Saturday, 8 March 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 88

🌾88. மாளிகை மேடு!🌾

      கங்கைகொண்ட சோழபுரத்தின் அரண்மனை! இருளேதெரியாத அளவிற்கு ஆங்காங்கே ஏற்றப்பட்டிருந்த பெரும் விளக்குகளின் ஒளியில் மிதந்து கொண்டிருந்தது! சோழத்தின் காவல் வீரர்கள் அங்குமிங்கும் கைகளில் வேல்களைத் தாங்கிக் கொண்டு உலவிக் கொண்டிருந்தார்கள்!

      அப்போது பரபரப்புடன் இரண்டு குதிரைகள் அரண்மனை வாயிலைக் கடந்து உள்ளே வந்து கொண்டிருந்தன! அதன் மேல் வீற்றிருந்த இரண்டு மங்கையரின் வதனத்தில் அத்தனை பொலிவு இல்லை! வெறுப்பின் எல்லை வரை நீண்டு கிடந்தது! அரண்மனை வந்தடைந்ததும் தங்களது குதிரைகளை அப்படியே விட்டுவிட்டு மாளிகைக்குள் நகர்ந்து விட்டிருந்தார்கள்! காவல் வீரர்கள் அவர்களது குதிரைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி கொட்டடிக்கு கொண்டு சென்றார்கள்! 

      பூமியை அதிரும் வண்ணம் நடந்து கொண்டிருந்த நங்கையர்கள் இருவரையும் "ஏன் இத்தனை கோபம்? என்றும் இல்லாமல் இப்படி நடந்து கொள்வதற்கு காரணம் என்ன? கோபம் என் பொருட்டா? அல்லது வேறு எங்கும் தொடங்கி இங்கு முற்றுப் பெறப் போகிறதா?"எனக் கேட்டபடி மாளிகையின் கதவினை திறந்து கொண்டு வெளியே வந்தார் மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமான்!

      மாதண்ட நாயகரை கண்டதும் பொற்கொடியின் விழிகள் அக்கினி பிளம்பாய் மாறின! அப்படியே எரித்து விடுவது போல் பார்த்துக் கொண்டு நின்றாள்! 

     "ஏன் தங்காய்? எரிமலையாய்  எரிந்து கொண்டு நிற்கிறாய்? அப்படி என்ன நடந்தது, சொன்னால் தானே தெரியும்?" 

    "இந்த தேசத்தில் இன்னும் என்ன நடக்க வேண்டும்? இங்குதான் யாருக்குமே எந்தவிதமான பாதுகாப்பும் இல்லையே! அப்படி இருக்கும் பொழுது நான் எதைக் குறிப்பிடுவது? அதனால் ஆகப்போகுது தான் என்ன? மீண்டும் மீண்டும் பழைய பல்லவியைத்தான் பாடப் போகிறீர்கள்! அதைக் கேட்டு சகித்துக் கொள்ளும் தன்மையை நான் எப்போதோ கடந்துவிட்டேன்! "என எரிமலையின் அக்கினியை அவர் மீது அள்ளி வீசினாள் பொற்கொடி! 

     "நானும் தொடர்ந்து கேட்டு வருகிறேன்! நீயோ எந்தவிதமான பதிலையும் கூறாமல், ஏதேதோ காரணங்களை கூறிக் கொண்டிருக்கிறாய்! நிலவரம் என்னவென்று விளக்கமாக கூறினால் தானே, அடுத்து ஆக வேண்டியதை பார்க்க முடியும்! அதை விடுத்து நீ இவ்வாறு பேசிக் கொண்டிருந்தால் ஆகப் போவது என்ன? கோபத்தை கைவிட்டு நடந்ததை கூறு?"

    "நடந்ததை கூறுவதால் என்ன ஆகிவிடப் போகிறது? அதனால்தான் இம்முறை நானே தீர்ப்பை எழுதி விட்டேன்! விளைவுகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்!"

