Sunday, 9 March 2025

இராஜமோகினி யாழிசைசெல்வா அத்தியாயம் 89

 

🌾89. முகமூடி மனிதன்🌾

        மாதண்ட நாயகரின் அரண்மனை மாளிகைக்குள் நள்ளிரவு வேளை தொடந்த பின்பு முகமூடி அணிந்த உருவம் ஒன்று சுற்றுச்சுவரைத் தாண்டி உள்ளே குதித்து விட்டிருந்தது! விளக்குகளால் அவ்வளவாக பரவியிராத இருளைத் துணையாக கொண்டு அவ் உருவம் மெல்ல நடந்து கொண்டிருந்தது ! அவ்வபோது தன் விழிகளை சுழற்றி அங்கும் இங்கும் எச்சரிக்கையோடு பார்த்துக் கொண்டே மாளிகைக்குள் நுழைந்து விட்டிருந்தது! அங்கு எண்ணற்ற அறைகள் நிரம்பிக் கிடந்தன! ஒவ்வொரு அடியையும் மிக கவனமாக எடுத்து வைத்து கடைக் கோடியிலிருந்த அறையை நோக்கி நகர்ந்து விட்டிருந்தது! ஒரு கணம் மற்ற அறைகளை நோக்கிய அவ்உருவம்  தனக்குள் ஓர் தீர்மானத்திற்கு வந்திருக்க வேண்டும். அதன் காரணமாக தன் தலையை அப்படி இப்படியும் ஆட்டிக் கொண்டு நடந்து கொண்டிருந்தது! இரவு நேர காவலர்கள் தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்! மாதண்ட நாயகரின் மாளிகை வாசல் வரை வந்து ஒரு கணம் இரண்டு காவலர்கள் பார்த்துவிட்டு திரும்பி சென்று கொண்டிருந்தார்கள். வழக்கமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காவல் பணி அது! முறை வைத்துக் கொண்டு மாறி மாறி குறித்த இடைவெளியில் மாளிகையை காவல் காத்து வந்து கொண்டிருந்தார்கள்!  காவலர்களின் வருகையை கவனித்துவிட்ட முகமூடி உருவம் அங்கிருந்த அடர்ந்த முல்லைக்கொடியின் பின்னால் தன்னை புதைத்துக் கொண்டது! காவலர்கள் திரும்பிச் சென்றதும் கடைக்கோடி அறையை நோக்கி மீண்டும் நகர்ந்தது முகமூடி உருவம்!

      இரவு நேரத்தின் குளுமைகளை அப்படியே அள்ளி வீசிக்கொண்டிருந்தது இளம் காற்று! கடைக்கோடி  அறையின் சாளரத்தின் மேல் போட்டிருந்த வண்ணமயமான வேலைப்பாடுடன் கூடிய திரைச்சீலைகள் காற்றில் படபடவென அடித்துக் கொண்டிருந்தன! அந்த அறையின் எதிர் திசையில் அமைந்திருந்த நந்தவனத்தில் மலர்ந்து மனம் பரப்பிக் கொண்டிருந்த பூக்களின் வாசம் காற்றில் கலந்து கடைக்கோடி அறையை நோக்கி வீசிக் கொண்டிருந்தது! இயற்கையின் இன்பமான நறுமணத்தின் வாசனையை பருகிய படி அந்த அறை முழுவதும் நிரம்பிக் கிடந்தது! நந்தவன மலர்களுக்கு நடுவே சிறிய பொய்கை ஒன்று அமைந்திருந்தது! அவற்றின் கரைகளைச் சுற்றி பரவி வளர்ந்து கிடந்த மலர்க்கொடிகள் அங்கிருந்த மரங்களின் மீது படர்ந்து நந்தவனத்திற்கு புது அழகைக் கொடுத்துக் கொண்டிருந்தது! மலர்களில் தேங்கி கொடிகளில் தவழ்ந்து நிலமகளை முத்தமிட்டு கொண்டிருந்த பனித்துளிகளை நேசத்தோடு வாரி இறைத்து கொண்டிருந்தது தென்றல் காற்று! அப்போது அங்கிருந்து கிளம்பிய தென்றல் காற்று மலர்களின் வாசத்தோடு பனித்துளிகளை ஏந்தி கொண்டு கடைக்கோடி அறையின் சாளரத்தை கடந்து உள்ளே சுழற்றி வீசியது!

