Sunday, 23 March 2025

அய்யனார் 02 யாழிசை செல்வா

🚔02. ஐந்தாம் மாடி ஆறாவது அறை!🚔

      குத்திட்டிக் கோபுரமாய் நிமிர்ந்திருந்த பத்து மாடிக் குடியிருப்பின் உள்ளேயிருந்து "வீல்"வென்ற பெருத்த அலறல் சத்தத்தால் ஈர்க்கப்பட்ட அய்யனாரும் சாத்தப்பனும் சட்டென குடியிருப்பை நோக்கி நகரத் தொடங்கினார்கள்! மழை நீரின் வெள்ளம் முழுவதுமாக சாலையிலிருந்து வடிந்து விட்டிருந்தாலும் ஆங்காங்கே அடித்துக் கொண்டு வந்த குப்பைகளை சாலையின் இருமருங்கிலும் விதைத்துச் சென்றிருந்தது!  பிளாஸ்டிக் பைகளும் சோப்பு காகிதங்களும் சகதிகளின் ஊடாக பிணைந்து எரிச்சல் தரும் புன்னகையை பிதுக்கி கொண்டிருந்தன! 


      ஏற்கனவே மழையில் முழுவதுமாக நனைந்து விட்டிருந்த அவர்களின் ஆடைகள், ஒரு வழியாக அவற்றின் ஈரத்தைக் காற்றிடம் கையளித்திருந்தன. 


     குத்தீட்டிக் கோபுரமாய் நிமிர்ந்து நின்றிருந்த குடியிருப்பின் வாசலைக் கடந்து உள்ளே நுழைய முற்பட்டபோது 'மருதம் எழிலகம்' எனும் பெயர் பலகை வாசலில் சிரித்துக் கொண்டிருந்தது! 


     மருதம் எழிலகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் அதற்குள் கூட்டமாக கூடிப் பேசிக்கொண்டு பெரும் இரைச்சலை எதிரொலித்துக் கொண்டிருந்தார்கள். பத்து மாடிகளை கொண்டிருந்த அந்தக் குடியிருப்பு பெரும் மக்கள் வெள்ளத்தை, எழுந்த பெரும் சத்தத்தால் வெளியே துரத்தி அடித்திருக்க வேண்டும்! ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக எழிலகத்தின் குடியிருப்பாளர்கள், ஏதேதோ தங்களுக்கு தோன்றிய கற்பனைகளுக்கு வடிவம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்! அப்போது அவர்களை அணுகி விட்டிருந்த அய்யனாரும் சாத்தப்பனும் அவர்களை கடக்க முயன்ற போது கூட்டத்தில் இருந்தவர்களின் உரையாடல் அவர்களை தேக்கி நிறுத்தி இருந்தது! 


     "ஐந்தாவது மாடியிலிருந்துதானே சத்தம் வந்தது! அங்க யாராயிருக்கும்?" என்றார் அங்கிருந்த கூட்டத்தில் வயதான நபர் ஒருவர்! 


    "ஐந்தாவது மாடியில மொத்தம் பத்து வீடு இருக்கு! அதுல எந்த வீட்டிலருந்து  சத்தம் வந்ததுன்னு யாருக்கு தெரியும்?"என்றார் அவர் அருகில் இருந்த குட்டை மனிதர்!


       "ஆமா நீ சொல்றதும் சரிதான்! எனக்கென்னவோ ஐந்தாவது மாடியில்  ஆறாவது வீட்டில் குடியிருக்கும் வீட்லருந்து தான் சத்தம் கேட்டதுனு நினைக்கிறேன்"

     

      "அங்க மருதமுத்து குடியிருந்தார்! "


        "ரொம்ப நல்ல மனிதர் ஆயிற்றே! என்னை பார்க்கும் போது எல்லாம் நலம் விசாரிச்சு பேசுவார்! எவ்வளவு முக்கியமான வேலையா வெளியே போனாலும் என்னிடம் பேசாமல் போக மாட்டார்! அவர் உண்டு அவர் வேலை உண்டுன்னு எப்போதும் இருப்பார்! அவரால எந்த தொந்தரவும் இந்த குடியிருப்பில் இருந்ததில்லை! நானும் ரொம்ப காலமா இந்த குடியிருப்பில் இருக்கேன்!"


