பேசிக்கிட்டு இருக்க"


    "எனக்கு உண்மையிலேயே இந்த வெவரம் தெரியாதுடி! தெரிஞ்சா நான் எதுக்கு கேட்கப் போறேன்..."


     "ரெண்டு நாளைக்கு முன்னால வந்த பூரணியோட நாத்தனாளும் பத்தாக்கொறைக்கி அவ பங்குக்கு இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி ஆத்தாள ஏத்தி விட்டுட்டு போயிட்டா.... சங்குச் சக்கர சாமி வந்து ஜிங்கு ஜிங்குன்னு குதிச்ச மாதிரி தெருவுல நின்னு ஒரே ஆட்டத்தை ஆடி பூரணியை கேவலப்படுத்தி புட்டா மாமியாகாரி! பாவம் எதுவும் பேசாம தேம்பித் தேம்பி அழுதுகிட்டே நின்னுகிட்டு இருந்தா.... வேடிக்கை பாத்த சனம் ஒன்னு கூட என்னா ஏதுன்னு கேட்கவே இல்லையே"


     "கேட்டா பூரணியோட மாமியா, அவங்கள சும்மா விட்ருவாளா....? மேல விழுந்து நாய் மாதிரி கடிச்சு கொதறிற மாட்டா...."


       "ஆமா.... அதுவும் உண்மைதான்" என்றாள் கருப்பாயி!


     களைவெட்டியதை நிறுத்திவிட்டு   சோர்ந்து போய் வேப்பமரம் அருகே அமர்ந்து கொண்டாள் பூரணி! அதப் பாத்ததும் சீலக்காரியும் கருப்பாயியும் அவளருகே போனார்கள்! எங்கிருந்தோ கெளம்பி வந்த இளங் காற்று முகம் முழுவதும் வேர்த்துகெடந்த பூரணியோட முகத்தை முத்தமிட்டு சென்றது! 


      "பாவம் புள்ள சொனங்கிப் போயிட்டா.... " எனக் கூறிக்கொண்டே பூரணியின் முகத்தை தன்னோட முந்தானைச் சேலையால் விசிறி விட்டுக் கொண்டே "ஏண்டி ஆத்தா! கொஞ்சம் பச்ச தண்ணியாவுது குடியேண்டி...."என்றாள் சீலக்காரி!


      "வேணாம் சின்னம்மா! சாயங்காலம் வரைக்கும் நாக்குல பச்ச தண்ணி படாம இருக்கணும்! இல்லாட்டி வேண்டுதல் வீணாப் போயிரும்!" 


     "தாயில்லாத புள்ள இப்படி தவிச்சு கெடக்கிறதை பார்க்கும் பொழுது மனசு பொறுக்கலடி"


      "வாங்கி வந்த வரம் அப்படி இருக்கு சின்னம்மா!" என்றவளின் விழிகள் துளிர்த்தன! "சரி வாங்க போய் வேலையைப் பார்க்கலாம்! இல்லாட்டி அதுக்கும் என் மாமியார் கெடந்து கத்துவா"என்றவள் மீண்டும் களைவெட்ட புறப்பட்டாள் பூரணி!

(முடிந்தது)

பூத்தது வாழ்க்கை யாழிசை செல்வா

பூத்தது வாழ்க்கை 

================

யாழிசைசெல்வா 

===============

      அந்தி வானத்தைத் துரத்திக் கொண்டு இருள் கவிழ்ந்து கொண்டிருந்த மாலை வேளை! வேப்பமரமருகே இருந்தது செல்லாயி குடிசைவீடு! 

     வாசல் திண்ணையில் அமர்ந்து கொண்டு மண்ணெண்ணெய் விளக்கைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள் செல்லாயி மகள் மீனாட்சி! அலை அலையாய் பரவியிருந்த கருங்கூந்தல் முகத்தின் முன்னால் பரவி முத்தமிட்டு கொண்டிருந்தபோது "தாயி! அம்மா இல்லையா...?" என்றபடி வாயில் போட்டிருந்த வெத்தலையைக் குதிப்பிக் கொண்டே கேட்டாள் செல்லம்மா! 

      "வாங்க பெரியம்மா....! அம்மா வீட்டுக்குள்ளற தான் இருக்காங்க. செத்த பொருங்க...."என்றவள் வீட்டிற்குள் திரும்பி "அம்மா.... அம்மா..." என்றாள் மீனாட்சி! 