      அழகான வேலைப்பாடுகளுடன் அமைந்த மஞ்சத்தில் உறங்கிக் கொண்டிருந்தாள் பொற்கொடி! வானில் உலவிக் கொண்டிருந்த வெண்ணிலவின் தண்ணொளி இந்த அறையில் துளித்துளிகளாய் மலர் தோரணம் செய்து கொண்டிருந்தது! நீண்ட அந்த அறையின்  திறந்து கிடந்த சாளரக் கதவுகளின் வழியாக முகமூடி உருவம் சத்தமின்றி எகிரிக் குதித்திருந்தது! மஞ்சத்தை நோக்கி இடையிலிருந்து உருவிய வாளுடன் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது! பகல் முழுவதும் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து ஆட்டம் போட்டதால் மிகுந்த கலைப்பில் உறங்கிக் கொண்டிருந்தாள் பொற்கொடி! 

      தனது கையில் உள்ள வாளை ஓங்கி பொற்கொடியின் தலையை துண்டாக வெட்டி வீச முகமூடி உருவம் முற்பட்டபோது அசதியில் புரண்டு படுத்தாள் பொற்கொடி! வெண்ணிலவின் ஒளி கீற்று ஒன்று அவளது வதனத்தை தொட்டதும்  அவளது முகத்தாமரையின் அழகில் ஒரு கணம் மயங்கி நின்று விட்டான் முகமூடி மனிதன்! அப்போது நந்தவனத்தின் பொய்கையிலிருந்து மிதந்து வந்த தென்றல் காற்றோடு பனித்துளிகள் சேர்ந்து சில்லென பொற்கொடியின் வதனத்தை தொட்டுச் சென்றது! அழகிய வருடலில் சட்டென முளித்தவள் எதிரே நீண்ட வாளோடு மர்ம முகமூடி மனிதன் நிற்பதை உணர்ந்ததால் கணமும் தாமதிக்காமல் மஞ்சத்தில் புரண்டு அப்புறமாய் குதித்து அவளது பாதுகாப்புக்கு வைத்திருந்த அழகிய வாளை கையில் ஏந்திக் கொண்டு முகமூடி மனிதனோடு தாக்குதலுக்கு தயாரானாள்! 

      சட்டென நடந்து விட்ட ஏமாற்றத்தில் முகமூடி மனிதன் மஞ்சத்தை தாண்டி உருவிய வாளோடு பொற்கொடி மீது பாய்ந்து விட்டான்! அது வரையில் வெண்ணிலவின் துளித்துளியான புள்ளிக்கோல ஒளிகள் நீண்டு  வளர்ந்து விட்டிருந்தது! வெண்ணிலவின் ஆதிக்கத்தில் அந்த அறை முழுதும் நிரம்பி வழிந்தது! முகமூடி மனிதனின் செயல்களை நன்கு கவனித்துக் கொண்டிருந்த பொற்கொடி அவனது தாக்குதலை அனாயசமாக எதிர்கொண்டாள்! தனது அழகிய வாளைக் நீட்டிக் கொண்டு முகமூடி மனிதனை தாக்கிக் கொண்டிருந்தாள் பொற்கொடி! அடுத்தடுத்து விரைவான தாக்குதலின் ஒலிகளால் அந்த அறை முழுவதும் எதிரொலித்தன! திடீரென பொற்கொடி இருந்த மாளிகையில் வாள் சண்டை அரவம் கேட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சோழக் காவல் வீரர்கள் விரைந்து வரத் தொடங்கியதை அவர்களின் பாத குரடுகளின் ஒலியிலிருந்து அறிய முடிந்தது! சட்டென முடிய வேண்டிய நிலவரம் பெரும் கலவரத்தில் போய்க் கொண்டிருப்பதை அறிந்து கொண்ட முகமூடி மனிதன் தன் தாக்குதலின் போக்கை மாற்றிக்கொண்டு விரைந்து வேகமாக பொற்கொடியை தாக்கிக் கொண்டிருந்தான்! அவனது வாளின் சுழற்சிக்கு ஏற்ப பொற்கொடியும் அவனது தாக்குதலை தடுத்து பதில் தாக்குதல் தொடுத்துக் கொண்டிருந்தாள்! ஏறக்குறைய அரை நாழிகையை தொட்டிருந்த பொழுது சோழக் காவல் வீரர்கள் அவளின் அறை வாசலில் வந்து விட்டிருந்தார்கள்! 