      "இதுவரைக்கும் இப்படி ஒரு அசம்பாவிதம் நம்ம குடியிருப்பில் ஏற்பட்டதே கிடையாது! எல்லாமே புதுசா இருக்கு! என்ன நடக்குதுன்னு ஒன்னுமே புரியல! யாருக்கு வேண்டுமானாலும் எப்ப வேண்டுமானாலும் எதுவும் நடக்கும் அப்படிங்கறதுக்கு இப்ப நடந்ததும் பெரிய உதாரணமாக போயிருச்சு!"


      "நீ பாட்டுக்கு ஏதாவது உளறி வைக்காத! இன்னும் நாம யாரும் அந்த வீட்ல தான் சத்தம் வந்ததுன்னு உறுதியா தெரியாதப்ப நாம எதுவும் பேசக்கூடாது!"


      "எல்லாம் சரிதான்! ஆனா சத்தம் போட்டது பொம்பள குரல் மாதிரி இருந்துச்சு! மருதமுத்தோட வீட்டில அவர் மட்டும் தானே தனியா இருந்தார்! இதுல எப்படி திடீர்னு பொம்பள குரல் கேட்க முடியும்? அதுதான் எனக்கு ஒன்னும் புரியல? என்ன நடந்திருக்கும் என்று ஒரே யோசனையா கெடக்கு! உனக்கு எதுவும் புரிபடுதா?"


       "நாம என்ன போலீஸா என்ன? அவர்களுக்குத்தான் எல்லாத்தையும் துப்பறிக்கிற புத்தி இருக்கும்! நாம சாதாரண மனுஷன் தானே! நம்ம வேலைய பாக்குறதுக்கு நேரம் பத்த மாட்டேங்குது! இதெல்லாம் யோசிக்கிறதுக்கு எங்க கெடக்கு நேரம்!"என அலுத்துக் கொண்டார்!


       அதுவரையில் அவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த அய்யனார் இனியும் தாமதிக்க வேண்டாம் என நினைத்தான் போலும்! கூட்டத்தை விளக்கிக் கொண்டு மருதம் எழிலகத்தின் உள்ளே நுழைய முயன்றான்! கூட்டத்தில் தனித்தனியாக பேசிக் கொண்டிருந்த அனைவரும் திடீரென தங்களைக் கடந்து யாரோ இருவர் உள்ளே நுழைவதை பார்த்ததும் திகைத்துப் போய் அவர்களையே பெரும் கேள்விக்குறியோடு பார்க்கத் தொடங்கி விட்டார்கள்! 


      அவர்களின் ஒருவர் "நீங்கள் யார்? திடீரென உள்ளே நுழைந்து போய்க் கொண்டிருக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?" என கூட்டத்தை விளக்கிக் கொண்டு முன்னாள் வந்தார் வயதான வழுக்கைத்தலை கொண்ட மனிதர்!


      வழுக்கைத் தலை மனிதரின் கேள்விகளால் ஈர்க்கப்பட்ட இருவரும் அவரை நோக்கி திரும்பினார்கள்! அதற்குள் வழுக்கைத் தலை மனிதரும் அவர்கள் அருகே வந்து விட்டிருந்தார்! இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் அவரைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள்! 


     அய்யனாரையும் சாத்தப்பனையும் மேலும் கீழும் பார்த்து விட்டு தனது இடுப்பில் கையை ஊன்றி கொண்டு, வெள்ளைச் சட்டை வெள்ளை வேட்டியோடு நெற்றியில் குங்குமம் துலங்க சிவந்த நிறத்தில் காட்சி தந்தார் வழுக்கைத் தலை மனிதர்! 


       "நான் உங்கள் இருவரை பார்த்து தான் கேள்வி கேட்டேன்! நீங்கள் இதுவரை எவ்விதமான பதிலையும் தரவில்லை! யார் நீங்கள்? உங்களுக்கு இங்கு என்ன வேலை?"என மிரட்டும் தொனியில் அவர்களைப் பார்த்து கேட்டார்! 


      சாத்தப்பன் முந்திக்கொண்டு "இந்த கட்டிடத்தில் இருந்து யாரோ ஒரு பெண் அலறும் சத்தம் கேட்டது. அது என்னவென்று பார்க்கத்தான் இங்கு வந்தோம்!"என்றார்! 


