Sunday, 9 March 2025

இராஜமோகினி யாழிசைசெல்வா அத்தியாயம் 92

 🌾92. சிற்றரசர்களின் அதிருப்தி🌾 

     மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமான் அவர்கள் தனது இடைக்க கச்சையிலிருந்து கோடியக்கரை மூர்க்கனிடமிருந்து கைப்பற்றிய ஓலையை காண்பித்தார்! 


      அரசவையில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் அந்த ஓலையில் என்ன உள்ளது என அறிய விரும்பி கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள்! அவர்களது நோக்கத்தை நன்கு புரிந்து கொண்ட மாதண்ட நாயகர் அவர்கள் அந்த ஓலையினை தனது அருகில் இருந்த கொங்கு மண்டல அதிராசாதி ராசன் என்னும் சிற்றரசன் கையில் கொடுத்தார்! ஓலையில் உள்ள வாசகங்களை படித்துவிட்டு பொத்தபி சிற்றரசர் சோட மஹாராஜனிடம் ஓலையை கொடுத்தார்! பொத்தப்பி சிற்றரசரும் வாசித்து விட்டு முகத்தில் எள்ளம் கொள்ளும் வெடித்தபடி வீரக்கொட்ட சிற்றரசன் சூரப்பராஜனிடம் ஓலையை கொடுத்தார்! இவ்வாறாக அங்குள்ள அனைவரும் ஓலையை வாங்கி வாசித்து விட்டு மீண்டும் மாதண்ட நாயகரிடம் ஒப்படைத்து விட்டிருந்தார்கள்! 


    ‌ "இந்த ஓலையில் இருக்கும் விவரம் உண்மை என்று எவ்வாறு ஏற்றுக் கொள்வது! இவை போலியான ஓலையாகக் கூட இருக்கலாம் அல்லவா? மேலும் வேண்டுமென்றே சாளுக்கிய மன்னர் விக்ரமாதித்தன் மேல் வீண்பழியை இறைக்கும் நயவஞ்சக நாடகத்தின் ஓர் அங்கமாக கூட இந்த ஓலை இருக்க வாய்ப்பு உள்ளது" என்றார் வீரக்கொட்ட சிற்றரசன் சூரப்பராஜன்! 


      "ஆமாம் அப்படித்தான் இருக்க வேண்டும்! இவைகள் உண்மையாக இருக்க வாய்ப்பே கிடையாது! சாளுக்கிய மன்னர் விக்ரமாதித்தன் பற்றி நான் நன்கு அறிவேன்! இவை அனைத்தும் வேண்டுமென்றே அவர் மீது திணிக்கப் படும் மோசடியின் இன்னொரு வெளிப்பாடாகத்தான் நான் பார்க்கிறேன்! இதனை இப்படியே நாம் விட்டு வைக்கக் கூடாது! இவை தொடர்ந்தால் நாளை எங்கள் மீதும் இல்லாததும் பொல்லாததும் கூறி சோழ மன்னருக்கு எதிராக திசை திருப்பி விட மாட்டார்கள் எனத் தோன்றுகிறது! ஆகவே இதனை உண்மையாக எடுத்துக் கொள்ளக் கூடாது! என சோழ மாமன்னர் குலோத்துங்க சோழச் சக்கரவர்த்தி அவர்களிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்!"என்றார் பொத்தப்பி சிற்றரசர் சோட மகாராஜன்!


       "நீங்கள் ஏன் பேசாமல் உள்ளீர்கள் கங்கபாடி சீயகங்கரே! நீங்களும் உங்கள் பங்கிற்கு ஏதேனும் கூறிவிடுங்கள்! அப்பொழுதுதான் முழுமை அடையும்! ஏற்கனவே உங்கள் நண்பர்கள் கூறியதை கவனித்திருப்பீர்கள்!"என்றார் மாதண்ட நாயகர்! 


