காற்றுக்கென்ன வேலி
======================
யாழிசை செல்வா
==================
வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த கோடை வெயிலின் வெம்மை தாழாமல் ஆங்காங்கே தேங்கி கிடந்த குளங்களிலும் குட்டைகளிலும் எருமைகள் தண்ணீருக்குள் தன்னை மூழ்கி எழுந்து நாசித் துவாரங்கள் வழியாக நீரை வெளியேற்றிக் கொண்டிருந்தன! குளங்களில் தேங்கியிருந்த நீருக்கு அருகாமையில் கரையோரங்களில் செழித்து நீரைத் தொட்டுக்கொண்டு அசைந்தாடிக் கொண்டிருந்தன நாணல்கள்! எங்கிருந்தோ கிளம்பி வந்த காற்று குளத்தின் நீரைத் தழுவிக் கொண்டு கரையோரம் தலையாட்டி ஆடிக்கொண்டிருந்த நாணல் அருகே அமர்ந்திருந்த, மீனாட்சியின் பரந்து விரிந்த கார் கூந்தலை தடவிச் சென்றது! திடீரெனத் தாக்கிய குளுமையான காற்றின் ஒத்தடத்தால் ஒரு கணம் இமை மூடி துஞ்சிப் போனாள் மீனாட்சி!
சூறைக்காற்றை காலில் கட்டிக்கொண்டு அறக்கப் பறக்க வியர்வை மழையில் தெப்பலாக நனைந்தபடி, புசு புசுவென மூச்சு வாங்க ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தாள் காமாட்சி!
"ஏண்டி! உன்னை எங்கே எல்லாம் தேடுறது! இப்படித்தான் சொல்லாம கொள்ளாம வந்துருவியா? நான் பயந்தே போயிட்டேன்! என்ன அலைய வச்சு பாக்குறதில்ல அப்படி என்னடி உனக்கு சந்தோசம்? கொஞ்சமாவது பெத்தவங்கிற பாசம் உன்கிட்ட இருக்குதா? அந்த நெனப்பு எல்லாம் உனக்கு இருந்தா நீ ஏன் இப்படிச் செய்யப் போற? என்னடி நான் கரடியா கெடந்து கத்திக்கிட்டு நிக்கிறேன்.... நீ எதுவும் பேசாம குத்துக்கல்லு மாதிரி பேசாம உட்கார்ந்திருக்க....? வாய தொறந்து ஏதாவது பேசேண்டி? உன்னோட வாயில இருக்க முத்து எல்லாம் கீழே விழுந்து கொட்டிப்புடுன்னு ஒருவேளை தொறக்க மாட்டேங்கிறியோ.....?" என படபடவென வடச்சட்டியில போட்ட மிளகா மாதிரி பொரிஞ்சு தள்ளிக்கிட்டுயிருந்தா காமாட்சி!
"வீட்லதான் உங்க தொல்லை தாங்கலன்னு இங்கேயாவது வந்து கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்கலாம்னு வந்தேன்! அது உனக்கு பொறுக்கலையா....? ஏம்மா இப்படி என்னப் படுத்தி எடுக்கிற? மத்தவங்க தான் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்கன்னா...... நீயும் அதே தானே செஞ்சுகிட்டு இருக்க? ரெண்டுக்கும் வித்தியாசம் இல்லாம போயிருச்சு" என தன் அம்மாவை பார்த்துக் கூறினாள் மீனாட்சி!
"நீ அவ்வளவு தாண்டி உன்னோட அம்மாவப் புரிஞ்சுகிட்ட லட்சணம்! நானும் மத்தவங்க மாதிரி நடந்துகிட்டு இருந்தா இதுவரைக்கும் நீ நினைச்ச மாதிரி படிச்சு முடிச்சிருக்க முடியுமா ? அதெல்லாம் உனக்கு மறந்து போச்சா என்ன? "
"வீட்ல உள்ள சித்தப்பா, மாமா , அத்தை, பாட்டி இப்படியெல்லாரும் நான் படிக்க ஆசைப்பட்ட போது ஒரேடியா வேண்டாமே வேண்டாம்னு தடுத்து நின்னப்ப நீதான் அவங்க வாயெல்லாம் அடைச்சு என்ன படிக்க வச்சேங்குறது உண்மைதான்! அதை நான் எப்பவுமே மறக்க மாட்டேன்! அதே அம்மா தான் இப்ப மேற்படிப்பு நான் படிக்க நினைக்கிறப்ப தடையா நிக்கிற... அதுதான் எனக்கு ஒன்னும் புரியல.... " என குழப்பத்துடன் தன் தாயின் முகத்தை பார்த்தாள் மீனாட்சி!
