Friday, 31 January 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 38

 🐾இராஜமோகினி🐾

🌹யாழிசைசெல்வா🌹

அத்தியாயம் 🌾38. இருதலைக்கொல்லி எறும்பாய் இளம்வழுதி🌾  

      சத்திரத்தில் தங்கியிருந்த வணிகர்களின் கோபம் எல்லையைக் கடந்து விட்டிருந்தது. ஒன்றில் தொடங்கிய இன்னொன்றாக அவர்களுக்குள் பரிணாமம் பெற்று, பெரும் விபரீதத்திற்கு அவர்கள் மாறிக் கொண்டிருந்தார்கள். எத்தனை தான் எடுத்துக் கூறினாலும் அவர்கள் கேட்கும் மனநிலையில் இல்லை. 


    "நீங்கள் கொடுத்த அழைப்பிலும் நம்பிக்கையிலும் தானே இந்த வணிக சாத்தினை மேற்கொண்டோம். அதன் காரணமாக உண்டான பலன் எங்களில் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதற்கு என்ன கூறுகிறீர்கள்?' என்றார் அங்கிருந்த வணிகரில் ஒருவர். 


      "நீங்கள் கொடுத்த வீண் நம்பிக்கை பெரும் விபரீதத்தில் கொண்டுபோய் எங்களைத் தள்ளி விட்டது"என்றார் அவர்களின் ஒருவர். 


‌      " நம்மை பாதுகாக்க இவர் என்ன செய்து உள்ளார்?"என்றார் மற்றொரு வணிகர். 


      "அது குறித்து எதுவும் வினவாமல் இவரை நம்பி   வந்தோமே, நம்மைச் சொல்ல வேண்டும்" என்றார் மற்றொருவர். 


      "நம்மையெல்லாம் பாதுகாத்து வந்த சூரியவர்மர் எங்கு போனார், என்ற வினாவிற்கு இதுவரை விடையில்லை. அப்படி இருக்கும் போது நாம் இவரை நம்பி வந்திருக்கக் கூடாது. இது நாம் செய்த பெரும் தவறு" என்றார் இன்னும் ஒரு வணிகர். 


       அங்கிருந்த வணிகர்களை விலக்கிக் கொண்டு முன்னாள் வந்த அழகன் "நீங்கள் எல்லாம் என்ன பேசுகிறீர்கள் என்று தெரிந்து தான் பேசுகிறீர்களா?, யாரோ முகம் தெரியாத சதிகாரர்களுக்கு பயந்து கொண்டு இன்னும் எத்தனை காலம்தான் இப்படியே காலம் தள்ளப் போகிறீர்கள். இத்தனை காலமாக உங்களையும் உங்கள் வணிக சாத்துகளையும் காத்து வந்தது யார் என்பதை மறந்து விட்டீர்களா?, நமக்குள் பிரிவினையை உண்டாக்கி, அதன் உள்ளே புகுந்து நமது ‌ தேசத்தைச் சீர்குலைக்க என்னும் சதிகாரர்களுக்கு இன்னும் கொண்டாட்டமாக அல்லவா போய்விடும். நமக்குள் உள்ள பிரச்சினையை நாம் தான் சரியானபடி பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்" என்றான். 


      அறைக்குள்ளும் வெளியேயும் நின்று கொண்டிருந்த வணிகர்கள் ஒவ்வொருவரும் தமக்குள் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள் .


      "உங்கள் அனைவரிடமும் மிகவும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.  சிறிது நேரம் அமைதியாக நான் கூறுவதைக் கேளுங்கள். முதலில் அனைவரும் அறையை விட்டு வெளியேறி வெளியே உள்ள திறந்த வெளிக்குச் செல்லுங்கள்" என பணிவுடன் இளம்வழுதி மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறினான்.


      என்னதான் அவன் கூறப் போகிறான் எனக் கேட்டு விடுவோமே என்று எண்ணிக் கொண்டார்களோ என்னவோ அறையை விட்டு வெளியேறிச் சத்திரத்தின் முன்பிருந்த திறந்தவெளியை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக வணிகர்கள் நகர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் வெளியற்றத்தைக் கண்டதும் சத்திர அதிகாரி பணியாளர்களை அழைத்து அங்கு விளக்குகளை ஏற்றும் படி உத்தரவிட்டார். 


    ஒரு வழியாக அனைவரும் திறந்த வெளியில் கூடி நின்று கொண்டு இளம்வழுதி என்ன கூறப் போகிறான் எனப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


    வணிகரை நோக்கி வந்த இளம்வழுதி "நடந்த நிகழ்வுகளுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு என் பேரில் உள்ள கோபம் நியாயமானது தான். உங்களுக்கு போதிய பாதுகாப்பு தராதது எனது குற்றமே. நடந்துவிட்ட நிகழ்வுகளுக்கு எத்தனை விளக்கம் கொடுத்தாலும் அதற்கு ஈடு ஆகாது என்பதை நான் அறிவேன். இங்கு நாம் முதலில் செய்ய வேண்டியது அந்த அறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடக்கும் அந்த வணிகருக்கு உரிய மரியாதையை நாம் செய்ய வேண்டும். அதற்கு அவரைப் பற்றிய விவரங்கள் தெரிந்தவர்கள் கூறுங்கள்"என்றான் அவர்களைப் பார்த்து இளம்வழுதி. 


     "நீங்கள் கூறும் சமாதானம் எங்களால் ஏற்றுக் கொள்ள இயலாது. இத்தனை பெரிய முயற்சி எடுக்கும்போது அதன் பலா பலன்களை ஆராய்ந்து இருக்க வேண்டியது உங்கள் கடமை. மேலும் பாடி காவல் அதிகாரியான நீங்கள் வணிகர்களைப் பாதுகாக்கும் கடமையிலிருந்து தவறி விட்டீர்கள்" என கோபத்தில் கொந்தளிக்கத் தொடங்கி விட்டார் கூட்டத்தில் உள்ள வணிகர் ஒருவர். 


    "நீங்கள் கூறுவது அனைத்தும் சரிதான். யாரும் மறுக்கவில்லை. மீண்டும் மீண்டும் அதையே கூறிக்கொண்டு இருப்பதால் ஆகப்போவது ஒன்றும் இல்லை. பாடி காவல் அதிகாரி கூறியது போல் கொலை செய்யப்பட்டவருக்கு உரிய மரியாதை நாம் கொடுத்தாக வேண்டும். விவரம் தெரிந்தவர்கள் தயவு செய்து கூறுங்கள்" என வணிகர்களைப் பார்த்து கூறினார் சத்திர அதிகாரி. 


      அங்கிருந்த வணிகர்களின் கூட்டத்திலிருந்து வெளியே வந்த வயதான வணிகர் ஒருவர் " தஞ்சையின் பெரும் வணிகர் செங்காணர் என்பது அவரது பெயர். சூரியவர்மரின் நெருங்கிய நண்பரும் ஆவார்.நீண்ட நெடுங்காலமாக தஞ்சை பெருவழியின் வணிக சாத்துகளை மேற்கொண்டு வந்தார். அவரது இழப்பு என்பது யாராலும் ஈடு செய்ய முடியாத ஒன்று"என இளம்வழுதியை பார்த்துக் கூறினார். 


     "தங்களுக்கு மிகுந்த நன்றி ஐயா" என அவரைப் பார்த்துக் கூறிவிட்டு சத்திர அதிகாரியின் பக்கம் திரும்பினான், "தஞ்சையின் பெரும் வணிகர் செங்காணர் அவர்களின் இறுதி அஞ்சலி பெரும் வீரருக்கு உரிய மரியாதையோடு நடைபெற வேண்டும். அதற்கு ஆவன உடனே மேற்கொள்ளுங்கள்" என சத்திர அதிகாரியைப் பார்த்து உத்தரவிட்டான். 


      அங்கிருந்த சத்திரப்பணியாளர்களை அழைத்து ஓலையும் எழுத்தாணியும் எடுத்து வரும்படி கூறினான்.‌ ஓலை வந்ததும் அவற்றில் கிடுகிடுவென ஏதோ  எழுதி தனது கைச்சாத்தினை இட்டு ஒரு குழலில் அடைத்தான்.  விழிகளால் அழகனை பார்த்து தன்னைப் தொடர்ந்து வரும்படி சைகை செய்தான். அழகனும் அவனை பின்தொடர்ந்து சென்றான்.


   சத்திரத்துக்கு பின்னால் இருந்த புளியமரம் அருகே இளம்வழுதி நின்று கொண்டான். 


    அழகன் அருகில் வந்ததும் "நான் கூறுவதை கவனமாக கேட்டுக் கொள். உன்னிடம் முக்கியமான ஓலைகளை கொடுத்து அனுப்பப் போகிறேன். அவற்றை கவனமாக எடுத்துச் சென்று நான் கூறும் நபரிடம் சேர்க்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அவை வேறு யாரிடமும் கிடைக்கும் படியான சூழல் எதனையும் நீ உருவாக்கி விடக்கூடாது" என்றவன் கையில் இருந்த ஓலைக் குழலை கொடுத்து"இந்த ஓலையை சேனாதிபதி கருணாகர தொண்டைமான் அவர்களிடம் மட்டும் தான் ஒப்படைக்க வேண்டும். தப்பித்தவறி வேறு யாரிடமும் இவற்றை சேர்த்து விடக் கூடாது " என்றவன் மற்றொரு ஓலை எடுத்து "அத்தோடு இந்த ஓலையை தஞ்சை போகும் வழியில் அமைந்துள்ள படைவீட்டில் இந்த ஓலையை கொடுத்து விடு. படைவீட்டில் கொடுக்க வேண்டிய ஓலையை கொடுத்துவிட்டு அதன்பின் நீ தஞ்சை நோக்கி செல்ல வேண்டும். தற்சமயம் நமது சேனாதிபதி தஞ்சையில் இருப்பதாக தகவல். விரைந்து நீ இந்த காரியத்தை ஆற்ற வேண்டும். தாமதமானால் நீ அவரை தேடி கங்கைகொண்ட சோழபுரம் தான் செல்ல வேண்டி இருக்கும். அம்மாதிரியான சூழலை எக்காரணம் கொண்டும் உருவாக்கி விடாதே. நான் சொல்வது உனக்கு புரிகிறதல்லவா?" என அழகன் இடம் அவன் செய்ய வேண்டிய பணி குறித்து விளக்கமாக எடுத்துக் கூறினான் இளம்வழுதி. 


    "என்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைத்து உள்ளீர்கள் அதற்கு நான் என்றென்றும் நன்றியோடு இருப்பேன் ஐயா" என உணர்ச்சி மிகுதியால் பேசினான் அழகன். 


     "சேனாதிபதி கருணாகர தொண்டைமானிடம் ஓலையை ஒப்படைத்த பின்பு உனக்கு மற்றும் ஒரு பணி உள்ளது. உமது ஊர் நத்தத்தில் பெரும் கலகத்தை உண்டாக்கிய நபர் கூறியபடி தஞ்சை புறம்பாடியில் சதிகாரர்கள் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் அதனை கவனமாக கண்டறிந்து செயலாற்ற வேண்டும். இத்தனை பெரிய பொறுப்பு உன்னை நம்பி கொடுக்கின்றேன். கவனமாக இரு" எனக்கூறி அவனது கையில் ஓலைகளை ஒப்படைத்தான் இளம்வழுதி. 


     "நீங்கள் கூறியபடியே செய்து விடுகிறேன் ஐயா. நான் எப்பொழுது புறப்பட வேண்டும்?"


     "நமக்கு மிகுந்த நேரமில்லை. ஆகவே உடனடியாக நீ புறப்பட்டுச் சென்று காரியத்தை நிறைவேற்ற வேண்டும். நானும் உன்னுடன் வருவதாக தான் இருந்தேன். இங்கு நடந்தேறிய பல்வேறு சம்பவங்களால் என்னால் உன்னுடன் வர இயலாதபடி செய்துவிட்டது. எனவே கண்ணும் கருத்துமாக இருந்து காரியத்தை செயலாற்ற வேண்டும் நீ" என அழகனிடம் கூறினான் இளம்வழுதி. 


     "ஆகட்டும் ஐயா. நான் விடை பெற்றுக் கொள்கிறேன்"எனக் கூறிவிட்டு குதிரைகளின் கொட்டடி நோக்கி சென்று கொண்டிருந்தான் அழகன். 


      அழகனிடம் வேண்டிய விவரங்களை கூறிவிட்டு வணிகர்களை நோக்கி சென்றபோது எரியும் தீயில் என்னை வார்த்தது போல் வணிகர்களின் கோபம் மேலும் உச்சத்தை தொட்டிருந்தது.‌


      "அதோ வருகிறார் பாடிகாமல் அதிகாரி. அவரிடமே கேட்டு விடுவோம்" என முரடர்  போல் பெரும் கோபத்தோடு ஒரு வணிகர் வந்தார். 


     "கூறுங்கள் ஐயா. ஏன் கோபமாக உள்ளீர்கள்?"என்றான் இளம்வழுதி. 


     "என்ன இப்படி கூறுகிறீர்கள்? இங்கு நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்விற்கும் நாங்கள் அனைவரும் பெரிய விருந்து ஒன்றை நடத்தி தட புடலாக நடத்தி கொண்டாடி தீர்த்திருக்க வேண்டும் போலும்" என்றார் கோபத்தில். 


       "என்னவென்று கூறினால் தானே தெரியும்"


        "ஆகா. தங்களுக்கு ஒன்றும் தெரியாது போல் அல்லவா உள்ளது தங்கள் பேச்சு"என கூத்தலாக பேசினார்.


       "கொலை செய்யப்பட்ட தஞ்சையின் பெரும் வணிகர் செங்காணரின் பெரும் விலை மதிப்பிலான பட்டாடையில் நிரம்பிய மாட்டு வண்டியை முழுவதுமாக தீ வைத்து கொளுத்தியது, தங்களுக்கு தெரியாது என்று கூறுகிறீர்களா?" என்றார் அவருடன் இருந்த வணிகர். 


      "வணிகச் சாத்துகள் இங்கே வந்து ஓய்வெடுக்க தொடங்கியதும் அவற்றின் நிலை வெற்றி அறிந்து கொள்வதற்காக நான் அவற்றைப் பார்க்க சென்ற போது தான், கடைசியில்  பொருட்களோடு இருந்த மாட்டு வண்டியை யாரோ தீ வைத்து கொளுத்தியதால் எரிந்து கொண்டிருந்தது. நானும் என்னால் முடிந்தவரை விரைவாக சென்றபோதும் தீயின் நாக்குகள் பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கி விட்டது. எனவே என்னால்  அதனை தடுக்க முடியவில்லை. அவ்வேளையில் தான் தீ வைத்தவனை தேடிக் கொண்டு சத்திரம் வந்தபோது இங்கு நடந்த நிகழ்வுகள் பற்றி என்னால் அறிய முடிந்தது"என வணிகர்களிடம் விளக்கமாக எடுத்து கூறினான் இளம்வழுதி. 


      "தங்கள் பேச்சைக் கேட்டு நம்பி வந்ததற்கு பெரும் பலனை கைமேல் கொடுத்து விட்டீர்கள். பெரும் வணிகர் செங்காணரை கொடூரமாக கொலை செய்ததோடு அவரது பொருட்கள் அனைத்தும் தீயில் நாசமாகிவிட்டது. இவை யாவற்றையும் நடைபெறாமல் தடுத்து காப்பாற்றி இருக்க வேண்டியது தங்களுடைய கடமை" என்றார் மிகுந்த கோபத்தில். 


     "தாங்கள் கூறுவதை முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன். நடந்த தவறுக்கு மீண்டும் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதற்கு காரணமானவர்களைக் கண்டிப்பாக கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த தண்டனை உறுதியாக வழங்குவேன். இது சத்தியம் " என்றான் இளம்வழதி.


(தொடரும்.... அத்தியாயம் 39ல்)

       


Thursday, 30 January 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 37

 🐾இராஜமோகினி🐾

🌹யாழிசைசெல்வா🌹

அத்தியாயம் 37 🌾செயல் ஒன்று; விளைவு இரண்டு🌾

     நான்காவது அறைக்குள் நுழைந்த இளம்வழுதியும் அழகனும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். ஏற்கனவே அங்கு இருந்த சத்திர அதிகாரி பேசும் நிலையைக் கடந்து விட்டிருந்தார். அவர்கள் உள்ளே வந்த பின்பும் என்ன பேசுவது என்று தெரியாமல் பதட்டத்தில் இருந்தார் . அவரது விழிகள் கட்டிலை நோக்கி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. சத்திரத்தில் பணி செய்து வந்த இத்தனை காலத்தில் இதுவரை இப்படி ஒரு நிகழ்வை அவர் சந்தித்தது கிடையாது. இதனை எப்படி எதிர்கொள்வது என்ற பதற்றம் உள்ளூர ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் பயம் அதிகமான போது தான் வேறு வழியின்றி இளம்வழுதியை கத்திக் கூப்பிட்டு இருப்பார் போலும். 

     நடந்த நிகழ்வுகளின் விபரீதத்தினை எப்படி எதிர்கொள்வது என்ற பதட்டம் அங்கிருந்த அனைவருக்கும் இருந்தது. அதனால் மௌனத்தை மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார்கள். அறை முழுவதும் குருதியின் வாடை பரவிக் கிடந்தது. 

     சாளரத்துக்கு அருகே  இலவம் பஞ்சு வைத்து தைக்கப்பட்ட மெத்தையை கொண்ட கட்டிலின் மேலே, ஐம்பது வயதினை கடந்து விட்டிருந்த தஞ்சையின் பெரும் வணிகரின் விழிகள், மேற்கூறையை வெறித்துப் பார்த்த வண்ணம் இருந்தன.‌‌ ஆறடிக்கு மேல் உயரத்துடன் சீன பட்டாடை அணிந்த கம்பீரமான, அந்த உடலிலிருந்து தலை துண்டாக வெட்டப்பட்டு தலையணையில் கிடந்தது. வெட்டப்பட்ட இடத்திலிருந்து பெருக்கெடுத்த குருதி தலையணையை நனைத்ததோடு கட்டிலின் கீழே வழிந்தோடி அறையில் பரவி விட்டிருந்தது. 

    அவ்வறையில் சூழ்ந்திருந்த மௌனத்தை கிழித்துக்கொண்டு "இத்தகைய கொடூரத்தை செய்ய எப்படித்தான் அவர்களால் முடிந்ததோ?" என்றான் அழகன்.

     "நான் இதுவரை இப்படி ஒரு சம்பவத்தை என் ஆயுளில் பார்த்ததே கிடையாது. இவ்வாறு நடக்கும் என்று கனவிலும் கூட நினைத்ததில்லை " துக்கம் தொண்டையை அடைத்ததால் குரல் கம்மிக்கொண்டு பேசினார் சத்திர அதிகாரி. 

     வெட்டப்பட்ட வணிகரின் உடலைப் பார்த்துக் கொண்டிருந்த இளம்வழுதி "எங்களை மீறி, நீ என்ன செய்து விட முடியும். அப்படி நினைத்தால், அதற்கான பதில் இதுதான் என செயலில் காட்டி உள்ளார்கள் சதிகாரர்கள்" என்றான் இளம்வழுதி.

     இளம்வழுதியின் அருகில் வந்த சத்திர அதிகாரி "தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளோடு தானே வணிக சாத்துகள் புறப்பட்டு வந்திருந்தன. அப்படி இருக்கையில் இவை எவ்வாறு நடந்தது?" என்றார். 

     "உங்களுக்கு சத்திரத்தில் நடந்துவிட்ட இந்த சம்பவம் மட்டும்தான் தெரியும். வெளியே நடந்த விபரீதத்தை நீங்கள் அறிய மாட்டீர்கள்" என சத்திர அதிகாரி பார்த்து கூறினான் இளம்வழுதி. 

    "என்னைத்தான் அவர்கள் கை கால்களை  கட்டிப் பிணைத்து விட்டார்களே. பிறகு எப்படி தெரியும்."

    "அவர்கள் திட்டமிட்டு தான் காரியங்களை செயலாற்றி உள்ளார்கள்"

     "வேறு என்ன செய்தார்கள்?"

      "சிறிது யோசித்துப் பார்த்தால் உங்களுக்கே அனைத்தும் புரியும். முதலில் என்ன நடந்தது?"என்றான் இளம்வழுதி. 