     "உள்ளாற தானே இருக்கேன்! அதுக்கேண்டி இப்படி கெடந்து கத்துற..."என்றபடி வாசலில் வந்த செல்லாயி, "வாக்கா.... இப்பத்தான் யேன் வீடு இருக்க நெனப்பு தெரிஞ்சதாக்கும்....  திடீர்னு அதிசயமா வந்திருக்கியே.... காரணமில்லாம வரமாட்டியே... சொல்லுக்கா..." என்றவள் திண்ணையில் அமர்ந்து கொண்டு செல்லம்மாவையும் கையைப் பிடித்து அருகே அமர வைத்தாள் செல்லாயி!

      சிறிது நேரம் மீனாட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த செல்லம்மாவைப் பார்த்து "என்ன? காணாததை கண்டது போல புள்ளையை அப்படி வெரச்சுப் பார்க்குற...? என்ன விவரமுனு சொல்லுக்கா?" 

       "நேத்து சந்தைக்கு போயிருந்தேன். அப்ப நம்ம தூரத்துச் சொந்தம் மகாலிங்கம் அண்ணனைப் பார்த்தேன்!" 

     "சரி அதுக்கென்ன இப்ப?"என வெடுக்கெனக் கேட்டாள் செல்லாயி!

     "கொஞ்சம் பொறுடி, முழுசா என்னச் சொல்ல விடு!"

      "சரி சரி! நான் எதுவும் சொல்லல"

      "மகாலிங்க அன்னை மகன் கருப்பசாமிக்கு ரொம்ப நாளா பொண்ணு தேடிக்கிட்டு இருக்க தா சொன்னாரு. ஒரு இடமும் நல்லபடியா அமையல. உனக்கு தெரிஞ்ச பொண்ணு ஏதாவது இருந்தா சொல்லுனு சொன்னாரு.  உடனே மீனாட்சி பத்தி அவர்கிட்ட சொன்னேன்" என்றவள் செல்லாயி முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்! 

     "மகாலிங்கம் அண்ணே! ரொம்ப நல்லவருதான்!  ஆனா என்னோட நெலமை உனக்குத்தான் தெரியுமில்ல! அந்த மனுசன் போன பிறகு என் உசுர கையில புடிச்சு வச்சிருக்கதே மீனாட்சிக்காகத்தான்! அவள நல்லவன் கையில புடிச்சு கொடுத்துட்டா...."  என்றவள் தேம்பி அழத் தொடங்கி விட்டாள் செல்லாயி!

     "இப்ப நீ எதுக்கு கெடந்து மனசப் போட்டுக் குழப்பிக்கிற,  மகாலிங்க அண்ணனோட பையன் நல்லா படிச்சு, கை நிறையச் சம்பாதிக்கிறான்! எந்தக் கெட்ட பழக்கமுமில்லை! பெறகு உனக்கென்ன கவலை?"

     "நான் இருக்க நெலமையில மீனாட்சிய எப்படி கட்டிக் கொடுக்கப் போறேன்?"

     "மீனாட்சிக்கு ஏற்கனவே குடிகார சடையாண்டியோட கல்யாணமாகி அவன் கொடுமை பொறுக்க முடியாம,   ஊரைக் கூட்டி  சபையில வச்சு அவனோட வாழ்ந்தது போதுமுனு அத்து விட்ட நாளே நாளுல  மகளுக்கு ஏற்பட்ட துக்கம் தாங்காமல் மீனாட்சி அப்பா யெறந்தது எல்லாத்தையும் தெளிவாச் சொல்லிட்டேன். அது மட்டுமில்லாம கல்யாணத்த ஆடம்பரமில்லாம மாரியம்மன் கோயில்ல, நம்ம சொந்தக்காரங்களை மட்டும் அழைச்சு வச்சு நடத்துறதுக்கும் அவர் சம்மதிச்சுட்டாரு... இப்ப சொல்லு இதுல கவலைப்பட என்ன இருக்கு?" என்ற போது  மீனாட்சி விளக்கேற்றியதில்  வெளிச்சத்தில்  வீடு நிறைந்திருந்தது!

     பூத்தது வாழ்க்கையென தாயும் மகளும் சிரித்தார்கள்!

