Friday, 28 February 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 84

🌾84. இறுதியில் வெற்றி யாருக்கு?🌾

       இளம்வழுதியின் கையிலிருந்து கணையாழியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த சதிகாரர்களின் முகத்தில் பெரும் திகில் படர்ந்து இருந்தது! சிலமடைந்த மண்டபத்தின் முன்பாக அவர்கள் மூட்டி இருந்த நெருப்பின் ஒளியில் பளீரென தெரிந்தது! அதனைக் கண்ட சூரனின் முகம் பேய் அடித்தது போல் மாறிவிட்டிருந்தது! 

       "இந்த கணையாழி நமது தலைவர் கோடியக்கரை மூர்க்கன் அவர்களுடையதுதான்! அவர் எப்போதும் தனது வலது கரத்தில் அணிந்திருப்பார்! எந்த நிலை வந்தாலும் இதனை மட்டும் எப்போதும் கழட்டி வைக்கவே மாட்டார்! அவருடன் இருந்த இத்தனை காலங்களில் நான் அறிவேன்! அந்தக் கணையாழி இவனது கையில் இருக்கிறது என்றால் இவன் கூறுவது உண்மையாகத்தான் இருக்க வேண்டும்! அப்படி என்றால் நமது தலைவர் கோடியக்கரை மூர்க்கன் உண்மையிலே இருந்து விட்டாரா? என்னால் நம்ப முடியவில்லை! அவரை அழிப்பது என்பது தன்னை எளிதான காரியம் அல்ல? மிகுந்த திறமைசாலி அவர்! நாம் அனைவருக்கும் நீண்ட காலமாக பயிற்சி அளித்து வந்தவர்! அவருடன் நாம் மேற்கொண்ட பயிற்சிகள் தான் இன்று சிறிதளவு வேணும் வாளைச் சுழட்டுகிறோம் என்றால் அதற்கு அவர்தான் காரணம்! அவர் மட்டும் இல்லை என்றால் நம்மால் இத்தனை எளிதாக வாள் பயிற்சியை பெற்றிருக்க முடியாது! எத்தனை லாபமாக நமக்கு கற்றுக்கொடுத்தார்! அவர் கற்றுக் கொடுத்தது இன்றும் என் கண் முன்னால் நிழலாய் தெரிகிறது! அப்படிப்பட்ட பெரும் மனிதர் இன்று நம்மிடையே இல்லையென இவன் கூறுவதை நம்பவும் முடியவில்லை! நம்பாமல் இருக்கவும் முடியவில்லை! இங்கு என்னதான் நடந்து கொண்டிருக்கிறது! ஒன்றுமே புரியவில்லை! இதற்கு ஒரு விடிவே கிடையாதா? இது என்ன சோதனையாக உள்ளது?" என அழுகையும் துடிப்புமாக சேர்ந்து கத்தி விட்டான் கூட்டத்தில் இருந்து ஒருவன்! 

        "அவனிடத்தில் கணையாழி இருப்பதால் மட்டும் அவன் கூறிய அனைத்தும் உண்மை என்று எவ்வாறு நம்புகிறீர்கள்? அவனிடம் உள்ள கணையாழி போலியாக கூட இருக்கலாமே! அப்படி இருக்கும் பொழுது, நீங்கள் எவ்வாறு அவன் கூறும் அத்தனையும் உண்மை என நம்புகிறீர்கள்! ஒரு வேளை நம்மிடையே பிளவினை உண்டாக்குவதற்காக இவன் ஏன் சதி செய்யக்கூடாது! இந்த கோணத்தில் ஏன் நீங்கள் நினைக்க மாட்டேங்கிறீர்கள்! எளிதாக எதிரி கூறுவதை நம்புமளவிற்கா நமது தலைவர் கோடியக்கரை மூர்க்கன் நம் அனைவருக்கும் பயிற்சி அளித்தார்! இவையெல்லாம் அவர் பார்க்க நேர்ந்தால் எத்தனை வருத்தப்படுவாரென நீங்கள் சிறிதளவு வேணும் யோசித்தது உண்டா? நீங்கள் செய்து கொண்டிருக்கும் காரியம் அனைத்தும் அவரது பெயருக்கும் புகழுக்கும் பெரும் கலங்கத்தை உண்டாக்க நினைக்கிறீர்கள்! இதுதான் நீங்கள் தலைவர்  மேல் வைத்திருக்கும் மரியாதையா? நினைக்கவே வெட்கமாக உள்ளது! என்னால் உங்களது இந்த நிலையை எண்ணி கவலைப்படத்தான் முடிகிறது! நல்ல வேளை இவை யாவற்றையும் தலைவர் கோடியக்கரை மூர்க்கன் பார்க்கவில்லை! " என நண்பர்களை பார்த்து கொதித்துப் போய் பேசினான் சூரன்! 

      "இன்னும் எத்தனை காலத்திற்கு இவர்களிடத்தில் பொய்யான நம்பிக்கையை கொடுத்துக் கொண்டிருப்பாய்? அதனால் விளையப் போகும் நண்மைதான் என்ன? எத்தனை தூரம் இவர்களிடத்தில் மீண்டும் மீண்டும் நீ கூறினாலும் மாண்டு போன கோடியக்கரை மூர்க்கன் திரும்ப வரப்போவதில்லை! அதுதான் உண்மை! அதனை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்! இல்லாத ஒருவனைப் பற்றி தேவையற்ற கதைகளைப் பேசுவது காலத்தையும் நேரத்தையும் விரயமாக்குவதற்கு தான் பயன்படுமே தவிர வேறு ஒன்றுக்கும் பயன் தராது! "என சதிகாரன் சூரனைப் பார்த்து கூறினான் இளம்வழுதி! 

       "அவன்தான் அத்தனை உறுதியாக கூறுகிறானே! அதில் உண்மை இல்லாமல் இருக்குமா? இனி நம் கதி என்ன? யாரை நம்பி  இனி பணியாற்றுவது? இருந்த ஒரே நம்பிக்கையும் இப்பொழுது செத்துவிட்டது! அப்படி இருக்க மேற்கொண்டு என்ன செய்வது? திக்கற்றுப் போய்விட்டோம்! நமது கதி அதோ கதிதான்!"என புலம்பத் தொடங்கி விட்டான் மாணிக்கம்!

       "ஏன் இப்படி கடந்து புலம்பி தவிக்கிறீர்கள்! நான் மீண்டும் கூறுகிறேன் இந்த சதிகாரன் கூறுவது அத்தனையும் பொய்! நம்ப தயார் இல்லை! தேவையில்லாமல் கவலைப்படுவதை விட்டு இவனை இந்நேரம் துண்டு துண்டாக வெட்டி வீசியிருந்தால் நமக்குள் இப்படி கலகம் வந்திருக்காது? இவையெல்லாம் நமக்குத் தேவைதானா? அதனால்தான் கூறுகிறேன் விரைந்து சென்று இவன் கதையை முடித்து விடுங்கள்! மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம்! ஏன் நிற்கிறீர்கள்? இன்னும் ஏன் தாமதம்? உங்கள் காதுகளில் நான் கூறுவது விழவில்லையா? அல்லது உங்களது வீரமெல்லாம் செத்துப் போய்விட்டதா? மரம் போல் நிற்காமல் ஏதாவது பேசுங்கள்!"என ஆத்திரத்தில் தனது நண்பர்களை பார்த்து கத்தினான் சூரன்! 

       சதிகாரர்கள் இளம்வழுதியின் கையில் இருந்த கணையாழியை வெறித்துப் பார்த்தவர்கள் தங்களது விழிகளை சூரனை நோக்கி திருப்பி இருந்தார்கள்! சூரனை வெறுப்போடு பார்த்தார்கள்! சதிகாரர்கள் முகத்தில் பெரும் குழப்பம் நிலவிக் கிடந்தது! அவை என்னவென்று செய்ய முடியாத தவிப்பில் உண்டானது! 

      அப்போது இளம்வழுதி, "என் மீது நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டாம்! ஆனால், உங்கள் தலைவன் கோடியக்கரை மூர்க்கன் கணையாழியை என்னிடம் உள்ளது! உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் இந்த கனையாழியை நீங்களே எடுத்து சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம், எனக்கொன்றும் கவலையில்லை, எத்தனை நேரம் வேண்டுமானாலும் சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்! ஆனால், முடிவு என்னவோ நான் கூறியதாகத்தான் இருக்கும்! அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை! ஏன் நிற்கிறீர்கள்.... வாருங்கள்....  வந்து எடுத்து சோதித்துப் பாருங்கள்! அங்கு ஏன் பார்க்கிறீர்கள்? உங்களுக்கு வேண்டிய உண்மை என்னிடம் உள்ளது! அவன் இடத்தில் பொய் மட்டும் தான் உள்ளது! யார் கூறுவது உண்மை என்று நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்! அதன் பின் உங்களுக்குள் ஒரு முடிவுக்கு வாருங்கள்! அவை எதுவாயினும் எனக்கு எந்த விதம் பயமும் இல்லை! பிறகு ஏன் நிற்கிறீர்கள் வாருங்கள்..." என சதிகாரர்களை நோக்கி கூறியவன் தனது கையில் இருந்த கணையாழியை சதிகாரர்களை நோக்கி வீசி எறிந்தான்! கூடி நின்று கொண்டிருந்த சதிகாரர்கள் காலடியில் கோடியக்கரை  மூர்க்கனுடைய கணையாழி கீழே விழுந்து சதிகாரர்களை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தது!

      கூட்டத்திலிருந்து ஒருவன் கீழே விழுந்து முறைத்துக் கொண்டிருந்த கோடியக்கரை மூர்க்கனின் கணையாழியை கையில் எடுத்தான்! கணையாழியை முன்னும் பின்னுமாக திருப்பித் திருப்பி பார்த்துக் கொண்டிருந்தவன் விழிகள் பெரும் பிரமையில் மூழ்கி இருந்தது! மற்ற சதிகாரர்களும் அவனை நோக்கி வந்து கணையாழியை வாங்கி பார்த்தவர்கள் மௌனத்தை மட்டுமே மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார்கள்! திடீரென அனைவரும் அமைதியாகிவிட்டதைத் கண்ட சூரன் முகம் பெரும் சோகத்தில் தவித்துக் கொண்டிருந்தது! அடுத்து அங்கு என்ன நடைபெறும் என தெரியாமல் குழம்பி போய் கிடந்தான்! அவனது வதனம் வியர்வை மழையில் நனைந்து விட்டிருந்தது! பெரும் வனம் சூழ்ந்த பகுதியில் வீசிக் கொண்டிருக்கும் அத்தனை காற்றிலும் அவனது வதனம் வியர்த்துப் போய் இருப்பதை கண்ட சதிகாரர்கள் விழிகள் எரிமலை வெடித்து வெளியேறிக் கொண்டிருந்த நிலையில் இருந்தன!

      கூட்டத்தில் இருந்தவர்களிடம் இருந்து கணையாழியை கையில் வாங்கிய காத்தவராயன் விழிகளால் நம்ப முடியாமல் மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்த்தவன் பெரும் சோகத்தில் மூழ்கி விட்டான்! அவனது முகம் வெளிறிப் போய் இருந்தது! அவனால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை! மனம் கடந்து தவியாய் தவித்துக் கொண்டிருந்தது! 

       "என்ன காத்தவராயா? நீயாவது இப்போது உண்மையை கூறிவிடு! இந்த கணையாழி நமது தலைவர் கோடியக்கரை மூர்க்கனுடையது தானே! இதற்கு என்ன சொல்லப் போகிறாய்? இல்லை நீயும் அவருடைய கணையாழி இல்லை என்று மட்டும் பொய் கூறி விடாதே! அதன் பின் நடப்பதை யாராலும் தடுக்க முடியாது! நீங்கள் இருவரும் சேர்ந்து கொண்டு எத்தனை காலத்திற்கு எங்களை ஏமாற்றலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தீர்கள்? நீங்கள் செய்வது உங்களுக்கே சரியெனப்படுகிறதா? இதை தானா இத்தனை நாளும் நீங்கள் எங்களிடம் காட்டிவந்த நடிப்பு? அத்தனையும் பொய்யாய் போனதும் இப்படி வார்த்தைகள் தொண்டையில் அடைத்துக் கொண்டு கிடப்பதிலிருந்தே தெரிகிறது! உங்களுக்கே இவையெல்லாம் சரியாகப்படுகிறதா? நமது கூட்டத்தின் நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குழி தோண்டி புதைத்து விட்டீர்கள்! சண்டாளப் பாவிகளா...! இதனால் நமக்கு உண்டாக இருக்கும் பெரும் கேடு இதற்கு யார் பொறுப்பேற்பது? இனி யார் நமக்கெல்லாம் வழிகாட்டுவது? இப்படி நிர்கதியாகக் கொண்டுவந்து எங்கள் அனைவரையும் நிறுத்தி விட்டீர்களே? உங்களை எல்லாம் நம்பி வந்ததற்கு இதுதான் நீங்கள் செய்யும் கைமாறா? நாங்கள் உங்களுக்கு அப்படி என்ன பாவம் செய்துவிட்டோம்? நீங்கள் கூறிய அத்தனையும் உண்மை என்று நம்பி, இத்தனை காலமாக உங்களுக்கு உண்மையாக தானே இருந்தோம்! அப்படி இருந்தும் எங்களை ஏன் தொடர்ந்து வஞ்சித்து வருகிறீர்கள்? இதனால் உங்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன? பாழாய் போன சத்தியத்தை செய்துவிட்டு, இப்போது கிடந்து தவிக்க வேண்டி இருக்கிறது! இவையெல்லாம் எங்களுக்குத் தேவை தான் போலும் " படபடவென்று கொட்டித் தீர்த்தான் மாணிக்கம்!

       "நடந்து கொண்டிருக்கும் அத்தனைக்கும், இனி நடக்கவிருக்கும் இத்தனைக்கும் இவர்கள் இருவரும் மட்டுமே பொறுப்பாக இருக்க முடியும்! அதற்காக நாம் ஏன் பலியாக வேண்டும்! இனியும் இவர்களை நம்பி இங்கு இருப்பது நமக்கு நாமே சவக்குழி வெட்டிப் படுத்துக் கொள்வதற்கு சமமானது! அத்தகைய வேலையை நாம் செய்தல் கூடாது! இதனால் எத்தனை பெரிய துன்பம் வந்தாலும் பார்த்துவிட வேண்டியதுதான்! அதற்காக தெரிந்தே போய் பெரும் குழியில் நாமாக விழுவது எனக்கு என்னவோ சரியாக படவில்லை!" எனது கூட்டத்தில் இருந்த மற்றொருவன் கூறினான்!

       "அடேய் முட்டாள்களே! இந்த சதிகாரன் உங்களை எல்லாம் நன்றாக குழப்பி விட்டான்! அங்கு பாருங்கள்! அவன் எத்தனை துணிச்சலாக நின்று கொண்டிருக்கிறான்! அவனை அழிப்பதை விட்டு விட்டு தேவையில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்! முதலில் அவன் கதையை முடியுங்கள்! மற்றவற்றை பிறகு பேசிக் கொள்ளலாம்" என சதிகாரர்களை பார்த்து கூறினான் சூரன்!

      "இன்னும் இவன் நம்மளை முட்டாள் என நினைத்து விட்டான் போலும்! இவன் கூறும் எதளையும் கேட்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை! நமக்கு உண்மையில்லாத துரோகி இவன்! இவனிடத்தில் இனி என்ன பேச்சு வேண்டி கிடக்கிறது? நாம் நம் வழியைப் பார்த்து சென்றுவிடலாம்! இதுதான்  சரியாக இருக்கும் அதனை விடுத்து, இனியும் இவனுடன் இருந்தோம் என்றால் நமக்கு நாமே சவக்குழி  வெட்டிய கதை தான் ஆகும்! அப்படியொரு நிலை நமக்குத் தேவையில்லை! இதனால் வரையில் இந்த கூட்டத்தில் இருந்ததற்கு கிடைத்த பலன் என்ன? நமது நண்பர்கள் பல பேர் கொடூரமான முறையில் இறந்து போனதுதான் மிச்சம்! அவர்களது குடும்பம் இன்று நிர்கதியாக உள்ளது! நாளை நமது நிலையும் அதுதான்! அதனை நோக்கித்தான் இதுநாள் வரையில் நம்மை செயல்படுத்திக் கொண்டிருந்தான்! இப்பொழுதும் அதற்குள் தான் நம்மை தள்ளிவிடப் பார்க்கிறான்! இப்பொழுதும் நாம் விழித்துக் கொள்ளவில்லை என்றால் நம்மை காப்பாற்ற யாராலும் இயலாது! இன்னும் என்ன தயக்கம்? வாருங்கள்... புறப்படலாம்....!" என தனது நண்பர்களிடம் கூறினான் மாணிக்கம்!

      திடீரென அது நடந்து விட்டது! 

(தொடரும்...... அத்தியாயம் 85 ல்)
     



இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 83

 

🌾83. சதிகாரர்களுக்குள் இளம்வழுதியின் சடுகுடு🌾

      கோபத்தில் இளம்வழுதியை எரித்து விடுவது போல் சதிகாரர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! 
       
       "கணநேரத்தில் ஐந்து பேரை அடித்து சாய்த்து விட்டானே! இன்னும் தாமதித்தால் நமக்கும் அந்த நிலை தானோ? இவனை விட்டு வைக்கக் கூடாது, நமது நண்பர்களுக்கு ஏற்பட்ட விளைவுகளுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்! அப்போதுதான் இவனுக்கு சரியான பாடம் கற்பித்த மாதிரி இருக்கும்! இவனுக்கு வேறு மாதிரியான தண்டனை தான் கொடுக்க வேண்டும்! என்ன தண்டனை கொடுக்கலாம்!  ம்ம்ம் இப்படி செய்துவிடலாம்! அதுதான் சரியாக இருக்கும்!" என பலவாறான யோசனையிலிருந்த சூரன் தனது நண்பர்களைப் பார்த்து " இவனை துண்டு துண்டாக வெட்டி இங்கு உள்ள நரிகளுக்கும் ஓநாய்களுக்கும் இரையாக போட்டு விட வேண்டும்! அப்போதுதான் நமது நண்பர்களிடம் இவன் நடந்து கொண்டதற்கு சரியான பதிலடியாக இருக்கும்! இவனை வெட்டி வீசுங்கள்! தாமதிக்க வேண்டாம்!" என்றான்! 

        கரகரவென தங்களது வாள்களை சுழற்றிக்கொண்டு இளம்வழுதியைச் சுற்றி வளைத்தவர்கள் அவனது சமீபமாக நெருங்கி விட்டிருந்தார்கள்! சதிகாரர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் வெகு கவனமாக பார்த்துக் கொண்டிருந்தான்! வழக்கம்போல் அவர்களை தனது அருகில் நெருங்க விட்டு வேடிக்கை பார்த்தவன், தனது வாளை உருவிக்கொண்டு அவர்களது தாக்குதலுக்கு ஏற்றார் போல் பதில் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருந்தான்! சதிகாரர்கள் எத்தனை தான் வேகமாகவும் பலமாகவும் அவன் மீது தாக்கிய போதும் சிறிதும் கவலைப்படாமல் எதிர்கொண்டு தாக்கிக் கொண்டிருந்தான்! ஒரே நேரத்தில் பத்துப் பேர் தாக்கிய போதும் அவர்களுக்கு இணையாக தனது வாளை சுழற்றிக் கொண்டிருந்தான்! சதிகாரர்கள் எத்தனை தான் முயன்ற போதும் அவனது உடலில் சிறு கீறல் கூட உண்டாக முடியவில்லை! "இது என்ன சோதனை! இத்தனை நேரம் ஒரு மனிதனால் பத்துப் பேரின் தாக்குதலை எதிர்கொள்ள முடியுமா? எத்தனை தான் முயற்சி செய்தாலும் சிறிதும் பலனளிக்கவில்லையே! எத்தனை லாபகமாக வாளைச் சுழற்றுகிறான்! இந்தத் தடியர்களும் தண்டத்திற்கு சண்டையிடுகிறார்கள்! அவனது தாக்குதலின் நுட்பம் சிறிதும் இவர்களுக்கு இல்லை! அவை மட்டும் இருந்தால் இந்நேரம் இவனது உடல் துண்டு துண்டாக மண்ணில் விழுந்திருக்கும்! அப்படி இருந்தும் இவன் ஏன் நமது நண்பர்களின் உடலில் சிறிதும் காயம் உண்டாகாமல் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறான்! இவனது திட்டம் தான் என்ன? வேறு ஏதோ திட்டம் போடுகிறான்! அது என்னவென்று தான் தெரியவில்லை! யாதாக இருக்கும்? அடடே இதுவரை ஒன்றை கவனிக்கவில்லையே! நமது நண்பர்கள் தான் அவனை நோக்கி செல்கிறார்கள்! ஆனால் இளம்வழுதி அவன் நின்ற இடத்தை விட்டு சிறிதும் நகராமல் வாளைச் சுழற்றிக் கொண்டிருக்கிறானே! சிறிதும் சோர்வுவடைவதாகத் தெரியவில்லையே! எத்தனை நுட்பமான தாக்குதல் இது! இவன் மட்டும் நம்மோடு இருந்திருந்தால் நம்மை எவராலும் வெற்றி கொள்ள இயலாது! நமக்கு எதிராக அல்லவா வாளை உயர்த்திக் கொண்டிருக்கிறான்! அதுதான் பெரிய சாபக்கேடாக இருக்கிறது! இப்படியே சென்று கொண்டிருந்தால் இன்னும் சிறிது நேரத்தில் நமது நண்பர்கள் சோர்வுற்று விடுவார்களே! அன்பின் வெற்றி அவன் கையில் சென்று விடுமே! அப்படி மட்டும் நடந்து விடக்கூடாது! அதனை எப்படியாவது தடுத்துவிட வேண்டும்!" என பலமான யோசனைகளில் இளம்வழுதியின் தாக்குதலை எண்ணி வியந்தும் குழம்பியும் போய் பார்த்துக் கொண்டிருந்தான் சூரன்!

