🌾90. மாதண்ட நாயகரின் உத்தரவு🌾
கங்கைகொண்ட சோழபுரத்தின் அரண்மனையில் பொற்கொடியை கொலை செய்ய முற்பட்டு அகப்பட்டு கொண்ட முகமூடி மனிதனான கதிரவன் பெரும் ஆணவத்தோடு சிரித்தது அந்த அறையில் இருந்த அனைவரிடமும் பெரும் யோசனைக்கு தள்ளி விட்டிருந்தது!
"அடேய் மூடனே! இப்பொழுது வகையாக சிக்கிக் கொண்டாய்! உன்னைத் தவிர வேறு நபர்கள் இந்த அரண்மனயில் உள்ளார்களா என்ற உண்மையை கூறிவிடு?"என்றார் மாதண்ட நாயகர்!
"நான் உண்மையை கூறினாலும் அல்லது பொய் கூறினாலும் என்னை எப்படியும் நீங்கள் விட்டு வைக்கப் போவதில்லை! அப்படி இருக்க என்னிடம் ஏன் இந்த குழந்தைத்தனமான விளையாட்டு!"எனக்கூறி மீண்டும் ஆணவத்தோடு சிரித்தான் கதிரவன்!
"நீ கூறுவது உண்மைதான்! உனது மரணம் நிச்சயிக்கப்பட்ட ஒன்றுதான்! அவை எப்படி நிகழ வேண்டும் என்பது நீ கூறும் பதில் தன் உள்ளது!"என்றார் மாதாண்ட நாயகர்!
"நாங்கள் எப்பொழுது இந்த சதிச் செயலில் குதித்தோமோ அப்போதே எங்களுக்கு என்ன நடக்கும் என நன்கு தெரியும்! அதனால் உங்களின் இந்த போலியான பூச்சாண்டித்தனமான மிரட்டல் என்னிடம் பலிக்காது! அப்படி பலிக்கும் என நீங்கள் எண்ணினால் அது உங்கள் மடத்தனம்! உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள்! அதைப்பற்றி எனக்கு எந்தவிதமான கவலையும் இல்லை!"
"இத்தனை தெளிவும் துணிச்சலும் நாட்டின் மேன்மைக்கு பயன்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்! கேவலம் தேசத்தை சீரழிக்கும் நயவஞ்சகத்திற்கு அதை பயன்படுத்தி வீணாக நீங்கள் அழிவதோடு மட்டுமல்லாமல் தேசத்தையும் சீரழிக்கும் உங்கள் போக்கை எண்ணித்தான் சிறிது வருத்தமாக உள்ளது! நான் என்ன கூறினாலும் உன் காதில் விழப்போவதில்லை!"
"பிறகு ஏன் தாமதிக்கிறீர்கள்? நீங்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் எனக்கு கொடுக்கலாம்! அவை குறித்து எனக்கு துளியும் வருத்தமில்லை!உம் ஆகட்டும்!"என்றான் கதிரவன்!
"உனக்கு அத்தனை நெஞ்சழுத்தமா? இவனை இழுத்துச் சென்று நாளை காலையில் வெட்டுப்பாறையில் இவனது தலையை சீவித் தள்ளுங்கள்! உம்! இனியும் இவன் என் கண் முன்னால் நிற்கக்கூடாது இழுத்துச் செல்லுங்கள்!"என மாதண்ட நாயகர் அங்கு உள்ள சோழ வீரர்களை பார்த்து உத்தரவிட்டார்!
சோழ காவல் வீரர்கள் முகமூடி மனிதனான கதிரவனே இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டிருந்தார்கள்!
"தங்காய்! நீ படுத்து உறங்கம்மா! எங்களுக்கு வேறு பணிகள் உள்ளது! அதனைப் பார்க்க வேண்டும்!"எனக் கூறியதோடு அங்குள்ள காவலர்களுக்கு மல மல வென பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து விட்டிருந்தார் மாதண்ட நாயகர்!