     "வணிக சாத்துகளின் கடைசியில் இருந்த மாட்டு வண்டி, தீப்பிடித்து எறிந்ததாக கூறினீர்கள்?" என்றான் அழகன்.

     "பிறகு?"
     
     "தடையாக இருந்த என்னையும், சத்திர அதிகாரியையும் முடக்கி போட்டு விட்டார்கள்"

     "அதன் பின்னால்?"

      "சத்திரத்தில் தங்கியிருந்த பெரும் வணிகர் ஒருவரை கொலை செய்து விட்டார்கள்"

 ‌     "தடுப்பதற்கு யாரும் இல்லாததால் அவர்களது காரியம் சுலபமாக நிறைவேறிவிட்டது.   அதுமட்டுமின்றி அவர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து செயலாற்றி இருக்க வேண்டும். முதல் அணி வண்டியை தீ வைக்க சென்றிருக்க வேண்டும். அங்கு தீப்பிடித்து எறிந்ததும் அனைவரும் கவனமும் அதை நோக்கி நகர்ந்த போது இரண்டாவது அணி சத்திர அதிகாரியை முடக்கி போட்டுவிட்டு வணிகர் அறைக்குள் புகுந்து அவரை கொலை செய்திருக்க வேண்டும் " என்றான் இளம்வழுதி. 

      "அப்படி என்றால் என்னை தாக்கியது யார்?"என்றான் அழகன். 

     "நீ கேட்பதும் நியாயமாகத்தான் உள்ளது. அப்படி என்றால் மூன்றாவது அணி முதல் அடுக்கில் உள்ள இரண்டாவது அறையில் இருந்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி இந்தக் கூட்டத்தை இயக்கியவன் அந்த அறையில் தான் இருந்து அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும். " என்றான் இளம்வழதி.

    "காரியம் முடிந்ததும் அனைவரும் கிளம்பி போய் இருப்பார்கள்" என்றான் அழகன். 

      "நீ என்ன கூறினாய்?" என்றான் இளம்வழுதி.

      தயக்கத்துடன் "காரியம் முடிந்ததும் அனைவரும் கிளம்பி போய் இருப்பார்கள் என்றேன்" எனக் கூறினான் அழகன். 

      திடீரென என்ன நினைத்தானோ தெரியவில்லை "அழகா! நீ இங்கேயே இரு!" என்றவன் சத்திர அதிகாரியைப் பார்த்து "வாருங்கள் ஐயா! மற்ற வணிகர்களின் நிலை என்னவென்று பார்ப்போம்" என கூறிக்கொண்டே அறையை விட்டு வெளியேறி அடுத்து இருந்த அறை வாசலுக்கு சென்றான். அறையின் கதவு வெளியே தாளிடப்பட்டிருந்தது. தயக்கத்துடன் கதவினை திறந்து பார்த்தான் இளம்வழுதி. 

      அவன் பின்னால் வந்த சத்திர அதிகாரி கையில் இருந்த விளக்கின் ஒளியில்  அறைக்குள் இருவர் கட்டப்பட்டு கீழே கிடந்தது தெரிந்தது. விடு விடுவென அங்குகிடந்த வணிகர்களின் கட்டுக்களை அவிழ்த்தெடுத்து அவர்கள் சுய உணர்வு பெறுவதற்கு உதவி செய்து கொண்டிருந்தான். சத்திர அதிகாரியும் விளக்கினை அங்கிருந்த மர ஆசனத்தில் வைத்துவிட்டு வணிகர்கள் எழுந்து நிற்க உதவி செய்தார். நீண்ட நேரமாக இருளில் கிடந்ததால் அவர்களது விழிகளு‌க்கு எதுவும் தெரியவில்லை. வெகு சிரமத்திற்கு பிறகு தங்களது சுய உணர்வுக்கு வந்தார்கள் வணிகர்கள். 

     "யாரோ தெரியவில்லை திடீரென எங்கள் மீது பாய்ந்து தாக்கி விட்டார்கள். அவ்வளவு தான் தெரியும்.‌"என்றார் அவ்விரு வணிகரில் வயதானவர். 

    "ஐயா நீங்கள் இவர்களிடம் பேசிக் கொண்டிருங்கள். நான் மற்ற அறைகளில் உள்ள வணிகர்களை பார்த்துவிட்டு வருகிறேன்" என சத்திர அதிகாரி அடுத்திருந்த அறையினைச் சோதிக்கச் சென்று விட்டார். 

      "நாங்கள் பார்க்கும் போது சதிகாரர்கள் அந்த அறையில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தார்கள்" என கொலை செய்யப்பட்ட வணிகரின் உடல் கிடந்த அறையைக் காண்பித்தார்கள் அவ்விரு வணிகரும். 

    மீண்டும் கொலை செய்யப்பட்ட அறைக்குள் நுழைந்த இளம்வழுதியிடம் "இதன் காரணமாக பெரும் பிரச்சனைகள் உருவாகிவிடும். அதனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்?" என அவனிடம் கேட்டாள் அழகன். 

     "உண்மையில் சதிகாரர்கள் இங்கு செய்திருக்கும் கொலை ஒன்றல்ல, இரண்டு" என அழகனைப் பார்த்துக் கூறினான் இளம்வழுதி. 

     "இங்கு ஒன்றுதானே உள்ளது ஐயா. வேறு  அறைகளில் யாரேனும் கொலை செய்யப் பட்டுள்ளார்களா ?" எனப் பதட்டத்தில் கேட்டான்.

     "நடந்திருப்பது ஒரு கொலை தான் இதுவரை. ஆனால் விளைவுகள் இரண்டு"  

     "அப்படி என்ன நடந்து விடப் போகிறது இதனால்?" என்றான் புரியாமல் குழப்பத்தில் அழகன். 

     "வணிகர் ஒருவரை கொலை செய்திருப்பதன் மூலம் எனது பாதுகாப்பின் மீது பெரிய கேள்வியை எழுப்பி உள்ளார்கள். இதனால் என் மீதான நம்பிக்கையை வணிகர்களிடம் இழந்துவிட்டேன். அதனால் வணிகர்கள் தங்களது சேவைகளை தொடர போவதில்லை. இதனால் சோழ தேசத்தின் ஒட்டுமொத்த வணிகமும் சீர்குலைந்து போகும் பேராபத்தை உருவாக்கி விட்டார்கள். செயல் ஒன்று விளைவு இரண்டு. இப்போது புரிகிறதல்லவா?" என அழகனைப் பார்த்து கூறினான் இளம்வழுதி. 

       "இப்போது நன்றாக புரிகிறது ஐயா. இத்தனை பெரிய அபாயத்தில் நானும் உங்களை இழுத்து விட்டேன். என்னை மன்னியுங்கள். நீங்கள் வரும் வரை நான் காத்திருந்து இருக்க வேண்டும்" எனத் துயரத்துடன் கூறினான் அழகன். 

     "உண்மையை கூறுவது எனறால்,  நீ இதனில் தலையிட்டு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் கண்டிப்பாக தங்கள் காரியத்தை செய்திருப்பார்கள். அதனால் நீ ஒன்றும் வருத்தம் கொள்ள வேண்டாம். அவர்களது இலக்கு என்னை வீழ்த்துவதன் மூலம் சோழத்தை சாய்ப்பது தான். அதனை ஏறக்குறைய நிறைவேற்றும் முயற்சியில் இப்போது அவர்கள் வெற்றி பெற்று இருக்கலாம். இவை நிலையானது அல்ல. மாற்றத்தை உண்டாக்க நாம் தயாராக வேண்டும். இனியும் பொறுத்திருந்தால் ஆகப் போவது ஒன்றும் இல்லை" என  மனதிற்குள் உண்டான தெளிவுடன் அழகனைப் பார்த்துக் கூறினான்.

    " தாங்கள் கூறும் பணியைச் செய்யக் காத்திருக்கிறேன் ஐயா" என்றான் அழகன் முனைப்புடன்.

     "முதலில் சத்திர அதிகாரி வரட்டும். மற்ற அறைகளில் என்ன நிலவரம் என்று முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதன்பின் தான் மற்றவற்றைப் பார்க்க வேண்டும்" 

      கொலை நடந்த அறைக்கு வெளியே உள்ள நடைபாதையில் தடதடவென அனேகம் பேர் வரும் பாத குருடுகளின் ஓசை எழும்பியது.‌ ஓசைகளின் தீவிரம் அதிகரித்து இருந்தபோது எல்லோரும் அந்த அறைக்குள் திபு திபு வென உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள். அவர்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை.‌ அவர்களது விழிகளில் அத்தனை தீவிரமான கோபம் உருவாகி பெரும் நெருப்பை கொட்டும் எரிமலையாக மாறிக் கொண்டிருந்தது. இன்னும் சிறிது தாமதித்தால் அவர்கள் நிலை கட்டுக்குள் அடங்காமல் போய்விடும் சூழல் உருவாவதைக் கண்டுகொண்ட இளம்வழுதி "அனேகம் பேர் வேண்டாம். முக்கிய நபர்கள் மட்டும் உள்ளே இருங்கள், மற்ற  அனைவரும் வெளியேறுங்கள்" எனக் கூறி அவர்களை வெளியேற்ற முயன்றான். 

     அவர்களது விழிகளில் தெரிந்த கோபக்னியால் ‌ அவனை எரித்து விடுவது போல் பார்த்தனர்.  எல்லை மீறி செல்லும் அபாயமும் அவ்விழிகளில் தெரிந்தது. அதனைக் கண்டு கொண்ட சத்திர அதிகாரி "பாடி காவல அதிகாரி கூடியபடி ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வெளியில் நில்லுங்கள்" எனக்கூறி அவர்களை வெளியேற்ற முயன்றார். அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது. 

     அங்கு கூடிவிட்ட வணிகர்கள் யார் சொல்வதையும் கேட்கும் நிலையில் இல்லை. "எங்களை ஏன் தடுக்கிறீர்கள்? எங்களுக்கு என்ன நடந்தது என்று தெரிந்தாக வேண்டும்?" என அனைவரும் கூட்டமாக கத்தத் தொடங்கி விட்டார்கள். 

        "நடந்தவற்றை முழுவதுமாக தெரிய வேண்டுமானால் அதற்கு உங்களது ஒத்துழைப்பு தேவை. முதலில் அனைவரும் அறையை விட்டு வெளியேறி வெளியே காத்திருங்கள். அப்போதுதான் அனைத்திற்கும் தீர்வு காண முடியும்" என்றான் இளம்வழுதி. 

     "உமக்கென்ன ஐயா? இழப்பு எங்களுக்கல்லவா?, நீங்கள் எளிதாக எதனையும் எடுத்துக் கொள்ள முடியும். எங்களால் இயலாது?" என அவர்களில் சிலர் ஆக்ரோசத்துடன் கத்தத் தொடங்கி விட்டார்கள்.

     உருவாகி இருந்த புயலுக்கு வெவ்வேறான பெயர்களை கொடுத்துக் கொண்டிருந்தார்கள் அங்கிருந்த வணிகர்கள். அப்போது எரியும் தீயில் எண்ணை வார்த்தது போல் புதிய புயல் ஒன்று அங்கு மையம் கொண்டது. அதனை அறிந்தபோது இளம்வழுதி செய்வது அறியாமல் திகைத்துப் போய் நின்றான்.

(தொடரும்...... அத்தியாயம் 38ல்)
        


Wednesday, 29 January 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 36

  🐾இராஜமோகினி 🐾

🌹யாழிசைசெல்வா 🌹

 அத்தியாயம்  🌾36. சத்திரத்தில் என்ன நடக்கிறது?🌾

       ஏறக்குறைய சத்திரத்தை நெருங்கி விட்டிருந்தான் இளம்வழுதி. மனதிற்குள் ஒருவிதமான கலக்கம் உருவாகி இருந்தது அவனுக்கு. "இதுவரை யாரும் காணவில்லையே. தீ வைத்தவன் எங்கு சென்றான் என தெரியவில்லை. அங்கு அழகன் என்ன செய்து கொண்டிருக்கிறானோ அதுவும் புரியவில்லை" என எண்ணியபடியே சத்திரம்  அருகே வந்து இருந்தான்.

       சத்திரம் முழுவதும் ஒரே நிசபத்தமாக இருந்தது. வெளியே ஒருவரும் காணவில்லை. சத்திரத்தில் ஆங்காங்கு ஏற்றப்பட்டிருந்த விளக்குகள் சரியாக எண்ணெய் வார்க்கப்படாமல் இப்போதோ அப்போதோ என அணையும் தருவாயில் இருந்தன. 

     "அழகன் எங்கே போனான்?, ஆளைக் காணவில்லையே... இங்குதான் எங்கோ இருப்பான் போலும். சத்திரத்திலும் யாரும் இல்லை, அனைவரும் உறங்கி விட்டார்களோ?, சத்திர அதிகாரியாவது கேட்கலாம் என்றால் அவரையும் காணவில்லை. முதல் அடுக்கில் இருந்த இரண்டாவது  அறையும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சரி எதற்கும் சத்திர அதிகாரியின் அறைக்கு சென்று அவரிடம் கேட்டுப் பார்ப்போம்" என எண்ணியவன்  முகப்பு பகுதியை கடந்து அவரது அறையை நோக்கி சென்றான். 

      சத்திர அதிகாரியின் அறை மூடிக் கிடந்தது. அறையின் விளக்கும் அணைக்கப்பட்டு இருந்தது. அகால வேளையாக உள்ளது. இந்நேரத்தில் அவரை தொந்தரவு செய்தால் எதுவும் நினைத்துக் கொள்வாரோ என்னவோ? என எண்ணியவன் அறையின் வாசல் முன்பாக நின்று யோசித்துக் கொண்டிருந்தான். ஒரு சில கணம் யோசித்தவன், வேறு வழியில்லை. அவரிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவன், கதவினை தட்டும் நோக்கத்தில் கதவு  மேல் கை வைத்தான். கதவு உள்ளே சாத்தப்படாமல் இருந்ததால் அவன் கை வைத்ததும் திறந்து கொண்டது. அறை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. உள்ளே ஒன்றும் தெரியவில்லை. 

    "ஐயா! ஐயா!  எங்கு உள்ளீர்கள்? "என அழைத்தபடி அறைக்குள் நுழைந்தான் இளம்வழுதி.

    இளம்வழுதி அழைத்ததும் அறைக்குள்ளிருந்து சத்தம் கேட்டது. யாரோ எதையோ உதைப்பது போன்ற சத்தமாக அது இருந்தது. சத்தம் எந்த பக்கம் வருகிறது என அறியும் நோக்கத்தில் நாலாபுரமும் விழிகளை சுழல விட்டான். அங்கிருந்த கட்டிலுக்கு அடியில் இருந்து மீண்டும் உதைக்கும் சத்தம் கேட்டது. கட்டிலுக்கு கீழே எட்டிப் பார்த்த இளம்வழுதி ஒன்றும் தெரியாததால் அறையை விட்டு வெளியேறினான். வெளியே நடைபாதையில் எரிந்து கொண்டிருந்த விளக்கு ஒன்றை எடுத்து திரியை தூண்டி எண்ணெயை வார்த்தான். தீபத்தின் நாக்குகள் சுடர் விட்டு எறியத் தொடங்கின. விளக்கினை எடுத்துக்கொண்டு சத்திர அதிகாரியின் அறைக்குள் நுழைந்தவன் கட்டிலுக்கு கீழே விளக்கை வைத்து விட்டு, கட்டிலுக்கு அடியில் பார்த்தான். சத்திர அதிகாரியின் கை கால் கட்டப்பட்டு கீழே உருட்டப்பட்டு இருந்தார். சத்தம் எழுப்பாமல் இருப்பதற்காக அவரது வாயில் துணி திணிக்கப்பட்டிருந்தன. சத்திர அதிகாரியை வெளியே இழுத்து அவரது கட்டுக்களை அவிழ்த்து விட்டான் இளம்வழுதி. 

      நீண்ட நேரமாக கை கால்கள் கட்டப்பட்டு இருந்ததால் குருதி ஓட்டமின்றி உடல் மரத்துப் போய் காணப்பட்டு இருக்கும் போலும். அதனால் கை கால்களை உதறிக் கொண்டு தட்டு தடுமாறி எழுந்து நின்றார் சத்திர அதிகாரி. அறையின் மூலையில் இருந்த மண்பானையில் இருந்து குவளையில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தான். தண்ணீரை வாங்கி மடமடவென முழுவதையும் குடித்துவிட்டு மீண்டும் கை கால்களை உதறிக் கொண்டார். ஐம்பது வயதினை கடந்து விட்டிருந்த அவரால் உடலின் வலியை பொறுக்க முடியாமல் தவித்தார். அவரது நிலையை எண்ணி வருத்தம் அடைந்தான் இளம்வழுதி. 

    "இந்நேரத்தில் தங்களிடம் இதனை கேட்பதற்கு வருத்தம் கொள்ள வேண்டாம். நடந்ததை அறிவதற்கு வேறு வழி இல்லை. என்ன நடந்தது என்று கூறுங்கள்?"என்றான் இளம்வழுதி. 

     தள்ளாடியபடி அங்கிருந்த கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டார் சத்திர அதிகாரி. தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவர் "யார் எனத் தெரியவில்லை. திடீரென இரண்டு பேர் எனது அறைக்குள் புகுந்தார்கள். அவர்களிடம் என்ன ஏது என்று கேட்பதற்குள் இருவரும் சேர்ந்து என்னை வாயில் துணியை திணித்துவிட்டு கைகால்களை கட்டி விட்டார்கள். நான் எவ்வளவு முயன்றும் அவர்கள் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை. இருப்பினும் நானும் முடிந்தவரை முயற்சி செய்து பார்த்தேன். பலன் இல்லை. அதன் பின் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை என்னைத் தாக்கி மூர்ச்சை அடையச் செய்தார்கள். அதன்பின் என்ன நடந்து என்று எனக்குத் தெரியவில்லை. வெகு நேரம் கழித்து நான் கண்விழித்துப் பார்க்கும் பொழுது அறை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. நான் எங்கு இருக்கிறேன் என ஒரு வழியாக முட்டி மோதி பார்த்தபோது எனது அறையின் கட்டிலுக்கு அடியில் இருப்பதை உணர்ந்து கொண்டேன். அங்கிருந்து வெளியேற நான் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. சரி எப்படியும் யாராவது வருவார்கள் என காத்துக் கிடந்தேன். நீண்ட நேரமாக யாரும் வரவில்லை. வெளியில் என்ன நடக்கிறது என்றும் எனக்கு தெரியவில்லை. ஒரே குழப்பத்தில் நான் இருந்தேன். அப்போதுதான் நீங்கள் உள்ளே வந்தீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் , வந்திருப்பது நீங்கள்தான் என்று கூட எனக்கு தெரியாது. என்னை கட்டி போட்டவர்கள் எங்கே மீண்டும் வந்து விட்டார்களோ என்ற பயம் எனக்குள் இருந்தது. நல்ல வேளையாக நீங்கள் விளக்கு ஒன்றை எடுத்த வந்த பின்பு தான் எனக்கு உயிர் திரும்ப வந்தது" என தனக்கு நேர்ந்த விவரங்களை முடிந்த மட்டும் எடுத்துக் கூற முயற்சி செய்து கொண்டிருந்தார் சத்திர அதிகாரி. 

      "உங்களைத் தாக்கிக் கட்டி போட்டதில் இருந்தே தெரிகிறது ஏதோ விபரீதமான திட்டத்தோடு தான் விரோதிகள் சத்திரத்திற்குள் புகுந்துள்ளார்கள் என்பது. முதலில் அதனை கண்டறிய வேண்டும். வாருங்கள் ஐயா. மற்றவர்களுக்கு என்ன ஆயிற்று என்று பார்ப்போம்" கூறியவன் அறையை விட்டு வெளியேறி மற்ற அறைகளை நோக்கி சென்றான். 