      அதற்கிடையில் எங்கிருந்தோ எடுத்து வந்திருந்த விளக்கினை கொண்டு அங்கு உள்ள மற்ற விளக்குகளை சோழத்தின் காவல் வீரர்கள் ஏற்றி விட்டிருந்ததால் அவற்றின் வெளிச்சம் எங்கும் வியாபித்து இருந்தது! இப்பொழுது முகமூடி மனிதனை நன்கு பார்க்க முடிந்ததால் பொற்கொடி தனது தாக்குதலை விரைவுபடுத்தி கொண்டிருந்தாள்! சோழ காவல் வீரர்களின் வருகையும் அதனைத் தொடர்ந்து ஏற்றப்பட்ட விளக்குகளின் ஒளியும் பொற்கொடிக்கு அளித்த அதிக உத்வேகத்தையும் கண்ட முகமூடி மனிதன் தாக்குதலை மேலும் நீட்டிக்க விரும்பாமல் அங்கிருந்து தப்பியோடும் மனநிலையில் இருந்தான் போலும்! அவனது விழிகள்  எகிறி குதித்து உள்ளே வந்திருந்த சாளரக் கதவுகளை பார்த்துக் கொண்டிருந்தது! முகமூடி மனிதனின் விழிகள் செல்லும் திசையை கவனித்து விட்டிருந்த பொற்கொடி தனது விழி அசைவால் சோழ காவல் வீரர்களை சாளரத்தை நோக்கி செல்லும்படி செய்திருந்தாள்! அடுத்தடுத்து நடைபெறும் மாற்றங்களை கவனித்து விட்டிருந்த முகமூடி மனிதன் பெரும் ஆவேசத்தோடு பொற்கொடியை தனது வாளால் தாக்க முற்பட்டான்! தனது அழகிய வாளை கொண்டு முகமூடி மனிதனின் தாக்குதலை தடுத்து விட்டிருந்தவள் சண்டையை அதற்கு மேல் வளர்க்க விரும்பாமல் படீர் படீரென அவனது வாளின் மீது தாக்குதலை தொடுத்து விட்டிருந்தாள்! முகமூடி மனிதனின் வாள் எகிரி போய் அந்த அறையின் மூலையில் 'கிளாங் ' சென்ற ஒலியோடு கீழே விழுந்தது தான் தாமதம் பொற்கொடியின் வாள் முகமூடி மனிதனின் கழுத்தினை தடவிக் கொண்டிருந்தது! திடீரென நடந்து விட்ட தாக்குதலால் நீராயுதபாணியாக நின்று கொண்டிருந்த முகமூடி மனிதன் என்ன செய்வதென்று அறியாமல் மழங்க மழங்க முழித்துக் கொண்டு இருந்தான்! 

       வாசலில் நின்று கொண்டிருந்த சோழவீரர்களை தன் விழி அசைவால் வரச் செய்து முகமூடி மனிதனை கைது செய்யும்படி செய்திருந்தாள்! சிறிதும் தாமதிக்காமல் சோழக் காவல் வீரர்கள் முகமூடி மனிதனின் கை கால்களை பிணைத்து கைது செய்திருந்தார்கள்! 

       அதற்கிடையே இங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த சம்பவங்களை எப்படியோ அறிந்து விட்டிருந்த மாதாண்ட நாயகரும் இளம்வழுதியும் பொற்கொடியின் அறைக்குள் நுழைந்து விட்டிருந்தார்கள்! 

       திடீரென மாதண்ட நாயகரும் இளம்வழுதியும் அறைக்குள் வந்ததால் அங்கிருந்த சோழக் காவல் வீரர்கள் தலை வணங்கி நகர்ந்து நின்றார்கள்! 