       "அதெல்லாம் சரி! அதனைத் தெரிந்து கொள்ள நீங்கள் யார்? யாரைக் கேட்டு நீங்கள் பாட்டுக்கு உள்ளே நுழைந்து கொண்டிருக்கிறீர்கள்? யார் வேண்டுமானாலும் வந்து போகும் சத்திரம் இதுவல்ல? " என கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தார் வழுக்கைத் தலை மனிதர்!


       "நீங்கள் நினைப்பது போல் நாங்கள் ஒன்றும் யாரோ ஒருத்தர் அல்ல! எதையும் தெரிந்து கொள்ளாமல் உங்கள் பாட்டுக்கு ஏதாவது பேசி வைக்க வேண்டாம்!"என பதிலுக்கு கோபமாக பேசினார் சாத்தப்பன்! 


      "இது என்ன அநியாயமாய் இருக்கிறது! எங்கள் குடியிருப்புக்குள் நீங்கள் இருவரும் உள்ளே நுழைந்து விட்டு, உங்களுக்கு என்ன வேலை எனக் கேட்டால், நீங்கள் என் மீதே எரிந்து விளுகிறீர்கள்! உங்களை முதலில் போலீசில் பிடித்துக் கொடுக்க வேண்டும்! இத்தனை நேரம் உங்களிடம் நாகரிகமாக பேசிக்கொண்டு இருந்ததே மிகுந்த தவறாய் போய்விட்டது! "என சாத்தப்பனையும் அய்யனாரையும் பார்த்து கூறியவர் திடீரென பின்னால் திரும்பி "யாரங்கே! ...." என்றதும் மருதம் எழிலகத்தின் காவலாளி ஓடிவந்து அவர் முன்பாக பணிவாக நின்று கொண்டார். அவரைப் பார்த்த வழுக்கை மனிதர் "உடனடியாக போலீசை கூப்பிடு!" என்றார்! காவலாளியும் தனது காவல் கூண்டை நோக்கி ஓடிச் சென்று தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள சென்று கொண்டிருந்தார்! 


       "உங்களுக்கு அத்தனை அவசரம் தேவையில்லை!" என்றார் சாத்தப்பன்! 


      "ஏன்? அதற்குள் உங்களுக்கு பயம் வந்து விட்டதா? அப்படி வாருங்கள் வழிக்கு! போலீசைக் கூப்பிடு என்று சொன்னதும் தானாக வழிக்கு வந்து விட்டார்கள்!"என தான் ஏதோ பெரிய சாதனை செய்துவிட்ட நினைப்பில் விழுந்து சிரித்துக் கொண்டே அங்கிருந்த கூட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தார் வழுக்கைத்தலை மனிதர்! 


     "தாங்கள் பெருமை கொள்ளும் அளவிற்கு இங்கு ஏதும் நடந்துவிடவில்லை! உண்மை தெரிந்தால் உங்கள் முகத்தை எங்கே வைத்துக் கொள்வீர்களோ தெரியவில்லை!" என்றார் சாத்தப்பன்! 


     "அப்படி என்ன அரும்பெரும் உண்மையை வைத்திருக்கிறீர்கள்! உங்கள் சௌரியத்திற்கு உள்ளே நுழைந்தது பெரும் தவறு! அதை துணிச்சலாக செய்ததோடு இப்போது என்னிடம் தேவையில்லாமல் வம்பளந்து கொண்டு வாய்சாவடல் வேறு பேசிக் கொண்டிருக்கிறீர்கள்! இதற்கெல்லாம் சேர்த்து நீங்கள் மிகுந்த வருத்தப்பட போகிறீர்கள்! அது மட்டும் எனக்கு நன்றாக தெரிகிறது!" என்றார் வழுக்கைத் தலை மனிதர்! 


     "அடடே! உங்களுக்குத்தான் சிறிதும் பொறுமை என்பதே கிடையாதா? மீண்டும் மீண்டும் பெருமிதம் கொள்வதிலேயே காலத்தை கடத்துகிறீர்களே தவிர உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ளும் பக்குவம் உங்களுக்கு சிறிதும் கிடையாது!"என்றார் சாத்தப்பன்! 


     "சரி! நீரே அனைத்தையும் கூறிவிடு! மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம்!" என வேண்டா வெறுப்பாக அவர்களைப் பார்த்து கூறினார் வழுக்கைத் தலை மனிதர்! 