     "அவர்கள் கூறியதில் எந்தவிதமான தவறும் இல்லை! ஏனெனில் சாளுக்கிய மன்னர் விக்ரமாதித்தன் யாரோ ஒருவர் அல்ல! அவர் நமது சோழ தேசத்தின் இளவரசி மலர்வழி தேவியாரை மணந்து கொண்டவர்! நம் மீது அளவற்ற அன்பை கொண்டவர்! அப்படி உள்ள அவர் எதற்காக நம் தேசத்தின் மீது சரி செய்ய முற்பட வேண்டும்! ஒரு வகையில் இன்றைய சோழ தேசத்தில் அரியணை அவருக்கு உரிமையுடையது தானே! அப்படி இருக்கும் பொழுது அவர் ஏன் குறுக்கு வழியில் உள்ளே நுழைய வேண்டும்! நேராக வந்தாலே அவர்கள் உரியதை யாரும் மறுத்து விட முடியாது! இதனை நீங்கள் யாவரும் நன்கு அறிவீர்கள்! பின் எதற்காக ஏன் விவாதம் செய்து கொண்டிருக்கிறீர்கள்! உன்னை எத்தனை காலம் தன் மறைத்து வைக்க முடியும்! ஆயிரம் கைகள் எழுந்தாலும் ஆதவனை மறைக்க இயலாது! நீங்கள் அறியாதவர் ஒன்றும் அல்ல!"என்றார் கங்கவாடி நாட்டின் சிற்றரசர் சீயகங்கன்!


      "கையில் வலுவான ஆதாரங்கள் சிக்கிய போதும் நீங்கள் இவ்வாறு பேசுவது உங்களுக்கு அழகு அல்ல சீயகங்கரே! சோழ தேசத்தில் இருந்து கொண்டு எதிரி மன்னருக்கு சாமரம் வீசவது இது முறையாக தெரியவில்லை! அதிலும் சோழ மா மன்னரின் முன்பாகவே இதனை கூறுவது சரியானது என நினைக்கிறீர்களா?"என்றார் மாதாண்ட நாயகர்! 


     "கங்கபாடியார் கூறுவதில் என்ன தவறு இருக்க முடியும்! அவர் சரியாகத்தானே குறிப்பிடுகிறார்! இன்று உள்ள சோழ தேசம் உண்மையில் சாளுக்கிய மன்னர் விக்ரமாதித்தற்கு உரியது தானே! அப்படி இருக்கும் பொழுது அதனை எதற்காக அவர் குறுக்கு வழியில் அடைய முற்பட வேண்டும்!"என்றார் பொத்தப்பி சிற்றரசர்!


     "நானும் அதையேதான் கூறுகிறேன்!"என்றால் வீர கொட்டா சிற்றரசர்!


     "நீங்கள் அனைவரும் வேண்டுமென்று கலகத்தை உண்டாக்கும் நோக்கத்தில் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்! இந்த தேசம் யாருக்கு சேர வேண்டுமோ அவரிடம் தான் சேர்ந்து உள்ளது! சோழமா மன்னர் இராஜேந்திர சோழச் சக்கரவர்த்தி அவர்களின் உத்தம புதல்வி அம்மங்கை தேவி யாரின் ஒரே வாரிசான ராஜேந்திரர் பெயர் கொண்டவரும் இன்றைய சோழ மன்னருமான குலோத்துங்க சோழர் தான் உண்மையான வாரிசு என இங்குள்ள அனைவரும் ஏற்றுக்கொண்டதோடு நாம் அனைவரும் கேட்டுக் கொண்டதற்கு இணங்கத்தான் நமது மன்னர் அரசு கட்டில் ஏறினார்! உண்மை இவ்வாறு இருக்க அவர் மீது இல்லாததும் பொல்லததுமாக வீண் பழியை திணிக்க வேண்டாம்! இவ்வாறு தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தால் அதன் விளைவுகள் விபரீதமாக போய்விடும்! உங்கள் அனைவரையும் எச்சரிக்கிறேன்! உனது பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு! வீணாக என்னைச் சீண்டி பகைத்துக் கொள்ளாதீர்கள்!"என பெரும் கோபத்தில் உரத்த குரலில் சத்தமிட்டார் கிளியூர் மலையமான்! 


