Saturday, 22 March 2025

அய்யனார் - யாழிசை செல்வா அத்தியாயம் 01

🚔01. அய்யனார் 🚔

       துளித் துளியாய் தொடங்கிய தூறல் விரைவில் வெளுக்கத் தொடங்கிவிட்டது!  விட்டும் தொட்டுமாக ஆரம்பித்து திடீரென பெருத்து வளர்ந்து வானத்தை கீழே சாய்த்தது போல் கொட்டத் தொடங்கி விட்டது! ஆட்டம் அரங்கேறிய பின் முறுக்கிக் கொண்டு நிற்க மனம் இல்லாமல் தூரத்தில் தெரிந்த நிழற்குடை நோக்கி தப தபவென்று ஓடிக்கொண்டிருந்தான்! 


      அப்படி ஒன்றும் பெரிய நிழற்குடை ஒன்றும் இல்லை ஆயினும் நான்கைந்து பேர் ஒரே நேரத்தில் ஒண்டிக்கொண்டு நிற்கும் அளவிற்கு ஏற்றதாகத்தான் இருந்தது! அடித்துப் பிடித்து சேர்ந்து நின்றால் இன்னும் மூன்று பேர் பாதி நனைந்தும் மீதி குளிர்ந்தும் நின்று கொள்ளலாம் என்னும் அளவிற்கு தான் அந்த இடம் இருந்தது! 


      "இன்னைக்குன்னு பார்த்து தானா எல்லாம் நடக்கனும்? வழக்கம்போல வந்திருந்தால் இதெல்லாம் தேவையா? கிளம்பும்போதே தோன்றியது.... இருந்தாலும் உள்ளூர தோன்றிய நப்பாசையின் காரணமாக பைக்கை எடுத்துக் கொண்டு வந்தது, எத்தனை பெரிய தவறு! இனிமேல் இதுபோல் செய்யக்கூடாது என்பதற்கு எத்தனை பெரிய பாடத்தைக் கொடுத்து விட்டது! ஆனாலும் இவை கொஞ்சம் அதிகம்தான்! இத்தனை நாளும் வெறித்துக் கிடந்த வானம்.... மொத்தமாக இன்று ஒரே நாளில் வட்டியும் முதலுமாக சேர்த்து வைத்து கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது! பாழாய் போன பைக்கும் இன்று காலை வாரிவிட்டதே....!  நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் விட்டிருந்ததால் வந்த பிரச்சனை இது! தொடர்ந்து சரியாகப் பராமரித்திருந்தால் இப்படி ஒரு நிலை வந்திருக்காது! அடிக்கொருமுறை பயன்பாட்டில் கொண்டு வந்திருந்தால் நடந்திராதென இப்போது தோன்றி என்ன பயன்? "என எண்ணிக்கொண்டே தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த அலைபேசியை எடுத்து ஏதோ ஒரு  எண்ணை அழுத்தி பேச முயற்சித்தான்! தொடர்பு கிடைக்காத வெறுப்பில் தரையை உதைத்துக் கொண்டான் அய்யனார்!


      சென்னையின் குற்றப்பிரிவின் சிறப்பு காவல் அதிகாரி பொறுப்பில் இருப்பவன்தான் அய்யனார்! அசத்தும் ஆணழகன் இல்லை என்றாலும் தவிர்க்க முடியாத மாநிறத்தைக் கொண்ட‌ துணிச்சல் மிக்க இளைஞன்! பணிக்கு வந்த நாட்களில் பார்த்தவரும் கேட்டவரும் பொறாமை கொள்ளும் அளவில் சட்டென பற்றி கொண்ட வளர்ச்சியின் சிகரத்தில் அமர்ந்து கொண்டவன்! துரு துரு கண்கள்! தேர்ந்த உடற்பயிற்சிகள் உரமேறிய தோள்கள்! பூரிப்பில் துளிர்த்த கால்கள்! பரபரப்பிற்கு பஞ்சம் வைக்காத செயல்களென எப்போதும் வலம் வரும் வேங்கையாக பணியில் இருந்ததால் எண்ணற்ற எதிரிகள்! இருந்தும் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளின் காலத்தை நீட்டிக்காத கண்ணியத்துடன் சேர்ந்தே வளர்ந்தவன்!