      "நீங்கள் எல்லாம் யாரின் உத்தரவிற்காக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறீர்களோ அவன் இப்போது உயிரோடு இல்லை! அதே நிலை உங்களுக்கும் ஏற்பட வேண்டுமென்றால் தொடர்ந்து சண்டையிடுங்கள்! உங்களுக்கும் அதனை வழங்குவதற்கு தயாராக உள்ளேன்!"என சதிகாரர்களை பார்த்து முதல் முறையாக பேசியதோடு இல்லாமல் பெறும் வெடியை அவர்களிடத்தில் வீசி இருந்தான்! 

      இதுவரை ஏதும் பேசாமல் இருந்தவன் திடீரென பேசியதோடு அல்லாமல் அவன் கூறியது விசித்திரமாக உள்ளதே! உண்மையில் அப்படி நடந்திருக்குமா? இல்லை வேண்டுமென்றே நமது கவனத்தை திசை திருப்புகிறானா? கேள்வி அங்கு இளம்வழுதியோடு சண்டையிட்டுக் கொண்டிருந்த அத்தனை சதிகாரர்கள் முகத்திலும் எழுதி ஒட்டி இருந்தது! 

      "உங்களுக்கு நான் கூறுவதில் நம்பிக்கை இல்லை? அப்படித்தானே! சரி கேளுங்கள்! உங்களது தலைவன் கோடியக் கரை மூர்க்கன் இப்போது உயிரோடு இல்லை! அவனை அழித்துவிட்டு தான் கங்கைகொண்ட சோழபுரம் செல்கிறேன்! " என சதிகாரர்களை பார்த்து கூறிவிட்டு அவர்களது முகத்தில் ஓடும் எண்ணங்களை படிக்க முயன்றான் இளம்வழுதி! 

      "அவன் கூறுவதை நம்பாதீர்கள்! அவன் ஏதோ திட்டத்தோடு பேசிக் கொண்டிருக்கிறான்! அவன் கூறும் அத்தனையும் நடந்திருப்பதற்கு சாத்தியமே இல்லை! எவராலும் நமது தலைவர் கோடியக்கரை மூர்க்கனை நெருங்குவது என்பது இயலாத காரியம்!  வேண்டுமென்றை நம்மிடம் குழப்பம் விளைவிக்க முயல்கிறான்!" என கூச்சல் போட்டான் சூரன்! 

       "இவன் கூறுவது ஏன் உண்மையாக இருக்கக் கூடாது? நமது தலைவரை இதுவரை நம்மை தவிர வேறு யாரும் சந்தித்தது கிடையாது! இப்படி இருக்க அவர் குறித்து இத்தனை தைரியமாக இவன் கூறுகிறான் என்றால் அதில் ஏதோ உண்மை இருக்க வேண்டும்! எனக்கென்னவோ இவன் கூறுவதில் நியாயம் இருப்பதாக தெரிகிறது!"என்றான் கூட்டத்தில் இருந்த ஒருவன்! 

       "அடேய்! மூடனே! அவன் வேண்டுமென்றே நம்மிடம் குழப்பத்தை உருவாக்க முயல்கிறான்! அதற்கு நீங்கள் பலியாகி விடாதீர்கள்! அதைத்தானே படித்து படித்து கூறுகிறேன்! அப்படி இருந்தும் அவன் கூறுவதை ஏன் நம்புகிறீர்கள்? உங்களுக்கு புத்தி கெட்டுவிட்டதா? யாரோ ஒருவன் கூறுவதை ஏன் நம்ப வேண்டும்?"என கடிந்து கொண்டான் சூரன்! 

       "நான் கூறுவதை கவனியுங்கள்! உங்களிடத்தில் பொய்யுரைக்கவில்லை! உண்மையைத்தான் கூறினேன்! உங்களிடம் தவறான செய்தியை கூறுவதால் எனக்கு என்ன லாபம்? "என சதிகாரர்களை பார்த்து கூறினான் இளம்வழுதி! 

      "அவன் ஏதேதோ பிதற்றுகிறான்! அவன் பேச்சை நம்பாமல், சீக்கிரமாக அவனது கதையை முடியுங்கள்!"என கோபத்தில் கத்தினான் சூரன்!

        "நான் எங்கும் போய்விடமாட்டேன்! என்னை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தண்டித்துக் கொள்ளலாம்! நீங்கள் நான் கூறியதைப் பற்றி உங்களுக்குள் ஒரு முடிவுக்கு வாருங்கள்! நீங்களும் மிகவும் சோர்ந்து உள்ளீர்கள்! சிறிது நேரம் கழித்து நமது சண்டையை தொடரலாம்"என சதிகாரர்களை பார்த்து கூறியவன் மருத மரத்தை நோக்கி சென்றான் இளம்வழுதி! 

        அதுவரையில் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்த சதிகாரர்கள் இளம்வழுதியின் பேச்சைக் கேட்டதும் சண்டையை நிறுத்தி இருந்தார்கள்! 

        "யாரோ ஒருவன் கூறுவதைக் கேட்டு சண்டையை ஏன் நிறுத்தினீர்கள்? அவனை வெட்டித் துண்டு துண்டாக்கி நரிகளுக்கு வீசுங்கள்! அதை விடுத்து ஏன் சும்மா நின்று கொண்டிருக்கிறீர்கள்?"என மீண்டும் அவர்களை பார்த்து கத்தினான் சூரன்!

       "நாம் இத்தனை பேர் இருக்கும் பொழுது அவன் எங்கு போய் விடுவான்? அவன் கூறியது உண்மையா? அது தெரிந்தாக வேண்டும்! வெகு காலத்திற்கு எதையும் மறைத்து வைக்க இயலாது! நடந்தது என்னவென்று எங்களுக்கு தெரிந்தாக வேண்டும்?"என்றான் மாணிக்கம்! 

      "அவன் கூறுவது எதுவும் உண்மையில்லை! இத்தனை காலமாக என்னுடன் உள்ளீர்கள்? அப்படி இருந்தும் யாரோ ஒருவன் கூறுவதை நம்பி என்னிடமே கேள்வி கேட்கிறீர்கள்? நம்மைப் பற்றி அவன் என்ன நினைப்பான்? நமக்குள்ளே கலகத்தை உண்டாக்கி விட்டான் பார்த்தீர்களா? இதன் மூலம் நமக்குள் விரிசலை உண்டாக்கி அதில் குளிர் காய பார்க்கிறான் எதிரி! அதற்கு நீங்கள் அனைவரும் இப்போது பலியாகி விட்டீர்கள்! "என சூரன் தனது நண்பர்களிடம் கூறினான்!

      "கூறுவது யாராக இருந்தாலும் உண்மை என்னவென்று உணர்ந்தால் அத்தனையும் வெட்ட வெளிச்சமாய் விடப் போகிறது! அதை விடுத்து தொடர்ந்து அதனை மறைப்பானேன்! அதனால் நமக்குள் மீண்டும் கலகம் தானே உண்டாகும் நடைபெறாமல் இருக்க வேண்டுமானால் எங்களுக்கு இப்போது உண்மை தெரிந்தாக வேண்டும்"என்றான் மாணிக்கம்!

        "நான்தான் படித்துப் படித்து கூறுகிறேனே! என் மீது நம்பிக்கை வையுங்கள்! எதிரி கூறியது எதுவும் உண்மையில்லை! அப்படி இருக்கும் பொழுது நான் ஏன் உங்களிடம் பொய்யுரைக்க வேண்டும்? அதனால் எனக்கு என்ன பலன்? "என்றான் சூரன்! 

       அவன் கூறிய உண்மையினால் சதிகாரர்கள் தங்களுக்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் இளம்வழுதி! இதைத்தானே எதிர்பார்த்தேன்! அவை திருப்திகரமாக நடந்தேறிக் கொண்டுள்ளது! இவை இன்னும் எத்தனை தூரம் செல்கிறது என்று பார்ப்போம் என நினைத்தான் போலும்! 

      "தலைவர் கோடியக்கரை மூர்க்கன் அவர்களிடமிருந்து உன்னிடம் தானே எப்போதும் தகவல்கள் வந்து சேரும்! அப்படி என்றால் உனக்கு தானே அனைத்தும் தெரியும்! நீயே இப்படி மறைத்தால் எப்படி? நாங்கள் யாரை நம்பி இங்கு உள்ளோம் என்பதனை மறந்து விட்டாயா? எத்தனையோ இடையறுகளுக்கு இடையில் தொடர்ந்து நாம் பணியாற்றிக் கொண்டு உள்ளோம். அதற்கெல்லாம் காரணம் நமக்கிடையே எந்தவிதமான ஒளிவும் மறைவு இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருந்தது என நினைத்தோம்! ஆனால் அதற்கு மாறாகத்தான்  நடைபெற்றுக் கொண்டிருந்திருக்கிறது! என இப்பொழுதுதான் எங்களுக்கு தெரிகிறது! உண்மை எதுவாயினும் எங்களுக்கு தெரிந்தாக வேண்டும்! இதைத்தானே நாங்கள் மீண்டும் மீண்டும் கேட்கிறோம்! அதை விடுத்து மீண்டும் மீண்டும் நீ பொய் கூறினால் எப்படி? எங்களால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை! நடந்த உண்மையை எங்களுக்கு இப்போதே கூறிவிடு! அதுதான் நாம் அனைவருக்கும் நன்மை பயக்கும்!" என சூரனைப் பார்த்து கத்தத் தொடங்கி விட்டான் மாணிக்கம்! 

       "அடேய் மாணிக்கம்! என்னிடமே உன் வீரத்தைக் காட்டுகிறாயா? யாரோ ஒருவன் கூறினான் என்பதற்காக என்னிடம் கோபத்தைக் காட்டுகிறாயா? இதனால் உண்டாகும் விபரீதம் உனக்கு தெரியுமல்லவா? அப்படி இருந்தும் என்னிடம் இப்படி பேச உனக்கு எப்படி தைரியம் வந்தது? இவையெல்லாம் நன்மை பயக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறாயா? எது பேசுவதாயினும் யோசித்துப் பேசிவிடு! பின்னால் அதனை நினைத்து வருந்தும்படி ஆகிவிடும்!"என மாணிக்கத்தைப் பார்த்து எச்சரித்தான் சூரன்!

      "ஆமாம்! சூரன் சொல்வதிலும் உண்மை இருக்க வேண்டும்! யாரோ ஒருவனை நம்பி எதற்காக நமக்குள் சண்டை இட வேண்டும்! இதனால் நமக்குள் பிரிவினைதானே ஏற்படும்? அதைத்தான் எதிரி சாதித்து உள்ளான்! அதற்கு நாம் இடம் தருதல் கூடாது!"என கூட்டத்தில் இருந்து ஒருவன் கூறினான்!

      அதன் பின் சதிகாரர்கள் ஒன்றாக இணைந்து இளம்வழுதியை நோக்கி கோபத்தோடு திரும்பி இருந்தார்கள்! இதுவரையில் தங்களுக்குள் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் சட்டென தன்னை நோக்கி திரும்பியதும் இளம்வழுதி தன் இடைக் கச்சையிலிருந்து  ஏதோ ஒன்று எடுத்துக்காட்டினான்! அதன் பின்னர் சதிகாரர்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை! அவர்களது விழிகள் பெரும் கோபத்தோடு சூரனை நோக்கி திரும்பியிருந்தன! 

(தொடரும்....... அத்தியாயம் 84 ல்)


இராஜமோகினி - யாழிசை செல்வா அத்தியாயம் 82

🌾82. சதிகாரர்களுக்கிடையே வாக்குவாதம்🌾

       பேசிப் பேசியே கலைத்துப் போயிருந்த சதிகாரர்கள் சுவையான அயிரை மீன் கருவாட்டு குழம்பு ருசித்து சாப்பிட்டு விட்டிருந்தார்கள்! 

     "அடடே என்ன ருசி! அயிரை மீன் கருவாட்டுக் குழம்பின் ருசியே தனி தான்!"என்றான் காத்தவராயன்! 

      "ஆமாம் நீ கூறுவது சரிதான்! இப்படிப்பட்ட குழம்பைச் சாப்பிட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது! இன்று எல்லோரும் மிக திருப்தியாக சாப்பிட்டார்கள்!"என்றான் சூரன்! 

      அப்போது காத்தவராயன் விழிகளில் நீர் தழும்பிக் கொண்டிருந்தது! 

      "என்னவாயிற்று காத்தவராயா? ஏன் அழுகிறாய்?" என கூறிக்கொண்டே காத்தவராயன் அருகே சென்றான் சூரன்! அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் அங்கு வந்து சூழ்ந்து கொண்டார்கள்! 

       "என் அம்மாவின் கை பக்குவம் எனது ஞாபகத்திற்கு வந்துவிட்டது! மண்பானையில் அத்தனை சுவையாக அயிரை மீன் கருவாட்டுக் குழம்பு வைத்து கொடுப்பார்! அவரது மறைவுக்கு பின்பு இப்படி ஒரு குழம்பை சாப்பிட்டு வெகு நாளாகவிட்டது!" தனது விழிகளை துடைத்துக் கொண்டு இருந்தான் காத்தவராயன்! 

     "சரி விடு காத்தவராயா! இங்கு உள்ள ஒவ்வொருவருக்கும் இதேபோல் பல்வேறு நினைவுகள் உள்ளன! அதைப்பற்றிய ஞாபகத்தை கிளறி விட்டாய்! இங்கு உள்ள அனைவரும் அதில் இப்போதே மூழ்கி விட்டார்கள்! " என்றான் சூரன்! 

      "அதற்கேன் இத்தனை சலிப்பாக பேசுகிறாய்! எல்லோருக்கும் இத்தகைய உணர்வு ஏற்படுவது இயல்பு தானே! நாம் என்ன உயிரற்ற பொருளா என்ன? அத்தனையும் எளிதாக மறந்து விடுவதற்கு? கடமை முக்கியம் தான், அதற்காக அனைத்தையும் துடைத்தெரிந்து விட முடியாது! இங்கு இத்தனை தூரம் சிரமப்படுவதற்கு காரணமே அங்கு தூரத்தில் நமக்காக காத்திருக்கும் குடும்பத்திற்காகத்தான் என்பதை நீ மறந்து விடக்கூடாது! அவர்கள் இல்லையேல் இந்த பணியை எதற்காக? யாருக்காக செய்ய வேண்டும்? என எங்களுக்குள் கேள்வி எழுகிறது?"என மிக ஆவேசத்துடன் பேசினான் மாணிக்கம்! 

      "அடடே! நான் அப்படி என்ன கூறிவிட்டேன்! தேவையில்லாமல் உணர்ச்சி வசப்படக் கூடாது என்று கூறியது குற்றமா? அப்படி குற்றமாக இருந்தால் இருந்துவிட்டு போகட்டும்! எனக்கு தேவையெல்லாம் கடமையில் கண்ணாயிருக்க வேண்டும்! அதுதான் மிக மிக முக்கியம்! அதற்காக யார் என்ன நினைத்தாலும் எனக்கு கவலை இல்லை!"என எடுத்தெறிந்து பேசினான் சூரன்! 

      "சூரா.... நீ இவ்வாறு பேசுவது சரியில்லை! இப்படியே தொடர்ந்து நீ பேசிக் கொண்டிருந்தால் நமக்குள் கருத்து வேறுபாடு உருவாகிவிடும். எனவே தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது உனக்கு நல்லது! நாங்கள் யாரும் தேசத்திற்காக பாடுபட வரவில்லை! நாங்கள் ஈட்டும் பொருள் அனைத்தும் எங்கள் வாழ்விற்கும், எங்கள் குடும்பத்தின் வளர்ச்சிக்கும் பயன்பெடுமே என்ற எண்ணத்தில் தான் இங்கு வந்து இத்தனை சிரமப்படுகிறோம்! இதனைத் தவிர்த்து வேறு எந்தக் காரணத்திற்காகவும் நாங்கள் வந்து இங்கு பணியாற்ற வில்லை! இனி இதுபோல் தேவையின்றி பேசிக் கொண்டிருப்பது நல்லதாகப் படவில்லை!" என ஒவ்வொரு வார்த்தையிலும் அனல் பறக்க பேசிக் கொண்டிருந்தான் மாணிக்கம்!

     "சரி சரி! உங்களது விருப்பம் அதுவானால் இருந்துவிட்டு போகட்டும்! அதற்காக தேவை இல்லாமல் குதிக்க வேண்டாம்! எனக்கு தேவை காரியம் நடந்தால் போதும்! நீங்கள் என்னவோ செய்து கொள்ளுங்கள்! அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை" என வேண்டா வெறுப்பாக கூறினான் சூரன்! 

      "நன்றாக இருக்கிறது உனது பேச்சு! இப்பொழுதுதான் உனது சுயரூபம் எங்களுக்கு நன்கு தெரிகிறது! இத்தனை காலமாக உன்னுடன் பணியாற்றியதை யெண்ணி வெட்கமாகத்தான் உள்ளது! என்ன செய்வது பாழாய்ப் போன சத்தியத்தைச் செய்து விட்டோம்! இனி இவற்றிலிருந்து பின்வாங்குதல் என்பது இயலாத காரியம்! அதற்காக அனைத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்!"எனக் கூறினான் மாணிக்கம்! 

     சதிகாரர்கள் பேசிக் கொண்டிருந்ததை விழிகளை மூடி மரத்தில் சாய்ந்தபடி கேட்டுக் கொண்டிருந்த இளம்வழுதி இனியும் பொறுமை காக்க வேண்டாம்! இப்பொழுது சதிகாரர்கள் முன்பு தோன்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என நினைத்தான் போலும்! விழிகளை மெல்ல திறந்தவன் கை கால்களை உதறிக்கொண்டு எழுந்து உடலில் சோர்வினை போக்கிக் கொண்டான் இளம்வழுதி! 

      அதுவரையில் மருத மரத்தில் மயக்கத்தில் சாய்ந்து கிடந்தவன் திடீரென எழுந்ததும் காரசாரமாக பேசிக் கொண்டிருந்த சதிகாரர்கள் அவனை நோக்கி தங்கள் விழிகளைத் திருப்பி இருந்தார்கள்! 

      "அடடே! ஒரு வழியாக விழித்துக் கொண்டாயா? எங்கே அப்படியே முழிக்காமல் சிவலோகப் பதவி அடைந்து விடுவாயோ என்று நினைத்து விட்டோம்?"என நக்கலாக கூறிச் சிரித்தான் சூரன்! 

       "நானும் கூட அப்படித்தான் நினைத்தேன்! ஒரு வழியாக ஒழித்து கட்டி விட்டோம்! நமக்கு இருந்த தொல்லை ஒழிந்தது! இனி நமது வேலையைப் பார்க்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தோம்! என்னடா வென்றால் திடீரென விழிகளை திறந்து பார்த்துக் கொண்டிருக்கிறாய்! உனக்கு போகாத காலம் தான்!" என்றான் காத்தவராயன்! 

      "உறக்கத்திலேயே உயிரை விட்டிருந்தால் வலியில்லாமல் போயிருக்கும்! இப்படி அநியாயமாக முழித்துக் கொண்டு எங்கள் கரத்தால் மடியப்போகிறாய் என நினைக்கும் பொழுது தான் உன்னை எண்ணி பாவமாக உள்ளது!"என இளம் வழுதியை பார்த்து கூறினான் சூரன்!

     "அவனிடம் என்ன வெட்டிக்கதை பேச வேண்டி இருக்கிறது? அவனிடம் வேண்டிய தகவலை பெற்று விட்டு அவன் கதையை முடிப்பதை விட்டு வீணாக ஏன் கதைத்துக் கொண்டு உள்ளீர்கள்? ஆக வேண்டியதை பாருங்கள்! நேரத்தை வீணாக்காமல் விரைந்து செயலாற்றுங்கள்!"என தனது நண்பர்களை பார்த்து கூறினான் காத்தவராயன்! 