"உன்ன படிக்க வச்சதுலையும் ஒரு சுயநலம் இருக்குடி! அது உனக்கு தெரியாது!" என மீனாட்சியை பார்த்து கூறிவிட்டு குளத்தில் மூழ்கி சிறகடித்து பறக்கும் சிட்டுக்குருவியைப் விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் காமாட்சி!
"நான் படிச்சதுக்கும் உன்னோட சுயநலத்துக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு ஒன்னும் புரியலையே!விளக்கமாகத்தான் சொல்லும்மா...?" என தன் தாயின் கன்னத்தைப் பிடித்து கொஞ்சியபடி கேட்டாள் மீனாட்சி!
"சொல்றேன் கவனமாக் கேளு! எங்க காலத்தில் எல்லாம் பொட்ட புள்ளைங்க பெருசா படிக்க முடியாது! நான் ஆசைப்பட்டதுனாலே எங்க அப்பா என்ன பள்ளிக்கூடம் அனுப்பி படிக்க வச்சாரு! அதுவும் கூட பத்தாம் வகுப்புக்கு மேல தாண்டல...."
"ஏம்மா... அதுக்கு மேல படிக்கல.....?"
"படிச்சதெல்லாம் போதும்! காலாகாலத்துல கல்யாணம் பண்ணி வைக்கிறேன் புருசன் வீட்டில் போய் ஒழுங்கா குடும்ப நடத்த பாருன்னு சொல்லி உங்க அப்பாவுக்கு என்னை கட்டி வச்சுட்டாங்க.... " என ஏக்கத்துடன் மூச்சை இழுத்து விட்டவளைப் பார்த்து" நீ ஏன் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட... முடியாதுன்னு சொல்லி மறுத்திருக்க வேண்டியதுதானே! நானாயிருந்தா அப்படித்தான் சொல்லி இருப்பேன்!" என்றாள் மீனாட்சி!
"எங்க காலத்துல அப்படி எல்லாம் சொல்ல முடியாது! எங்க அப்பாவும் ஒரு கட்டத்துக்கு மேல எதுவும் பேசாம இருந்துட்டார்! எனக்கு இருந்த ஒரு ஆதரவும் இல்லாம போனதால, வேற வழி இல்லாம உங்க அப்பாவ கட்டிக்கிற ஒத்துக்கிட்டேன்"
"பத்தாவதுதேன் படிச்சேன்ங்கிற... ஆனா நீ பட்ட படிப்பு முடிச்ச சான்றிதழ் அப்பாவோட மரப் பொட்டியில நான் பார்த்து இருக்கேனே.... அது எப்படி?"
"கல்யாணத்துக்கு அப்புறம் என்னோட ஆசைய புரிஞ்சுகிட்ட உங்க அப்பாதேன் என்ன தொலைதூரக் கல்வியிலே படிக்க வச்சாரு.... இல்லாட்டி நான் படித்திருக்க முடியாது"என தூரத்தில் எங்கோ பார்த்துக் கொண்டிருந்த காமாட்சியின் கண்களில் கண்ணீர் பொலபொலவெனக் அருவி போல் கொட்டிக் கொண்டிருந்தது!
"அப்பாவை நினைச்சு அழுகிறியாம்மா!"எனக் கூறிக்கொண்டே காமாட்சியின் கண்களை கைகுட்டையால் துடைத்தவள், அவள் தோளில் தன் தலையைச் சாய்த்துக் கொண்டாள் மீனாட்சி!
"ஏம்மா! உனக்குத்தான் படிக்கிறது இவ்வளவு பிடிக்குமிங்கிறது எனக்கு இன்னைக்கு தான் தெரியும்! அப்படி இருந்தும் என்னை யேன்மா தொடர்ந்து மேற்படிப்பு படிக்க வேண்டாம்னு சொல்ற, எனக்கு அதுதான் ஒண்ணுமே புரிய மாட்டேங்குது?"