    (முடிந்தது)

##################################################

Sunday, 11 May 2025

அன்னையே என் முகவரி யாழிசை செல்வா

 அன்னையே என் முகவரி 


காட்டை எரிக்கும் 

சித்திரை வெயிலின் 

நித்திரை கிழித்து 

அம்மாவாசை திங்களில்

அகிலத்தில் வரமாய் 

ஆசையின் உறவாய் 

அன்பின் வரமாய் 

அழகு புயலாய் 

தங்க நிற மழலை முகிலாய்

அன்னை தந்த அன்பின் முகவரியாய்

நெஞ்சில் நீந்திச் சிரிக்கும் செஞ்சுடர்!


கவிஞர் யாழிசைசெல்வா 

11/05/2025

நொய்ய உரையேல் யாழிசை செல்வா

 நொய்ய உரையேல்


அன்பில் மிதந்து 

ஆசையில் உரைத்து//01


நொய்யல் உரையேல்


அகிலம் போற்றிடு 

அரவணைத்து சென்றிடு//02


வடிவாய் பேசும் 

வளமை மாற்றிடு//03


இதமான பொழுதில் 

இனிமை கூட்டிடு//04


சொல்லில் அம்படுத்து 

மலர்க்கணை தொடுத்து//05


மகிழ்ந்து பேசும் 

மன்மத ஊர்வலத்தில்//06


செங்கரும்பு கடித்திட்ட 

இதழில் உதிக்கும்//07


இன்பப் பேரராய்

இனிது  தீண்டி//08


கற்கண்டு வார்த்தையில் 

கவிதையாய் வாழ்ந்திட//09


நொடித்துப் பேசும் 

நொய்யல் உரையேல்//10


கவிஞர் யாழிசைசெல்வா 

11/05/2025







சொல்லாயி நெனப்புல

சிறகடிச்சுப் பறக்குது 

=====================

ஏரோட்டும் கையில் 

தேரோட்டம் போல//01


வைக்கோல் பொதியேத்தி

துள்ளிக் குதிச்சு//02


அந்திவானைத் துரத்தி

அலையாய் மிதந்து //03


மயிலக்காளை ரெண்டோட

மாட்டுவண்டி யோட்டி//04


அய்யனார் சாமிபோல

முறுக்குமீசை தடவுற//05


விவசாயி குருசாமி 

நெனப்புல நீந்தி//06


வெள்ளாவில வெளுத்த

பஞ்சவர்ணச் சேலைகட்டி //07


செல்லாயி முகம் 

சிறகடித்துப் பறக்குது//08


கவிஞர் யாழிசைசெல்வா 

11/05/2025











Saturday, 10 May 2025

உண்ணா நோன்பு யாழிசை செல்வா

உண்ணா நோன்பு 

=================

யாழிசைசெல்வா

===============


        சுருக்கெனக் குத்தும் மொட்ட வெயில் பிட்டத்தை சுட்டெரிச்சு பொசுக்கும் நடு மதியான வேளையில் கடலைச் செடிக்கு களைவெட்டிக் கொண்டிருந்தாள்   பூரணி!  பொடனில அடிச்ச மாதிரி "ஏண்டி பூரணி...! வாடி சாப்பிட்டு வேலை செய்யலாம்", சத்தம் வந்த தெசப்பக்கம் திரும்பாமலே "இல்ல சின்னம்மா நீ சாப்பிடு!"


     "அப்படி என்னடி சாப்பிடாம கொள்ளாம வேலை செய்ய வேண்டிக் கெடக்கு! அப்படி மிச்சம் பண்ணி நீ என்னத்த அள்ளிக்கட்ட போற! கூலிக்கு மாரடிக்கிற நானே சாப்பிடுறேன். காட்டுக்கு சொந்தக்காரி நீ ஏண்டி இப்படி கெடந்து உன்ன வருத்திக்கிற" என்றாள் சீலக்காரி!


     "அட நீ வேற... வெவரம் புரியாம பேசாத...! அவ உண்ணா நோன்பு இருக்கா..." என சீலக்காரி அருகில் களைவெட்டிக்கிட்டுயிருந்த கருப்பாயி சொன்னாள்.


    "என்னடி சொல்ற கருப்பாயி?"


    "ஆமா உனக்கு ஒன்னும் தெரியாது! ஏன் வாயை கெலராம சும்மா இரு!"


      "உண்மையில தாண்டி கேக்குறேன் எனக்கு அந்த வெவரம் தெரியாது!"


