🌾94. கோடியக்கரை யுத்தம்🌾
ஆழம் குறைவான கோடியக்கரை கடல் பகுதி அலைகளை சுமந்துகொண்டு கரை மீது தழுவிக் கொண்டிருந்தது! கரை முழுவதும் பரவிக்கிடக்கும் குறுமணல்கள் மீது கடல் நண்டுகள் ஏறிச் சென்றுகொண்டிருந்தன!
கரையிலிருந்து தொலைவில் உள்ள கடலின் அலைகளுக்கு மேல் கடற்கெண்டைகள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன! அவற்றின் ஒவ்வொரு அசைவும் அத்தனை லாவகமாக இருந்தது! அதனை வேறு வழியின்றி காலை முதல் கரையிலிருந்து பெரும் மரத்தின் மேல் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான் அழகன்!
கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து ஐநூறு பேர் கொண்ட சிறு படையுடன் வந்திருந்த இளம்வழுதி சாளுக்கிய சதிகாரர்களின் சதித்திட்டங்களை எவ்வாறெல்லாம் எதிர்கொள்ள வேண்டுமெனக் கூறியிருந்ததால் அதற்கு ஏற்பத் திட்டமிட்டு செயலாற்றிக் கொண்டிருந்தார்கள்! கோடியக்கரை கடலின் ஒவ்வொரு அசைவையும் மிகுந்த கவனத்துடன் கண்காணித்து கொண்டிருந்தார்கள்!
அழகன் இருந்த மரத்திற்கு அருகாமையிலிருந்த மற்றொரு மரத்தில் அமர்ந்து கொண்டு இளம்வழுதியும் காத்துக் கிடந்தான்! இரவின் முதல் சாமம் முற்றிலும் ஏறிவிட்டிருந்தது! சித்திரை முழுநிலவு கடந்து விட்டிருந்ததால் நிலவின் ஒளியின் ஆதிக்கம் கடற்கரைப்பகுதியில் ஓரளவு பரவிக்கிடந்தது!
ஆழ்ந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு நடுக்கடலில் ஒரு கப்பல் வந்து கொண்டிருந்தது! கப்பலில் இருந்தவர்கள் விளக்கினை அணைத்துவிட்டு நிலவின் ஒளியைத் துணையாகக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள்! மெல்ல அசைந்தாடி கப்பல் கரையை நெருங்கிக் கொண்டிருந்தது! கரைமேல் அவர்களின் வரவிற்க்காக கரைகளில் செழித்து வளர்ந்து கிடந்த மரங்களின் மேலும் அடர்ந்த புதருக்குள்ளும் விழிப்போடு பதுங்கி காத்துக்கிடந்த சோழ வீரர்கள் கப்பலின் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள்! ஒருவரும் துளி அசைவின்றி அவர்களிருந்த இடத்திலேயே காத்துக் கிடந்தார்கள்!
சதிகாரர்கள் அடிக்கடி வந்துபோனதாலோ என்னவோ கரைக்கு வெகு தொலைவு முன்பே கப்பலை நிறுத்திவிட்டிருந்தார்கள்! சில கணங்களுக்கு பின்பு கப்பலின் கயிற்றேணியைக்கொண்டு சத்தமில்லாமல் கடலில் இறங்கி கரையை நோக்கி நீந்திக் கொண்டிருந்தார்கள்! ஒருவழியாக இருநூறு பேர் கொண்ட படையாக கரை மீது எழுந்து நின்றவர்கள், ஏற்கனவே கலங்கரை விளக்கம் தாண்டி நிறுத்தி வைத்திருந்த படகு இருக்கும் இடம் வழியாக காட்டிள்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள்! ஏறக்குறைய அனைவரும் காட்டிற்குள் நுழைந்து விட்டிருந்தார்கள்! சதிகாரர்கள் முழுவதுமாக உள்ளே வரும்வரை சோழ வீரர்கள் எந்தவிதமான இடையூறும் அவர்களுக்கு கொடுக்கவில்லை! இளம்வழுதியின் திட்டமான உத்தரவு அப்படி இருந்துது! சதிகாரர்கள் அனைவரும் கோடியக்கரை மூர்க்கனின் இருப்பிடம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள்! இன்னும் நன்றாக உள்ளே நுழைந்த பிறகு சதிகாரர்கள் அனைவரையும் ஒரேயடியாக தீர்த்துக் கட்டும் திட்டம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருந்தது அது தெரியாமல் சதிகாரர்கள் காட்டுக்குள்ளே சென்று கொண்டிருந்தார்கள்!