      "அடேய்! நீ எதற்காக கங்கைகொண்ட சோழபுரம் செல்கிறாய்! மரியாதையாக அத்தனை உண்மைகளையும் மள மளவென்று ஒப்பித்துவிடு பார்ப்போம்! அதுதான் உனக்கு மிகவும் நல்லது!"என இளம்வொழுதியைப் பார்த்து மிரட்டலோடு கூறினான் சூரன்! 

      சதிகாரர்கள் கூறிய எதனையும் காதில் போட்டுக் கொள்ளாமல் மௌன சாமியாராய் இருந்தான் இளம்வழுதி! அவனது விழிகள் சதிகாரர்களின் ஒவ்வொரு அசைவையும் கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்தன! மேலும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை ஒருவாறாக யோசித்து விட்டிருந்தான்! அதனை செயல்படுத்த வேண்டிய வேளைக்காக காத்துக் கொண்டிருந்தான் போலும்! 

       "அடேய்! மௌனச் சாமியாராய் இன்னும் எத்தனை காலத்திற்கு நடிக்கப் போகிறாய்? நீ யார் என்பது எங்களுக்கு நன்கு தெரியும்? அதனால் தேவையற்ற நடிப்பை கைவிட்டு அத்தனை உண்மைகளையும் மரியாதையாக கூறிவிடு! அதுதான் உனக்கு நன்மை பயக்கும்!" என மீண்டும் இளம்வழுதியை மிரட்டிக் கேட்டான் சூரன்!

       "இவனிடம் இப்படி எல்லாம் கேட்டால் பதில் வராது! அவனைப் பிடித்து அங்குள்ள மருத மரத்தில் பிணைத்து விடுங்கள்! அதன் பின் சாட்டையால் நாலு அடி கொடுத்தால் அத்தனையும் தானாகவே கக்கி விடப் போகிறான்! அதை விடுத்து தேவையில்லாமல் அவனிடம் ஏன் நேரத்தை விரயமாக்குகிறீர்கள்?" என தனது நண்பர்களைப் பார்த்துக் கூறினான் காத்தவராயன்!

        "பிறகென்ன? அதன்படியே செய்து விடுவோம்! அதுதான் எனக்கும் சரி எனப்படுகிறது! இவனைப் பார்த்தால் அத்தனை எளிதில் எதற்கும் பணிந்து போகும் ஆள் போல் தெரியவில்லை! நமது கைவரிசையைக் காட்டினால் தான் நமக்கு வேண்டிய தகவல் கிடைக்கும்! அதற்காக நாம் எந்த எல்லைக்கும் போவோம் என்ற உண்மை பாவம் இவனுக்கு தெரியாது போலும்! நம்மிடம் வந்து வகையாக மாட்டிக் கொண்டான்! இவனுக்கு வேண்டிய மட்டிலும் புத்தி புகட்ட வேண்டியது நமது கடமை! அதனை இங்கு சிறப்பாக செய்து விட வேண்டியதுதான்! அதற்காகத்தான் காத்துக் கொண்டுள்ளான் போலும்! ம்ம்ம் ஆகட்டும்"என தனது நண்பர்களை பார்த்து உறுமினான் சூரன்! 

          சதிகாரர்கள்  ஐந்து பேர் இளம்வழுதியை நோக்கி நகர்ந்து விட்டிருந்தார்கள்! அதுவரையில் சதிகாரர்கள் பேசிக் கொண்டிருந்த அத்தனையும் காதில் வாங்கிக் கொண்டாலும் அடுத்தடுத்து தான் செய்ய வேண்டியவற்றை ஏற்கனவே திட்டமிட்டு இருந்ததால் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்தவர்களை எதிர்கொள்ள தயாரானான் இளம்வழுதி! 

       ஏதோ காட்டில் மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகளை பிடிப்பதற்காக செல்லும் நபர்கள் போல் சதிகாரர்கள் இளம்வழுதியை நோக்கி வெறும் கையோடு அவனை சுற்றி வளைத்து இருந்தார்கள்! அவர்கள் மொத்தமாக அவன் மீது விழுந்து அமுக்கிவிட எண்ணினார்கள் போலும்! அவர்களது செயலை முன்பே கணித்து விட்டிருந்த இளம்வழுதி தனது இடது பக்கம் வந்த இரண்டு சதிகாரர்களை பிடித்து குண்டு கட்டாக தூக்கி எரிந்து கொண்டிருந்த நெருப்பின் மீது வீசி இருந்தான்! நெருப்பில் விழுந்த சதிகாரர்கள் அய்யோ அய்யோ என துடித்துக் கொண்டு நெருப்பிலிருந்து குதித்து எழுந்து அங்கிருந்த மணலில் புரண்டு கொண்டிருந்தார்கள்! இதற்கிடையே இளம்வழுதிக்கு முன்பாக ஒருவனும், அவனுக்கு பின்னால் இருவரும் சேர்ந்து மொத்தமாக ஒரே நேரத்தில் பாய்ந்து சாய்த்து விட முயன்றிருந்தார்கள் சதிகாரர்கள்! பின்னால் பாய்ந்து அமுக்க துடித்த இரண்டு கயவர்களையும் தனது வலிமையான கரத்தால் தூக்கி எதிரே பாய முற்பட்ட சதிகாரன் மீது இருவரையும் வீசி இருந்தான்! திடீரென இரண்டு மலை தன் மீது விழுந்து விட்டதோ என கீழே விழுந்து கடந்த சதிகாரன் நினைத்துக் கொண்டிருந்தான்! கண நேரத்தில் நடந்து முடிந்துவிட்ட தாக்குதலால் மிகவும் வெறுத்துப்போன சூரன் தனது நண்பர்களை பார்த்து விழிகளில் நெருப்பைக் கக்கிக் கொண்டிருந்தான்! 

        இனியும் வெறும் கையோடு செல்வது பயனை தராது என எண்ணினார்களோ என்னவோ தங்களது வாள்களை உருவிக்கொண்டு இளம்வழுதியை சுற்றி வளைத்து விட்டிருந்தார்கள் அங்கிருந்த மற்ற சதிகாரர்கள்! 

       சதிகாரர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் கணித்துக் கொண்டு அதற்கு ஏற்ப தனது திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கி விட்டிருந்தான் இளம்வழுதி! 

      "இந்த ஒருவனைப் பிடிப்பதற்கு உங்களால் முடியவில்லையா? இன்னும் எத்தனை நேரம் காத்துக்கொண்டிருப்பது? விரைந்து செயலாற்றுங்கள்?"தனது நண்பர்களை கடிந்து கொண்டான் சூரன்! 

       மிகுந்த ஆவேசத்துடன் சதிகாரர்கள் இளம்வழுதியைச் சுற்றி வளைத்து விட்டிருந்தார்கள்! அவர்கள் விழிகளில் அங்கு எரிந்து கொண்டிருந்த நெருப்பை தோற்கடிக்கும் ஆவேசம் இருந்தது! தவறான திசையில் தூண்டப்பட்டு இருந்த அந்த கோப நெருப்பை எப்படி தன் பக்கம் திருப்பி காரியத்தைச் செயலாற்றுவது என்ற பெரும் யோசனையில் இறங்கி விட்டிருந்தான் இளம்வழுதி! அதனை செயல்படுத்தவும் தொடங்கி விட்டான்! 

        அதன் பின்னால் நடந்தது அந்த விபரீதம்.....?

(தொடரும்..... அத்தியாயம் 83இல்)



Thursday, 27 February 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 81

🌾81. சதிகாரர்களின் ஆணவப் பேச்சு🌾

      வாசலில் எரிந்து கொண்டிருந்த நெருப்பினை நோக்கி சிதலமடைந்த மண்டபத்திலிருந்து வெளியேறி, சதிகாரர்கள் வந்து நின்று கொண்டிருந்தார்கள்! வெகு அலட்சியமாக மருத மரத்தில் மயக்க நிலையில் சாய்ந்து கிடக்கும் இளம்வழுதியைப் பார்த்தார்கள்! 

     "இரவு உணவுக்கு வேண்டியவை அனைத்தும் தயாராகி விட்டதா?"என்றான் சூரன்! 

      "இன்று அந்த வேலையை செய்ய வேண்டியது நமது மாணிக்கம் தான்! அவனிடத்திலே கேட்டு விடுங்கள்! இல்லையென்றால் அதற்கும் ஏதாவது கோபப்பட்டு விடுவான்?"என்றான் காத்தவராயன்! 

      "இதில் கோவிக்கும் அளவிற்கு என்ன உள்ளது? சரி அவனையே கேட்டு விடலாம்! மாணிக்கம் உணவுகளை தயார் செய்து விட்டாயா?"என்றான் சூரன்! 

      "உங்களுக்கு என்ன உணவு வேண்டுமென கூறுங்கள்! தயார் செய்துவிடலாம்! அதிலெல்லாம் நான் எந்தவிதமான சுணக்கமும் காட்ட மாட்டேன்!" என்றான் மாணிக்கம்! 

      "பிறகு என்ன கூறுங்கள்! உங்களுக்கு எத்தகைய உணவு வேண்டும்?" என்றான் சூரன்! 

       "கருவாட்டு குழம்பு சாப்பிட்டு வெகு நாள் ஆகிவிட்டது! அதனால் கருவாட்டுக் குழம்பை வைக்கச் சொல்லுங்கள்!"என்றான் காத்தவராயன்! 

      "என்ன மாணிக்கம்! அவன் கூறியபடியே செய்து விடலாம் தானே!"என்றான் சூரன்! 

     "அப்படியே செய்து விடலாம்! எனக்கு எந்த விதமான தயக்கமும் இல்லை!"என்றான் மாணிக்கம்! 

       "கருவாட்டு குழம்பு என்று முடிவாகிவிட்டது! அயிரை மீன் கருவாட்டுக் குழம்பாக வைத்து விடு! மிகுந்த சுவையாக இருக்கும்! அதனை எண்ணும்போதே இப்போது நாக்கில் எச்சில் சுரக்க ஆரம்பித்து விட்டது!"என்றான் காத்தவராயன்! 

       அங்கிருந்த மற்றவர்களும் ஒரே குரலில் "ஆமாம் அயிரை மீன் கருவாட்டுக் குழம்பு தான் வேண்டும்"என்றார்கள்! 

       "சரி! எனது வேலையைக் கவனிக்கிறேன்!" எனக் கூறிவிட்டு சிதலமடைந்த மண்டபத்தை நோக்கி நகர்ந்து விட்டான் மாணிக்கம்! 

      "அவன் ஒருவனாக நாம் அத்தனை பேருக்கும் உணவு சமைப்பது என்பது இயலாத காரியம்! எனவே அவனுக்கு உறுதுணையாக இன்னும் இரண்டு பேர் உள்ளே சென்று உதவி புரியுங்கள்!"என அங்கிருந்தவர்களைப் பார்த்துக் கூறினான் சூரன்! 

      கூட்டத்திலிருந்து இருவர் சிதலமடைந்த மண்டபத்தில் நுழைந்து கொண்டிருந்த மாணிக்கத்தை பின் தொடர்ந்தார்கள்! 

       "அப்படி என்ன மருந்தை இவனது உணவில் கலந்து கொடுத்தீர்கள்? இத்தனை நேரம் மயக்கத்திலே உள்ளான்! மயக்கம் தெளிந்தால்தானே இவனிடத்தில் இருந்து ஏதேனும் நாம் தகவலை பெற முடியும்! இல்லாவிடில் இவன் இங்கிருந்து என்ன பயன்?"என்றான் சூரன்! 

      "நான் அளவாகத்தான் உணவில் மயக்க மருந்தை கலக்கச் கூறினேன்! அந்த வயதான மூதாட்டி என்ன செய்தாளோ தெரியவில்லை! "என்றான் காத்தவராயன்! 

      "புதிதாக ஒரு நபரிடம் பொறுப்பை ஒப்படைக்கும் பொழுது இப்படியா நடந்து கொள்வது? என்ன செய்கிறார்கள் எப்படிச் செய்கிறார்கள் என கண்காணிக்க வேண்டாமா? அதில் தானே நம் கவனம் இருக்க வேண்டும்! இப்படி முழுவதுமாக சொதப்பி வைத்தால் எப்படி நாம் மேற்கொண்டு காரியங்களை செயலாற்றுவது? உங்களிடம் எத்தனை தான் படித்துப் படித்து கூறினாலும் வழக்கம் போல் உங்கள் பணியைத் தான் செய்து வருகிறீர்கள்! இதனால் உண்டாகும் பலா பலன்களை யார் சுமப்பது! இனி மேலும் இது போன்ற காரியத்தை செய்யாதீர்கள்!"என அங்கிருந்தவர்கள் மீது எரிந்து விழுந்தான் சூரன்! 

       "இனி அப்படி ஏதும் நடந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறோம்"என்றான் காத்தவராயன்! 

       சதிகாரர்கள் உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்ததால்  சுயநினைவு பெற்ற இளம்வழுதி! ஏதோ சத்தம் காதில் விழுகிறதே என்று உணர்ந்தவன் மேற்கொண்டு அவர்கள் என்ன பேசுகிறார்கள்! என அறிய முற்பட்டான் போலும்! அதனால் மயக்கம் தெளிந்ததை வெளியே காட்டிக் கொள்ளாமல் விழிகளை மூடியபடியே இருந்தான்! 

     அங்கிருந்த சதிகாரர்கள் மாறி மாறி ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள்! ஒரு சில சமயம் மெதுவாகவும் சில சமயம் ஆவேசமாகவும் பேசிக் கண்டிருந்தார்கள்! அவர்கள் கூறுவதை அத்தனையும் தனது காதுகளை அந்தப் பக்கமாக திருப்பி வைத்துக் கொண்டு வெகு கவனமாக கேட்டுக் கொண்டிருந்தான் இளம்வழுதி! 

       மரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த இளம்வழுதி மயக்கம் தெளிந்ததையோ அதன்பின் அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருப்பதையோ எவையும் கவனிக்காமல் தங்கள் பாட்டிற்கு விவாதம் செய்வதிலேயே குறியாக இருந்தார்கள் சதிகாரர்கள்! 

      "இன்னும் எத்தனை காலத்திற்கு தான் நாம் இப்படியே மறைந்து வாழ்வது? இதற்கு ஒரு முடிவு எப்பொழுது தான் கிடைக்கும்? அல்லது இப்படியே நமது காலம் கழிந்து விடுமா? என்ற எண்ணம் எனக்கு இப்போதெல்லாம் அடிக்கடி தோன்றி விடுகிறது?"என கவலையோடு கூறினான் காத்தவராயன்!

     "நாம் மேற்கொண்டிருக்கும் பணி அத்தனை எளிதானது அல்ல? இதனை நீ நன்கு அறிவாய்? அப்படி இருக்க, இதுபோன்று எண்ணுவது முட்டாள்தனம்! நமக்கு வேண்டிய மட்டும் பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுக்கிறார்கள்! அப்படி இருக்கும் பொழுது, மறைந்து இருந்தால் என்ன? அல்லது வெளிப்படையாக வாழ்ந்தால் என்ன? எல்லோருமே தங்கள் வாழ்க்கை பயணத்தில் ஓடிக்கொண்டிருப்பது பொன் பொருளைத் தேடித் தானே! அதைத்தானே நாமும் செய்து கொண்டிருக்கிறோம்? பிறகு என்ன கவலை வேண்டிக் கிடக்கிறது!" என்றான் சூரன்! 

     "பொன்னும் பொருளும் தேவைதான்! அதனை யாரும் மறுக்கவில்லை! இருப்பினும் அதனை பெறுவதற்காக நம்மில் எத்தனையோ பேர் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்து உள்ளார்கள்! மறுத்து விட முடியுமா? நமது கூட்டத்தில் இறந்து போன அத்தனை பேருக்கும் குடும்பம் உள்ளது. அவர்களை பாதுகாக்க நாம் என்ன செய்து உள்ளோம்? அது குறித்து என்றேனும் நாம் நினைத்தது உண்டா? அல்லது நமது தலைவர் தான் அதுகுறித்து சிந்தித்தது உண்டா? இதற்கான பதிலை கூறுங்கள் பார்ப்போம்?"என்றான் காத்தவராயன்! 

      "நீ கூறும் அத்தனையும் சத்தியமான உண்மைதான்! இருப்பினும் நாம் மேற்கொண்டு இருக்கும் பணியில் பெரும் அபாயம் காத்து உள்ளது! அதனைத் தெரிந்துதான் இந்தப் பணிக்கு வந்துள்ளோம்! இப்படி இருக்கும் பொழுது இதில் கவலைப்பட என்ன உள்ளது! இவையெல்லாம் சத்தியம் செய்வதற்கு முன்பாக யோசித்து இருக்க வேண்டும்! அதனை விட்டுவிட்டு இப்பொழுது பேசுவதால் ஒரு லாபமும் இல்லை!"என்றான் சூரன்! 

      "நீங்கள் எளிதாக கூறி விட்டீர்கள்! நமது நண்பர்களின் குடும்பம் என்னவாகும் என்று நினைக்கும் போது அடுத்த கணமே நமது குடும்பத்தின் நிலையும் கண்ணில் நிழலாய் தெரிகிறது! அதை எண்ணி, எவ்வாறு வருந்தாமல் இருப்பது? அதுதான் எனக்கு பெரும் கவலையாக உள்ளது! இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கண்டாக வேண்டும்! இல்லையென்றால் நம் பாடு படு திண்டாட்டமாகப் போய்விடும்!" என்றான் காத்தவராயன்! 

     "சரி! உனது கூற்றை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்! விரைவில் இதற்கான தீர்வினை கண்டறிய தலைவரிடம் கூறி நிறைவேற்றப் பார்க்கிறேன்! அதுவரையில் பொறுமையாக காத்திருங்கள்!" என அவர்களிடம் கூறினான் சூரன்!

      "புதிதாக பொறுப்பேற்ற மன்னன் இதுவரையில் ஏன் வெளியில் வந்து தன் முகத்தை காட்டிக் கொள்ளவில்லை? அப்படி என்னதான் பிரச்சனை?"என காத்தவராயன் கேட்டான்!

     "ஆட்சிக்கு வந்ததிலிருந்து தனது நிலையை தக்க வைத்துக் கொள்ளவே பெரும்பாடாய் உள்ளது! நாம் தான் அதற்கு எந்த ஒரு வாய்ப்பையும் விட்டு வைக்கவில்லையே! தொடர்ந்து தொல்லையை கொடுத்துக் கொண்டல்லவா உள்ளோம்! அதனால் விழி பிதுங்கி போய் பயந்து ஒளிந்து கொண்டு விட்டானோ என்னவோ?" ஏதோ பெரும் காரியத்தை சாதித்து விட்ட மகிழ்ச்சியில் கூறினான் சூரன்! 

      "ஆமாம் நீ கூறுவது உண்மையாகத்தான் இருக்க வேண்டும்! இல்லையென்றால் தாம் தூம் என்று தன்னை வெளிக்காட்டி இருப்பார்கள்! அவ்வாறு நடைபெறாமல் இருப்பதிலிருந்து நமது செயலின் வெற்றி பூரணமாகத் தெரிகிறது! " என சிரித்துக் கொண்டே கூறினான் காத்தவராயன்! 

        "இன்னும் சொல்லப் போனால் இன்றைய சூழலில் சோழ தேசத்தை ஆள்வதற்கு பொருத்தமான ஆள் குளத்துங்கன் கிடையாது என்பேன்! உண்மையில் ஆள வேண்டியது சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தன் தான்! அவருக்கு உரிய அரியணையை குறுக்கு வழியில் தட்டிப் பறித்து விட்டான் இந்த குலோத்துங்கள்! இன்னும் எத்தனை காலத்திற்கு இவனது ஆட்சி செயல்படும் என்று பார்த்து விடுவோம்! நாம் கொடுக்கும் தொல்லைகள் தாங்காமல் விட்டால் போதும் என்று கீழைச் சாளுக்கியத்தை நோக்கி ஓடும் நாள் வெகு தொலைவில் இல்லை! "என கொக்கரித்து சிரித்தான் சூரன்! 

     "அங்கு தான் ஏற்கனவே மன்னர் உள்ளாரே! அப்படி இருக்க அங்கு சென்றால் அங்கிருந்து மீண்டும் கங்கைகொண்ட சோழபுரம் நோக்கி துரத்தப்படும் அவலம் நடக்கும் அல்லவா? இப்படியாக அங்கும் இங்குமாக அலைந்து திரியும் நாடோடி வாழ்க்கை தான் குலோத்துங்கனுக்கு கிடைத்திருக்கும் போலும்! உண்மையில் இப்படி ஒரு புகழ்வாய்ந்த மன்னனை வேறெங்கும் பார்க்க முடியாது! ஒருபுறம் சொந்த தேசத்திலும் வாழ முடியாமல் மறுபுறம் பாட்டன் தேசத்திலும் ஆள முடியாமல் விழி பிதுங்கிப் போய் வாழ்க்கையை வெறுத்து துறவறம் பூண்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!" என ஏகத்தாளமாய் கூறிச் சிரித்தான் காத்தவராயன்! 