     சத்திர அதிகாரியும் அவன் பின்னால் முடிந்த மட்டும் வேகமாக பின் தொடர்ந்தார். "ஐயா நான் கீழே உள்ள அறைகளை பார்க்கிறேன். நீங்கள் முதல் அடுக்கில் உள்ள அறைகளை பாருங்கள்" என அவர் கூறியதும் படிகளில் ஏறி முதலடுக்கை அடைந்திருந்தான். முதல் அறையின் கதவினை தட்டினான். உள்ளே இருந்து எந்த விதமான சத்தமும் எழவில்லை. மறுபடியும் தட்டினான். இம்முறை உள்ளே இருந்து யாரோ எழுந்து வரும் ஓசை கேட்டது. கதவைத் திறந்த வயதான வணிகர் ஒருவர் வெளியே வந்தார். "ஏனையா? இந்த நேரத்தில் கதவினைத் தட்டுகிறீர்கள்? நான் வெகு நேரமாக உறக்கம் இன்றித் தவித்துக் கிடந்தேன்.‌ இப்பொழுதுதான் சிறிது நேரத்துக்கு முன்பாக கண்ணயர்ந்தேன். அதற்குள் வந்து என்னை எழுப்பி விட்டீர்களே" என கோபத்தில் கத்தத் தொடங்கி விட்டார் அந்த வணிகர். 

      வணிகரின் கோபத்தால்"ஒன்றுமில்லை ஐயா. தவறுதலாக அறையை மாற்றித் தட்டி விட்டேன். நீங்கள் சென்று உறங்குங்கள்"என அவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு இரண்டாவது அறையை நோக்கிச் சென்றான். அந்த அறை வெளிப்பக்கம் தாழ்ப்பாள்  போடப்பட்டிருந்தது. அது அவனுக்கு சந்தேகத்தை இன்னும் அதிகப்படுத்தி இருக்க வேண்டும். கதவினை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். கையில் வைத்திருந்த சிறு விளக்கின் ஒளியில் அறையின் நடுவே மூர்ச்சித்து கிடந்த அழகன் தெரிந்தான். விளக்கை கீழே வைத்துவிட்டு அவன் அருகே சென்று அவனது சுவாசத்தில் கை வைத்துப் பார்த்தான். சுவாசம் சீராக இருந்தது. பிறகு மண்பானையில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து அவன் முகத்தில் தெளித்து அவனை தெளிவடைய செய்யும் முயற்சியில் இறங்கியிருந்தான் இளம்வழுதி. 

      ஒரு வழியாக விழிகளைத் திறந்து பார்த்த அழகன் தன் அருகே இளம்வழுதி நிற்பதை பார்த்ததும்"நீங்கள் எப்போது ஐயா வந்தீர்கள்?" என்றான் குழப்பமான எண்ணத்தில்.

     "அது இருக்கட்டும். இந்த அறையில் நீ எப்படி வந்தாய்?"

     "நீங்கள் போன பின்பு வெகு நேரமாக இந்த அறையில் விளக்கு எரியவில்லை. சரி இங்கு தேவையில்லாமல் கண்காணித்துக் கொண்டிருக்கிறோமோ என எண்ணிக்கொண்டேன். சிறிது நேரம் கழித்து வணிக சாத்துகளைக் கடந்து ஒருவன் பதுங்கிப் பதுங்கி சத்திரத்தை நோக்கி வர முயன்றான். அவனது செயல் என்னை ஈர்த்தது. அவன் என்னதான் செய்கிறான் என தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்தேன். பதுங்கிப் பதுங்கி வந்தவன் தன்னை யாரும் பின் தொடரவில்லை என தெரிந்து கொண்டவன் முதல் அடுக்கில் இருந்த இரண்டாவது அறைக்குள் புகுந்து கதவை சாத்திக் கொண்டான். நானும் அவனைத் தொடர்ந்து என்ன செய்கிறான் என அறிய விரும்பி மேலே வந்து பார்த்தபோது, இந்த அறை இருள் சூழ்ந்து காணப்பட்டது. உள்ளே என்ன நடக்கிறது என்று சாளரத்தின் வழியாக பார்க்க முயன்ற போது யாரோ ஒருவன் என்னை பின்னாலிருந்து தாக்கி விட்டான். நான் மூர்ச்சையாகி கீழே விழுந்து விட்டேன். அவ்வளவுதான் எனக்கு நினைவில் உள்ளது. பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. நீங்கள் எப்போது வந்தீர்கள் ஐயா?"என்றான் அழகன். 

     "வணிக சாத்துக்களின் கடைசி வண்டியை யாரோ தீ வைத்து எரித்து விட்டார்கள். யார் எனத் தெரியவில்லை. நான் தீ வைத்தவனை தேடிக் கொண்டு வந்த போது , சத்திரம் முழுவதும் நிசப்தமாக காணப்பட்டது. சத்திர அதிகாரி முகப்பு வாசலில் இல்லை. அவரைத் தேடிக் கொண்டு அவர் அறைக்கு சென்ற போது அவர் கட்டிலுக்கு அடியில் கை கால் கட்டப்பட்டு கீழே உருட்டப்பட்டு கிடந்தார். அவரை விடுவித்து விட்டு மற்றவர்களுக்கு என்ன ஆயிற்று என பார்க்க வந்த போது தான் இந்த அறையில் நீ கீழே மயங்கி கிடந்தாய்."என விளக்கிக் கூறினான் இளம்வழுதி. 

    "இத்தனை பாதுகாப்பு இருந்தும் வண்டியை யார் தீ வைத்திருப்பார்கள் ஐயா?"

   "இதுவரை யாரும் அகப்படவில்லை. இனியும் அகப்படுவான் என்றும் தோன்றவில்லை. ஆனால் சத்திரத்தில் உனக்கும் சத்திர அதிகாரிக்கும் ஏற்பட்டிருக்கும் இன்னலை பார்க்கும் பொழுது சதிகாரர்களின் சதி வேலை இத்தோடு நின்று இருக்கும் எனத் தோன்றவில்லை" என இளம்வழுதி கூறிக் கொண்டிருக்கும் பொழுது கீழே இருந்து சத்திர அதிகாரி "ஐயா! ஐயா! இங்கே உடனே வாருங்கள்...." பெரும் கூப்பாடு போடத் தொடங்கி விட்டார். 

     சத்திர அதிகாரி போட்ட அலறலால் இரண்டாவது அறையை விட்டு  வேகமாக படிகளில்  இறங்கி கீழே வந்தார்கள் இளம்வழுதியும் அழகனும். 

      கீழே இருந்த நாலாவது அறை திறந்து கிடந்தது. அங்கிருந்த விளக்கின் ஒளி அறையைத் தாண்டி வாசலில் விழுந்து கிடந்தது. சத்தம் அங்கிருந்து தன் வந்திருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு இருவரும் அந்த அறையை நோக்கி ஓடினார்கள். அந்த அறையின் உள்ளே இருந்த சத்திர அதிகாரி பெரும் பயத்தில் உறைந்து கிடந்தார். அவரது விழிகள் அங்கு இருந்த கட்டிலையே வெறித்துப் பார்த்து கொண்டிருந்தன.

  ‌‌  (தொடரும்.... அத்தியாயம் 37ல்)


இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 35

 🐾இராஜ மோகினி🐾

🌹யாழிசைசெல்வா🌹

அத்தியாயம் 35 🌾ஆபத்தில் சிக்கிக்கொண்ட 

அழகன்🌾  

      இரண்டாவது அறையிலுள்ள சாளரத்தின் வழியாக ஏதேனும் தெரிகிறதா எனப் பார்ப்பதிலேயே தனது கவனத்தை செலுத்திக் கொண்டிருந்த அழகன் தனக்கு பின்னால் உருவாகியிருந்த ஆபத்தை உணராமல் போய்விட்டான். 

      சத்தமில்லாமல்  பின்னால் வந்து,  அழகன் பின்னந்தலையில் உருட்டுக்கட்டையால் படீரெனத் தாக்கி விட்டான் முரடன் ஒருவன். இரண்டாவது அறைக்கதவை எப்போது திறந்தான் எனத் தெரியவில்லை, ஆனால் உள்ளேயிருந்து உயரமான முரடன் வெளியே வந்து அழகனைத் தாக்கியிருந்தான். மூர்ச்சித்து கீழே சரிந்த அழகனை முரடன் தாங்கிப் பிடித்தபோது மற்றொரு முரடன் அறையிலிருந்து வெளியேறி வந்து அழகனை அங்கிருந்து அகற்ற உதவினான்.

     அறைக்குள் நுழைந்த முரடர்கள் கதவை சாத்திவிட்ட பிறகு அங்கிருந்த விளக்கை ஏற்றினார்கள் . "உன்னைப் பின்தொடர்ந்து வந்தவனாக இருப்பானோ?"என்றான் உயரமான முரடன். 

    சிறிது நேரம் யோசனைக்கு பின்பு "இல்லையே, நான் யாரும் என்னைக் கவனிக்கிறார்களா? என பார்த்துக் கொண்டுதானே வந்தேன்." என்றான் பதுங்கி உள்ளே வந்தவன். 

     "அப்படி என்றால் இவன் எங்கிருந்து முளைத்தான்?"

    "அதுதான் தெரியவில்லை"

     "மிகச் சரியாக, நீ வந்த பின்பு அவனும் தொடர்ந்து வந்து விட்டான். வந்தவன் நமது அறையின் சாளரத்தை நோட்டமிட்டு கொண்டிருந்தான். அப்படியெனில் இவன் கண்டிப்பாக நம்மைப் பற்றி எதையோ அறிந்திருப்பான் போலும்" எனக் கூறிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.

     அறையின் உள்ளே மூர்ச்சித்து படுத்து கிடந்த அழகன் அருகே வந்த உயரமானவன் "இவன் யார் என தெரியவில்லையே?"என்றான்.

     "நானும் இவனை இதற்கு முன்பு பார்த்ததில்லை"

     "நம்மைப் பற்றி கண்டறிவதற்காக, புதிதாக அதிகாரிகள் யாரேனும் ஒற்றர்களை நியமித்து உள்ளார்களோ?"

    "எனக்குத் தெரிந்தவரையில் நாகையின் பாடி காவல் அதிகாரியாக இளம்வழுதி நியமிக்கப்பட்டுள்ளான். அவனைத் தவிர்த்து வேறு யாரும் நியமிக்கப்பட்டதாக தெரியவில்லை"

     "இரகசிய ஒற்றனாக இருக்கலாம். இருந்தாலும் இவனுக்கு இங்கு என்ன வேலை?, அதுவும் குறிப்பாக நமது அறையில் அப்படி என்ன தேடிக் கொண்டிருந்தான்?"

     "அதுதான் ஒன்றும் புரியவில்லை"

     "சரி அது கிடக்கட்டும். நீ சென்ற காரியம் என்னவாயிற்று?" பதுங்கி வந்தவனைப் பார்த்து உயரமானவன் கேட்டான். 

     "அனைத்தும் திட்டமிட்டபடியே நடந்தேறி விட்டது."

     "நீ நமது திட்டப்படி கடைசியில் இருந்த வண்டியைத்தானே தீயிட்டு எரித்தாய்?"

    "ஆமாம் அவ்வாறு தான் செய்தேன். நாம் நினைத்தவாரே வணிக சாத்துக்களின் பாதுகாவலர்கள் அதிகமான குளிரின் காரணமாக தீமூட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களும் எத்தனை நேரம் தான் இந்த குளிரில் பணி செய்வார்கள். மூன்றாம் சாமத்தில் அவர்கள் சற்று அயர்ந்து இருப்பார்கள் என நாம் எண்ணியபடி தான் நடந்து கொண்டார்கள். சூழல் நமக்கு சாதகமாக இருந்தது அதனால் காரியமும் நினைத்து போல் நடத்த முடிந்தது."

     "நீ, தீ வைத்த பின்பு வணிகர் சாத்துகளில் இருந்த பாதுகாவலர்களும் பணியாளர்களும் கடைசி வண்டி நோக்கி செல்வதை பார்த்தாயா?"

     "நான் பற்ற வைத்த மாட்டு வண்டி முழுவதும் பட்டாடைகள் இருந்தன. அதனால் தீயின் நாக்குகள் வெகு விரைவாக பரவத் தொடங்கி விட்டன. அதன் பின்னர் தான் அங்கிருந்து அனைவரும் வண்டியை நோக்கி ஓடி வர தொடங்கி விட்டார்கள். அவர்கள் வருவதை உறுதி செய்து கொண்டு, அதன் பின் தான் அங்கிருந்து  இங்கு வந்தடைந்தேன்"

     "உனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து விட்டாய். இவை மட்டும் நடைபெறாமல் போயிருந்தால் நமது அடுத்த திட்டம் நிறைவேறுவது சாத்தியமில்லாமல் போயிருக்கும். நமது நண்பர்கள் இந்நேரம் தங்கள் காரியத்தை நிறைவேற்றி இருப்பார்கள் " எனக் கூறிய உயரமானவனின் முகத்தில் வெற்றி களிப்பு பரவி இருந்தது. 

    "அவர்கள் இந்நேரம் வந்திருக்க வேண்டுமே. ஏன் தாமதம்?"

    "உனது பணி தீ வைப்பது மட்டும்தான். ஆனால் மற்றவர்களுக்கோ அப்படி அல்ல. அவை என்ன அத்தனை எளிதான காரியம் எனறு நினைக்கிறாயா? கொஞ்சம் பிசகினாலும் நமது திட்டம் தோல்வியடையதோடு நாம் அனைவரும் கூண்டோடு மாட்டிக் கொள்வோம். எதையும் எடுத்தும் கவிழ்த்தோம் என்று செய்துவிட முடியாது"

    "நீ சொல்வதும் சரிதான்" எனக் கூறியபடி வெளியே எதுவும் சத்தம் கேட்கிறதா என காதுகளை தீட்டிக்கொண்டு வாசல் பகுதியையே பார்த்துக் கொண்டிருந்தான் பதுங்கி வந்தவன்.

     முதல் அடுக்கில் இரண்டாவதாக இருந்த அறை அப்படி ஒன்றும் பெரிதில்லை. நான்கிலிருந்து ஐந்துபேர் வேண்டுமானால் அங்கு தங்கிக் கொள்ளலாம். ஒரே ஒரு மரக்கட்டில் இருந்தது . அதன் மீது சிறிய மெத்தையும் தலைக்கு வைக்க ஒரு தலையணையும் மட்டுமே இருந்தன.  அறையின் வாசலுக்கும் கட்டிலுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் தரையில் கிடத்தப்பட்டிருந்தான் அழகன். அரை வாசலின் வலது பக்கத்தில் சிறிய மர ஆசனத்தில் மண்பானை நிறைய தண்ணீரும் ஒரு குவளையும் வைக்கப்பட்டிருந்தது. அறையின் இடது பக்க மூலையில் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அதன் ஒளி அறை முழுவதும் சன்னமாக பரவி இருந்தது. இத்தனை நேரம் அறையில் உள்ளே இருந்த இருவரும் அழகன் காலடியில் நின்ற வண்ணம் பேசிக் கொண்டிருந்தார்கள். 

     அப்போது படியில் யாரோ சத்தம் இல்லாமல் ஏறி வந்து கொண்டிருந்தார்கள். வந்தவர்கள் இரண்டாவது அறையின் வாசலில் நின்று கொண்டு கதவினை மெல்ல ஒரு முறை  தட்டினார்கள். அதுவரை சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்த இருவரில் உயரமானவன் அறையின் வாசலுக்கு சென்று கதவை மெல்ல திறந்தான். 

     வாசலில் இருந்த மூவரும் அறைக்குள் வந்தவுடன் உயரமானவன் கதவை மெதுவாக சாத்தினான். 

     உயரமானவன் அம்முவரையும் ஒரு கணம் பார்த்துவிட்டு "காரியம் வெற்றிகரமாக முடிந்து விட்டதா?" என்றான். 

     புதிதாக வந்த மூவரில் நடுவில் இருந்தவன் "முடிந்தது" எனக் கூறிவிட்டு மற்ற இருவரை பார்த்தான்.

    "அவர்களை ஏன் பார்க்கிறாய்? ஏதேனும் பிரச்சனையா?" என்றான் உயரமானவன். 

    மூவரில் இடது பக்கம் இருந்தவன் "அனைத்தும் நமது திட்டப்படி தான் நடந்தது. ஆனால் பக்கத்து அறையில் இருந்தவர்கள் தான் நாங்கள் வெளியே வரும்போது பார்த்து விட்டார்கள்" என படபடப்புடன் கூறினான். 

     மூவரையும் கோபத்தோடு பார்த்துவிட்டு "பிறகு என்ன செய்தீர்கள்?" என்றான். 

    "வேறு வழியின்றி அவர்களையும் தாக்க வேண்டியதாய் போய்விட்டது" என்றான் இடப்பக்கம் நின்றவன். 

    "என்ன அவர்களை அங்கேயே தாக்கிவிட்டு வந்து விட்டீர்களா?" என்றான் உயரமானவன். 

    "முடிந்தவரை சத்தம் இல்லாமல் அவர்களை தாக்கி அவர்களது அறையில் போட்டு அடைத்து விட்டு வந்துள்ளோம்" என்றான் நடுவில் இருந்தவன். 

    "உங்களை வேறு யாரேனும் பார்த்தார்களா?"

    "இல்லை. அங்கு வேறு யாரும் இல்லை"என்றான் இடது புறம் இருந்தவன்.

    "நமது திட்டப்படி அனைத்தும் முடிந்து விட்டது" என்றான் நடுவில் இருந்தவன்.

    "சரி நாம் உடனே இங்கிருந்து வெளியேறியாக வேண்டும். தாமதித்தால நாம் அனைவரும் மாட்டிக்கொள்வோம்" என்றான் உயரமானவன். 

    "இங்குதான் பாதுகாவலர்கள் யாரும் இல்லையே. அனைவரும் கடைசியில் எரிந்து கொண்டிருக்கும் மாட்டு வண்டியை நோக்கி சென்று விட்டார்கள்" என்றான் பதுங்கி வந்தவன்.

     "அவர்கள் நீண்ட நேரம் அங்கு இருக்க மாட்டார்கள். இந்நேரம் அங்கு எரிந்து கொண்டிருக்கும் தீயை யார் வைத்திருப்பார்கள் எனத் தேடத் தொடங்கி இருப்பார்கள். எனவே நாம் உடனடியாக வெளியேறியாக வேண்டும்" என்றான் உயரமானவன். 

    "இங்கு வந்து மட்டும் என்ன செய்யப் போகிறார்கள். இங்கு நாம் அரங்கேற்றி வைத்திருக்கும் செயலால் ஒட்டுமொத்த சோழதேசமும் பதறிப் போய்விடும். பிறகு எங்கிருந்து நம்மைப் பற்றி யோசிக்கப் போகிறார்கள்" என்றான் பதுங்கி வந்தவன். 

    "இங்கு உள்ள நிலவரத்தை பார்த்ததும், அவர்களுக்கு கண்டிப்பாக இதற்கான காரணத்தைத் தேடி கண்டறிய முயல்வார்கள். இது கூட உனக்கு புரியவில்லையா ? அவர்கள் அத்தனை எளிதில் இதனை விட்டு விட மாட்டார்கள்" என்றான் உயரமானவன். 

    கீழே கிடந்த அழகனைப் பார்த்து"இவனை என்ன செய்வது?" என்றான் பதுங்கி வந்தவன். 

    "இவன் உயிருடன் உள்ளானா? இல்லை இறந்து விட்டானா?" என்றான் நடுவில் உள்ளவன். 

    "இல்லை. மூர்ச்சித்து உள்ளான்"என்றான் உயரமானவன். 

     "இவனை என்ன செய்வது?" என மீண்டும் கேட்டான் பதுங்கி வந்தவன். 

      "அவனை விட்டுத் தள்ளுங்கள். இவன் யார் என்று தெரியவில்லை. யாரோ ஒரு அப்பாவி, நம்மிடம் வந்து அகப்பட்டுக் கொண்டான்" எனக்கு கூறிச் சிரித்தான் இடது பக்கம் நின்றவன். 

    "போதும் போதும் நிறுத்துங்கள். பிறகு பேசிக் கொள்ளலாம். முதலில் இங்கிருந்து நாம் பாதுகாப்பாக வெளியேற வேண்டும். இங்கு எதனையும் விட்டுவிட வேண்டாம். முடிந்தவரை அனைத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்" என அங்கிருந்தவர்களை விரட்டிக் கொண்டிருந்தான் உயரமானவன். 

