பூத்தது வாழ்க்கை
================
யாழிசைசெல்வா
===============
அந்தி வானத்தைத் துரத்திக் கொண்டு இருள் கவிழ்ந்து கொண்டிருந்த மாலை வேளை! வேப்பமரமருகே இருந்தது செல்லாயி குடிசைவீடு!
வாசல் திண்ணையில் அமர்ந்து கொண்டு மண்ணெண்ணெய் விளக்கைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள் செல்லாயி மகள் மீனாட்சி! அலை அலையாய் பரவியிருந்த கருங்கூந்தல் முகத்தின் முன்னால் பரவி முத்தமிட்டு கொண்டிருந்தபோது "தாயி! அம்மா இல்லையா...?" என்றபடி வாயில் போட்டிருந்த வெத்தலையைக் குதிப்பிக் கொண்டே கேட்டாள் செல்லம்மா!
"வாங்க பெரியம்மா....! அம்மா வீட்டுக்குள்ளற தான் இருக்காங்க. செத்த பொருங்க...."என்றவள் வீட்டிற்குள் திரும்பி "அம்மா.... அம்மா..." என்றாள் மீனாட்சி!
"உள்ளாற தானே இருக்கேன்! அதுக்கேண்டி இப்படி கெடந்து கத்துற..."என்றபடி வாசலில் வந்த செல்லாயி, "வாக்கா.... இப்பத்தான் யேன் வீடு இருக்க நெனப்பு தெரிஞ்சதாக்கும்.... திடீர்னு அதிசயமா வந்திருக்கியே.... காரணமில்லாம வரமாட்டியே... சொல்லுக்கா..." என்றவள் திண்ணையில் அமர்ந்து கொண்டு செல்லம்மாவையும் கையைப் பிடித்து அருகே அமர வைத்தாள் செல்லாயி!
சிறிது நேரம் மீனாட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த செல்லம்மாவைப் பார்த்து "என்ன? காணாததை கண்டது போல புள்ளையை அப்படி வெரச்சுப் பார்க்குற...? என்ன விவரமுனு சொல்லுக்கா?"
"நேத்து சந்தைக்கு போயிருந்தேன். அப்ப நம்ம தூரத்துச் சொந்தம் மகாலிங்கம் அண்ணனைப் பார்த்தேன்!"
"சரி அதுக்கென்ன இப்ப?"என வெடுக்கெனக் கேட்டாள் செல்லாயி!
"கொஞ்சம் பொறுடி, முழுசா என்னச் சொல்ல விடு!"
"சரி சரி! நான் எதுவும் சொல்லல"
"மகாலிங்க அன்னை மகன் கருப்பசாமிக்கு ரொம்ப நாளா பொண்ணு தேடிக்கிட்டு இருக்க தா சொன்னாரு. ஒரு இடமும் நல்லபடியா அமையல. உனக்கு தெரிஞ்ச பொண்ணு ஏதாவது இருந்தா சொல்லுனு சொன்னாரு. உடனே மீனாட்சி பத்தி அவர்கிட்ட சொன்னேன்" என்றவள் செல்லாயி முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்!
"மகாலிங்கம் அண்ணே! ரொம்ப நல்லவருதான்! ஆனா என்னோட நெலமை உனக்குத்தான் தெரியுமில்ல! அந்த மனுசன் போன பிறகு என் உசுர கையில புடிச்சு வச்சிருக்கதே மீனாட்சிக்காகத்தான்! அவள நல்லவன் கையில புடிச்சு கொடுத்துட்டா...." என்றவள் தேம்பி அழத் தொடங்கி விட்டாள் செல்லாயி!
"இப்ப நீ எதுக்கு கெடந்து மனசப் போட்டுக் குழப்பிக்கிற, மகாலிங்க அண்ணனோட பையன் நல்லா படிச்சு, கை நிறையச் சம்பாதிக்கிறான்! எந்தக் கெட்ட பழக்கமுமில்லை! பெறகு உனக்கென்ன கவலை?"
"நான் இருக்க நெலமையில மீனாட்சிய எப்படி கட்டிக் கொடுக்கப் போறேன்?"
"மீனாட்சிக்கு ஏற்கனவே குடிகார சடையாண்டியோட கல்யாணமாகி அவன் கொடுமை பொறுக்க முடியாம, ஊரைக் கூட்டி சபையில வச்சு அவனோட வாழ்ந்தது போதுமுனு அத்து விட்ட நாளே நாளுல மகளுக்கு ஏற்பட்ட துக்கம் தாங்காமல் மீனாட்சி அப்பா யெறந்தது எல்லாத்தையும் தெளிவாச் சொல்லிட்டேன். அது மட்டுமில்லாம கல்யாணத்த ஆடம்பரமில்லாம மாரியம்மன் கோயில்ல, நம்ம சொந்தக்காரங்களை மட்டும் அழைச்சு வச்சு நடத்துறதுக்கும் அவர் சம்மதிச்சுட்டாரு... இப்ப சொல்லு இதுல கவலைப்பட என்ன இருக்கு?" என்ற போது மீனாட்சி விளக்கேற்றியதில் வெளிச்சத்தில் வீடு நிறைந்திருந்தது!
பூத்தது வாழ்க்கையென தாயும் மகளும் சிரித்தார்கள்!
(முடிந்தது)
##################################################
No comments:
Post a Comment