கடற்கரையைத் தாண்டி காட்டிற்குள் சதிகாரர்களை நன்கு நுழைய விட்டிருந்த இளம்வழுதி அதுவரை காத்து வந்த பொறுமையை கைவிட்டு இருந்தான்! குயில் போல் இன்னிசை அவன் எழுப்பியதும் மரங்களில் மறைந்திருந்த சோழ வில்லிகள் தங்கள் அம்பராத் துணியிலிருந்து கணைகளை கொடுத்து விட்டிருந்தார்கள்! எங்கிருந்து வருகிறது எப்படி வருகிறது என்று சதிகாரர்கள் அறிவதற்குள்ளாக ஏறக்குறைய இருபது பேர் அம்புகளால் துளைக்கப்பட்டு கீழே சரிந்து விழுந்து கொண்டிருந்தார்கள்! திடீரென நடந்துவிட்ட இந்த பெரும் விபரீதம் கண்டு அவர்களின் தலைவன் சாளுக்கியவர்மன் தனது கரத்தை உயர்த்தியதும் சாளுக்கியத்தின் சதிகாரர்கள் அப்படியே நின்று விட்டார்கள்!
சாளுக்கியவர்மன் சுற்றிலும் தனது விழிகளைச் சுழல விட்டு ஆராய்ந்து கொண்டிருந்தான்! அதற்கிடையில் மீண்டும் ஒருமுறை குயிலின் ஓசை எழுந்ததும் சோழ வில்லிகள் தங்களது அம்பராத் துணிகளிலிருந்து அம்பு மழை பொழிந்ததில், மேலும் இருபது பேர் மண்ணில் சாய்ந்து விட்டிருந்தார்கள்! கண் இமைக்கும் நேரத்திற்குள் ஏறக்குறைய நாற்பது பேர் உயிரை இழந்துவிட்டது கண்டு சாளுக்கியவர்மனின் விழிகள் கோபத்தில் நெருப்புத் துண்டு போல் அந்த இரவிலும் ஒளிரத் தொடங்கின! தனது பல்லை நர நரவெனக் கடித்துக் கொண்டு தனது இடையிலிருந்த பெரும் வாளை உருவிக்கொண்டு அடுத்து நடக்கவிருக்கும் யுத்தத்திற்கு தயாரானான்! அவனைத் தொடர்ந்து அவனது விழி அசைவுகளுக்கு ஏற்ப சாளுக்கியத்தின் சதிகாரர்கள் ஆங்காங்கே மறைவிடங்களைத் தேடி ஓடிக்கொண்டிருந்தார்கள்! திடீரென ஓடிக்கொண்டிருந்த சதிகாரர்கள் அப்படியே மிரண்டு போய் நின்று விட்டார்கள்! அவர்களுக்கு எதிரில் ஐம்பது பேர் கொண்ட சோழ வீரர்கள் யுத்ததிற்காண கவச உடை தறித்து தயாராக நின்று கொண்டிருந்தார்கள்!
அங்குமிங்கும் விழிகளை சுலட்டிக் கொண்டிருந்த சாளுக்கியவர்மன் தனது விழி அசைவுகளால் சதிகாரர்களை முன்னோக்கி பாயச் சொல்லி உத்தரவிட்டிருந்தான்! சோழ வீரர்கள் சதிகாரர்களை எதிர்கொண்டு தாக்கத் தொடங்கி விட்டார்கள்! ஆங்காங்கு நடந்து கொண்டிருந்த தாக்குதலால் சதிகாரர்கள் சிதறிப் போய் கிடந்தார்களேயன்றி அவர்கள் ஒன்று சேரும் வாய்ப்பு கிடைக்கவில்லை!எத்தனைதான் முயற்சி செய்தபோதும் அவர்களால் சோழ வீரர்களைக் தாண்டிச் செல்ல முடியாது தவித்துப் போனார்கள்! தொடர்ந்து நடந்து கொண்டிருந்த தாக்குதலால் எண்ணற்ற சதிகாரர்கள் இறந்து விட்டிருந்தார்கள்! அதனை கண்ட சாளுக்கிய வர்மன் மேலும் கோபத்தோடு சோழ வீரர்களை வெட்டி சரித்துக் கொண்டிருந்தான்!