பொற்கொடியின் மாளிகையைச் சுற்றி பெரும் காவல் பலப்படுத்தப்பட்டது! மேலும் அரண்மனை எங்கும் சோழ காவல் வீரர்கள் தடதடவென்று ஓடிக்கொண்டு இருந்தார்கள்! அதுவரையில் மங்கிய ஒளியில் எரிந்து கொண்டிருந்த விளக்குகளின் நாக்குகள் தூண்டப்பட்டு பெரும் ஒளி எங்கும் பரவி கிடந்தது! பல்வேறு பகுதிகளில் காவல் பணிகள் செய்து கொண்டிருந்த சோழக் காவல் வீரர்கள் அங்கும் இங்கும் விரைந்து ஓடிக்கொண்டிருந்தார்கள்!
சிறிது நேரத்திற்கெல்லாம் மாதண்ட நாயகரின் அரண்மனை மாளிகை பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டு விட்டிருந்தது! மாதண்ட நாயகரின் மாளிகையின் முன்பு பெரும் ஆசனம் ஒன்று போடப்பட்டிருந்தது! ஆசனத்தில் அமர்ந்து கொண்டு பெரும் யோசனையில் இருந்தார் மாதண்ட நாயகர்! அவருக்கு அருகில் மற்றொரு மர ஆசனத்தில் அமர்ந்து கொண்டிருந்த இளம்வழுதி அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒவ்வொன்றையும் விழிப்புடன் கவனித்துக் கொண்டிருந்தான்!
அரண்மனையில் முக்கிய பொறுப்புகளில் இருந்த காவல் வீரர்களின் தலைவர்கள் அனைவரும் மாதண்ட நாயகரின் மாளிகை வாசலில் குழுமியிருந்தார்கள்! அங்கு கூடியிருந்த அவர்களின் வதனங்கள் அடுத்துஎன்ன நடக்கப் போகிறது? திடீரென கருக்கல் நேரத்தில் ஏன் இந்த கூட்டம்? அப்படி என்ன அவசரம்? ஏதேனும் புதிய ஆபத்து உருவாகிவிட்டதோ? ஒன்றும் புரியவில்லையே? எதற்காக திடீரென்று இந்த அவசரக் கூட்டத்தில் அவசியமென்ன? என பலவாறான கேள்விக்கணைகள் அவர்கள் முகத்தில் ஓடிக்கொண்டிருந்தது! தங்களது அருகில் நின்று கொண்டிருந்த மற்ற காவல் தலைவர்களையும் விழிகளாலே வினவிக் கொண்டபோது பதில் ஏதும் கிடைக்காததால் என்ன செய்வதென்று புரியாமல் விழித்துக் கொண்டு இருந்தார்கள்!
ஆசனத்தில் கம்பீரமாக அமர்ந்து கொண்டிருந்த மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமான் அரண்மனை மாளிகையின் வாசலில் குழுமியிருந்த சோழக் காவல் வீரர்களின் தலைவர்களைப் பார்த்து கூறினார்; "இதுவரையில் நம தேசத்தில் எண்ணற்ற கலவரங்களும் சதிகளும் நடந்தேறிக் கொண்டிருந்தது! அவற்றை பற்றி நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம்! ஆனால் இன்று நமது அரண்மனையிலேயே சதிகாரர்கள் புகுந்து விட்டதோடு நமது அரண்மனை காவல் பணியில் இருக்கும் காவலர்களில் ஒருவனாகவே அவன் இருந்தது தான் பெரும் வியப்பாக உள்ளது! இவையெல்லாம் எவ்வாறு நடக்கிறது? அவை ஏன் நமது பார்வையில் இருந்து தப்பிவிட்டது? இன்னும் எத்தனை பேர் இங்கு நமது காவல் பணியில் ஊடுருவியுள்ளார்களோ, எதுவும் நமக்குத் தெரியவில்லை! சோழ காவலர்களிடமட்டும் தான் ஊடுருவி உள்ளார்களா அல்லது மற்ற பகுதிகளிலும் புகுந்து விட்டிருக்கிறார்களா? என எதுவும் நமக்குத் தெரியவில்லை! உடனடியாக இப்பொழுதே அரண்மனையின் ஒவ்வொரு பகுதிகளும் உள்ள நபர்களின் விவரங்களை சோதித்து சரி பார்க்க வேண்டும்! சந்தேகப்படும்படியாக யார் இருந்தாலும் உடனடியாக அவர்களை கைது செய்து காராக்கிரகத்தில் அடைத்து விடுங்கள்! எந்தவிதமான தயக்கமும் வேண்டாம்! நாளை காலைக்குள் நமது அரண்மனையின் ஒட்டுமொத்த நிலவரமும் எனக்கு தெரிந்தாக வேண்டும்! இனியும் இங்கு எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறுவதற்கு நான் அனுமதியேன்! உங்கள் பணிகளை நிறைவேற்றுவதற்கு எத்தனை வீரர்கள் தேவைப்படுகிறார்களோ அத்தனை பேர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்! உங்களது பணிகளில் ஈடுபடுத்தும் நம்பிக்கைக்கு நீங்களே பொறுப்பாதீர்கள்! சரியான நபர்களை தேர்வு செய்து இந்த பணியை மேற்கொள்ளுங்கள்! எக்காரணம் கொண்டும் எந்தவிதமான இடையூறும் தடையும் இதில் நடைபெற்று விடக்கூடாது!"
