Tuesday, 4 March 2025

இராஜமோகினி யாழிசைசெல்வா அத்தியாயம் 86

 🌾86. பொற்கொடி!🌾

      சோழ தேசத்தின் தலைநகரமான கங்கைகொண்ட சோழபுரம் அந்த நள்ளிரவிலும் விழாக் காலம் போல் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது! அல்லங்காடி வீதிகள் பெரும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தன!

       நிலவுக்கு போட்டியாக அங்காடிகளின் பெரும் பெரும் தீபங்களின் ஒளியில் இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தன! ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாக அங்காடி வீதிகளில் உலவிக்கொண்டிருந்தார்கள்! அதிலும் குறிப்பாக முத்தங்காடி வீதியில் குமரிகளின் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது! பெரும் கூடைகளில் வைக்கப்பட்டிருந்த ஆழ்கடல் முத்துக்கள் நிலவின் ஒளியில் பூமியில் பூத்திருக்கும் அதிசய மலர் இதுவோ என வியந்து பார்க்குமளவிற்கு குவிந்து கிடந்தன! 

        ஒற்றை பெரும் முத்து கோர்த்த முத்து மாலை ஒன்றை எடுத்த இளம் கன்னி ஒருத்தி, கழுத்தில் அணிந்து கொண்டு அங்காடியின் வீதிகளில் அப்படியும் இப்படியுமாக நடந்து கொண்டிருந்தாள்! பருவமோ பதினெட்டு! பெரும் முத்து அணிந்து செல்கிறாள் இளஞ்சிட்டு எனப் பார்க்கும் ஆண்களை பொறாமை கொள்ளும் அளவிற்கு ஓசிந்த இடையை வெடுக்கென சுண்டி நடந்து கொண்டிருந்தவள், தனது குவளை விழிகளைச் சுழட்டி காண்பித்தவள் தனது தோழியை கேலி செய்து கொண்டிருந்தாள் அந்தக் கன்னி! 

      இத்தனை கலவரத்திலும் அங்காடி வணிகர் கன்னியை யாதொன்றும் கூறாமல் தனது பணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்! அங்கு அப்போது வந்த வயதான நபர் "ஏனையா! இத்தனை ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறாளே இந்த நங்கை! யார் இவள்? நீங்களும் எதுவும் கூறாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே! ஒருவேளை அவள் கழுத்தில் அணிந்திருக்கும் முத்து மாலையோடு சென்றுவிட்டால் என்ன செய்வீர்கள்? உங்களுக்கு சிறிதும் கவலை இல்லையா? இது என்ன அநியாயமாய் இருக்கிறது? இத்தனை தூரம் அவளை நம்பும் அளவிற்கு அவளிடத்தில் என்ன கண்டு விட்டீர்கள்?" என அனலில் விழுந்த புழுவாய் கொதித்தெழுந்து கேட்டுவிட்டார் !

     "ஐயா! விவரம் தெரியாமல் பேசி விட்டீர்கள்! உங்களுக்கு என்ன வேண்டுமோ அதனை கேட்டுப் பெறுங்கள்! தேவையின்றி நீங்கள் எதுவும் பேச வேண்டாம்!" என  பெரியோரின் வாய் அடைக்கும்படி அங்காடியின் வணிகர் கூறினார்! 

      "இது என்ன அநியாயமாய் இருக்கிறது? நடக்கும் அநீதியை கூறினால்? நீங்கள் என்னை அல்லவா விரட்டுகிறீர்கள்? இந்த தேசம் எதை நோக்கித்தான் செல்கிறது? ஏற்கனவே ஆங்காங்கே பல்வேறு பிரச்சனைகள் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கின்றன? இப்போது என்னவென்றால் தலைநகரத்திலே இரவென்றும் பாராமல் இப்படி ஒரு கூத்து நடந்து கொண்டிருக்கிறது! இதனை யார் தடுப்பார்யென தரங்கெட்டு போய்விட்டதா இந்த தேசம்! எத்தனையோ அரும்பெரும் மனிதர்கள் ஆட்சி செய்த பூமி இது! அதற்கு இப்படி ஒரு சோதனையா வர வேண்டும்! நடப்பதை எல்லாம் இறைவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்! அதற்கு ஒரு நாள் எல்லோரும் பதில் சொல்லித்தான் தீர வேண்டும்! அந்த நாள் வெகு தொலைவில் இல்லை! என்பதை மட்டும் உணர்ந்து செயல்படுங்கள்! " என மீண்டும் கொதிக்கத் தொடங்கிவிட்டார் பெரியவர்! 

