Monday, 3 March 2025

இராஜமோகினி - யாழிசை செல்வா அத்தியாயம் 85

 

🌾85. சதிகாரர்கள் எடுத்த முடிவு🌾

       சதிகாரர்கள் கூட்டமாக சூரன் மற்றும் காத்தவராயனை நோக்கி கோபத்தோடு திரும்பி இருந்தார்கள்! சதிகாரர்கள் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என மருத மரத்தில் சாய்ந்து நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான் இளம்வழுதி! 

      "நெடுங்காலமாக நம்மையெல்லாம் முட்டாளாக்கிவைத்த இந்த இரு துரோகிகளையும் இனி நம்ப வேண்டாம்! நாம் நம் வழியை பார்த்துக்கொண்டு சென்று விடுவோம்! அதன்பின் நடப்பது நடக்கட்டும்"எனக் கூட்டத்தில் ஒருவன் கூறினான்! 

       "ஆமாம் அது தான் சரியாக இருக்கும்! சரி வாருங்கள் போவோம்!"என கூறிக்கொண்டே அனைவரும் கிளம்பத் தயாரானார்கள்! 

      "நீங்கள் எங்கு செல்கிறீர்கள்! அப்படியெல்லாம் பாதியிலே விட்டுவிட்டு போய்விட முடியுமா என்ன? அப்படி என்றால் நீங்கள் செய்து கொடுத்த சத்தியம் என்னவாயிற்று? அவற்றையெல்லாம் காற்றில் பறக்க விடப் போகிறீர்களா? உங்களுக்காக அல்லும் பகலும் மாடாய் உழைத்து பயிற்சி அளித்தோடு, உங்கள் அனைவரையும் கட்டி காத்து வந்த நமது தலைவர் கோடியக்கரை  மூர்க்கன் அவர்கள் மேல் வைத்துள்ள பற்று அவ்வளவுதானா? பதில் கூறுங்கள்....." என சதிகாரர்களை பார்த்து கூறினான் சூரன்! அவர்கள் அனைவரும் அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள்! அதனால் அவனே தொடர்ந்து "நாம் முன் வைத்த காலை என்றும் பின் வைக்க முடியாது! அது நமது நோக்கத்திற்கு இழிவானது! அந்த காரியத்தை யார் செய்ய நினைத்தாலும் நான் விட்டு விட மாட்டேன்! அதற்காக எத்தனை பெரிய விலை கொடுத்தாலும் நம் காரியத்தை நிறைவேற்றுவதிலையே கவனமாக இருப்பேன்! அதற்கு குந்தகம் விளைவிக்கும் யாரையும் நான் விட்டு வைக்க மாட்டேன்! இவை உங்களுக்கு தெரியும் தானே? அப்படி இருந்தும் எந்த நம்பிக்கையில் நீங்கள் அனைவரும் இங்கிருந்து கிளம்பி செல்கிறீர்கள்? உங்களால் என்னை விட்டுப் பிரிந்து சென்று விட முடியுமா? இல்லை அப்படி பிரிந்து சென்றால்தான் உங்கள் அனைவரையும் உயிருடன் விட்டு வைத்து விடுவேனா? ஏதோ பச்சைக் குழந்தை போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்! போதும் உங்கள் முட்டாள் தனத்தை இத்தோடு நிறுத்தி விடுங்கள், அதுதான் உங்களுக்கு நன்மையை தரும்! அதை விடுத்து இப்படி பாதியிலே புறப்பட்டு செல்வதால் உங்கள் உயிருக்கு யாரும் பாதுகாப்பு தந்துவிட முடியாது!"எனக் கூறி கொக்கரித்து சிரித்துக்கொண்டே அவர்களது முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான் சூரன்!

     "நான் உங்களுக்கு பாதுகாப்பு தருகிறேன்! என்னை நீங்கள் முழுவதுமாக நம்பலாம்! என்னிடம் சரணடைந்து விடுங்கள்! உங்களுக்கு போதுமான வாழ்க்கை சூழலை உருவாக்கி, வாழ வைப்பதற்கு நான் தயார்! அதில் எவ்வித சந்தேகம் வேண்டாம்! நான் கூறினால் கண்டிப்பாக நிறைவேற்றுவேன்! "என சதிகாரர்களிடத்தில் கூறினான் இளம்வழுதி!