அங்கிருந்த சோழ காவல் வீரர்களின் தலைவர்களில் மிகவும் வயதான ஒருவர் முன்வந்து " ஆகட்டும் ஐயா! தாங்கள் கூறியபடியே அனைத்தையும் செய்து விடுகிறோம்! நடந்த தவறுகளுக்கு எங்களை மன்னித்து விடுங்கள்! இனியும் இது போன்ற தவறு ஏதும் நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறோம்! எங்கள் காவல் வீரர்களில் ஒருவன் இத்தகைய சதி செயலில் ஈடுபட்டதற்கு நாங்கள் வெட்கப்படுகிறோம்! பலவிதமான சோதனைகளுக்கு பின்பு தான் எங்கள் காவல் பணிகளில் வீரர்களை தேர்வு செய்கிறோம்! அப்படி இருந்தும் இந்தத் தவறு எவ்வாறு நடந்ததென்று எங்களுக்கு தெரியவில்லை! நடந்துவிட்ட தவறுக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம்! இனியும் இது போன்று நடக்காமல் அதற்கு வேண்டிய நடவடிக்கையை கட்டாயம் மேற்கொள்வோம் ஐயா! எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்! இனி ஒருபோதும் சோழத்தின் காவல் பணிகளில் எந்தவிதமான தொய்வு இருக்காது என உறுதி அளிக்கிறோம்"என்றார்!
"நீங்கள் யாரும் வேண்டுமென்றே இதனை செய்தீர்கள் என்று நான் கூறவில்லை! சதிகாரர்கள் திட்டமிட்டு தங்களது சதி செயல்களில் உங்களை எப்படியோ ஈடுபடுத்தி விடுகிறார்கள்! அதற்காக நீங்கள் அனைவரும் குற்றவாளிகள் எனக் கூற முடியாது! நம்மை அறியாமல் நடந்து விடும் தவறுகளுக்கு இனியும் நாம் இடம் தரக் கூடாதென்று தான் கூறுகிறேன்! தேசம் இன்று உள்ள சூழலில் நாம் மிகவும் கவனமாக செயலாற்ற வேண்டும்! அப்போதுதான் எந்தவிதமான தவறுகளுக்கும் இடம் தர வாய்ப்பு இருக்காது! மிகுந்த பொறுப்போடு செயல்பட்டு இந்தக் காரியத்தை செயலாற்றுங்கள்! அவை தான் நம் அனைவருக்கும் நன்மை பயக்கும்! இங்கு நடந்த விவரங்கள் நமது சோழ மன்னரின் செவிகளுக்கு சென்றால் மிகுந்த வருத்தம் கொல்லுவார்! ஏற்கனவே தேசத்தில் நடைபெறும் பல்வேறு செய்திகளை கேட்டு மிகுந்த வருத்தத்தில் உள்ளார்! எங்கே அவை இன்னும் அதிகரித்து விடுமோ என்ற அச்சம் என்னுள் உள்ளது! அவ்வாறு நடந்து விடாமல் அதனை தடுத்து காப்பது நமது கையில் தான் உள்ளது! அதை நோக்கிய பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து நீங்கள் அனைவரும் செயல்பட வேண்டுமென இந்த நேரத்தில் உங்களிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்! நம்பிக்கை ஒன்று தான் நம்மிடம் இப்பொழுது உள்ளது! அதை கையில் கொண்டு காரியத்தை செயலாற்ற வேண்டியதுதான்! அனைவரும் விரைந்து செயலாற்றி விடியலில் எனக்கு நல்லதொரு பதிலை கூறுங்கள்!"என்றார் மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமான்!