    "பூரணி கல்யாணமாகி இத்தனை வருஷமாச்சுனு அவ மாமியா கெடந்து தெனமும் புடுங்கித் திங்கிறா, அது பொறுக்க முடியாமத்தான் நம்ம வீரபாண்டி மாரியம்மன் சாமிக்கு வேண்டுதல் வச்சி உண்ணா நோன்பு இருக்கா... நீ அது தெரியாம ஏதேதோ பேசிக்கிட்டு இருக்க"


    "எனக்கு உண்மையிலேயே இந்த வெவரம் தெரியாதுடி! தெரிஞ்சா நான் எதுக்கு கேட்கப் போறேன்..."


     "ரெண்டு நாளைக்கு முன்னால வந்த பூரணியோட நாத்தனா பத்தாக்கொறைக்கி அவ பங்குக்கு இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி ஆத்தாள ஏத்தி விட்டுட்டு போயிட்டா.... சங்குச் சக்கர சாமி வந்து ஜிங்கு ஜிங்குன்னு குதிச்ச மாதிரி தெருவுல நின்னு ஒரே ஆட்டத்தை ஆடி பூரணியை கேவலப்படுத்தி புட்டா மாமியாகாரி! பாவம் எதுவும் பேசாம தேம்பித் தேம்பி அழுதுகிட்டே நின்னுகிட்டு இருந்தா.... வேடிக்கை பாத்த ஒரு சனம் கூட என்னா ஏதுன்னு கேட்கவே இல்லையே"


     "கேட்டா பூரணியோட மாமியா, அவங்கள சும்மா விட்ருவாளா....? மேல விழுந்து நாய் மாதிரி கடிச்சு கொதறிற மாட்டா...."


       "ஆமா.... அதுவும் உண்மைதான்" என்றாள் கருப்பாயி!


     களைவெட்டியதை நிறுத்திவிட்டு   சோர்ந்து போய் வேப்பமரம் அருகே அமர்ந்து கொண்டாள் பூரணி! அதப் பாத்ததும் சீலக்காரியும் கருப்பாயியும் அவளருகே போனார்கள்! எங்கிருந்து கெளம்பி வந்த சூடான காற்று முகம் முழுவதும் வேர்த்துகெடந்த பூரணியோட முகத்தை முத்தமிட்டு சென்றது! 


      "பாவம் புள்ள சொனங்கிப் போயிட்டா.... " எனக் கூறிக்கொண்டே பூரணியின் முகத்தை தன்னோட முந்தானைச் சேலையால் விசிறி விட்டுக் கொண்டே "ஏண்டி ஆத்தா! கொஞ்சம் பச்ச தண்ணியாவுது குடியேண்டி...."என்றாள் சீலக்காரி!


      "வேணாம் சின்னம்மா! சாயங்காலம் வரைக்கும் நாக்குல பச்ச தண்ணி படாம இருக்கணும்! இல்லாட்டி வேண்டுதல் வீணாப் போயிரும்!" 


     "தாயில்லாத புள்ள இப்படி தவிச்சு கெடக்கிறதை பார்க்கும் பொழுது மனசு பொறுக்கலடி"


      "வாங்கி வந்த வரம் அப்படி இருக்கு சின்னம்மா!"என்றவளின் விழிகள் துளிர்த்தன! "சரி வாங்க போய் வேலையைப் பார்க்கலாம்! இல்லாட்டி அதுக்கும் என் மாமியார் கெடந்து கத்துவா"என்றவள் மீண்டும் களைவெட்ட புறப்பட்டாள் பூரணி!

(முடிந்தது)


Thursday, 8 May 2025

கலங்காதே யாழிசை செல்வா

விழியில் தீ மூட்டி 

விரகத் தாலாட்டி 

நெஞ்சக் கனல்மூட்டி

நேச பெரு நெருப்பின் 

நீங்காத நினைவலைகளை 

எப்போதும் தொட்டுச் செல்கிறது

என்னவளின் கனவுகள்!//


இருப்பைத் தொலைத்து 

இன்னும் தொலைதூரப் பயணத்தில் 

யாருக்கும் தெரியாமல் 

யாதொன்றும் அறியாமல் 

கடந்த கனவுகளை காற்றில் பறக்கவிட்டு 

நூல் அருந்த காற்றாடியாய் 

திக்கு திசை தெரியாமல் 

சிறகடித்துப் பறந்து 

தொலைதூரப் பனை மரத்தில் 

தலைகீழாய்த் தொங்கிய நிழலாய் 

பூமியில் படர்ந்து காலமே கதியாய் 

கருணையே விதியாய் 

ககனமே மொழியாய் இருந்தவனுக்கு 

காற்று குடியேறிய புல்லாங்குழலாய்

எனக்கான இசையை 

என்னுள் இசைத்தவள் மொழிந்தாள்

கலங்காதே கண்ணாளா... 

