Sunday, 9 March 2025

இராஜமோகினி யாழிசைசெல்வா அத்தியாயம் 91

 🌾91. குலோத்துங்க சோழச் சக்கரவர்த்தி🌾 


    கங்கைகொண்ட சோழபுரத்தின் அரண்மனை விழாக் காலத்தின் உற்சவத்தினை கொண்ட பொலிவோடு செயல்பட்டுக் கொண்டிருந்தது! 


      புலர் காலைப்  பொழுதின் புன்னகைகளை புள்ளினங்கள் இசைக்கத் தொடங்கிய வேளையில் பல்வேறு திசைகளில் இருந்தும் பெரிய பல்லக்குகளிலும் அழகிய குதிரைகளிலும் சிற்றரசர்களும் அமைச்சர் பெருமக்களும் வந்த வண்ணம் இருந்தார்கள்! தத்தமது செல்வாக்கை காட்டு முகமாக பாதுகாப்பு என்ற பெயரில் ஒவ்வொருவரும் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்களை அழைத்து வந்து விட்டிருந்ததால் அரண்மனை வளாகம் பெரும் அமளிது துமளியில் இருந்தது! 


        நேர்த்தியான வண்ணத்தில் அமைந்த அழகிய ஆடைகளில் தங்களின் அலங்காரங்களை செய்து கொண்டு பெரும் கம்பீரமாக அரண்மனைக்குள் பிரவேசித்து விட்டிருந்தவர்கள், தங்களது செல்வாக்குகளை பயன்படுத்திக் கொண்டு அங்கு உள்ள காவலர்களை விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தார்கள்! இன்னும் சில சிற்றரசர்கள் தங்கள் ராணிகளுடன் வந்து அங்கு உள்ள அரண்மனை உய்யாவனத்தின் அழகிய காட்சிகளை காட்டிக் கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்தார்கள்! சிற்றரசர்களும் அவரது ராணிகளும் உடலில் பூசியிருந்த வாசனை திரவியங்களின் எழுச்சி அப்பகுதி முழுவதும் ஆக்கிரமித்து இருந்தது! இன்னும் சில சிற்றரசர்கள் அங்குள்ள பணியாட்களை அழைத்து தங்களுக்கு வேண்டிய காலை நேர உணவு பதார்த்தங்களை வரவழைத்து உண்டு கொண்டிருந்தார்கள்! புதிதாக அப்பொழுது அங்கு வந்திருந்த சில சிற்றரசர்கள் அரண்மனையின் ஒவ்வொரு பகுதியையும் அதன் வேலைப்பாட்டையும் வியப்போடு பார்த்ததோடு தங்கள் அரண்மனையின் அடுத்து செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து தங்கள் பணியாளர்களுக்கு கூறிக் கொண்டிருந்தார்கள்! 


      சிற்றரசர்களின் ஒவ்வொரு செயல்களையும் கண்டும் காணாமலும் எதுவும் கூற முடியாமல் அங்குள்ள பணியாளர்களின் தலைவர்கள் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்! 


       அங்கு அப்போதுதான் வந்திருந்த சில அமைச்சர் பெருமக்கள் சிற்றரசர்களின் தேவையற்ற நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்து அதனை தடுக்கும் வழி தெரியாமல் உள்ளூர அவர்களை சபித்துக் கொண்டு அரண்மனைக்குள் சென்று கொண்டிருந்தார்கள்! இவை யாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த சில சிற்றரசர்கள் தங்கள் மனதிற்குள் அமைச்சர்களை எண்ணி வஞ்சத்தோடு கருவிக் கொண்டிருந்தார்கள்! 


     புலர் காலைப் பணியில் ஈடுபடும் அரண்மனை பணியாளர்கள் வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே அன்று வந்து அரண்மனை முழுவதையும் சுத்தம் செய்ததோடு அங்கு வரவிருக்கும் விருந்தினர்களுக்கு தேவையான அத்தனை பணிகளையும் செவ்வனே நிறைவேற்றிக் வைத்திருந்தார்கள்! எத்தனை தான் பார்த்து பார்த்து பணிகளை செய்து வைத்திருந்தாலும் அவற்றின் குறைகளை கூறிக் கொண்டிருந்த சிற்றரசர்கள் மனம் நோகாமல் அவர்கள் வேண்டியவற்றை உடனே செய்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள்! 


