Monday, 10 March 2025

இராஜமோகினி யாழிசைசெல்வா அத்தியாயம் 93

  🌾93.சோமேசுவரரின் வருகையும் சோழ மன்னரின் முடிவும் 🌾


      சோழ வேந்தர் குலோதுங்கரைப் பார்த்து வணக்கத்தை கூறிக்கொண்டு நின்ற சாளுக்கிய மன்னர் சோமேசுவரனை புன்னகையோடு எழுந்து நின்று வரவேற்று அங்கிருந்து ஆசனத்தில் அமரும்படி சைகை காட்டினார் சோழ வேந்தர் குலோத்துங்கர். சாளுக்கிய மன்னரும் புன்முறுவலுடன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்!


     அங்கிருந்த அனைவரும் பெரும் அமைதியில் இருந்தபோது மாதண்ட நாயகர் " வரவேண்டும் சோமேசுவரரே, உங்களின் வருகை இங்குள்ள பலருக்கு பெருத்த அதிர்ச்சியை கொடுத்திருக்குமென அறிவேன்! இன்றைய சூழலில் எத்தனை தேவை என்பதனை நானும் சோழ மன்னரும் நன்கு அறிவோம்! தங்கள் பயணம் நன்முறையில் அமைந்திருக்க வேண்டுமென நம்புகிறேன்! " என சாளுக்கிய மன்னர் சோமேசுவரரைப் பார்த்துக் கூறினார்!


     "எவ்விதமான இடையூறுமின்றி நன்முறையில் அமைந்தது! தங்களின் வீரர்கள் எல்லையிலிருந்து பூரண மரியாதையோடு என்னை அழைத்து வந்தார்கள்!" எனக் கூறிவிட்டு சோழ மன்னரைப் பார்த்து "நம்மிரு தேசங்களுக்கு இடையே நீண்ட காலமாக நிலவிவந்த விரோதம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது! எனக்கு பெருமகிழ்வைத் தருகிறது!" என்றார் சாளுக்கிய மன்னர் சோமேசுவரர்!


     "அதற்கான முன் முயற்சியை தொடங்கி வைத்தது தாங்கள் தான்!" என்றார் மாதண்ட நாயகர்!


     "அப்படியா....! சாளுக்கிய வேந்தர் என்ன செய்தார் எனக் கூறினால் நாங்களும் தெரிந்து கொள்வோம்! நம்தேசத்தில் நடைபெற்றுக் கொண்டு இருப்பதை முழுவதும் அறிய முடியாமல் போய்விட்டது! "என்றார் கிளியூர் மலையமான்!


     "மலையமான் அவர்களே வருந்த வேண்டாம்! இனி நம் தேசம் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் பூரண நம்பிக்கை வந்துவிட்டதிற்கு சாட்சியமாகவே சாளுக்கிய வேந்தர் சோமேசுவரரின் வருகை உள்ளது! இரு தேசங்களுக்கிடையிலான உறவை வளர்க்க எண்ணி யாரும் எதிர்பாராத செயலைத் துணிந்து செய்து காட்டிவிட்டார்! உண்மையில் நாம்தான் சோமேசுவரருக்கு மிகுந்த கடமைப்பட்டு உள்ளோம்! "எனக் கூறியதோடு அவருக்கு நன்றியையும் தெரிவித்தார் மாதண்ட நாயகர் !


      "மேலும் மேலும் எதிர்பார்ப்பினை அதிகரிக்கும் வேலையைத்தான் செய்து கொண்டுளீர்களேத் தவிர அவர் எண்ண செய்தார் எனக் கூறி வில்லையே....?" என்றார் மலையமான்!


     "சாளுக்கிய வேந்தர் தமது மகள் இளவரசி மதிமோகினி அவர்களை துணிச்சலோடு நாகைக்கு அனுப்பி வைத்துள்ளார்!"என்றார் மாதண்ட நாயகர்!


     " சாளுக்கிய இளவரசிக்கு நமது நாகையில் என்ன வேலை ? எதற்காக வரவேண்டும்?" என்றார் வீரகொட்டா சிற்றரசர்! தமக்கு தெரியாமல் இவை எப்படி நடந்தது! அனைத்தையும் இந்த மாண்ட நாயகன் மறைத்து வைத்து சதி செய்து விட்டானே என்ற கோபத்தில் கேட்டார்!