      அறைக்குள் நுழைந்தவுடன் பொற்கொடி பாதுகாப்போடு இருப்பதை உணர்ந்து கொண்ட மாதண்ட நாயகரின் விழிகள் சோழக் காவல் வீரர்கள் கைது செய்து வைத்திருந்த முகமூடி மனிதனை நோக்கி திரும்பி விட்டிருந்தது! முகமூடி மனிதனை நோக்கி நகர்ந்து விட்டிருந்தார்! அவரைத் தொடர்ந்து இளம்வழுதியும் சென்றிருந்தான்! 

       "அவனது முகத்தில் உள்ள முகமூடியை முதலில் அகற்றுங்கள்" யென பெரும் கோபத்தில் சோழ வீரர்களை பார்த்துக் கூறினார் மாதண்ட நாயகர்! 

      முகமூடி மனிதனின் முகமூடியை சோழ வீரர்கள் அகற்ற முற்பட்ட போது தனது முகத்தை அப்படி இப்படியும் திருப்பி அவர்களை கழட்ட விடாமல் செய்து கொண்டிருந்தான்! சிறிது நேரம் அவனது பிடிவாதம் தொடர்ந்த போதும் சோழ வீரர்களின் தொடரும் முயற்சியின் முன்பாக அவனது செயல் தோற்று விட்டிருந்தது! 

       "இவன் நமது அரண்மனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் பணி வீரர்களில் ஒருவன் அல்லவா?"என்றார் மாதணட நாயகர்!

      அவனது வசனத்தை கூர்ந்து கவனித்த மற்ற சோழ காவல் வீரர்களில் ஒருவர் "ஆமாம் ஐயா! இவனது பெயர் கதிரவன்! நீண்ட காலமாக நமது அரண்மனையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறான்! "

      "ஓ கோ! அதனால் தான் நம்மால் இவனை சந்தேகிக்க முடியவில்லை போலும்!" என்றார் மாதாண்ட நாயகர்! 

      "எனக்கு இப்பொழுது தான் ஞாபகம் வருகிறது! இவன் மற்ற இடங்களுக்கு பணி அமர்த்தினாலும் வேண்டுமென்றே அரண்மனை காவல் பணியை கேட்டு வாங்கிக் கொள்வான்! அதன் ரகசியம் என்னவென்று இப்பொழுதுதான் புரிகிறது! தொடர்ந்து இங்கு உள்ள நிலவரத்தை கண்காணிப்பதற்காக வேண்டுமென்றே பணியை கேட்டு வாங்கி உள்ளான் போலும்!"என்றார் மற்றொரு சோழக் காவல் வீரர்!

      சோழக் காவல் வீரர்களின் பதில்களைக் கேட்ட கதிரவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது!

     அகப்பட்டுக் கொண்டதோடு முகத்தில் பெரும் வஞ்சகத்தின் எண்ணங்களை ஓட்டியபடி நின்று கொண்டிருக்கும் அவனைக் கூர்ந்து கவனித்த இளம்வழுதி "இதுவரையில் நம்மிடம் சதிகாரர்கள் பெரிதாக  உயிருடன் சிக்கிக் கொண்டதில்லை! ஆனால் நான் கங்கைகொண்ட சோழபுரம் வரும்போது காட்டுப் பகுதியில் சிக்கியவர்களுக்கு பின்பு இப்போதுதான் அரண்மனைக்கு உள்ளே அகப்பட்டுக் கொண்டதை பார்க்கிறேன்!"என்றான்! 

      "அங்கு தொட்டு இங்கு தொட்டு கடைசியில் தலை நகரத்தில் நுழைந்தவர்கள் இப்பொழுது அரண்மனைக்குள்ளும் புகுந்து விட்டார்கள்! இன்னும் எத்தனை பேர் இந்த அரண்மனைக்குள் சுற்றிக்கொண்டு இருக்கிறார்களோ எனத் தெரியவில்லை!" என்றார் மாதண்ட நாயகர்! 

      மாதண்ட நாயகரின் பேச்சைக் கேட்டதும் அகப்பட்டுக் கொண்ட முகமூடி மனிதனான கதிரவன் பெரும் குரலெடுத்து ஆணவமாக சிரிக்கத் தொடங்கி விட்டான்! அவனது நிலைப்பாடு அங்குள்ள அனைவரையும் பெரும் யோசனையில் தள்ளிவிட்டது! 

(தொடரும்.... அத்தியாயம் 90 ல்)


No comments:

Post a Comment