     இவ்வாறாக அரண்மனை முழுவதும் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டிருந்த பொழுது தனது காலை நேர கடமைகளை முடித்துவிட்டு உணவினை அறிந்திக் கொண்டிருந்தார் மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமான்!


      அப்போது அந்த அறையில் நுழைந்த இளம்வழுதி "என்னை அழைத்து இருந்திருக்கலாமே ஐயா! " எனக் கூறியபடி அவரது அருகே வந்து நின்றான்! 


     "இரவு வெகு நேரம் ஆகிவிட்டது! அதனால் நீ உணவு உண்டிருக்க மாட்டாய் எனத் தெரியும! உணவு அருந்துவதற்காக தான் உன்னை அழைத்தேன்! இங்கு வந்து அமர்ந்து உணவைச் சாப்பிடு!" என்றார் மாதாண்ட நாயகர்! அவர் கூறியதை ஆமோதிக்கும் வண்ணமாக பதில் ஏதும் கூறாமல் உணவருந்த அமர்ந்ததும் அங்கிருந்த பணிப்பெண் அவனது தட்டில் உணவு பதார்த்தங்களை எடுத்து வைத்தார்! தட்டில் வைத்த உணவுகளை ஏதும் மிச்சம் வைக்காமல் உண்டு முடித்த போது பணிப்பெண் கொண்டு வந்த பாத்திரத்தில் கைகளை சுத்தம் செய்து கொண்டு எழுந்து கொண்டான் இளம் வழுதி!


        ஏற்கனவே உணவு உண்டு முடித்து விட்டிருந்த மாதண்ட நாயகர் தனது விழியால் அவனை அழைத்தபடி அங்கிருந்து நகர்ந்து விட்டிருந்தார்! 


       மாதண்ட நாயகரும் இளம்வழுதியும் மாளிகையிலிருந்து வெளியேறி அரசவை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்கள்! ஏற்கனவே வந்திருந்த சிற்றரசர்களும் அமைச்சர் பெருமக்களும் அரசவை நோக்கி நகர்ந்து விட்டிருந்தார்கள்! அவர்களைத் தொடர்ந்து இளம்வழுதியும் மாதண்ட நாயகரும் அரசவைக்குள் நுழைந்து தங்கள் ஆசனங்களில் அமர்ந்து கொண்டார்கள்! 


      அரசவைக்குள் வந்திருந்த சிற்றரசர்களும் அமைச்சர் பெருமக்களும் தங்களது இருக்கைகளில் அமர்ந்து கொண்டு வெற்றுப் புன்னகைகளை வலிய வரவழைத்துக் கொண்டு அங்கிருந்தவர்களோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள்! மாதண்ட நாயகருடன் இளம்வழுதியும் உள்ளே நுழைந்ததை கண்டும் காணாமலும் இருந்து விட்டிருந்தவர்கள் வேண்டுமென்றே அவர்களின் காதில் விழும்படி உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்! "ஓ கோ! இவன்தான் மாதண்ட நாயகர் புதிதாக கண்டுபிடித்த உப தளபதியா? எதற்கும் பயன் இல்லாதவன் போல் தோற்றமளிக்கிறானே? அதனால்தான் இன்று நம் தேசத்தில் நடைபெறும் எத்தனையோ சதி செயல்களை ஒன்றும் செய்யாமல் போனது போலும்!"எனக்கூறி சிரித்துக் கொண்டிருந்தார்கள்! 


      வேண்டுமென்றே பேசிக் கொண்டிருந்த சிற்றரசர்களின் பேச்சினை எதுவும் கண்டு கொள்ளாமல் தனது இருக்கையில் அமர்ந்து கொண்டு இருந்தார் மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமான்!