      "தாங்கள் பதறும் அளவிற்கு எதுவும் நடந்து விடவில்லை! சாளுக்கிய இளவரசி மதிமோகினி அவர்களுக்கு தமிழ் இலக்கியங்கள் மீது அளப்பரிய காதல் அதனை நேரில் அறியவும், நம் தேசத்தில் உள்ளக சிவாலயங்களை தரிசிக்கவும் விரும்பியே இங்கு வந்தார்!" என்றார் மாதண்ட நாயகர்!


     "அவரது வருகை ஏன் முறைப்படி எங்களுக்கு தெரிவிக்கவில்லை!" என்றார் வீரகொட்டா சிற்றரசர்!


      "தங்களுக்கு தெரியாது ஒன்றுமில்லை! ஏற்கனவே நம் தேசத்தில் எண்ணற்ற சதிச்செயல்கள் நடைபெற்றுக் கொண்டு உள்ளன! இதற்கு இடையில் சாளுக்கிய தேசத்தின் இளவரசி வந்துள்ளார் எனத் தெரிந்தால் சொல்லவும் வேண்டுமா என்ன?" 


     " தாங்கள் கூறுவதை ஏற்றுக்கொண்டாலும் அவருக்கு யார் இங்கு அடைக்கலம் கொடுத்தது?" என்றார் வீர கொட்டா சிற்றரசர் !


      "இரு தேசங்களுக்கு இடையிலான உறவை பேணுவதற்கு காரணமாக இருந்த மணி கிராமத்தார் சூரியவர்மர் இன்று நம்மிடமில்லை! அவர் இருக்கும் தைரியத்தில்தான் சாளுக்கிய மன்னர் சோமேசுவரர் தன் மகளை இங்கு அனுப்பி வைத்தார்! " என்றார் மாதண்ட நாயகர்!


      " ஆமாம்! நானும் கேள்விப்பட்டேன்! சூரிய வர்மர் சதிகாரர்களால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டதை அறிந்து மிகுந்த துயருற்றேன்" என்றார் மலையமான்!


     "அனைவரும் கணநேரம் எழுந்து நின்று மணிகிராமத்தார் சூரிய வர்மர் மறைவிற்கு அஞ்சலி செலுத்துவோம்" என சோழ மன்னர் கூறியதும் அனைவரும் அமைதியாக எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்திவிட்டு அமர்ந்தார்கள்!


      "சதிகாரர்கள் சூரியவர்மரை மட்டும் குறிவைக்கவில்லை சாளுக்கிய இளவரசி மதிமோகினி அவர்களையும் கொலை செய்ய முற்பட்டு இருந்தனர்! நல்லவேளையாக அப்போது எனது உபதளபதியை நாகைக்கு அனுப்பி வைதிதிருந்தது நல்லதாகப் போய்விட்டது! அதனால் சாளுக்கிய இளவரசி உயிர் காப்பாற்றப்பட்டு நாகை ஆதுரசாலையில் சேர்க்கப்பட்டு இன்று நலமோடு உள்ளார்!" என மாதண்ட நாயகர் கூறினார்!


      "இத்தனை ஆபத்து நிறைந்த பணிக்கு எதுவும் அறியாத சிறுபிள்ளை இவனை அனுப்பி வைக்க வேண்டிய அவசியமென்ன? நம்மிடம் கேட்டிருந்தால் சரியான நபரை கூறியிருப்போமே...!" என்றார் பொத்தப்பி சிற்றரசர்!


     "தங்கள் பணிவான ஆலோசனைக்கு மிக்க நன்றி! நீங்கள் நினைப்பது போல் இளம்வழுதி வேறு யாருமல்ல...! சோழ மாமன்னர் இராஜேந்திர சோழரின் திருக்கரத்தால் பிரும்மாராயன் விருது பெற்ற குமாரமள்ளரின் மைந்தன் ஆவார்! நம் தேசத்தின் மேன்மைக்காக உழைத்து பணி செய்த ஒரே காரணத்தால் பிரும்மாராயன் குமாரமள்ளர் அவர் மனைவி அன்னை வடிவு, இருவரும் சதிகாரர்களால் கொலை செய்யப்பட்டார்கள். மேலும் இளவழுதியின் சகோதரன் இளமாறன் நாகை பாடி காவல் அதிகாரியாக இருந்து பணிசெய்து காலத்தில் சதிகாரர்களுடன் இருட்டும் பள்ளத்தில் நடந்தமோதலில் அவரை குற்றுயிரும் குலை உயிருமாக கத்தியால் குத்திய தால் இன்றும் நாகை ஆதுரசாலையில் இருளப்பமள்ளரின் சிகிச்சையில் உள்ளார்! இப்பொழுது கூறுங்கள் இளவழுதியை விட யார் தகுதியென ?" என்றார் மாதண்ட நாயகர்!