     அறையில் இருந்து அவர்களது பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு புறப்பட தயாரானார்கள். "சப்தமின்றி ஒருவர் பின் ஒருவராக வெளியேறிச் செல்லுங்கள்"என்றான் உயரமானவன். அதனைத் தொடர்ந்து அறை வாசலைக் கடந்து வெளியேறி கொண்டிருந்தார்கள். இறுதியாக உயரமானவன் அழகனை உள்ளே வைத்து கதவினைச் சாத்திவிட்டு வெளியில் யாரேனும் உள்ளார்களா என விழிகளை சுழல விட்டு பார்த்தான். அங்கு யாரும் இல்லை. ஏற்கனவே அறைய விட்டு வெளியேறி இருந்தவர்கள் வெகு தூரம் சென்று இருந்தார்கள். சத்தம் இன்றி மெதுவாக படிகளில் இறங்கி சத்திரத்திற்கு எதிரே இருந்த காட்டிற்குள் சென்று விட்டிருந்தான்.

    சத்திரத்தில் தங்கியிருந்த வணிகர்கள் எவருக்கும் அங்கு நடந்த கலவரம் பற்றி தெரிந்திருக்கவில்லை. அவர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். மனதில் கலக்கத்துடன் இருந்தவர்களும் அறைக்கு வந்தவுடன் சிறிது நேரம் அங்கு இங்குமாக அறையில் உலாவி விட்டு அசதியின் மிகுதியால் கட்டிலில் படுத்து உறங்கி விட்டார்கள். அவ்வாறு உறங்க முயன்று தோற்றுப்போன வணிகர்கள் இருவர் தான் முரடர்களால் தாக்கப்பட்டு அவர்களது அறையில் அடைபட்டு கிடந்தார்கள். 

     சத்திரத்தில் நடந்து முடிந்திருந்த விபரீதம் ஏதும் அறியாத இளம்வழுதி கடைசி வண்டிக்கு தீ வைத்தது யாராக இருக்கும் என்ற தேடலில் இறங்கி இருந்தான். நீண்ட நெடிய வணிக சாத்துகள் என்பதால் அவனால் விரைவாக சோதிக்க முடியவில்லை. ஒவ்வொன்றையும் கவனமாக பார்த்துக் கொண்டு வந்து கொண்டிருந்தான். ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த வண்டியை நோக்கித்தான் அனைவரும் சென்று கொண்டிருந்தார்கள். ஒரு சில பாதுகாவலர்கள் மட்டுமே இருக்கும் மற்ற வண்டியைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களது விழிகளும் எங்கே மற்ற வண்டிகளுக்கும் ஏதேனும் ஆபத்து வந்து விடுமோ என்ற கலக்கத்தில் இருந்தார்கள். 
     
(தொடரும்... அத்தியாயம் 36ல்)


Tuesday, 28 January 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 34

 🐾இராஜமோகினி 🐾

🌹யாழிசைசெல்வா🌹

அத்தியாயம் 34 🌾சத்திரத்தில் நடந்தது விபத்தா?🌾

     மாட்டு வண்டிகளையும் கூட்டு வண்டிகளையும், தனித்தனியாக வட்ட வடிவில் நிறுத்தி இருந்தார்கள் வணிகர்கள். ஆங்காங்கு ஏற்றப்பட்டிருந்த விளக்குகளின் ஒளி அதனை தெளிவாக எடுத்துக்காட்டின. வணிக சாத்துகளின் பாதுகாவலர்கள் வண்டிகளைக் கண்காணித்தபடி அங்கும் இங்குமாக, முறை வைத்துக் கொண்டு உலாவிக் கொண்டிருந்தார்கள். 

    வண்டிகளின் காளைகளை அதன் நுகத்தடியிலேயே பிணைத்து வைத்திருந்தார்கள். மாடுகளுக்கு தேவையான தீவனங்களை அள்ளிக் கொண்டு வந்து பணியாளர்கள் அதற்கு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.  வைக்கோல் தீவனத்தை மென்று அசை போட்டுக்கொண்டபடி காளை மாடுகள் இருந்தன. பணியாளர்கள் தங்களுக்கு தேவையான உணவினை தாமே சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.‌‌ பாதுகாவலர்களும் தங்களது பணிகளுக்கு இடையே, கிடைக்கும் இடைவெளியில் உணவினை உண்டு முடித்து கொண்டிருந்தார்கள். 

     விரவி வந்த குளிரும் பெய்து கொண்டிருந்த பனியும் சேர்ந்து கொண்டு உடலை ஊடுருவி குளிர்ச்சியை பரப்பிக் கொண்டிருந்தது. குளிரின் மிகுதியால் ஆங்காங்கே மரக்கட்டைகளை கொண்டு தீமூட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு சுற்று  முடித்துவிட்டு   வண்டிகளை காவல் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், அவ்வபோது தீயின் அருகே வந்து குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். 

       வண்டியில் இருந்த பணியாளர்கள் கிடைக்கும் ஓய்வு நேரத்தை பயன்படுத்திக் கொண்டு அங்கேயே உறங்கி விட்டார்கள். ஒரு சிலர் உறக்கம் வராமல் அங்கும் இங்கும் நடந்தபடி இருந்தார்கள். 

    ஒவ்வொரு வணிக குழுவாக பார்த்துக் கொண்டே வந்து கொண்டிருந்தான் இளம்வழுதி.  கொள்ளிவாய் பிசாசுகளைப் போல் ஆங்காங்கே குளிருக்கு மூட்டிய நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. "இன்னும் இரண்டு ஒரு குழுவைப் பார்த்து விட்டால் திரும்பி விடலாம் " என நினைத்துக் கொண்டு நடந்தவனை கடைசி பகுதியில் எரிந்து கொண்டிருந்த நெருப்பு அவனது கவனத்தை ஈர்த்தது. 

     அங்கு காவல் பணியில் இருக்க வேண்டிய பாதுகாவலர்கள் ஒருத்தரையும் காணவில்லை. அவர்கள் எங்கே உள்ளார்கள் என துழாவி தேடிக் கொண்டிருந்தபோது, தொலைவில் குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள். "கடைசிப் பகுதியில் நெருப்பு எரியும் பொழுது, இவர்கள் ஏன் இத்தனை தொலைவில் வந்து குளிர் காய்கிறார்கள்?" என நினைத்தபடி கடைசி பகுதியை நோக்கி ஓடத் தொடங்கினான். 

     தொலைவில் பார்க்கும் யாருக்கும் குளிருக்கு மூட்டப்பட்ட நெருப்பு போல் தெரிந்தது. ஆனால் அங்கு குளிருக்கு மூட்டப்பட்ட நெருப்பால் தீ எரியவில்லை. மாறாக மாட்டு வண்டியில் இருந்த பொருள்களுக்கு யாரோ தீ வைத்திருந்தார்கள். தீயின் நாக்குகள் சுடர் விட்டு பரவிக் கொண்டிருந்தது. வீசும் இளம் காற்றின் துணையோடு வெகு வேகமாக பரவிக் கொண்டிருந்தது.‌ வானத்தை நோக்கி உயர்ந்திருந்த தீயின் நாக்குகளால் ஈர்க்கப்பட்ட பாதுகாவலர்கள் துடித்துக் கொண்டு ஓடி வந்திருந்தார்கள்.‌ அதே சமயம் இளம்வழுதியும் அங்கு வந்து சேர்ந்திருந்தான். தீயின் பரிமாணம் அணைக்கும் நிலையை தாண்டி விட்டிருந்தது. பாதுகாவலர்கள் என்ன செய்வதென்று அறியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு பீதியுடன் நின்றிருந்தார்கள். 

     "ஏன் மரம் போல் நிற்கிறீர்கள்?, சீக்கிரம் மற்ற வண்டிகளை இடம் மாற்றி அப்புறப்படுத்துங்கள். இல்லையேல் தீயின் நாக்குகள் அதனையும் பற்றிக்கொள்ளும்" என்றான் இளம்வழுதி. 

    அங்கிருந்த பாதுகாவலர்களும் பணியாளர்களும் காளை மாடுகளை வண்டியில் பூட்டி முடிந்த மட்டும் வெகு தொலைவிற்கு அழைத்துக் கொண்டு சென்றார்கள். 

     "இது எப்படி நடந்தது?, சிறிது நேரம் முன்பு வரை இங்கு எல்லாம் சரியாக தானே இருந்தது" என்றார் பாதுகாவலர் ஒருவர். 

    "ஆமாம், நானும் உணவருந்த செல்லும் முன் பார்த்து விட்டு தன் சென்றேன். எல்லாம் சரியாகத்தான் இருந்தது" என்றார் மற்றொருவர். 

    "வண்டியில் இருந்த அனைத்து பொருள்களும் நாசமாகிவிட்டது" என்றார் இன்னொருவர். 

     "எரிந்தவை அனைத்தும் சீன தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பட்டாடைகள்"என்றார் கூட்டத்தில் ஒருவர்.

     "அப்படி என்றால் இழப்பு பெரிய அளவில் தான் இருக்கும்" என்றார் பாதுகாவலரில் மற்றொருவர். 

     "இவை எந்த வணிகரின் பொருட்கள்?"என்றார் கூட்டத்தில் இருந்த குள்ளமான மனிதர்.

    "தஞ்சை பகுதியைச் சேர்ந்த பெரும் வணிகருக்கு சொந்தமானது" என்றார் அவ் வண்டியின் பாதுகாவலர். 

    " யாரோ நம் கவனம் திசை திரும்பும் வரை காத்திருந்து இதை செய்திருக்க வேண்டும். இல்லையெனில் இது நடந்திருக்க சாத்தியம் கிடையாது" என்றார் குள்ள மனிதர். 

     "ஆமாம், கண்டிப்பாக இதை செய்தவன் வெகு தரம் சென்றிருக்க முடியாது" என்றார் வண்டியின் பாதுகாவலர். 

    அங்கு பேசிக் கொண்டிருந்த அனைவரது முகத்தையும் கவனித்துக் கொண்டு வேறு யாரேனும் சந்தேகப்படும்படியான நபர்கள் உள்ளார்களா என விழிகளால் தேடிக் கொண்டிருந்த இளம்வழுதி அங்கிருந்து நகர்ந்து மற்ற வண்டிகளை பார்த்துக் கொண்டிருந்தான். மற்ற வணிக சாத்து வண்டிகள் எவ்வித குழப்பம் இன்றி இயல்பாகவே இருந்தன. இங்கு நடந்த சம்பவம் அதற்குள் மற்ற வண்டிகளில் இருந்தவர்களின் காதுகளுக்கு எப்படியோ பரவி விட்டிருந்தது. அங்கிருந்து வண்டியை நோக்கி பணியாளர்களும் பாதுகாவலர்களும் சாரை சாரையாக வந்து கொண்டிருந்தார்கள்.‌ ஏறக்குறைய அனைவரும் தமது இடத்தை விட்டு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த வண்டியை நோக்கி வந்திருந்தார்கள்.‌‌ 

   மலைக்கோவிலில் ஏற்றப்பட்ட பெரும் தீபம் போல் கடைசியில் எரிந்து கொண்டிருந்த வண்டியின் நெருப்பு நீண்டு பரவிக் கொண்டிருந்தது. அதுவரை இதமான குளிர் காற்றாக  பரவி இருந்தது மாறி, விசையோடு வீசத் தொடங்கியது. அங்கிருந்த மரங்களும் அவற்றின் போக்கிற்கு ஏற்ப அசைந்தாடிக் கொண்டிருந்தன.‌‌ காற்றின் மிகுதியால் வண்டியில் இருந்த பட்டாடைகள் 'படீர் படீரென' வெடித்து கொண்டு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன. 

    இளம்வழுதி அங்கிருந்து அகன்றதும்  முதல் அடுக்கில் இருந்த இரண்டாவது அறையை நோக்கி தனது விழிகளை வீசி இருந்தான் அழகன்.அவனது விழிகள் எப்போதும் அங்கேயே தவமாய் கிடந்தன. அவன் வெண்புரவி என்ன நினைத்ததோ தெரியவில்லை அவன் மேல் உரசிக்கொண்டு இருந்தது. திடீரென தனது புரவியின் கரிசனத்தால் ஈர்க்கப்பட்டவன் அதன் அருகே சென்று அதனை தடவி கொடுத்துக் கொண்டிருந்தான்.

     அப்பொழுது வணிக சாத்து வண்டிகளை கடந்து ஒருவன் பதுங்கி பதுங்கி வந்து கொண்டிருந்தான். அவன் நடையில் ஒரு விதமான பதட்டம் தெரிந்தது. அவனது கவனம் முழுவதும் எப்படியாவது சத்திரத்திற்குள் நுழைந்து விட துடிப்பதை அழகன் உணர்ந்து கொண்டான் போலும்.  அவனை பார்ப்பதை தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக புரவியின் பின்னால் மறைவாக நின்று கொண்டான்‌ அழகன். "நல்ல வேலை நமது புரவி நம் மீது உரசியதும் நல்லதாய் போனது. இல்லையென்றால் அவன் நம்மை பார்த்திருப்பான். காரியம் கெட்டு இருக்கும். இவன் எதற்காக இப்படி பதுங்கி பதுங்கி வருகிறான், நல்ல நோக்கம் கொண்ட எவனும் இப்படி வர மாட்டானே? இவனது செயல் முறையாக தெரியவில்லை. பாடிகாவல் அதிகாரி சந்தேகப்பட்டது சரிதான் போலும். கவனமாக அவனைக் கண்காணிக்க வேண்டும்" என எண்ணிக்கொண்ட அழகன், பதுங்கிச் செல்பவனைக் கண்காணித்தபடி இருந்தான் .

     ஏற்கனவே வணிக சாத்துகளில் கூடியிருந்தவர்கள் திடீரென கடைசி பகுதியை நோக்கி சாரை சாரையாக நகர்ந்து கொண்டிருந்தார்கள். அதனால் பதுங்கிச் செல்பவனை யாரும் கண்டு கொள்ளவில்லை. அதற்காக காத்திருந்தவன் போல் விடுவிடு வென சத்திரத்தை நோக்கி நகர்ந்து விட்டிருந்தான். முகப்பு வாசலில் இருந்த சத்திர அதிகாரியும் அங்கு காணவில்லை. பதுங்கியவனுக்கு அது நல்ல வாய்ப்பாக போய்விட்டது. சிறிதும் தாமதிக்காமல் வேகமாக எட்டு வைத்து முதல் அடுக்கு நோக்கி நகர்ந்து விட்டிருந்தான். அவனைக் பின்தொடர்ந்து கொண்டிருந்த அழகன் சத்திரத்தின் எதிரே இருந்த மாமரத்தின் பின்னால் மறைந்து கொண்டு பதுங்கிச் செல்பவன் எங்கு போகிறான் என பார்த்துக் கொண்டிருந்தான். முதல் அடுக்கிற்கு வந்தவன் இரண்டாவது அறையின் கதவை தொட்டதும் திறந்து கொண்டது. உள்ளே சென்று சத்தம் இன்றி கதவைச் சாத்தி விட்டான். மரத்தின் பின்னால் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த அழகனுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டுமென்ற யோசனையில் மூழ்கி இருந்தான் .

     "இப்போது என்ன செய்வது? நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கச் சொன்னார்? இங்கேயே இருந்து தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கலாமா? அல்லது அந்த அறையில் என்ன நடக்கிறது என்று அருகில் சென்று பார்க்கலாமா?, என்ன இது ஒரே குழப்பமாக உள்ளது?, நாம் முயன்று தான் பார்க்கலாமா?, அது பாடி காவல் அதிகாரியின் உத்தரவை மீறியது போல் ஆகாதா? ஆம் கண்டிப்பாக மீறியது போல் தான் ஆகும். ஒருவேளை அறையில் இருப்பவர்கள் திடீரென வெளியேறி சென்று விட்டால் என்ன செய்வது?, அறைக்குள் எத்தனை பேர் இருப்பார்கள் என தெரியவில்லை. நாமாக ஏதாவது செய்யப் போய் , தானாக சென்று தலையை கொடுத்த கதையாகி விடப் போகிறது. இந்த நேரம் பார்த்து பாடி காவல் அதிகாரி சென்றுவிட்டாரே.  அவர் இருந்தால் நன்றாக இருக்கும். சரி இப்படி எத்தனை காலத்திற்கு நாம் இருப்பது?, இப்படி யோசித்தால் என்ன?, இந்த இடத்தில் பாடி காவல் அதிகாரி இருந்தால் என்ன செய்திருப்பார்?, என யோசித்துப் பார், உனக்கு ஒரு வழி கிடைக்கும். கண்டிப்பாக அவர் அறையில் உள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் என கண்டறிய முயற்சி செய்திருப்பார். அது மட்டுமின்றி அவர்களை பிடிக்கவும் முயற்சி செய்திருப்பார். நாம் ஏன் அந்த வேலையை செய்யக்கூடாது? " என தன் மனதிற்குள் பலவாறாக யோசித்தபடி இருந்தான் அழகன். அவன் மனம் கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைத்தது போலும் கிடைக்காதது போலும் இருந்திருக்க வேண்டும் ஒரு விதமான குழப்பத்தில் இருப்பதை அவன் முகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் மாற்றங்கள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.
    
      "அறையில் உள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் என பார்த்து விடலாம்" என்ற முடிவுக்கு வந்த அழகன், சுற்று முற்றும் பார்த்துவிட்டு சத்திரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான் .

     சத்திரத்துக்குள் நுழைந்திருந்த அழகன், பதுங்கியவனைப் போல் அல்லாமல் கம்பீரமாக நடந்து கொண்டிருந்தான். விடு விடு வென முதல் அடுக்கு நோக்கி நகர்ந்து விட்டிருந்தான். படிகளில் ஏறியவன் இரண்டாவது அறையில் ஏதேனும் நடமாட்டம் தெரிகிறதா என பார்த்தபடி மேலேறிச் சென்றிருந்தான். இரண்டாவது அறையின் வாசலில் நின்று உள்ளே ஏதேனும் சத்தம் கேட்கிறதா என காதுகளை தீட்டிக்கொண்டு கவனிக்க தொடங்கினான். ஒரே நிசப்தமாக கிடந்தது. "என்ன இது? இந்த அறைக்குள் தானே புகுந்தான். அதற்குள்ளாகவா உறங்கி விட்டான்? நம்ப முடியவில்லையே" என யோசித்தபடி இரண்டாவது அறையின் சாளரத்தை நோக்கி நகர்ந்து உள்ளே ஏதாவது தெரிகிறதா என்று பார்த்தான்.‌ அறை முழுவதும் இருள் பரவிக் கிடந்ததால் ஒன்றும் தெரியவில்லை. 

   தனக்கு நேர விருந்த ஆபத்தை அவன் உணராமல் பார்த்துக் கொண்டிருந்தான் அழகன்.

(தொடரும்.... அத்தியாயம் 35ல்)


இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 33

 🐾இராஜமோகினி🐾

🌹யாழிசைசெல்வா🌹

அத்தியாயம்  33 🌾சத்திரத்தில் நிரூபணமான சந்தேகம்🌾

      சத்திரத்தின் முன்பாக இருந்த பெரிய திறந்த வெளியில் வணிகர்கள் தங்களது வண்டிகளை வட்ட வடிவத்தில் நிறுத்தி இருந்தார்கள். வட்டத்தின் மையத்தில் வணிகர்கள் ஒரு சிலர் அமர்ந்து கொண்டு பொருட்களின் பாதுகாப்பு பற்றி காவலர்களுக்கு எடுத்துக் கூறிக் கொண்டிருந்தார்கள். இவ்வாறாக பல்வேறு குழுக்கள் தங்கள் வணிகப் பொருட்களின் பாதுகாப்பு பற்றி எடுத்துரைத்து விட்டு அங்கிருந்த சத்திரத்திற்குள் நுழைந்திருந்தார்கள் வணிகர்கள்.