      "உன்னை எவ்வாறு நாங்கள் நம்புவது? இவன் கூறியது போல் எங்களிடத்தில் பிரிவினை உண்டாக்குவதற்காக ஏதேதோ கூறிவிட்டு, அதன் பிறகு எங்களிடத்தில் மோசமாக நடந்து கொள்ள மாட்டாயயென எப்படி நம்புவது? இத்தனை காலமாக எங்களுடன் இருந்து அத்தனை துயரங்களிலும் துன்பங்களிலும் தோளோடு தோள் நின்ற இவனே துரோகம் செய்துவிட்டான்! அப்படி இருக்க நீ யாரென்று தெரியாதபோது உன்னை மட்டும் எப்படி நம்புவது? உனது காரியம் முடிந்ததும் எங்களை காவாயில் தள்ளி விடமாட்டாய் என்று என்ன நிச்சயம்? காலமெல்லாம் எங்கள் நிலை யாரோ ஒருவரின் கீழ் அடிமையாய் இருந்து பணி செய்வதற்காக அந்த ஆண்டவன் எழுதி விட்டான் போலும்! அதனால்தான் வருபவன் போகிறவனெல்லாம் எங்கள் இடத்தில் இரக்கம் காட்டுமளவிற்கு எங்கள் நிலை மட்டமாக போய்விட்டது! எல்லாம் எங்கள் விதி! என்ன செய்வது? உன் போன்ற நபர்களிடத்தில் நீ பேசும் பேச்சுக்கள் அத்தனையும் கேட்க வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்!" என பெரும் துயரத்தில் இளம்வழுதியைப் பார்த்து மாணிக்கம் கூறினான்!

      "உங்களது இந்த மோசமான நிலைக்கு நான் காரணம் அல்ல! இது நீங்களாகவே தேடிக்கொண்ட வழி! அந்த வழியில் தொடர்ந்து சென்றால் உங்களுக்கு கிடைப்பது கோடியக்கரை  மூர்க்கனுக்கு நேர்ந்த கொடூர சாவுதான், உங்களுக்கும் கிடைக்கும்! அது போன்ற நிலை உங்களுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் நான் உங்களிடத்தில் கூறினேன்! நீங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்த வழி என்பது பெரும் பாதாளத்தில் உங்களை தள்ளிவிட்டது! இப்போதாவது சரியான வழியை தேர்ந்தெடுங்கள்! உங்கள் வாழ்வை வளமாக்க வேண்டியது என் பொறுப்பு என்னை பற்றி உங்களிடத்தில் இவர்கள் என்ன கூறி வைத்துள்ளார்கள் என தெரியவில்லை! நான் ஒன்று மட்டும் கூறிக் கொள்கிறேன்! நீங்கள் என்னை நம்பி சரணடைந்தால் கண்டிப்பாக உங்கள் வாழ்வை மாற்றி அமைக்கும் சக்தி என்னிடத்தில் உள்ளது அது மட்டும் உறுதியாக என்னால் கூற இயலும்!"என சதிகாரர்களைப் பார்த்துக் கூறினான் இளம்வழுதி!

