Thursday, 6 March 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 87

   🌾87. ஆலயத்தில் பொற்கொடி செய்த யுத்தம்🌾


       இருள் வானைக் கிழித்துக்கொண்டு பூமியில் தோன்றிய மின்னலாய் வெடுக்கென, இடையைச் சுண்டிக் கொண்டு அசைந்தாடி வரும் தேர் போல், கங்கைகொண்ட சோழபுரத்தின் நடு நாயகமாய் வீற்றிருக்கும், ஒப்பில்லாத இறைவன் சிவபெருமானின் ஆலயத்திற்குள் அடியெடுத்து வைத்திருந்தாள் பொற்கொடி! 


       முதலாம் இராஜேந்திர சோழர் அவர்களால் எம்பெருமான் சிவனுக்கு எடுத்த கங்கைகொண்ட சோழீஸ்வரர் ஆலயத்தில், அந்த நள்ளிரவு வேளையிலும் கூட்டம் அலைமோதி கொண்டிருந்தது. இரவு நேர வழிபாட்டின் உற்சவம் நடந்து கொண்டிருந்தது! எப்பொழுதும் விழாக் கோலமாய் இருக்கும் தலைநகரம் அன்றும் அப்படித்தான் சற்றும் குறைவில்லாமல் மக்கள் திரளில் மிதந்து கொண்டிருந்தது! 


      எம்பெருமான் சிவனை மனதார தரிசித்து விட்டு மக்கள் கூட்டம் கூட்டமாய் குதூகலமாய் வெளியேறிக் கொண்டிருந்தார்கள்! இன்னும் சிலரோ ஆலயத்தில் இருந்த சிங்கமுக கிணற்று நீரை அள்ளி தலையில் தெளித்துக் கொண்டு ஏதேதோ பேசிக் கொண்டு இருந்தார்கள்! அலை மோதிய கூட்டத்தை சோழக் காவலர்கள் முடிந்த மட்டும் ஒழுங்குபடுத்தி வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள்! 


      எம்பெருமானை தரிசித்து விட்டு வெளியேறி செல்லும் ஒவ்வொருவரும் ஆலயத்தின் கோபுரத்தை எண்ணி வியந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்! அவர்களில் ஒரு சிலர் உரத்த குரலிலும் பேசத் தொடங்கி இருந்தார்கள்! 


      "மாமன்னர் இராஜேந்திர சோழர் எத்தனை அற்புதமான கோயிலை சமைத்து உள்ளார்! பார்க்கப் பார்க்க அத்தனை வியப்பாக உள்ளது! நள்ளிரவைத் தாண்டி விட்ட பொழுதும் இன்னும் சிறிது நேரம் இருக்கலாம் போல் தோன்றுகிறது!" என கோபுரத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே கூறினார் கூட்டத்தில் இருந்த பெரியவர்!


       "மாமன்னர் இராஜேந்திர சோழர் அற்புதமாக மட்டும் கோயிலை கட்டவில்லை! தான் கட்டிய கோவில் எந்த விதத்திலும் தன் தந்தையார் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலை விட பெரிதாக எழுந்து விடக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தவர்! தந்தைக்கு மிஞ்சிய புகழ் தேவையில்லை என நினைத்தார் போலும்! பெற்றெடுத்தால் அவரைப்போல் மகனல்லவா பெற்றெடுக்க வேண்டும்!" என பெருமிதமாக பெரியவரின் அருகில் இருந்த அவரது நண்பர் கூறினார்! 