       வணிக சாத்துகளின் வரவை அறிந்ததும் சத்திர அதிகாரி வருபவர்களுக்கு தேவையான அறைகளை ஒழித்துக் கொடுத்ததோடு வரும் வணிகர்களை வரவேற்று, முகமன் கூறிக் கொண்டிருந்தார். தலையில் தலைப்பாகையோடு துரு துருவென அங்கும் இங்கும் சென்று கொண்டு வரும் வணிகர்களை வரவேற்று அவர்களின் தேவைக்கு தகுந்த உபசரிப்பை கொடுத்துக் கொண்டிருந்தார். ஐம்பது வயதை கடந்து விட்டிருந்த சத்திர அதிகாரி தனது அனுபவத்தின் பாடத்தை செயலில் காட்டி  அவர்களுக்கு வேண்டிய உபசரிப்பை சுணங்காமல் கொடுத்துக் கொண்டிருந்தார். தேவைப்படும் பணியாட்களை கொண்டு துரிதமாக காரியத்தை செயலாற்றிக் கொண்டிருந்தார். எத்தனை தான் அவர் கவனமாக செயல்பட்ட போதும் ஒரு சில வணிகர்களின் எதிர்பார்ப்பை அவரால் நிறைவேற்ற முடியாத போதும் அவர்களுக்கு வேண்டிய சமாதானத்தைக் கூறி சரி கட்டிக் கொண்டிருந்தார். 


     வணிக சாத்துகள் வரும் வரை அங்கொன்றும் இங்கொன்றுமாக எரிந்து கொண்டிருந்த விளக்குகள் வண்டிகளின் சத்தத்தை கேட்டதும் சத்திரத்து அதிகாரியின் உத்தரவின் காரணமாக  நள்ளிரவிலும் விளக்குகள் ஏற்றப்பட்டு, பகல் போல் ஒளிர்ந்து கொண்டு இருந்தன.


       அறைக்குள் வந்த வணிகர்கள் பயணக் களைப்பு தீர ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். இலவம் பஞ்சால் செய்த மெத்தைகளில் படுத்து புரண்டு கொண்டு இருந்தார்கள். அவ்வப்போது அங்கிருந்த பணியாளர்களை அழைப்பதற்கு மணியை ஒலித்து வேண்டும் உபசரிப்புகளை பெற்றுக் கொண்டிருந்தார்கள். ஒரு சில அறைகளில் வணிகர்கள் சிலர் படுத்து உறங்கி விட்டார்கள். இன்னும் சிலரோ பசியின் காரணமாக உணவு வரவழைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். 


      வந்திருந்த வணிகர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து விட்டு சத்திர அதிகாரி முகப்பு வாசலை வந்தடைந்த போது அங்கு இரண்டு வணிகர்கள் இருந்தார்கள்.


     "சொல்லுங்கள் ஐயா. தங்களுக்கு வேறு ஏதேனும் வசதிகள் செய்ய வேண்டியது உள்ளதா?" என்றார் சத்திர அதிகாரி. 


    "நான் சென்ற முறை வந்தபோது சுவையான புளியோதரை கிடைத்தது. அது இப்பொழுது கிடைக்குமா?"என்றார் அவ்விரு வணிகர்களில் ஒருவர். 


     "நேரம் கடந்து விட்டதால் உணவின் கையிருப்பு எவ்வளவு உள்ளது என தெரியவில்லை?, எதற்கும் நான் விசாரித்து பார்த்துவிட்டு கூறுகிறேனே?"


     "எங்கள் இருவருக்கும் மட்டும் வேண்டும். " என்றார் மற்றொரு வணிகர். 


     "சிறிது நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள். உடனே நான் விசாரித்ததோடு, இருந்தால் கையோடு எடுத்து வருகிறேன்" என்றவர் உணவு தயாரிக்கும் இடத்தை நோக்கி விரைந்து நடந்து கொண்டிருந்தார்.


      உணவு தயாரிக்கும் அறைக்குள் நுழைந்தவர் "சாத்தா! புளியோதரை உணவு எவ்வளவு உள்ளது?"


      உணவுகளை பெரும் அண்டாக்களில் இருந்து எடுத்து பரிமாறுவதற்கு தயார் செய்து கொண்டிருந்த சாத்தன், சத்திர அதிகாரியின் அழைப்பினை ஏற்று அவர் அருகில் வந்தார். 


     "கூறுங்கள் ஐயா?"


     "புளியோதரை நமது கையிருப்பில் எவ்வளவு உள்ளது?"


     "பெரிதாக ஒன்றும் இல்லை. சிறிய அளவே உள்ளது என நினைக்கிறேன்"


    "சரி என்னோடு வா!" என்றவர் உணவு இருந்த இடத்தை நோக்கி சென்று புளியோதரை இருந்த அண்டாவை பார்த்தார் சத்திர அதிகாரி. 


     "சரி பரவாயில்லை. இந்த உணவுகளை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்"


     அண்டாவில் இருந்த புளியோதரையை ஒரு சிறிய பாத்திரத்தில் அள்ளி வைத்துக் கொண்டு சத்திர அதிகாரியை பின் தொடர்ந்தார் சாத்தன். 


      சத்திர அதிகாரியுடன் வரும் நபர் கையில் பாத்திரத்தை கொண்டு வருவதை பார்த்ததும் வணிகர்கள் இருவரது வதனமும் மகிழ்ச்சியில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. 


      "நீங்கள் எதிர்பார்த்தபடி புளியோதரை உள்ளது. ஆனால் அதிகமாக இல்லை"எனக் கூறியவர் பாத்திரத்தில் உள்ள புளியோதரையை காண்பித்தார். 


    "எங்கே இல்லை என்று சொல்லி விடுவீர்களோ, என பயந்து கொண்டே இருந்தோம். இது எங்களுக்கு போதும்"என்றார் முதலில் புளியோதரையை கேட்ட வணிகர்.


     "இவர்கள் அறைக்கு எடுத்து போய் உணவை பரிமாறி விட்டு வா " என சாத்தனை பார்த்து கூறினார் சத்திர அதிகாரி.


     வணிகர்கள் சென்ற பின்பு வந்திருக்கும் வணிகர்களின் எண்ணிக்கையும் அவர்கள் பற்றிய விவரங்களையும் ஓலையில் கவனமாக குறித்து வைத்துக் கொண்டிருந்தார் சத்திர அதிகாரி. 


     முகப்பு வாசலுக்கு அருகில் உள்ள அறையிலிருந்து வெளியேறிய இளம்வழுதியும் அழகனும் சத்திர அதிகாரியை நெருங்கினார்கள். "ஐயா, வணிகர்கள் அனைவரும் தங்கள் அறைகளுக்கு சென்று விட்டார்களா?"


     "வாருங்கள் ஐயா. ஆமாம், அவர்கள் தங்கள் அறைகளுக்கு சென்று விட்டார்கள்"


     "அவர்கள் வேறு ஏதேனும் கூறினார்களா?"


     "இல்லை ஐயா. தங்களுக்கு வேண்டிய வசதிகளை மட்டுமே கேட்டு பெற்றார்கள். வேறு ஒன்றும் கேட்கவில்லை"


     "அவர்களது நடவடிக்கை பற்றி உங்களுக்கு என்ன தோன்றுகிறது?"


     "பெரும்பாலான வணிகர்கள் இயல்பாகத்தான் உள்ளார்கள். ஒரு சிலர் மட்டும்தான் உள்ளே கலக்கத்தையும் வெளியே அதனை காட்டிக் கொள்ளாத படி நடந்து கொண்டார்கள்"


     "அப்படியெனில் அவர்களுக்கு உள்ளூர ஒரு விதமான பயம் இருப்பது போல் உள்ளதே ஐயா"என்றான் அழகன். 


     "இருக்கத்தானே செய்யும், அத்தனை எளிதில் அவர்கள் இயல்புக்கு திரும்பி இருப்பார்கள் என எண்ணுவது கூட நமது தவறுதான்"


      "நீங்கள் கூறுவதும் சரிதான் ஐயா" என்றான் அழகன். 


     "நான் ஏற்கனவே கூறியபடி அவர்களது பாதுகாப்பை சந்தேகம் ஏற்படாத வண்ணம் நாம் கண்காணித்து வர வேண்டும்"


     "நீங்கள் கூறியபடியே செய்து விடலாம் ஐயா"


     "சத்திரத்தில் வேறு யாரேனும் சந்தேகப்படும்படியாக நடந்து கொள்கிறார்களா?" என சத்திர அதிகாரியிடம் கேட்டான் இளம்வழுதி. 


    "இன்று காலையில் சிலர் வந்து அறையில் தங்கி விட்டு, சிறிது நேரத்திலேயே வெளியேறி விட்டார்கள். ஆனால் அவர்கள் மீண்டும் மாலையில் வந்து தங்கள் அறையில் தங்கி உள்ளார்கள். அவர்கள் மீதுதான் எனக்கு சந்தேகம் உள்ளது."


     "அவர்கள் எங்கு தங்கி உள்ளார்கள்?" 


     "முதல் அடுக்கில் உள்ள இரண்டாவது அறையில் தான் தங்கி உள்ளார்கள்."


    சிறிது நேரம் யோசனைகளில் இருந்த இளம்வழுதி "அவர்களது அறைக்கு பக்கத்தில் ஏதேனும் அறைகள் காலியாக உள்ளனவா?"என்றான். 


     "இல்லை ஐயா. இன்று அனைத்து அறைகளும் நிரம்பி வழிகின்றது"


      "நன்றாக யோசித்துப் பாருங்கள் ஐயா"


      "இப்போதுதான் தோன்றுகிறது. அவர்கள் அறைக்கு அடுத்து உள்ள அறையில் ஒரு வயதான நபர் ஒருவர் தங்கியுள்ளார். இங்குள்ள சிவ தலங்களை சுற்றி பார்க்க வந்திருப்பதாக கூறினார்"


     "அப்படியா?"


    "இதுவரை அவரது நடவடிக்கை எவ்வாறு உள்ளது?"


   "அவரால் எந்தவிதமான இடையூறும் உண்டாகவில்லை. உணவு நேரத்தில் மட்டும் மணியை அடித்து உணவு வரவழைத்து சாப்பிடுவார். மற்ற நேரத்தில் அவரது அறை சாத்தியபடி தான் இருக்கும்"


     "எதற்கும் கவனமாக இருங்கள். ஏதேனும் சந்தேகப்படும்படியான நிகழ்வு உண்டானால் எனக்கு உடனே தெரியப்படுத்துங்கள்" என சத்திர அதிகாரியிடம் கூறிவிட்டு அழகனை அழைத்துக் கொண்டு சத்திரத்தை விட்டு வெளியேறி தங்கள் குதிரைகள் நிறுத்தி இருந்த கொட்டடியை நோக்கி சென்றார்கள். 


     நீண்ட பெரிய குதிரை கொட்டடியை கொண்டிருந்தது அந்த சத்திரம். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான குதிரைகள் நிறுத்தி வைக்க முடியும். குதிரைகளுக்கு வேண்டிய தீவனங்களை அங்குள்ள பணியாளர்கள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் குதிரைகளை ஆசுவாசப்படுத்திக் கொண்டும் அவை வெளியேற்றிய கழிவுகளை உடனுக்குடன் அகற்றிக் கொண்டும் இருந்தார்கள். அந்தக் குதிரைக் கொட்டடி தேவையான அளவு வெளிச்சத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. 


     குதிரை கொட்டடியில் நுழைந்திருந்த இளம்வழுதியும் அழகனும் தங்கள் குதிரைகள் நிறுத்தி இருந்த இடத்தை நோக்கி வந்திருந்தார்கள். அவர்களைக் கண்டதும் குதிரைகள் தங்கள் உடல்களை சிலுப்பிக்கொண்டு உற்சாகத்தில் துள்ளின. தத்தமது குதிரைகளை அணுகி அவற்றின் உடல்களை பிடித்து விட்டு அவற்றோடு சிறிது நேரம் செலவிட்டு கொண்டிருந்தார்கள். 


      ஏற்கனவே சத்திர அதிகாரி இவ்விருவரை பற்றியும் கூறி இருந்ததால்  குதிரை கொட்டடியில் பணியாற்றிய பணியாளர்கள்  இவர்கள் செயல்களை கண்டு கொள்ளாமல் தங்கள் பணிகளை முடித்துவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். 


      மூன்றாம் சாமத்தை தொட்டுவிட்டு இருந்த அந்த இரவு வேளையில் சத்திரத்தை தாண்டி தொலைவில் எங்கோ ஒரு மரத்தில் இருந்த கோட்டான் ஒன்று அலறும் சத்தம் கேட்டது. அதனைத் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து ஏற்கனவே கேட்ட அலறலை போல் சத்திரத்தின் முதல் அடுக்கில் இருந்து கோட்டான் ஒன்று அலறும் சத்தம் ஒலித்தது.


     திடீரென முதல் அடிக்கிலிருந்து கோட்டான் அலறும் சத்தம் கேட்டதும் தனது குதிரையை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த இளம்வழுதியின் விழிகள் முதல் அடுக்கை நோக்கி பார்த்தன. 


      குதிரையின் கொட்டடியில் இருந்து சத்திரம் முழுவதையும் பார்க்க முடியும். சத்திரத்திற்கும் குதிரை கொட்டடிக்கும் இடையே சில மரங்கள் மட்டுமே இருந்தன. அப்படி ஒன்றும் அவை பெரிய மரமாக இல்லாததால் அவர்களால் சத்திரத்தை எளிதாக பார்க்க முடிந்தது. இளம்வழுதியை தொடர்ந்து அழகனும் கோட்டானின் அலறலை கவனித்து விட்டியிருந்தான் போலும் அவனது விழியும் சத்திரத்தையே பார்த்துக் கொண்டிருந்தது. 

 

      முதல் அடுக்கின் இரண்டாவது அறையில் எரிந்து கொண்டிருந்த விளக்குகள் திடீரென அணைந்தன. சில கணங்கள் கடந்த பின்பு அவை மீண்டும் எரியத் தொடங்கின.  மறுபடியும் அணைந்தன. சில கணங்களுக்குப் பின்பு மீண்டும் எரியத் தொடங்கின


அணைந்து அணைந்து எரியும் விளக்குகளின் செயல்களால் ஈர்க்கப்பட்ட இளம்வழுதியும் அழகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். "அணைந்து எரியும் விளக்குகள் ஏதோ ஒரு செய்தியை சொல்கின்றன?"என்றான் அழகன். 


    "அவை மட்டும் அல்ல. இது யாருக்கோ செய்தி அனுப்பும் சமிக்ஞை கூட இருக்கலாம்"


     "அப்படியெனில் தாங்கள் எதிர்பார்த்த விபரீதம் ஏதேனும் நடக்கும் சாத்தியம் உள்ளது போலும்"


    "அப்படியும் எடுத்துக் கொள்ளலாம்."


     "ஏனையா இவ்வாறு கூறுகிறீர்கள்?"


     "ஒருவேளை விளக்கு ஏதேச்சையாக அணைந்து மீண்டும் எரிந்து இருந்தால் என்ன செய்வது?, எதற்கும் நாம் ஆயத்தமாக தான் இருக்க வேண்டும்"


     "தாங்கள் கூறுவதும் சரிதான் ஐயா"


      "எதற்கும் அந்த அறையின் மீது நீ ஒரு கண் வைத்துக்கொள்"


     "அப்படியானில் தாங்கள் எங்கு செல்ல போகிறீர்கள்?"


    "நான் எதற்கும் வணிக சாத்துகளை பார்த்துவிட்டு வருகிறேன். நீ சந்தேகம் வராதபடி அந்த அறையினை கண்காணித்துக் கொண்டிரு" என்றவன் அங்கிருந்து வெளியேறி வணிக சாத்துகள் இருந்த இடத்தை நோக்கி நகர்ந்து இருந்தான்.


(தொடரும்.... அத்தியாயம் 34ல்)

Monday, 27 January 2025

இராஜ மோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 32

 🐾இராஜமோகினி🐾

🌹யாழிசைசெல்வா🌹

அத்தியாயம் 32  🌾தஞ்சை பெருவழிச்சாலை🌾  

      வணிகர்களின் வணிகச் சாத்து வண்டிகள் தஞ்சை பெருவழியில் தமது பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தன. அவ்வண்டிகளின் பாதுகாவலர்கள் கையில் குத்திட்டியும், இடைதனில் நீண்ட வாளும் கொண்டு அவர்களுக்குப் பாதுகாப்பைக் கொடுத்த வண்ணம்  பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களில இருவர் பயணத்தின் ஊடாக தொடர்ந்து பேசிக்கொண்டே  பயணத்தை மேற்கொண்டிருந்தார்கள்.

     "என்ன சொல்கிறீர்கள்? அப்படி என்ன பெரிய புரட்சிகளும் கலகங்களும் உண்டாகிவிட்டது?" என்றான் புதிதாக கல்யாணமானவன். 

    "உனக்குத் தெரியாதா என்ன?"

     "ஆமாம். அதனால் தானே கேட்கிறேன்"

     "நீ எத்தனை காலமாக வணிக சாத்துக்களின் காவலனாய் பணி செய்கிறாய்?"

    "சமீபமாகத்தான் பணியில் சேர்ந்தேன்."

    "ஆமாம் எனக்கும் இப்பொழுதுதான் ஞாபகம் வருகிறது. நாம் இருவரும் இதுவரை இரண்டு முறை பாதுகாப்பு பணியில் ஒன்றாக இணைந்து பயணம் செய்திருப்போம்."

    "ஆமாம் தாங்கள் கூறுவது சரிதான். இப்போது கூறுங்கள் என்ன பிரச்சனை என்று?"

    "சோழ மன்னர் அதி ராஜேந்திரர் மறைவிற்குப் பிறகு நாட்டில் பல்வேறு விதமான குழப்பங்கள் உருவாகி நாடு முழுவதும் பரவி வருகிறது"

     "உண்மையில் பரவி வருகிறதா? அல்லது யாரேனும் பரப்பி வருகிறார்களா?"

     "இதென்ன இப்படி கேட்டு விட்டாய்?"

     "இங்கு கலவரத்திற்கு என்ன காரணம் இருக்க முடியும் அதனால்தான் கேட்டேன்?"

     "உண்மையில் நீ புரியாமல் தான் பேசுகிறாயா?"

     "கலவரம் உண்டானால் அதனைக் கட்டுப்படுத்தி, சரி செய்ய இங்கு தான் காவலர்கள் உள்ளார்களே. பிறகு எதற்காகக் கலவரத்தை வேரறுக்காமல் உள்ளார்கள்?"

     "தம்பி! நீ புரிந்தும் புரியாமல் பேசுகிறாய். உண்மையிலே கலவரத்தை சிலர் தூண்டிக் கொண்டுதான் உள்ளார்கள். அவர்களது நோக்கம் நாட்டைச் சிதைப்பதாகக் கூட இருக்கலாம்"

    "யார் யாருக்காக கலவரத்தை உண்டாக்குகிறார்கள்?"

    "அதி ராஜேந்திரர் வாரிசு இன்றி இறந்து போய்விட்டார். அந்தச் சூழ்நிலையில் அம்மங்கை தேவியின் புதல்வர் இராஜேந்திரர், 'குலோத்துங்கர்' என்ற விருது பெயரில் அரசு கட்டில் ஏறிவிட்டார். அதனை விரும்பாத பல்வேறு நபர்கள் இன்று நாடெங்கும் கலவரத்தைத் தூண்டி வருகிறார்கள்."

     "அப்படி எனில் குலோத்துங்கச் சோழர் நேரடி வாரிசு இல்லை. இதுதான் அவர்களது பிரச்சனை. அப்படித்தானே?"

    "இப்பொழுதுதான் நீ சரியாக புரிந்து கொண்டாய். "

    "சரி, குலோத்துங்கச்சோழர் அரியணையில் அமர்ந்து மன்னராகிவிட்டாரே பிறகு இவர்களால் என்ன செய்துவிட முடியும்?"

     "தாய் வழி உறவினை பின்பற்றி குலோத்துங்கச் சோழர் அரசு உரிமை பெற்றுவிட்டார். இதனைக் காரணம் காட்டிச் சில சிற்றரசர்களும் நாட்டிற்கு எதிராக கலவரத்தைத் தூண்டி வருகிறார்கள். இன்னும் சிலரோ அவர் மீது வீண் பழியைச் சுமத்தி வருகிறார்கள்."

     "அது என்ன வீண்பழி? அதனால் எப்படி அவர்களால் கலவரத்தை உண்டாக்க முடியும்?"

     "அரியணையை கைப்பற்றுவதற்காக தன் தாய் மாமன் குலோத்துங்கச் சோழரை கொலை செய்து விட்டார் என்னும் குற்றச்சாட்டைப் பரப்பி வருகிறார்கள்."

    "இது என்ன கொடுமையாக இருக்கிறது? இப்படியெல்லாமா வதந்திகளை பரப்புவார்கள்?"