       "ஐயா! தாங்கள் இத்தனை தூரம் வருந்தும் அளவிற்கு இங்கு ஏதும் நடந்துவிடவில்லை! அப்படி இருக்கையில் நீங்கள் ஏன் இப்படி கிடந்து குதிக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும் அதனைக் கூறிப் பெற்றுச் செல்லுங்கள்! அதனை விடுத்து தேவையில்லாமல் எதுவும் கூற வேண்டாம்! "என முத்தங்காடியின் வணிகர் பெரியவரை பார்த்துக் கூறினார்! 

      "என்னையா இது? மீண்டும் மீண்டும் என்னைத்தான் விரட்ட எண்ணுகிறீர்களே தவிர, ஒருமுறையேனும் அந்த நங்கையை பற்றிப் பேச மறுக்கிறீர்கள்? என்ன காரணமோ? எனக்கு ஒன்றும் புரியவில்லை? இவை இன்று மட்டும் தான் நடக்கின்றதா? அல்லது தினந்தோறும் இதே நிகழ்வு தானா? " என்றார் பெரியவர்! 

        "அது குறித்து எல்லாம் தங்களுக்கு எதுவும் கூற வேண்டிய அவசியம் இல்லை! தங்களுக்கு வேண்டியதை முடிந்தால் பெற்றுச் செல்லுங்கள்! இல்லை விலகிச் செல்லுங்கள்!" என முத்தங்காடியின் வணிகர் கடுமையாக பெரியவரை பார்த்துக் கூறினார்! 

       "நான் புரியாமல் தான் கேட்கிறேன் ஐயா? யார் இந்த நங்கை? அவளுக்கேன் இத்தனை சலுகை? எனக்குத் தெரிந்தாக வேண்டும்?" என விடாமல் கேட்டுக் கொண்டிருந்தார் பெரியவர்! 

       "உங்களோடு மிகுந்த தொந்தரவாக போய்விட்டது எனக்கு! சரி இப்படி வாருங்கள் உங்களுக்கு கூறுகிறேன்" என பெரியவரை தான் பக்கத்தில் அழைத்து வந்து "இந்த இளம் நங்கை வேறு யாரும் அல்ல நமது மாதண்ட நாயகரின் தங்கை பொற்கொடி ஆவார்! இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? "என்றார் முத்தங்காடியின் வணிகர்! 

      "பெரும் குடும்பத்து பெண் என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாமா? அவர்களுக்கென்று தனிச் சட்டம் ஏதும் இங்கு இயற்றப்பட்டு உள்ளதா? நான் அறிந்த வரையில் அப்படி ஏதும் அறிந்திருக்கவில்லை! புதிதாக ஏதேனும் இப்பொழுது புனைந்து உள்ளார்களோ என்னவோ? நடப்பது எல்லாம் நன்மை பயக்கும் என்று நான் நினைக்கவில்லை! எல்லாவற்றிக்கும் கால நேரம் இருக்கிறது! இப்படியே போனால் இவை எங்கு போய் முடியுமோ தெரியவில்லை! "என மீண்டும் கொதித்துக் கொண்டு பேசினார் பெரியவர்! 