காற்றாய் நானிருக்கும் வரை 

கவிதையாய் நீ இருப்பாய்...!


கவிஞர் யாழிசைசெல்வா 

08/05/2025




Monday, 5 May 2025

 மாண்புமிகு மனைவி 

===================

யாழிசைசெல்வா

===============

விட்டும் தொட்டும் விடாத //01

ஐப்பசி அடைமழையில் //02

தூர கிழக்கில் இடி மின்னலைப் புரட்டித் தள்ளி //03

மின்சாரப் பூவாய் //04

இதயத்தில் மலர்ந்த //05

வசந்தத் திருநாளாய் அமைந்த மணநாள் அது! //06


கலையாத கனவுகளோடு காற்றுக்கும் தெரியாமல் //07

கண்ணெழுத்துக் கவிதையில் //08

கார்கால மயிலாய் எத்தனையோ கற்பனைகளோடு //09

ஏகாந்த நினைவுகளைச் சுமந்து கொண்டு//10

எதிர்பார்ப்பில் நீயிருந்தபோது //11

திடீரென இடி விழுந்த வீடாய் //12

மாறிப்போன துயரநாட்களில் தானடி //13

உன்னை நான் அறிந்து உதிர்ந்து போனேன்! //14



இருளை முத்தமிட்டு  தனியே சிறகடித்து //15

அரிதாய் மலர்ந்த குறிஞ்சி பூவாய் //16

அத்தனை துயரங்களையும் அடித்துத் துவைத்து //17

மலர்ந்து சிரித்த உனது புன்னகை முன்னால் //18

ஆணென்ற  கர்வம்  உன் காலடியில் சிதைந்து //19

காணாமல் போன நாளில் தானடி //20

மாண்புமிகு மனைவி நீயென்பதை உணர்ந்து //21

உன் இதழோறப் புன்னகையாய் //22

நானிருக்க தவமாய் கிடந்தேன்! //23

உனக்கான இரவுகளாய் எப்போதும் நானிருக்க?//24


கவிஞர் யாழிசைசெல்வா 

04/05/2025

Sunday, 4 May 2025

மாண்புமிகு மனைவி யாழிசை செல்வா

மாண்புமிகு மனைவி 

யாழிசைசெல்வா 


விட்டும் தொட்டும் விடாத 

ஐப்பசி அடைமழையில் 

தூர கிழக்கில் இடி மின்னலைப் புரட்டித் தள்ளி 

மின்சாரப் பூவாய் இதயத்தில் மலர்ந்த 

வசந்தத் திருநாளாய் அமைந்த மண நாள் அது! 


கலையாத கனவுகளோடு காற்றுக்கும் தெரியாமல் 

கண்ணெழுத்துக் கவிதையில் கார்கால மயிலாய் 

எத்தனையோ கற்பனைகளோடு 

ஏகாந்த நினைவுகளைச் சுமந்து கொண்டு

எதிர்பார்ப்பில் நீயிருந்தபோது 

திடீரென இடி விழுந்த வீடாய் 

மாறிப்போன நாட்களில் தானடி 

உன்னை நான் அறிந்து உதிர்ந்து போனேன்! 

உன் வானை மூடிய கருப்பு இரவுகளாய் 

புதைத்துக் கொண்ட எத்தனையோ நாட்களில்

தடமிழந்து தவித்துக் தனியே சிறகடித்து 

அரிதாய் மலர்ந்த குறிஞ்சிப் பூவாய் 

அத்தனை துயரங்களையும் அடித்துத் துவைத்து 

மலர்ந்து சிரித்த உனது புன்னகை முன்னால் 

ஆணேன்ற  கர்வம்  உன் காலடியில் சிதைந்து 

காணாமல் போன நாளில் தானடி 

மாண்புமிகு மனைவி நீயென்பதை உணர்ந்து 

உன் இதழோறப் புன்னகையாய் 

நானிருக்க தவமாய் கிடந்தேன்! 

செல்வி தரிசனம் நீ தருவாயா ?

உனக்கான இரவுகளாய் எப்போதும் நானிருக்க?