     "அதைத்தான் செவ்வனே செய்து வருகிறார்கள். சில சதிகாரர்கள். "

     "சரி அதற்கும், வணிக சாத்துக்கள் நடைபெறாமல் போனதற்கும் என்ன காரணம்?"

     "தம்பி! பிரச்சனை அதோடு நிற்கவில்லை. நாகையின் மணிக்கிராமத்தார் சூரியவர்மர் எங்கு உள்ளார் என்பதே யாருக்கும் தெரியாமல் போய்விட்டது. நாகையின் ஒட்டு மொத்த வணிகத்தை கட்டிக் காத்து வந்தவர் அவர். அவரது மறைவு இங்கு உள்ள வணிகர்களுக்கு பெரும் இழப்பாக உள்ளது. நிலவரம் இப்படி உள்ள போது, எப்படி அவர்கள் தங்கள் பணிகளை செய்வார்கள்?"

    "சூரியவர்மர் பற்றி நானும் நிறைய கேள்விப்பட்டு உள்ளேன். தாங்கள் கூறுவது இப்பொழுது, எனக்கு தெளிவாக புரிகிறது. சரி! இப்பொழுது சூரியவர்மர் எங்கு உள்ளார் எனத் தெரிந்து விட்டதா?"

    "இல்லை. எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்று தான், நான் அறிகிறேன்."

     "அப்படி இருக்கும் பொழுது எந்த நம்பிக்கையில் வணிகர்கள் தங்கள் வணிக சாத்துகளை தொடங்கியுள்ளார்கள்?"

   "இப்போது உள்ள பாடி காவல் அதிகாரி பற்றி நீ அறிவாயா?"

    "இல்லை. எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது."

     "அப்படியானால் நான் கூறுவதை கவனி. இப்போது உள்ள பாடி காவல் அதிகாரி வேறு யாரும் அல்ல. முன்பிருந்த பாடி காவல் அதிகாரியின் தம்பி மட்டுமல்லாமல் சோழ தேசத்தின் உப தளபதிகளில் ஒருவரும் ஆவார்."

    "அப்படி என்றால் நாகையின் பிரச்சனை சோழ தேசத்தின் காதுகளை எட்டிவிட்டது. அதன் காரணமாகத்தான் நேரடியாக அங்கிருந்து உப தளபதி இங்கு வந்து உள்ளார்"

    "பரவாயில்லை ஒரு வழியாக பிரச்சனையின் தன்மையை புரிந்து கொண்டாயே" என இருவரும் பேசிக்கொண்டே தங்கள் பணிகளை தொடர்ந்து கொண்டிருந்தார்கள். 

     வணிகச் சாத்துகளை  பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த  இளம்வழுதியும் அழகனும் வணிகச் சாத்துகளின் காவலர்கள் இருவரும் பேசிக்கொண்டே பயணிப்பதை கவனித்தவர்கள் தங்கள் குதிரைகளை அவர்கள் அருகே செலுத்தியபோதுதான், மேற்கண்ட உரையாடலை கேட்க நேர்ந்தது. 

    "இன்று தேசம் முழுவதும் இதே பேச்சாகத்தான் உள்ளது போலும் ஐயா"

    "நமது பொறுப்பு கூடி உள்ளது இதிலிருந்து நன்றாக அறிய முடிகிறது"

     "ஆமாம் ஐயா. எத்தனை விரைவாக இதனை தீர்க்க முடியுமோ, அத்தனை விரைவாக இதற்கான தீர்வினை கண்டறிய வேண்டும்"

    "அதற்கான தேடுதலில் தான் நாம் உள்ளோம். முதலில் நாம் கண்டறிய வேண்டியது சூரியவர்மரை எங்கு உள்ளார் என்பதை தான். தேசத்தின் உயிர்நாடியான வணிகம் அப்போதுதான் சீரும் சிறப்புமாக செயல்படும் "

      "பாதுகாவலர்கள் கூறியதிலிருந்து சூரிய வர்மரின் தேவை குறித்து நன்கு அறிய முடிகிறது."

    "தஞ்சை பெருவழியில் இதற்கு முன்பாக பயணம் செய்து உள்ளாயா?"

    "இல்லை ஐயா"

    "காலம் காலமாக நடைபெற்று வரும் வணிகச் சாத்து என்றாலும் எனக்கு என்னவோ என்று சரியாகப் படவில்லை"

    "ஏன் ஐயா அப்படி கூறுகிறீர்கள்?"

    "மனதில் ஏனோ ஒருவித கலக்கம் நிலவுகிறது"

     "எதனால ஐயா?"

     "நீண்ட நாட்களுக்குப் பிறகு வணிகச் சாத்துகளை வணிகர்கள் ஆரம்பித்து உள்ளார்கள். இத்தனைக்கும் சூரியவர்மர் குறித்து எந்தவிதமான தகவலும் இல்லாத பொழுது, மேற்கொண்டுள்ள இப்பயணம் வெற்றிகரமாக முடிய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் என்னிடம் உள்ளது"

     "இங்குதான் இத்தனை காவலர்கள் உள்ளார்களே. அப்படி இருக்கும் பொழுது நீங்கள் கவலைப்படுவது ஏன்?"

     "ஏனோ தெரியவில்லை. உள்ளுக்குள் ஒரு விதமான கலக்கம் தோன்றுகிறது"

    "கவலை விடுங்கள் ஐயா. அதுதான் கூடவே நீங்களும் பயணம் செய்கிறீர்களே"

     "உள்ளூரத் தோன்றிய கலக்கத்தின் காரணமாகத்தான் இந்த வணிகச் சத்துக்களை பின்தொடர எண்ணினேன்"

    "தங்களுக்கு முன்பே வணிக சாத்துகள் புறப்படுவது தெரியுமா?"

    "நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்த வணிக சாத்துகளை வெற்றிகரமாக நடத்தி சதிகாரர்களின் சதி செயலை நடைபெறாமல் தடுக்க முடியும் என்ற எண்ணத்தில் தான் ஒரு முயற்சியினை நான் வணிகர்கள் அனைவருக்கும் ஓலை அனுப்பி உங்கள் பாதுகாப்புக்கு நான் இருக்கிறேன்,  நீங்கள் வழக்கம் போல் வணிக சாத்துகளை தொடருங்கள் என தெரிவித்திருந்தேன். அதன் காரணமாகத்தான் இந்த வணிக சாத்துகளை வணிகர்கள் இன்று செயல்படுத்திக் கொண்டு உள்ளார்கள்"

     "நம்பிக்கையோடு இருங்கள் ஐயா. கண்டிப்பாக இந்தப் பயணம் வெற்றிகரமாக தான் முடியும்"

      "இன்னும் இரண்டு காத தூரம் கடந்து விட்டோம்ன்றால் அங்கு ஒரு சத்திரம் வரும், வழக்கமாக அங்கு தான் வணிகர்கள் இளைப்பாரி செல்வார்கள் "

     "அப்படி என்றால் அங்கு அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் இருக்கும் அல்லவா?"

    "வணிகர்கள் தங்களோடு அழைத்து வரும் பாதுகாப்பு வீரர்கள் தான் அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பாக இருக்க முடியும் என்பது வணிகர்களின் நம்பிக்கை. ஏனெனில் இது காலம் காலமாக நடந்து வரும் பழக்கம். அதனில் நாம் தலையிட முடியாது. இருப்பினும் அவர்களது பாதுகாப்பை இம்முறை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். அங்குள்ள சத்திரத்தில் ஓரிரு பாதுகாவலர்கள் இருப்பார்கள். அதனால் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும்"

      "தாங்கள் கூறியபடியே அனைத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ளலாம் ஐயா" எனக் கூறியபடி இளம்வழுதியை பின்தொடர்ந்து கொண்டிருந்தான் அழகன். 

     தஞ்சை பெருவழிச் சாலையின் இரு பகுதிகளிலும் மரங்கள் விரைவிக் கிடந்தன. அகன்று பெருத்து கிடந்த மரங்கள் ஏற்கனவே இருந்த இருளை இன்னும் அதிகப்படுத்தி விட்ட சூழலை உண்டாக்கியிருந்தது. வானத்தில் 'மினுக் மினுக்கென' ஒளிர்ந்து கொண்டிருந்த நட்சத்திரங்களின் ஒளியினை புறந்தள்ளிவிட்டு தண்ணொளியை பாய்ச்சிக்கொண்டிருந்தாள் வெண்மதி. அவள் உருக்கிய வெள்ளிப் பனிச்சூட்டில் நீண்டு கடந்த சாலையில் வணிக சாத்து வண்டிகளுக்கு முன்பாக பாய்ந்தோடி கொண்டிருந்தது இளம்வழுதியும் அழகனும் ஆரோகனித்திருந்த குதிரைகள்.  

   வணிக சாத்து வண்டிகள் எப்பொழுதும் போல் ஆரவாரம் இன்றி ஒரே சீரான வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தன. வண்டி ஓட்டிகளும் அவற்றின் தாள லயங்களுக்கு ஏற்ப முன்னும் பின்னும் நகர்ந்தபடி வண்டியை செலுத்திக் கொண்டிருந்தார்கள். வண்டினுள் பயணித்திருந்த வணிகர்கள் என்னதான் இளம்வழுதி பாதுகாப்பு தருவதாக கூறியிருந்தாலும் உள்ளுக்குள் ஒரு விதமான பயத்தோடு இருப்பதை வெண்மதியாளின் ஒளி வீச்சு அவர்களது முகத்தில் அப்பட்டமாக தெரிவதை  வெளிப்படித்திருந்தது. இருப்பினும் தமக்குள் தைரியத்தை வளர்த்துக் கொண்டு வண்டியின் உள்ளே அமர்ந்துகொண்டு பயணித்துக் கொண்டிருந்தார்கள். அவ்வவ்போது தங்களது காவலர்களை அழைத்து பாதுகாப்பு குறித்து விசாரித்த வண்ணம் பயணத்தை மேற்கொண்டிருந்தார்கள்.

     முன் வரிசையில் முதலில் சென்று கொண்டிருந்த வண்டியில் இருந்த வணிகர் ஒருவர் "வழக்கமாக தங்கிச் செல்லும் சத்திரத்திற்கு வண்டியைக் கொண்டு செல்லுங்கள்" என்றார். 

     "தாங்கள் கூறியபடியே செய்து விடலாம் ஐயா"என வண்டி ஓட்டி கூறியபடி வண்டியினை சத்திரம் இருக்கும் திசையை நோக்கி முடிக்கி விட்டிருந்தார்.

     முன்னாள் செல்லும் வண்டியை தொடர்ந்து வந்து கொண்டிருந்த, மற்ற கூட்டு வண்டிகளும் மாட்டு வண்டிகளும், அதனைத் தொடர்ந்து வரும் பயணிகள் வண்டிகளும்,  முகப்பு வண்டியைப் பின்பற்றித் தங்கள் பயணத்தை தொடர்ந்தன. 

     சத்திரத்தில் தங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து குறித்து அறியாமல் தங்களது வழமையான பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தார்கள் வணிகர்கள்.

(தொடரும்...... அத்தியாயம் 33ல்)


இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 31

    🐾இராஜமோகினி🐾

   🌹யாழிசைசெல்வா🌹

அத்தியாயம் 31 🌾 மீண்டும் வணிகச்சாத்துகள் 🌾

       அங்குள்ள வீடுகள் அனைத்தும் நாகையின் பெரும் வணிகர்களான குதிரை செட்டிகள் வாழும் குடியிருப்பு பகுதிகளில் ஒன்று . தங்கள் குடியிருப்புகளுக்கு அருகாமையிலே அரபு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்திருந்த அரபு நாட்டு குதிரைகளை பராமரித்து வந்தார்கள். பெரும்பாலும் சோழ தேசத்திற்கு வேண்டிய குதிரைகள் தருவித்து தரும் அரும்பெரும் பணியினை காலம் காலமாக அவர்கள் செய்து வந்தார்கள். குதிரை வணிகத்தை மேற்கொண்டு வந்ததன் காரணமாக அவர்கள் குதிரைச் செட்டிகள் என அழைக்கப்பட்டார்கள். அந்தக் குடியிருப்பின் உள்ளே தான் இளம்வழுதியும் அழகனும் நுழைந்து இருந்தார்கள். 

     இரவின் இரண்டாம் சாமம் தொடங்கியிருந்த அந்த நேரத்திலும் குதிரை வணிகம் அங்கே நடந்து கொண்டிருந்தது. குதிரைகளை வாங்கும் போது அவற்றின் சுழிகள் வைத்து அதன் தரத்தை மதிப்பிடுவதும் குதிரையின் பற்களை எண்ணி அதன் வயதினை கணக்கிடுவதும் காலம் காலமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கையாக இருந்தது. அதன் மூலமாக குதிரையின் விலையும் தீர்மானிக்கப்பட்டது. 

    பெரிய வீட்டின் பின்பகுதியில் அமைந்திருந்த குதிரை கொட்டடிக்கு இருவரும் வந்து சேர்ந்திருந்தார்கள் அங்கு நூற்றுக்கணக்கான குதிரைகள் இருந்தன. கரிய, சாம்பல், வெள்ளை வண்ணக் குதிரைகள் என அங்கிருந்தன.  அவற்றை பராமரிக்கவும் பாதுகாக்கவும் நிறைய ஊழியர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தார்கள். சிறிய வட்டமான மர உருளையில் கொள்ளினை நிரப்பி ஊழியர்கள் நிரப்பி வைத்ததும் குதிரைகள் புசு புசுவென மூச்சுவிட்டபடி தின்று கொண்டிருந்தன. கொட்டடியின் ஒரு பகுதியில் குதிரையின் கழிவுகளை சுத்தம் செய்து கொண்டு சில பணியாளர்கள் இருந்தார்கள் வேறு சிலரோ அதன் கை கால்களை உருவி விட்டு குதிரைகளை திடப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் சில குதிரைகளை அங்குள்ள திறந்த வெளியில் அவிழ்த்து ஓட விட்டு பின் அழைத்து வந்து கொட்டடியில் கட்டிக் கொண்டிருந்தார்கள். இவை யாவற்றையும் கண்காணித்துக் கொண்டிருந்த பெரிய மனிதர் கொட்டடியை நோக்கி யாரோ இருவர் வருவதை பார்த்து விட்டிருந்தார். அவர்களை நோக்கி வந்தவர்"தாங்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாவல் அதிகாரி இளம்வழுதி தானே" என்றார். 

    தம்மைப் பற்றி அதற்குள் செய்தி இத்தனை வேகத்தில் பரவி விட்டதா என எண்ணி கொண்டவன்"ஆமாம் ஐயா!"என்றான். 

    "மிக்க மகிழ்ச்சி. எங்கள் வணிகத்தின் பாதுகாப்பு தங்களை நம்பித்தான் உள்ளது. "

    "கவலைப்பட வேண்டாம் ஐயா. தங்கள் பாதுகாப்பிற்கு எந்த விதமான இடையூறும் வராமல் பார்த்துக் கொள்வது எனது பொறுப்பு".

    "தங்களைப் பற்றி அனைத்து விவரங்களையும் அறிவேன் ஐயா. தங்கள் மீது முழுமையான நம்பிக்கை உள்ளது."

     "தங்களது நம்பிக்கையை கண்டிப்பாக காப்பாற்றுவேன்."

     "தங்களுக்கு எவ்வகையில் உதவி செய்ய வேண்டும் கூறுங்கள்?"

    "எமக்கு ஒரு குதிரை வேண்டும்"

     "எவ்வகையிலான குதிரை ஐயா?"

     "ஏன் அவ்வாறு வினவுகிறீர்கள்?"

     "தங்களது நோக்கத்தை அறிந்தால், அதற்கு ஏற்றார் போல் குதிரைகளை வழங்குவதற்கு வசதியாக இருக்கும். குதிரைகளை பல்வேறு வகைகளாக பிரித்து ஒவ்வொருவரின் பயன்பாட்டுக்கு ஏற்ப அதனை பயிற்சி அளித்து தயார் செய்து வைத்துள்ளோம். சில வகையான குதிரைகள் பயணத்திற்கு பயன்படும், இன்னும் சில வகையான குதிரைகள் பாரம் இழக்க பயன்படும், சில குதிரைகளோ பெயருக்கு அலங்காரத்திற்காக வைத்துக் கொள்ள பயன்படும், இன்னும் சில அபூர்வ குதிரைகளின் மீது பயணிப்பதே ஒரு கௌரவத்தை கொடுக்கும். போர் வீரர்களுக்கு என சில குதிரைகள் உண்டு. ஆகையினால் தான் கேட்கிறேன். தங்களுக்கு எவ்வகையான குதிரை வேண்டும்.

     "பயணம் செய்வதற்கும் தேவைப்படின், வாள் வீரன் ஒருவன் பயன்படுத்தக்கூடிய தன்மையிலும் அமைந்த ஒரு குதிரை வேண்டும் ஐயா"

    "வழக்கமாக சோழ படைகளுக்கு வேண்டிய குதிரைகளை அனுப்பி வைப்போம். அவற்றுள் சிலவற்றை  தயார் சய்து வைத்துள்ளோம். அவற்றைப் பாருங்கள் அவற்றுள் தங்களுக்கு பிடித்த குதிரையை சொல்லுங்கள் தருகிறேன்."

   தேர்வு செய்து  அவர் காட்டிய குதிரைகளை இளம்வழுதியும் அழகனும் சேர்ந்து பார்த்துக் கொண்டே சென்றார்கள். திடீரென ஒரு குதிரை இருவரும் ஒரே நேரத்தில் சுட்டிக்காட்டினார்கள். "உங்கள் இருவருக்கும் ஒரே சிந்தனை. நீங்கள் தேர்வு செய்துள்ள வெள்ளை குதிரை இங்குள்ள குதிரைகளில் சிறந்தது. இதனை நீங்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்." என வணிகர் மகிழ்ச்சியோடு கூறினார். 

      வெள்ளைக் குதிரையை அழைத்துக் கொண்டு அவ் இருவரும் புறப்பட தயாரானார்கள். "இதற்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் ஐயா"என இளமொழுதியை பார்த்து அழகன் கேட்டான். அவன் கேட்டது வணிகரின் காதில் விழுந்து விட்டது "நீங்கள் எதுவும் தர வேண்டியதில்லை. வழக்கம்போல் சோழப் படைகளுக்கு குதிரைகள் அனுப்பும் கணக்கில் எழுதிக் கொள்கிறேன். " என அவர் கூறியதை கேட்ட பின்பு இருவரும் அங்கிருந்து வெளியேறினார்கள். 

      அழகன் தன் கையில் உள்ள குதிரையின் கடிவாளத்தை பிடித்தபடி மனதுக்குள் ஒரு வகையான ஆனந்தத்தில் நடந்து கொண்டிருந்தான். என்ன  நினைத்துக் கொண்டானோ அடிக்கடி தனது குதிரையை பார்த்து கொண்டவன், தனக்குள் ஏதோ பேசிக்கொண்டு நடந்து கொண்டிருந்தான்.

     "உனது குதிரை எப்படி உள்ளது அழகா?"

     "உண்மையிலேயே அற்புதமாக உள்ளது"

     "உனக்கு பிடித்திருந்தால் சரிதான்."

     "இருவரும் ஒரே நேரத்தில் இந்த குதிரையை சுட்டிக்காட்டியது, எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா. நமக்குள் ஒரே புரிதல் இருப்பதை இது காட்டுகிறது"

   இருவரும் பேசிக்கொண்டே குதிரைகளை முடுக்கி விட்டிருந்தார்கள். விரைந்து ஓடிக்கொண்டிருந்த குதிரைகள் நாகையை விட்டு வெளியேறி அந்த இரவு நேரத்தில் வணிகத்தின் பொருட்டு செல்பவர்களும் பயணத்தின் பொருட்டு செல்பவர்களும் தமது கூட்டு வண்டிகளிலும் மாட்டு வண்டிகளிலும் பொருள்களை ஏற்றிக்கொண்டு வணிக சாத்துகளாக நகரை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் இணைந்து பயணம் செய்பவர்களும் தமது வண்டிகளில் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.  நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளவர்கள் தங்களின் பாதுகாப்பின் பொருட்டு இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்வது காலங்காலமாக நடந்து வரும் வழக்கமாய் இருந்தது. 