      "என்ன கூற முற்படுகிறாய்? சற்று விளக்கமாகத்தான் கூறு? "

     "இந்நேரம் உங்கள் ஒற்றர்கள் அத்தனை நிகழ்வுகளையும் உங்களிடத்தில் ஒப்பிட்டு இருப்பார்களே! அவர்களிடத்திலே கேட்டு தெரிந்து கொள்ளலாமே! புதிதாக என்னிடத்தில் என்ன தெரிந்து கொள்ள போகிறீர்கள்?"

     "அவர்கள் பட்டும் படாமலும் கூறினார்கள்! நடந்தது என்னவென்று முழுமையாக தெரிந்து கொள்வதற்காக தான் கேட்கிறேன்!"

     "ஆகா! எத்தனை அற்புதமான நடிப்பு! நீங்கள் கூறும் வார்த்தைகளை நான் நம்புவதற்கு ஒன்று பச்சைக் குழந்தை அல்ல! உங்கள் கைவரிசையை வேறு யாரிடமாவது காட்டிக் கொள்ளுங்கள்! அதற்கு ஏற்ற ஆள் நானில்லை! எனக்கு வரும் கோபத்திற்கு இந்த மாளிகையே தூள் தூளாக நொறுக்க வேண்டும் போல் உள்ளது!"எனக்கோபத்தில் வெடித்தாள் பொற்கொடி! 

     "நீதான்! சதிகாரர்களுக்கு சரியான தண்டனையை கொடுத்து விட்டாயே! பிறகு எதற்காக என் மீது கோபத்தை வாரி இறைக்கிறாய்? நான் அங்கு வந்திருந்தாலும் நீ செய்த முடிவைத்தான் எடுத்திருப்பேன்! பின் எதற்காக என்மீது கோபித்துக் கொள்கிறாய்? நமது தேசத்தில் பெண்கள் மீது கை வைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு நீயே மிகச்சிறந்த பதிலை கொடுத்து விட்டாய்! அதனை எண்ணி எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது! உனக்கு கற்றுக் கொடுத்த வாள் பயிற்சியும் வேல் பயிற்சியும் வீணாகப் போய்விடவில்லை! தக்க நேரத்தில் உன்னை நீயே காப்பாற்றிக் கொள்ள அது பயன்பட்டது!"

      "நன்றாகத்தான் பேசுகிறீர்கள்! எனது இடத்தில் வேறு யாரேனும் இருந்திருந்தால் அவர்களது கதிதான் என்ன? அப்போதும் இதே கதையைத்தான் கூறுவீர்களா? அதனால் ஆகப்போவது என்ன? சதிகாரர்களுக்கு மேலும் கொண்டாட்டமாக அல்லவா போய்விடும்! இன்னும் எத்தனை நாளைக்கு தான் இவர்களின் ஆட்டத்தை பொறுத்துக் கொள்வது! அங்கு தொட்டு இங்கு தொட்டு கடைசியில் தலைநகரத்திலே கை வைத்து விட்டார்கள்! அவர்களுக்கு உள்ள துணிச்சல் அதிகரித்துக் கொண்டே உள்ளது! இதற்கு ஒரு தீர்வே கிடையாதா? இப்படி இருந்தால் தேசம் எப்படி உருப்படும்? அதிலும் மாதாண்ட நாயகரின் தங்கையின் மீது கை வைக்க எண்ணுமளவிற்கு இந்த தேசத்தில் சதிகாரர்களின் துணிச்சல் பெருத்து விட்டது! அவை குறித்து உங்களுக்கு வெட்கமாக இல்லை! எனக்கு நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் கொதிக்கிறது!"

      "நீ கூறுவது அத்தனையும் சத்தியமான வார்த்தைதான்! சதிகாரர்களுக்கு முடிவரை சீக்கிரம் எழுதப்பட்டு விடும்! அவர்கள் எண்ணம் அடியோடு அழிக்கப்படும்! அவை குறித்து தான் நாளை மந்திர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது! அங்கு இதற்கான தீர்வு முற்றிலும் எழுதப்பட்டு விடும்! அதனால் வருத்தம் கொள்ளாதே! நீ போய் ஓய்வெடு! மிகுந்த களைப்பில் உள்ளாய்! "

      "என் மீதான தங்கள் அக்கரைக்கு நன்றி!"எனக் கூறியபடி தனது அறையை நோக்கி விடு விடு வென சென்றாள் பொற்கொடி! அவளைத் தொடர்ந்து அல்லியும் எதுவும் பேசிக் கொள்ளாமல் பின் தொடர்ந்தாள்!