கவிஞர் யாழிசைசெல்வா 

05/05/2025







Friday, 2 May 2025

காற்றுக்கென்ன வேலி - யாழிசை செல்வா

காற்றுக்கென்ன வேலி 

======================

யாழிசை செல்வா 

==================

         வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த கோடை வெயிலின் வெம்மை தாழாமல் ஆங்காங்கே தேங்கி கிடந்த குளங்களிலும் குட்டைகளிலும் எருமைகள் தண்ணீருக்குள் தன்னை மூழ்கி எழுந்து நாசித் துவாரங்கள் வழியாக நீரை வெளியேற்றிக் கொண்டிருந்தன! குளங்களில் தேங்கியிருந்த நீருக்கு அருகாமையில் கரையோரங்களில் செழித்து நீரைத் தொட்டுக்கொண்டு அசைந்தாடிக் கொண்டிருந்தன நாணல்கள்! எங்கிருந்தோ கிளம்பி வந்த காற்று குளத்தின் நீரைத் தழுவிக் கொண்டு கரையோரம் தலையாட்டி ஆடிக்கொண்டிருந்த நாணல் அருகே அமர்ந்திருந்த, மீனாட்சியின் பரந்து விரிந்த கார் கூந்தலை தடவிச் சென்றது! திடீரெனத் தாக்கிய குளுமையான காற்றின் ஒத்தடத்தால் ஒரு கணம் இமை மூடி துஞ்சிப் போனாள் மீனாட்சி! 


       சூறைக்காற்றை காலில் கட்டிக்கொண்டு அறக்கப் பறக்க வியர்வை மழையில் தெப்பலாக நனைந்தபடி, புசு புசுவென மூச்சு வாங்க ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தாள் காமாட்சி! 


     "ஏண்டி! உன்னை எங்கே எல்லாம் தேடுறது! இப்படித்தான் சொல்லாம கொள்ளாம வந்துருவியா? நான் பயந்தே போயிட்டேன்! என்ன அலைய வச்சு பாக்குறதில்ல அப்படி என்னடி உனக்கு சந்தோசம்? கொஞ்சமாவது பெத்தவங்கிற பாசம் உன்கிட்ட இருக்குதா? அந்த நெனப்பு எல்லாம் உனக்கு இருந்தா நீ ஏன் இப்படிச் செய்யப் போற? என்னடி நான் கரடியா கெடந்து கத்திக்கிட்டு நிக்கிறேன்.... நீ எதுவும் பேசாம குத்துக்கல்லு மாதிரி பேசாம உட்கார்ந்திருக்க....? வாய தொறந்து ஏதாவது பேசேண்டி? உன்னோட வாயில இருக்க முத்து எல்லாம் கீழே விழுந்து கொட்டிப்புடுன்னு ஒருவேளை தொறக்க மாட்டேங்கிறியோ.....?" என படபடவென வடச்சட்டியில போட்ட மிளகா மாதிரி பொரிஞ்சு தள்ளிக்கிட்டுயிருந்தா காமாட்சி! 


    ‌‌"வீட்லதான் உங்க தொல்லை தாங்கலன்னு இங்கேயாவது வந்து கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்கலாம்னு வந்தேன்! அது உனக்கு பொறுக்கலையா....? ஏம்மா இப்படி என்னப் படுத்தி எடுக்கிற? மத்தவங்க தான் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்கன்னா...... நீயும் அதே தானே செஞ்சுகிட்டு இருக்க? ரெண்டுக்கும் வித்தியாசம் இல்லாம போயிருச்சு" என தன் அம்மாவை பார்த்துக் கூறினாள் மீனாட்சி! 


     "நீ அவ்வளவு தாண்டி உன்னோட அம்மாவப் புரிஞ்சுகிட்ட லட்சணம்! நானும் மத்தவங்க மாதிரி நடந்துகிட்டு இருந்தா இதுவரைக்கும் நீ நினைச்ச மாதிரி படிச்சு முடிச்சிருக்க முடியுமா ? அதெல்லாம் உனக்கு மறந்து போச்சா என்ன? "


     "வீட்ல உள்ள சித்தப்பா,  மாமா , அத்தை, பாட்டி இப்படியெல்லாரும் நான் படிக்க ஆசைப்பட்ட போது ஒரேடியா வேண்டாமே வேண்டாம்னு தடுத்து நின்னப்ப நீதான் அவங்க வாயெல்லாம் அடைச்சு என்ன படிக்க வச்சேங்குறது உண்மைதான்! அதை நான் எப்பவுமே மறக்க மாட்டேன்! அதே அம்மா தான் இப்ப மேற்படிப்பு நான் படிக்க நினைக்கிறப்ப தடையா நிக்கிற... அதுதான் எனக்கு ஒன்னும் புரியல.... " என குழப்பத்துடன் தன் தாயின் முகத்தை பார்த்தாள் மீனாட்சி!