 

        வெளுக்கும் மழையில் ஆங்காங்கே குத்தீட்டிக் கோபுரங்களாய் செழித்திருந்த வீடுகளில் வழுக்கிக் கொண்டு சாக்கடையில் குதித்துக் கொண்டிருந்தது மழை நீர்!   வீடுகளுக்கு அருகாமையில் ஆங்காங்கே செழித்திருந்த மரங்கள் கொடி போல் கிளை பரப்பிக் கிடந்தன! மரங்களின் சருகுகளை சுமந்து கொண்டு சிறிய நீரோடையாய் சுழித்துக் கொண்டு தெருவெங்கும் மழைநீர் ஓடிக்கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த இடமே பெரும் வெள்ளக்காடாய் மாறிவிட்டிருந்தது! இன்னும் சிறிது நேரம் போனால் அந்த இடத்திலிருந்து வெளியேறுவதற்கு நீந்திச்செல்லும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை! 


     நீரோடைகளையும் குளங்களையும் ஆக்கிரமித்து பூத்திருந்த கல் மரங்களின் சாபக் கேட்டின் சரித்திர பக்கங்களின் சாட்சிகளாய் மாறிவிட்ட சென்னைக்கு இது ஒன்றும் புதிதில்லை! நீண்ட வளர்ச்சியின் நீர் பூத்த நெருப்பு இது! 


      கொடி கொடியாய் வளர்ந்து கொட்டிக் கொண்டிருந்த மழையின் ஊடே  மின்னலும் சேர்ந்து சிரித்தது! 


     அப்போது பட்டென அருகில் இருந்த மின்சாரக் கம்பத்தில் வெடித்து பெரு நெருப்பு துளிர்த்தது தான் தாமதம்! சுற்றிலுமிருந்த மாளிகை வீடுகளின் வெளிச்சப் புள்ளிகள் சட்டென மௌனித்து மரணித்தன!


      "ஏற்கனவே வெளுத்து வாங்கும் மழை நின்ற பாடில்லை.... பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் மழை வெள்ளத்தை எப்படி கடப்பது எனத் தெரியாமல் திணறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், இன்னும் கூடுதலாய் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் கரண்ட் வேற நின்னு போச்சு.... செல்போனுலயேயும் சரியா சிக்னல் கிடைக்க மாட்டேங்குது! அது வேலை செய்தாலும் பரவாயில்லை! யாரையாவது வரவளைச்சு, இங்கிருந்து போகலானு நினைச்சா அதுவும் முடியல.... என்ன செய்யறதென ஒன்னும் புரியலையே....! ஒவ்வொரு வருஷமும் இதே பொழப்பா தான் இருக்கு! இதுக்கு ஒரு முடிவு எப்போ வருமோ? பலமுறை தொலைக்காட்சியில் மழை வெள்ளத்தில் மாட்டிக்கொண்டவங்களின் சிரமங்களை பார்த்து பரிதாபப்பட்டு இருக்கிறேன்! இப்ப என்னோட நெலமையும் அதுபோல ஆயிருச்சே!" என தனக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தான் அய்யனார்! 