      "நீ கூறுவதை பார்க்கும் பொழுது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை! ஆனாலும் அத்தனையும் உண்மைதான்! பாவம் அவன் என்ன செய்வான்! அவனுக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான்! அதனை எண்ணி நொந்து கொள்ள வேண்டியதுதான்! அவனால் வேறு என்ன செய்துவிட முடியும்" என பொங்கி வந்த சிரிப்பை அடக்க முடியாமல் கூறினான் சூரன்! 

      சதிகாரர்கள் அடித்துக் கொள்ளும் கும்மாளத்தையும் சோழ மன்னர் குலோத்துங்கர் குறித்து அவமரியாதையோடு பேசும் பேச்சைக் கேட்டு குருதி கொதிக்க துடித்துக் கொண்டிருந்த இளம்வழுதி மேலும் சதிகாரர்கள் என்ன பேசுகிறார்கள் என அறிய விரும்பி மௌனத்தை கடைபிடித்து இருந்தான் போலும்! 

        "சாளுக்கிய மன்னர் விக்ரமாதித்தர் தனது பெரும் படையோடு சோழத்தை தாக்கினால் இன்று உள்ள சூழ்நிலையில் அதனை தடுத்துக் காக்கும் வலிமை சிறிதும் இல்லை! அப்படி இருக்கையில் ஏன் இன்னும் வாழாவிருக்கிறார் என்று தான் தெரியவில்லை? அவர் மனதில் என்ன திட்டம் உள்ளதோ ஒன்றும் புரியவில்லை! " தீவிர சிந்தனையோடு கூறினான் சூரன்! 

       "அனைத்திற்கும் நேர காலம் வேண்டும் போலும்! இல்லையென்றால் நமக்குத் தெரிந்த விவரம் அவருக்கு தெரியாமல் இருக்க முடியுமா என்ன? எதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்! பதறாத காரியம் சிதறாது என்பார்களே! அதைத்தான் அவரும் செய்து கொண்டிருக்கிறாரோ என்னவோ? என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!" என கூறினான் காத்தவராயன்! 

      "சாளுக்கிய மன்னர் விக்ரமாதித்தர் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளாய் போலும்! உண்மையில் நீ விவரமான ஆள் தான்! அனைத்தையும் தெரிந்து வைத்துக் கொண்டு எதுவும் தெரியாதவன் போல் எத்தனை திறமையாக எங்களிடம் நாடகத்தை நடத்தி வருகிறாய்! உன்னிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் போலும்!"என்றான் சூரன்!

        "உங்கள் மனதில் என்ன உள்ளது என்று தெரிய வேண்டுமல்லவா! அதற்காக சிறிது விளையாட்டு காட்டினேன்! அவ்வளவுதான் வேறு ஒன்றும் இல்லை! பரவாயில்லை நீங்களும் மிகத் திறமையாக தான் நடந்து கொண்டீர்கள்! எத்தனை தூரம் துருவி துருவி கேட்டாலும் உண்மையை வெளிப்படுத்துவதற்கு தயாராக இல்லை என்பதை நான் புரிந்து கொண்டேன்! இந்த நிலைப்பாடு தான் நம்மை தொடர்ந்து காத்துக் கொள்ள உதவும்! எத்தனை சூழ்நிலை வந்தாலும் இதிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்க கூடாது! இதனை நன்றாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்! "என்றான் காத்தவராயன்! 

       "ஆமாம் நாங்கள் ஒன்றை மறந்து விட்டோம்! நீ நமது தலைவர் கோடியக்கரை மூர்க்கன் அவர்களோடு நெருங்கிய நட்பு வைத்துக் கொண்டவன் என்பதை மறந்து விட்டோம்! இப்பொழுதுதான் எங்களுக்கு ஞாபகம் வருகிறது! இங்கு நடக்கும் அனைத்தையும் அவருக்கு தெளிவாக எடுத்துக் கூறும் வேலையை நீதான் செய்து வருகிறாய் என்பது எங்களுக்கு நீண்ட நாளாகவே ஒரு சந்தேகம் இருந்தது! அதனை இப்பொழுது தெளிவாக்கி விட்டாய்! உனது இந்த நிலைப்பாட்டை கண்டறிவதற்கு எங்களுக்கு வெகு காலம் ஆகிவிட்டது! உண்மையில் நீ திறமையாக தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாய்! இப்படியே சென்று கொண்டிருந்தால் எதிர்காலத்தில் நமது கூட்டத்திற்கு நீயே தலைவனாகவும் மாறிவிடும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!"என காத்தவராயனைப் பார்த்து கூறினான் சூரன்! 

(தொடரும்..... அத்தியாயம் 82 ல்)



இராஜமோகினி - யாழிசை செல்வா அத்தியாயம் 80

🌾80. சதிகாரர்களின் திட்டம்🌾

       சித்திரையின் முழு நிலவு கடந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்ததால் அந்தக் காட்டின் முழு பரிமாணத்தையும் வெளிக்காட்டுவதற்காகவோ என்னவோ, வெள்ளி ஒளியை ஊற்றி மிதக்க விட்டிருந்தாள் வெண்ணிலவு! ஆள் அரவமற்ற காடு! வெண்ணிலவின் அத்தனை ஒளியிலும் இருளடித்து காணப்பட்ட சிதலமடைந்த மண்டபத்தின் உள்ளே பேச்சுக் குரல் கேட்டது! எதைப் பற்றியோ அங்கு இருந்தவர்கள் காரசாரமாகவும், எள்ளி நகை செய்த படியும் பேசிக் கொண்டிருந்தார்கள்! அவர்களது சத்தம் அந்த காட்டையே அதிரச் செய்து கொண்டிருந்தது! 

        வாசலில் நீண்டு பெருத்திருந்த மருத மரத்தின் அடிப்பகுதியில் மயக்க நிலையில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தான் இளம்வழுதி! சிறிது தொலைவில் அவனது குதிரை மருதன் அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தது! 

       சிதலமடைந்த மண்டபத்தில் உள்ளே இருந்தவர்கள் போட்ட கூச்சலையோ கொக்கரிப்பையோ எதையும் கேட்கும் நிலையில் இளம்வழுதி இருக்கவில்லை! தான் மேற்கொண்டிருந்த முக்கிய பணி குறித்தும் அவனுக்கு ஞாபகம் இருந்ததாக தெரியவில்லை! ஏனெனில் பூரண மயக்கத்தின் பிடியில் வீற்றிருந்தான் போலும்! 

     இளம் வழுதிக்கு எதிரே பெருமளவிலான சுள்ளிகளை குவித்ததோடு நெருப்பு வைத்து விட்டிருந்தார்கள்! அவற்றின் தீ நாக்குகள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தன! 

      "வெளியில் இருப்பவனை பெரிய வீரன் என்று சொன்னார்கள்! அவன் என்னவென்றால் கேவலம் ஒரு முதிய பெண்ணிடம் ஏமாந்து போனான்! நினைக்கவே வெட்கக்கேடாக உள்ளது! " என சிதலமடைந்தந்த மண்டபத்தின் உள்ளே கூடியிருந்த கூட்டத்தில் ஒருவன் கூறினான்! 

       "அடேய் காத்தவராயா! என்ன அப்படி கூறிவிட்டாய்! அவன் தானே நாகையில் சூரிய வர்மர் மாளிகையில் நமது ஆட்கள் அனைவரையும் கூண்டோடு கைலாசத்திற்கு அனுப்பியவன் எனக் கூறினார்கள்! அப்படிப்பட்டவனைப் பார்த்து இவ்வாறு ஏளனமாக பேசுவது எனக்கு சரியாகப் படவில்லை!" 

      "அடேய் மாணிக்கம்! உனக்கு எப்போதும் யாரைக் கண்டாலும் இப்படித்தான் பயந்து நடுங்குகிறாய்! உனக்கு வேறு வேலையே இல்லையா? உன்னை எல்லாம் எப்படித்தான் நமது கூட்டத்தில் சேர்த்தார்களோ தெரியவில்லை! "என்றான் காத்தவராயன்! 

       "நாம் எப்போதும் நமது எதிரியை சரியாகத்தான் கணிக்க வேண்டும்! இல்லையென்றால் அதன் விளைவு மிக மோசமாக இருக்கும்! அதற்காகத்தான் நான் கூறினேன்! அதனை விடுத்து என்னை நீ அவமரியாதை செய்து கொண்டிருக்கிறாய்! உனக்கு எப்பொழுதுமே எனது பெயரில் இழிவானதொரு எண்ணம் இருப்பது நான் அறிவேன்! அதற்கெல்லாம் கவலைப்படும் ஆள் நான் இல்லை! இன்னும் எத்தனை காலத்திற்கு நீயும் இப்படி பேசிக் கொண்டுதான் இருப்பாய் எனப் பார்க்கிறேன்! ஒரு நாள் எனக்கும் சரியான பதில் அளிக்கும் காலம் வரும், அப்போது என்னைப் பற்றி நீ தெரிந்துகொள்வாய்!"என்றான் மாணிக்கம்! 

       "நான் கூடுதலாக எதையும் கூறவில்லை! உன்னைப்பற்றிய  உண்மையைத்தான் கூறினேன்! அதற்காக நீ கோபித்துக் கொண்டாலும் எனக்கு ஒன்றும் பயமில்லை! எதையும் நேருக்கு நேராக பேசுவது எனது சுபாவம்!"என்றான் காத்தவராயன்! 

      "வெளியே மயங்கி கிடப்பவனின் உதவியாளன் எவனோ ஒருத்தன் உள்ளானாமே! அவனது பெயர் கூட என்னவோ கூறினார்கள்! எனக்கு சரியாக ஞாபகம் இல்லை!" என்றான் சூரன்! 

       "அவன் உதவியாளன் எவனாய் இருந்தால் என்ன? இவனே இங்கு மயங்கிக் கிடக்கிறான்? இந்த லட்சணத்தில் அவனது உதவியாளனை பற்றி பேசிக் கொண்டிருக்கிறாய்? அவனெல்லாம் நமக்கு ஒரு பொருட்டா என்ன? நம்மிடம் ஒப்படைத்த பணியை செவ்வனை நிறைவேற்றி விட்டோம்! அது போதும் நமக்கு! அதை விடுத்து தேவையற்ற கதைகள் எதற்கு நாம் பேச வேண்டும்!"என்றான் காத்தவராயன்! 

      "நீ என்ன இப்படி கூறிவிட்டாய்? வெளியில் இருப்பவன் உதவியாளன் ஒன்றும் சாதாரணமானவன் அல்ல!  வாய்ப்பு கிடைத்தால் அவனது கதையையும் முடித்து விட வேண்டும்! நமக்குள்ள பெரிய இடையூறுகளில் அவனும் ஒருத்தனாக மாறிக்கொண்டு உள்ளான்! நீ அதைப் பற்றித் தெரியாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறாய்? காரணம் இல்லாமல் நான் ஒன்றும் கூறவில்லை! அவனது பெயர் தான் எனக்கு ஞாபகத்துக்கு வரமாட்டேங்கிறது!"என்றான் சூரன்! 

      "அப்படி என்ன பெரிய காரியத்தை சாதித்து விட்டான்! அவனை எண்ணி இப்படி பேசிக் கொண்டிருக்கிறாய்?"என்றான் காத்தவராயன்! 

      "தஞ்சைப் புறம்பாடியிலுள்ள குலசாமி அய்யனார் கோவிலில் பெரும் கலகத்தை உண்டாக்க நினைத்த நமது ஆட்களை ஒழித்துக் கட்டியதோடு, நாம் வெகு கலமாய் சேர்த்து வைத்திருந்த பொன்மாடைகள் அத்தனையும் கைப்பற்றி தஞ்சையின் மாதாண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமானிடம் பாதுகாப்பாக கொண்டு சேர்த்து விட்டான்! அதனால் நமக்கு பேரிழப்பு உண்டாகியுள்ளது! இவை மட்டும் நமது தலைவருக்கு தெரிந்தால் கொதித்துப் போய்விடுவார்! அத்தோடு நமது நிலையும் என்ன ஆகுமோ? அதை எண்ணித்தான் எனக்கு கலக்கமாக உள்ளது!"என்றான் சூரன்!

     "ஓ கோ! அதனால் தான் நம்மை திடீரென கங்கைகொண்ட சோழபுரம் நோக்கி பயணிக்க உத்தரவு வந்ததா?"என்றான் காத்தவராயன்! 

      "எனக்கு இப்பொழுது ஞாபகம் வந்துவிட்டது அவனது பெயர் அழகன்! தனி ஒருவனாக இருந்து எப்படி ஒரு காரியத்தை செய்து விட்டான் பார்த்தீர்களா? அதனால் தான் கூறுகிறேன் யாரையும் எளிதாக எண்ணிவிடக் கூடாது! நாம் ஒன்று நினைக்க வேறு ஏதேனும் விபரீதம் உண்டாகிவிட்டால் நமது திட்டம் அத்தனையும் படு தோல்வியைச் சந்தித்து விடும்! இப்படி நடப்பதை நமது தலைவர் ஒரு நாளும் விரும்புவதில்லை! அது உங்களுக்கே நன்றாக தெரியும்!" என்றான் சூரன்! 

     "இப்போது என்ன கூறுகிறாய்? காத்தவராயா? நான் கூறியதற்கு என்னை அவமானப்படுத்தினாயே, இப்போது பதிலைக் கூறு?" என்றான் மாணிக்கம்! 

      "இன்று ஏதோ உன் பக்கம் இம்முறை  நியாயம் இருப்பதால் ஒத்துக் கொள்கிறேன்! அதற்காக உன்னை நீ பெருமையாக எண்ணிக் கொள்ளாதே! உன்னைப் பற்றிய எனது எண்ணம் என்றும் மாறாது! அப்படி ஒரு பகல் கனவு ஏதும் கண்டு கொள்ளாதே! அவை உனக்கு நன்மையைத் தராது!" என்றான் காத்தவராயன்! 

     "நீ ஒருவன் ஏற்றுக் கொள்ளாததால் எனக்கு ஒன்றும் பாதகம் இல்லை! அதனை எண்ணி வருந்தப் போவதுமில்லை!"என்றான் மாணிக்கம்! 

      "நீங்கள் இருவரும் தேவையின்றி பேசிக் கொண்டிருப்பதை அடியோடு நிறுத்தி விடுங்கள்! நமக்குள் உண்டாகும் விரோதம் நமது எதிரிக்குத்தான் இலாபம்! அதனை விடுத்து காரியத்தில் கண்ணாய் இருங்கள்! அதுதான் நமக்குத் தேவை!"என்றான் சூரன்! 

      "திடீரென வெளியில் இருப்பவனை எதற்காக பிடித்துக் கொண்டு இங்கு வந்து உள்ளோம்? அப்படி என்ன தலை போகிற காரியம் இவனால் நின்று விடப் போகிறது?"என்றான் காத்தவராயன்! 

      "தலைவர் எதனையும் காரண காரியமாகத்தான் செய்வார்! அவரது திட்டம் எதுவும் இதுவரை பழுதில்லை! அப்படி இருக்கின்ற போது, அவரது உத்தரவுக்கு கீழ்ப்படிவது நமது கடமை!" என்றான் சூரன்! 

     "நமது தலைவர் கோடியக்கரை மூர்க்கன் திட்டம் தான் என்ன? அது குறித்து எப்போது கேட்டாலும் சரியான விளக்கத்தை தருவதே கிடையாது! அவ்வப்போது புதிய புதிய உத்தரவுகள் வருகின்றன! அதனை நாமும் என்ன வென்று கேட்காமல் செய்து முடிக்கின்றோம்! அவை மட்டும் தான் தெரிகிறது!"என்றான் காத்தவராயன்! 

      "சோழ தேசத்தில் நடந்தேறிக் கொண்டுள்ள பல்வேறு மாற்றங்களை அடியோடு சிதைக்கும் காரியத்தில் நாம் உள்ளோம்! இதைப் பற்றி வேறு எங்கும் பேசினாலும் நமது தலைப் போய்விடும்! எனவே மேற்கொண்டு எதுவும் கேள்வி கேட்காமல் நமது பணியைத் தொடர்வது தான் நமக்கும் நமது கூட்டத்திற்கும் பயனைத் தரும்! புரிந்து கொண்டீர்கள் அல்லவா! வேறு எதுவும் என்னிடம் கேட்காதீர்கள்!"என்றான் சூரன்! 

      "அதெல்லாம் சரி! கங்கைகொண்ட சோழபுரத்திற்கு யாரேனும் ஒற்றர்கள் புதிதாக ஏதேனும் தகவலை தாங்கிச் சென்றால் அதனைக் கைப்பற்றி தகவல் அனுப்ப சொல்லி தானே நமக்கு உத்தரவு வந்திருந்தது! ஆனால் அதற்கு மாறாக வெளியே மயங்கி கிடப்பவனை ஏன் பிடித்து வந்து உள்ளோம்? அதுதான் எனக்குப் புரியவில்லை?"என்றான் காத்தவராயன்! 

     "குளத்தில் பெரும் பசியோடு தூண்டில் போட்டு மீனுக்காக காத்துக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு பெரிய திமிங்கலமே கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இன்று நமக்கு கிடைத்திருப்பதும். வெளியே உள்ளவனை அப்படி ஒன்றும் எளிதாக எண்ணிவிட வேண்டாம்! இவனைப் பற்றி தெரிந்திருந்தால் இவ்வாறெல்லாம் பேச மாட்டீர்கள்!"என்றான் சூரன்! 

     "தாங்கள் புகழ்ந்து கூறும் அளவிற்கு அப்படி என்ன பெரும் காரியத்தை சாதித்து விட்டான்?"  என்றான் காத்தவராயன்! 

     "வெளியே இருப்பவன் வேறு யாருமில்ல கருணாகரத் தொண்டைமானின் உப தளபதிகளில் மிகுந்த அன்பைப் பெற்றவன் இவன் ஒருவனே! மேலும் இவனது தந்தை பிரும்மாராயர் குமார மள்ளர் மற்றும் இவனது சகோதரன் நாகையின் பாடி காவல் அதிகாரியாக இருந்தவன்! அந்த பாடி காவல் அதிகாரி பணியில் தற்போது இவன் மேற்கொண்டு வருகிறான்! இப்போது கூறுங்கள்? இவன் கங்கைகொண்ட சோழபுரம் வருகிறான் என்றால் எத்தனை முக்கியப் பணியாக இருக்கும் என்று நீங்களே யோசித்துக் கொள்ளலாம்?"என்றான் சூரன்!

       "ஆனால் இவனிடத்தில் எந்தவிதமான ஓலையும் இல்லையே? அப்படி இருக்கும்போது இவன் என்ன தகவலை எடுத்துச் செல்கிறான் என்பதை எவ்வாறு நாம் அறிந்து கொள்ள முடியும்? இது வீண் வேலை தனே?"என்றான் காத்தவராயன்! 

      "அடேய் முட்டாள்! உனக்கு சிறிதாவது அறிவு இருக்கா இல்லையா? அத்தனையும் தொலைத்து விட்டு முட்டாளாக மாறிவிட்டாய் போலும்! இப்போதுதான் இவன் யார் என்பதை கூறினேன்! இவனிடத்தில் ஓலை இல்லை என்றால் என்ன? இவன் இங்கு வந்திருப்பதிலிருந்தே தெரிகிறது ஏதோ ஒரு முக்கியமான பணியின் நிமித்தமாக தான் வந்திருக்கிறான் எனத் தோன்றுகிறது! அப்படி இருக்கின்ற போது அவனிடத்தில் எத்தனை கவனமாக நாம் இருக்க வேண்டும் என உங்களுக்கு புரிகிறதல்லவா? விழிப்போடு இருங்கள்! சிறிது கவனத்தை தவறவிட்டாலும் பெரும் ஆபத்தாக மாறிவிடும் அபாயம் நிரம்பியவன் இவன்!"என்றான் சூரன்! 

      "இவனை என்ன செய்யப் போகிறோம்? ஏதேனும் திட்டம் உள்ளதா? இருந்தால் அதைப் பற்றி கூறுங்கள்?'என்றான் காத்தவராயன்! 

       "இளம்வழுதி செயலாற்ற நினைக்கும் காரியத்தை செய்யவிடாமல் தடுப்பதே நமது முக்கிய நோக்கம்! அதனை விடுத்து வேறு பணிகள் ஏதும் இல்லை!"என்றான் சூரன்! 

        அதன்பின் அங்கிருந்தவர்கள் ஏதும் பேசிக் கொள்ளாமல் மௌனமாக வாசலை நோக்கி வெளியேறிக் கொண்டிருந்தார்கள்!