     "இவன் கூறுவதை நம்பாதீர்கள்! உங்களை இவன் ஏமாற்றப் பார்க்கிறான்! அப்படியெல்லாம் நம்மை எளிதில் இவர்கள் மன்னித்து விட மாட்டார்கள்! சோழ தேசம் முழுவதும் நாம் செய்து வைத்த எத்தனையோ கொடூரமான செயல்கள் இவர்கள் மறந்திருக்க மாட்டார்கள்! அப்படியிருக்கும் பொழுது இவன் கூறுவதை எப்படி நம்புகிறீர்கள்? நமது பாதை என்பது இருதலைக் கொல்லி எறும்பு போல் ஆகிவிட்டது! அதுதான் இங்கு உண்மை! அதனால்தான் கூறுகிறேன் அவன் கூறுவதை கேளாமல் சீக்கிரத்தில் அவன் கதையை முடித்து விடுங்கள்! அது ஒன்றுதான் உங்களுக்கு சரியான தீர்வைத் தரும்! அதை விடுத்து அவன் பேச்சைக் கேட்டால் வீணாகச் சென்று உயிரைவிட வேண்டியதுதான்! மேலும் கங்கைகொண்ட சோழபுரத்தில் உங்களுக்கு காத்திருப்பது தூக்குக் கயிறா? அல்லது வெட்டுப்பாறைக்கு செல்லும் நிலையா? இவ்விரண்டில் ஏதோ ஒன்று தான் உங்களுக்கு பரிசாக கிடைக்கும்! அப்படிப்பட்ட இழிவான சாவு நமக்கு வேண்டுமா? நமது வாழ்வு என்பது போராட்டம் நிரம்பியது, அந்தப் போராட்டத்தில் நமது உயிரை இழந்தாலும் மானமாவது மிஞ்சும், ஆனால் இவனை நம்பி போனால் அவை யாவும் காற்றில் பறந்து, ஊரே நம்மை காரித்துப்பும்! இப்படிப்பட்ட இழிவான ஒரு நிலை நமக்குத் தேவையில்லை! பொறுத்தது போதும், பொங்கி எழுந்து இவன் கதையை முடித்து விடுங்கள்! மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம்! இதுதான் சரியான வழி! நான் எப்பொழுதுமே உங்களுக்கு சரியான திசையை தான் காட்டுவேன்! இவை யாவும் நமது தலைவர் கோடியக்கரை மூர்க்கன் அவர்கள் கற்றுக் கொடுத்த பாடம்! அதனை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது! அப்படி மறந்தால் நாம் நன்றி கெட்டவர்களாவோம்! அப்படி ஒரு நிலை நீங்கள் நிலைக்கு போக மாட்டீர்கள் என நம்புகிறேன்! நம்மையும் நமது கூட்டத்தையும் இழிவாக நடத்த முயலும் இந்தச் சதிகாரனை இனியும் விட்டு வைக்க கூடாது! உடனே விரைந்து செயலாற்றுங்கள்! சட்டென அவன் கதையை முடித்து விடுங்கள்!" சதிகாரர்களைப் பார்த்து படபடவென்று கூறினான் சூரன்!

        "உண்மை உங்களுக்கு உண்மை தெரிந்த பின்பும் இன்னும் எந்த நம்பிக்கையில் இவன் உங்களிடத்தில் பேசிக் கொண்டிருக்கிறான் என தெரியவில்லை! ஒன்று மட்டும் உண்மை !மீண்டும் அவன் காட்டும் வழிகள் நீங்கள் சென்றால் நான் ஏற்கனவே கூறியது போல் சவக்குழியாகத் தான் அது இருக்கும்! உங்கள் வாழ்வை தேர்ந்தெடுக்க உரிமை உங்களிடத்தில் உள்ளது! அதை சரியான திசையில் செலுத்துவதும் தவறான குழியில் தள்ளுவதும் இனி உங்கள் கரத்தில் மட்டுமே உள்ளது!" என சதிகாரர்களைப் பார்த்து கூறினான் இளம்வழுதி! 

      பெரும் வெறுப்போடு சூரணையும் காத்தவராயனையும் பார்த்துக் கொண்டிருந்த சதிகாரர்கள் ஒரு கணம் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்துப் போய் நின்றிருந்தார்கள்! 

      அப்போது யாரும் எதிர்பாராத சமயத்தில் மாணிக்கம் தன் இடையிலுள்ள கச்சையிலிருந்து இரண்டு குறுவாள்களை எப்போது எடுத்தான் அவற்றை எப்போது சூரன் மற்றும் காத்தவராயன் மீது வீசி எரிந்தான் எனத் தெரியவில்லை! அவர்கள் இருவரது நெஞ்சிலிருந்து குருதி கொப்பளிக்க கீழே தடாலென சரிந்து விழுந்து துடித்துக் கொண்டிருந்தார்கள்! கண நேரத்தில் நடந்துவிட்ட பெரும் விபரீதம் அங்கிருந்த அனைவரையும் திகைப்பில் ஆழ்த்திவிட்டது! சூரன் மற்றும் காத்தவராயன் அருகே சென்று  இளம்வழுதி பார்த்தபோது இருவரது உயிரும் காற்றோடு சிட்டாக பறந்திருந்தது! 