     "உன்ன படிக்க வச்சதுலையும் ஒரு சுயநலம் இருக்குடி! அது உனக்கு தெரியாது!" என மீனாட்சியை பார்த்து கூறிவிட்டு குளத்தில் மூழ்கி சிறகடித்து பறக்கும் சிட்டுக்குருவியைப் விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் காமாட்சி! 


      "நான் படிச்சதுக்கும் உன்னோட சுயநலத்துக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு ஒன்னும் புரியலையே!விளக்கமாகத்தான் சொல்லும்மா...?" என தன் தாயின் கன்னத்தைப் பிடித்து கொஞ்சியபடி கேட்டாள் மீனாட்சி! 


     "சொல்றேன் கவனமாக் கேளு! எங்க காலத்தில் எல்லாம் பொட்ட புள்ளைங்க பெருசா படிக்க முடியாது! நான் ஆசைப்பட்டதுனாலே எங்க அப்பா என்ன பள்ளிக்கூடம் அனுப்பி படிக்க வச்சாரு! அதுவும் கூட பத்தாம் வகுப்புக்கு மேல தாண்டல...." 


      "ஏம்மா... அதுக்கு மேல படிக்கல.....?"


      "படிச்சதெல்லாம் போதும்! காலாகாலத்துல கல்யாணம் பண்ணி வைக்கிறேன் புருசன் வீட்டில் போய் ஒழுங்கா குடும்ப நடத்த பாருன்னு சொல்லி உங்க அப்பாவுக்கு என்னை கட்டி வச்சுட்டாங்க.... " என ஏக்கத்துடன் மூச்சை இழுத்து விட்டவளைப் பார்த்து" நீ ஏன் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட... முடியாதுன்னு சொல்லி மறுத்திருக்க வேண்டியதுதானே! நானாயிருந்தா அப்படித்தான் சொல்லி இருப்பேன்!" என்றாள் மீனாட்சி! 


     "எங்க காலத்துல அப்படி எல்லாம் சொல்ல முடியாது! எங்க அப்பாவும் ஒரு கட்டத்துக்கு மேல எதுவும் பேசாம இருந்துட்டார்! எனக்கு இருந்த ஒரு ஆதரவும் இல்லாம போனதால, வேற வழி இல்லாம உங்க அப்பாவ கட்டிக்கிற ஒத்துக்கிட்டேன்" 


     "பத்தாவதுதேன் படிச்சேன்ங்கிற... ஆனா நீ பட்ட படிப்பு முடிச்ச சான்றிதழ் அப்பாவோட மரப் பொட்டியில நான் பார்த்து இருக்கேனே.... அது எப்படி?"


      "கல்யாணத்துக்கு அப்புறம் என்னோட ஆசைய புரிஞ்சுகிட்ட உங்க அப்பாதேன் என்ன தொலைதூரக் கல்வியிலே படிக்க வச்சாரு.... இல்லாட்டி நான் படித்திருக்க முடியாது"என தூரத்தில் எங்கோ பார்த்துக் கொண்டிருந்த காமாட்சியின் கண்களில் கண்ணீர் பொலபொலவெனக் அருவி போல் கொட்டிக் கொண்டிருந்தது! 


     "அப்பாவை நினைச்சு அழுகிறியாம்மா!"எனக் கூறிக்கொண்டே காமாட்சியின் கண்களை கைகுட்டையால் துடைத்தவள், அவள் தோளில் தன் தலையைச் சாய்த்துக் கொண்டாள் மீனாட்சி! 


      "ஏம்மா! உனக்குத்தான் படிக்கிறது இவ்வளவு பிடிக்குமிங்கிறது எனக்கு இன்னைக்கு தான் தெரியும்! அப்படி இருந்தும் என்னை யேன்மா தொடர்ந்து மேற்படிப்பு படிக்க வேண்டாம்னு சொல்ற, எனக்கு அதுதான் ஒண்ணுமே புரிய மாட்டேங்குது?"