      மாலையில் வேலை விட்டு வந்து கொண்டிருந்த இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தொடர் அணி வகுப்பில் அந்தச் சாலை முழுவதும் நிரம்பி வழிந்தது! கூடவே மழை நீர் வெள்ளத்தில் அவை ஏரியில் மிதக்கும் படகுபோல் மிதந்து கொண்டிருந்தது! திடீரென மின்சாரம் போனதால் அந்தச் சாலை முழுவதும் இருளின் பெருத்த நெருக்கடியில் சிக்கித் தவித்தது! ஒருபுறம் விடாத மழையென்றால், மறுபுறம் அந்த மழையின் காரணமாக சாலை முழுவதும் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்த மழை வெள்ளம் சாலையில் பயணித்தவர்களின் வேகத்தை மட்டுப்படுத்தியிருந்தது! இரண்டு சக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்த பல பேர் திடீரென தங்களது வாகனம் நின்றுவிட்டதால் அதனை தள்ளிக் கொண்டு செல்ல முயன்ற போது, மழை வெள்ளத்தின் காரணமாக பெறும் போராட்டத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தார்கள்! ஒரு சில வாகனங்களிலிருந்த சிறு குழந்தைகளும் மழை நீரைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்! இரு சக்கரத்தில் பயணித்துக் கொண்டிருந்த ஆண்களை முந்திக்கொண்ட இளம் குமரிகள் தங்களது இரு சக்கர வாகனத்தை சடுதியாய் விரட்டிக்கொண்டு சென்றபோது, பக்கத்தில் சென்றவர்கள் மீது சேற்றை வாரி இறைத்துக் கொண்டபடி சென்று கொண்டிருந்தார்கள்! திடீரென தங்கள் மீது சேறு தெரித்ததும் கோபத்தின் உச்சியில் தங்களைக் கடந்து சென்றவர்களை வசை பாடிக் கொண்டிருந்தார்கள் சில வாகன ஓட்டிகள்! இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டே நிழற்குடையில் நின்று கொண்டிருந்தான் அய்யனார்! 


     ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த மழை சற்று தணிந்து தூறலாய் தூவிக்கொண்டிருந்தது! நிழற்குடையில் அமர்வதற்குகென அமைக்கப்பட்டிருந்த இருக்கையின் மேலேறி நின்றபடி இத்தனை நேரமாக பார்த்துக் கொண்டிருந்த அய்யனார் அருகே எங்கிருந்தோ அடித்துப் பிடித்து ஓடி வந்த முதியவர் அங்கிருந்த மற்றொரு இருக்கையின் மீதேறி நின்று கொண்டு தனது நனைந்த தலையை பேண்ட் பாக்கெட்டில் இருந்து நனைந்த கைக்குட்டையை எடுத்துப் பிழிந்து தலையை துவட்டிக் கொண்டிருந்தார் அந்த முதியவர்! 


     சாலையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அய்யனாரைப் பார்த்து "என்ன தம்பி! ரொம்ப நேரமா இங்கேயே இருக்கியா? ரொம்ப சலிப்போட சாலையை பார்த்துகிட்டு நிக்கிறியே....!"என்றார் பெரியவர்! 


     ஐம்பது வயதினை கடந்து ஒடிசலான தேகத்திற்கு கட்டம் போட்ட சட்டை, கருப்பு பேண்டிற்குள் உடலை நுழைத்திருந்தார்! விரக்தியை ஏந்திக்கொண்ட கண்கள்! உழைத்து உரம் ஏறிய தோள்கள்! காய்த்து போன கைகள்! உழைப்பதற்கு பிறந்த உடல்! வாழ்க்கையின் பல துயரங்களை எதிர்கொண்ட வைராக்கியம் அத்தனையும் கொண்டவராய் முதியவர் சாத்தப்பன்!


      முதியவர் சாத்தப்பனை ஒரு கணம் மேலும் கீழும் வாகனத்தின் வெளிச்சத்தில் உற்றுப் பார்த்துவிட்டு "ஆமாம் ஐயா!" என்றான் அய்யனார்!


     "தம்பிக்கு இப்படி மாட்டிக்கிட்டது இதுதான் முதல் முறையோ....?'


    "எப்படி அய்யா? பக்கத்துல இருந்து பார்த்தது மாதிரி சரியா சொல்றீங்க?"