ஒரு கட்டத்தில் என்ன செய்வதென்று அறியாமல் தனது வீரர்களோடு மீண்டும் கடலுக்குள் பின்வாங்கி சென்று விடலாம் என்று எண்ணினானோ என்னவோ கரையை நோக்கி இரண்டொரு அடிகள் தான் எடுத்து வைத்திருப்பார்கள் அதற்குள் அவர்களை எதிர்கொண்டு தாக்குவதற்காக இளம்வழுதி தனது வீரர்களோடு சுற்றி வளைத்து விட்டிருந்தான்! இதன் காரணமாக அங்கு சண்டை தொடர வேண்டிய நிலைக்கு சாளுக்கியர்கள் தள்ளப்பட்டிருந்தார்கள்! மிகுந்த ஆவேசத்தோடு இரு பகுதிகளிலும் சண்டை நடந்து கொண்டிருந்தது! தொடர்ந்து யுத்தத்தின் காரணமாக அந்த இரவு நேரத்தில் காட்டில் உள்ள செடி கொடிகள் மீது வீணாக மனிதர்களின் குருதி குளித்து கொண்டிருந்தது! கிளாங் கிளாங்கென வாள்கள் உரசும் ஒளி அந்தக் காட்டினை அதிரச் செய்து கொண்டிருந்தது! சோழ வீரர்களின் வீர அவேசமான தாக்குதலும் இளம்வழுதியின் துணிகரமான செயல் திட்டமும் சேர்ந்து சாளுக்கியரின் திட்டத்தை தவிடு பொடியாக்கி கொண்டிருந்தது! நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளால் தோல்வி என்பது நிச்சயமாகிவிட்டது என்பதை உணர்ந்து கொண்ட சாளுக்கியவர்மன் அதன் போக்கை திசை மாற்ற விரும்பினான் போலும்! அதற்காக திடீரென இளம்வழுதியை பார்த்து "நீதான் புதிதாக நாகைக்கு வந்திருக்கும் பாடிகாவல் அதிகாரியா? உனது திட்டம் அத்தனையும் தோற்றுப் போய் விட்டதை எண்ணி வெக்கப்பட வேண்டும்! ஏற்கனவே உனது தாய் தந்தையர் மற்றும் உனது சகோதரன் அனைவரையும் மரணத்தின் பிடிக்கு இழுத்துச் சென்றது யாம் கொடுத்த பரிசு தான்! இப்போது உனக்கும் அதை பரிசை வழங்குவதற்காக தான் இங்கு வந்துள்ளோம்!" எனக்கூறி கொக்கரித்துக் கொண்டு பேசினான் சாளுக்கியவர்மன்!
"தோல்வியின் கலை உன் முகத்திலேயே முழுவதுமாக அப்பிக் கொண்டு உள்ளது! அதன் காரணமாக என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறாய்! உனது முடிவு உனக்கே நன்கு தெரியும்! பின் ஏன் வேண்டாத இந்த வீராப்பு!"என்றான் இளம்வழுதி!
"உண்மையில் உனக்கு தைரியம் அதிகம் தான்! இத்தனை நடந்த பின்பும் துணிச்சலாக என்னுடன் உரையாடிக் கொண்டிருக்கிறாய்! உனக்குத் தெரியாது என்னுடைய வீரர்கள் மிகவும் திறமையானவர்கள் அவற்றின் முன்னால் நீங்கள் அனைவரும் வெகு சாதாரணம்!"எனக்கூறி சிரித்தான் சாளுக்கியவர்மன்!