     நீண்டதொரு இடைவெளிக்கு பின்பு வணிகச் சாத்துகள் பயன்பாட்டுக்கு வந்திருப்பதை கவனித்த இளம்வழுதியின் முகத்தில் ஒரு புன்முறுவல் தோன்றியது. 

    "நீண்ட நேரமாக வணிக சாத்துகள் செல்லும் வணிகர் கூட்டத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?"

    "நான் நாகை வந்த பின் இவ்வளவு பெரிய வணிககூட்டத்தை இப்பொழுது தன் பார்க்கிறேன்"

     "இவை எப்பொழுதும் நடைமுறையில் இருக்கும் வழக்கம் தானே ஐயா?"

    "முன்பு இருந்தது உண்மைதான் அழகா!, ஆனால் சமீப காலமாக அவை நடைமுறையில் இல்லாமல் இருந்தது."

    "இங்கு நடந்த பல்வேறு குழப்பங்கள் தான் காரணமாய் இருக்க முடியும். அதைத்தானே சரி செய்ய தாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்."

    "ஆமாம்! ஆனால் அவற்றில் பெரியதொரு வெற்றி இதுவரை நமக்கு கிடைக்கவில்லை. அதுதான் மிகவும் வருத்தமாக உள்ளது."

   "கண்டிப்பாக நமக்கு வெற்றி கிடைக்கும் ஐயா"

    "வா அழகா! நாமும் அவர்களோடு சிறிது தூரம் பயணம் செய்து விட்டு வருவோம்" எனக் கூறியபடி வணிக சாத்துகளின் பின்னால் தனது குதிரையை முடுக்கி விட்டிருந்தான் இளம்வழுதி. 

     ஒரு கணம் தாமதித்துவிட்டு தனது வெண்புறவியை இளம்வழுதியின் பின்னால் தொடர்ந்தான் அழகன். 

     கூட்டு வண்டிகள் அனைத்தும் ஒரு வரிசையாகவும் மாட்டு வண்டிகள் மற்றொரு  வரிசையாகவும் இணைந்த பயணத்தை தொடர்ந்தன. அவ் வண்டிகளின் பின்னால் பயணத்தை மேற்கொண்டு இருந்த பயணிகள் தமது குதிரைகளிலும் மாட்டு வண்டிகளிலும் அவர்களை பின் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். வணிகர் சாத்து வண்டிகள் ஒரே தாள லயத்துடன் ஆடி அசைந்து சென்று கொண்டிருந்தன. 

     ஒவ்வொரு ஒவ்வொரு வண்டிகளிலும் இரவு நேரத்தில் பயணத்துக்கு உதவியாக சுளுந்துகளை வண்டியின் இருபுறமும் செருகி வைத்திருந்தார்கள். சுளுந்துகளின் ஒளி வெள்ளத்தில் தஞ்சை பெருவழி செல்லும் அப்பாதை தெளிவாகத் தெரிந்தன. இவ் வண்டிகளின் பாதுகாப்பிற்கு ஆங்காங்கே வணிகர்கள் ஏற்பாடு செய்திருந்த காவலர்கள் குதிரைகளில் உடன் சென்று கொண்டிருந்தார்கள். இவ்வாறான நீண்ட பயணத்தில் பொருட்களை கண்ணும் கருத்துமாக காவல் காத்து உரிய இடத்தில் கொண்டு சேர்க்கும் வரை அவர்களுக்கு சரியான ஊன் உறக்கமின்றி தொடர்ந்து பயணம் செய்வது அப்பாதுகாவலர்களுக்கு பழகி விட்டிருந்தது. நீண்ட தூரப் பயணத்தில் வணிகர்கள் ஆங்காங்கே பாதுகாப்பானதொரு இடத்தில் தங்கும் போது அவர்களுக்கு வேண்டிய உணவுகளை அவர்கள் சமைத்து உண்பார்கள். அவ்வேளைகளில் பாதுகாவலர்களுக்கும் உணவு கிடைக்கும். சில நேரங்களில் அவை கிடைக்காமல் போவதும் உண்டு. இவ்வாறான பயணம் அவர்களுக்கு பழக்கமாய் இருந்ததால் கிடைத்ததை உண்டு தங்கள் பணிகளை செவ்வனே செய்து வந்தார்கள். அக்காவலர்கள் எப்பொழுதும் தமது இடையில் நீண்ட வாளும், கையில் குத்தீட்டி ஒன்றும் எப்பொழுதும் வைத்திருப்பார்கள். பெரும்பாலும் அவர்கள் எல்லா வகையான சண்டைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாகவே இருப்பார்கள். திடீரென வழிப்பறி கொள்ளையர்களாளோ அல்லது தீயவர்களாலோ துன்பம் ஏதேனும் நேரிட்டால் அதனை எதிர்கொள்ளும் திறன் அவர்களுக்கு இருந்தது. அத்தகைய நபர்களையே பெரும்பாலும் வணிகர்கள் தேர்வு செய்து தங்கள் வழி துணையாக அழைத்துச் செல்லும் வழக்கம் இருந்தது. அப்படியான பயணம் தான் அங்கு தொடர்ந்து கொண்டிருந்ததன.

     அப்போது வணிக சாத்துகள் பாதுகாவலர்கள் இருவர் தங்கள் குதிரைகளை அருகருகே விட்டபடி பேசிக் கொண்டு பயணத்தை தொடர்ந்தார்கள்.

     "நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்பொழுது தான் வணிக சாத்துகள் வணிகர்கள் தொடங்கியுள்ளார்கள்." என்றான் அவர்களில் ஒருவன்.

    " எத்தனை காலம் தான் அவர்களும் பொறுத்திருப்பார்கள். வாங்கிய பொருட்களை காலாகாலத்தில் விற்பனை செய்தால் தானே அவர்களுக்கும் இலாபம் கிடைக்கும்." என்றான் அவன் அருகே பயணம் செய்யும் மற்றொருவன்.

    "ஆமாம். அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் கூட இதுவரை எந்த பணியும் கிடைக்கவில்லை. இவர்களை நம்பித் தானே நமது வாழ்வாதாரமும் உள்ளது."

    "நீ சொல்வது முற்றிலும் உண்மை. எத்தனை காலம் தான் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் இருப்பது."

   "நாலு காசு சம்பாதித்தால் தான் வீட்டில் உள்ள பெண்டு பிள்ளைகளும் மதிப்பார்கள்."

    "ஆமாம் ஆமாம். அதனை வீட்டில் இருந்த சில நாட்களிலேயே நான் தெரிந்து கொண்டேன்."

    "அடடா! நீ புதிதாக கல்யாணம் செய்து கொண்டவன் தானே? உனக்கு அதற்குள் வாழ்க்கை அழுது விட்டதா?"

   " இதில் புதிதென்ன? பழைய தென்ன? வாழ்க்கையில் அனைவருக்கும் நடப்பது தானே. என்ன உங்களுக்கு தெரிந்துவிட்டது. எனக்கு சற்று தாமதம் அவ்வளவுதான்."

    "நல்ல ஆளப்பா நீ. நன்றாகவும் பேசுகிறாய்"

     "ஏன் இத்தனை நாட்களாக வணிகச் சாத்துகளை வணிகர்கள் செய்யாமல் இருந்தார்கள்?"

     "தேசத்தில் ஆங்காங்கே மூண்டு வரும் கலகங்களும் புரட்சிகளும் சேர்ந்து அவர்களை பயமுறுத்தி இருக்க வேண்டும்"

    அடுத்து தன் அருகில் வந்தவன் கூறியதை கேட்டதும் வியப்பில் ஆழ்ந்து போனான் புதிதாக கல்யாணமானவன்.

(தொடரும்.... அத்தியாயம் 32ல்)


Sunday, 26 January 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 30

  🐾இராஜமோகினி🐾

🌹யாழிசைசெல்வா🌹

அத்தியாயம் 30 🌾புதியவனின் வருகையும் புதிய ஆதாரமும்🌾

        இருபதுவயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் இளம்வழுதியை நோக்கி பரபரப்பாக ஓடி வந்து அவன் அருகே நின்றான். அவன் உடல் முழுவதும் வியர்வை மழையால் குளித்ததோற்றம் ‌ வெகு தொலைவில் இருந்து வந்தவன் என்பதை‌ சொல்லிக் கொண்டிருந்தது. 


     துடிப்பான கண்கள், வலுவேறிய தோள்கள், இள வயதுக்கு உரிய கட்டுக்கோப்பான உடல் அமைப்பு , சுந்தர முகத்திற்கு கூடுதல் பொலிவைத்தரும் இளம் மீசை ‌, இடைதனில் சிறிய வாள் என ஒரு போர் வீரனுக்கு உரிய அத்தனை தோற்றமும் கொண்ட இளைஞன் தான் அழகன்.‌ தேசத்தின் முன்னேற்றத்திற்காக ஏர்முனையையும் போர்முனையையும் சரிசமமாக கருதும் போக்கு அவனிடம் இருந்தது.  


     "ஐயா வணக்கம். என்னை தங்களுக்கு தெரிகின்றதா?" என்றான் அழகன். 


    "இல்லை " என்றான் இளம்வழுதி. 

 

    "இரண்டு நாட்களுக்கு முன்பு ஊர் நத்தம் குடியிருப்பில் கருமம் ஆராயும் அதிகாரி என்ற பெயரில் கயவன் ஒருவன் நிகழ்த்திய பெரும் குழப்பத்தின் போது அங்கு அவனை கையும் களவுமாக பிடித்த மக்களில்‌ ஒருவன் தான் நான். அப்பொழுது அங்கு தாங்களும் கூட வந்திருந்து அந்தப் பிரச்சினையை சரி செய்து விட்டு சென்றீர்கள்"


    "அந்த நிகழ்வு நன்றாக எனக்கு ஞாபகம் உள்ளது. அங்கு பலபேர் மாறி மாறி பேசினார்கள். அதன் காரணமாக என்னால் தங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை. "


    "அதனால் பிழை ஒன்றும் இல்லை ஐயா. எனது பெயர் அழகன். வைத்தியர் முருகனின் மகன் நான்."


     "தங்கள் தந்தையார் பற்றி கேள்விப்பட்டு உள்ளேன். என்ன காரணமாக என்னை அழைத்தீர்கள்?"


    "தங்களைப் பற்றி செங்கமலம் அம்மா நிறைய எடுத்துக் கூறினார். அங்கு உங்களிடம் நான் ஏதேனும் தவறாக பேசியிருந்தால் மன்னித்து விடுங்கள். " என மன்னிப்பு கோரினான்.


    "அந்த சூழ்நிலையில் அங்கு யார் இருந்தாலும் அவர்களுக்கு அப்படித்தான் தோன்றி இருக்கும்.‌ அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை."


    "தங்களிடம் ஒரு விண்ணப்பம்" என தயங்கியபடி கூறினான் அழகன். 


   "என்னவென்று கூறுங்கள். என்னால் செய்யக்கூடிய காரியம் எனில் கண்டிப்பாக நிறைவேற்றித் தருகிறேன்."


    "தங்களைப் பற்றி செங்கமலம் அம்மா கூறியதிலிருந்து தங்கள் மீது மிகுந்த மரியாதை உண்டாகிவிட்டது. ஊர் நத்தம் குடியிருப்பில் அதனை நேரில் காணும் வாய்ப்பு எனக்கு உண்டாகியது. அதன் பிறகு தான் எனது நீண்ட நாள் தேடலுக்கு ஒரு வழி கிடைத்ததாக உணர்ந்தேன். "

 

     "அப்படி என்னால்  தங்களுக்கு ஏற்பட்ட‌ மாற்றம் என்னவென்று அறிய ஆவலாக உள்ளது"


    "நான் பிறந்த தேசத்திற்கு பயன்பெறும் வகையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. அதற்கு சரியான ஒரு பாதை இதுவரை அந்தப் பாதை தங்களை கண்ட பின்பு தெளிவாகிவிட்டது. ஆமாம் ஐயா. தங்களோடு சேர்ந்து சோழ தேசத்திற்கு தொண்டாற்றுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்."


    "தேசத்தின் மீதான தங்களின் அன்பும் பற்றும் அதற்காக தாங்கள் காட்டும் முனைப்பும் தங்கள் மீது  மிகுந்த மரியாதையை உயர்த்துகிறது. எனக்கும் உண்மையில் ‌ நம்பத் தகுந்த ஒரு ஆள் தேவைதான் உள்ளது. அந்தத் தேவை பூர்த்தியாகும் நேரம் இப்பொழுது வந்துவிட்டதாக உணர்கிறேன்.‌"


    "எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். நிச்சயம் உங்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருப்பேன்."


    "மிகுந்த மகிழ்ச்சி. தங்களுக்கு வேறு பணி ஏதும் இல்லை என்றால் இப்பொழுதே என்னுடன் பணி செய்ய வரலாம்."


     "தங்களைத் தேடிக் கொண்டுதான் நாகை முழுவதும் சுற்றிக் கொண்டிருந்தேன். இப்பொழுதுதான் தங்களைக் காண முடிந்தது. அதுவும் நல்லதாகத்தான் போய்விட்டது. நான் எதிர்பார்த்த கனவு நினைவாகும் நாள் இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என நினைத்ததில்லை. உண்மையில் நான் பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும் தங்களுடன் சேர்ந்து பணி செய்வதற்கு."


     "நல்லது வாருங்கள். "


     "ஐயா இன்னும் ஒரு வேண்டுகோள். நான் தங்களை விட வயதில் சிறியவன்."


    "அதனால் என்ன கூறுங்கள்?"


     "என்னை உரிமையோடு அழைத்தால் போதும். "


    "ஏன்? தவறாக ஏதேனும் கூறி விட்டேனா?"


    "இல்லை ஐயா. மரியாதை நிமித்தமாக தாங்கள் பேசுவதால், நம் இருவருக்கும் இடையே ஒரு இடைவெளி உருவாவதாக உணர்கிறேன். அதனால் உரிமையோடு என்னை அழைக்கலாமே. என்றுதான் தங்களிடம் கூறினேன்"


   "அப்படியா.  எதுவும் பழக்கத்தினாலும் பண்பினாலும் தான் வரும். உடனே வருவதற்கு சாத்தியம் இல்லை"


    "நல்லது ஐயா."


     இருவரும் வெகு நேரமாக எரிந்து சாம்பலாக கிடந்த நெல்மணிகளை கலைத்து ஏதேனும் தகவல் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் தேடிக் கொண்டிருந்தார்கள். நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் நெருப்பை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தண்ணீரை வாரி இறைத்ததில் எரிந்து சாம்பல் குவியல்கள் இறுகிப் போயிருந்தன. கொழுந்துவிட்டு எரிந்திருந்த நெருப்பின் மிகுதியால் அங்காடியின் சுவர்கள் வெடித்து கீழே சரிந்து இருந்தன. கீழே கிடந்த சுவர்களின் பல துண்டுகள் அனைத்திலும் கரி அப்பிக்கிடந்தன. அதனை பார்க்கும்போது உயரம் நெஞ்சில் அப்பிக் கொள்ளும் அளவிற்கு இருந்தன.


    இடிபாடுகளில் இடையே புகுந்து தேடிக் கொண்டிருந்த அழகன் அங்கு கடந்த சிறிய குச்சியினால் சாம்பலை கிளறிக் கொண்டிருந்தான். நீண்ட நேரமாக நடந்து கொண்டிருந்த அவனது தேடலுக்கு ஒரு தீர்வு கிடைத்திருக்க வேண்டும். அவனது சுந்தர முகத்தில் ஒளி தோன்றியது. குச்சியினை சாம்பலில்சுளித்து சுழித்து கொண்டிருந்தவனுக்கு ஏதோ ஒன்று அகப்பட்டதாக தோன்றியது. அங்கு தொலைவில் எரிந்து கொண்டிருந்த விளக்கு ஒன்றை எடுத்து வந்து மீண்டும் அவன் தேடிய இடத்தில் குச்சியால் சுழித்தான். பார்ப்பதற்கு ஏதோ ஒரு முத்திரை போல் தெரிந்தது. சாம்பலை விலக்கிவிட்டு கவனமாக அதை கையில் எடுத்து அதன் மேல் படிந்திருந்த சாம்பலை தனது மேலாடையால் சுத்தம் செய்து விட்டு விளக்கை உயர்த்திப் பார்த்தான். முத்திரையில் பன்றி உருவம் பொறித்திருந்தது.  அதனை எடுத்துக் கொண்டு இளம்வழுதியை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றான். அவனது முகத்தில் அத்தனை பொலிவும் மொத்தமாய் குடியேறி இருந்தது. 


     தனக்குப் பின்னால் கேட்ட பாதக்குரடுகளின் ஒளியால் ஈர்க்கப்பட்ட இளம்வழுதி திரும்பி பார்த்தான்.  அழகன் கையில் ஏதோ ஒன்றை உயர்த்திக் கொண்டு வருவதை காண முடிந்தது. அதற்குள் அவன் அருகில் வந்து விட்டிருந்தான் அழகன். 


     "ஐயா.  இந்த முத்திரை அங்கு உள்ள அங்காடியில் கிடைத்தது" என கூறி நெல்லுக் கடையின் முகப்பில் அமைந்த அங்காடியை காட்டினான். 

   

   அழகன் கையில் கொடுத்திருந்த முத்திரையை விளக்கின் ஒளியில் பார்த்தபோது அதில் இருந்த பன்றி உருவம் தெரிந்தது. அதனைக் கண்டதும் அவனது முகத்தில் புதிய பொலிவு ஒன்று உருவாகி இருந்தது. 


   "அழகா! உண்மையில் நீ இன்று செய்திருக்கும் காரியம் மகத்தானது. இத்தனை நாட்களாக தேடிக் கண்டிருந்த வினாக்களுக்கு சரியான விடை இன்று தான் கிடைத்துள்ளது. நான் கணித்திருந்தது சரி என்பதற்கு சாட்சியான ஆதாரத்தை கொண்டு வந்துள்ளாய்."என கூறியதோடு அவனை இறுகத் தழுவி பாராட்டினான் இளம்வழுதி. 


    "அப்படி என்ன பெரிய காரியம் ஒன்றும் நான் செய்துவிடவில்லையே?"


    "அப்படி கூறாதே அழகா! சோழ தேசத்தில் நடந்து கொண்டிருக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் அத்தாட்சியான அடையாளம் தான் இன்று நமது கையில் உள்ள முத்திரை"


   "இந்த முத்திரைக்கும் தாங்கள் கூறுவதற்கும் என்ன சம்பந்தம்?"


    "இந்த முத்திரையில் உள்ள உருவம் என்ன?"


   "பன்றி உருவம்"


    "அதனை யார் பயன்படுத்துகிறார்கள்?"


    "சாளுக்கிய மன்னர்கள் தங்களது முத்திரைகளிலும், கொடிகளிலும் பயன்படுத்துகிறார்கள்"


   "இப்போது கூறு, இவை இங்கு கிடைக்கிறது என்றால் அதன் பொருள் என்ன?"


    "இதனை செய்தது சாளுக்கியர்கள் எனக் கொள்ளலாம்"


   "ஆமாம். அதைத்தான் உறுதிப்படுத்துகிறது. இங்கு மட்டுமல்ல இன்று சோழ தேசத்தில் நடந்து வரும் அத்தனை பிரச்சனைகளுக்கும் சாளுக்கியர்கள் தான் காரணம் என்பதற்கு இந்த முத்திரையே சாட்சி."


    "இந்த ஒற்றை முத்திரையை வைத்துக்கொண்டு நாம் எவ்வாறு அவர்களை தடுக்க முடியும்?"


    "இப்போது கிடைத்துள்ள இந்த முத்திரையின் வழியாக நமது பிரச்சினைக்கு சாளுக்கியர்கள் தான் காரணம் என்ற இறுதி முடிவிற்கு நம்மால் வர முடிகிறது. அதுமட்டுமின்றி அவர்களுக்கு துணை செய்யும் துரோகிகள் இங்கு நம்மிடையேதான் வாழ்ந்து வருகிறார்கள். என்பதற்கான சாட்சியமாகவும் இவை விளங்குகிறது. "


     "அப்படியெனில் நமது அடுத்த தேடல் அவர்களை தேடித்தான் இருக்க வேண்டும்'


   "ஆமாம்! சரியாக கூறினாய். "


    "அவர்களை நாம் எங்கிருந்து தேடுவது?"