       "தங்களின் தங்கை மிகுந்த கோபத்தில் உள்ளார்?"

     "நீ எப்பொழுது வந்தாய்?" என தன் பின்னால் இருந்த இளம்வழுதியை பார்த்துக் கேட்டார் மாதண்ட நாயகர்! 

    "தங்களது தங்கையார் உங்கள் இடத்தில் உரையாடும் போது தான் வந்தேன்! நீங்கள் இருவரும் காரசாரமாக பேசிக் கொண்டிருந்ததால் இடையூறு செய்ய வேண்டாம் என்று ஒதுங்கி நின்று கொண்டேன்!"

     "பார்த்தாயா? இப்படி எல்லாம் நடந்து விடக்கூடாது என்பதற்காகத்தான்  சோழகுல வல்லிப் பட்டினத்திற்கு உன்னை அனுப்பி வைத்தேன்?   இப்போது சதிகாரர்களின் சதிராட்டம் எங்கு வந்து நிற்கிறது எனப் பார்! இதற்கு என்ன சொல்லப் போகிறாய்?" இளம்வழுதியின் விழியைப் பார்த்துக் கொண்டே கேட்டார் மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமான்!

      இளம் வழுதி எதுவும் பேசிக் கொள்ளாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தான்!

     "இப்படி மௌனமாக இருப்பதால் என்ன சாதிக்க நினைக்கிறாய்?"

      கோடியக்கரை மூர்க்கனும் அவனது கூட்டாளிகளும் இதுவரை செய்தது குறித்தும் அவர்களது சதிச்செயலை   கண்டறிந்து களைந்தது குறித்தும் விரிவாக அவரிடம் எடுத்துக் கூறினான்!

      "நீ கூறுவதை பார்க்கும் பொழுது இப்பொழுதுதான் சிறிது மூச்சு விட தோன்றுகிறது! ஒரு வழியாக பெரும் கூட்டத்தை அழித்து விட்டாய்! இருப்பினும் அவர்களோடு இது முடிவதாக தெரியவில்லை! அதனால்தான் பார்த்தாயா? தலைநகரில் என் தங்கை மீது தாக்குதலை தொடுத்துள்ளார்கள்! இதிலிருந்து தெரிவது என்ன? அவர்கள் இன்னும் முற்றிலுமாக அழிக்க படவில்லை! அவை என்று நிறைவேறுகிறதோ அன்றுதான் சோழத்தின் உண்மையான விடியல் பிறக்கும்! அதுவரையில் நாம் கண்ணும் கருத்துமாக தான் செயலாற்ற வேண்டும்!"

      "தாங்கள் கூறியபடியே செய்து விடலாம் ஐயா! கோடியக்கரைக்கு வரவிருக்கும் சதிகாரர்களை முறியடிப்பதற்கு ஆவண செய்ய வேண்டும்! அது குறித்து தங்களிடம் கலந்துரையாட எண்ணியே இங்கு வந்தேன்! தாங்கள் உத்தரவு கொடுத்தால் நான் புறப்படுகிறேன்! எனது வரவை எண்ணி அழகன் கோடியக்கரையில் காத்திருப்பான்! நான் விரைந்து செல்ல வேண்டும்! நமக்கு அதிக நாட்கள் இல்லை!"

     "நீ கூறுவது எனக்கு நன்கு புரிகிறது! இருப்பினும் இதுகுறித்து மன்னரிடமும் விரிவாக எடுத்துக் கூற வேண்டும்! அவரது எண்ணம் என்னவென்று நாம் அறிந்து கொள்வது நன்மை பயக்கும்! இன்று இரவு ஒரு நாள் தங்கி நாளை நடைபெறும் மந்திர ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு அதன் பின் நீ என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துக் கொள்ளலாம்! அதுவரையில் உனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையில் சென்று ஓய்வெடு! நாளை மந்திராலோசனை கூட்டத்தில் சந்திப்போம்!"