       "நீ சரியாகத்தான் கூறினாய்! முதலில் இந்த கோயிலை கட்டும்போது தஞ்சை பெரிய கோயிலை விட பெரிதாக கட்ட வேண்டும் என்று தான் இதன் தலைமை பொறியாளர் திட்டமிட்டு இருந்தாராம்! அதன்படியே மிக அகலமாகவும் உயரமாகவும் கட்டத் தொடங்கி விட்டார்! இந்த விவரம் மாமன்னர் இராஜேந்திர சோழருக்கு தெரிந்திருக்கவில்லை! அதனை அறிந்ததும் அவர் கோயிலை பார்த்தபோது அடிக்கட்டுமானம் முழுவதும் கட்டி எழுப்பப்பட்டு விட்டது அறிந்தவர் இனி மேற்கொண்டு கட்டுமானத்தை மாற்ற இயலாது! வேண்டுமானால் உயரத்தை குறைக்கலாம் என எண்ணியவர் அதன்படியே கோவிலின் உயரத்தை குறைத்து கட்டச் செய்து விட்டார் என எனது பாட்டனார் கூறக் கேட்டிருக்கிறேன்! மாமன்னர் ராஜேந்திர சோழர்  மட்டும் தடுத்திராவிட்டால் இந்த கோவில் தஞ்சைப் பெரிய கோயிலைவிட உயரத்தில் மிஞ்சி இருக்கும்! இதனை இப்போது நினைத்தாலும் அவ்விரு மாமன்னர்களை எண்ணி பூரிக்கத் தோன்றுகிறது! அப்படி இருந்த தேசம் இன்று எப்படியோ குட்டிச் சுவராய் போய்க்கொண்டிருக்கிறது! "என வருத்தத்தில் கூறினார் பெரியவர்! 


       "எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு இருக்கும்! அதற்கான நேரம் காலத்தில் நடந்தே தீரும்! வருத்தப்படாமல் இருங்கள்!"என்றார் அவரது நண்பர்! 


     "சித்திரை முழு நிலவு கடந்தும் கோவிலுக்கு வரும் கூட்டம் குறைந்த பாடு இல்லையே? இரவும் பகலும் பாராமல்  கூட்டம் அலை மோதிக் கொண்டு உள்ளது! "என்றார் பெரியவர்! 


      அப்போது கூட்டத்தில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது! இன்னதென்று அறியாமல் அனைவரும்  விழித்துக் கொண்டு இருந்தார்கள்! அதுவரையில் ஒரே சீராக வெளியேறிக் கொண்டிருந்த மக்கள் கூட்டம் திடீரென ஏதோ பெரும் பிரளயம் உருவாகிவிட்ட பயத்தில் உறைந்து போய் நின்று கொண்டிருந்தார்கள்! நெடும் கூட்டமாக இருந்ததால் தொலைவில் இருந்த சோழ காவலர்கள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைவதற்கு பெரும் பாடாய்ப் போய்விட்டது! ஒரு வழியாக அடித்துப் பிடித்து உள்ளே நுழைந்த காவலர்கள் அங்கு உள்ள காட்சியைக் கண்டு என்ன செய்வது என்று தெரியாமல் சிலை போல் நின்று கொண்டிருந்தார்கள்! 


      எம்பெருமான் ஆலயத்துக்குள் புள்ளி மானே தோற்கடிக்கும் லாவகத்தில் தாவிக்குதித்து ஓடிக்கொண்டிருந்த பொற்கொடி திடீரென விழிகளை சுழற்றிக்கொண்டு நின்று விட்டாள்! ஆலயத்துக்குள் வழிபாட்டுக்கு வந்திருந்த கூட்டத்தை விளக்கிக் கொண்டு முகத்தை கருப்பு துணியால் மறைத்து கட்டிக்கொண்டு பத்திற்கு மேற்பட்ட தடியர்கள் பொற்கொடியைச் சுற்றி வளைத்து விட்டார்கள்! 


      புள்ளிமான் தானே எளிதில் சாய்த்து விடலாம்! கணநேரம் போதும் காரியத்தை செயலாற்றி விடலாம் என நினைத்துக் கொண்டு பொற்கொடியின் பூங்கரத்தை தொட முயன்றவன் துடித்துக் கொண்டு கீழே விழுந்து புரண்டு கொண்டிருந்தான்! 


       மானின் துள்ளல் தோற்கும் வண்ணம் பொற்கொடிவிட்ட உதையில் கோவிலின் வளாகத்தில் புரண்டு கொண்டு இருந்தான் முரடன்! இத்தனைக்கும் அவள் நின்ற இடத்தில் இருந்து சிறிதும் நகர்ந்தாள் இல்லை! எப்போது காலை உயர்த்தி முரடனை சாய்த்தாள் என அங்கிருந்த கூட்டம் வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தது! அது வரையில் அலட்சியமாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற முரடர்கள் கையில் இருந்த வாளை உருவி எடுத்துச் சுழற்றத் தொடங்கினார்கள்! கையில் எந்தவிதமான ஆயுதமும் இன்றி பூவை கொய்ய முயலும் தளிர்க்கரத்தை உயர்த்தியபோது, எங்கிருந்தோ அவளது தோழி அல்லி தேங்காய் ஒன்றை எடுத்து வீசியிருந்ததை பற்றிக்கொண்டு தனது இடது பக்கமாக நெருங்கிய சதிகாரனின் தலையில் படீரென தாக்கியதும் அவனது மண்டை பிளந்து கீழே விழுந்தான்! சட்டெனத்துள்ளி அவனது உடைவாளை எடுத்துக் கொண்டு கரகரவென வாளைச் சுழற்றத் தொடங்கி விட்டாள்! 