      "பெரியவரே! உம்மிடம் இப்போது தானே படித்துப் படித்துக் கூறினேன்! அதற்குள் அத்தனையும் மறந்து விட்டதா என்ன? வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது போல், மறுபடியும் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள்! இவ்வாறு பேசிக் கொண்டிருப்பது உமக்கு நன்மை தருவதாக எனக்கு தெரியவில்லை! விரைந்து இங்கிருந்து அகன்று செல்லும்! அதுதான் உமக்கு நன்மை பயக்கும்! தேவையில்லாமல் ஏதேனும் பேசிவிட்டு வம்பில் போய் சிக்கிக் கொள்ளாதே! அதுதான் உமது இந்த வயதான காலத்திற்கு நல்லது!" என பதமாக முதியவரிடம் எடுத்துக் கூறினார் முத்தங்காடி வணிகர்!

       "அட போயா! இந்த வயதான காலத்தில் இதற்கு மேல் நான் இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன? என் மனதில் தோன்றியதை கேட்டேன்! அதற்கே நான் வருத்தப்பட வேண்டும்! நான் ஒன்றும் இல்லாததும் பொல்லாததும் ஏதும் கூறிவிடவில்லை! நான் ஒரு சாதாரண குடிமகன்! அப்படி இருக்க என் மனதில் தோன்றும் நியாயங்களை கேட்பதில் என்ன தவறு? இதற்கு யாரும் மறுப்பு கூற இயலாது! இதனை நீரும் அறிவீர் தானே! அப்படி இருக்கும்போது எதற்காக என்னை விரட்டுவதிலே இருக்கிறாய்?" என முத்தங்காடியின் வணிகரைப் பார்த்து கேட்டார் பெரியவர்!

     இதற்கிடையே பெரும் முத்து மாலையை கழுத்தில் போட்டுக் கொண்டு நடந்து கொண்டிருந்த இளம் கன்னி பொற்கொடி தனது தோழி அல்லியைப் பார்த்து "ஏனடி! இந்த முத்து எனக்கு பொருத்தமாக உள்ளதா? இல்லை வேறு ஏதேனும் வாங்கிக் கொள்ளலாமா?"என்றாள!

      "போதுமடி அம்மா! இதுவரையில் இங்கு உள்ள அத்தனை முத்தங்காடியையும் ஒரு வழி பண்ணி விட்டாய்! பாவம் அந்த வணிகர்கள் எதுவும் பேச முடியாமல் வாயடைத்து போய் உள்ளார்கள்! அவர்கள் அனைவரும் பேசாமல் இருப்பது மாதண்ட நாயகரின் முகத்திற்காகத்தான், அதற்காக அதனை ஒரு கருவியாக பயன்படுத்திக்கொண்டு நீ போடும் ஆட்டம் இத்தோடு முடித்துக் கொள்! அவை தேவையில்லாமல் உன் அண்ணனுக்கு பெரும் அவகேடாய் போய் முடிந்து விடப் போகிறது! இங்கு ஏற்கனவே அனைவரும் உன்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்! அவர்களது விழிகளில் தெரியும் நெருப்பு பெரும் காட்டையே எரித்து விடும் போலும்! வீணாக உனக்கு தான் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொள்கிறாய்! இது உனது எதிர்காலத்துக்கு நன்மையைத் தராது! "என்றாள் தோழி அல்லி!

      "இவையெல்லாம் மற்றவர் நினைப்பதா? அல்லது உன் மனதில் உள்ளவற்றை கூடுதலாகத் திரித்து கூறுகிறாயா? "என்றாள் பொற்கொடி! 

     "நீ என்னடி அம்மா! இப்படி கூறிவிட்டாய்! உண்மையைச் சொல்வதற்காக என் மேல் இப்படி ஒரு பழியை தூக்கிப் போட்டு விட்டாயே! இது உனக்கே சரியாகப் படுகிறதா? உன் நலனை எப்பொழுதும் பேணுபவள் என்பதை மறந்து விட்டு பேசுகிறாயா? இதுதானா என்னை நீ புரிந்து கொண்ட லட்சணம்? எனக்கு உன்னை நினைக்கவே வெட்கமாக இருக்கிறது ?"என்றாள் அல்லி!