       "உங்க அப்பா போன பிறகு உன்ன ஆளாக்குறதுக்கு நான் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் கிடையாது! ஊராரோட ஏச்சையும் பேச்சையும் தாங்கிக்கிட்டு உன்னை வளர்க்கிறதுக்கு ஒத்தக் காட்டுல கெடந்து ரொம்பச் சிரமப்பட்டேன்டி! அப்ப எல்லாம் நம்மள இந்த சொந்தக்காரங்க யாருமே சேர்த்துக்கல! இன்னைக்கு பல  போராட்டத்துக்கு பிறகு ஒரு வழியா ஆளாகி நிக்கிறோம், இப்ப வந்து சொந்தம் பந்தன்னு கூடி நிக்கிறாங்க"


      "இதையெல்லாம் நீ சொல்லித்தான் எனக்கு தெரியணுமா என்ன? நாம சிரமப்படுற காலத்துல வராத சொந்தங்கள நெனச்சி நீ ஏன் கவலைப் படுற? உம் மக நானியிருக்கேன்! நீ ஏன் கவலைப் படுற! உனக்கு பக்க துணையா எப்பவும் நானிருப்பேன்!" என காமாட்சியைப் பார்த்து கூறினாள் மீனாட்சி!


      "இப்ப நீ சொல்றியே அதுக்காக தாண்டி உன்ன நான் போக வேணாம்னு தடுக்கிறேன்! எனக்கு உன்ன விட்டா யார் இருக்கா? நாதியத்த இந்த சிறுக்கிக்கு வேற கதி கிடையாதே! "


     "அதுக்காக என்ன படிக்க வேணாம்னு சொல்றியா? எல்லாம் உனக்கு நியாயமா படுதாமா? படிச்சு முடிச்ச உடனே சீக்கிரமா திரும்பி வந்துட போறேன்! கொஞ்ச நாள் தான மா!"என தன் தாயை கட்டிக்கொண்டு கொஞ்சியபடி கேட்டாள் மீனாட்சி! 


     "நீ தாராளமா படிச்சுக்க.... அத நான் வேண்டான்னு சொல்ல மாட்டேன்! அந்தப் படிப்ப ஏன் இங்க படிக்க கூடாது! அதுதாண்டி என் கேள்வி? அங்க போய் படிச்சாத்தான் படிப்பா? நம்ம ஊரிலேயே எல்லா வசதியும் இப்ப வந்துருச்சுல்லே?"


      "இங்கே இருக்குது! ஆனா ! சிட்னியில் போய் படிக்கிறதுக்கு நம்ம ஊர்ல எத்தனை பேருக்கு மா வாய்ப்பு கிடைச்சிருக்கு! உன்னோட மக அங்க போய் படிச்சிட்டு வந்தா உனக்கு தானே பெருமை!"


      "நீ சொல்றதெல்லாம் சரி தாண்டி! ஊர் தாண்டி போனாலே ஒரு மாதிரி பேசுற உலகத்துல! நீ என்னடான்னா நாடு தாண்டி போயி படிக்கப் போறேன்னு சொல்ற! அங்க ஏதாச்சும் உனக்கு நடந்துட்டா உன்னை யாருடி வந்து உன்ன பாத்துப்பாங்க! எனக்கு அந்த கவலை தான் விடாம துரத்திகிட்டு வருது!"


     "அப்போ உனக்கு படிக்கிறதுல பிரச்சனை இல்ல! அங்க போய் படிக்கிறதுல எனக்கு ஏதாவது பிரச்சனை வந்துருமோன்னு பயப்படுற... அதானே! அத விடு! இன்னைக்கு உலகத்துல எவ்வளவோ தொழில்நுட்பம் வந்திருச்சு! இந்த காலத்துல காற்றுக்கு யாரும் வேலி போட முடியாது!  என்ன நான் பாதுகாப்பாக பாத்துக்குவேன்! அடிக்கடி உன்கிட்ட தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிக்குவேன்! இதுக்கெல்லாம் பயந்துகிட்டு என் படிப்புக்கு தடை சொல்லாதம்மா! சரின்னு சொல்லு உன் மக சாதிச்சிட்டு வரேன்!"


     "சரிடி! அதுதான் உன் விருப்பமுன்னா அதுக்கு தடையா நானிருக்க மாட்டேன்! கவலைப்படாம நீ படிச்சிட்டு வா! மத்தத நான் பாத்துக்கிறேன்!"தன் மகளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள் காமாட்சி! 


      தூரத்தில் எங்கோ பலத்த இடியுடன் மழை கொட்டத் தொடங்கியிருந்தது!