"இத்தனை காலமாக மறைந்திருந்து செயலாற்றிக் கொண்டிருந்த உங்கள் அனைவரையும் கூண்டோடு எமலோகத்திற்கு விரட்டியடிக்கும் நேரம் நெருங்கி விட்டதை பாவம் நீ மறந்து விட்டாய்! பல நாட்களாக நீங்கள் செய்து கொண்டிருந்த அத்தனை சதிச் செயலும் இன்றோடு முடிவுரை எழுதப்பட்டு விடும்! அதனால் வீணாக கொக்கரித்துக் கொண்டிருக்காதே!"என சாளுக்கிவர்மனை எச்சரித்தான் இளம்வழுதி!
"நான் தெரியாமல் வந்து உன்னிடம் மாட்டிக் கொள்ள, என்னை முட்டாள் என நினைத்து விட்டாயா? அப்படி நீ நினைத்திருந்தால் உனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு விடு! உங்களுக்கு தக்க பதிலடி கொடுக்காமல் நான் இங்கிருந்து போக மாட்டேன்!"என்றான் சாளுக்கியவர்மன்!
"நீ உனது வீரர்களை கப்பலில் மறைத்து வைத்து விட்டு வந்ததை கூறுகிறாயா? அவர்கள் அனைவரும் இன்னும் சிறிது நேரத்தில் எரிந்து சாம்பலாக போகிறார்கள்! அது தெரியாமல் நீ பேசிக் கொண்டிருக்கிறாய்! பாவம் உனது நிலை தான் மிகுந்த கவலைக்கிடமாக உள்ளது!"என்றான் இளம்வழுதி!
"நீ என்ன கூறுகிறாய்? நீ கூறுவதில் எனக்குத் துளியும் நம்பிக்கை இல்லை! அப்படியெல்லாம் செய்துவிட உனக்கு ஏது தைரியம்?"என்றான் சாளுக்கியவர்மன்!
"அப்பாவி மக்களை கொன்றதோடு நாகையின் மணி கிராமத்தார் சூரிய வர்மரையும் கொடூரமாக கொலை செய்திருந்தீர்கள், மேலும் எனது குடும்பத்தை முழுவதுமாக நீர்மூழம் ஆக்கி இருந்தீர்கள், அவை மட்டுமின்றி நாகை சத்திரத்தில் தஞ்சைப் பெரும் வணிகர் செங்காணரையும் கொடூரமாக கொலை செய்திருந்தீர்கள்! இத்தகைய கொடிய செயல்களை எல்லாம் செய்ததோடு நிற்காமல் கங்கைகொண்ட சோழபுரத்தின் தலைநகரத்திலேயே மாதணட நாயகரின் தங்கை மீது தாக்குதலையும் நிகழ்த்தி இருந்தீர்கள்! அத்தோடு இல்லாமல் உங்கள் சாளுக்கிய நாட்டைச் சேர்ந்த சாளுக்கிய இளவரசி மதி மோகினி மீதம் கொலை செய்யும் நோக்கத்தில் தாக்குதலை தொடுத்து இருந்தீர்கள், இத்தனை செயல்களையும் கொஞ்சம் யோசிக்காமல் செய்துவிட்டு இப்போது எந்த நம்பிக்கையில் என்னிடத்தில் தயவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாய்? உனக்கு சிறிதேனும் அறிவு இருந்தால் இப்படி யோசித்து இருப்பாயா? எனது பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு! அவை எப்பொழுதோ கரையை கடந்து விட்டது! இங்கு இன்றே உனக்கான முடிவுரை எழுதப்பட்டு விடும்! அது மட்டும் சத்தியமான உண்மை!"என்றான் இளம்வழுதி!
இளம்வழுதி கூறி முடித்த சில கணங்களுக்குள் கடலில் நின்று கொண்டிருந்த சாளுக்கியர்களின் கப்பல் படீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது! அதன் உள்ளே அகப்பட்டுக் கொண்டிருந்த சாளுக்கிய சதிகாரர்கள் எழுப்பிய மரண ஓலம் கோடியக்கரை கடலைக் கிழித்துக் கொண்டிருந்தது!