(தொடரும்..... அத்தியாயம் 81 இல்)


புகைவண்டி தந்த பாடம் - யாழிசை செல்வா

 புகைவண்டி தந்த பாடம் 

=========================

யாழிசைசெல்வா

==================


       எறும்புகளைத் தோற்கடிக்கும் முயற்சியில் அலை அலையாய் மக்கள் வெள்ளத்தினூடாக நீந்திக்கொண்டு, மூன்றாம் வகுப்பு புகைவண்டி அறையினுள் எப்படியோ ஏறியிருந்தான். கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு வரலாறு பயிலும் மாணவனான அய்யனார்.


     தினந்தோறும் நடக்கும் திருவிழா தான் இது! என்ற போதும் அன்று சற்று கூடுதலான கூட்டம். கல்லூரி செல்வதற்கு இந்த புகை வண்டியினை விட்டால் வேறு வழியில்லை அவனுக்கு... பிறகென்ன, கல்லூரிக்கு விடுமுறை போட வேண்டியதுதான்! அதனை நினைக்கும் போதே அவனது நெஞ்சமெல்லாம் ஒருவித தவிப்பு படர்ந்தது! 


      காலையில் தோட்டத்திற்கு போனால் மேற்கே சூரியன் விழுந்தாலும் ஓயாத வேலை இருக்கும்! அதிலிருந்து தப்பி ஓடுவதற்காகவே எப்படி ஏனும் அடித்துப் பிடித்து புகை வண்டியில் ஏறிவிட்டால் அன்றைய பொழுது அமர்க்களம் தான்! 


    தலையில் பெரும் மூட்டையோடு ஐம்பது வயதினை கடந்து விட்டிருந்த விவசாயி கருப்பசாமி, அய்யனார் இருந்த புகை வண்டி அறைக்குள் நுழைந்தவர் "தம்பி! இந்த மூட்டையை ஒரு கை புடிச்சு கீழே இறக்கு...!"என அய்யனாரை பார்த்து கூறினார். 


      படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை இருக்கையில் வைத்து விட்டு விவசாயி கருப்பசாமி தலையிலிருந்து மூட்டையை கீழே இறக்கி வைக்க உதவினான்! 


       "அப்படியே சிறிது நகர்ந்து செல்! நீ உட்கார்ந்திருந்த இடத்துக்கு பக்கத்துல வைக்கணும்" எனக் கூறிக்கொண்டே அவனுடன் சேர்ந்து மூட்டையை நகர்த்தி வைத்தார்! 


       "இத்தனை கனமாக இருக்கே? அப்படி உள்ள என்ன இருக்கு?"என்றான் அய்யனார்! 


      "தோட்டத்துல விளைஞ்ச கத்தரிக்கா தம்பி! இத தஞ்சாவூர் சந்தையில விக்கிறதுக்கு கொண்டுப் போறேன்!"


     "ஏன்? உங்க ஊரிலேயே விக்கலாமே....?"


      "விக்கலாம் தம்பி! பெருசா வெல இருக்காது! அதுவே தஞ்சாவூர் சந்தையில் வித்தா நாலு காசு கூடுதலா கிடைக்கும்லெ!" என்றவர் தனது தலையை திருப்பி சுளுக்கு எடுத்தார்! 


      "கழுத்து சுளுக்கு பிடிச்சிருக்கா என்ன?"


      "ரொம்ப தூரத்திலிருந்து தூக்கிட்டு வாரேன் லெ, அதான் கொஞ்சம் சுளிக்கிருச்சு போலெ...."


     "இப்படி சிரமப்படுறதுற்கு அங்கன உள்ளூர் சந்தையிலெ விக்கலாமே!"


      "விக்கலாம் தான்! அதனால நமக்கு என்ன இலாபம்! யேவாரி சம்பாரிச்சுக்குவான்! வீட்டுல வயசுக்கு வந்த பொட்டப் புள்ள இருக்கு! அதுக்கு கால காலத்துல செய்ய வேண்டியது செய்யணுமே..... அதுக்கெல்லாம் இப்படி ஒழைச்சாத் தானே முடியும்!"


        திடீரென அவனது தந்தையின் நினைவுகள் நெஞ்சில் எழுந்ததும் அய்யனார் விழிகள் கண்ணீர் குளமாயின....!

Wednesday, 26 February 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 79

  🌾79. இளம்வழுதியும் முதிய பெண்மணியும்🌾

     கங்கைகொண்ட சோழபுரம் செல்லும் நீண்ட பெருவழிச்சாலை! வணிகத்தின் பொருட்டும் அன்றாட பணிகளின் பொருட்டும் மக்கள் கூட்டம் கூட்டமாக சாலைகளில் எறும்புகளை தோற்கடிக்கும் திட்டத் தோடு வரிசை கட்டிக்கொண்டு நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகளும் கூட்டு வண்டிகளும் வந்து கொண்டும் சென்று கொண்டும் இருந்தன! 


      சாலையின் இருமருங்கிலும் நீண்டு பெருத்து கிடந்த பெரும் மரங்களான புளியமரம், மாமரம், ஆலமரம், அரசமரம், மருத மரம், வேப்பமரம், புன்னை மரம், வாதநாராயணன் மரம் என கூட்டம் கூட்டமாய் காணப்பட்டன! அவற்றின் நிழலில் ஆங்காங்கே பயணம் செய்து கொண்டிருந்த வழிப்போக்கர்கள்  ஆதவன் மேற்கே விழுந்து மூன்று நாழிகை கடந்து வட்ட பின்பும் இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள்! நீண்ட தூரம் பயணித்து விட்டிருந்ததால் தங்கள் காளை மாடுகளை அவிழ்த்து அங்கிருந்த புல்வெளிகளில் மேய விட்டிருந்தார்கள்! இன்னும் சிலர் மரத்தின் வேர்களில் தலை வைத்து படுத்துக்கொண்டிருந்தார்கள்! ஒரு சில வழிப்போக்கர்கள் வீட்டிலிருந்து தாங்கள் எடுத்து வந்திருந்த உணவுப் பொட்டலங்களை அவிழ்த்து உண்டு கொண்டிருந்தார்கள்! பெரும் வணிகர்களோ தமது கூட்டு வண்டிகளில் சகல வசதிகளையும் ஆடம்பரமாக செய்து கொண்டிருந்ததால் அதன் உள்ளேயே பெரும் திண்டுகளை தலைக்கு வைத்துக் கொண்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள்! அவர்களது பணியாளர்கள் வணிகர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து கொண்டிருந்தார்கள்!  


     சோழ தேசத்தின் தலைநகரை பார்க்கும் ஆவலில் வெகு தூரத்தில் இருந்து புறப்பட்டு வந்திருந்த மக்கள் சிலர் ஆங்காங்கே இருந்த ஆலமரத்தின் விழுதுகளை பற்றிக்கொண்டு ஊஞ்சலாடிக் கொண்டிருந்தார்கள்! இளம் வயது சிறுவர்கள் போல் அவர்கள் செய்து கொண்டிருந்த வேடிக்கைகளை உடன் வந்திருந்த அவர்களது இல்லப் பெண்கள் கேலி செய்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்!


     சாலையின் ஓரத்தில் இருந்த மாமரம் ஒன்றில் இளம் வாலிபன் ஒருவன் ஏறிக்கொண்டிருந்தான்! மரத்தின் கீழே நின்று கொண்டிருந்த இளம் பெண் மரத்தில் கொத்துக்கொத்தாய்  காய்த்து கனிந்து விட்டிருந்த மாம்பழத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்! குரங்குகளை தோற்கடிக்கும் வண்ணமாக கிளைக்குக் கிளை தாவி குதித்துக் கொண்டிருந்தான் மரத்தில் ஏறிய இளைஞன்!


      "உனக்கு பக்கத்துல தான் இருக்கு அத்தான்!"கீழே இருந்து இளைஞனுக்கு அவள் உண்ண விரும்பிய மாம்பழத்தை சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தாள்!


     "இதுவா!"என்றான் இளைஞன்! 


    "ஆமாம்! அப்படியே முழு கொத்தையும் பறித்து வா அத்தான்!"என  துள்ளிக் குதித்தபடி கூறினாள் இளம்பெண்!


         இளம் பெண் கூறிய மாம்பழக் கொத்தை முழுவதுமாக பறித்து தனது தோளில் இருந்த துணியில் கட்டிக்கொண்டு மரத்தை விட்டு கீழே இறங்கிக் கொண்டிருந்தான் இளைஞன்! 


      அதற்குள் அவனைத் தேடி மரம் அருகே வந்து விட்டாள் இளம் பெண்! 


       மரத்திலிருந்து கீழே இறங்கி இளம் பெண் அருகே வந்தவன் "உனக்காகத்தானே மரம் ஏறி பறித்து வருகிறேன்! அதற்குள் ஏன் இப்படி குதிக்கிறாய்?"என்றான் இளைஞன்! 


      "எனக்கு ஒன்னும் வேண்டாம் போ!"என தனது முத்து போன்ற விழிகளை உருட்டிக்கொண்டு கோபத்தை காட்டினாள் இளம்பண்!


     "ஏன் இப்படி கோபித்துக் கொள்கிறாய்! சிறிதும் புரிந்து கொள்ள மாட்டாயா என்ன? நான் அப்படி என்ன கூறிவிட்டேன்?" இளம் பெண்ணின் வதனத்தை கையில் ஏந்திக் கொண்டு அவளிடம் கேட்டான் இளைஞன்! 


      "பிறகு என்ன? எனக்கு பிடித்த மாம்பழத்தை தானே கேட்டேன்! நான் என்ன வானத்தில் இருக்கும் நிலாவையா கேட்டேன்! அதற்குப் போய் இப்படி கோபித்துக் கொள்கிறாய்?" என வேண்டுமென்றே முகத்தை திருப்பிக் கொண்டாள் இளம்பெண்!


      "நான் மாம்பழம் கேட்டதற்காக ஒன்றும் கோபித்துக் கொள்ளவில்லை! உன் ஆலிலை போன்ற இந்த குட்டி வயிற்றில் நமது குட்டிக் கண்ணம்மா இருக்கிறாள் என்பதை மறந்து விட்டாயா?" என்றவன் அவளது வயிற்றில் முத்தமிட்டான்!


      "என்ன அத்தான் இது? இப்படியா செய்வாய்? கொஞ்சம் கூட வெட்கமில்லாமல்..." என்றவள் அவளது முகம் குங்குமமாய் சிவந்துவிட்டிருந்தது!


      "அப்படி என்ன வெட்கக்கேடாய் செய்துவிட்டேன்!"என்றான் வெகுலியாய் இளைஞன்! 


         "ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து போகும் சாலையில் வைத்து முத்தமிடுகிறாயே அதைத்தான் சொன்னேன்!" என கூறிக்கொண்டே  வெட்கத்தில் நாணினாள் அந்த இளம் பெண்! 


         "நீ என் மனைவி! உன்னை முத்தமிட நான் யாரிடம் கேட்க வேண்டும்!" 


       "போங்கள் அத்தான்! உங்களுக்கு எல்லாம் விளையாட்டு தான்!" என்றவள் இளைஞனின் கையில் இருந்த துணியிலிருந்து மதுர மான மாம்பழத்தை எடுத்து இதழில் சுவைக்கத் தொடங்கி விட்டாள்! மாம்பழத்தை உண்ணத் தொடங்கியதும் இளம் பெண்ணின் வதனம் பூரணமாய் ஒளி பெறத் தொடங்கி விட்டது! அவளது வதனத்தையே இளைஞன் பார்த்துக் கொண்டிருந்தான் இமை கொட்டாமல்!


     சாலையின் ஓரத்தில் இருந்த ஆலமர விழுதொன்றை பற்றி கொண்டு இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான் இளம்வழதி! அவனது அருகே மருதன் புல்லை மேய்ந்து கொண்டிருந்தான்!‌ நீண்ட தூரம் விடாமல் பயணித்து வந்திருந்ததால் விளாலி மருதனுக்கு தள்ளி இருந்தது ! 


       "என்ன ஒரு விசித்திரம்! தேசத்தின் ஒரு பகுதியில் நாட்டையே உலுக்கி எடுக்கும்  பேராபத்து மையம் கொண்டுள்ள போது தலைநகரத்தில் அதன் சுவடே தெரியாமல் இயல்பானதொரு வாழ்க்கை! அத்தனையும் நடப்பது சோழ தேசத்தில் தான்! திடீரென மாதண்ட நாயகர் தஞ்சையை விட்டு கங்கைகொண்ட சோழபுரத்திற்கு சென்று விட்டதாக தஞ்சைக் கோட்டையின் உள்ள அவரது அந்தரங்க ஊழியர்கள் கூறினார்கள்! அப்படி என்ன திடீரென்று அழைப்பு வந்திருக்கும்! ஒன்றும் புரியவில்லையே! நமக்கு இருக்கும் நேரம் மிகக் குறைவாக உள்ளது! இந்த நேரத்தில் இப்படி ஒரு சோதனை! பாவம் மருதன்! கோடியக்கரையிலிருந்து புறப்பட்டதில் தொடங்கி இரண்டொரு இடங்களில் மட்டுமே இடையில் இளைப்பாறினோம்! அதுவும் சிறிதுநேரம் தான்! இன்னும் ஒரு நாழிகை பயணித்தால் கங்கைகொண்ட சோழபுரம் வந்துவிடும்! அதன் பிறகு மீண்டும் நாகை புறப்படும் வரை மருதனுக்கு ஓய்வு தான்! எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் இங்கிருந்து புறப்பட்டு செல்ல வேண்டும்! நடந்த நிகழ்வுகளை கேட்டால் என்ன சொல்வாரோ தெரியவில்லை! ஏற்கனவே மணி கிராமத்தார் சூரிய வர்மர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை அவருக்கு தகவல் அளித்திருந்தாலும் கண்டிப்பாக அந்த நிகழ்வு குறித்து மிகுந்த வருத்தம் கொள்வார்! அவரது இறப்பு சோழ தேசத்திற்கு எத்தனை முக்கியம் என்பது அனைவரும் அறிவார்கள்! அப்படி இருக்கும் பொழுது அது குறித்து எவ்வாறு பேசாமல் இருப்பார்! "என சிந்தனையில் மூழ்கி இருந்தவனே "தம்பி! தம்பி!"என பக்கத்தில் இருந்த மரத்தின் விழுதுகளில் அமர்ந்து கொண்டிருந்த முதிய பெண்மணி இளம்வழுதியை அழைத்துக் கொண்டிருந்தார்! 


       முதிய பெண்மணி அருகே சென்ற இளம்வழுதி"கூறுங்கள் அம்மா! என்ன வேண்டும்? எதற்காக என்னை அழைத்தீர்கள்?" என்றான்! 


      "மிகுந்த களைப்பாக உள்ளாயே! வெகு தூரத்தில் இருந்து வருகிறாயோ?"என்றார் அந்த முதிய பெண்மணி! 


      அறுபது பிராயத்தை கடந்து விட்டிருந்தார் அந்த முதிய பெண்மணி! நீண்ட காது வளர்த்து அதில் பொன்னாள் செய்த தொங்கட்டான் என்னும் ஆபரணம் ! செவ்வண்ண பருத்தியால் நெய்த சேலை! மூன்றாவது காலாய் ஒரு ஊண்று கோல்! ஒடிசலான தேகம்! நெற்றி முழுவதும் திருநீர் பூச்சு! எப்போதும் இடைவிடாமல் வெற்றிலை அசைபோடும் வாய்! எதையும் தெரிந்து கொள்ள துடிக்கும் அகன்ற விழிகள்! உடலில் சுருக்கம் விழுந்த தேகத்தைக் கொண்டிருந்தாலும் வெடுக்கென துள்ளி ஓடும் மானின் துள்ளல் நிரம்பிய நடை! அத்தனையும் கொண்டவர்தான் அந்த முதிய பெண்மணி!


       "ஆமாம் அம்மா! நாகையிலிருந்து வருகிறேன்!"


      "ஓ கோ! சோழகுல வல்லிப் பட்டினத்தில் இருந்து வருகிறாய் என்று கூறு! "என திருத்தி சொன்னார் முதிய பெண்மணி! 


     "இரண்டும் ஒரே இடத்தை தானே குறிக்கிறது அம்மா!" முதிய பெண்மணியின் வதனத்தைப் பார்த்துக் கொண்டே கூறினான் இளம் வழுதி!


      "அது எப்படி ஒன்றாகும்! சோழ மன்னர் குலோத்துங்கர்தான் நாகப்பட்டினத்தின் பெயரை சோழகுல வல்லிப் பட்டினம் என மாற்றிவிட்டாரே! பிறகும் எதற்காக பழைய பெயரிலே அழைக்கிறீர்கள்?"


      "தாங்கள் கூறுவதும் சரிதான் அம்மா! இருந்தாலும் நெடுங்கால பழக்கம்! அதனால்தான் சட்டென்று மாற்றிக் கொள்ள இயலவில்லை!"


     "சரி அது கிடக்கட்டும்! மிகுந்த களைப்போடு உள்ளாய்! இந்தா, இந்த உணவை எடுத்து உண்டு கொள் தம்பி!"என்றார் முதிய பெண்மணி! 


     "வேண்டாம் தாயே! தங்களுக்கு பயன்படும்! நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்! நான் வழியில் எங்காவது சம்பாதித்துக் கொள்கிறேன்!"என முதிய பெண்மணியிடம் மறுத்துக்கு கூறினான்!


       "ஏனப்ப்பா! என் போன்ற ஏழைகளிடம் எல்லாம் உணவு உண்ண மாட்டாயா? உன்னைப் பார்த்தால் அரசாங்கத்தில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவன் போல் தெரிகிறது! அதனால் தான் வாங்க மறுக்கிறாயா என்ன?'


       "அப்படி ஒன்றும் இல்லை தாயே! வயதான உங்களுக்கு உணவு தேவைப்படும் என்பதால் தான் மறுத்தேன்! வேறு எந்த காரணமும் இல்லை!"


      "அப்படி என்றால் எடுத்து உண்டு கொள் தம்பி!"என்றார் முதிய பெண்மணி! 


       வேறு எதுவும் பேசிக்கொள்ளாமல் முதிய பெண்மணி கொடுத்த உணவினை வாங்கி மளமளவென்று உண்டு முடித்து விட்டிருந்தான் இளம்வழுதி! 


       " இந்தா தம்பி இந்த நீரையும் குடித்துக்கொள்!"எனக்கூறி கையில் வைத்திருந்த தோல் பையை எடுத்து இளம்வழுதியிடம் நீட்டினார் முதிய பெண்மணி!


       தோல் பையில் இருந்த தண்ணீரை பாதி குடித்திருந்த போது அவன் நின்று கொண்டிருந்த மரம் கிறுகிறுவென சுற்றத் தொடங்கியது! அருகில் இருந்த முதிய பெண்மணி அதற்குள் மறைந்து விட்டிருந்தார்! விழிகளை கசக்கி கொண்டு தனது குதிரை மருதனை தேடி நகர்ந்து கொண்டிருந்த இளம் வழுதி இரண்டு தப்படிகள் எடுத்து வைப்பதற்குள் கால்கள் இரண்டும் பின்னிக்கொண்டன! திடீரென கீழே சரிந்து விழுந்தவன் எந்திரிக்கவே இல்லை! 


(தொடரும்...... அத்தியாயம் 80 ல்)


       



      

இராஜமோகினி - யாழிசை செல்வா அத்தியாயம் 78

🌾78. தனியே ஒரு படகு!🌾 

     அந்த இடத்தில் எப்போதோ கடல் சிறிது உள்வாங்கி இருந்தது! அதன் காரணமாக கடல் நீர் உள் நுழைந்து சிறு குட்டை போல் தேங்கிக் கிடந்தது! அதன் கரை நெடுக செழித்து வளர்ந்து கிடந்தன முட்புதற்காடுகள்! அதிக ஆழமில்லாமல் முழங்கால் அளவிற்கு அதன் ஆழம் இருந்ததால் அதன் வழியாக எளிதாக யாரும் கடந்து சென்றுவிடலாம்! அவ்வளவாக அந்த இடத்தில் அலைகளின் சீற்றம் இருக்கவில்லை! நீண்ட இடைவேளையில் வந்து போகும் கடல் நீர் அந்தப் பகுதியை செழிப்பாக்கி இருந்தது! தூரத்தில் இருந்து பார்த்தால் அத்தனை எளிதில் அவை தெரியாத வண்ணம் முட்புதர் செடிகளின் கொடிகள் கடல் நீரை முத்தமிட துடித்துக் கொண்டிருந்தன! 

