Friday, 21 March 2025

 காற்றைப் போலே நீ வந்து போனாயே..!

===================================

கவிஞர் யாழிசை செல்வா 

==========================

இருளின்

கரை தெரியாத நீண்ட வானம்!

கடலின் அலைகளை - காதலோடு

தாக்கிக் கொண்டிருக்கும் வெண்ணிலா!

பொங்கிப் புனல் ஆடும் 

ஆடிப் பதினெட்டாம் பெருக்கு நாளில் 

செங்கரும்பின் சுவை மேவிய 

அதரந்தனில் 

கோல முத்தம் தந்தேனே -

மறந்து போனதா மாயவா...? //01


சங்கத்தமிழ் பேசும்

சந்தனச் சிலை!

அசைந்தாடும் காற்று 

ஆர்ப்பரிக்கும் கடல் 

இசை போல் என் மனம் 

எங்கே போனாய் கண்ணாளா....?!//02


வானில் வட்டமிடும் நிலா 

நெஞ்சக் கனலில் சுட்டு எரிக்கிறதே!

செங்கரும்பின் சுவை மேவிய 

தித்திப்பு அதரங்கள் தீப்பற்றி எரியாதோ? 

இதோ வருகிறேன் 

இன்னுயிரும் உனக்காக தருகிறேன் 

சொன்னதெல்லாம் பொய்யா நாயகனே... //03


வில்லில் அம்பெய்து

வீரம் பேசும் மன்னவர்கள் முன்னால் 

விழிதனில் காதல் எழுதிய காதலனே -

காற்றைப் போலே 

நீ 

வந்து போனாயே...! //04


வேல்விழிக் கண்கள் 

விரகத்தில் உதிரும் கை வளையல்கள் 

தாகத்தில் தவித்திருக்கும் அதிரங்கள் 

மோகத் தீ மூட்ட 

மறந்து போனதேன் மன்னவா...! //05


நீ 

நான் 

நிலா 

காற்று 

வானம் 

சேர்ந்தெழுதிய பூக்கோலம் புதுக் கோலமாய் 

இன்னும்

என் இதயத்தில்....//06


நீண்ட வானம் 

தவழும் வெண்மதி 

சுழன்றடிக்கும் காற்று 

அலர் தூற்றும் ஊர் 

ஆசையாய் நான் 

கரம் பற்றிக் காப்பாற்றுவேன் என்ற நீ 

எங்கு போனாய் - என் 

ஆசைக் காதலா!//07


வழமையாகக் காத்திருக்கும் படகுத்துறை 

இடைதனில் கரம் கோர்த்து 

ஏந்திழை என்னைச்

சுரம் சேர்க்கத்தான் மறந்து போனாயே!//08


அலைந்தாடும் காற்றும் 

சுழித்தோடும் நீரும் 

மோகத்தை தூண்டும் நிலவும் 

எனது 

பாரத்தைப் பற்றுகின்றன-

காதலோடு கொஞ்சத்தான் நீ இல்லை!//09


அன்று -

ஊரில் நடந்த 

சடுகுடுப் போட்டியில் 

தோற்றுப் போனதாய் - 

உன்னை

அனைவரும் பலித்துப் பேசிய போது 

நீ 

என் இதயத்தை கைப்பற்றியது 

அவர்களுக்கு தெரியாமல் போனது!//10


அங்குமிங்குமாய்

காவிரிக் கரையோரம் 

ஒரு நாள் மாலை வேலை 

தெருக்கோடியிலுள்ள அங்காடிதனில் 

மதுரமான மாம்பழமொன்றைக்

கையில் எடுத்துச் சுவைத்தவன் 

யாரும் அறியாதபோது 

என்னருகில் வந்த நீ 

உனது குழி விழுந்த கன்னத்தின்

சுவையை ஒப்பிடும்போது - இதன் 

தித்திப்பு குறைவு தான் என்றாய்!//12


ஊர்த் தெரு முனையில் தோழிகளோடு 

நான் 

பாண்டி விளையாடிக் கொண்டிருக்கும்போது 

உன்னையும் 

சேர்க்கச் சொல்லி 

என்னிடம் வம்பிழுத்தாயே..!//13


இத்தனையும் மறந்து 

எத்தனை தூரம் சென்றாய் 

என் காதலா....!

காற்றும் கூட 

என்னைக் கைது செய்து விடத் துடிக்கிறது -

என் கரம் பற்றி 

இதழ் கொய்யத்தான் 

இங்கு நீயில்லை -

காற்றைப் போலே 

நீ 

வந்து போனாயே....!//15


கவிஞர் யாழிசை செல்வா

No comments:

Post a Comment