    "புதிதாக எங்கும் தேட வேண்டாம். அவர்கள் ஏற்கனவே விட்டுச் சென்றிருந்த இடங்களில் இன்னும் ஏதேனும் ஆதாரம் கிடைக்கலாம். அதனைத் தேடும் போது நமக்கு ஏதேனும் வழி அதன் வழியே கிடைக்கலாம் என தோன்றுகிறது"


     "சரி வாருங்கள்" எனக் கூறி ஆயத்தமானன் அழகன். 


      அழகனை அழைத்துக் கொண்டு முன்னாள் நடந்த இளம்வழுதி இப்படி கேட்டான் "உன்னிடம் குதிரை உள்ளதா?" 

    

    "இல்லை ஐயா."


      "சரி வா. வழியில் சம்பாதித்துக் கொள்ளலாம்" எனக்கூறியவன் தனது குதிரை மருதனை அழைத்துக் கொண்டு முன்னால் சென்றான்.

      

     நெல்லுக்கடை வீதியினை கடந்து அடுத்து உள்ள இரண்டு ஒரு வீதிக்குள் புகுந்தவர்கள் எதிரே உள்ள பெரிய வீதிக்குள் இருவரும் நுழைந்தார்கள்.‌ அங்குள்ள வீடுகள் அனைத்தும் இரண்டு மூன்று அடுக்குகளை கொண்ட பிரம்மாண்டமாக கட்டப்பட்டு இருந்தன. ஒவ்வொரு வீடுகளும் பல்வேறு வகையான அலங்காரங்களும் தோரணைகளையும் கொண்டு அமைந்திருந்தது. பார்க்கும்போதே அவை பெரும் வணிகர்களுக்கு சொந்தமானவை என்பதை காட்டிக் கொண்டிருந்தன.‌ ஒவ்வொரு வீடுகளின் முகப்பு வாசலில் பெரியதொரு அலங்கார விளக்கில் தீபம் எரிந்து கொண்டிருந்தது. அவற்றின் பூரண ஒளியால் அவ்விதி முழுவதும் நிரம்பி வழிந்தது. அவ்விதிக்குள் அவ்வளவு எளிதாக யாரும் மறைந்து விட முடியாதபடி வெளிச்சத்தின் ஆதிக்கம் பரவிக் கிடந்தது. அதுமட்டுமின்றி அந்த இரவு வேலையிலும் இரவு காவலர்கள் ஒவ்வொரு வீதியையும் மாறி மாறி கையில் வேலும் வாளும் தாங்கியபடி சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். அந்த வீதிக்குள் நுழைந்த யாரும் அத்தனை எளிதில் அவர்கள் விழிகளில் இருந்து தப்புவதற்கு சாத்தியம் இல்லாத படி அவர்களது பணியை எளிதாக்கி விட்டிருந்தது அங்கு ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகள். 


     (தொடரும்... அத்தியாயம் 31ல்)

Saturday, 25 January 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 29

  🐾இராஜ மோகினி🐾

🌹யாழிசைசெல்வா🌹

அத்தியாயம்  29 🌾 நெல்லு கடை வீதி    🌾

      சாளுக்கிய இளவரசி மதிமோகினியிடம் விடைபெற்றுக்கொண்டு  நாகை வணிக வீதியில் தனது புரவியுடன் அல்லங்காடிகளை பார்த்துக் கொண்டிருந்தவன் ஒரு வழியாக நெல்லுக்கடை வீதிக்கு வந்திருந்தான் இளம்வழுதி. 

    கயவர்கள் செய்த கொடூரமான காரியத்தினால் நெல்லுக்கடை முழுவதும் எரிந்து சாம்பலாயிருந்தது. நெல்லுக்கடைக்கு தீ வைத்த சம்பவம் முடிந்து பல திங்கள் கடந்து விட்டிருந்தும் அதனை சரி செய்யாமல் அப்படியே விட்டிருந்தனர்.‌ அங்கு நடந்த கொடூரம் அவர்கள் நெஞ்சில் பெரும் ரணத்தைக் கொடுத்திருந்தது. அதனால் அவை அப்படியே கிடந்தன. அங்கிருந்த ஆயிரக்கணக்கான மூட்டைகள் கருகி விட்டிருந்தன. அத்தனையும் தஞ்சை பூமியில் விளைந்தவை. ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வயிற்றுக்கு உணவாக வேண்டிய தானியம் வீணாகப் போயிருந்தது. சுதையும் கல்லும் வைத்து கட்டப்பட்டிருந்தது அங்காடி. அதன் மேல் கூரை மட்டும் மூங்கில் கழிகளாலும் தென்னை ஓலையாலும் வேயப்பட்டிருந்ததாலும் எளிதாக தீப்பிடித்துக் கொண்டிருக்கவேண்டும். நீண்ட வரிசையில் அமைந்திருந்த அங்காடிகளின் அமைப்பும் தீ பரவுவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது. இந்தக் கடையை நம்பி இருந்த எத்தனையோ குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாய் போனது. எப்படித்தான் இவர்களால் கொஞ்சம் கூட மனசாட்சி இன்றி நடந்து கொள்ள முடிகின்றதோ? என பலவாறாக யோசித்தபடி ஒவ்வொரு அங்காடிகளையும் பார்த்துக் கொண்டிருந்த இளம்வழுதியின் எண்ணங்களில் இவ்வாறு ஓடிக்கொண்டிருந்தது. 

      கொழுந்துவிட்டு எரிந்திருந்த தீயினால் அங்காடிகளை தாங்கிக் கொண்டிருந்த பெரும் உத்திரங்கள் எரிந்து சாம்பலாயிருந்தன. அவற்றின் அருகே பாதி வெந்தும் பாதி வேகாததுமான மூங்கில் கலிகளின் எரிந்த பக்கம் சாம்பலாகவும்   எரியாதவை கூர்மையாகவும்  நீட்டிக்கிடந்தன. ஆங்காங்கே குவியல் குவியல்களாக வெந்து போன நெல் மூட்டையின் சாம்பல்  கிடந்தன. ஒரு சில மூட்டைகள் பாதி வெந்தும்,  வேகாமல் கிடந்த மூட்டையின் நெல்மணிகள் சிதறிப்போய் கிடந்தன. எரிந்தும் எரியாமலும் கடந்த கலவையான நெல் மணிகளிருந்து தீய்ந்து போன வாடை,  இரவின் வாடைக்காற்றால் அந்தப் பகுதி முழுவதும் சூழ்ந்து உள்ளே நுழைய விடாமல் செய்து கொண்டிருந்தது. அந்த நாற்றத்தையும் தாண்டியபடி அங்காடிகளின் வணிகர்கள் தங்கள் உதவியாளர்களைக் கொண்டு சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். அங்கிருந்த அனைவரும் நாற்றத்தை சகிக்க முடியாமல் மூக்கில் மேல் துணி ஒன்றைக் கட்டிக் கொண்டு பணி செய்து வந்தார்கள். 

     நெல்லுக்கடையில் நுழைந்த போதே இதனை கவனித்திருந்தான் இளம்வழுதி. வேறு வழியின்றி அவனும் அவர்களை பின்பற்றி மூக்கில் துணிய கட்டி இருந்தான். அங்காடிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தவர்களை கடந்து சென்றவன் ஒவ்வொரு அங்காடியாக நுணுக்கமாக ஆராய்ந்து கொண்டிருந்தான். 
      அன்னமழகி, குள்ளங்கார், குடவாழை, காட்டுயானம், காட்டுப்பொன்னி, வெள்ளைக்கார், மஞ்சள் பொன்னி, கருப்புச் சீரகச்சம்பா, கட்டிச்சம்பா, குருவிக்கார்,வாடன் சம்பா, மடு முழுங்கி, களர் சம்பா, நவரை, குழிவெடிச்சான் , செந்நெல், கானாடு காத்தான், யானைக்கவுணி என நூற்றுக்கணக்கான பாரம்பரிய நெல் வகைகளைக் கொண்ட நெல் ரகங்கள் அங்கு அழிந்துபோயிருந்தன. 

      அங்காடியின் வணிகர் ஒருவர் தேம்பித் தேம்பி குழந்தை போல் எரிந்து போய் கிடந்த நெல்மணிகளை அள்ளி கையில் வைத்துக்கொண்டு அழுது கொண்டிருந்தார். அவரது கதறலால் ஈர்க்கப்பட்ட பிற வணிகர்களும் அவரது பணியாளர்களும் அவர் அருகே வந்து ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார்கள். 

     "அத்தனையும் வீணாக போய்விட்டது. இனி என்ன செய்வேன். " பொங்கி வந்த அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் கதறி கதறி அழுது கொண்டிருந்தார் பச்சை வண்ண துண்டை தலையில் கட்டி இருந்த வணிகர். 

     "ஒவ்வொரு ரக நெல்லையும் பார்த்து பார்த்து குழந்தை போல் பாதுகாப்பாய் கொண்டு வந்து இங்கு சேர்த்து இருந்தேன். இதை பார்க்கும் போதெல்லாம் கருகிப் போய் கிடக்கும்  இந்த நெல்மணிகள் முன்னால் வந்து விடுகிறது . அதனால் பசித்தும் உணவு சாப்பிட முடியாமல் தவிக்கிறேன்' என்றார் அங்கிருந்து வணிகரில் ஒருவர்.

    "நான் வாங்கி சேர்த்து வைத்திருந்த அன்னமழகி, குள்ளங்கார், குடவாழை, காட்டுயானம் ஆகிய நெல் வகைகளை உற்பத்தி செய்த விவசாயிகள் ஒருவருக்கு கூட இன்னும் நாணயங்கள் கொடுக்கவில்லை. அவர்களுக்கு நான் தருவதாக சொன்ன அந்த நாளும் கடந்து விட்டது. இதனை உற்பத்தி செய்த விவசாயிகளில் ஒருவன் நான் உரிய நேரத்தில் நாணயங்கள் கொடுத்தால் மட்டுமே அவனது ஒரே மகளின் கல்யாணம் நடக்கும் என்று கூறியிருந்தான். அவனது மகளின் கல்யாணத்திற்கு செய்ய வேண்டிய சீர்வரிசை, உணவுப் பதார்த்தங்கள், வண்ண வண்ண ஆடைகள், கல்யாணத்தன்று வாசிப்பதற்காக ஏற்பாடு செய்திருந்த கெட்டிமேளகாரர்கள், அன்று நடைபெறும் சாமக்கூத்திற்கான முன்பணம் இவையெல்லாம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்றால் நான் தரும் நாணயங்கள் மட்டுமே அவனுக்கு உதவும் என்று  என்னிடம் அத்தனை தெளிவாக கூறிச் சென்றிருந்தான். அந்த விவசாயின் மகள் திருமணம் நடந்ததோ என்னவோ நடந்த விபரீதத்தில் நான் மறந்து விட்டேன். பாவம் வந்து விவசாயி என்னவானானோ? இறைவா எங்களை ஏன் இவ்வாறு சோதிக்கிறாய்? இத்தனை அநீதிகளையும் செய்த மூடர்களை தண்டிக்காமல் ஏன் தாமதிக்கிறாய்? இதுதான் நீ வழங்கும் நீதியா? நான் எவ்வாறு அந்த விவசாயிக்கு உரிய நாணயங்களை கொடுப்பேன்? என்னிடம் தான் ஏதும் இல்லையே! இருப்பது அனைத்தும் இழந்து விட்டு நிர்க்கதியாய் உள்ளேனே! ஆண்டவா! இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்?" தனது இரு கைகளையும் மேலே உயர்த்தி வேண்டிக் கொண்டிருந்தார் மற்றொரு அங்காடி வணிகர். 

      "இந்த அநீதி நடந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது, இதுவரை அதற்கான நியாயம் எதுவும் கிடைக்கவில்லை. சோழ தேசத்தில் என்னதான் நடக்கிறது?" என்றார் மற்றொரு வணிகர்.

     "இங்கு நடந்த அநீதியை தட்டிக் கேட்கப் போய் தான். பாடி காவல் அதிகாரி இளமாறன் இராஜராஜர் ஆதுர சாலையில் குற்றுயிரும் குறையுமாய் இப்போதோ அப்போதோ என்று தெரியாமல் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன்" என அங்கிருந்த வணிகர்களில் குட்டையாக இருந்த ஒருவர் கூறினார். 

     "எல்லாம் சரி! ஒரு அதிகாரி போனால் மற்றொரு அதிகாரி வந்து விடுவார். ஆனால் நமது நிலவரம் என்ன? நம்மை யார் வந்து காப்பாற்றுவார்?" அங்கிருந்த வணிகர்களில் உயரமாய் இருந்தவர் கூறினார். 

     "இத்தனை நடந்தும், சூரிய வர்மர் ஏன் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? வணிகர்களை பாதுகாப்பதும் அவரது கடமைதானே. நாமெல்லாம் அவரை நம்பி தானே உள்ளோம்" என்றார் குட்டையாக இருந்த வணிகர். 

    "உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை போலும். சூரிய வர்மரை பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டது. அவரது மாளிகையில் யார் யாரோ வந்து போகிறார்கள். மேலும் அவர் எங்கு சென்றார் என யாருக்கும் தெரியவில்லை. அவரது மறைவே ஒரு மர்மமாக உள்ளது." என்றார் மற்றொரு வணிகர். 

    " இதையெல்லாம் சரி செய்வதற்கும், நம்மை பாதுகாப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்து உள்ளார்களா இல்லையா?" என்றார் அவர்களில் உயரமான வணிகர்.

    "சமீபத்தில் தான் குடும்ப வாரியங்களின் கூட்டம் நடந்துள்ளது. அக்கூட்டத்தின் முடிவில் புதிய பாடி காவல் அதிகாரி ஒருவர் பொறுப்பேற்று உள்ளதாக அறிகிறேன்" என்றார் குட்டையாக இருந்த வணிகர். 

     "அப்படியா! யார் அவர்? யாரேனும் அவரை பார்த்து உள்ளீர்களா? நமது துயரம் குறித்து அவரிடம் கூறினீர்களா?" என்றார் உயரமான வணிகர். 

    "இதுவரை அவரை பார்த்ததில்லை. அவரைப் பற்றி யாருக்கேனும் தெரியுமா?"

    "நான் அறிந்த வரையில் அவர் ஏற்கனவே காயம் பட்டு ஆதர சாலையில் உள்ள பாடிகாவல் அதிகாரி இளமாறனின் தம்பி எனவும் அவரது பெயர் இளம்வழுதி எனவும் தெரிகிறது" என்றார் குட்டையான வணிகர். 

     "ஓ அப்படியா! இவரேனும் நமது குறைகளை தீர்த்து வைப்பாரா? அல்லது முந்தைய அதிகாரி போல் காணாமல் போய்விடுவாரா?" என்றார் உயரமானவணிகர்.

     "ஏனையா இப்படி கூறுகிறீர்கள்? இப்பொழுது புதிதாக வந்திருப்பவர் சோழ தேசத்தின் உப தளபதி பதவி வகிப்பவர் என அறிகிறேன். அத்தனை பெரிய பொறுப்பில் உள்ளவர் கண்டிப்பாக வல்லவராகத் தான் இருப்பார். நமக்கும் நீதி கிடைக்கும் என நம்புவோம்" என்றார் இன்னொரு வணிகர். 

    அங்காடிகள் ஒவ்வொன்றையும் பார்வையிட்டுக் கொண்டிருந்த இளம்வழுதி வணிகர்கள் கூடி நின்று பேசுவதை பார்த்தவன் அவர்களை நோக்கி வந்த போது தான் மேற்கண்ட உரையாடல் கேட்க நேர்ந்தது."வணிகர்கள் அனைவருக்கும் வணக்கம். நான்தான் புதிய பாடிகாவல் அதிகாரி. தாங்கள் இத்தனை நேரம் கூறிய அனைத்தையும் கேட்டேன். வருத்தம் அடைய வேண்டாம். தங்களது இழப்பிற்கு உரிய இழப்பீடு  வேண்டி  அமைச்சர் பெருமக்களுக்கு உடனே செய்தி அனுப்புகிறேன். அதுமட்டுமின்றி இதற்கு காரணமான அத்தனை பேரும் உரிய தண்டனை பெறுவார்கள். அது எனது கடமை. நம்பிக்கையோடு இருங்கள் "என்றான் இளம்வழுதி. 

     "இப்பொழுதுதான் எங்களுக்கு போன உயிர் திரும்ப வந்தது. இத்தனை காலமாக என்ன செய்வது என்று தெரியாமல் ஏங்கிக் கிடந்த எங்களுக்கு, நல்லதொரு வழியை காட்டி உள்ளீர்கள். தங்களுக்கு மிக்க நன்றி" வணிகப் பெருமக்கள் அனைவரும் கரம் குவித்து தங்கள் நன்றியை தெரிவித்தார்கள். 

    "வணிகர்கள் தாங்கள் அனைவரும் தங்களது அங்காடியில் எத்தகைய இழப்பு ஏற்பட்டுள்ளது . அவற்றின் மதிப்பு எவ்வளவு? இவை குறித்த விவரங்கள் அனைத்தையும் குறிப்பிட்டு என்னிடம் தாருங்கள். நான் தங்களுக்கு வேண்டிய இழப்பீடு பெற்றுத் தருகிறேன்"

     "நல்லது ஐயா. எத்தனை சீக்கிரம் முடியுமோ, அத்தனை விரைவாக உங்களிடம் அந்த விவரங்களை கொண்டு வந்து சேர்ப்பது எனது கடமை " என்றார் அவர்களில் உயரமான வணிகர். 

    "தங்களது அங்காடிகளில் சந்தேகப்படும்படியான ஏதேனும் கிடைத்துள்ளதா? அல்லது இனிமேல் ஏதேனும் அப்படி கிடைத்தால் எனக்குத் தகவல் தாருங்கள்"

    "நான் அறிந்த வரையில் இதுவரை ஏதுமில்லை"என்றார் குட்டையான வணிகர். 

     "எனது அங்காடியில் குவியலாகக் கடந்த சாம்பலை கூட்டி அள்ளும்போது அங்கு தற்போது புழக்கத்தில் இல்லாத சோழநாராயணன் நாணயங்கள் சில கிடைத்தன." என்றார் அவர்களில் வயதான வணிகர். 

     "தங்களது அங்காடி எங்கே உள்ளது ஐயா"

    "நெல்லுக்கடை வீதியில் முகப்பு பகுதியில் உள்ள கடை தான் என்னுடையது"

    "அப்படியெனில், அங்கிருந்து தான் முதலில் நெருப்பு வைத்திருக்க வேண்டும். " என்றவன் தொடர்ந்து" தாங்கள் அந்த காசினை என்ன செய்தீர்கள்?"

     "அவை என்னிடம் உள்ளன ஐயா?"

     "அதனை என்னிடம் தர இயலுமா?"

     "பயன்பாட்டில் இல்லாத நாணயம் என்பதால் அதனை எனது இடையில் உள்ள பையில் பாதுகாப்பாக வைத்துள்ளேன்." என்றவர் தனது இடையில் உள்ள பையில் இருந்து சோழ நாராயணன் நாணயங்களை எடுத்து இளம்வழுதியிடம் கொடுத்தார். 

      சோழநாராயணன் நாணயங்கள் தீயில் விழுந்து கிடந்ததால் அதன் பொலிவு மறைந்து கருத்துப் போய் கிடந்தது. அதனை மேலும் கீழும் திருப்பிப் பார்த்துவிட்டு இடையில் உள்ள தனது பையில் பாதுகாப்பாக வைத்துக் கொண்டான் இளம்வழுதி. 

    "வேறு ஏதேனும் தங்களுக்கு கிடைத்ததா ஐயா?"

 ‌   "இல்லை ஐயா. இவை மட்டும்தான் கிடைத்தது"

   "நல்லது ஐயா. வேறு ஏதேனும்  தெரிந்தால் உடனே எனக்கு தகவல் அனுப்ப மறந்து விடாதீர்கள்" என அவர்களிடம் கூறிவிட்டு தனது பணியை தொடர்ந்தான். 

     அப்போது அவனை நோக்கி ஒருவன் பரபரப்பாக வந்து கொண்டிருந்தான்.

(தொடரும்..... அத்தியாயம் 30 ல்)