      ஓட்டமும் நடையுமாக அங்கு வந்து சேர்ந்திருந்தார்கள் இளம்வழுதியும் அழகனும்! கரையில் பாதியும் நீரில் மீதியுமாக ஒரு சிறிய படகு தயாராக இருந்தது! நான்கு பேர் தாராளமாக பயணிக்க கூடிய வசதியுடன் இரண்டு துடுப்புகள் சகிதமாக அங்கிருந்தது! படகை அடிக்கடி பயன்படுத்திய தடம் நீரிலும் நிலத்திலும் பெரும் கோடாய்க் கிடந்தது! படகு நின்று இருந்த இடத்திலிருந்து காட்டை நோக்கி புதர்களுக்கு நடுவில் பயணிக்கும் அளவிற்கு பாதை சுத்தம் செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்தது! படகையும் அதற்கு எதிரே விரிந்திருந்த பாதையும் மாறி மாறி பார்த்த இளம்வழுதி, குடிசையில் கைப்பற்றிய ஓலையை தனது இடையில் உள்ள கச்சையிலிருந்து உருவி எடுத்தவன், அதன் வாசகங்கள் மீது ஒரு கணம் விழியை ஓட்டினான், மீண்டும் படகையும் பார்த்ததோடு தனது முரட்டு இதழில் மந்தகாசமான புன்னகை ஒன்றே படர விட்டுக் கொண்டான்!

       "நமது தேசத்தின் நீள அகலங்களை நம்மை விட சதிகாரருக்குத்தான் நன்கு தெரிந்திருக்கிறது! நில வளத்தையும் நீர் வளத்தையும் நன்கு பயன்படுத்திக் கொண்டு தேசத்தை நிர்மூலமாக்கும் காரியத்தை செவ்வனே செய்து வந்திருக்கிறார்கள்! அவை தெரியாமல் வழமையான பணியில் நாம் இருந்து விட்டோம்! அவை எத்தனை பெரிய அபத்தம் என்பது இங்கு வந்த போது தான் புரிகிறது! பாழடைந்த மாளிகையில் கைப்பற்றிய பல்வேறு மாறுவேட ஒப்பனைகளும் ஆடைகளும் சரிகாரர்களின் ஒரு முகத்தை காட்டியது என்றால், இங்கு கோடியக்கரையில் கிடைத்திருப்பவை மேலும் ஆச்சரியத்தை உண்டாக்குகிறது! எத்தனை துணிவு, எத்தனை திட்டம், அத்தனையும் தெளிவாகத்தான் அரங்கேற்றி உள்ளார்கள்! சாளுக்கியத்தின் நீண்ட வேர்கள் தேசத்தின் எல்லை வரை பரவி இருந்திருக்கிறது! நாம் அறியாத வேளையில் அத்தனையும் சாதுரியமாக நிறைவேற்றி உள்ளார்கள்! கோடியக்கரைப்  பகுதியை பயன்பாட்டில் கொண்டு வராமல் விட்டு வைத்தது எத்தனை பெரிய முட்டாள்தனமான காரியமாய் போய்விட்டது! இங்கிருந்து தானே பெரும் பெரும் திட்டங்கள் அரங்கேற்றப்பட்டு தேசத்தை சீரழிக்கும் வேலையைப் பார்த்து உள்ளார்கள்! இது பற்றி பற்றி உடனடியாக மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமான் அவர்களிடம் தெரிவித்தாக வேண்டும்!" எனப் பலவாறாக எண்ணிக் கொண்டிருந்தான் இளம்வழுதி! 

     "இந்தப் படகினை சதிகாரர்கள் தொடர்ந்து பயன்படுத்தியதற்கான அடையாளம் இங்கு உள்ளது தலைவரே"என்றான் அழகன்! 

      "நானும் அந்தத் தடத்தினை பார்த்ததும் புரிந்து கொண்டேன் அழகா!"

      "கடலின் வழியாக சாளுக்கியத்தோடு நீண்ட தொடர்பை சதிகாரர்கள் வைத்திருக்க வேண்டும்! அதன் காரணமாகத்தான் நம்மால் அவர்களை எளிதில் கண்டறிய முடியவில்லை போலும்! இத்தனை தூரம் வேரூன்றி இருந்தது நமக்குத் தெரியாமல் போனது பெரும் வருத்தமளிக்கிறது! " 

     "நமது கவனம் முழுவதும் தேசத்தில் அரங்கேறி வரும் சதிகாரர்களின் சதிராட்டத்தை வேரறுப்பதிலே கவனமாக இருந்து விட்டோம்! அது அவர்களுக்கு சாதகமாக போய்விட்டது! இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அத்தனை சதி திட்டங்களையும் திறம்பட செயலாற்றியது நமது தேசத்தைச் சார்ந்தவர் தான்! அதனால் தான் சதிகாரர்களின் முகங்களை நம்மால் எளிதில் எதிர்கொள்ள முடியவில்லை!"

     "நமது தேசத்தைச் சார்ந்த இவர்களுக்கு அப்படி என்ன வெறுப்பு சோழத்தின் மீது?"ஆவலுடன் கேட்டான் அழகன்!

      "நம்மோடு களமாடிய சதிகாரர்களுக்கு நம் மீது எந்த விதமான வெறுப்பும் இல்லை! நேர்வழியில் பயணம் செய்து பொருளீட்டும் திறமையற்ற கள்வர்களை பெரும் பொருள் காட்டி அவர்கள் பக்கம் இழுத்து விட்டார்கள்! அதநாள் விளைந்த விபரீதம் தான் இது!"

      "கேவலம் பொருளுக்காக தங்கள் இன்னுயிரையும் துச்சமாக மதிக்கும் அளவிற்கு சென்று விட்டார்களே! அதுதான் பெரும் கொடுமையாக உள்ளது! ஒரு மனிதன் இன்னுயிரையும் இத்தனை அற்பமாக எண்ணிக் கொள்வானா? அதுதான் எனக்கு பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது தலைவரே!"

     "இதில் வியப்பதற்கோ, ஆச்சரியப்படுவதற்கோ ஏதுமில்லை அழகா! என்னதான் பொருளுக்கு ஆசைப்பட்டு விலை போய் இருந்தாலும் கொடுத்த சத்தியத்தை காப்பாற்றும் உறுதி மிக்கவர்கள்! அதனால்தான் அவர்களை தேர்வு செய்து உள்ளார்கள்! அதுவே அவர்களின் பரிபூரண வெற்றிக்கு காரணமாக அமைந்துவிட்டது!"

      "தேசத்தில் எத்தனை எத்தனையோ அரும்பெரும் காரியங்கள் இருக்கும் பொழுது, தேசத்தை சீரழிக்கும் இந்த அற்ப காரியங்களுக்காக சத்தியம் என்ற பெயரில் வீணாக உயிர்களை பலி கொடுப்பது எந்த வகையில் நியாயமாக இருக்கும்? இன்னும் எத்தனை காலங்களுக்கு இவர்கள் இப்படி இருக்க போகிறார்கள்! இவர்களது அறியாமையும் அபத்தமான நிலைமையும் ஒன்றாய்ச் சேர்ந்து அவர்களை அழிப்பது மட்டுமல்லாமல் தேசத்தையும் ஒட்டுமொத்தமாக சீரழித்துக் கொண்டிருக்கிறது! இதற்கு ஒரு மாற்று வழி எப்பொழுதுதான் கிடைக்குமோ தெரியவில்லை தலைவரே!" என மிகுந்த வருத்தத்துடன் கூறினான் அழகன்! 

     "உனது நியாயம் எனக்கு புரிகிறது! நம் கையில் என்ன உள்ளது! நாமும் ஒவ்வொரு முறையும் அவர்கள் திருந்தி வாழ்வதற்கு வாய்ப்பை தந்து கொண்டு தான் இருக்கிறோம்! ஆனால் அவர்கள் அதனை பின்பற்ற தயாராக இல்லையே! மனமாற்றம் இன்றி வேறு எந்த மாற்றமும் அவர்களை சரி செய்து விட முடியாது! காலம்தான் அவர்களுக்கு நல்லதொரு புத்தியைக் கொடுத்து சீர் செய்ய வேண்டும்! "

      "இத்தனை சிறப்பு வாய்ந்த கலங்கரை விளக்கம் வைத்துக்கொண்டு அதனை முழு பயன்பாட்டில் கொண்டு வராமல் இருப்பது பெறும் அவலமாக  உள்ளது தலைவரே! "

      "நமது முன்னோர்கள் எதனையும் தீர்க்கமாக ஆலோசித்தான் காரியங்களை செயலாற்றி இருந்திருக்கிறார்கள்! அதனை வழி வழியாக பின்பற்றி வரும் நாம் தன் சரிவர பாதுகாக்காமல் விட்டு விட்டோம்! அதன் விளைவுதான் இங்கு நாம் பார்ப்பது! சோழ தேசத்தின் மாபெரும் மன்னர் பராந்தக சோழர் அவர்கள் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது தான் இந்த கலங்கரை விளக்கம்! எத்தனையோ ஆண்டுகள் கடந்து விட்ட பின்பும் கடற்கரையில் தனித்து கம்பீரமாய் காட்சி அளிக்கிறது! அப்போதெல்லாம் இங்கு பெருமளவில் பயன்பாட்டில் இருந்திருக்க வேண்டும்! அவரைத் தொடர்ந்து ஆட்சி கட்டில் ஏறிய பெரும் மன்னர்கள் இராஜராஜ சோழர் மற்றும் அவரது ஒரே மைந்தன் இராஜேந்திர சோழர் ஆகியோர் காலத்தில் இந்த கலங்கரை விளக்கம் பேணி பாதுகாத்ததோடு பயன்பாட்டிலும் இருந்திருக்கிறது! அவர்களுக்கு பின்னால் வந்த மன்னர்கள் கோடியக்கரை பகுதியை ஏனோ தெரியவில்லை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்கள்! அதனால் இங்கு சதிகாரர்கள் மறைந்து சதிராட்டம் போடுவதற்கு ஏற்றதாய் போய்விட்டது! இதனை மாதாண்ட நாயகர் கருணாகர தொண்டைமான் அவர்களிடம் விரிவாக எடுத்துரைத்து பேணி பாதுகாக்கும்படி செய்து விட வேண்டும்!"

      "தாங்கள் கூறிய மன்னர்கள் எத்தனை எத்தனையோ அரும்பெரும் காரியங்களை தமது காலத்தில் செயல்படுத்தி காட்டி விட்டு சென்று விட்டார்கள்! நாம் தான் அதனை சரிவர பின்பற்றவில்லை எனும்போது நெஞ்சம் வலிக்கிறது! "

     "நமக்கு குறைவான நாட்களே உள்ளது அழகா! விரைந்து நாம் செயல்பட வேண்டும்! அப்போதுதான் நெருங்கி வரும் பகையை வேரோடு சாய்க்க முடியும்! வரும் திங்களில் சதிகாரர்கள் எத்தனை பேர்கள் வருகிறார்கள் என நாம் அறியோம்! அதற்காக நாம் எதுவும் செய்யாமல் இருக்க முடியாது! அதற்கு வேண்டிய பணிகளை செய்து முடிக்க வேண்டிய இக்கட்டான சூழல் நமக்கு உள்ளது! விரைந்து நாம் செயல்பட வேண்டும்! நான் மாதண்ட நாயகரே உடனே சந்தித்து இதுகுறித்து ஆலோசிக்க வேண்டும்!  அதனால் வா புறப்படுவோம்"

       "அப்படி என்றால் இங்கு கண்காணிப்பு காவல் பணி ஏதும் செய்ய வேண்டாமா தலைவரே?"

     "இது என்ன கேள்வி அழகா? கண்டிப்பாக செய்ய வேண்டும்! அதை நோக்கித்தான் பயணிக்க விருக்கிறோம்! நான் மாதண்ட நாயகரை சந்திப்பதற்காக செல்கிறேன்!  நீ நாகை நோக்கிச் சென்று ஐம்பது பேர் கொண்ட படையினை அழைத்துக் கொண்டு இங்கு வந்து கண்காணிப்புப் பணியில் கவனமாக ஈடுபட வேண்டும்! நாம் ஏற்கனவே இங்கு கோடியக்கரை மூர்க்கன் தலைமையிலான கூட்டத்தை அடியோடு சாய்த்து விட்டோம்! அதன் காரணமாக தேசத்தின் வேறு பகுதியில் இருந்து வேறு யாரேனும் சதிகாரர்கள் இங்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது! அவ்வாறு வரும் சதிகாரர்கள் இங்கு உள்ள நிலவரத்தை பார்த்தால் கண்டிப்பாக கொதித் தெழுவது நிச்சயம்! அதன் பின்பு அவர்கள் எவ்வாறு செயலாற்றுவார்கள் என்பது நாம் அறியோம்! நாம் எதற்கும் தயாராக தான் இருக்க வேண்டும்! இனியும் எந்த விதமான தவறுகளும் நடக்காமல் பார்த்துக் கொள்வது நமது கையில் தான் உள்ளது! சதிகாரர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வந்து நிற்கலாம்! ஒருவேளை வரும் திங்களுக்கு முன்பாக கூட அவர்கள் வந்துவிடலாம்! எனவே எப்போதும் கடற்கரைபகுதியில் விழிப்போடு அல்லும் பகலும் காவல் பணி செய்து வர வேண்டும்! நீங்கள் காவல் பணி செய்து வருவது சதிகாரர்களுக்கு துளியும் தெரிந்துவிடக் கூடாது! "

      "தாங்கள் கூறியபடியே செய்து விடுகிறேன் தலைவரே!" என ஆமோதித்தான் அழகன்! 

      அதன்பின் இருவரும் தங்களது குதிரைகளில் ஏறி கோடியக் கரையை விட்டு புறப்பட்டு இருந்தார்கள்! 

     "தாங்கள் சென்று விட்டு எத்தனை நாட்களில் திரும்பி வருவீர்கள் தலைவரே!"

      "அது பற்றி தெரியவில்லை! ஆனால் எப்படியும் திங்களுக்கு முன்பாக வந்து விடுவேன்! அதனை மட்டும் உறுதியாக என்னால் கூற முடியும்! இங்கிருக்கும் நாட்களில் நீதான் அனைத்தையும் பொறுப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும்! நீ இருக்கும் தைரியத்தில் தான் நான் புறப்பட்டு செல்கிறேன்! உன் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது! எதையும் அவசரப்பட்டு செய்து விடாதே! மிக கவனமாக செயலாற்ற வேண்டிய காரியம் இது!"

      "என் மீது தாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு மாறாக நடந்து கொள்ள மாட்டேன் தலைவரே! இது நான் அளிக்கும் வாக்கு! அதிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்!"

        அதன்பின் இருவரும் ஏதும் பேசிக்கொள்ளாமல் நாகை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்கள்! 

        இரு நாழிகை முழுவதுமாக கடந்து விட்டிருந்த பொழுது தஞ்சையின் பெருவழி சாலையை சந்திக்கும் இடத்திற்கு இருவரும் வந்து விட்டிருந்தார்கள்! 
    
       "நான் மாதண்ட நாயகரை சந்தித்து விட்டு வருகிறேன் அழகா! நான் ஏற்கனவே கூறியது போல் நீ கவனமாக செயல்படு! வருகிறேன்!"எனக் கூறினான் இளம்வழுதி!  தஞ்சைப் பெருவழிச் சாலையில் அவனது குதிரை பாய்ந்தோடி கொண்டிருந்தது! 

        "வெற்றியுடன் திரும்புங்கள்  தலைவரே! உங்களுக்காக கோடியக்கரையில் காத்திருப்பேன்!"என தஞ்சை பெருவழியில் சென்று கொண்டிருந்த இளம்வழுதியைப் பார்த்துக் கூறிவிட்டு நாகை நோக்கி தனது குதிரையை தட்டி விட்டிருந்தான் அழகன்! 

 (தொடரும்..... அத்தியாயம் 79 ல்)
       



Tuesday, 25 February 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 77

🌾77. கோடியக்கரை கலங்கரை விளக்கம்🌾 
       ஓலையில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை பார்த்ததும் பெரும் வியப்பில் ஆழ்ந்து போனான் இளம் வழுதி!

       அதுவரையில் குடிசையின் மற்ற பகுதியை துழாவிக் கொண்டிருந்த அழகன் எதேச்சையாக திரும்பியவன் இளம்வழுதியின் வியப்பில் ஆழ்ந்த வதனத்தைக் கண்டு அருகில் வந்தான்! 

      "தாங்கள் வியக்கும் அளவிற்கு இந்த ஓலையில் அப்படி என்ன உள்ளது?"என இளம் வழுதியிடம் கேட்டான் அழகன்! 

       கையில் இருந்த ஓலையை அழகனிடம் கொடுத்தான் இளம்வழுதி!

      "முழுமதி கடந்து வரும் திங்களன்று கப்பலில் நமது வீரர்கள் வருவார்கள்! அவர்களைக் கொண்டு நாகையைச் சூறையாடி விடு! 
                                      --   சாளுக்கியவர்மன் "
என அவ்வோலையில் எழுதி இருந்தது!

      "இது என்ன தலைவரே புதிதாக போர்மேகம் சூழ்ந்துள்ளது? இப்போதுதான் கோடியக்கரை மூர்க்கன் கூட்டத்தினை கூண்டோடு அழித்தோம்! கையில் உள்ள குருதி காய்வதற்குள் மீண்டும் அடுத்த யுத்தத்திற்கான அறிவிப்பு தொடங்கிவிட்டது போல் உள்ளதே? "
      "நீ கூறுவது சரிதான்! பிரச்சனை இத்தோடு முடிவதாக தெரியவில்லை! சூழ்ந்துள்ள போர் மேகம் பெரும் விபரீதத்தை விளைவிக்கும் தன்மையில் உள்ளது! "

        "ஆமாம்! யார் அந்த சாளுக்கியவர்மன்?"

        "அவன் பெயரில் தான் தெளிவாக உள்ளதே!"

        "அவனது பெயரைக் கொண்டு சாளுக்கியன் என்பதை அறிந்து கொண்டேன்! இருப்பினும் அவன் யார் என்று எனக்கு புரியவில்லை?"

       "சாளுக்கிய மன்னன் விக்ரமாதித்தனின் படைத்தலைவர்கள் ஒருவன் மட்டுமின்றி மன்னனின் நெருங்கிய நண்பனுமாவன் இந்த சாளுக்கியவர்மன்! இதுவரையில் நமது தேசத்தில் நடைபெற்றுக் கொண்டு வந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் மூல காரணம் சாளுக்கியர்கள் என்பதற்கு உனது கையில் உள்ள இந்த ஓலையே சாட்சியாகிவிட்டது! இப்படி ஒரு ஆதாரத்தை தான் தேடிக் கொண்டிருந்தோம்! அந்த மட்டிலும் நம் கையில் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது!"

      "இப்போது புரிகிறது! ஓலையைக் கண்டதும் தங்கள் வதனத்தில் உண்டான பெரும் மகிழ்விற்கான காரணம்! மேற்கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?"

      "சூழ்ந்துள்ள போர் மேகம் குறித்து மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமான் அவர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்! எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்து விட முடியாது! இதுவரை இங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது ஏதோ சதிகாரர்களின் சதிச்செயல்கள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தோம்! ஆனால் சோழத்தின் ஆணி வேரையே அசைத்து பார்க்கும் பெரும் சதிராட்டத்திற்கான ஆரம்பப் புள்ளிகள்  இவை என்பது இப்போது தான் தெரிகிறது! இதனை சரியான முறையில் கையாண்டு தடுக்காவிடில் தேசம் சுக்கு நூறாய் வெடித்துச் சிதறி போய்விடும்! அதுதான் சதிகாரர்களின் பிரதான திட்டமாக இருக்கும் போலும்! அதற்கு நாம் எந்த வகையிலும் இடம் கொடுத்து விடக்கூடாது!"

       "முழு நிலவு கடந்து இன்றோடு இரண்டாவது நாள் ஆகிவிட்டது! நமது கையில் அதிக நாட்கள் இல்லையே தலைவரே!"

      "ஆமாம் நானும் அதைத்தான் எண்ணிக்கொண்டு உள்ளேன்! சரியான நேரத்தில் சரியான சமயத்தில் சரியாகத் திட்டமிட்டு தான் சதிகாரர்களை கூண்டோடு அழிக்க வேண்டும்! அதற்கு வேண்டிய வேலைகளை தொடங்க வேண்டும்! "

       "நீங்கள் மேற்கொள்ளும் எந்த முடிவிற்கும் நான் உறுதுணையாக இருப்பேன் தலைவரே!"

      "அதனை நான் நன்கு அறிவேன் அழகா!"

       "நன்றி தலைவரே!"

       "குடிசைக்குள்  உனக்கு வேறு ஏதேனும் கிடைத்ததா?"

     "பெரிதாக ஒன்றும் இல்லை தலைவரே! "

      "அப்படி என்றால் சரி புறப்படு!"

       "இப்போது எங்கு செல்கிறோம்?"

        "கோடியக்கரை கலங்கரை விளக்கத்திற்கு  செல்வோம்!"எனக் கூறிக் கொண்டே தனது குதிரையை நோக்கி விரைந்து சென்றான் இளம்வழுதி! அவனை அடியொற்றி பின் தொடர்ந்து கொண்டிருந்தான் அழகன்!

        குதிரைகளில் ஏறிய இருவரும் கோடியக்கரை கலங்கரை விளக்கத்தை நோக்கி விரைந்து சென்று கொண்டிருந்தார்கள்! 