      அவர்கள் அருகே வந்து நின்ற இளம்வழுதி "ஏன் இப்படி அவசரப்பட்டு, இந்தக் காரியத்தைச் செய்து விட்டீர்கள்! சிறிது யோசித்து செயலாற்றி இருக்கலாமே! தேவையில்லாமல் இரண்டு உயிர்கள் அநியாயமாக போய்விட்டது! இதனை நான் நினைத்திருந்தால் அப்போதே செய்திருப்பேன்! அது கூடாது என்பதற்காகத்தானே இத்தனை நேரம் உங்களிடம் முடிந்த வரையில் எடுத்துக் கூறி உங்களுக்கு மன மாற்றத்தை உருவாக்க நினைத்தேன்! அவை அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராய் போயிற்றே! இனி என்ன செய்வது? " என சதிகாரர்களைப் பார்த்து கூறினான் இளம்வழுதி! 

     தான் ஆற்றிய காரியம் குறித்தோ அல்லது தனது நண்பர்களை தன் கையாலே கொலை செய்துவிட்ட துக்கத்தை சிறிதும்  முகத்தில் காட்டிக்கொள்ளாமல் இயல்பாக இருந்த மாணிக்கம் "நீங்கள் வருத்தப்படும் அளவிற்கு இவர்கள் ஒன்றும் யோக்கியர்கள் இல்லை! இவர்கள் என்றோ மாய்ந்து போக வேண்டியவர்கள் தான்! சற்று காலதாமதமாக இன்று எனது கரத்தால் நடந்தேறி உள்ளது! அவ்வளவுதான்! அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை! இதனை நான் முன்பே செய்திருக்க வேண்டும்! அவ்வாறு செய்திருந்தால் எனது நண்பர்கள் பல பேர் உயிரை காப்பது மூலம் அவர்களது குடும்பத்தையும் நிற்கதியான நிலையில் இருந்து மீட்டெடுத்திருப்பேன்! அதனை உணரும் பக்குவம் எனக்கு அப்போது இல்லை! இருந்திருந்தால் அன்றே நான் செய்திருப்பேன்! இன்று நான் எடுத்த முடிவும் கூட காலம் கடந்து தான் நிகழ்ந்து விட்டிருப்பதாக உணர்கிறேன்! நாங்கள் செய்து வைத்த எத்தனையோ கொடூர செயல்கள் எங்களை இவ்வளவு இக்கட்டான சூழலுக்கு கொண்டு வந்து தள்ளி விட்டது! தேவையின்றி தவறான வழியை தேர்ந்தெடுத்து விட்டோம்! இனியும் அதனில் பயணிப்பதால் எந்த ஒரு லாபமும் இல்லை! அதனால் நாங்களும் எங்கள் குடும்பமும் சேர்ந்து வெகு காலத்திற்கு தனித்தே தவித்திருப்போம்! எங்களை புரிந்து கொள்வதற்கோ எங்கள் மீது இரக்கம் காட்டுவதற்கு ஒருவரும் வர மாட்டார்கள்! இது நாங்கள் தேர்ந்தெடுத்த வாழ்வு  கொடுத்த சாபக்கேடு! அதனை நாங்கள் முழுதாக ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்! அதுதான் எங்கள் விதி! அதனை மாற்ற யாராலும் இயலாது! மேலும் இவர்கள் உயிரோடு இருக்கும் வரை அதனை மாற்ற யார் நினைத்தாலும் விட்டு வைக்க மாட்டார்கள்! அதனை நான் நன்கு அறிவேன்! அப்படி இருக்கும் பொழுது நான் மேற்கொண்ட செயலால் இனியாவது எங்கள் வாழ்வு மலரும் என்ற நம்பிக்கையில் தான் காத்திருக்கிறேன்!" என தமது எதிர்காலம் குறித்து மிகுந்த வருத்தத்தோடு கூறினான் மாணிக்கம்! 