"உங்க அப்பா போன பிறகு உன்ன ஆளாக்குறதுக்கு நான் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் கிடையாது! ஊராரோட ஏச்சையும் பேச்சையும் தாங்கிக்கிட்டு உன்னை வளர்க்கிறதுக்கு ஒத்தக் காட்டுல கெடந்து ரொம்பச் சிரமப்பட்டேன்டி! அப்ப எல்லாம் நம்மள இந்த சொந்தக்காரங்க யாருமே சேர்த்துக்கல! இன்னைக்கு பல போராட்டத்துக்கு பிறகு ஒரு வழியா ஆளாகி நிக்கிறோம், இப்ப வந்து சொந்தம் பந்தன்னு கூடி நிக்கிறாங்க"
"இதையெல்லாம் நீ சொல்லித்தான் எனக்கு தெரியணுமா என்ன? நாம சிரமப்படுற காலத்துல வராத சொந்தங்கள நெனச்சி நீ ஏன் கவலைப் படுற? உம் மக நானியிருக்கேன்! நீ ஏன் கவலைப் படுற! உனக்கு பக்க துணையா எப்பவும் நானிருப்பேன்!" என காமாட்சியைப் பார்த்து கூறினாள் மீனாட்சி!
"இப்ப நீ சொல்றியே அதுக்காக தாண்டி உன்ன நான் போக வேணாம்னு தடுக்கிறேன்! எனக்கு உன்ன விட்டா யார் இருக்கா? நாதியத்த இந்த சிறுக்கிக்கு வேற கதி கிடையாதே! "
"அதுக்காக என்ன படிக்க வேணாம்னு சொல்றியா? எல்லாம் உனக்கு நியாயமா படுதாமா? படிச்சு முடிச்ச உடனே சீக்கிரமா திரும்பி வந்துட போறேன்! கொஞ்ச நாள் தான மா!"என தன் தாயை கட்டிக்கொண்டு கொஞ்சியபடி கேட்டாள் மீனாட்சி!
"நீ தாராளமா படிச்சுக்க.... அத நான் வேண்டான்னு சொல்ல மாட்டேன்! அந்தப் படிப்ப ஏன் இங்க படிக்க கூடாது! அதுதாண்டி என் கேள்வி? அங்க போய் படிச்சாத்தான் படிப்பா? நம்ம ஊரிலேயே எல்லா வசதியும் இப்ப வந்துருச்சுல்லே?"
"இங்கே இருக்குது! ஆனா ! சிட்னியில் போய் படிக்கிறதுக்கு நம்ம ஊர்ல எத்தனை பேருக்கு மா வாய்ப்பு கிடைச்சிருக்கு! உன்னோட மக அங்க போய் படிச்சிட்டு வந்தா உனக்கு தானே பெருமை!"
"நீ சொல்றதெல்லாம் சரி தாண்டி! ஊர் தாண்டி போனாலே ஒரு மாதிரி பேசுற உலகத்துல! நீ என்னடான்னா நாடு தாண்டி போயி படிக்கப் போறேன்னு சொல்ற! அங்க ஏதாச்சும் உனக்கு நடந்துட்டா உன்னை யாருடி வந்து உன்ன பாத்துப்பாங்க! எனக்கு அந்த கவலை தான் விடாம துரத்திகிட்டு வருது!"
"அப்போ உனக்கு படிக்கிறதுல பிரச்சனை இல்ல! அங்க போய் படிக்கிறதுல எனக்கு ஏதாவது பிரச்சனை வந்துருமோன்னு பயப்படுற... அதானே! அத விடு! இன்னைக்கு உலகத்துல எவ்வளவோ தொழில்நுட்பம் வந்திருச்சு! இந்த காலத்துல காற்றுக்கு யாரும் வேலி போட முடியாது! என்ன நான் பாதுகாப்பாக பாத்துக்குவேன்! அடிக்கடி உன்கிட்ட தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிக்குவேன்! இதுக்கெல்லாம் பயந்துகிட்டு என் படிப்புக்கு தடை சொல்லாதம்மா! சரின்னு சொல்லு உன் மக சாதிச்சிட்டு வரேன்!"
"சரிடி! அதுதான் உன் விருப்பமுன்னா அதுக்கு தடையா நானிருக்க மாட்டேன்! கவலைப்படாம நீ படிச்சிட்டு வா! மத்தத நான் பாத்துக்கிறேன்!"தன் மகளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள் காமாட்சி!
தூரத்தில் எங்கோ பலத்த இடியுடன் மழை கொட்டத் தொடங்கியிருந்தது!
No comments:
Post a Comment