        கோவில் வளாகத்தில் வழிபாட்டிற்கு வந்திருந்த அத்தனை மக்களும் வியப்போடு அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த சண்டைகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள்! சோழ வீரர்கள் என்ன செய்வது என்று புரியாமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்! ஒரு சில வீரர்கள் வாள்களை உருவிக்கொண்டு முன்னால் வந்தபோது பொற்கொடி தனது விழிகளாலே அவர்களை விலகிச் செல்லும் படி கட்டளையிட்டிருந்தாள்! அவளது விழி அசைவுக்கு பணிந்து தூரத்தில் நின்று சண்டையை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள்! கேவலம் பெண் தானே என நினைத்துக் கொண்டு சண்டையிடத் தொடங்கிய சதிகாரர்கள் பொற்கொடியின் லாவகமான ஒவ்வொரு வாள் அசைவையும் பார்த்து வாயை பிளந்து விட்டார்கள்! சதிகாரர்களும் தங்களது வித்தைகளை எத்தனையோ காட்டி முயன்றும் அவ்வளவும் பொற்கொடியின் லாவகமான தாக்குதலில் செல்லுபடி ஆகாமல் போய்விட்டது! ஏற்கனவே வழிபாட்டை முடித்து வந்து விட்டிருந்த மக்களோடு சேர்ந்து புதிதாக கோவிலுக்கு வந்தவர்களும் குழுமி இருந்ததால் கூட்டத்தில் அவர்கள் பேசியது கடலே கோவிலுக்குள் வந்தது போல் இருந்தது! இத்தனைக்கிடையிலும் தன்னை தாக்கிய சதிகாரங்களில்  நால்வரை வெட்டி சரித்திருந்தாள் பொற்கொடி! கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்த சதிகாரர்களுக்கு கையும் காலும் தனித்தனியாக வெட்டப்பட்டு கிடந்தன! தனது நண்பர்களுக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி பெரும் கோபத்தோடு தாக்குதலை தொடர்ந்து கொண்டிருந்தார்கள் சதிகாரர்கள்!  தொடர்ந்து நிகழ்ந்த தாக்குதலில் அடுத்தடுத்து தடால் தடாலென கீழே சரிந்து விழுந்த தலையற்ற முண்டங்களை கண்டு ஏதோ வானில் இருந்து பூமிக்கு வந்த காளியின் ருத்ர தாண்டவம் இங்கு அரங்கேறி கொண்டுள்ளது என  அங்கு கூடியிருந்த மக்கள் எண்ணிக் கொண்டார்களோ என்னவோ மிகுந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் குதிக்கத் தொடங்கி விட்டார்கள்!


       "இப்படித்தான் விடாதே! நன்றாக வேண்டும் இவர்களுக்கு! தனியாக உள்ள பெண்ணிடம் வாலாட்ட நினைத்தால் என்ன நடக்கும் என்று இவர்களுக்கு இன்று புரிந்து இருக்கும்! " கூட்டத்தில் இருந்த ஒரு பெண்மணி கூறினார்! 


       "என்ன துணிவிருந்தால் மாதண்ட நாயகரின் தங்கை மேலே கை வைக்க நினைத்து இருப்பார்கள்? இவர்களுக்கு எத்தனைத் துணிச்சல்? அதுவும் தலைநகரில் உள்ள கங்கை கொண்ட சோழீஸ்வரத்திலேயே இதனைச் செய்யும் துணிச்சல் எப்படி வந்தது இவர்களுக்கு? இந்த தேசத்தில்ம என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? இத்தனைக்கு பிறகும் இவர்களை விட்டு வைத்தால் நமது கதி என்ன?"என்றார் கூட்டத்தில் இருந்த மற்றொரு பெண்மணி!