      "ஒரு வழியாக இப்போதாவது ஒத்துக் கொண்டீர்களே! நீங்கள் நினைப்பது போல் நாங்கள் ஒன்றும் தவறான நபர் அல்ல! இதோ என்னுடன் இருக்கும் இவர் சென்னையின் குற்றப்பிரிவு காவல் துறை அதிகாரி அய்யனார்!" எனக் கூறிவிட்டு அங்கிருந்தவர்களை பார்த்தார்! 


     கூட்டத்தில் அதுவரை நிலவி வந்த சலசலப்பு குறைந்து அனைவரும் அய்யனாரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்!


     அய்யனார் எதுவும் கூறாமல் மாடிக்கு செல்லும் லிப்ட் நோக்கி நகர்ந்து விட்டிருந்தான்! சாத்தப்பன் கூட்டத்தை ஒரு முறை பார்த்துவிட்டு அய்யனாரை பின்தொடர்ந்து இருந்தார்! உறைந்த நிலையில் லிப்ட் இருந்தது! அப்போது மருதம் எழிலகத்தைச் சார்ந்த காவலாளி தடதடவென்று ஓடி வந்தான்! திடீரென்று அவனது வரவால் அவனை நோக்கி இருவரும் திரும்பி இருந்தார்கள்! 


     ஓடி வந்ததால் மூச்சு வாங்கிக் கொண்டே"மழை  பேஞ்சதால் கரண்ட் கட் ஆகி விட்டது!  அதனால லிப்ட் வேலை செய்யாம அப்படியே நின்னு போய்விட்டது! இப்பதான் கரண்ட் வந்திருக்கு! திரும்பவும் வேலை செய்ய எப்படியும் இருபது நிமிஷம் ஆகும்! "எனக் கூறிக் கொண்டே தன் தலையை சொரிந்து கொண்டிருந்தான் காவலாளி! 


      காவலாளிடம் எதுவும் கூறாமல் மாடிக்கு செல்லும் படிக்கட்டை நோக்கி அய்யனார் சென்றதும் அவனைத் தொடர்ந்து சாத்தப்பனும் மருதம் எழிலகத்தின் காவலாளியும் பின் தொடர்ந்தார்கள்! ஏற்கனவே கூட்டத்தில் இருந்தவர்கள் கூறியபடி ஐந்தாவது மாடியை நோக்கி அய்யனார் விறுவிறுவென ஓட்டம் நடையுமாக படிகளில் ஏறிக் கொண்டிருந்தான்! அவனைத் தொடர்ந்து கொண்டிருந்த சாத்தப்பனும் காவலாளியும் எத்தனை முயன்றும் அவனது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பின்தங்கி தவித்துக் கொண்டிருந்தார்கள்! 


      நனைந்த சூ  கால்களில் பரபரப்பை பற்ற வைத்துக்கொண்டு ஐந்தாவது மாடியில் அடைந்திருந்த அய்யனார் வெகு நிதானமாக அங்குள்ள ஒவ்வொரு அறைகளையும் நோட்டமிட்டுக்கொண்டு சென்று கொண்டிருந்தான்! அங்கு உள்ள பத்து  அறைகளில் குடியிருக்கும் நபர்கள் ஏற்கனவே வெளியேறி கீழே சென்று விட்டதால் ஒரு சில வயதான நபர்கள் மட்டும் பொந்திலிருந்து எட்டிப் பார்க்கும் எலிகள் போல் தங்களது வாசலில் இருந்து வெளியே தலையை மட்டும் காட்டிக் கொண்டு இருந்தார்கள்! அய்யனார் ஆறாவது அறையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த போது நான்காவது அறையில் இருந்த முதியவர் வெளியே வந்து ஆறாவது அறையைப் பார்த்து வலது கையின் ஆட்காட்டி விரலால் ஏதோ சைகை செய்து கொண்டிருந்தார்! முதியவரின் சைகையை தொடர்ந்து ஆறாவது அறையை நோக்கி சென்றவன் வாசலில் நுழைய முற்பட்டவன் ஒரு கணம் தயங்கி நின்று விட்டான்! அதுவரையில் தங்களது அறைகளிலிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த முதியவர்கள் அய்யனாரின் செயலால் ஈர்க்கப்பட்டு விழிகளில் என்ன என்ற கேள்விக்கணைகளை ஏந்திக்கொண்டு அங்கேயே நின்று விட்டார்கள்! 

(தொடரும்....03)





      


No comments:

Post a Comment