       "இளம்வழுதி யின் குடும்பத்திற்கு இந்த தேசம் மிகுந்த கடமைப்பட்டுள்ளது! நடக்கும் பிரச்சினை ஓய்ந்ததும் இளவழுதிக்கு உரிய மரியாதை செய்யப்படும்! மேலும் அவருக்கு மிகவும் பிடித்த பரிசும் வழங்கப்படும்! இளவழுதியின் பெற்றோர் மறைவிற்கு அனைவரும் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்துவோம்" என குலோத்துங்கச் சோழர் கூறியதும் அங்கிருந்த அனைவரும் மெளன அஞ்சலி செலுத்தி அமர்ந்தார்கள்!


      இளம்வழுதி எழுந்து நின்று சோழ மன்னரைப் பார்த்து தலைவணங்கி விட்டு அமர்ந்தான்!


      மாதண்ட நாயகர் தனது கரத்தில் உள்ள ஓலையை எடுத்துக் காட்டியபடி "இப்பொழுது இந்த ஓலையில் உள்ள வாசகங்களை நம்புவீர்கள் என எண்ணுகிறேன்! இந்த ஓலையை கைப்பற்றி கொண்டு வந்ததோடு கோடியக்கரை பகுதியிலிருந்து கொண்டு தேசமுழுவதும் பெரும் சதிகளை அரங்கேற்றிய கோடியக்கரை மூர்க்கனையும் அவனது கூட்டத்தையும் அங்கேயே அழித்து அவர்களிடமிருந்து தான் இளம்வழுதியால் இந்த ஓலை கைப்பற்றப்பட்டது!" என்றார் மாதண்ட நாயகர்!


      "சதிகாரர்கள் நீண்டகாலமாக நாம் பயன்பாட்டில் இல்லாத கோடியக்கரை பகுதியை தேர்வு செய்துவிட்டதாலே நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை " என்றார் மலையமான்!


      "மலையமான் அவர்களே அவர்கள் அங்கிருந்தது வேண்டுமானால் நமக்கு தெரியாமல் போயிருக்கலாம்! ஆனால் நமது தலைநகரத்தில் அதுவும் கங்கைகொண்ட சோழிசுவரர்ஆலயத்தில் வைத்து எனது தங்கை பொற்கொடியை கொலை செய்ய முயன்ற தோடு நேற்று நள்ளிரவில் அவளது மாளிகையிலேயே கொலை செய்ய முயன்றார்கள்! நல்லவேளையாக இவ்விரண்டு முயற்சியிலும் அவளது துணிச்சலான வாள் திறமையால் தப்பி விட்டாள்! " என்றார் மாதண்ட நாயகர்!


      "இத்தனை அநீதிக்கு பின்பும் எப்படி தங்களால் அமைதியாக இருக்க முடிகிறது! கேட்கும்போதே நெஞ்சமெல்லாம் கொதிக்கிறது! சதிகாரர்களுக்கு உரிய தண்டனை கொடுத்தே தீர வேண்டும்!" என்றார் மலையமான்!


      "இதுவரையில் போதிய ஆதாரங்கள் நமக்கு கிடைக்கவில்லை! இப்பொழுது கிடைத்திருக்கும் ஆதாரத்தைக் கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதை முடிவு செய்யவே இங்கு கூடியுள்ளோம்!" என்றார் மாதண்ட நாயகர்!


   "குறுக்கிடுவதற்கு  மன்னிக்கவும்!" என்ற படி சாளுக்கிய மன்னர் சோமேசுவரர் எழுந்தார்!அங்குள்ளவர்களைப் பார்த்து கூறினார்; "எனக்கு கிடைத்திருக்கும் தகவலின்படி நாகையை தாக்குவதற்கு சாளுக்கிய வர்மன் தலைமையில் பெரும்படை ஒன்று கப்பலில் கோடியக்கரை பகுதியில் வரப்போகிறது!" என்ற பெரும்வெடியை எடுத்துப் போட்டார்!