      "சரி அதனை விடு! ரொம்பவும் அலட்டிக் கொள்ளதே! உன்னை நானும் என்னை நீயும் அடிக்கடி இவ்வாறாக பேசிக்கொள்வது இயல்பு தானே? அதற்கு போய் ரொம்பவுந்தன் அலட்டிக் கொள்கிறாய்? இப்போதாவது கூறு எனக்கு இது எடுப்பாக உள்ளதா?"

       "உனது அழகிற்கு எல்லாமே எடுப்பாக தன் இருக்கும்! இருந்தாலும் நீ ஏற்கனவே வாங்கிக் குவித்து வைத்திருக்கும் ஆபரணங்களோடு சேர்ந்து இதுவும் ஒன்றாகி விடாமல் பார்த்துக்கொள்! அது மட்டும் தான் நான் கூறுவேன்!"

      "சரி! போனாப் போகிறது! நீ இத்தனை தூரம் கூறுவதால் இதை நான் எடுத்துக் கொள்ளவில்லை! சரி வா புறப்படலாம்!" எனக் கூறிக் கொண்டே கழுத்தில் உள்ள முத்து மாலையை கழட்டி எடுத்து முத்தங்காடியின் முத்துக்கள் நிரம்பிய கூடையில் வைத்துவிட்டு புறப்பட தயாரானாள்!

      "நீங்கள் எடுத்துச் செல்லுங்கள்! இத்தனை நேரம் இதை கழுத்தில் அணிந்து அழகு பார்த்துக் கொண்டிருந்தீர்கள்! தங்களுக்கு பிடித்திருக்கும் என நினைக்கிறேன்! அதனால் எடுத்துக் கொள்ளுங்கள்! "என்றார் முத்தங்காடியின் வணிகர்! 

     "அவள் தான் வேணாம் என்று சொல்கிறாளே அய்யா! பிறகு ஏன் அவளை வற்புறுத்தி எடுக்க சொல்கிறீர்கள்? ஒருவேளை உங்கள் வணிகம் கெட்டுப் போய்விடும் என்று நினைக்கிறீர்களா?" என்றாள் அல்லி!

      "அப்படி ஏதும் நான் நினைக்கவில்லை! அவருக்கு பிடித்திருந்தால் எடுத்துக் கொள்ளும்படி தான் கூறினேன்!"

      "ஓ கோ! இதனை எடுத்துச் சென்றால் எப்படியும் அவளது சகோதரர் மாதண்ட நாயகர் இதற்கு உரிய விலையை கொடுத்து விடுவார்! அதனால் கைக்கு வந்தது வீணாக போக வேண்டாம் என எண்ணுகிறீர்கள் போலும்!"எனக் கூறிச் சிரித்தாள்  அல்லி!

     "எனது கடையில் எவ்வளவோ முத்துக்களை வாங்கிச் சென்றுள்ளார்! அப்படி இருக்க நான் அவ்வாறு நினைப்பேனா?"

     "பார்த்தாயா? முத்தங்காடி வணிகரின் சாமர்த்தியத்தை? ஏற்கனவே வாங்கிய முத்துக்களோடு சேர்த்து இதனையும் வாங்கிக் கொள்ளுங்கள் என சொல்லாமல் சொல்கிறார்! வணிகர் அல்லவா? அதனால்தான் அத்தனை சாமர்த்தியமாக தனது காரியத்தை சாதித்துக் கொள்ள முயல்கிறார் போலும்!"என்றாள் அல்லி! 

      முத்தங்காடியின் வணிகர் அல்லியின் பேச்சைக் கண்டு எதுவும் கூற முடியாமல் அப்படியே விக்கித்துப் போய் நின்று கொண்டிருந்தார்! பொற்கொடியும் அல்லியும் பிறகு எதுவும் கூறாமல் சிரித்துக்கொண்டே முத்தங்காடியை விட்டு வெளியேறினார்கள்!

(தொடரும்... அத்தியாயம் 87இல்)



No comments:

Post a Comment