Tuesday, 27 May 2025

கரம் கோர்த்த கவிதையொன்று கவிஞர் யாழிசைசெல்வா

கரம்கோர்த்த கவிதையொன்று 


ஒரு ஐப்பசி மழைநாளில் 
புதிதாய் வானில் தோன்றிய 
வானவில் அவள்!//

ஆர்ப்பாட்டம் இல்லாமல் 
அலையடித்து நீண்டு பரவிய 
கார் கூந்தலில் 
காற்றுக்கும் புன்னகை தர 
குண்டுமல்லிகை சரம் வைத்து 
கவிதைக் கடலாக 
ககனத்தில் தோன்றும் நிலவாக 
தேன் சொட்டும்  இதழில் குளிர் புன்னகை படர விட்டு
எதிரே வந்தாள் கன்னக்குழி கவிதை!//

விடாமல் பெய்த மழையில் 
தொடாமல் தொட்டு 
தூரத்தில் நின்று 
தூளியாய் நெஞ்சில் விழுந்து 
உல்லாச பெருங்கடலாய் 
வாழ்வில் உதயமானாள் 
கருப்பட்டி இதழ் சுழிக்கும் 
கார் கூந்தல் பேரழகி!//

செலவான சில்லறை காசாயிருந்த 
இருண்ட வாழ்வைக் கிழித்து 
எழுதி முடிக்கப்படாத எனது நாட்குறிப்பின்
இன்னொரு காவியமாய் 
இதய ஓவியமாய் 
நாளும் கேட்கும் இன்னிசையாய் 
எனக்கான வானை ஊருக்கே சொல்லிட 
காட்டாற்றில் நீந்தி வந்து
கரம் கோர்த்த கவிதையாய்
என்னை இதழ் இசைத்து மணாளனாய்
ஏற்றுக் கொண்டாள் என்னவள் பாண்டிச்செல்வி!//

கவிஞர் யாழிசைசெல்வா 
தேனி மாவட்டம் 
27/05/2025









No comments:

Post a Comment