        ஒரு நாழிகை முழுவதுமாக கடந்து விட்டிருந்தது! கோடியக்கரை கடற்கரையில் இளம் வழியும் அழகனும் தங்கள் குதிரைகளில் ஆரோகணித்தபடி சென்று கொண்டிருந்தார்கள்! 

       நண்பகலை கடந்து விட்டிருந்த காரணத்தால் ஆதவனின் வெம்மையான கண்ணைப் பறிக்கும் மஞ்சள் ஒளி கோடியக்கரை கடலில் விழுந்து எதிரொலித்துக் கொண்டிருந்தது! ஆர்ப்பரித்த கடல் தன் அலைகளை கரையை நோக்கி செலுத்தி முத்தமிட்டு மீண்டும் கடலுக்குள் திரும்பிக் கொண்டிருந்தது! கரை நெடுக செழித்து வளர்ந்து கிடந்த சுர புன்னை மரங்கள் கடல் காற்றின் தாளத்திற்கு ஏற்ப நடனமாடிக் கொண்டிருந்தது! அலைகடலை மிஞ்சும் ஆர்ப்பரிக்கும் மனதோடு குதிரையில் சென்று கொண்டிருந்த இளம்வழுதி தனது குதிரையிலிருந்து கடற்கரையில் குதித்து நின்றான்! அவனது கால்களை தழுவிக் கொண்டிருந்த அலை நீரின் வருடலையும் பொருட்படுத்தாமல் தூரத்தில் தெரிந்த கலங்கரை விளக்கத்தையும் கடலையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்!  

         கலங்கரை விளக்கத்தை நோக்கி சென்று கொண்டிருந்த இளம்வழுதி திடீரென நின்றதால் அழகனும் தனது குதிரையை நிறுத்திவிட்டு அவன் அருகே வந்து நின்று கொண்டான்! 

        சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை! அலைகடலை மிஞ்சும் அளவிற்கு இருவரது மனமும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது! 

      எண்ணத்திற்கு வண்ணம் சேர்க்க எண்ணினான் போலும் இளம்வழுதி! கலங்கரை விளக்கத்தை நோக்கி மெதுவாக நடக்கத் தொடங்கினான்! அவனைத் தொடர்ந்து அவனது குதிரையும் அழகனும் தன் குதிரையோடு பின் தொடர்ந்தார்கள்! 

       கடலில் இருந்து கிளம்பிய குளுமையான காற்று ஆதவனின் வெம்மை படிந்த உடலுக்கு ஒத்தடம் கொடுத்தது போல் இருந்திருக்க வேண்டும்! அதனை இளம்வழுதியும் அழகனும் உணர்ந்தார்களோ இல்லையோ அவர்களது குதிரைகள் தங்கள் உடலை சிலுப்பிக்கொண்டு நடந்து கொண்டிருப்பது மூலம் அறிவித்துக் கொண்டிருந்தது!

       ஓங்கி உயர்ந்து சுண்ணம் கலந்து செங்கற்களால் கட்டப்பட்டு இருந்தது கலங்கரை விளக்கம்! கடலில் பயணிப்பதற்கு வழிகாட்டியாக கம்பீரமாக காட்சி தந்து கொண்டிருந்தது கோடியக்கரை  கலங்கரை விளக்கம்!

       கலங்கரை விளக்கத்தின் நீள  அகலங்களை பெரும் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் அழகன்! வானைத் தொட்டுவிடும் உயரத்திற்கு ஓங்கி உயர்ந்து நின்று கொண்டிருந்ததை எண்ணி வியந்து போனான்! தனது குதிரையை அங்கே நிறுத்திவிட்டு கலங்கரை விளக்கத்தில் படிகளில் மள மளவென்று மேல் ஏறிச் சென்று கொண்டிருந்தான் இளம்வழுதி! அவனைத் தொடர்ந்து அழகனும் வந்து கொண்டிருந்தான்! நீண்ட காலமாக பயன்படுத்தாமல் விட்டிருந்ததால் ஆங்காங்கே அழுக்கும் தூசியும் படிந்து கிடந்தது! நூலாம்படை எங்கும் பரவி கிடந்தது! ஒரு வழியாக அங்கு கிடந்த குச்சியை வைத்துக்கொண்டு நூலாம்படையை அகற்றிக்கொண்டு இளம்வழுதியும் அழகனும் சென்று கொண்டு இருந்தார்கள்! உச்சிக்குச் செல்லும் படிக்கட்டின் சில படிகள் உடைந்து போய் காணப்பட்டன! சரியான பராமரிப்பும் பயன்பாடும் இல்லாத காரணத்தால் அவ்வாறு இருந்தது போலும்! உறுதியான அதன் கட்டுமானத்தால் பயன்படுத்தாத போதும் கடற்கரையில் நிலைத்து காவல் பணி செய்து கொண்டிருந்தது! 

       கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதியில் விறகுகள் குவிந்து காணப்பட்டன!  நீண்ட வருடங்களுக்கு முன்பு எப்போதோ மூட்டியிருந்த நெருப்பின் சுவடு காணப்பட்டது! உச்சியில் நின்று சென்று கொண்டு கடலைப் பார்த்துக் கொண்டிருந்த இளம்வழுதி மற்றும் அழகனது விழிகளுக்கு தூரத்திற்கு வெகு தூரம் வரை நீண்ட கடலின்  பரிமாணம் முழுவதும் காட்சியளித்துக் கொண்டிருந்தது! ஆதவனின் சுடு கரங்கள் உடல் முழுவது வியாபித்து கடந்த போதும் அவை துளியும் தெரியாத வண்ணம் கடலிலிருந்து கிளம்பி வந்த குளுமையான காற்று போர்வையாக அவர்கள் மீது போர்த்தி இருந்ததாலோ என்னவோ அதன் குளுமையை இரசித்துக்கொண்டிருந்தார்கள்!

        நாளபுறமும் தமது விழிகளை சுழற்றிக் கொண்டிருந்த இளம்வழுதியும் அழகனும் தங்களுக்கு பின்னால் தெரிந்த அடர்ந்த கோடியக்கரை காடு முழுவதும் அங்கிருந்து  வியப்பில் வியந்து போய் அதனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! 

      ஒருபுறம் ஆர்ப்பரிக்கும் அலைகடல்! கரை நெடுக சுரபுன்னை மரங்கள்! கடலுக்கு காவல் தெய்வமாய் குழகர் கோயில்! தனித்து ஓங்கி நிற்கும் கலங்கரை விளக்கம்! நீண்டு பரவிக் கடந்த அடர்ந்த வனம்! ஆள் அரவமற்ற சூழல்! இதற்கு நடுவில் சதிகாரர்களின் குடிசை! அப்பப்பா! நினைக்கும் போதே எத்தனை எத்தனை வியப்புகளும் ஆச்சரியங்களும் உண்டாகின்றன! இவையெல்லாம் தெரிந்து கொண்ட சதிகாரர்கள் திறமையானவர்கள் தான்! வெகு காலமாய்  கோடியக்கரை பகுதியை சோழம் கண்டு கொள்ளாமல் விட்டிருந்தது அவர்களுக்கு வாய்ப்பாய் போய்விட்டது! இத்தனை சிறப்பு வாய்ந்த பகுதியை ஏன் தான் பராமரிப்பின்றி விட்டு வைத்தார்களோ தெரியவில்லை! உடனடியாக இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்க வேண்டும்! அப்பொழுதுதான் இனிமேல் இது போன்ற அநியாயம் நடைபெறாமல் தடுக்க முடியும்! அதற்கு குழகர் கோயில் எம்பெருமான் துணை புரிய வேண்டும்! சூழ்ந்து வரும் ஆபத்தை வேரோடு சாய்க்கும் வலிமையைத் தாருங்கள் எம்பெருமானே! என குழகர் கோயில் கோபுரத்தை பார்த்து வணங்கிக் கொண்டிருந்தான் இளம்வழுதி! 

       நீண்ட அலைகளை கடற்கரையில் நீட்டித் தழுவிக் கொண்டிருந்தது கோடியக்கரை கடல்! கலங்கரை விளக்கத்தின்  வலது புறத்தில் விரைவிக் கிடந்த சுர புன்னை மரங்கள் சூழ்ந்த பகுதியில் கடல் நீர் உள்ளே சென்று திரும்பி கொண்டிருந்தது! அவற்றின் ஓர் இடத்தில் ஏதோ ஒன்று இருப்பது போல் தெரியவே, அதனை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த இளம்வழுதி அவை என்னவென்று அறிய முற்பட்டவன், விடு விடு வென படிகளில் இருந்து கீழே இறங்கி ஓட்டமும் நடையுமாக அங்கு சென்று பார்த்த போது அவனது விழிகள் ஆச்சரியத்தில் மூழ்கின!

(தொடரும்..... அத்தியாயம் 78 இல்)
       



Monday, 24 February 2025

இராஜமோகினி - யாழிசை செல்வா அத்தியாயம் 76

🌾76. கோடியக்கரை மூர்க்கனோடு இளம்வழுதி மோதல்🌾

       மீதி இருந்த நால்வரையும் இளம்வழுதியும் அழகனும் எதிர்கொள்ள தயாரானார்கள்! 

      சிறிது நேரத்திற்கு உள்ளாகவே தமது நண்பர்கள் அனைவரும் சிவலோகத்தை அடைந்து விட்டதை எண்ணி ஒரு கணம் மிரண்டு போனதை அவர்களது முரட்டு விழிகள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தன! 

     "இன்னும் என்ன பார்த்துக் கொண்டு நிற்கிறீர்கள்? இதற்காகத்தானா உங்களை இத்தனை காலம் சோறு போட்டு வளர்த்தது? சோற்று முண்டங்களே! விரைவாகச் சென்று அவர்களை வெட்டிச் சரியுங்கள்! உம்! ஆகட்டும்!"என முரடர்களை பார்த்து மிரட்டிக் கொண்டிருந்தான் கோடியக்கரை மூர்க்கன்! 

      தெரிந்தே மரணத்தை நோக்கி செல்லும் துயரத்துடன் தங்களது வாள்களை சுழற்றிக்கொண்டு இளம்வழுதியும் அழகனையும் எதிர்கொண்டார்கள் மீதம் இருந்த நான்கு முரடர்களும்!

     தொடர்ந்த அவர்களது தாக்குதலை எளிதாக எதிர்கொண்டாலும் சிறிது நேரம் போக்கு காட்ட எண்ணினார்கள் போலும்! அப்படியும் இப்படியுமாக முரடர்களை மாறி மாறி தாக்கி கொண்டிருந்தார்கள் இளம்வழுதியும் அழகனும்! 

      தனக்கு இடது புறமாக வந்த இரண்டு முரடர்களை படீர் படீரென தனது வாளால் தாக்கிக் கொண்டிருந்த இளம்வழுதி, நேரத்தை வீணாக்க விரும்பாமல் சதக் சதக் கென்று இருவரது தலைகளையும் கொய்திருந்தான்! அதே நேரத்தில் தனது வலது புறமாக சுற்றி வளைத்துக் கொண்டிருந்த இருவரையும் எதிர்கொண்டிருந்த அழகன் தன் பங்கிற்கு அவர்களது வாள்களை தட்டி பறக்கவிட்டதோடு  இருவரது தலைகளையும் பந்தாடி விட்டிருந்தான்! 

       மீதம் இருந்த நால்வரும் சரிந்து விழும் சத்தம் கேட்டதும் அனல் கக்கும் விழிகளால் எரித்தபடி தன் இடையில் இருந்த குரு வாள் ஒன்றை எடுத்து இளம்வழுதியின் நெஞ்சுக்கு குறி வைத்து வீசியிருந்தான் கோடியக்கரை மூர்க்கன்! 

     கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்து விட்டிருந்த திடீர் தாக்குதலை பார்த்து விட்டிருந்த அழகன், தனது குறுவாளால் கோடியக்கரை மூர்க்கன் வீசிய குறு வாளைத் தட்டி கீழே விழச் செய்து இருந்தான்!

      தனது குறி தப்பிய கோபத்தில் அழகனை நோக்கி தனது நீண்ட  பெரிய வாளை  உருவிக்கொண்டு அவன் மீது பாய்ந்து விட்டிருந்தான்! 

      திடீரென நிகழ்ந்த தாக்குதலால் நிலைகுலைந்து போனான் அழகன்! கீழே தடுமாறி சரிந்தும் விட்டிருந்தான்! இதுதான் சமயம் என்று அவனை இரண்டாக வெட்டிப் பிளக்க வாளை ஓங்கிய போது, இளம்வழுதி நின்ற இடத்தில் இருந்து எகிரி குதித்து தனது வாளால் கோடியக்கரை மூர்க்கனின் கொடூரத் தாக்குதலை தடுத்து விட்டிருந்தான்! 

      "நீ விலகிச் செல்! இவனது முடிவு எனது கரத்தால் நிகழ வேண்டும்! இதுவரையில் அற்புதமாகவும் திறமையாகவும் சண்டையிட்டாய்! அத்தோடு எனது உயிரையும் உரிய நேரத்தில் காத்து விட்டாய்! அதற்கு நான் பெரும் கடமைப்பட்டு உள்ளேன்!  நீ அப்பால் போய்விடு!" என அழகான பார்த்து கூறிக் கொண்டே கோடியக்கரை மூர்க்கனின் முரட்டுத்தனமான வாள் வீச்சை தடுத்துக் கொண்டிருந்தான் இளம்வழுதி! 

     அங்கிருந்த மற்ற முரடர்கள் போல் இல்லாமல் தனது தேர்ந்த வித்தைகளை காட்டிக் கொண்டிருந்தான் கோடியக்கரை மூர்க்கன்! திறமையாகவும் லாவகமாகவும் சண்டையிட்டதோடு வாய்ப்பு கிடைக்கும்போது எதிரியை வெட்டிச் சரிக்கும் வேகத்தில் இருந்தது கோடியக்கரை மூர்க்கனின் தாக்குதல்!

      "பரவாயில்லை! மிகத் திறமையாக தான் வாளை வீசுகிறாய்! இந்தத் திறமை அனைத்தும் உனது அழிவிற்கு தான் பயன்படுத்திக் கொண்டாய்! நீ மட்டும் இதனை தேசத்தின் நலனுக்காக பயன்படுத்தியிருந்தால் இன்னும் எத்தனையோ அரும்பெரும் காரியங்களை சாதித்து இருக்கலாம்! அல்லது உனது திறமைகளை கற்றுக் கொள்ள நினைக்கும் இளைஞர்களுக்கு கற்றுக் கொடுத்திருந்தால், அதனால் இன்னும் நிறைய சோழ வீரர்கள் நம் தேசத்திற்கு கிடைத்திருப்பார்கள்! அதனால் உனக்கும் பெரும் புகழ் கிடைத்திருக்கும்! அதனை விடுத்து உனக்கும் பயன் இல்லாமல் தேசத்திற்கும் நலமில்லாமல் செய்யும் துரோகத்தை பாதையாக தேர்வு செய்து கொண்டாய்! அதனால் உன் வாழ்வு பெரும் துயரத்தில் தான் முடிய போகிறது! இது தேவைதானா இன்று இப்பொழுது கூட முடிவெடுக்கலாம்! காலம் கடந்து விடவில்லை! உன் தவறை ஒத்துக் கொண்டு சரண் அடைந்தால் உனக்கு கௌரவமான ஒரு பணியை வாங்கித் தர என்னால் முடியும்! என்ன சொல்கிறாய்?"என அவனுடன் மோதிக்கொண்டே கோடியக்கரை மூர்க்கனைப் பார்த்து கேட்டான் இளம்வழுதி!

   "இது என்ன புதிய யுக்தியா ? அல்லது எதிரியை தோற்கடிக்க நீ மேற்கொள்ளும் நயவஞ்சகமா? கடைசியில் இப்படி வந்து சிக்கிக் கொண்டாயே! உன்னை நினைத்தால் எனக்கு பாவமாகத்தான் உள்ளது! நான் அப்போதே கூறினேன், தப்பி ஓடி விடு என்று! நீதான் பிடிவாதமாக மறுத்ததோடு சாவுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறாய்!" என எள்ளி நகையாடிக்கொண்டே சண்டையிட்டுக் கொண்டிருந்தான் கோடியக்கரை மூர்க்கன்!

     "உன் போன்ற மதிகெட்டவர்களுக்கெல்லாம், எத்தனை சொன்னாலும் புத்தி வரப்போவதில்லை! உனது கீழ்த்தரமான எண்ணம் எங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது என எண்ணியிருந்தால் இவ்வாறு பேச மாட்டாய்! உன்னை நம்பி வந்த அத்தனை பேரும் பிணமாய் கிடக்கிறார்கள்! அதனைப் பார்த்த பின்பும் உனக்கு புத்தி வரவில்லை என்றால் இனி கூறுவதற்கு என்ன உள்ளது! அழிவின் பாதையை தேர்வு செய்த நீ அதிலிருந்து வெளியேறும் வழியை காட்டினாலும் அதில் தான் விழுந்து புரள்வேன் என்று அடம் பிடித்தால் நான் என்ன செய்ய முடியும்!"

    "உனக்கு பயமாக இருந்தால் இப்போதும் கூறுகிறேன் நீ ஓடிவிடு! உன்னை மன்னித்து விடுகிறேன்! அதை விடுத்து என்னிடம் தேவையில்லாமல் கதை பேசிக்கொண்டு காலத்தை கடத்தாதே! இதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை! " 

      "இது நீயாக தேடிக்கொண்ட முடிவு! சொன்னாலும் நீ கேட்கப் போவதில்லை! " என்றான் இளம்வழுதி!

        "எனக்கு பாடம் சொல்லித் தரும் அளவிற்கு உனக்கு யோக்கியதை இல்லை பொடியா? பேச்சை விடுத்து வாள் வீச்சில் உன் திறமையைக் காட்டு!"என மீண்டும் இளம்வழுதியை பார்த்து எள்ளி நகைத்தான் கோடியக்கரை மூர்க்கன்! 

        தான் நின்ற இடத்தில் இருந்தபடியே தனது முன்னங்கையை நீட்டி அப்படி இப்படியுமாக வாளைச் சுழற்றினானேயன்றி சிறிதும் முன் நகர்ந்தான் இல்லை இளம்வழுதி! 

     எத்தனை தான் திறமையாக சண்டையிட்டுக் கொண்டிருந்தாலும் தன் பெரிய உடலை தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் குதித்துத் குதித்து  தாக்கியதோடு, தன் சக்தி அனைத்தையும் பயன்படுத்தி சண்டையிட்டுக் கொண்டிருந்தான் கோடியக்கரை மூர்க்கன்!

      இருவரது சண்டையையும் தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அழகன் தனது விழிகளை ஒரு கணமும் அவர்கள் மேலிருந்து அகற்றினானில்லை! 

      ஏறக்குறைய ஒரு நாழிகை நேரம் தாண்டி நீண்டு கொண்டிருந்தது இருவரது தாக்குதலும்! 

      ஒரு கட்டத்தில் தனது உடலின் சக்தி அனைத்தையும் உறிஞ்சி எடுத்த பிரமையில் ஆழ்ந்திருந்தான் கோடியக்கரை மூர்க்கன்! அந்த வேளையில் அவனது வாளைப் படீரென தாக்கிய இளம் வழுதி சரக் சரக்கென இரு முறை கோடியக்கரை மூர்க்கனை தாக்கியதும் அவனது இரண்டு கரங்களும் துண்டாகி கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தன!  வெட்டப்பட்ட இடத்திலிருந்து குருதி பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது! 

       "நாகையின் பெரும் மனிதர் சூரியவர்மர் அவர்களை கொடூரமாக கொன்ற உனக்கு மரணத்தின் வலி என்னவென்று தெரியாதல்லவா.... அதற்காகத்தான் இந்தத் தண்டனை"  என்றவன் கோடியக்கரை மூர்க்கனின் இரண்டு கால்களையும் வெட்டி வீசி எறிந்தான்! கை கால்கள் துண்டாக்கப்பட்ட அவனது பெரிய உடல் தடாலெனக் கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தது! வெட்டப்பட்ட இடத்திலிருந்து குருதி பெருகிக்கொண்டிருந்தன!  கோடியக்கரை மூர்கனின் முரட்டு விழிகள் வெறித்துப் போய் கிடந்தன!

       கோடியக்கரை மூர்க்கன் அருகே வந்த இளம்வழுதி "நாகையில் நீ செய்து வைத்த எத்தனையோ கொடூர செயல்களுக்கு எல்லாம் இன்று முழுவதுமாக தண்டனை கொடுக்கப்படுகிறது! எனது தந்தை பிரும்மாராயரும் வைத்தியருமான குமார மள்ளர் மற்றும் எனது அன்னை வடிவு ஆகியோர் கொடூர மரணத்திற்கு தண்டனை தான் இது" என்றவன் கோடியக்கரை  மூர்க்கனின் நெஞ்சில் சதக் சதகென இரு முறை தனது வாளைப் பாய்ச்சி இழுத்து விட்டிருந்தான் இளம்வழுதி!   தொடர்ந்து அவனே " தஞ்சை பெரும் வணிகர் செங்காணரின் கொடூர மரணம் மேலும் சோழ தேசம் முழுவதும் நீ செய்து வைத்த துரோகத்தின் மற்ற செயல்களுக்காக" எனக் கூறிக் கொண்டே மீண்டும் அவனது நெஞ்சில் தனது வாழைப்பாய்ச்சி இழுத்து விட்டான் இளம்வழுதி! அவ்வளவுதான் உடலில் ஒட்டிக் கொண்டிருந்த சிறிது உயிரும் சிட்டாக பறந்து விட்டிருந்தது! கோடியக்கரை மூர்க்கனின் விழிகள் வானத்தைப் பார்த்து வெறித்துக் கிடந்தன! 