      "நீங்கள் திடீரென செய்த இந்தக் காரியம் எனக்கு வருத்தத்தை அளித்த போதும், அதற்கு நீங்கள் அளித்த விளக்கம் ஏற்புடையதாகத்தான் உள்ளது! நீங்கள் கூறியபடி உங்கள் வாழ்வை மாற்றி அமைக்க இவர்கள் விட்டிருக்க மாட்டார்கள் என்பதை நான் அறிவேன்! இருப்பினும் முயற்சி செய்தால் அவர்களையும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் தான் காத்திருந்தேன்! ஆனால் அவை காலம் கடந்தவை என்பது உங்களது கூற்று மெய்ப்பித்து விட்டது! வருந்த வேண்டாம்! இனி நடக்கும் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமைய நான் துணையாக இருப்பேன்! நான் கூறியபடி என்னிடம் சரணடைந்து விடுங்கள் அதன் பின் உங்கள் வாழ்வை மாற்றி அமைக்க நான் உறுதியளிக்கிறேன்" என சதிகாரர்களை பார்த்து கூறினான் இளம்வழுதி!

         கீழே இறந்து கிடந்த சூரணையும் காத்தவராயனையும் சுட்டிக் காட்டிய மாணிக்கம்" இவர்கள் கூறியது போல் எங்களை தூக்கு கயிறுக்கோ அல்லது வெட்டுப்பாறைக்கோ அனுப்ப மாட்டீர்கள் என்ன நிச்சயம்? அவ்வாறு இல்லாவிடிலும் குறைந்தபட்சம் எங்களை காராக்கிரகத்தில் அடைத்து சித்திரவதை செய்ய மாட்டீர்கள் என்பதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்? இவையெல்லாம் எங்கள் மனதில் தோன்றுவதை எப்படி தவறு எனக் கூறுவீர்கள்? நாங்கள் செய்த கொடூர செயல் பற்றி நன்கு அறிவோம்! அப்படி இருக்கும்போது எவ்வாறு எங்களுக்கு மன்னிப்பு வழங்குவார்கள் என நாங்கள் எப்படி நம்புவது?" என மாணிக்கம் இளம்வழுதியைப் பார்த்து கேட்டான்! 

      "தாங்கள் நினைப்பது முற்றிலும் சரியே! அதற்கு மாற்றுக் கருத்தே இல்லை! ஏனெனில் நீங்கள் ஆற்றிய கொடும் செயல்கள் அத்தகைய தண்டனைக்கு இட்டுச் செல்லும் தரத்தில் அமைந்தவை தான்! இருப்பினும் அதனை மாற்றி அமைக்க என்னால் முடியும் என்று நம்புகிறேன்! என்னை நீங்கள் முழுதாக நம்பலாம்!" என  இளம்வழுதி அவர்களிடம் கூறினான்! 

      "தங்களால் எப்படி செய்து முடிக்க இயலும்? அதனைக் கூறுங்கள்?" என இளம் வழுதியைப் கேட்டான் பார்த்து கேட்டான் மாணிக்கம்! 

     "மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமான் அவர்களின் நம்பிக்கை கூறிய உப தளபதி நானாவேன்!  அதனால்தான் கூறுகிறேன் என் மீது நம்பிக்கை வையுங்கள் என்று!" 

       "தாங்கள் கூறுவதை ஏற்றுக் கொண்டாலும் அதற்காக எப்படி சலுகை காட்டுவார்கள்? அதுதான் எங்களுக்கு புரியவில்லை?" என்றான் மாணிக்கம்! 

       "நீங்கள் இதுவரை செயலாற்றிய காரியம் குறித்தும் இனி உங்கள் திட்டம் குறித்தும் தெளிவாக எடுத்துக் கூறுங்கள்! மேலும் உங்களுக்கு வாய்ப்பளித்தால் மீண்டும் கொடூர செயல்களை செய்ய மாட்டீர்கள் என்பதற்கு உறுதி அளிக்க வேண்டும்! அப்படி செய்தால் ஒருவேளை உங்கள் மீது நம்பிக்கை பிறக்கலாம்" என அவர்களிடத்தில் கூறினான் இளம் வழுதி!

         அதன்பின் சதிகாரர்கள் மறுப்பேதும் கூறாமல் தங்களது வாள்களை எடுத்து இளம்வழுதியின் பாதத்தில் சமர்ப்பித்தார்கள்! அதன்பின் இளம்வழுதி அவர்களை கட்டித்தழுவிக் கொண்டான்!  வெண்ணிலவு இந்த அரிய காட்சியை இரசித்துக்கொண்டிருந்தது!
(தொடரும்...... அத்தியாயம் 86 இல்)

     


No comments:

Post a Comment