       அதுவரை அங்கு நடந்து கொண்டிருந்த அத்தனை நிகழ்வுகளையும் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்த சோழ தேசத்தின் மாமன்னர் குலோத்துங்க சோழச் சக்கரவர்த்தி திடுமென எழுந்து "கிளியூர் சேதிராயரே! சிறிது பொறுமை காத்துக் கொள்ளுங்கள்! சோழ தேசத்தின் உண்மையான விசுவாசியான நீங்கள் அமைதியாக இருங்கள்! " என அவரைப் பார்த்து கூறிவிட்டு, அவரை தொடர்ந்தார் "பொத்தப்பி, கங்கவாடி, வீரக்கொட்டா மற்றும் ஏனைய சிற்றரசர்கள் பெருமக்களுக்கும், இதுவரை இங்கு அமைதி காத்து வந்த அமைச்சர் பெருமக்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்! நான் ஆட்சிக் கட்டில் ஏறிய காலத்தில் இருந்து தொடர்ந்து எண்ணற்ற இடையூறுகளை பார்த்து விட்டேன்! அவற்றின் நீள அகலங்களையும் பல்வேறு முறை மாதண்ட நாயகருடன் கலந்து உரையாடியுள்ளேன்! அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு முடிவுகளையும் எனது கவனத்திற்கு கொண்டு வந்த பின்பு செயலாற்றி கொண்டு உள்ளார்! அவர்கள் செயல்கள மீது எனக்கு எப்பொழுதும் பூரண நம்பிக்கை உண்டு! மேலும் என் மீதும் இல்லாததையும் பொல்லாததையும் கூறி சேற்றை வாரி இறைக்கும் உங்கள் முயற்சி அபத்தமானது என்பதை நான் அறிவேன்! உங்களை அடக்குவதற்கு எனக்கு ஒரு கணம் போதும்! அதை நான் செய்ய விரும்பவில்லை! அதற்குக் காரணம் இந்த தேசம் சிறப்பாக செயலாற்றுவதற்கு நாம் அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டியது அவசியம்! அதனை நான் நன்கு அறிவேன்! நமது உறவு பலப்பட வேண்டும் என்பதற்காகத்தான் உங்களது அத்தனை மோசமான வார்த்தைகளையும் பொறுத்துக் கொண்டு உள்ளேன்! ஏதோ வாய்க்கு வந்தபடி பேசி விட்டால் அனைத்தும் சரியாகிவிடும் என நினைத்தீர்கள் போலும்! நான் உங்களுக்கு தெளிவாக ஒன்று கூறிக்கொள்கிறேன்! நீங்கள் பேசும் வார்த்தைகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு! தேவையின்றி ஏதேனும் கூறிவிட்டு பின்னால் அதற்காக வருந்தும் நிலைக்கு சென்று விடாதீர்கள்! நான் இப்படியே என்றும் பொறுமையாக இருப்பேன் என உறுதியாக கூற முடியாது! எனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு! அதனை சீண்டி பார்க்க நினைத்தால் விளைவுகள் விபரீதமாகத்தான் இருக்கும்! நீங்கள் அவ்வாறு செயலாற்ற மாட்டீர்கள் என நம்புகிறேன்! இன்னும் கடந்த காலத்தை பேசிக்கொண்டு காலத்தை கடத்துவது ஏன் விரயம்! இப்பொழுது நம் தேசம் சந்திக்கும் இடையூறுகளுக்கான உண்மையான காரணத்தை கண்டறிந்து அதனை கலைவதற்காக தான் நாம் அனைவரும் இங்கு ஒன்று கூடி உள்ளோம்! அதனை விடுத்து நமக்குள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதற்காக ஒன்றுபடவில்லை! இதனை என்னை விட ஆட்சியில் அதிக அனுபவமான  மூத்தவராகிய நீங்கள் அறிவீர்கள்! அப்படி இருந்தும் உங்களது எண்ணமும் செயலும் தறி கெட்டுச் செயல்படுவது நன்மை பயக்கும் என்று நினைத்து செயல்படாதீர்கள்! இது உங்களுக்கு கொடுக்கும் இறுதி எச்சரிக்கையாகும்! இனியும் தொடர்ந்தால் விளைவுகளுக்கு தயாராகிக் கொள்ளுங்கள்!"எனக்கூறி விட்டு சிற்றரசர்களின் வதனங்களை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார் சோழச் சக்கரவர்த்தி குலோத்துங்கச்சோழர்!


     "நீங்கள் கூறுவது உண்மையாக இருப்பதாகவே கொண்டாலும், இந்த ஓலையில் சாளுக்கியவர்மன் என்று தானே குறிப்பிட்டுள்ளது! அவை ஒருவேளை சாளுக்கிய மன்னர் சோமேஸ்வரன் ஏன் இருக்கக்கூடாது? இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?"என்றார் வீரகொட்டா சிற்றரசர்!