     "உன்னோட உடுப்புகளும் சாலையை பாக்குற விதமும் உனது செயல்பாடும் எல்லாம் சேர்ந்து சொல்லாமல் சொல்லுது தம்பி!"


     "பார்த்தவுடனேயே இவ்வளவு என்கிட்ட இருந்து தெரிஞ்சுக்கிட்டிங்களா...? எனக்கு ஆச்சரியமா இருக்கு!"


     "இதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு தம்பி! வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடம் அத்தனையும்! அவ்வளவு சுளுவா எல்லாத்தையும் மறந்துட முடியுமா என்ன? இது ஒரு பெரிய விஷயமே இல்ல தம்பி!"


     "எப்பவுமே நாங்க தான் இது மாதிரி பேசுவோம்! இப்ப நீங்க பேசறத பார்த்து எனக்கு அப்படித் தோணுச்சு ஐயா!"


      "நீ சொல்றது எனக்கு புரியல தம்பி! நீங்க பேசுவீங்க அப்படின்னா என்ன?" குழப்பத்தில் கேட்டார் முதியவர்   சாத்தப்பன்!


     "அடடே! தவறு என்னோடது தான்! நான்தான் தெரியாமல் கூறிவிட்டேன்! என்னைப் பற்றிய விவரங்கள் உங்களுக்கு தெரியாது அல்லவா? "


      அய்யனார் கூறுவதை கவனித்துக் கொண்டே தன் தலையை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டிருந்த முதியவர் சாத்தப்பன் "உன்னைப் பற்றி கொஞ்சம் கூறேன் தெரிந்து கொள்கிறேன்! எப்படியும் சாலையில் ஓடும் நீர் குறையாமல் இங்கிருந்து போகப் போவது கிடையாது! அப்படி இருக்கும் இந்த நேரத்தை நாம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் ஆகிக்கொள்வது ஒரு வகையில் நல்லது தான்! நான் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு சாதாரண ஊழியன்! அவ்வளவுதான் என்னைப் பற்றி சொல்லிக் கொள்ளும்படி வேறு ஒன்றும் இல்லை! நீ விரும்பினால் உன்னை பற்றிக் கூறு தம்பி!"என்றார்!


      "சென்னையின் குற்றப்பிரிவு காவல் அதிகாரி நான்!"


     "தம்பி! நீ யாரென்று தெரியாமல் பேசி விட்டேன்!" என்றார் முதியவர் சாத்தப்பன்! 


     "நீங்கள் தவறாக எதுவும் பேசவில்லை ஐயா!'


     "உன்னைப் பார்த்ததுமே தெரிந்து கொண்டேன்! கண்டிப்பாக ஏதோ ஒரு உயர்ந்த பணியில் இருப்பாய் என்று யோசித்தேன்! ஆனால் நிச்சயமாக காவல்துறை அதிகாரியாக நீ இருப்பாய் என நான் நினைக்கவில்லை!"


      முதியவர் சாத்தப்பனை ஒருமுறை பார்த்து விட்டு மீண்டும் மழை நீர் வழிந்து ஓடும் சாலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அய்யனார்!


        "இந்த பக்கம் ஏதாவது துப்புத் துலக்க வந்தியா தம்பி?"


       "இல்லைங்க ஐயா! எனது  பள்ளிக்கூட நண்பன் ஒருவனை பார்க்க வந்தேன்! அவன் வீட்டில் இல்லை! வேறு எங்கோ போய் விட்டான்! சரி மீண்டும் ஆபீஸ்க்கு போகலாம் நினைச்சு கிளம்பிக் கொஞ்ச தூரம் வந்த பிறகு என்னோட பைக் திடீர்னு நின்னு போச்சு! வேற வழியில்லாம அதைத் தள்ளிக் கொண்டு போய் பக்கத்துல இருக்குற மெக்கானிக் ஷாப்ல விட்டுட்டு, சரி பொடி நடையா கொஞ்சம் தூரம் நடக்கலாமென நினைச்சு நடந்துகிட்டு இருந்தேன்! அப்போதுதான் இந்த மழையில சிக்கிக்கிட்டேன்!" எனக் கூறிக் கொண்டே நிழற்குடையிலிருந்து வலிந்து கொண்டிருந்த மழை நீரினைக் கையில் பிடித்து விளையாடிக்கொண்டே கூறினான் அய்யனார்! 