       "விடாதே அவர்களை வெட்டிக் கொள்ளுங்கள்! பெண்கள் மேல் கை வைத்தால் என்ன நடக்கும் என்று இவர்களுக்கு தெரியட்டும்! இத்தனை காலமாக பொறுத்து இருந்ததெல்லாம் போதும்! இனியும் இந்த அநீதிகளை சகிக்க முடியாது! இதற்கு  ஒரு சரியான தீர்வு கண்டாக வேண்டும்!" முன்பு முதலில் கூறிய அதே பெண்மணி தொடர்ந்து கூறினார்!


        "உன் பின்னால் வருகிறான் பார்! "என பொற்கொடியை பின்னால் தாக்க முயன்ற சதிகாரனை சுட்டி காண்பித்தார் இரண்டாவது பெண்மணி! 


      தன் கையில் உள்ள வாளை கரகரவென சுழற்றி மீதமிருந்த அத்தனை கயவர்களையும் வெட்டி சரித்து விட்டாள் பொற்கொடி! சிலருக்கு கையும், இன்னும் சிலருக்கு காலும் வெகு சிலருக்கு தலையும் போயிருந்தது! தன்னைச் சுற்றி ஒரு கணம் நோட்டமிட்டாள் பொற்கொடி! கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே வந்த அல்லி அப்படியே பொற்கொடியை தழுவி கன்னத்தில் முத்தமிட்டாள்! 


        அங்கு திரளாக கூடியிருந்த மக்கள் அனைவரும் பெரும் கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடி தீர்த்து விட்டார்கள்! எப்போது சண்டை முடியும் என காத்துக் கொண்டிருந்த சோழ காவல் வீரர்கள் சிறிதும் தாமதிக்காமல் அங்கு கடந்த சதிகாரர்களை மள  மளவென அங்கிருந்து அப்புறப்படுத்த தொடங்கினார்கள்! இன்னும் சில காவல் வீரர்கள் எங்கிருந்தோ நீரும் துடைப்பமும் கொண்டு வந்து அந்த இடத்தை சுத்தம் செய்ய தொடங்கி விட்டார்கள்! பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சோழ வீரர்களை கவனித்துக் கொண்டே இருந்த மக்கள் கூட்டம் பொற்கொடியை தூக்கி கொண்டாடத் தொடங்கி விட்டது!  மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்துக் கொண்டிருந்தார்கள்! 


       சிறிது நேரத்தில் தனது கை கால்களை சுத்தம் செய்து கொண்டு கங்கைகொண்ட சோழீஸ்வரர் ஆலயத்திற்குள் நுழைந்து விட்டிருந்தாள் பொற்கொடி! அவளது நிழலாக அல்லி பின் தொடர்ந்து கொண்டிருந்தாள்! சோழ காவல் வீரர்கள் ஆலயத்தின் வாசலில் கைகளில் வேல்களை தாங்கிக்கொண்டு நின்று கொண்டிருந்தார்கள்! ஏற்கனவே வழிபாடு முடித்து விட்டிருந்த மக்களும் புதிதாக வழிபாட்டுக்கு வந்திருந்த மக்களும் ஆலயத்துக்குள் வந்து  எம்பெருமான் சிவனிடம் மனம் உருகி வேண்டிக் கொண்டிருந்தார்கள்! 


      டனர் டனார்ரென கோவிலின் மணி ஒழிக்க தொடங்கியது! அதனைத் தொடர்ந்து எம்பெருமானை வழிபட்டு விட்டு மீண்டும் வாசல் நோக்கி அல்லியுடன் நகர்ந்து  விட்டிருந்தாள் பொற்கொடி!


      அதற்கிடையில் பொற்கொடியும் அல்லியும் பயணிப்பதற்காக இரண்டு குதிரைகளை எங்கிருந்தோ சம்பாதித்துக் கொண்டு வந்து விட்டிருந்தார்கள் காவலர்கள்! இருவரும் குதிரைகளின் மீது ஏறியவர்கள் அரண்மனை நோக்கி பயணிக்க தொடங்கி விட்டார்கள்! சோழ காவல் வீரர்களும் அவர்களுக்கு பாதுகாப்பாக பின் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்! 


      அதனைத் தொடர்ந்து அரண்மனையில் பெரும் விபரீதம் நடந்தேறியது! 


(தொடரும்..... அத்தியாயம் 88 ல்)


No comments:

Post a Comment