      "திடீரென மந்திர ஆலோசனை கூட்டம் நடைபெறுவதற்கான காரணம் என்ன ஐயா?"

      "இது என்ன கேள்வி? நாட்டில் நடந்து கொண்டிருக்கும் பல்வேறு அசம்பாவிதங்களால் தேச முழுவதும் பெரும் கொந்தளிப்பு நிலவிக் கொண்டிருக்கிறது! குறுநில மன்னர்களும் அமைச்சர் பெருமக்களும் மிகுந்த அதிருப்தியில் உள்ளார்கள்! அவர்களது எண்ணங்கள் யாதென தெரியாது! ஆனால் கண்டிப்பாக தேசத்திற்கு நன்மை பயக்கும் காரியங்களை செய்வதற்காக இருக்காது என அறிவேன்! ஒவ்வொருத்தரும் பலவாறாக எண்ணிக் கொண்டு உள்ளார்கள்! அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! மன்னரும் அதைத்தான் விரும்புகிறார்! தொடர்ந்து இதனை வளர்த்துக் கொண்டு இருப்பதில் யாருக்கும் நன்மை பயக்காது! முடிந்த வரையில் நடப்பதையும் நடக்க வேண்டியதையும் தீர்மானித்து விட வேண்டியது தான்! அதன்பின் எது வந்தாலும் எதிர் கொண்டு விட வேண்டியது தான்! அதற்கான ஆயத்தத்தில் நாம் இருக்க வேண்டும்!"

     "நல்லது ஐயா! அப்படியானால் நாளை சந்திப்போம்"என மாதண்ட நாயகரடமிருந்து விடை பெற்றுக்கொண்டு தனது அறையை நோக்கி நகர்ந்து விட்டிருந்தான் இளம்வழுதி!

         இருளின் கிளை மீண்டும் பரவியிருந்த இரவு பொழுதின் அமைதியை கிழித்துக்கொண்டு தூரத்தில் எங்கோ அலறிக் கொண்டிருந்தது ஒரு ஆந்தை! 

       திடீரென கேட்ட ஆந்தையின் அலறலால் பக்கத்து மரத்திலிருந்து பறவைகள் சிறகை படபட வென அடித்துக் கொண்டு அந்த நள்ளிரவில் அமைதியான மற்றொரு மரத்தை நாடிச் சென்று கொண்டிருந்தது! 

      இரவு காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சோழத்தின் காவல் இரவாடிகளான காவலர்கள் இருவர் இருவராய் சேர்ந்து கொண்டு கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்! ஒளிர்ந்து கொண்டிருந்த வெண்ணிலவும் தண்னொழியை பூமியின் மீது ஊற்றிக் கொண்டிருந்தது! ‌

      மாளிகை மேட்டில் அமைந்திருந்த சோழர்களின் அரண்மனை, அவற்றின் உய்யாவனம் என பல அடுக்குகளாய் கொண்டு அமைக்கப்பட்டு இருந்தது! மன்னர்கள் தனது ராணிகளுக்கென தனித்தனி அரண்மனையை உருவாக்கி வைத்திருந்தார்கள்! அவை மட்டுமின்றி அவர்களது பேரமைச்சர்களும் முக்கிய அதிகாரிகளும் மாதண்ட நாயகர்களும் வசிப்பதற்கான தனித்த அரண்மனைகளும் அங்கு இருந்தன! 

     அத்தகைய சிறப்பு வாய்ந்த மாதணட நாயகரின் அரண்மனையின் சுற்றுச்சுவரைத் தாண்டி முகமூடி அணிந்த ஒரு உருவம் உள்ளே குதித்துக் கொண்டிருந்தது! 
(தொடரும்..... அத்தியாயம் 89 ல்)



No comments:

Post a Comment