தனது நண்பர்களின் கொடூரமான ஓலத்தை கேட்டதும் சாளுக்கியவர்மன் அதுவரை காத்து வந்த பொறுமையை அடியோடு இழந்து விட்டிருந்தான்! இளம்வழுதியும் தன்னைச் சுற்றி இருந்த சாளுக்கிய சதிகாரர்களை மல மல வென வெட்டி தள்ளிவிட்டு சாளுக்கியவர்மனை எதிர்கொண்டு தாக்கத் தொடங்கி விட்டான்! அவர்கள் இருவரது சண்டையும் வெகு நேரம் நீடிக்க வில்லை! அடுத்தடுத்த இளம்வழுதியின் தாக்குதலால் சாளுக்கியவர்மனின் வாள் காற்றில் பறந்திருந்தது!
ஓங்கிய தனது வாளை சாளுக்கியவர்மனின் வலது கையை நோக்கி வீசி இருந்தான் இளம்வழுதி! கரம் துண்டாகி தூரத்தில் விழுந்து துடித்துக் கொண்டிருந்தது! "இது நாகையின் மணி கிராமத்தார் சூரிய வர்மரின் கொடூர கொலைக்காக கொடுக்கும் தண்டனை! "என்றான்! கரம் துண்டாகி கீழே விழுந்ததால் பெரும் அலறலை எழுப்பிக் கொண்டிருந்தான் சாளுக்கியவர்மன்! மீண்டும் தனது வாளை ஓங்கியவன் "இவை தஞ்சை பெரும் வணிகர் செங்காணரின் கொடூர கொலைக்கான தண்டனை!"எனக்கூறி அவனது இடது கையை துண்டாக்கி இருந்தான்! மேலும் அவனே தொடர்ந்து "இவை எனது தாய் தந்தை மற்றும் எனது சகோதரனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக"எனக்கூறி அவன் தலையை துண்டாக கொய்திருந்தான் ! சாளுக்கியவர்மனின் தலை தெறித்து போய் தூரத்தில் விழுந்தது! தங்களது தலைவனின் முடிவைக் கண்டதும் மற்ற சாளுக்கிய வீரர்கள் என்ன செய்வது என்று அறியாமல் மீதமிருந்த ஒரு சிலர் தங்களை தாங்களே மாய்த்துக்கொண்டு கீழே சரிந்து விழுந்தார்கள்!
அதற்குள் அழகன் தனது படைகளோடு அங்கு வந்து சேர்ந்திருந்தான்! சோழ வீரர்கள் தங்கள் கையில் கொண்டு வந்திருந்த தீப்பந்தத்தின் ஒளி நடந்து விட்டிருந்த யுத்தத்தில் மாய்ந்து போய் கடந்த சாளுக்கிய வீரர்கள் உடல் சிதறி கிடப்பதை தெளிவாக காட்டியது! அங்கு நடந்த அந்த யுத்தம் சோழ வீரர்கள் சிலரையும் காவு வாங்கி விட்டிருந்தது! அழகன் சோழ வீரர்களின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தி கொண்டு போய் உரிய மரியாதையோடு அவர்களை எரியூட்டும் படி கூறியிருந்தான்!
இளம்வழுதி தனது மனதில் இருந்த அத்தனை துயரங்களையும் இறக்கி வைத்த நிம்மதியில் கோடியக்கரை கடற்கரையை நோக்கி நடந்து கொண்டிருந்தான்! அழகனும் அங்கு மேற்கொண்டு செய்ய வேண்டிய காரியங்களை அங்கு உள்ள சோழ வீரர்களுக்கு வேண்டிய உத்தரவுகளை பிறப்பித்து விட்டு இளம்வழுதியை தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்!
கோடியக்கரை கடலில் மூழ்கி சிறிது நேரம் மனம் குளிர இளம்வழுதியும் அழகனும் குளித்துவிட்டு எழுந்தவர்கள் குழகர் கோயில் கோபுரத்தை நோக்கி நெடுஞ்சான் கிடையாக விழுந்து வணங்கி நிமிர்ந்தார்கள்!