       தொலைவில் நின்று அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அழகன், இளம்வழுதியை நோக்கி வந்து அவனது அருகில் வந்து நின்றான்!

      "ஒருவழியாக அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வந்து விட்டது இப்பொழுது! இதற்காக எத்தனை மனிதர்கள்! எண்ணற்ற துயரங்களையும் சுமக்க வேண்டியதாய் போய்விட்டது! அவை அனைத்திற்கும் இன்றோடு முடிவுரை எழுதப்பட்டு விட்டது! இப்பொழுதுதான் நிம்மதியாக உள்ளது!"என இளம்வழுதியை பார்த்துக் கூறினான் அழகன்! 

     "நீ கூறுவது என்னவோ உண்மைதான்! சதிகாரர்களின் சதிராட்டத்தால் நாகை மட்டுமல்ல ஒட்டுமொத்த சோழ தேசத்தையும் பெரும் அபாயத்தில் கொண்டு போய் தள்ளி விட்டார்கள் இந்த சதிகாரர்கள்! அவர்களால்தான் நாகையின் அசைக்க முடியாத பெரும் சக்தியான மணிக் கிராமத்தார் சூரிய வர்மர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்! இறுதிவரை அவரை நேரில் சந்திக்கவும் அவரோடு பழகவும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது! இவை அனைத்திற்கும் இந்த சதிகாரர்கள் தான் காரணம்! அதையெல்லாம் நினைக்கும் போது இவர்களை அழித்ததை எண்ணி சிறிதும் மன வருத்தம் உண்டாகவில்லை!"

      "ஆமாம் நீங்கள் கூறுவது மிகச் சரிதான்! இன்னும் விட்டு வைத்திருந்தால் எத்தனையோ கொடூரமான செயல்களை எல்லாம் செய்திருப்பார்கள்! நாம் யோசிக்கும் முன்பாகவே பல காரியங்களை செய்து விட்டிருந்தார்கள் இவர்கள்! அப்பப்பா நினைக்கும் போதே நெஞ்சம் கொதிக்கிறது! ஒரு வழியாக இவர்களை ஒழித்ததன் மூலம் தேசம் நிம்மதியாக இனி மூச்சு விடும்! அதனை நினைக்கும் போது தான் நெஞ்சில் ஒருவித நிம்மதி உண்டாகிறது!"

      "சரி வா! அவர்களது குடிசையில் தேடுவோம்! நமக்கு ஏதேனும் ஆதாரங்கள் கிடைக்கலாம்!"என்றபடி அங்கிருந்த குடிசை நோக்கி சென்று கொண்டிருந்தான் இளம்வழுதி! அழகனும் மறு பேச்சின்றி அவனைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தான்! 

      சதிகாரர்களுக்கு தேவையான உணவு தானியங்கள் சிறிதும், ஆடை ஆபரணங்கள் மிகுதியாகவும், உணவு சமைப்பதற்கு தேவையான பாத்திரங்கள் மற்றும் எண்ணற்ற குறுவாட்கள், கத்திகள், ஈட்டிகள் என அங்கிருந்த மூலையில் அனைத்தும் கிடந்தன! 

     இடதுபுற மூலையில் சிறியதொரு மரப்பெட்டி ஒன்று இருந்தது! அதனை நோக்கி சென்ற இளம் வழுதி  திறந்து பார்த்தான்! பெட்டிக்குள் மூலிகை தைலங்களும், குளிகை உருண்டைகளும் சிறிய குவளையில் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன! எழுதப்படாத எண்ணற்ற ஓலைச்சுவடிகள் கட்டு கட்டாய் உள்ளே கிடந்தன! அவற்றையெல்லாம் அள்ளி அப்புறப்படுத்தி கொண்டிருந்தான் இளம்வழுதி! மீண்டும் துழாவிய போது பெட்டியின் கீழ் பகுதியில் எழுதப்பட்ட ஓலை ஒன்று கிடைத்தது! அந்த ஓலையில் உள்ள வாசகத்தை பார்த்ததும் இளம்வழுதியின் விழிகள் வியப்போடு அதனைப் பார்த்துக் கொண்டிருந்தன! 

(தொடரும்..... அத்தியாயம் 77 ல்)
      


Saturday, 22 February 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 75

     🌾75. கோடியக்கரை மூர்க்கனின் ஆவேசமும் இளம்வழுதியின் பதிலும்!🌾

      "பத்திற்கும் மேற்பட்ட முரடர்கள் அங்குள்ள குடிசையில் இருக்கிறார்கள்! நாம் விரைந்து சென்று அவர்களை மடக்கி பிடிக்க வேண்டும்! இன்று இங்குதான் அவர்களுக்கு முடிவுரை எழுதப்பட வேண்டும்!"என அழகனிடம் இளம்வழுதி கூறினான்!

     "ஆகட்டும்! இதற்குத்தானே இத்தனை நாட்கள் காத்திருந்தீர்கள்! சூரியவர்மரின் கொடூர மரணத்திற்கு கண்டிப்பாக அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும்! மேலும் இவர்களால் எண்ணற்ற கலவரங்கள் தேசம் முழுவதும் நடந்தேறிவிட்டது! "என்றான் அழகன்! 

      முரடர்கள் தங்கி இருக்கும் குடிசைக்கு சென்ற பின்பு அடுத்தடுத்து எவ்வாறு செயல்பட வேண்டும் என விளக்கமாக அழகனிடம் எடுத்துக் கூறிவிட்டு, எதிரே இருந்த மணல்மேட்டை நோக்கி தனது குதிரையில் மெதுவாக சென்று கொண்டு இருந்தான் இளம்வழுதி! 

       அவனைத் தொடர்ந்து அழகனும் அடியொற்றி சென்றான்! 

       மணல்மேட்டில் நின்று கொண்டு எதிரே தெரிந்த குடிசையும் அங்கு உள்ள சூழ்நிலையும் ஒரு கணம் நோட்டமிட்டான் இளம்வழுதி! அதன்பின் எதுவும் பேசிக்கொள்ளவில்லை!

        மணல்மேட்டிலிருந்து படுவேகமாக இருவரது குதிரைகளும் குடிசை நோக்கி புழுதி பறக்க தடதடவென்று பாய்ந்தோடிக் கொண்டிருந்தன! 

     திடீரென குடிசை நோக்கி இரண்டு குதிரைகளின் குளம்பொளிச் சத்தம் கேட்டதும் குடிசையிலிருந்த முரடர்கள் கூட்டமாக வெளியே வந்து பார்த்தார்கள்! அந்தக் கூட்டத்தின் முன்னால் நின்று கொண்டிருந்த அவர்களின் தலைவன் கோடியக்கரை மூர்க்கன் அவனது விழிகளால் தனது நண்பர்களுக்கு ஏதோ சைகை செய்தான்! உடனே அங்கிருந்த அத்தனை பேரும் குடிசைக்குள் சென்றுவிட்டார்கள்! 

       அப்போது புழுதிப் புயலை கிளப்பி விட்டபடி பாய்ந்தோடி வந்த இளம்வழுதியும் அழகனும், தங்கள் குதிரைகளை குடிசையின் முன்பாக நின்று கொண்டிருந்த கோடியக்கரை மூர்க்கனை நோக்கி  செலுத்தி வந்து அரை வட்டமடித்து நிறுத்தினார்கள்! 

      இருவரையும் அலட்சியமாக பார்த்தபடி இடுப்பில் இரு கைகளையும் ஊன்றி கொண்டு கம்பீரமாக நின்று கொண்டிருந்தான் கோடியக்கரை மூர்க்கன்! 

     தென்னம் கீற்று ஓலைகளை வைத்து வேயப்பட்ட அங்கிருந்த குடிசை ஆழ்ந்த அமைதியில் கிடந்தது!

       "யார் நீங்கள்? உங்களுக்கு இங்கு என்ன வேலை? " தனது விழிகளில் கோபக்கினியை கொழுந்து விட்டு எரியச் செய்தபடி  இருவரையும் பார்த்து கேட்டான் கோடியக்கரை மூர்க்கன்! 

      "யார்? யாரைப் பார்த்து கேட்பது? எதையும் பேசுவதற்கு முன்பாக நன்றாக யோசித்து விட்டு பேசிக் கொள்! நீ பேசும் வார்த்தைக்கு நீயே பொறுப்பு! "என எச்சரிக்கும் தோரணையில் தனது குதிரையில் கம்பீரமாக அமர்ந்தபடி கோடியக்கரை மூர்க்கனிடம் கூறினான் இளம்வழுதி! 

     "யார் என்றே தெரியாத நீ? எனது இடத்திற்கு வந்து என்னையே மிரட்டி பார்க்கிறாயா? உனக்கு எத்தனை துணிச்சல்? பொடியர்கள் இருவர் சேர்ந்து  வந்து வந்ததோடு இல்லாமல் அறியாமல் ஏதேதோ பிதற்றிக் கொண்டு இருக்கிறாய்? அப்படியே திரும்பி இருவரும் ஓடி விடுங்கள்! உங்களுக்கு உயிர் பிச்சை அளிக்கிறேன்! சிறிது நேரம் நின்றால் உங்களை இங்கு கொன்று புதைத்து விடுவேன்! வீணாக உயிரைவிடாமல் ஓடிப் போங்கள் பொடியர்களே!' என இடுப்பில் கையை ஊன்றிக் கொண்டு ஏகத்தாளமாய் இருவரையும் பார்த்துச் சிரித்தான் கோடியக்கரை மூர்க்கன்! 

     "ஆள் அரவமற்ற பகுதியில் முகவரி அற்ற மூடனாய் வாழ்ந்து வரும் எத்தன் நீ எனக்கு உயிர் பிச்சை அளிக்கிறாயா? ஏன் இப்படி வேடிக்கையாக பேசுகிறாய்! முட்டாள்தனமாக எதையும் உளறி வைக்காதே! "

      "யாரைப் பார்த்து மூடன், முட்டாள் என்கிறாய்! பொடிப் பயலே! வீணாக உயிரை விடாமல் இங்கிருந்து ஓடி விடு!" தனது சிவந்த முரட்டு விழிகளை பெரிதாக விழித்துக் காட்டி மிரட்டலாக பார்த்தான் கோடியக்கரை மூர்க்கன்! 

      "என்னை போகச் சொல்ல நீ யாரடா? மூட மதியனே! இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்! ஆள் அரவமற்ற பகுதியில் இருந்து கொண்டு நீ செய்து வரும் கொடிய செயல்கள் அனைத்தும் எனக்குத் தெரியும்! அதற்கு இன்றோடு முடிவுரை எழுதப்பட்டு விடும்! அது நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் நீ என்னிடம் மரியாதையாக சரணடைந்து விடு! உனக்கு நான் உயிர்ப்பிச்சை அளிக்கிறேன்!"என்றான் இளம் வழுதி!

     "என்னைப் பற்றி தெரிந்து கொண்டே வந்து என்னிடம் வசமாக சிக்கிக் கொண்டாயா முட்டாளே"என மீண்டும் எகத்தாளமாய் சிரித்தான் கோடியக்கரை மூர்க்கன்! 

    "கோடியக்கரை மூர்க்கன் தானே நீ! உன்னை மட்டுமின்றி உனது திரை மறைவு நாடகங்கள் அனைத்தும் நன்கு அறிவேன்! "

     "ஓ கோ! தெரிந்தே வந்து வகையாக மாட்டிக் கொண்டாயா? "

      "போதும் உனது கண்ணாமூச்சி விளையாட்டு! உனது நாடகத்திற்கு முடிவுரை இன்று தான்! ஆகையால் வீண் விவாதங்கள் வேண்டாம்! மரியாதையாக சரணடைந்து என்னோடு வந்துவிடு!" 

     "தலைவரே! இவன்தான் நாகைக்கு புதிதாக பொறுப்பு ஏற்று இருக்கும் பாடிகாமல் அதிகாரி இளம்வழுதி!"என குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்தபடி கூறினான் கார்க்கோடகன்!

     " ஓ கோ! அது இவன் தானா? இவனிடமா நீ சூரிய வர்மர் மாளிகையில் தோற்று ஓடி வந்தாய்! அடச்சீ! வெட்கமாக இல்லை! இவனை அங்கேயே வெட்டி புதைத்து இருந்தால், இந்நேரம் என்னிடம் வந்து இப்படி தர்க்கம் பேசிக் கொண்டிருக்க மாட்டானே! எதையும் முழுமையாக செய்து முடிக்கும் பக்குவத்தை நீ என்றுதான்  அடையப் போகிறாயோ! உன்னால் எனக்கு எத்தனை பெரிய அவமரியாதை பார்த்தாயா! இப்போது ஒன்றும் குடி மூழ்கி விடவில்லை! அங்கு நீ செய்யாமல் விட்டதை இங்கு செய்து முடித்து விடலாம்! "என்றவன் கொக்கரித்துச் சிரித்தான் கோடியக்கரை மூர்க்கன்!

      "ஆனாலும் உனக்கு இத்தனை பேராசை கூடாது! யார் யார் கதையை முடிக்கப் போகிறார்கள் என்பதை இன்று பார்த்து விடலாம்! நீ செய்த தவறுகளிலே பெரிய தவறு சூரிய வர்மரை கொடூரமாக கொலை செய்தது! நீ செய்த மற்றவற்றை நான் மன்னித்தாலும் மன்னிப்பேனை தவிர இதை மட்டும் மன்னிக்கவே மாட்டேன்!" என கோடியக்கரை மூர்க்கனைப் பார்த்து எச்சரிக்கும் தொணியில் கூறினான் இளம்வழுதி! 

     "அடேய் பொடியா! நீ ஒன்றை மறந்து விட்டாய்!"என கோடியக்கரை மூர்க்கன் கூறியதோடு தனது கைகளை தட்டினான்! 

      அதற்காகவே குடிசையில் உள்ளே காத்திருந்த முரடர்கள் அனைவரும் தங்களது வாள்களை உருவிக் கொண்டு இளம்வழுதியையும் அழகனையும் சுற்றி வளைத்துக் கொண்டார்கள்! கோடியக்கரை மூர்க்கணோடு சேர்ந்து மொத்தம் இருபது பேர் இருந்தார்கள்! அவர்கள் விழிகள் அத்தனையிலும் இரையை வேட்டையாடும் ஓநாயின் பசி இருந்தது! 

     "மொத்தம் இவ்வளவு தானா? இல்லை வேறு எங்கும் உனது ஆட்களை மறைத்து வைத்து உள்ளாயா? இருந்தால் மொத்தமாக வரச் சொல் இன்று ஒரு கை பார்த்து விடுவோம்! "என்றான் இளம்வழுதி! 

       "உனக்கு பெரிய பேராசை தான்! இருவரும் நன்றாக மாட்டிக் கொண்டு விட்டீர்கள்! உங்களது குலதெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள்! நீ ஒரு போதும் அதனை நீங்கள் பார்க்கப் போவதில்லை! தெரியாமல் வந்து தானாகவே வலையில் அகப்பட்ட எலி போல் சிக்கிக் கொண்டீர்கள்" என இருவரையும் பார்த்து மீண்டும் கொக்கரித்து சிரித்தான் கோடியக்கரை மூர்க்கன்!

        "இப்படியே எத்தனை நேரம் வாய்ச்சவடல் பேசிக்கொண்டு காலத்தைக் கடத்த போகிறீர்கள்! முடிந்தால் மோதிப்பாருங்கள்! " என முரடர்களை பார்த்து அறைகூவல் விடுத்தான் இளம்வழுதி! 

     "ம்ம்ம்..... ஆகட்டும்! இந்தப் பொடியர்களை இங்கு நசுக்கிப் புதைத்து விடுங்கள்! நம்மை எதிர்க்க நினைத்தால் என்னவாகும் என்று தெரிந்து கொள்ளட்டும்! " தனது நண்பர்களைப் பார்த்து முடிக்கி விட்டான் கோடியக்கரை மூர்க்கன்!

      பெரும் வெறியோடு முரடர்கள் அனைவரும் இளம்வழுதி அழகனை நோக்கிப் பாய்ந்தார்கள்! அவர்கள் வந்த வேகத்தில் செயல்பட்டிருந்தால் அவர்கள் இருவரும் அடியோடு சாய்ந்து இருப்பார்கள்! இதற்கு மேல் இந்த கதையும் வளர்ந்து இருக்காது! நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்து விட்டது போலும்!

      முரடர்கள் சுற்றி வளைத்ததுமே இளம்வழுதியும் அழகனும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை விழிகளால்  பரிமாறிக் கொண்டிருந்தார்கள்! 

       முரடர்கள் அருகில் வந்ததும் குதிரையில் இருந்து குதித்து அவர்களை எதிர்கொள்ள தயாரானார்கள்! தங்களது வாள்களை  ஏந்திக்கொண்டு பலிபீடத்தில் பலி கொடுக்கும் பலியாளின்  வெட்டுக் கத்திக்கு பலியாகும் நிலைதான் முரடர்களுக்கு அங்கு ஏற்பட்டது! அருகே வந்த முரடர்களை சராசரவென்று வெட்டி தள்ளிக் கொண்டிருந்தார்கள்! முரட்டுத்தனமாய் முன்னால் பாய்ந்த நான்கு வீரர்கள் கண நேரத்தில் சிவலோகப் பதவியை அடைந்து விட்டிருந்தார்கள்! புற்றீசல் போல் தங்கள் மேல் விழுந்த முரடர்களை வாள்களை சுழற்றி சரித்துக் கொண்டிருந்தார்கள் இளம்வழுதியும் அழகனும்! 

       ஆத்திரம் இருந்த அளவிற்கு அவர்களுக்கு அறிவினை பயன்படுத்த தெரிந்திருக்கவில்லை! செம்மறி ஆட்டு மந்தைகளாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்களே தவிர சுயமாக சிந்திக்கும் நிலையிலை அவர்கள் எப்போதோ கடந்து விட்டிருந்தார்கள் போலும்! தானாக வந்து பலியாகும் முரடர்களை கரகரவென்று சுழன்று சுழன்று தாங்கள் வாளால் தாக்கிக் கொண்டிருந்தார்கள்! வானத்திலிருந்து பெரும் இடி ஒன்று பூமியில் விழ வேண்டியவை தெரியாமல் தங்கள் தலையில் இறங்கி விட்டது போலும் ! நான்கைந்து வீரர்கள் இரு கூறுகளாக பிளந்து கிடந்ததை பார்த்த முரடர்கள் ஒருகணம் விக்கித்துப் போய் நின்று விட்டார்கள்! 

     "அங்க என்ன பார்வை? சீக்கிரமாகட்டும்! இரண்டு பொடியவர்களை வீழ்த்த உங்களால் முடியாதா? சோற்று முழுங்கி முண்டங்களா? " என தனது நண்பர்களை பார்த்து எள்ளும் கொள்ளுமாய் வெடித்தான் கோடியக்கரை மூர்க்கன்! 

     தமது தலைவனின் ஆவேசத்தால் துடித்துக் கொண்டு இளம்வழுதி மீதும் அழகனின் மீதும் மாறி மாறி வாளால் தாக்கத் தொடங்கி விட்டார்கள் முரடர்கள்! 

       முரடர்களின் ஆவேசமான தாக்குதலை தங்களது வழக்கமான விளையாட்டு பிள்ளை போல் செயல்படும் உத்தியை கையாண்டு செயலாற்றி கொண்டு இருந்தார்கள் அவர்கள் இருவரும்! 

       ஏறக்குறைய அரை நாழிகை முழுவதுமாக கடந்து விட்டிருந்தது! முரடர்கள் அனைவருக்கும் வியர்வை மழையில் நனைந்து விட்டிருந்தார்கள்! ஆன போதும் முரடர்கள் விடாமல் தாக்கிக் கொண்டிருந்தார்கள்! 
        இளம்வழுதியும் அழகனும் இனியும் நேரத்தை கடத்த வேண்டாம் என எண்ணினார்களோ என்னவோ கரகரவென்று வாளைச் சுழற்றி முரடர்களின் பெரும் பகுதி வீரர்களை சிவலோகத்தை அடைய செய்திருந்தார்கள்!

     முரடர்களில் மீதி நான்கு பேர் மட்டுமே எஞ்சி இருந்தார்கள்! 

       அதன்பின் நடந்தது.....

(தொடரும்..... அத்தியாயம் 76 இல்