     அங்கிருந்த அனைவரும் ஒரு கணம் பேசும் சக்தியை இழந்து விட்டிருந்தார்கள்!


      "ஏற்கனவே நமது ஒற்றர்கள் தகவல் தந்து விட்டார்கள்! இது குறித்தும் நமது மன்னருக்கு தகவல் நேற்றிரவே தந்து விட்டேன்! இப்பொழுது தங்கள் கூறியது மூலம் கிடைத்த தகவல் உண்மையென்பதை நிறுபித்துவிட்டது!" என்றார் மாதண்ட நாயகர்!


     "நமது மாதண்ட நாயகர் கூறியபடி சாளுக்கியத்தின் சதிச்செயலை வேரோடும் வேரடி மன்னோடும் அழிக்கவேண்டும்!அதற்காக பூர்வாங்க நடவடிக்கை மேற்கொள்ள இன்றே தொடங்குங்கள்!"என்றார் குலோத்துங்கச் சோழ சக்கரவர்த்தி!


       "இந்த பிரச்சனையை ஆரம்பமுதலே தொடர்ந்து கண்காணித்து செயல்பட்டு வரும் இளம்வழுதியே இந்த யுத்ததிற்கு தலைமையேற்று நடத்தட்டும் என்பது எனது விருப்பம்! சோழ வேந்தர் முடிவு எதுவாயினும் கட்டுப்படுகிறேன்!" என்றார் மாதண்ட நாயகர்!


      "மாதண்ட நாயகரின் விருப்பம் பூர்த்தி செய்யப்படுகிறது! எனக்கும் இதுவே சரியாக இருக்குமெனத் தோன்றியது!" என சோழ வேந்தர் குலோத்துங்கர் கூறியதும் அவரது உத்தரவை திருமந்திர ஓலை சொல்ல திருமந்திர ஓலை நாயகம் ஓலையில் எழுதிக்கொண்டார்!


     அங்கிருந்த சிற்றரசர்களும் மற்ற அமைச்சர் பெருமக்களும் சோழ மன்னரின் உத்தரவை ஆமோதித்து ஏற்றுக்கொண்டார்கள்!


      "இனியும் நம் தேசத்தில் தேவையற்ற பிரச்சினை தலை தூக்குவதை சோழ மன்னர் விரும்பவில்லை! எனவே நமது நட்பு சக்திகளான சிற்றரசர்கள் இனியும் நம்மோடு கருத்துவேறுபாடு கொள்வதற்கு இனி எந்த முகாந்திரமும் இப்பொழுது இல்லாமல் போய்விட்டது!" என்றார் மாதண்ட நாயகர்!


     சிற்றரசர்கள் அனைவரும் வலிந்து தமது முகத்தில் புன்னகை வரவழைத்துக்கொண்டு  மாதண்ட நாயகர் கூற்றை ஆமோதித்தார்கள்! 


     அங்கிருந்து அனைவரும் மெளனமாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள்!


      குலோத்துங்கச் சோழ சக்கரவர்த்தியும் தனது அரண்மனைக்கு எழுந்து சென்றுவிட்டார்! 


       இளம்வழுதி எழுந்து வந்து மாதண்டநாயகரிடம்" நான் இப்பொழுதே புறப்படுகிறேன்! எனக்கு விடை கொடுங்கள்!"என்றான்!


     "சோழ மன்னர் உன்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார்! அதனை காப்பாற்றிக்கொள்! நடந்துவிட்ட அத்தனை சம்பவங்களிலும் மிகுந்த பாதிப்பு உனக்குத்தான் நானறிவேன்!அதற்காண தீர்வை எழுதும் நேரம் வந்துவிட்டது! எதையும் கவனித்து செயல்படு! படை வீட்டில் உனக்கு வேண்டிய வீரர்களை தேர்வு செய்து  படை ஒன்றை  உருவாக்கி அழைத்துச்சென்று வெற்றிகரமாக காரியத்தை முடித்து விட்டு வர என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!" என்றார் மாதண்ட நாயகர்!


    மாதண்ட நாயகரின் தால் பணிந்து ஆசிபெற்று படை வீட்டை நோக்கி நகர்ந்தான்! இளம்வழுதி செல்வதை பார்த்துக்கொண்டு விட்டு தனது அரண்மனை நோக்கி நடந்து கொண்டிருந்தார் மாதண்ட நாயகர்!


(தொடரும்...... அத்தியாயம் 94ல்)


No comments:

Post a Comment