***************************
இரவின் இரண்டாம் சாமத்தில் பெரும் வேகத்தோடு நாகை கடலலை கடற்கரையை தாக்கிக் கொண்டிருந்தது! அந்த இரவு நேரத்தில் சோழ காவல் வீரர்கள் தொலைவில் தங்கள் காவல் பணிகளை தொடர்ந்து கொண்டிருந்தார்கள்!
நாகை கடலின் அலைகள் இளம்வழுதி மற்றும் மதி மோகினியின் பாதங்களை முத்தமிட்டு கொண்டிருந்தது!
"நானும் வெகு நேரமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்! கடலின் அந்த அலைகளையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் எதுவும் பேசாமல்? அப்படி எதனை நினைத்து மனதில் குழம்பிக் கொண்டு உள்ளீர்கள்? அதுதான் அத்தனை பிரச்சினைகளும் முடிந்து விட்டனவே? பிறகு என்ன கவலை உங்களுக்கு?"என்றாள் இராஜ மோகினி!
"நீ கூறுவது உண்மைதான்! சோழ தேசத்தை பிடித்திருநத சதிகாரர்கள் முழுவதுமாக வேரறுக்கப்பட்டு விட்டார்கள்! நான் அது குறித்து எல்லாம் நினைக்கவில்லை! இந்த சிறிது காலத்திற்குள் எத்தனை விபரீதங்கள் எல்லாம் நடந்தேறி வட்டது! அதனை எண்ணித்தான் வருத்தப்படுகிறேன்! மேலும் எனது சகோதரன் இன்னும் கண் விழித்த பாடு இல்லை! அவன் முழுவதுமாக தேறி எழுவானோ அல்லது அப்படியே இருந்து விடுவானோ என்ற கவலை மனதை அரித்துக் கொண்டிருக்கிறது! "என துக்கம் தொண்டையை அடைக்கக் கூறினான் இளம்வழுதி!
"கவலையை விடுங்கள்! எம்பெருமான் சிவனின் அருளால் உங்கள் சகோதரர் விரைவில் குணமாகி எழுந்து விடுவார்! " என இராஜ மோகினி கூறியதுதான் தாமதம்! தூரத்தில் எங்கோ ஒரு ஆலயத்தில் நள்ளிரவு வழிபாட்டிற்கான மணியோசை கடகடவென ஒலிக்கத் தொடங்கி விட்டது! ஒலிவந்த திசையனை நோக்கி இருவரும் வணங்கி நிமிர்ந்தார்கள்!
"ஆமாம் நான் கேட்க மறந்து விட்டேன்! சோழ மன்னர் உங்களுக்கு ஒரு பரிசு தருவதாக என்னிடம் கூறி இருந்தீர்கள்! அந்தப் பரிசு தங்களுக்கு கிடைத்து விட்டதா? நீங்கள் தான் அவரை போய் இன்னும் சந்திக்கவில்லையே!" என்றாள் இராஜ மோகினி!
இராஜ மோகினி சிற்றிடையில் தனது கரத்தை செலுத்தி இழுத்து அணைத்துக் கொண்டவன் அவளது இதழில் கவிதை எழுதத் தொடங்கி விட்டான் தனது முரட்டு ஆதாரங்களால்.....!
சிறிது நேரத்துக்குப் பின்பு "நான் கேட்டதற்கு நீங்கள் பதில் ஏதும் கூறவில்லையே!" என்றாள் குறும்பாக இராஜ மோகினி!
"அதுதான் நான் பதிலை கூறி விட்டேனே!" என்றபடி அவளது இதழை நோக்கி தனது முரட்டு அதரங்களால் கவிதை எழுத முற்பட்டவனை பிடித்து தள்ளிவிட்டு கடற்கரையில் மானை தோற்கடிக்கும் துள்ளலில் ஓடிக்கொண்டிருந்தாள் சந்தனச் சிலை!
(இத்துடன் இராஜமோகினி சரித்திரத் தொடர்கதை நிறைவு பெறுகிறது)
*************************************
No comments:
Post a Comment