     "தாங்கள் இப்படி கூறுவது வியப்பாகத்தான் உள்ளது! சாளுக்கியவர்மன் யார் என்பதை அறிந்திருந்தும் எப்படி உங்களால் இவ்வாறு கூற முடிகிறது!"என்றார் மாதண்ட நாயகர்! 


     "சாளுக்கியவர்மன் யார் என்பதை நன்கு அறிவேன்! சாணக்கிய மன்னர் சோமேஸ்வரனும் விக்ரமாதித்தனும் ஒரே நாட்டின் இரு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு ஆட்சி செய்து வருவதை நாம் அறிவோம்! அவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பதையும் மறந்து விடக்கூடாது! அப்படி இருக்கும் பொழுது ஒரு தலை பச்சமாக எவ்வாறு முடிவு எடுக்க முடியும்! ஆகையால் தான் கூறுகிறேன் வீணாக விக்கிரமாதித்தர் மீது பழியை சுமத்த வேண்டாம்! அது நமக்கு நன்மை தராது!"என்றார் வீர கொட்டா சிற்றரசர்!


     "தாங்கள் இவ்வாறெல்லாம் ஏதேனும் கூறி திசை திருப்ப முயல்வீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்! அதற்காகத்தான் முன்னேற்பாடாக இந்த ஓலையின் உண்மை தன்மையை எடுத்துக் கூறவும், இந்த ஓலையில் கண்டபடி அடுத்து நமது தேசத்தின் நடக்கவிருக்கும் தாக்குதலை குறித்து முடிவெடுக்கவும் திட்டமிட்டு தான் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! இங்கு எடுக்கப்படும் முடிவுகள் தீர்க்கமானவையாக இருக்க வேண்டும்! அவற்றின் பலா பலன்களை நம் தேசம் நன்முறையில் எதிர்கொள்ள வேண்டும்! அதனை நீங்கள் அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலும் இங்கு கூட்டப்பட்டு உள்ளீர்கள்! அப்படி இருக்கும் பொழுது நீங்கள் கூறும் கண்ணோட்டத்தை கவனத்தில் கொண்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" மாதண்ட நாயகர்! 


    "அப்படி என்ன முன்னேற்பாட்டை செய்துள்ளீரகள்? இந்த தேசத்தில் எத்தனையோ கலவரங்கள் நடந்து கொண்டுள்ளன? அதேபோல் புதிதாக ஏதேனும் கலவரத்தை இங்கு உண்டாக்கும் நோக்கத்தில் தான் நீங்கள் ஏதேதோ பேசிக் கொண்டு இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்! நீங்கள் நினைக்கும் எதுவும் உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை! உங்கள் கனவுகளுக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை!"என்றார் வீரக்கொட்டா சிற்றரசர்!


     "ஏன் இவ்வாறு பொறுமை இன்றி தவிக்கிறீர்கள்! நான் தான் அனைத்திற்கும் சரியான ஆதாரம் உள்ளது! அதனை காட்டுகிறேன் எனக் கூறும் பொழுது நீங்கள் ஏன் இவ்வாறு பேசுகிறீர்கள்! நமது சோழ மா மன்னர் இப்போதுதான் உங்களுக்கு தெளிவாக எடுத்து கூறினார் அப்படி இருந்தும் புரியாதது போல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்! உண்மையிலே புரியாமல் இருக்கிறீர்களா அல்லது வேண்டுமென்றே குட்டையை குழப்பும் முயற்சிகளில் ஈடுபடுகிறீர்களா எனத் தெரியவில்லை? "என்றார் மாதண்ட நாயகர்! 


     "எங்களுக்கு அது போன்ற எண்ணம் ஏதும் கிடையாது! உண்மை உண்மை என கூவிக் கொண்டிருக்கிறீர்களே தவிர என்ன உண்மை என்று இதுவரை காட்டவில்லை! நீங்கள் காட்டுங்கள் பிறகு அதனை ஏற்றுக் கொள்வதா? அல்லது புறக்கணிப்பதா பிறகு முடிவு செய்து கொள்வோம்!"என்றார் வீரக்கொட்டா சிற்றரசர்!


     அப்போது அங்கு திடீரென உள்ளே வந்த நபரை கண்டதும் அங்குள்ள சிற்றரசர்கள் சிலரின் முகம் வியர்வை மழையில் நனைந்து விட்டது!


(தொடரும்.... அத்தியாயம் 93ல்)



      

No comments:

Post a Comment