      "நீங்கள் கூறியது உண்மைதான்! தேசத்தில் நடப்பதை எண்ணி மிகுந்த வெட்கக்கேடாக உள்ளது! இதையெல்லாம் தடுக்கும் தகுதி சரியான நபரிடம் கொடுத்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்காது! என்ன செய்ய? நாம் கூறினால் யார் கேட்கப் போகிறார்கள்! எல்லாம் அவர்கள் வைத்தது தான் சட்டமாக உள்ளது! நாம் என்ன செய்ய முடியும்! வேடிக்கை பார்க்கும் நிலையில் தான் நாம் உள்ளோம்! இதற்கு ஒரு சரியான தீர்வினை சோழ மன்னர் தான் கண்டுபிடிக்க வேண்டும்! இப்போதெல்லாம் இது குறித்து அவரிடம் உரையாடும் வாய்ப்பே கிடைப்பதில்லை! இன்று எப்படியும் அவரிடம் நேரில் கேட்டு விட வேண்டியதுதான்!"என தனது பெரிய மீசையை தடவிக் கொண்ட படி கூறினார் சிற்றரசர்களில் வயதானவர்! 


         "சோழ மன்னருக்கு எத்தனையோ பிரச்சனை! அவர் இது குறித்து எல்லாம் எங்கு யோசிக்க போகிறார்! அவரது நிலையை எண்ணியே அவருக்கு மிகுந்த கவலையாக இருக்கிறது! அப்படி இருக்கும்போது மற்ற விவரங்களில் அவர் எவ்வாறு கவனம் செலுத்துவார்! நடப்பதை வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும்! பிறகோ ஒன்றும் செய்துவிடும் நிலையில் அவர் இல்லை!"என்றார் மற்றொரு சிற்றரசர்! 


       "ஆமாம் நீ கூறுவது உண்மையாகத்தான் இருக்க வேண்டும்! எதுவாயினும் இன்று ஒரு முடிவு எட்டி விட வேண்டியது தான்" என்றார் முன்பு கூறிய அதே சிற்றரசர்! 


     இதற்கிடையே வாயில் காப்பவன் பெரும் குரலில் "சோழ தேசத்தின் மாமன்னரான இராஜேந்திர சோழரின் கொள்ளு பேரனும் இன்றைய நமது சோழதேசத்தின் மன்னருமான குலோத்துங்க சோழச் சக்கரவர்த்தி வருகிறார்! வருகிறார்!" என கட்டியம் கூறினான்! 


      அங்கு உள்ள அனைவரும் எழுந்து நின்று மன்னரின் வருகைக்காக காத்திருந்தார்கள்! அவர் உள்ளே வந்ததும் தலை வணங்கி வணக்கம் செலுத்தி விட்டு அவரது விழி அசைவினை ஏற்று தங்கள் இருக்கைகளில் அமர்ந்து கொண்டார்கள்!


      சிரசில் மகுடம் தாங்கி சுந்தரமான முகத்தோற்றத்தோடு , தீட்சண்யமான  விழிகளில் எப்போதும் குடி கொண்டிருக்கும் அருட் பார்வையோடு கம்பீரமாக நடை போட்டபடி தனது "சேதிராயன்" என்னும் அரியாசனத்தில் அமர்ந்து கொண்டார் குலோத்துங்க சோழச் சக்கரவர்த்தி! அதுவரையில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்த அத்தனை பெருமக்களும் ஆழ்ந்த அமைதியின் உறைவிடமாக மாறிவிட்டிருந்தார்கள்! அவர்களது வதனங்களை கூர்ந்து கவனித்தபடி தனது இதழில் புன்னகை ஒன்றைப் படர விட்டுக் கொண்டார் குலோத்துங்க சோழச் சக்கரவர்த்தி!


        மன்னர் கூறும் முடிவுகளை பதிவு செய்வதற்காக திருமந்திர ஓலை மற்றும் திருமந்திர ஓலை நாயகம்  தனது ஓலைகளை தயார் நிலையில் வைத்துக் கொண்டிருந்தார்கள்!