      "உனக்கென தனி வாகனம் இருக்குமே தம்பி! எப்போதும் அதுல தானே வருவீங்க! அது என்ன ஆச்சு? உன் கூட யாரும் வரவில்லையா?" தனது தலையை கைக்குட்டையால் துடைத்தவர், கைக்குட்டையின் நீரினைப் பிழிந்துவிட்டு மீண்டும் தன் தலையை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே கூறினார் சாத்தப்பன்! 


      "இருக்கிறது ஐயா! சொந்தப் பணிகளுக்கு அதனை நான் பயன்படுத்துவது இல்லை! " என அவன் கூறிய போது சாலையில் வழிந்தோடிக் கொண்டிருந்த நீரின் அளவு குறைந்து மட்டு பட்டிருந்தது! அதோடு தூறலும் ஒரு வழியாய் விடைபெற்றுச் சென்றிருந்தது! 


      அது வரையில் ஊர்ந்தும் மிதந்தும் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மழைநீரின் அளவு குறைந்ததும் வேகம் எடுக்கத் தொடங்கிவிட்டன! சுற்றிலும் பரவி கடந்த இருளை கிழித்துக்கொண்டு வாகனத்தின் ஒளிகளின் தீண்டலில் அந்தச் சாலை முழுவதும் திருவிழாத் தீபத்தின் வெளிச்சத்தை பற்றிக் கொண்டிருந்தது! 


      தனது பாக்கெட்டிலிருந்து அலைபேசியை எடுத்து உயரே தூக்கி முன்பு அழைக்க நினைத்த அதே எண்ணை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்ற போது சிக்னல் சரியாக கிடைக்காததால் டொய்ங் என தொடர்பு துண்டித்துக் கொண்டது! கோபத்தின் நெருப்புகளை விழிகளில் ஏந்திக்கொண்டு வெறுப்போடு சாலையை பார்த்தவன் பொறுத்தது போதுமென இறங்கி நடக்க முற்பட்டான் அய்யனார் !


        "தம்பி நானும் வருகிறேன்! நீ போகும் வழியில் தான் என் வீடும் உள்ளது!"என கூறிக்கொண்டே முதியவர் சாத்தப்பன் அய்யனாரைப் பின் தொடர்ந்தார்! 


       சாலையில் விரைவிக்  கிடந்த மொத்த குப்பைகளையும் அள்ளி அணைத்தபடி அந்த தெருவோரத்தின் சாக்கடையில் குதித்துக் கொண்டிருந்தது மழை நீர்! 


       சாலையின் இருமருங்கிலும்  பாதசாரிகள் நடப்பதற்காக பதித்து விரைவிக் கிடந்த சிமெண்ட் சாலையில் இருவரும்  நான்கைந்து தெருவினை கடந்து இருபது நிமிடம் நடந்திருந்தபோது மழையினால் போயிருந்த மின்சாரம் உயிர் பெற்று அங்கிருந்த வீடுகளின் விளக்குகள் பூக்கத் தொடங்கியருந்தது! இருவரும்  பேசிக் கொள்ளாமல் வெகு நேரமாய் நடந்து கொண்டிருந்தார்கள்!  அப்போது தெருவின் இடது புறத்தில் குத்தீட்டிக் கோபுரமாய் நீண்டு உயர்ந்திருந்த பத்து மாடிக் குடியிருப்பின் உள்ளேயிருந்து "வீல்" லென்ற பெருத்த அலறல் அந்தத் தெருவை கிழித்துக்கொண்டிருந்தது! 

(தொடரும்.....02)


       



     


No comments:

Post a Comment