"கண்டிப்பாக, நீங்கள் வருந்தும் அளவிற்கு எதுவும் நீ இனி நடக்காது! என்ன உறுதியாக நாங்கள் தெரிவிக்கிறோம்!"எனக் கூறியதோடு அங்குள்ள சோழக் காவல் தலைவர்கள் அனைவரும் மாதண்ட நாயகரே வணங்கி விடை பெற்று சென்றார்கள்!
"இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்கள் அனைத்தும் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது எனக்கு? நாளை நடைபெற இருக்கும் மந்திர ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் சிற்றரசர்களும் அமைச்சர் பெருமக்களும் இது குறித்து என்ன கூறப் போகிறார்களோ என்ற அச்சம் மேலோங்குகிறது! நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் பெரும் வருத்தத்தையும் அச்சத்தையும் தான் உண்டாக்கிறது! சதிகாரர்கள் இன்னும் எத்தனை எத்தனை சதி திட்டங்களை அரங்கேற்ற காத்து உள்ளார்களோ? ஒன்றும் புரியவில்லை எனக்கு! "என இளம்வழுதியை பார்த்து கூறினார் மாதாண்ட நாயகர்!
"தாங்கள் கூறுவது மறுக்க இயலாத உண்மைதான்! ஆனாலும் ஒன்றை கவனித்துப் பாருங்கள்! இதற்கு முன்பாக நடந்த அத்தனை சதிச் செயல்களிலும் சதிகாரர்கள் நம்மிடம் உயிருடன் அகப்படவில்லை! ஆனால் கங்கைகொண்ட சோழபுரத்தில் மட்டும்தான் அகப்பட்டுக் கொண்டு உள்ளார்கள்! அதுவே அவர்களது முடிவுரைக் காண நாள் நெருங்கி வட்டதை உணர்த்துகிறது! அதனால் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது ஐயா! கண்டிப்பாக அவர்களுக்கான சரியான தண்டனை விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது!" என்றான் இளம்வழதி!
"அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது! இருப்பினும் அவர்களின் தலைவன் கோடியக்கரை மூர்க்கன் இறந்த பின்பும் இவர்கள் எப்படி செயலாற்றுகிறார்கள் என்றுதான் புரியவில்லை!"என்றார் மாதணட நாயகர்!
"நான் ஏற்கனவே தங்களிடம் கூறி உள்ளேன் ஐயா! கங்கைகொண்ட சோழபுரத்தில் நான் நுழையும் முன்பாக இருண்ட காட்டில் என்னிடம் அகப்பட்டுக் கொண்ட சதிகாரர்களை இங்கு அழைத்து வந்து நமது காவலரிடம் ஒப்படைத்து உள்ளேன்! அவர்கள் எனக்கு கூறிய தகவல் யாதெனில் இதுவரை நடந்த நிகழ்வு மட்டுமல்ல, இப்போது நடந்த செயல்களும் ஏற்கனவே கோடியக்கரை மூர்க்கனால் அவர்களுக்கு கொடுக்கப்பட்டவை தான்! புதிதாக ஏதும் அவர்களுக்கு உத்தரவு கொடுக்கப்படவில்லை! அதனால் நாம் உறுதியாக நம்பலாம்! இனியும் எந்த பேராபத்தும் வராது, அப்படியே வந்தாலும் அதனை துணிச்சலோடு எதிர்கொள்ளும் பக்குவத்தோடு செயலாற்ற வேண்டியதுதான்"என்றான் இளம்வழுதி!
"சரி மிகுந்த நேரம் ஆகிவிட்டது! விடியலில் சந்திப்போம்!"என இளவழுதியிடம் கூறியவர் தனது மாளிகைக்குள் சென்று விட்டிருந்தார் மாதண்ட நாயகர்! அவர் சென்ற பின்பு தனது அறையை நோக்கி நகர்ந்து விட்டிருந்தான் இளம்வழுதி!
(தொடரும்...... அத்தியாயம் 91ல்)
No comments:
Post a Comment