       அங்கு உள்ளவர்களை ஒரு கணம் பார்த்துவிட்டு சோழ தேசத்தின் மாண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமான் எழுந்து "சோழ தேசத்தின் சக்கரவர்த்தி அவர்களுக்கு முதலில் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்! இங்கு நாம் கூடியிருக்கும் நோக்கம் யாதென்று அனைவரும் அறிவோம்! இன்றைய சூழலில் நம் தேசம் பல்வேறு விதமான இடையூறுகளை சந்தித்து வருகிறது! அதன் பலா பலன்களை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்! அதற்கு நிரந்தர தீர்வு ஒன்று கண்டறிய வேண்டும் என்று நெடுநாளாய் நமது சோழ மாமன்னர் குலோத்துங்க சோழச் சக்கரவர்த்தி எண்ணியதோடு அதனை செயலாற்றும் பொறுப்பை என் வசம் ஒப்படைத்து இருந்தார்! நானும் அதனை கலைந்திடும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்! அதற்கு இடையில் நமக்கு கிடைத்திருக்கும் தகவல் நாம் ஏற்கனவே கணித்தவை சரியான நிரூபிக்கும் விதமாக உள்ளது!"எனக் கூறிவிட்டு அரசவையில் உள்ளவர்களை ஒரு கணம் தனது விழிகளைச் சுழற்றி பார்த்துக் கொண்டிருந்தார்! அனைவரும் அவர் என்ன கூறப் போகிறார் என்பதை எதிர்பார்த்து காத்துக் கிடந்தார்கள்! அவரைத் தொடர்ந்து "நான் கூறப்போவது உங்கள் அனைவருக்கும் தெரியும் என்றாலும் அதனை உறுதிப்படுத்தி தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் நான் இருந்தேன்! அதற்கான ஆதாரம் இப்பொழுது கிடைத்துவிட்டது!" என்றார்! 


      "தங்களுக்கு கிடைத்திருக்கும் ஆதாரம் யாது என்று தெளிவாக எடுத்துக் கூறுங்கள்"என்றார் கிளியூர் மலையமான் இராஜேந்திர சோழச் சேதிராயன் என்னும் சிற்றரசர்.


     "கண்டிப்பாக கூறுகிறேன் மலையமான் அவர்களே! அதற்காகத்தானே இங்கு நான் கூடியுள்ளோம்! " என்றவர் தொடர்ந்து " நமது நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமாக இருப்பது வேறு யாரும் அல்ல... "எனக்கூறி நிறுத்தி விட்டிருந்தார் மாதாண்ட நாயகர்!


      "ஏன் பாதியிலே நிறுத்தி விட்டீர்கள்? தாங்கள் கூற வந்த உண்மையை உரைப்பதில் என்ன தயக்கம்? எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக கூறி விடுங்கள்? அதுதான் அனைவருக்கும் நல்லது!" பொத்தப்பிக் காமதேவ சோட மகாராஜன் என்னும் சிற்றரசர்! 


       "நான் கூறப்போகும் உண்மை இங்கு உள்ள சிலருக்கு மிகுந்த மன வேதனையை கொடுக்கலாம்! ஏனெனில் அவர்கள் வெகு காலமாய் நான் கூறப்போகும் நபரோடு மிகுந்த நெருக்கத்தில் உள்ளார்கள்! என்பதனை நான் நன்றாக அறிவேன்! இருப்பினும் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவுரை உள்ளது! அதை நோக்கிய பயணம் இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கிறது! அதுதான் கிடைத்திருக்கும் ஆதாரம் வெளிப்படையாக கூறுகிறது! இது குறித்து நான் நேற்று இரவு நமது மன்னரோடு கலந்து ஆலோசித்து விட்டேன்! அவரும் எவ்வித தயக்கமின்றி உண்மையை எடுத்துரைக்க ஒப்புக்கொண்டார்! ஆகவே பிரச்சனையின் சரியான திசை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கை எனக்கு கிடைத்திருக்கும் ஆதாரம் தந்திருக்கிறது! "என அங்கிருந்தவர்களை பார்த்து கொண்டே அந்த உண்மையை எடுத்து காட்டியதும் அங்கு உள்ள சில சிற்றரசர்கள் கடும் கோபத்தில் கொந்தளிக்க தொடங்கி விட்டார்கள்!

(தொடரும்..... அத்தியாயம் 92ல்)



No comments:

Post a Comment